Thursday, 19 March 2015

முதுகுவலியும் நானும்


சுமார் 25 வருடங்களுக்கு முன்னர். எப்போதும் போல நான் பணிபுரிந்த வங்கிக்கு எனது வீட்டிலிருந்து மொபெட்டில் சென்று வந்து கொண்டிருந்தேன். திடீரென்று வலதுகால் சுண்டுவிரல் தொடங்கி வலது தோள்பட்டை வரை சிறிது வலியெடுத்தது. எல்லோரும் சதைப்பிடிப்பு , தைலம் தேய்த்தால் சரியாகி விடும் என்று சொன்னார்கள். எனவே தைலம் தேய்த்துக் கொண்டேன். இரண்டொரு நாட்களில் முதுகெலும்பு முழுதும் வலி (முதுகுவலி Back pain) வர ஆரம்பித்து விட்டது. எனவே வேலைக்கு பஸ்ஸில் செல்ல ஆரம்பித்தேன். அதிகமாக வலியெடுக்க ஆரம்பித்தவுடன் வலி நிவாரண தைலத்தை தேய்த்துக் கொண்டேன். எல்லாம் கொஞ்சநாள் தான்.

முதுகுவலி வந்த கதை:

ஒருநாள் வங்கியில் பணிபுரிந்து கொண்டு இருந்தபோது மதியம் இருக்க இருக்க, வலி அதிகமானதோடு, வலது காலை தூக்க முடியவில்லை. கண்களில் கண்ணீர் வந்து விட்டது. எனது கஷ்டத்தைப் பார்த்த என்னோடு பணிபுரிந்த நண்பர்கள், என்னை சிறப்பு மருத்துவரான டாக்டர் ஜான் கருப்பையா (ஆர்த்தோ) அவர்களிடம் ஆட்டோ ஒன்றில் அழைத்துச் சென்றனர். இவர் திருச்சியில் பிரபலமான நல்ல மருத்துவர்.

மருத்துவ மனையில் வழக்கம்போல எக்ஸ்ரே முதலான சோதனைகள். எக்ஸ்ரேயில் இடுப்புக்கு மேலே முதுகெலும்பில் சிறிது விரிசல் இருப்பது தெரிய வந்தது. எனவே டாக்டர் என்னிடம் என்றாவது மேலேயிருந்து அல்லது வண்டியில் செல்லும்போது கீழே விழுந்து விட்டீர்களா? என்று கேட்டார். அப்போதுதான் அந்த சம்பவம் நினைவுக்கு வந்தது.

ஒருநாள் நானும் என்னோடு பணிபுரிந்த  நண்பர் ஒருவரும் எனது மொபெட்டில் சென்று கொண்டு இருந்தோம். நான் வண்டியை ஓட்டினேன். பின்னிருக்கையில் அவர் இருந்தார். திருச்சி தெப்பக்குளம் (இது நெரிசலான பகுதி) பக்கம் கடைவீதியில் வந்து கொண்டு இருந்தபோது திடீரென குறுக்கே ஒருவர் சாலையைக் கடந்தார். அவர் மீது மோதாமல் இருக்க பிரேக் போட்ட போது இருவரும் கீழே விழுந்து விட்டோம். பெரிதாகக் காயம் ஏதும் இல்லை. நண்பருக்கு ஏற்கனவே இதுபோல் அனுபவம் உண்டு. எனவே அவர் அவரது டாக்டரிடம் காண்பித்து ஒன்றும் இல்லை என்பதனை உறுதி செய்து கொண்டார். நான் நமக்குத்தான் ஒன்றும் இல்லையே என்று அசட்டையாக இருந்து விட்டேன். அதன் விளைவு இந்த முதுகுவலி.

