Tuesday 17 March 2015

நடிகர் S.A. அசோகன்


தமிழ் திரைப்பட வில்லன் நடிகர்களில் எனக்கு பிடித்தவர்களில் நடிகர் அசோகன் அவர்களும் ஒருவர். பள்ளி வயதினில் எம்ஜிஆரின் ரசிகனாக இருந்த எனக்கு இவர் நடிப்பின் மீதும் ஈடுபாடு உண்டு. இதற்கு முக்கிய காரணம் இவர் எங்கள் திருச்சிக்காரர் என்பதுதான். அவரை நேரில் பார்க்க வேண்டும் என்ற எனது ஆசை கடைசிவரை நிறைவேறாமலேயே போய் விட்டது. (திரையுலகில் திருச்சியைச் சேர்ந்தவர்கள் வரிசையில் இன்னும் பலர் உண்டு என்பது வேறு விஷயம்).

வில்லன் நடிகர்

இவர் தமிழ் திரையுலகில் வில்லனாகவே அறியப்பட்டார். பல எம்ஜிஆர் படங்களில் இந்த வில்லனுக்கென்று தனி இடம் உண்டு. குரலை ஏற்றி இறக்கி, விழிகளால் பேசி, கைகளைப் பிசைந்து கொண்டு, ஒரு கைக்குள் இன்னொரு கையை குத்தி நடிக்கும் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.

நீலகிரி எக்ஸ்பிரஸ் என்ற படத்தில் மொட்டைத் தலையுடன், ஒற்றைக் கண்ணுக்கு மட்டும் திரை போட்ட வில்லனாக வருவார். இதில் இவரது நடிப்பிற்கு அதிக முக்கியத்துவம் தரப்படவில்லை.

கந்தன் கருணை படத்தில் சூர பத்மனாக வரும்போது அவருடைய தோற்றம், நடை, உடை, தொனி எல்லாம் நேரடியாகவே ஒரு சூர பத்மனைப் பார்ப்பது போலிருக்கும்.

கால்களில் ஆறுவிரல்கள் உள்ள, வில்லியுடன் சேர்ந்து கொண்டு அடிமைப் பெண் படத்தில் செய்யும் செங்கோடன் என்ற வில்லன் வேடத்தை இனி யாராலும் செய்ய முடியாது. இந்த படத்தில் சத்தமிட்டு, தனது சபதத்தை நினைவுபடுத்தி, சூட்டுக் கோலால் தனக்குத் தானே சூடு போட்டுக் கொள்ளும் காட்சியை மறக்க முடியுமா என்ன? 

எம்ஜிஆர் திமுகவிலிருந்து பிரிந்து விடுவார் என்று எதிர்பார்த்த நேரம். அப்போது ரிக்‌ஷாக்காரன் என்ற படம் வெளி வந்தது. தனது மாமா (மேஜர் சுந்தரராஜன்) பெரிய நீதிபதி என்ற தைரியத்தில் , நீதியையே வளைக்கும் பெரிய மனிதனாக ஆட்டம் போடும் நடிகர் அசோகனை இந்த படத்தில் காணலாம். அந்த படத்தில் வரும் ஒரு பாடல் “ அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும், “ என்று தொடங்கும். கவிஞர் வாலி எழுதியது. இந்த பாடல் எம்ஜிஆர் பற்றிய பல அரசியல் யூகங்களுக்கு விடை அளித்தது. எம்ஜிஆர் திமுகவிலிருந்து நீக்கப்பட்டு, அதிமுக தொடங்கியவுடன் அவரது கட்சி மேடைகளில் அடிக்கடி முழங்கிய பாடல் இதுவேயாகும்.

கேமரா கர்ணன் அவர்கள், பலவித ஆங்கிள்களில் சண்டை காட்சிகளை படம் ஆக்கிய படம் எங்க பாட்டன் சொத்து.  இதில் ஆங்கிலப் படங்களில் வரும் கௌபாய் பட ஸ்டைலில் வில்லன் வேடம் அசோகனுக்கு. இதே ஸ்டைலில் கங்கா  என்று ஒரு படத்தையும் கர்ணன் எடுத்தார். எங்க பாட்டன் சொத்து போன்று இந்த படம் ஓடவில்லை. இரண்டிலுமே நடிகர் ஜெய்சங்கர் கதாநாயகன்; அசோகன் வில்லன்.

குணச்சித்திர நடிகர்

எனக்கு வேலை கிடைத்த பிறகு, இவரது பழைய படங்களைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே தேடிப் பிடித்து போய் பார்த்த படங்களும் உண்டு.

