Friday 18 December 2015

வலைப்பதிவில் அகத்திணைக் கவிதைகள்



நமது தமிழ் வலைப் பதிவில் பல நண்பர்கள் மரபுக்கவிதை, புதுக்கவிதை என கவிதைகள் பலவற்றை அழகாக படைத்து வருகின்றனர். பத்திரிகைகளில் வரும் கவிதைகள் “படித்தவுடன் கிழித்து விடவும் என்று அன்றோடு சரி. அவற்றை படைத்திட்ட கவிஞர்கள் தமது கவிதைகளை நூலாக வெளியிட்டால் அவை மறுவாசிப்புக்கு வரும். ஆனால் வலைப்பதிவில் வெளியிட்ட கவிதைகளை எப்போது வேண்டுமானாலும் மறுவாசிப்பு செய்யலாம் என்பதனை மறுக்க இயலாது.

இலக்கியத்தில் திணை வகைகள்:

நாம் இப்போது வலைப் பதிவில் நமது பதிவுகளை சில குறிச் சொற்கள் (LABELS) கொடுத்து வகைப்படுத்துகிறோம். பண்டைத் தமிழர்கள் இலக்கியத்தை அகம், புறம் என பிரித்து,  ஒவ்வொன்றையும் ஏழு தலைப்புகள் (குறிச் சொற்கள் (LABELS) கொடுத்து வகைப்படுத்தியுள்ளனர். அவற்றுள்  குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற ஐந்தும் அகத்திணைகள் ஆகும்.

போக்கெல்லாம் பாலை, புணர்தல் நறுங்குறிஞ்சி
ஆக்கம் அளி ஊடல் அணி மருதம் - நோக்கு ஒன்றி
இல் இருத்தல் முல்லை, இரங்கிய போக்கு ஏர் நெய்தல்
புல்லும் கவிமுறைக்கு ஒப்பு

மேலே சொன்ன தனிப்பாடல் ஒவ்வொரு திணையையும்  விளக்கும்.

பாலை --பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
குறிஞ்சி --புணர்தலும் புணர்தல் நிமித்தமும் (கூடல்)
மருதம் --ஊடலும் ஊடல் நிமித்தமும்
முல்லை --இருத்தலும் இருத்தல் நிமித்தமும் ( காத்து இருத்தல்)
நெய்தல் --இரங்கலும் இரங்கல் நிமித்தமும் ( வருந்துதல்)

இவற்றோடு கைக்கிளை மற்றும் பெருந்திணை என இரண்டும் சேர்த்து திணைகள் ஏழு என்பர். (புறத்திணை என்பது வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி மற்றும் பாடாண் என்று ஏழு வகையாகப் பிரிக்கப்படும்) இங்கு வலைப்பதிவில் எழுதப்படும் காதல் (அகத்திணைக்) கவிதைகளோடு இணைத்துப் பார்ப்போம்.

பாலைத் திணை (பிரிதல்)

தலைவனோ தலைவியோ ஒருவரை ஒருவர் பிரிந்த நிலையில் பாடும் பாடல் இது. பொருள் ஈட்டும் பொருட்டோ, போரின் காரணமாகவோ, கல்வி கற்கும் நோக்கத்திலோ தலைவன் தலைவியைப் பிரிந்து செல்லல் வழக்கம். இதனை “வினையே ஆடவர்க்கு உயிரே என்ற குறுந்தொகை (135) சொற்றொடர் விளக்கும். தலைவனைப் பிரிந்த தலைவி அல்லது தலைவியைப் பிரிந்த தலைவன் பாடுவது போலவும் இந்த கவிதையின் கருப் பொருளை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த காலத்தில் ஆண் பெண் இருவரும் வெவ்வேறு இடத்தில் பணிபுரியும் போது இந்த பிரிவுத்துயரைக் காணலாம்.