சிகிச்சை முறைகள்:


எனது கதையைக் கேட்ட டாக்டர் ஆறு மாதத்திற்கு வண்டி ஓட்டக் கூடாது, ஆட்டோவில் பயணம் செய்யக் கூடாது என்று கூடாதுகள் - பட்டியல் ஒன்றைச் சொன்னார். மேலும் மாத்திரைகள், ETHNORUB என்ற தைலம், சுடுநீர் பை (HOT WATER POUCH) ஆகியவற்றை எழுதிக் கொடுத்ததோடு தூங்கும்போது எப்படி தூங்க வேண்டும் என்றும் சொன்னார். அப்படியும் சரியாகாமல் போனால் ஆபரேஷன் மூலம் முதுகில் இரும்புத் தகடு (STEEL PLATE ) வைக்க வேண்டி வரும் என்று எச்சரிக்கை செய்தார்.மேலும் ஒரு மாதம் கழித்து வரச் சொன்னார்.


பெரும்பாலும் நான் எப்போதும் டாக்டர்கள் சொன்னதை அப்படியே பின்பற்றக் கூடியவன். எனவே முதுகுவலிக்கு டாக்டர் ஜான் கருப்பையா அவர்கள் சொன்ன ஆலோசனைகளை அப்படியே பின்பற்றினேன். முதல் வேலையாக இருசக்கர வண்டி ஓட்டுவதை முற்றிலும் தவிர்த்தேன். சரியாக நேரம் தவறாமல் மருந்துகளை எடுத்துக் கொண்டேன். நகர் மத்தியில் இருந்த, நான் பணிபுரிந்த வங்கிக்கு பஸ்ஸில் சென்று வந்தேன். என்னோடு பணி புரிந்த துணைநிலை ஊழியர் ஒருவர் தைலம் தேய்த்து உதவினார். மாலையில் வேலை முடிந்ததும், துணைநிலை ஊழியர்கள் ஓய்வறையில் எனது நடு முதுகில் மேலிருந்து கீழ் வரை ETHNORUB என்ற தைலத்தை அவர் நன்கு அழுத்தி தேய்த்து விடுவார். அப்போது சட்டை, பனியன் இல்லாமல் பேண்ட் மட்டும் அணிந்து கொண்டு வெற்றுடம்போடு இருப்பேன். அப்போது அங்கு வரும் சக ஊழியர்கள் என்னை “என்ன பயில்வான் வேலைக்கு போகிறீர்களா?  என்று கிண்டல் செய்வார்கள். வீட்டிற்கு வந்ததும் மாலையில் டாக்டர் சொன்னபடி வாங்கிய சுடுநீர் பையில்(HOT WATER POUCH) மிதமாக வெந்நீர் நிரப்பி ஒத்தடம் கொடுத்துக் கொண்டேன். இரவில் தூங்கும்போது இரண்டு தலையணைகளை ஒன்றின்மேல் ஒன்று வைத்து உயரமாக்கிக் கொண்டு, அவற்றின் மேல் கால்களை வைத்துக் கொண்டு  தலைக்கு ஏதும் வைத்துக் கொள்ளாமல் தூங்கினேன். எல்லாம் சரியாகி குணமாகிக் கொண்டுதான் வந்தது. ஆனாலும் காலையில் எழுந்தவுடன் நடைப் பயிற்சி (Walking)  செல்லும்போது அதிக தூரம் செல்ல முடியவில்லை. முதுகிலும் காலிலும் வலி எடுக்க ஆரம்பித்தது.

முதுகு வலியிருந்து விடுதலை:

ஒருமாதம் கழித்து டாக்டரை மறுபடியும் சென்று பார்த்தபோது இதனைச் சொன்னேன். அவர் உடனே என்னைப் பார்த்து கேட்ட முதல் கேள்வி “ உங்களை யார் முதுகுவலியோடு வாக்கிங் போகச் சொன்னார்கள்? என்று கேட்டுவிட்டு மறுபடியும் ஒருமாதம் கழித்து வரச் சொன்னார். நான் வாக்கிங் போவதை நிறுத்திக் கொண்டு மற்றவற்றை தொடர்ந்தேன். முதுகுவலி போன இடம் தெரியவில்லை. ஒருமாதம் கழித்து டாக்டரிடம் மூன்றாவது முறை சென்றேன். எக்ஸ்ரே மற்றும் மற்ற சோதனைகள் செய்துவிட்டு நான் முழு குணம் அடைந்து இருப்பதாகவும், இன்னும் ஒரு மாதத்திற்கு அப்படியே தொடர்ந்து இருந்துவிட்டு சிகிச்சை முறைகளை நிறுத்திக் கொள்ளச் சொன்னார்.