ஜெமினி கணேசன், சாவித்திரி, எம்.ஆர்.ராதா, எஸ்.வி.சுப்பையா, அசோகன், சந்திரபாபு என்று நட்சத்திரப் பட்டாளம் நடித்த படம் பாதகாணிக்கை. இதில் மாமனார் (எம்.ஆர்.ராதா) பேச்சைக் கேட்டுக் கொண்டு, சொத்துக்காக, தனது அப்பாவை (எஸ்.வி.சுப்பையா) கோர்ட்டுக்காக இழுக்கும் மகன் வேடத்தில் அசோகன் நடித்து இருந்தார். குடும்பக் கதை. இதில் அசோகன் தனது முழுத் திறமையையும் காட்டி நடித்து இருந்தார். இதில் “ ஆடிய ஆட்டம் என்ன?என்று தொடங்கும்,

வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?
 
என்ற கவிஞர் கண்ணதாசன் பாடலுக்கு,  ஒரு காலை இழந்த மகனாக, ஊன்றுகோலுடன் அசோகன் பாடும்போது என்னையும் அறியாமல் கண்ணீரி வந்து விட்டது. சோகக் காட்சி பார்ப்பவர் கண்களை குளமாக்கும்.

நடிகர் ஜெய்சங்கரின் முதல் படம் இரவும் பகலும். டைரக்‌ஷன் ஜோசப் தளியத் (JOSEPH THALIYATH) அந்த படத்தில் வரும், அப்படி இறந்தவனே சுமந்தவனும் இறந்திட்டான்” - என்ற பாடல் அசோகன் தனது சொந்தக் குரலில் பாடியது. கையில் கோலூன்றிய முதியவராக வரும் நடிகர் அசோகனின் நடிப்பும், பாடலின் கருத்தும்  (பாடல்: ஆலங்குடி சோமு) என்னை மனம் கவர்ந்தவை. இந்த பாடல் வரிகளை கண்டு கேட்டு களித்திட கீழே உள்ள யூடியூப் இணைய முகவரியை சொடுக்கவும் (CLICK )


வல்லவனுக்கு வல்லவன் என்ற படத்தில் நடிகை மணிமாலா இவருக்கு ஜோடி. அந்த படத்தில்  “ஓராயிரம் பார்வையிலே, உன் பார்வையை நானறிவேன்என்ற பாடலுக்கு மிகவும் அமைதியாக நடித்து இருப்பார். அதே படத்தில் நடிகர் மனோகருடன் சேர்ந்து “பைத்தியமே கொஞ்சம் நில்லுஎன்ற பாட்டிற்கு இருவருமே செய்யும் சேஷ்டைகள் நகைச்சுவையாக இருக்கும். ஒரு பணக்கார குடும்பத்தில், நெஞ்சுவலி கொண்ட அண்ணன் பாத்திர படைப்பில் அதே கண்கள்  படத்தில் அமைதியாக நடித்து இருப்பார்.

நேற்று இன்று நாளை என்ற படத்தை எம்ஜிஆரை கதாநாயகனாக வைத்து எடுத்தார். பல்வேறு காரணங்களால் அந்த படத்தை முடிபபதற்குள் அசோகனுக்கு போதும் போதும் என்று ஆகிவிட்டது. எம்ஜிஆருக்கும் அசோகனுக்கும் இடையில் மனக்கசப்பே உண்டானதாக சொன்னார்கள்.

உயர்ந்த மனிதன் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு இணையாக அசோகன் நடித்து இருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள். அந்த படத்தை இதுவரை நான் பார்த்ததில்லை. இதேபோல அசோகன் நடித்த பல படங்களைப் பார்க்க நேரம் இல்லாமல் போய் விட்டது.

( அண்மையில் அய்யா G.M.B அவர்கள் “இரண்டு மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து பதிவுகள் ஏதும் வெளியிடாவிட்டால் பதிவுலகம் நம்மை மறந்து விடும். http://gmbat1649.blogspot.in/2015/03/blog-post_14.html என்று எழுதி இருந்தார். சில நாட்களாக வெளியூர் பயணம், முதுகு வலி காரணமாக (அடிக்கடி ஓய்வு எடுப்பதன் மூலம் இப்போது பரவாயில்லை) என்னால் தொடர்ந்து வலைப் பதிவில் எழுத இயலவில்லை. எனவே யோசித்ததில், நாம் இரண்டு மூன்று நாட்களுக்கு தொடர்ந்து எழுதாவிட்டாலும் பரவாயில்லை. பத்து நாட்களுக்கு ஒருமுறையாவது எழுதுவோம் என்று எழுதிய பதிவு இது.) என்னை மின்னஞ்சல் வழியே நலம் விசாரித்த அய்யா G.M.B அவர்களுக்கு நன்றி)


                        (ALL PICTURES - COURTESY: “ GOOGLE IMAGES ”)


41 comments:

  1. தொடர்ந்து எழுதாவிட்டால் ஏற்படும் ( கற்பனை)அதிர்வுகள் பற்றி இன்றைய என் பதிவில் காணுங்கள். நானும் நீங்கள் கூறியுள்ள அசோகன் நடித்த பல படங்களைப் பார்த்திருக்கிறேன் ஆனால் உங்களைப் போல் கவனமாகப் பட்டியல் இட முடியாது. உடல் நலம் அறிந்து மகிழ்ச்சி.