வலைப்பதிவர் சகோதரி அருணா செல்வம் அவர்கள் அருணா செல்வம் என்ற தனது வலைத்தளத்தில், ஜூன் – 2011 இலிருந்து எழுதி வருகிறார். பிரான்ஸில் இருக்கிறார்; சிறந்த எழுத்தாளர் மற்றும் கவிஞர்; பாரீஸில் உள்ள கம்பன் கழகம் நடத்திய கவியரங்க நிகழ்ச்சிகளில் கவிதை வாசித்தவர். அவர்  உன்னையே நினைத்திருந்தேன்!! என்ற தலைப்பினில் எழுதிய http://arounaselvame.blogspot.com/2014/06/blog-post_3.html கவிதை இது.

உன்னையே நினைத்தி ருந்தேன் அதனால்
உலகத்தை நானோ மறந்தி ருந்தேன்!           (உன்னையே)

கண்ணிலே உறக்க மில்லை விழி
காண்பது உனையன்றி வேறேது மில்லை!   (உன்னையே)

காலையில் கதிரவன் காட்சியில் தெரிந்தாய்
கடலின் ஓசையில் காதினுள் நுழைந்தாய்
சோலையில் மணம்தரும் மலர்களில் சிரித்தாய்
சொக்கிட பார்த்ததில் சுயத்தினைக் கெடுத்தாய்... (உன்னையே)

கடமையைச் செய்திடும் அந்த நேரத்திலும்
கடவுளை வணங்கிடும் நல்ல நேரத்திலும்
நடந்திடும் இயற்கை தரும் சூழலிலும்
நாலுபேர் அமர்ந்து பேசும் கூட்டத்திலும்....  (உன்னையே)

அறுசுவை உணவும் சுவைக்க வில்லை
அழகிய ஆடையும் ரசிக்க வில்லை
ஒருசுவை பார்வையில் ஆயிரம் தொல்லை
உணர்ந்தேன் இவைதாம் இன்பத்தின் எல்லை... (உன்னையே)

வலையுலகில் அம்பாளடியாள் என்ற வலைத்தளத்தில், அக்டோபர் 2010 இலிருந்து எழுதிவரும், சாந்தரூபி கந்தசாமி அவர்கள் ஸ்விட்சர்லாந்தில் இருக்கிறார். தமிழ் வலையுலகில் இவரது கவிதைகளைப் படிக்காதவர்கள் இருக்க இயலாது. ஈழக் கவிஞரான இவர் கவிதைகளில் ஈழத்து துயரங்களை கண்ணீர் மல்க எழுதி உள்ளார். “உன் பெயரதை எழுதி வைத்தேன் ... http://rupika-rupika.blogspot.com/2013/01/blog-post_17.html என்ற கவிதையில் காத்திருக்கும் பாட்டுடைத் தலைவியின் நிலையை அழகிய சொற்களால் அவர் வடித்து இருக்கிறார். 

உன் பெயரதை எழுதி வைத்தேன்
எவரும் அறியாமல் நான்
உனக்காகக் காத்திருந்தேன்
எதுவும் புரியாமல் ............

விண் தாண்டிச் சென்றாயோ
வெண்ணிலவாய்த் தேய்ந்தாயோ
பெண்ணே உன் ஞாபகங்கள்
என் நெஞ்சைக் கொல்கிறதே !....
                                           
ஊமத்தம் பூக்கள் என்னை
உரசித்தான் பார்க்கிறதே
நீ தொட்ட மேனி தொட்டு
புது உறவொன்றைக் கேட்கிறதே!....

யாருக்குப் புரியும் அம்மா என்
ஜாதகத்தில் உள்ளதெல்லாம்
வேர் அற்ற மரம் போல் நானும்
புது வேதனையால் வாடுகின்றேன்

நீதிக்குப் பின் பாசம் என்றாய்
நீ இன்றி நானா சொல்லு !........
என்னை சோதிக்கும் மலரே உந்தன்
வாசத்தை ஏன் விட்டு சென்றாய் ....

சோகத்தில் தள்ளாடினேன்
என் சொந்தம் அது நீயல்லவோ
ஆனந்தக் கூத்தாடி வா அன்பே
ஆருயிர் போகும்  முன்பே ...........

விதியோடு போராடி
என்னைச் சேர வா ............
வெண்ணிலவே நீ இல்லாது
இந்த வானம் தாங்குமா ............