முதுகு வலிக்காக அப்போது டாக்டரைப் பார்த்ததுதான். இப்போது எனக்கு வயது அறுபது. கடந்த 25 வருடங்களாக  எப்போதும் போல எனது மொபெட்டில் வெளியே சென்று வந்தேன். இப்போது நான் முதுகுவலியிலிருந்து குணம் அடைந்து விட்டேன். மொபெட்டில் செல்வது எங்கள் ஏரியாவோடு சரி. வாக்கிங் அதிகதூரம் செல்வது இல்லை. இப்போதும் நான் தூங்கும்போது பெரும்பாலும் கால்களுக்கு தலையணை போன்ற எதனையும் வைத்துக் கொள்வதில்லை. இருந்தாலும் எப்போதாவது (அதிகம் பயணம் செய்தால்) முதுகுவலி எனக்கு வரும். வெறும் கட்டாந்தரையில் பாய்போட்டு, தலைக்கும் கால்களுக்கும் தலையணை ஏதுமின்றி மல்லாக்க நீட்டி படுத்து ஓய்வு எடுக்க சரியாகிவிடும்.

( குறிப்பு: எனக்கு வந்த இந்த முதுகுவலி நீங்கிய அனுபவம், இதேபோல  வலி உள்ள மற்றவர்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்கலாம் என்பதால் இந்த பதிவு )


                                 (ALL PICTURES - COURTESY: “ GOOGLE IMAGES ”)
 

43 comments:

 1. வணக்கம்
  ஐயா
  செலவு இல்லாத சிகிச்சை முறையை சொல்லியுள்ளீர்கள்...
  உண்மைதான் ஐயா...தாங்கள் சொல்வது போல... நிலத்தில் தூங்கினால் சரியாகிவிடும்.. பகிர்வுக்கு நன்றி த.ம 1

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. நண்பரே கடைசி குறிப்பு கொடுத்தார்களே அது எனக்கு கண்டிப்பாக உதவும் என்று நினைக்கிறேன் காரணம் எனக்கு இப்பொழுது அடிக்கடி முதுகுவலி வருகிறது இங்கு போகலாம் ஆனால் முதுகுவவலியை சரியாக்கி விட்டு வேறு பிரட்சினையை முதுகில் கட்டி விடுவார்கள் இந்த நாட்டில் சரியான மருத்துவம் கிடைக்காது ஆகவே நமது நாட்டில் பார்க்கலாம் என்று இருக்கிறேன் தகவலுக்கு நன்றி.
  தமிழ் மணம் 2

  ReplyDelete
 3. முதுகு வலியால் அவதிப் படுபவர்களை பார்த்திருக்கிறேன்.நீங்கள் மருத்துவரின் அறிவுரையைப் பின்பற்றுவது போல் பலரும் பின்பற்றுவது இல்லை

  ReplyDelete
 4. பெரும்பாலும் மருத்துவர் ஆலோசனைகளைக் கண்டு மலைத்து நிற்பவர்களுக்கு அல்லது அதைப் பின்பற்ற இயலாத பணியில் உள்ளவர்களுக்கு முதுகுவலி தீராப்பிரச்சினையாகத்தான் ஆகிவிடுகிறது.

  அனுபவப்பகிர்வு பலர்க்கும் பயன்படும் அய்யா!

  த ம 1 கூடுதல்

  ReplyDelete
 5. பலருக்கும் - அவரவருக்கு ஏற்ற வகையில் பயன்படும் குறிப்புகள்!..
  ஆயினும்..

