Saturday, 7 March 2015

எது சுகம்?நான் முதன்முதல் வேலைக்கு சேர்ந்த புதிதில், அங்கே இருந்த சீனியர் ஒருவர் என்னைப் பார்த்து “தம்பி சொகம்னா என்னான்னு தெரியுமா? என்று கேட்டார். என்ன சொல்வது? நான் ஒன்றுமே சொல்லாமல் சிரித்தேன். அவரோ விடாமல் “வயிற்றை கலக்கும்போது, டாய்லெட்டுக்கு போய்விட்டு வந்த பிறகு, அப்பாடான்னு உட்காருகிறோம் பாரு, அதுதான் சொகம் “ என்று சொன்னார். அவர் வயிற்றுவலி அவருக்கு. விரக்தியிலும் ஒரு சிரிப்பு. அதிலும் ஒரு சுகம் காணுகிறார் அவர்.

ஒவ்வொரு உயிரும் பிறக்கிறது. இறுதியில் ஒருநாள் இறக்கிறது. இந்த பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்தான் எவ்வளவு விஷயங்கள். ஒவ்வொரு உயிரும் இன்பமாகவே வாழ ஆசைப்படுகிறது. ஒருவர் வாழ்வதை வசதி, வாய்ப்பு, சொத்து, சுகம் என்பார்கள். இதில் சுகம் என்ற சொல்லைக் குறிக்கும் மற்றொரு சொல்தான் இன்பம் என்பது. ஒருவருக்கு இன்பமாக இருப்பது மற்றொருவருக்கு துன்பமாக இருக்கிறது.

சுகம் என்பது:                                              
                                               
சிலருக்கு புத்தகம் வாசிப்பதில் இன்பம். சிலர் மது அருந்துவதில் இன்பம் காண்கிறார்கள். வலைப்பதிவு (BLOG) மற்றும் பேஸ்புக் (FACEBOOK) போன்றவற்றில் அவரவர் தன் விவரங்களை (PROFILE) பார்த்தால் ஒவ்வொருவரது வெளிப்படையான விருப்பங்களை (INTERESTS) மட்டும் தெரிந்து கொள்ளலாம்.
 

கவிஞர் தேசிகவிநாயகம் பிள்ளை அவர்கள், பாரசீகக் கவிஞர் உமர்க்கய்யாம் பாடல்களை (ஆங்கிலத்திலிருந்து) தமிழ் நடைக்கு ஏற்ப மொழி பெயர்த்து இருக்கிறார். அந்த பாடல் வரிகளில் சுகம் எங்கே இருக்கிறது என்பது பற்றிய வரிகள் இங்கே - 

வெய்யிற் கேற்ற நிழலுண்டு;
     
வீசும் தென்றல் காற்றுண்டு;
கையில் கம்பன் கவியுண்டு;
     
கலசம் நிறைய மதுவுண்டு;
தெய்வ கீதம் பலவுண்டு;
     
தெரிந்து பாட நீயுமுண்டு
வையந் தருமிவ் வனமன்றி
     
வாழும் சொர்க்கம் வேறுண்டோ?
-          (உமர்க்கய்யாம் பாடல் வரிகள்)

கவிஞர் கண்ணதாசனின் தாகம் எல்லோருக்கும் தெரியும். தனது பலவீனங்களை வெளிப்படையாக சொல்வார். அதுவே அவரது பலமும் எனலாம். இதோ அவருக்கு சுகமான வரிகள்.

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோலமயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு

பாக்கியம் ராமசாமி எழுதிய நாவல் ஒன்றில், அப்புசாமி தாத்தா தனது கால் வீக்கத்தை மெதுவாக அழுத்துவதில் சுகம் காண்பார். நல்ல மார்கழி குளிரில் இறுக்க போர்த்திக் கொண்டு படுப்பதில் சுகம் காண்பவர்களும் இருக்கிறார்கள். இதே குளிரில் சூடாக ஒரு கப் காபியையோ அல்லது டீயையோ அருந்துவதிலும் இன்பம் உண்டு என்று சொல்பவர்களும் உண்டு.

தானதர்மம் செய்வதிலும் ஒரு சுகம் உண்டு. அடுத்தவர்களுக்கு கொடுத்தலில் தர்மம் செய்வதில் சுகம் கண்டவன் கர்ணன். இதனை ஈத்துவத்தல் என்பார்கள். போர்க்களத்திலும் எதிரிகள், நண்பர்கள் என்ற பேதம் பாராது தானம் செய்தான் கர்ணன் என்கிறார் வில்லிபுத்தூரார்.