விழி நீரால் கோலம் இங்கே
உனக்காக நான் போடுறேன்
எனக்காக யாரும் இன்றி
என் ஜீவன் வாடுவதேன் இங்கே .....

                                     (
உன் பெயரதை )

குறிஞ்சித் திணை (கூடல்)

இந்த வகைப் பாடல்களில் தலைவனும் தலைவியும் சேர்ந்து இருக்கும் கருத்துக்களைப் பற்றியதாக இருக்கும்.

சகோதரி R.உமையாள் காயத்ரி அவர்கள் தனது வலைத்தளத்தில், சமையல் குறிப்புகளோடு நல்ல பல கவிதைகளையும் படைத்துள்ளார். அவற்றுள் காதல் - கவிதை 5 என்ற தலைப்பினில் http://umayalgayathri.blogspot.com/2013/12/3_14.html
அவர் எழுதிய கவிதை குறிஞ்சித் திணைக் கவிதையாகக் கொள்ளலாம்.

உன்  கண்கள்  விரியும்  நேரம்
என் காதல் நுழையும் தருணம்
விழிகள் விரிந்து கிடக்க
கரைந்தேன் நொடிகள் பொதும்

விம்மும் நீர்த்துளியில்
விடைகள் கண்டு கொண்டேன்
விதியில் மதியின் கோர்வை
தமிழின் புதிய காவியமானோம்

கைகள் கோர்த்து கடல் காற்று வாங்கவில்லை
தோள்கள் உரசி நாம் சினிமா காணவில்லை
தனி வாழ்க்கை நடை பயிலும் போதும்
தனிமை எனக்குள் இல்லை

வரவேற்ப்பு எழுதி  என்  வாசல் திறந்து இருக்கும்
ஐய்யம்  தெளிந்த  பின்    நீ
என்னை  அணைக்க  என்றும் வரலாம்
காதல் காத்திருக்கும் கரங்கள் தானே சேரும்.

முல்லைத்திணை (காத்து இருத்தல்)

சகோதரி கவிஞர் தேன்மதுரத்தமிழ் கிரேஸ் என்றழைக்கப்படும் கிரேஸ் பிரதிபா அவர்கள் ஒரு சாப்ட்வேர் என்ஜீனியர். மதுரைக்காரரான இவர் தற்போது இருப்பது அட்லாண்டாவில். தமிழ் ஆர்வம் மிக்க இவர், தனது வலைத்தளத்தில் தமிழ் இலக்கியம் சார்ந்த கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதி வருகிறார். அவர் எழுதிய கவிதை இது. (“கண்ணில் கலந்து” http://thaenmaduratamil.blogspot.com/2014/02/kannil-kalandhu.html )

அருகில் நீ இல்லா நேரத்திலும்
காணும் ஒவ்வொரு காட்சியிலும்
கண்டேன் உன் முகம்

பார்க்கும் ஒவ்வொரு பொருளிலும்
பார்த்தேன் உன் முகம்
கண்ணில் கலந்து என்
எண்ணத்தில் நிறைந்ததை
இனி அறிந்தேன்

பாலையும் (பிரிதல்) முல்லையும் (காத்து இருத்தல்) வெவ்வேறு திணைகள் போல் பிரிக்கப்பட்டு இருந்தாலும் பாடல்களில் உள்ள கருப்பொருள் பிரிவினைக் காட்டுவதாகவே உள்ளது.

மருதத் திணை (ஊடல்)

திருச்சி – பொன்மலைக்காரரான, கீதமஞ்சரி என்பபடும்  கீதா மதிவாணன் அவர்கள் ஆஸ்திரேலியாவில் இருக்கிறார். தலைவன் தலைவி இடையே நிகழும் ஊடல் பற்றி சொல்வது மருதம். “புரிதலுணர்வு http://geethamanjari.blogspot.in/2013/09/blog-post_28.html  என்ற தலைப்பில் கவிஞர் கீதமஞ்சரி எழுதிய கவிதை இது.