  //வெறும் கட்டாந்தரையில் பாய்போட்டு, தலைக்கும் கால்களுக்கும் தலையணை ஏதுமின்றி மல்லாக்க நீட்டி படுத்து ஓய்வு எடுக்க சரியாகிவிடும்.,//

  சிந்தித்து செயல்படவேண்டிய முக்கிய செய்தி!.. வாழ்க நலம்!..

  ReplyDelete
 6. முதுகு வலி உள்ளவர்களுக்கு, கண்டிப்பாக நிவாரணம் கிடைத்து விடும் என்கிற நம்பிக்கையை உங்கள் பதிவு கொடுக்கிறது. மருத்துவரின் ஆலோசனைகளை சிரமேற்கொண்டு செய்ய வேண்டும் என்கிற அறிவுரையையும் எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டியதே. நன்றி பகிர்விற்கு.

  ReplyDelete
 7. நல்ல வேளை,இதுவரை எனக்கு முதுகு வலியில்லை,ஆனால் ,சில வார்த்தைகள் முதலில் வேறு மாதிரியாய் புலப் படுகின்றன ,நிவாரணம் இருந்தால் சொல்லுங்கள் ...உதாரணம் ,முத்துவல்லியும் நானும் :)

  ReplyDelete
 8. முதுகு வலி பற்றிய மிக அருமையான அலசலாகக் கொடுத்துள்ளீர்கள். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வலி ... ஒவ்வொரு டாக்டர் ... ஒவ்வொரு விதமான சிகிச்சை ... ஒருசிலருக்கு உடனே நிவாரணம் ... ஒருசிலருக்கு தாமதமான நிவாரணம் ... ஒருசிலருக்கு நிவாரணமே இல்லை.

  இருப்பினும் நல்ல டாக்டர் அமைந்து, அவரிடம் நாம் சென்று, அவருக்கும் நம் பிரச்சனை நன்கு புரிந்து, அதற்கான சிகிச்சை அவர் நமக்கு அளித்து. அவர் சொல்படி நாமும் கேட்டு, குணமாக ஓர் கொடுப்பிணை வேண்டும்.

  இந்தத்தங்களின் பதிவு பலருக்கும் பயன்படும். பகிர்வுக்கு நன்றிகள்.

  இந்த ஒத்தடம் கொடுக்கும் பை எங்கள் வீட்டிலும் ஒன்று உள்ளது. அதில் சுடுதண்ணீர் நிரப்பி பொறுமையாக யாராவது சர்வாங்கத்திற்கும் ஒத்தடம் கொடுத்தால் தேவலையே என நான் நினைத்துக்கொள்வேன். நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் ...................... :)

  ReplyDelete
 9. மறுமொழி > ரூபன் said...

  கவிஞர் ரூபன் அவர்களுக்கு வணக்கமும் நன்றியும்.

  // வணக்கம் ஐயா செலவு இல்லாத சிகிச்சை முறையை சொல்லியுள்ளீர்கள்... உண்மைதான் ஐயா...தாங்கள் சொல்வது போல... நிலத்தில் தூங்கினால் சரியாகிவிடும்.. பகிர்வுக்கு நன்றி த.ம 1 //

  நமக்கு வரும் பலவிதமான வலிகளை எளிய பயிற்சிகள் அல்லது செய்முறைகள் மூலம் குணப்படுத்திக் கொள்ளலாம். இதில் உள்ள ஒரே சிக்கல், ஒருவரைக் குணப்படுத்திய அதேமுறை மற்றவர்களுக்கும் அதே முறையில் பலனளிக்குமா என்பதுதான். இருந்தாலும் முயற்சி செய்து பார்க்கலாம்.

  ReplyDelete
 10. மறுமொழி > KILLERGEE Devakottai said...

  நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

  // நண்பரே கடைசி குறிப்பு கொடுத்தார்களே அது எனக்கு கண்டிப்பாக உதவும் என்று நினைக்கிறேன் காரணம் எனக்கு இப்பொழுது அடிக்கடி முதுகுவலி வருகிறது //

  முதுகுவலிக்கு காரணங்கள் பல. மன உளைச்சலைக் கூட காரணமாகச் சொல்லுகிறார்கள். உங்கள் முதுகுவலிக்கு என்ன காரணம் என்று தெரிந்து கொள்ளுங்கள். நான் சொன்ன குறிப்பு பொதுவாக எல்லா மருத்துவர்களும் சொல்லும் ஆலோசனைதான்.

  // இங்கு போகலாம் ஆனால் முதுகுவவலியை சரியாக்கி விட்டு வேறு பிரட்சினையை முதுகில் கட்டி விடுவார்கள் இந்த நாட்டில் சரியான மருத்துவம் கிடைக்காது ஆகவே நமது நாட்டில் பார்க்கலாம் என்று இருக்கிறேன் தகவலுக்கு நன்றி.
  தமிழ் மணம் 2 //

  எது எப்படி இருந்த போதிலும் சுய வைத்தியம் (Self treatment) மட்டும் கூடாது. ஒரு நல்ல டாக்டரின் ஆலோசனையைப் பெற்றிடுங்கள்.

  ReplyDelete
 11. மறுமொழி > டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

  சகோதரர் கல்வி அதிகாரி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

  // முதுகு வலியால் அவதிப் படுபவர்களை பார்த்திருக்கிறேன். நீங்கள் மருத்துவரின் அறிவுரையைப் பின்பற்றுவது போல் பலரும் பின்பற்றுவது இல்லை //

  எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு பெரும்பாலும் மருந்து மாத்திரைகளை விட டாக்டர்கள் சொல்லும் அறிவுரைகள் மற்றும் நமது நம்பிக்கைதான் முக்கியம். எனவே ஒரு நல்ல டாக்டரை அணுகினால் போதும்.

  ReplyDelete
 12. மறுமொழி > ஊமைக்கனவுகள். said...

  சகோதரர் ஊமைக்கனவுகள் ஜோசப் விஜூ அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

  // பெரும்பாலும் மருத்துவர் ஆலோசனைகளைக் கண்டு மலைத்து நிற்பவர்களுக்கு அல்லது அதைப் பின்பற்ற இயலாத பணியில் உள்ளவர்களுக்கு முதுகுவலி தீராப்பிரச்சினையாகத்தான் ஆகிவிடுகிறது. //

  நீங்கள் சொல்வது சரிதான். டாக்டர் சொல்லும் மருத்துவ ஆலோசனைகளை யாரும் அப்படியே கடை பிடிப்பதில்லை.

  // அனுபவப்பகிர்வு பலர்க்கும் பயன்படும் அய்யா!
  த ம 1 கூடுதல் //

  பயன்பட்டால் நல்லது நான் மகிழ்ச்சி அடைவேன்.

  ReplyDelete
 13. மறுமொழி > துரை செல்வராஜூ said...

  சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

  /// பலருக்கும் - அவரவருக்கு ஏற்ற வகையில் பயன்படும் குறிப்புகள்!..ஆயினும்..

  //வெறும் கட்டாந்தரையில் பாய்போட்டு, தலைக்கும் கால்களுக்கும் தலையணை ஏதுமின்றி மல்லாக்க நீட்டி படுத்து ஓய்வு எடுக்க சரியாகிவிடும்.,//

  சிந்தித்து செயல்படவேண்டிய முக்கிய செய்தி!.. வாழ்க நலம்!.. ///

  நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
  வாய்நாடி வாய்ப்பச் செயல்.