    ReplyDelete
  2. அசோகன் மறக்க முடியாத நடிகர் மட்டுமல்ல மனித நேயமுள்ள மனிதரும்கூட...
    உடல் நலத்தை கவனித்துக்கொள்ளுங்கள் நண்பரே பிறகே பதிவு
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  3. பத்துநாள் பதிவுகள் வெளியிடாவிட்டால் பக்கப் பார்வைகள் குறைவது உண்மையே! அசொகன் மிகச்சிறந்த நடிகர்களுல் ஒருவர்! எனக்கும் மிகவும் பிடித்த நடிகர்களுல் ஒருவர்! சிறப்பான அலசல்! உடல் நலம் பேணுங்கள்! பதிவுலகம் எங்கும் போய்விடாது!

    ReplyDelete
  4. உடல் நலத்தினைப் பார்த்துக் கொள்ளுங்கள் ஐயா. பத்து நாட்களுக்கு ஒரு நாள் எழுதமுடிந்தால் எழுதுங்கள், இல்லையேல், இன்னும அதிக நாள் கூட எடுத்துக் கொள்ளுங்கள், யாரும் தங்களை மறக்கப் போவதில்லை
    நன்றி ஐயா
    தம +1

    ReplyDelete
  5. அன்புள்ள அய்யா,

    நடிகர் S.A. அசோகன் அவர்களைப் பற்றி ஓர் அருமையான பதிவைப் போட்டு அசத்திவிட்டீர்கள். குரலை ஏற்றி இறக்கி, விழிகளால் பேசி, கைகளைப் பிசைந்து கொண்டு, ஒரு கைக்குள் இன்னொரு கையை குத்தி நடிக்கும் நடிப்பு அவரது நடிப்பை அப்படியே முத்திரை குத்தியதைப்போல காண்பித்து விட்டீர்கள். ரிக்‌ஷாக்காரனில் ‘அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்’ அந்தப் பாடலை யாராலும் மறக்க முடியாது...!

    ‘வீடுவரை உறவு’ கண்ணதாசன் பாடலும் பாதகாணிக்கையில் அவரின் நடிப்பும் மறக்க முடியாதது!

    ‘உயர்ந்த மனிதன்’ மிக நல்ல படம்... அவசியம் பார்க்க வேண்டிய படம். அதிலும் அவரின் நடிப்பு பாராட்டுக்குரியது.

    நல்ல புகைப்படத்துடன் அசோகனை மீண்டும் கண்முன் கொண்டு வந்து நிறுத்தினீர்கள்.

    -நன்றி.
    த.ம. 3.

    ReplyDelete
  6. அசோகன் மிகை நடிப்புக்குச் சொந்தக்காரர். சில படங்களில் அவரது நகைச்சுவை சேஷ்டைகள் சகிக்காது. எம்ஜிஆரின் படங்களில் இவர் அதிகம். அன்பே வா வை மறுந்துவிட்டீர்களா? ஆனாலும் இவர்கள் இருவருக்கும் நேற்று இன்று நாளையில் பிணக்கு ஏற்பட்டது உண்மைதான். பாடல் காட்சிகளுக்காக பல முறை 'செட்' போட்டதில் ஏகப்பட்ட செலவு வைத்து கடனாளியாக்கினார் எம்ஜிஆர் என்பது வதந்தி. பின்னர் அதன் பட வசூலில் சம்பாதிக்காமலா இருந்திருப்பார்?

    ReplyDelete
  7. முதலில் அன்பான வேண்டுகோள்: உடல் நலனை கவனித்துக்கொள்ளுங்கள். அப்பொழுதுதான் மென்மேலும் சிந்திக்கமுடியும், எழுதமுடியும். தற்போது பதிவு பற்றி : வில்லனாகவே பார்த்து பழகிவிட்டவர்களுக்கு அவருடைய குணச்சித்திர நடிப்பினையும் முன்வைத்துப் பாராட்டி எழுதியுள்ள விதம் அருமை.

    ReplyDelete
  8. பதிவு சுவாரஸ்யமாக இருந்தது. அசோகன் கதாநாயகனாக நடித்த 'இது சத்தியம்' படத்தை மறந்து விட்டீர்களா? மொட்டைத்தலையுடன் அவர் வில்லனாக நடித்து மிகவும் புகழ் பெற்ற திரைப்ப‌டம் ' நான்'! இதற்குப்பிறகு தான் அவர் தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களுக்கு புகழ் சேர்த்தார்.

    முதுகு வலிக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறீர்களா? உடல் நலத்தை கவனித்துக்கொள்ள‌வும்.

    ReplyDelete
  9. வணக்கம் ஐயா,

    முதுகு வலிக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறீர்களா?

    தங்கள் உடல் நலத்தையும் அவ்வப்போது கவனித்துக்கொள்ள‌வும்.