தூங்குவதுபோல்
பாசாங்கு செய்கிறாய் நீ!
துயிலெழுப்புவதுபோல்
பாவனை செய்கிறேன் நான்!
விழிக்கவிரும்பா உன்னுளத்தை நானும்
எழுப்பவிரும்பா என்னுளத்தை நீயும்
பொய்யறப் புரிந்துகொண்டபோதும்
தொடர்கிறதோர் போலிப்போராட்டம்,
தூங்குவதும், துயிலெழுப்புவதுமாய்!

நெய்தல் திணை (வருந்துதல்)

வலையுலகில் மரபுக்கவிதைகள் படைத்து வருபவர் அய்யா புலவர் சா இராமாநுசம் அவர்கள். இன்றெந்தன் மனைவியவள் இறந்த நாளே  www.pulavarkural.info/2014/05/blog-post_7.html என்று தனது மனைவியின் நினைவினை உருக்கமாக பாடியுள்ளார்.

இன்றெந்தன் மனைவியவள் இறந்த நாளே என்
இதயத்தை அறுக்கின்ற கூரிய வாளே!
அன்றெந்தன் கைபிடித்து வந்த முதலாய் பெற்ற
அன்னையாய், தாரமாய் இரவு பகலாய்!
நன்றென்னை காத்தவளேன் விட்டுப் போனாய் எனக்கு
நன்றென்றா! ஐயகோ! சாம்பல் ஆனாய்!
கொன்றென்னை கூறுபோட தனிமை உலகம் நாளும்
கோமகளே நீதானென் வாழ்வின் திலகம்!

மருத்துவத்தில் நீபடித்து பட்டம் பெற்றாய் நான்
மாத்தமிழைக் கற்றதிலே மகிழ்வே உற்றாய்!
பொருத்தமுண்டா எனச்சிலரும் கேட்ட போதும் முறுவல்
பூத்திட்ட உன்முகமே கண்ணில் மோதும்!
திருத்தமுற மகவிரண்டும் பெற்றோம் நாமே-வாழ்வில்
தேடியநல் செல்வமென வளர ஆமே!
வருத்தமற உன்நினைவே கவிதை வடிவில் வலம்
வருகின்றாய்! வாழ்கின்றாய்! உலகில்! முடிவில்!

இருக்கும்வரை உன்நினைவில் கவிதைத் தருவேன் நான்
இறந்தாலும் உனைத்தானே தேடி வருவேன்
உருக்கமிகு உறவுகளே உலகில் எங்கும் -இன்று
உள்ளார்கள்! முகமறியேன்! உணர்வில் பொங்கும்!
நெருக்கமிகு , அவரன்பில் ,இன்பம் கொண்டேன்!- அதுவே
நீயில்லாத் துயரத்தைத் தணிக்கக் கண்டேன்!
ஆனால்,…..?
அருத்தமில்லை ! நீயின்றி வாழ்தல் நன்றா!- கேள்வி
ஆழ்மனதில் எழுகிறதே! தீரும் ஒன்றா!

கைக்கிளை (ஒருதலைக் காதல்)

இப்போதெல்லாம் தினசரி பத்திரிகைகளிலும் மற்றைய ஊடகங்களிலிலும்  இந்த கைக்கிளை எனப்படும் ஒருதலைக் காதல் பற்றிய செய்திகளை அடிக்கடி காணலாம். பெரும்பாலும் ஒரு ஆண் ஒரு பெண்ணின் மீது கொண்ட ஒருதலைக் காதல் அதிகம் இடம்பெறக் காணலாம். சிலர் கொலை செய்யும் அளவுக்கும் போய் விடுகின்றனர். நம்ம T.R .ராஜேந்தர் அவர்கள் கூட “ஒருதலை ராகம்என்று ஒரு படம் எடுத்து இருந்தார். அந்நாட்களில் இந்தப் படம் அதிகமாக பேசப்பட்டது. படமும் வெற்றிகரமாக ஓடி வசூலைக் குவித்தது.

தனது வலைப் பதிவுகளில் காதல்ரசம் நனி சொட்ட சொட்ட கவி பாடுவதில் வல்லவர் , தவ ரூபன் எனப்படும் கவிஞர் ரூபன் அவர்கள் திரிகோணமலைக்காரர்.  இப்போது இருப்பது மலேசியாவில்  என்னை சிறையாடும் மடக் கிளியேhttp://www.trtamilkkavithaikal.com/2014/12/blog-post.html  என்ற தலைப்பினில் எழுதிய ஒருதலைக் காதல் கவிதை இது.