  என்பது வள்ளுவர் வாய்மொழி. மேலே கவிஞர் ரூபன் அவர்களுக்குத் தந்த மறுமொழியையே இங்கும் சொல்ல விரும்புகிறேன். -

  நமக்கு வரும் பலவிதமான வலிகளை எளிய பயிற்சிகள் அல்லது செய்முறைகள் மூலம் குணப்படுத்திக் கொள்ளலாம். இதில் உள்ள ஒரே சிக்கல், ஒருவரைக் குணப்படுத்திய அதேமுறை மற்றவர்களுக்கும் அதே முறையில் பலனளிக்குமா என்பதுதான். இருந்தாலும் முயற்சி செய்து பார்க்கலாம்.

  ReplyDelete
 14. மறுமொழி > rajalakshmi paramasivam said...

  சகோதரி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

  // முதுகு வலி உள்ளவர்களுக்கு, கண்டிப்பாக நிவாரணம் கிடைத்து விடும் என்கிற நம்பிக்கையை உங்கள் பதிவு கொடுக்கிறது. மருத்துவரின் ஆலோசனைகளை சிரமேற்கொண்டு செய்ய வேண்டும் என்கிற அறிவுரையையும் எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டியதே. நன்றி பகிர்விற்கு. //

  எந்த நோயாக இருந்தாலும் ஒரு நல்ல மருத்துவரின் ஆலோசனைகளின் மீது நம்பிக்கை வைத்து செயல்பட்டால் நல்லது.

  ReplyDelete
 15. மறுமொழி > Bagawanjee KA said...

  சகோதரர் கே.ஏ.பகவான்ஜீ அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

  // நல்ல வேளை,இதுவரை எனக்கு முதுகு வலியில்லை, //

  இது ஒரு நல்ல தகவல், நல்லதுதான்.

  // ஆனால் ,சில வார்த்தைகள் முதலில் வேறு மாதிரியாய் புலப் படுகின்றன ,நிவாரணம் இருந்தால் சொல்லுங்கள் ...உதாரணம் ,முத்துவல்லியும் நானும் :) //

  நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை. இருப்பினும் நீங்கள் ஒரு தீராத விளையாட்டுப் பிள்ளை என்று புரிகிறது.

  ReplyDelete
 16. நல்ல அனுபவம். எதையும் முறையோடு செய்தால் குணம் காணலாம்.

  ReplyDelete
 17. உங்களின் அனுபவம் (எளிய முறை) பலருக்கும் பாடம் ஐயா... நன்றி...

  ReplyDelete
 18. முதுகு வலியோடு சிரமப்படும் பல அலுவலக பணியாளர்களுக்கு பயனுள்ள பதிவு!
  த ம 8

  ReplyDelete
 19. மறுமொழி > பழனி. கந்தசாமி said...

  முனைவர் பழனி. கந்தசாமி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

  ReplyDelete
 20. மறுமொழி > துளசி கோபால் said...

  சகோதரி அவர்களின் பாராட்டிற்கு நன்றி.

  ReplyDelete
 21. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...

  சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

  ReplyDelete
 22. முதுகு வலியோடு அவதிப்படும் பதிவுல்க அன்பர்களுக்கு உதவி செய்யும் பதிவு ஐயா,
  தாங்கள் ஒரு நல்ல வணிக நோக்கில்லாத மருத்துவரிடம் சென்றுள்ளீர்கள் அதனால், தொல்லையில் இருந்து விடுபட்டுள்ளீர்கள்
  அம் மருத்துவர் போற்றப்பட வேண்டியவர்
  நன்றி ஐயா
  தம +1

  ReplyDelete
 23. எப்போதும் மருத்துவரின் அறிவுரையைக் கடைப்பிடிப்போருக்கு மலைபோல் வந்த பிணி பனிபோல் மறைந்துவிடும். நானும் மருத்துவரின் அறிவுரையை 100 விழுக்காடு பின்பற்றுபவன். தங்களின் அனுபவப்பதிவு அனைவருக்கும் உபயோகமான ஒன்று. பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
 24. ஆலோசனையை ஏற்று பின்பற்றுபவர்களுக்கு சரியாகும் தங்களைப் போல.. என்பதை தங்கள் பகிர்வை படித்தபின்பு இனி மருத்துவமனை சென்று வந்தால் சரியாகும் என்றில்லாமல் தகுந்த பயிற்சியையும் பின்பற்றுவார்கள் .