    >>>>>

    ReplyDelete
  10. //உயர்ந்த மனிதன் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு இணையாக அசோகன் நடித்து இருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள். அந்த படத்தை இதுவரை நான் பார்த்ததில்லை. //

    நான் நம் பிரபாத் தியேட்டரில் மட்டும் அந்தக்காலக்கட்டத்தில் இந்த ‘உயர்ந்த மனிதன்’ படத்தை சுமார் 25 தடவைகளுக்கு மேல் பார்த்துள்ளேன்.

    அசோகன் அதில் வில்லன் என்று சொல்ல முடியாது. கோடீஸ்வரரான சிவாஜிக்கு நண்பராகவும், ஃபேமிலி டாக்டராகவும் ஒருசில இடங்களில் மட்டுமே வருவார். ஆனால் அவரின் கதாபாத்திரத்திற்கு அந்தக்கதையில் ஓர் முக்கியத்துவம் உண்டு. ஓர் மிகப்பெரிய உண்மையை சிவாஜியிடம் சொல்லவரும் நேரம், நிறைய குடித்துவிட்டு வரும் அசோகன் மாரடைப்பால் இறந்து விடுவார். அது மிகப்பெரிய சஸ்பென்ஸ் ஆக கதையில் மீண்டும் தொடர்ந்துகொண்டே இருக்கும்.

    >>>>>

    ReplyDelete
  11. வில்லன் அசோகன் நடிப்பு எனக்கும் பிடித்தது தான். அவர் வில்லனாக நடித்த ‘நான்’ என்ற படத்தையும் என்னால் மறக்கவே முடியாது. அதுவும் நம் ராக்ஸி தியேட்டரில் சுமார் 25 தடவைகளுக்கு மேல் நான் பார்த்த நகைச்சுவையான த்ரில்லிங் படம். பாடல்களும் மிக அருமை. ஜெயலலிதா, நம்ம ஊர் திருச்சி ரவிச்சந்திரன், முத்துராமன், அசோகன், ஆர்.எஸ். மனோஹர், நாகேஷ் [3 வேஷங்களில்], மனோரம்மா முதலியோர் நடித்த மிக அருமையான படம்.

    >>>>>

    ReplyDelete
  12. பள்ளியில் படிக்கும் சிறுவயதில் சினிமாவில் வரும் வில்லன்களைப் பார்த்தால், சற்றே பயமாகவும், வெறுப்பாகவும் உணர்ந்துள்ளேன். பிறகு வயதாக வயதாக மட்டும், அவர்கள் சும்மா அவ்வாறு நடிக்கிறார்கள், அவ்வாறு அவர்கள் தங்களைத் தாங்களே சற்றே தாழ்த்திக்கொண்டு, வேடமேற்று நடிப்பதால் தான், கதாநாயகர்களுக்கு மக்களிடமும் ரசிகர்களிடமும் ஓர் மரியாதையும், நல்லெண்ணமும் ஏற்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடிந்தது. :)

    >>>>>

    ReplyDelete
  13. நிறைய எம்.ஜி.ஆர். படங்களிலும் அசோகன் நடிப்பினைப்பார்த்துள்ளேன். அவர் கண்ணைச் சிமிட்டிச்சிமிட்டி, கைகளைப்பிசைந்தபடி ஒரு வித்யாசமாகத்தான் நடிப்பார். இந்தப் பகிர்வு அவரைப்பற்றிய நல்லதொரு அலசல் .... அதுவும் தங்கள் பாணியில். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கோ. முடிந்தால் நாளைக்கு தொடர்பு கொள்கிறேன்.

    அன்புடன் VGK

    ReplyDelete
  14. அன்பின் அண்ணா..
    தங்கள் நலம் வாழ்க!..

    கர்ணனுக்குத் தோள் கொடுத்த துரியோதனனை யாராலும் மறக்க இயலுமா!..
    கண்ணனையே - அதட்டிப் பேசும் அசாத்தியம் - இனி யாருக்கும் கூடுமா!..

    ReplyDelete
  15. மறுமொழி > G.M Balasubramaniam said...

    அய்யா G.M.B அவர்களின் கனிவான நலம் விசாரிப்பிற்கு நன்றி.

    ReplyDelete
  16. மறுமொழி > KILLERGEE Devakottai said...

    நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  17. மறுமொழி > ‘தளிர்’ சுரேஷ் said...

    சகோதரர் ‘தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி.

    // பத்துநாள் பதிவுகள் வெளியிடாவிட்டால் பக்கப் பார்வைகள் குறைவது உண்மையே! //

    நான் இப்போதெல்லாம் அதிக பின்னூட்டங்களை எதிர்பார்த்தோ அல்லது தமிழ் மணம் வாக்குகளை எதிர்பார்த்தோ எழுதுவது இல்லை. நான் எனது பின்னூட்டங்களில் த.ம. என்று குறிப்பிடக் காரணம், மற்றவர்களை ஊக்குவிக்க வேண்டும், மற்றவர்கள் தமிழ்மணம் வாக்குகளை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக மட்டுமே.

    ReplyDelete
  18. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...