தென்றல் காற்றே தென்றல் காற்றே.
ஓ..வென்று…. ஒரு கீதம் பாடும்
பாடும் கீதத்தில் என் ஓசையும் காலந்து வரட்டும்
என்னவளின் காதில் ஒலிக்கட்டும்
கடல் அலையே கடல் அலையே
கல்லில் ஏன்சீற்றம் கொண்டு அடிக்கிறாய்
அன்பானவள் பிரிந்து போகயில்
அவள் கொலுசில் மோதிக்கொள்
அப்போதாவது என் நினைவு நீச்சல் போடட்டும்

சூரியனே சூரியனேஅனைவரையும்
சுடெரிக்கும் பகலவனே.
அள்ளி அணைத்த உள்ளமது.
தட்டுத் தடுமாறி போகயில்
சூரியனே சூரியனே உன் கரத்தால்
ஒரு தடவை சுட்டு விடும்
நிழல் தேட நான் வாங்கி கொடுத்த
குடையதுவை பிடிக்கையில்
என் நினைவது வந்து விடும்….

 நிலமகளே நிலமகளே
நித்தமது உன் தோழில்
தினம் தினம் எத்தனையே தாங்கிறாய்.
என்னவளும் போகின்றாள்
ஏர் கொண்டு தாங்குகிறாய்…..
அவள் ஏழனமாய் சிரிக்கிறாள்
அவள் செல்லும் பாதையை
ஒரு கனமாவது இரண்டாக உடைத்திடுவாய்
அவள் அழும் போது
என் பெயராவது சொல்லட்டும்

வானகமே வானகமே -உனக்கு
வாழ்த்து மடல்சொல்லிடுவேன்
பஞ்ச பூதங்களை சேர்த்து
உனக்கு கவிவரிகள் புனைகிறேன்
உன் ஐம்புலனை நீ சீர்படுத்தி
சீக்கரமாய் எனக்கு உயிர் கொடுத்திடுவாய்
உன்நினைவாலே நான் தினம் தினம்
ஆயுள் கைதியாக சிறைப்பட்டு கிடக்கிறேன்
சிறை மீட்க பதில் ஒன்று சொல்வாயா.
என்னை சிறையாடும் மடக்கிளியே.

பெருந்திணை (பொருந்தாத காதல்):

இதுபற்றி பழைய தமிழ் இலக்கியத்தில் இல்லாதது போலவே, இப்பொருள் அமைந்த பெருந்திணைப் பாடல்கள் இன்றைய நவீன வலைத்தளங்களிலும் காணப்படவில்லை.

(மேலே மேற்கோளாகக் குறிப்பிடப்பட்ட கவிதைகளைப் படைத்திட்ட கவிஞர்களுக்கு (வலைப்பதிவாளர்கள்) எனது மனமார்ந்த நன்றி; கட்டுரை எழுதி அப்படியே ரொம்பநாட்கள் கோப்பிலேயே (File Folder) இருந்ததை இன்று வெளியிடுகிறேன்)    
 

38 comments:

  1. தங்களின் தனிப்பாணியில் கவிதைகள் பற்றியதோர் மிக அருமையான அலசல். பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள V.G.K அவர்களின் பாராட்டிற்கு நன்றி.

      Delete
  2. இதிலுள்ள அனைவரையுமே, சகட்டுமேனிக்கு, ஏதோ ஒருவகையில் கவிஞர் என்று தாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளதை மட்டும் என்னால் ஏனோ ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அவர்களில் பலருக்கும் இது மிக நன்றாகவே தெரியும்.

    ஆனாலும் இதில் பெரும்பாலானோர் தரமான கவிஞர்களே என்பதில் ஐயமில்லை.

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள V.G.K அவர்களுக்கு, கவிதையின் இலக்கணம் குறித்து இதுதான் கவிதை என்று ஒத்த கருத்து கிடையாது. பாரதியின் வசன கவிதை பற்றி அந்நாளிலேயே விமர்சனம் செய்யப்பட்டதாகச் சொல்லுவார்கள்.