  ReplyDelete
 25. உங்கள் அனுபவம் பிறருக்கு உதவும். டாக்டர் ஆலோசனையை கடைபிடித்து , அதோடு மனவலிமையோடு முதுகுவலியை எதிர்கொண்டு விரட்டி விட்டீர்கள்.
  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 26. அன்புள்ள அய்யா,

  முதுகுவலியும் நானும்- நல்ல அனுபவத்தை பகிர்ந்தீர்கள்... உண்மையில் இதுதான் அனுபவப் பதிவு.

  முதுகுவலியில் அவதிப்படுவோருக்கும்... முதுகுவலி வந்தால் அதை நிவர்த்தி செய்வதற்கும் நல் வழியைக் காட்டும்!

  கட்டன் தரையில் ஒரு துண்டை விரிதேன்
  கண்ணில் தூக்கம் சொக்குமே
  அது அந்த காலமே
  மெத்தை விரித்தும் சுத்த பன்னீர் தெளித்தும்
  கண்ணில் தூக்கம் இல்லயே
  அது இந்த காலமே
  என் தேவனே தூக்கம் கொடு
  மீண்டும் அந்த வாழ்க்கை கொடு

  நன்றி.
  த.ம. 13.

  ReplyDelete
 27. உங்கள் அனுபவமும் ஆலோசனைகளும் நிச்சயம் மற்ற‌வர்களுக்குப் பயன்படும். இப்போதெல்லாம் நல்ல மருத்துவர் கிடைக்கவும் கொடுப்பினை இருக்க வேண்டும். பதிவிற்கு நன்றி!

  ReplyDelete
 28. மறுமொழி > S.P. Senthil Kumar said...

  சகோதரர் எஸ்.பி.செந்தில் குமார் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

  ReplyDelete
 29. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...

  சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. நான் பார்த்த மருத்துவர் ஒரு நல்ல மருத்துவர் என்பதில் சந்தேகமில்லை.

  ReplyDelete
 30. மறுமொழி > வே.நடனசபாபதி said...

  அய்யா V.N.S அவர்களுக்கு நன்றி.

  ReplyDelete
 31. மறுமொழி > சசி கலா said...

  சகோதரி அவர்களுக்கு நன்றி.

  ReplyDelete
 32. மறுமொழி > கோமதி அரசு said...

  சகோதரி அவர்களுக்கு நன்றி.

  ReplyDelete
 33. மறுமொழி > manavai james said...

  அன்புச் சகோதரர் ஆசிரியர் மணவை ஜேம்ஸ் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

  // கட்டாந் தரையில் ஒரு துண்டை விரித்தேன்
  கண்ணில் தூக்கம் சொக்குமே
  அது அந்தக் காலமே
  மெத்தை விரித்தும் சுத்த பன்னீர் தெளித்தும்
  கண்ணில் தூக்கம் இல்லயே
  அது இந்தக் காலமே
  என் தேவனே தூக்கம் கொடு
  மீண்டும் அந்த வாழ்க்கை கொடு //

  உங்கள் கவிதையை ரசித்தேன். சில ஒற்றுப் பிழைகளை சரி செய்தேன். சமயம் வரும்போது உங்கள் கவிதைதனை உங்கள் பெயரோடு மேற்கோள் காட்டுவேன். நன்றி.

  ReplyDelete
 34. மறுமொழி > மனோ சாமிநாதன் said...

  சகோதரி அவர்களுக்கு நன்றி.