    தொடர்ந்து அலைச்சல் (வெளியூர் பயணங்கள்) காரணமாக எப்போதாவது இதுபோல் முதுகுவலி எனக்கு வரும். ஓய்வு எடுப்பதன் மூலம் எல்லாம் சரியாகி விடும். இப்போது நான் நலமே. சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் அன்பான விசாரிப்பிற்கு நன்றி.

    ReplyDelete
  19. மறுமொழி > manavai james said...

    அன்புள்ள ஆசிரியர் மணவை ஜேம்ஸ் அவர்களது நீண்ட கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  20. மறுமொழி > கவிப்ரியன் கலிங்கநகர் said...


    // அசோகன் மிகை நடிப்புக்குச் சொந்தக்காரர். சில படங்களில் அவரது நகைச்சுவை சேஷ்டைகள் சகிக்காது. எம்ஜிஆரின் படங்களில் இவர் அதிகம். அன்பே வா வை மறுந்துவிட்டீர்களா? //

    நடிகர் அசோகனின் வில்லன் நடிப்பை மிகை என்று சொல்ல இயலாது. அது மற்றவர்களிடம் இருந்து அவரை வேறுபடுத்திக் காட்ட அவர் கையாண்ட யுத்தி என்று கூட சொல்லலாம். மற்றபடி குணச்சித்திர வேடங்களில் நன்றாகவே இயல்பாகவே நடித்து இருந்தார். அன்பே வா – படத்தில் அசோகன் ஒரு கௌரவ நடிகர் போன்று வந்து போவார். அதனால் குறிப்பிட மறந்து விட்டேன்.

    // ஆனாலும் இவர்கள் இருவருக்கும் நேற்று இன்று நாளையில் பிணக்கு ஏற்பட்டது உண்மைதான். பாடல் காட்சிகளுக்காக பல முறை 'செட்' போட்டதில் ஏகப்பட்ட செலவு வைத்து கடனாளியாக்கினார் எம்ஜிஆர் என்பது வதந்தி. பின்னர் அதன் பட வசூலில் சம்பாதிக்காமலா இருந்திருப்பார்? //

    சரியாகச் சொன்னீர்கள். எம்ஜிஆரின் இன்னொரு பக்கம் இது. இந்த இன்னொரு பக்கம் (குணம்) காரணமாகவே எம்ஜிஆருக்கும் சாண்டோ சின்னப்பா தேவருக்கும் மனக் கசப்பு ஏற்பட்டது; பின்னர் எம்ஜிஆரே இந்த கசப்பை நீக்கினார் என்று தகவல்.

    ஆனாலும், நேற்று இன்று நாளை படத்தயாரிப்பில் ஏற்பட்ட கடன், வட்டி அவருக்கு ( அசோகனுக்கு) சரியான லாபத்தைக் கொடுக்கவில்லை என்பதே உண்மை.

    சகோதரர் கவிப்ரியன் கலிங்கநகர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  21. மறுமொழி > Dr B Jambulingam said...

    முனைவர் அவர்களின் அன்பான விசாரிப்பிற்கும் கருத்துரைக்கும் நன்றி.

    ReplyDelete
  22. மறுமொழி > மனோ சாமிநாதன் said...

    // பதிவு சுவாரஸ்யமாக இருந்தது. அசோகன் கதாநாயகனாக நடித்த 'இது சத்தியம்' படத்தை மறந்து விட்டீர்களா? மொட்டைத் தலையுடன் அவர் வில்லனாக நடித்து மிகவும் புகழ் பெற்ற திரைப்ப‌டம் ' நான்'! இதற்குப்பிறகு தான் அவர் தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களுக்கு புகழ் சேர்த்தார். //

    ” சத்தியம் இது சத்தியம்” என்ற பாட்டை மறக்க முடியுமா என்ன? “நான்” படத்தில் அவர் இழுத்து இழுத்து பேசும் உச்சரிப்பை மறக்க முடியாது.

    // முதுகு வலிக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறீர்களா? உடல் நலத்தை கவனித்துக்கொள்ள‌வும். //

    எனக்கு முதுகுவலி அவ்வப்போது தொடர் அலைச்சலின் போது, திடீரென்று வரும். டாக்டர் தந்த ஆலோசனையின்படி சிறிது ஓய்விற்குப் பிறகு மறைந்து விடும். சகோதரி அவர்களின் கருத்துரைக்கும் நலம் விசாரிப்பிற்கும் நன்றி.

    ReplyDelete
  23. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 1, 2 )

    // வணக்கம் ஐயா, முதுகு வலிக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறீர்களா? தங்கள் உடல் நலத்தையும் அவ்வப்போது கவனித்துக்கொள்ள‌வும்.//
    அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம். தொடர் சிகிச்சை ஏதும் கிடையாது. சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் டாக்டரிடம் காண்பித்து சரியான ஒன்றுதான். இருந்தாலும் அவ்வப்போது தொடர்ந்து பயணங்கள் செய்யும்போது முதுகுவலி வரும். சற்று ஓய்விற்குப் பின் சரியாகி விடும். இப்போது நலமே.