      Delete
  3. தாங்கள் தெரிவு செய்த விதம் மிகவும் அருமை. முற்றிலும் வித்தியாசமான அணுகுமுறை நன்றாக இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அவர்களின் பாராட்டிற்கு நன்றி.

      Delete
  4. அசத்தல்.
    திணை விளக்கமும் அதற்கு ஏற்றார்ப்போல
    நம்மவர்கள் எழுதிய அற்புதக் கவிதைகளை
    உதாரணமாய்க் கொடுத்தவிதமும்
    அருமையிலும் அருமை.
    மனம் தொட்ட அற்புதமான பதிவு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் ரமணி அவர்களின் பாராட்டிற்கு நன்றி.

      Delete
  5. அனைத்து கவிதைகளும் அருமை நண்பரே பதிவர்களுக்கு எமது வாழ்த்துகளும்
    தமிழ் மணம் 4

    ReplyDelete
    Replies
    1. தேவகோட்டை நண்பர் கில்லர்ஜி அவர்களின் பாராட்டிற்கு நன்றி.

      Delete
  6. நம் அன்பார்ந்த பதிவர்கள் எழுதிய திணைக்குப் பொருத்தமான கவிதைகளும் தொகுத்து உதாரணமாக ஒப்பிட்டு வழங்கியமை அருமை ஐயா. பொதுவாக திணை உதாரணங்களாகப் பண்டை இலக்கியங்களில் இருந்து எடுத்தாளும் வேளையில் நீங்கள் நவீன படைப்புகளை உதாரணமாக்கிச் சொல்லியவிதம் ரசிக்கும்படியாக புதுவிதமாக உள்ளது ஐயா. தொடரவும்.தொடர்கின்றோம்.

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் தில்லைக்கது V.துளசிதரன் அவர்களின் பாராட்டிற்கு நன்றி.

      Delete
  7. என் கவிதையை உதாரண்மாக காட்டி இருந்தீர்கள் நன்றி இளங்கோ!

    ReplyDelete
    Replies
    1. புலவர் அய்யாவின் கருத்துரைக்கும், கட்டுரைக்கு பயன்பட்ட அவர்தம் பாடலுக்கும் நன்றி..

      Delete
  8. வணக்கம் ஐயா !
    முதற்கண் என்னையும் இங்கு அறிமுகம் செய்துவைத்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன் ! இன்று இந்த இடத்தில் அறிமுகமாகும் அளவிற்கு எங்களை வாழ்த்தியும் பாராட்டியும் உருவாக்கியவர்கள் உங்களைப் போன்ற கல்விமான்கள் தான் இதை எண்ணி நாம் எப்போதும் பெருமை கொள்கின்றோம்! மிக்க நன்றி ஐயா ! இன்று இங்கு அறிமுகமான என் வலைத்தள சொந்தங்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களின் கருத்துரைக்கும், கட்டுரைக்குப் பயன்பட்ட அவர்தம் பாடலுக்கும் நன்றி..

      Delete
  9. பாடல்களைத் தேர்வு செய்த விதமும்
    அவற்றை பகிர்ந்திட்ட பாங்கும் அருமை ஐயா
    நன்றி
    தம +1

    ReplyDelete
    Replies
    1. அன்பு ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் அன்பான பாராட்டிற்கு நன்றி.

      Delete
  10. கவிதை என்றுநினைத்து நான் எழுதிய ஏதாவது கவதை இருக்கிறதா என்று தேடினேன் ஏமாந்தேன் ( சும்மா தமாஷுக்கு)

    ReplyDelete
    Replies
    1. அய்யா G.M.B அவர்களின் தமாஷுக்கு நன்றி. நீங்கள் வாழ்வியல் சிந்தனையாளர். உங்களை ஒரு பாராவில் அடக்கிவிட முடியாது.