கோவல்சூழ் பெண்ணை நாடன் கொங்கர்கோன் பாகை வேந்தன்
பாவலர் மானங் காத்தான் பங்கயச் செங்கை யென்ன
மேவல ரெமரென் னாமல் வெங்களந் தன்னி னின்ற
காவலன் கன்னன் கையும் பொழிந்தது கனக மாரி.

               - வில்லி பாரதம் (கன்ன பருவம், பாடல் 33)

(இங்கு கன்னன் என்பது கர்ணனைக் குறிக்கும் பெயர்)

பிச்சைக்காரனும் கருமியும் காசு சேர்த்து வைப்பதில், அவற்றை அடிக்கடி எண்ணிப் பார்ப்பதில் சுகம் அடைகிறார்கள். சிலபேர் சும்மா இருப்பதே சுகம் என்கிறார்கள்.

அய்யா முனைவர் பழனி.கந்தசாமி அவர்கள் மன அலைகள்என்ற தனது வலைத்தளத்தில் “எது சுகம்?என்ற தலைப்பில் ஒரு பதிவினை எழுதினார். அதில் வெங்காய பஜ்ஜியை சாப்பிடுவதால் ஏற்படும் சுகத்தைப் பற்றி சொல்லி இருந்தார். அதற்கு நான், 
 
நானும் இதே தலைப்பினில் கட்டுரை எழுதுவதற்கு குறிப்புகள் எடுத்துக் கொண்டு இருக்கிறேன். சில சமயம் இதுபோல் ஒரே சிந்தனையாக ஒரேசமயம் இருவர் எண்ணும்படி தோன்றி விடுகிறது. நீங்கள் முந்தி விட்டீர்கள். பரவாயில்லை. என்ன இருந்தாலும் உங்களைப் போல சுவாரஸ்யமாக நகைச்சுவையாக என்னால் எழுத முடியாது.

என்று கருத்துரை எழுதினேன். அவரும் உடனே,

அடடா, நீங்களும் உங்கள் பாணியில் எழுதுங்கள். வெங்காய பஜ்ஜியை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். அது என்ன, எங்கள் பாட்டன் வீட்டுச் சொத்தா? இல்லையே.

என்று மறுமொழி தந்தார். இந்த நகைச்சுவையை ரசிப்பதிலும் ஒரு சுகம் ஆனந்தம் இருக்கத்தான் செய்கிறது.  

எனவே சுகம் என்பது அந்தந்த நேரத்திற்கு ஏற்ப அவரவர் நிலைக்கு ஏற்ப சிறிதுநேரம் லயிக்கும் பரவசம்தான். எது எப்படி இருந்தபோதும் அந்த இன்பம் சில மணித் துளிகள்தாம்.

                                                               
இன்பம் எங்கே இன்பம் எங்கே

அறத்தான் வருவதே இன்பம்என்ற திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர்

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.  (குறள் 65)

என்ற குறட்பாவில் தமது குழந்தைகளைத் தழுவி மகிழ்வது உடலுக்கு இன்பம்;  அந்தக் குழந்தைகளின் மழலைமொழி கேட்பது செவிக்கு இன்பம்என்று சொல்லுகிறார்.

கவிஞர் மருதகாசி சிறந்த திரைப்படக் கவிஞர். அவர் மனமுள்ள மறுதாரம் என்ற படத்திற்கு எழுதிய ஒரு பாடல் இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடுஎன்பதாகும். இதோ அந்த பாடல் ...


தூங்கையிலே வாங்குகிற மூச்சு
இது சுழிமாறி போனாலும் போச்சு

இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு - அது
எங்கிருந்த போதுமதை நாடி ஓடு
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு - அது
எங்கிருந்த போதுமதை நாடி ஓடு
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு

இன்றிருப்போர் நாளை இங்கே
இருப்பதென்ன உண்மை - இதை
எண்ணிடாமல் சேர்த்து வைத்து
காத்து என்ன நன்மை
இன்றிருப்போர் நாளை இங்கே
இருப்பதென்ன உண்மை - இதை
எண்ணிடாமல் சேர்த்து வைத்து
காத்து என்ன நன்மை