    ---

    // நான் நம் பிரபாத் தியேட்டரில் மட்டும் அந்தக்காலக்கட்டத்தில் இந்த ‘உயர்ந்த மனிதன்’ படத்தை சுமார் 25 தடவைகளுக்கு மேல் பார்த்துள்ளேன். //

    அப்போது திருச்சி பிரபாத் தியேட்டரில் சிவாஜி படங்களை மட்டுமே திரையிடுவார்கள் உண்மையில் அந்தக்கால சினிமா அனுபவத்தை ரசித்து இருக்கிறீர்கள். 25 தடவைகளுக்கு மேல் என்பது எனக்கு மலைப்பாக இருக்கிறது. நான் மிஞ்சி மிஞ்சிப் போனால் சில படங்களை மட்டும் மூன்று தடவைக்கு மேல் பார்த்து இருக்க மாட்டேன்.

    // அசோகன் அதில் வில்லன் என்று சொல்ல முடியாது. கோடீஸ்வரரான சிவாஜிக்கு நண்பராகவும், ஃபேமிலி டாக்டராகவும் ஒருசில இடங்களில் மட்டுமே வருவார். ஆனால் அவரின் கதாபாத்திரத்திற்கு அந்தக்கதையில் ஓர் முக்கியத்துவம் உண்டு. ஓர் மிகப்பெரிய உண்மையை சிவாஜியிடம் சொல்லவரும் நேரம், நிறைய குடித்து விட்டு வரும் அசோகன் மாரடைப்பால் இறந்து விடுவார். அது மிகப்பெரிய சஸ்பென்ஸ் ஆக கதையில் மீண்டும் தொடர்ந்துகொண்டே இருக்கும்.//

    உங்களது இந்த பின்னூட்டம் “உயர்ந்த மனிதன்” படத்தை பார்க்கும் ஆர்வத்தை தூண்டும் வண்ணம் உள்ளது. உங்கள் வலைப்பதிவுகளில் சஸ்பென்ஸ் வைத்து எழுதுவது போன்றே இங்கு பின்னூட்டத்திலும் சஸ்பென்ஸ் வைத்து விட்டீர்கள். வாய்ப்பு அமையும்போது, ஒருநாள் இந்த “உயர்ந்த மனிதன்” படத்தை அவசியம் பார்க்க வேண்டும். உங்கள் பார்வையில் அந்தகாலத்து சினிமா பார்த்த அனுபவங்களை பதிவாக எழுதுங்கள்.

    இனிமேல்தான் உங்களுடைய பதிவின் பக்கம் வந்து, கருத்துரை தர வேண்டும். நன்றி.

    ReplyDelete
  24. அசோகன் பற்றி புதிய தகவல்கள் உங்களின் பகிர்வு மூலம் அறிந்தேன் ஐயா. நலமுடன் மீண்டும் தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  25. "அன்பே வா"-வும் மறக்க முடியாது...

    உடலை கவனமாக பார்த்து கொள்ளுங்கள் ஐயா...

    ReplyDelete
  26. வணக்கம்
    ஐயா

    முத்தான நடிகர் அசோகன் பற்றி சொல்லிய விதம் வெகு சிறப்பு ஐயா..
    உடல் நலத்தை கவனியுங்கள்..... எப்போது எழுதலாம் த.ம 7

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  27. செயின்ட் ஜோசப்பில் பி.ஏ படித்தவர்.
    தங்களது சித்தரிப்பு அருமை
    அடுத்ததாக ரவிச்சந்திரன் பற்றியும் எழுதுங்கள்.
    உடல்நலனில் கவனம் கொள்ளுங்கள்.

    த ம 8

    ReplyDelete
  28. அடக் கடவுளே! இந்த நடிகருக்கு இத்தனை ரசிகர்களா?! தாங்க முடியவில்லை. ஏதேனும் ஒரு மனவியல் வல்லுனரிடம் போகணும் போல ....!

    ஒரே ஒர் படம் எனக்கு எரிச்சல் தரவில்லை - உயர்ந்த மனிதன். தலைவரையே தாண்டியிருப்பார். அம்புட்டு தான்.

    நன்கு உடல் நலம் பெறுங்கள்

    ReplyDelete
  29. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 3, 4, 5 )

    // வில்லன் அசோகன் நடிப்பு எனக்கும் பிடித்தது தான். அவர் வில்லனாக நடித்த ‘நான்’ என்ற படத்தையும் என்னால் மறக்கவே முடியாது. அதுவும் நம் ராக்ஸி தியேட்டரில் சுமார் 25 தடவைகளுக்கு மேல் நான் பார்த்த நகைச்சுவையான த்ரில்லிங் படம்.//

    ”நான்” படத்தையும் 25 தடவைகளுக்கு மேல் பார்த்து இருக்கிறீர்களா? அதுவும் மூட்டைப்பூச்சி கடி மிகுந்த அந்த ராக்ஸியில். அப்போது நீங்கள் படித்துக் கொண்டு இருந்தீர்களா இல்லை வேலைக்கு சென்று கொண்டு இருந்தீர்களா? நல்ல சினிமா ரசிகர்தான்.