      Delete
  11. பதிவர்களின் அகத்திணைக் கவிதைகளை அருமையாய் வகைப்படுத்தி தொகுத்து தந்திருக்கிறீர்கள். யாரும் இதுவரை செய்யாத முயற்சி இது. பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. அய்யா V.N.S அவர்களின் கருத்துரைக்கு நன்றி. உங்களது சகோதரர் ஆசிரியர் வே.சபாநாயகம் அவர்களது நினைவுத்தடங்களை தொடர்ச்சியாக படித்துக் கொண்டு இருக்கிறேன். ( 19 ஆவது தொடர் வந்து இருக்கிறேன் )

      Delete
  12. பொருத்தமான கவிதைகளை தேர்ந்தெடுத்து கொடுத்ததற்கு நன்றி நண்பரே!
    த ம 9

    ReplyDelete
  13. அருமையான தொகுப்பு
    ஐயா!
    இலக்கியச் சுவை சொட்டும்
    இனிய பதிவு இது!
    தொடருங்கள்

    http://www.ypvnpubs.com/

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் யாழ்பாவாணன் அவர்களுக்கு நன்றி.

      Delete
  14. வெளி நாட்டில் இருப்பதால் நம் பதிவர்களுக்கு பாலைத் திணை பாடல்களே அதிகம் எழுத வருகிறதோ :)

    ReplyDelete
    Replies
    1. தோழரின் நகைச்சுவை உணர்வினுக்கு நன்றி.

      Delete
  15. ஐயா

    ஒரு முனைவர் பட்ட ஆராய்ச்சி போல் விரிவாக தேடித் தேடி கண்டுபி(ப)டித்த நல் முத்துக்களைக் கோர்த்துக் கொடுத்துள்ளீர்கள், நன்று. நன்றி. ஒன்று கவனித்தீர்களா? கவிதை ஆர்வம் உள்ள தமிழ் பதிவர்கள் பலரும் வெளி நாட்டில் வசிப்பவர்.

    --
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் ஜே.கே அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.

      Delete
  16. வணக்கம்
    ஐயா
    அமுத இரசம் சொட்டும் கவிதைகளை அகத்திணைபதிவில்.. மாலையாக தொடுத்த விதம் சிறப்பு ஐயா.பல கவிஞர்கள் வரிசையில் என்னையும் சேர்த்துகொண்டமைக்கு நன்றி ஐயா. த.ம 11

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  17. தற்காலக் கவிதையை திணை வகைகளாக பிரித்து காட்டியது அருமை. ஒரு ஆய்வுக் கட்டுரை போல் உள்ளது

    ReplyDelete
    Replies
    1. சகோதரரின் பாராட்டிற்கு நன்றி.

      Delete
  18. ஐந்திணைகள் பற்றிய அருமையான பதிவுகள் ஐயா..தங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் ..

    ReplyDelete
  19. சங்கப்பாடல்களில் அகத்திணை குறித்த விளக்கமும் திணை சார்ந்த தற்காலக் கவிதைத் தொகுப்பும் அருமை.. இக்கவிதை வரிசையில் என்னுடையதும் அடங்கக் கண்டு மிக்க மகிழ்ச்சி. இத்தொகுப்பிற்காக தாங்கள் மிகவும் மெனக்கெட்டிருப்பது புரிகிறது. மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  20. தமிழை புதுப்பிக்கும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. வணக்கம் ஐயா.
    முதலில் இப்பதிவினைப் பார்க்காமல் தவற விட்டதற்கு மன்னித்துவிடுங்கள், மிகவே வருந்துகிறேன். பொருட்படுத்தாமல் அறியத் தந்ததற்கு உளமார்ந்த நன்றி ஐயா.

    திணைகளை விளக்கி அவற்றோடு பொருந்தும் வகையில் வலைத்தளக் கவிதைகளைத் தேடித் தொகுத்து கொடுத்திருப்பது மிகப்பெரிய விசயம். இதில் என் பெயரும் இருப்பது கண்டு மிகுந்த மகிழ்ச்சியில் நெகிழ்கிறேன் ஐயா. அறிமுகப்படுத்தியிருக்கும் நட்புகளின் கவிதைகள் அருமை. அவர்களுக்கும் என் அன்பான வாழ்த்துகள்.
    உங்களுக்கு மீண்டும் மனமார்ந்த நன்றி ஐயா.

    ReplyDelete