  ReplyDelete
 35. அன்புள்ள அய்யா,

  ‘உங்கள் கவிதையை ரசித்தேன். சில ஒற்றுப் பிழைகளை சரி செய்தேன்‘. மன்னிக்கவும். இது என்னோட கவிதை இல்லை. அண்ணாமலை (1992) திரைப்படத்தில் கவிஞர் வைரமுத்து எழுதிய பாடல்

  ஒரு பெண் புறா கண்ணீரில் தள்ளாட
  என் உள்ளம் திண்டாட என்ன வாழ்கையோ?
  சுமை தாங்கியே சுமை ஆனதே
  எந்தன் நிம்மதி போனதே மனம் வாடுதே
  ஒரு பெண் புறா...

  கட்டன் தரையில் ஒரு துண்டை விரிதேன்
  கண்ணில் தூக்கம் சொக்குமே அது அந்த காலமே
  மெத்தை விரித்தும் சுத்த பன்னீர் தெளித்தும்
  கண்ணில் தூக்கம் இல்லயே அது இந்த காலமே....

  அனைவரும் அறிந்த மிகப் பிரபலமான பாடல்....
  அந்த வரிகளை அப்படியே எடுத்துத் தந்தேன்.
  பிழையைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி.


  ReplyDelete

 36. மறுமொழி > manavai james said... ( 2 )

  நான் உங்கள் பெயர் போட்டு எழுதுவதற்கு முன் நல்லவேளை சொன்னீர்கள். அன்புச் சகோதரர் ஆசிரியர் மணவை ஜேம்ஸ் அவர்களுக்கு நன்றி. பழைய பாடல்கள் வரிகள் என்றால் யார் என்று சட்டென்று நினைவுக்கு வந்து இருக்கும்.

  ReplyDelete
 37. ஐயா தங்களது அனுபவம் ஒரு நல்ல பாடம் பலருக்கும்! மிக நன்றாகவே விளக்கி உள்ளீர்கள். ஆனால் பெரும்பான்மையோர் மருத்துவரிடம் செல்வார்களே தவிர அவர் பரிந்துரைக்கும் வழி முறைகளை, சிகிச்சை முறைகளை மேற்கொள்ளாமல், மருத்துவரைக் குற்றம் சொல்லுவதுண்டு. தாங்கள் பின்பற்றியதால் நிவாரணம் கிடைத்துள்ளது. இதுவே எல்லோருக்கும் நல்லதொரு பாடம் ஐயா!

  பகிர்வுக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 38. தங்களின் அனுபவத்தை எங்களுக்குப் பாடமாகத் தந்து பகிர்ந்தமைக்கு நன்றி. இப்பதிவு பல வகைகளில் எங்களுக்கு உதவும்.

  ReplyDelete
  Replies
  1. முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. தாமதமான மறுமொழிக்கு மன்னிக்கவும்.

   Delete
 39. என்னுடைய கல்லூரி நண்பர் முதுகுவலிக்கு தெரிந்த டாக்டர் பார்க்க என்னிடம் அப்பாயிண்ட்மென்ட் வாங்கித் தரச் சொன்னார் ஏதேதோ காரணம் சொல்லி இதுவரை நான்கு டாக்டர் மாற்றி விட்டார் நீங்கள் சொல்வது போல் டாக்டர் சொல்லியதை ஒழுங்காக தொடர்ந்திருந்தால் இந்நேரம் குணமாகியிருக்கும்

  ReplyDelete
 40. என்னுடைய கல்லூரி நண்பர் முதுகுவலிக்கு தெரிந்த டாக்டர் பார்க்க என்னிடம் அப்பாயிண்ட்மென்ட் வாங்கித் தரச் சொன்னார் ஏதேதோ காரணம் சொல்லி இதுவரை நான்கு டாக்டர் மாற்றி விட்டார் நீங்கள் சொல்வது போல் டாக்டர் சொல்லியதை ஒழுங்காக தொடர்ந்திருந்தால் இந்நேரம் குணமாகியிருக்கும்

  ReplyDelete
  Replies
  1. மேடம் அவர்களுக்கு நன்றி. தாமதமான மறுமொழிக்கு உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

   Delete