    ---

    // பள்ளியில் படிக்கும் சிறுவயதில் சினிமாவில் வரும் வில்லன்களைப் பார்த்தால், சற்றே பயமாகவும், வெறுப்பாகவும் உணர்ந்துள்ளேன். பிறகு வயதாக வயதாக மட்டும், அவர்கள் சும்மா அவ்வாறு நடிக்கிறார்கள், அவ்வாறு அவர்கள் தங்களைத் தாங்களே சற்றே தாழ்த்திக்கொண்டு, வேடமேற்று நடிப்பதால் தான், கதாநாயகர்களுக்கு மக்களிடமும் ரசிகர்களிடமும் ஓர் மரியாதையும், நல்லெண்ணமும் ஏற்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடிந்தது. :)//

    நல்ல அபிப்பிராயம் உங்களுக்கு.
    ---

    // உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கோ. முடிந்தால் நாளைக்கு தொடர்பு கொள்கிறேன்.//

    எப்போதாவது வரும் முதுகுவலிதான். ஆரம்பத்திலேயே சரி செய்தாகி விட்டது. இப்போது நான் நலமே! உங்கள் அன்பிற்கு நன்றி.

    ReplyDelete
  30. மறுமொழி > துரை செல்வராஜூ said...

    சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் கருத்துரைக்கு நன்றி. கர்ணனுக்குத் தோள் கொடுத்த துரியோதனனை மறந்தது என் தவறுதான். பதிவு நீண்டுவிடும் என்பதால் நிறைய தகவல்களை சொல்ல இயலாமல் போய்விட்டது.

    ReplyDelete
  31. மறுமொழி > தனிமரம் said...


    சகோதரர் தனிமரம் அவர்களின் கருத்துரைக்கும் அன்பின் நல விசாரிப்பிற்கும் நன்றி.

    ReplyDelete
  32. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...

    சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  33. மறுமொழி > ரூபன் said...

    கவிஞர் ரூபன் அவர்களுக்கு வணக்கமும் நன்றியும். எல்லாம் சரியாகி விட்டது. தொடர்ந்து எழுதுவேன்.

    ReplyDelete
  34. மறுமொழி > ஊமைக்கனவுகள். said...

    சகோதரர் ஆசிரியர் ஜோசப் விஜூ அவர்களுக்கு நன்றி.

    // செயின்ட் ஜோசப்பில் பி.ஏ படித்தவர். தங்களது சித்தரிப்பு அருமை அடுத்ததாக ரவிச்சந்திரன் பற்றியும் எழுதுங்கள்.
    உடல்நலனில் கவனம் கொள்ளுங்கள். த ம 8 //

    அசோகன் நடிப்பைப் பற்றியும் அவரது வாழ்க்கை குறிப்புகள் பற்றியும் நிறைய எழுதலாம். எல்லாம் ஏற்கனவே நிறையபேர் எழுதி விட்ட படியினால், நான் ரசித்த படங்களிலிருந்து சிலவற்றை மட்டும் எழுதினேன். நடிகர் ரவிச்சந்திரன் பற்றியும் நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்.

    ReplyDelete
  35. மறுமொழி > தருமி said...

    பேராசிரியர் தருமி அய்யா அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    // அடக் கடவுளே! இந்த நடிகருக்கு இத்தனை ரசிகர்களா?! தாங்க முடியவில்லை. ஏதேனும் ஒரு மனவியல் வல்லுனரிடம் போகணும் போல ....!//

    நீங்கள் உயர்ந்த மனிதனை மட்டும் ரசித்தது போல, மற்றவர்கள் மற்ற படங்களிலும் அசோகனின் நடிப்பை ரசித்த ரசிகர்கள் மட்டுமே. யாரும் சினிமா பைத்தியம் கிடையாது.

    // ஒரே ஒர் படம் எனக்கு எரிச்சல் தரவில்லை - உயர்ந்த மனிதன். தலைவரையே தாண்டியிருப்பார். அம்புட்டு தான்.//

    நான் இன்னும் இந்த படத்தை பார்த்தது இல்லை. உண்மையான காரணம் அப்போது நான் எம்ஜிஆர் ரசிகன். சிவாஜி ரசிகர்கள் எம்ஜிஆர் படங்களை பார்க்க விரும்பாதது போல, எம்ஜிஆர் ரசிகர்கள் சிவாஜி படங்களைப் பார்ப்பது இல்லை. அந்த வரிசையில் இந்த உயர்ந்த மனிதன் படம் விட்டுப் போயிற்று. என்று நினைக்கிறேன். அது ஒரு கனாக்காலம். ஆனாலும் நான் தி.மு.க அனுதாபியாகவே இருந்தேன். (இப்போது எந்த கட்சியும் இல்லை) அதன்பிறகு படித்து முடிந்து வேலைக்கு சேர்ந்த பிறகு எல்லோருடைய ( சிவாஜி, எம்.ஆர்.ராதா உட்பட) படங்களையும் பார்த்து வருகிறேன். உயர்ந்த மனிதன் பற்றி எல்லோரும் பேசுவதால் பார்க்க வேண்டும்.

    // நன்கு உடல் நலம் பெறுங்கள் //

    பேராசிரியர் அவர்களின் அன்பிற்கு நன்றி.

    ReplyDelete
  36. His overacting wasn't hated; rather, welcomed by Tamil viewers,

    Naan was a turning point in his acting career: it showed a new dimension in his acting career as a comedian villain. His overacting flowed from stage. He was a original stage actor for a long time (stage means drama). Further, during his time, overacting was in fashion. All actors overacted in tune with the fashion.

    Mr S A Ashokan was a devout catholic. Like many people in his time, he was attracted to dravidian ideology and Anna, although he didn't join the party. He ran a drama troupe even while he was having an active Cinema career. His repertoire included the stories of Anna and MK. He came to my home town and there was much talk about his visit. He came to stage three plays: Mukkani by MuKa; Vandikkaaran Magan by Anna, Tuticorin has a basicila under which came all Churches in Tuticorin, Tirunelveli, Madurai, Ramanad, KK and also, Trivandrum district of Kerala. Bishop was Thomas Fernado, a popular figure at that time. Mr S A Asokan arrived by train in the morning and straight proceeded to Biship House to receive his blessing. Then, he went to the famous Church of Tuticorin Lady of Snows (madha koil). His devotion to catholicism lasted his life long. A truly religious man. A villain on screen; a pious religious man in life, exactly like his contemporary the other villain M N Nambiar.

    I saw both his plays those days. Great. My first experience of watching a stage play, that too, enacted by a famous actor.

    ReplyDelete
  37. மறுமொழி > Anonymous said... (1)

    நடிகர் S.A. அசோகன் பற்றிய அதிக தகவல்களை ஆங்கிலத்தில் தந்த Anonymous said... அவர்களுக்கு நன்றி. கருத்துரையின் முடிவில் தங்களது பெயரை தந்து இருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும்.

    ReplyDelete
  38. எனக்கும் நடிகர் அசோகன் அவர்களின் நடிப்பு பிடிக்கும். மேலும் அவர் நான் படித்த புனித வளவனார் கல்லூரியில் படித்தவர் என்பதால் கூடுதல் பிரியம். ‘நான்’ திறப்படத்தில் அவருடைய நடிப்பை மறக்க முடியுமா என்ன ?

    மூன்று நாட்கள் ஊரில் இல்லாததால் வலைப்பக்கமே வர இயலவில்லை. அதனால் தங்கள் பதிவை பார்க்க இயலவில்லை.

    ReplyDelete
  39. மறுமொழி > வே.நடனசபாபதி said...

    அன்புள்ள அய்யா V.N.S அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    // மூன்று நாட்கள் ஊரில் இல்லாததால் வலைப்பக்கமே வர இயலவில்லை. அதனால் தங்கள் பதிவை பார்க்க இயலவில்லை. //

    எல்லோருக்கும் ஏற்படும் இயல்பான சூழ்நிலைதான் இது.

    ReplyDelete
  40. ஐயா ! அருமையான நடிகர் குறித்த தங்களின் இந்தப் பதிவு மிக மிக சுவாரஸ்யமாக இருக்கிறது. நாங்கள் பல அறிந்திராதத் தகவல்கள். உதாரணமாக....//“அப்படி இறந்தவனே சுமந்தவனும் இறந்திட்டான்” - என்ற பாடல் அசோகன் தனது சொந்தக் குரலில் பாடியது.//

    தங்கள் உடல் நலம் பேணுங்கள் ஐயா. இதற்கடுத்த தங்கள் முதுகு வலி பற்றிய பதிவையும் பார்த்தோம்....அதில் தாங்கள் குணமானதாகவும் எழுதி உள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி. என்றாலும் தாங்கள் உடல் நலம் நன்றாக இருக்கும் போது பதிவிடுங்கள் ஐயா. நாங்கள் வாசகர்கள் மறக்க மாட்டோம். தேர்வு சமயம் ஆதலால் வர இயலவில்லை. தாமதமானது.

    ReplyDelete
  41. வில்லன்,நகைச்சுவை வில்லன்,நகைச்சுவை நடிகர் என மாறு பட்ட படங்களில் கலக்கியவர் அசோகன்.அபாரமான பதிவு. உயர்ந்த மனிதமனிதனை கண்டிப்பாக பாருங்கள். அந்தப்படத்தில் சிவாஜிதான் கதாநாயகன் என்றாலும் அசோகன் நடித்த பாத்திரம் அவருக்கு பிடித்த பாத்திரம். அசோகன் எப்படி நடிக்க வேண்டும் என்பதையும் சிவாஜி நடித்துக்காட்டினார். உடல் நிலையை கவனியுங்கள்.

    ReplyDelete