இருக்கும் வரை இன்பங்களை
அனுபவிக்கும் தன்மை
இல்லையென்றால் வாழ்வினிலே
உனக்கு ஏது இனிமை
இன்பம் எங்கே
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு

கனிரசமாம் மதுவருந்திக் களிப்பதல்ல இன்பம்
கணிகையரின் துணையினிலே கிடைப்பதல்ல இன்பம்
கனிரசமாம் மதுவருந்திக் களிப்பதல்ல இன்பம்
கணிகையரின் துணையினிலே கிடைப்பதல்ல இன்பம்

இணையில்லா மனையாளின் வாய்மொழியே இன்பம் - அவள்
இதழ் சிந்தும் புன்னகையே அளவில்லாத இன்பம்
இன்பம் எங்கே
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு அது
எங்கிருந்த போதுமதை நாடி ஓடு
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு

மாடி மனை கோடி பணம் வாகனம் வீண் ஜம்பம்
வாழ்வினிலே ஒருவனுக்குத் தருவதல்ல இன்பம்
மாடி மனை கோடி பணம் வாகனம் வீண் ஜம்பம்
வாழ்வினிலே ஒருவனுக்குத் தருவதல்ல இன்பம்
மழலை மொழி வாயமுதம் வழங்கும் பிள்ளைச் செல்வம் - உன்
மார் மீது உதைப்பதிலே கிடைப்பது தான் இன்பம்

இன்பம் எங்கே
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு அது
எங்கிருந்த போதுமதை நாடி ஓடு
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு

        - பாடல்: மருதகாசி (படம்: மனமுள்ள மறுதாரம்)

மறக்கமுடியாத இலங்கை வானொலியில் இந்த பாடலை அந்தநாள் அடிக்கடி ஒலி பரப்புவார்கள். திரைப் படத்தில், இந்த பாடலுக்கு நடிகர் பாலாஜி தனது இளமையான துள்ளலுடன் ஆடிப் பாடி, நடித்து இருப்பார். பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன். இந்த பாடல் வரிகளை கண்டு கேட்டு களித்திட கீழே உள்ள யூடியூப் இணைய முகவரியை சொடுக்கவும் (CLICK )                   (ALL PICTURES - COURTESY: “ GOOGLE IMAGES ”)37 comments:

 1. இன்பம் பலவகை என்று சொல்லலாம் . இன்பம் பற்றிய அலசலைப் படிப்பதும் இன்பமே

  ReplyDelete
 2. எல்லாமே இன்ப மயமாக உள்ளது. ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்றில் நாட்டம் + இன்பம். என்ன இருந்தாலும் சூடான சுவையான வெங்காய பஜ்ஜி சாப்பிடுவதுபோல எதுவுமே வராது என்பதே என் வாதமும். :)

  ReplyDelete
 3. தமிழ் இளங்கோ அவர்களுக்கும் வைகோ அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். வெங்காய பஜ்ஜி யார் யாரை, எப்படியெல்லாம் இணைக்கிறது பாருங்கள்? இதுதான் சுகம்.

  ReplyDelete
 4. மிகவும் பிடித்த அருமையான பாடல்...

  இல்லாமல் இருப்பதிலிருந்து இருப்பதை கொண்டு வருவதே சுகம்...

  ReplyDelete
 5. அருமையான மேற்கோள்களோடு சிறப்பான பகிர்வு.

  கடைசியில் குறிப்பிட்டிருக்கும் பாடலைக் கேட்டபடியே பின்னூட்டமிடுகிறேன். அருமையான பாடல்.....

  ReplyDelete
 6. எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
  எங்கள் இறைவா!..

  - மகாகவி பாரதியார் பாட்டு சரிதானே!..

  இனிய பதிவு.. வாழ்க நலம்!..

  ReplyDelete
 7. நீங்கள் பகிர்ந்திருக்கும் பாடலைக் கேட்டுக் கொண்டே உங்கள் பதிவை வாசிப்பதில்தான் என்ன ஒரு சுகம்!
  அருமையான பதிவு! எத்தனை எத்தனை உதாரணங்கள்! மிகவும் ரசித்தோம்!

  ReplyDelete
 8. சுகம் என்பது ஆளுக்கு ஆள் நேரத்துக் ஏற்ப மாறுபடும் !எனவே இதுதான் சுகம் சொல்ல இயலாது!

  ReplyDelete
 9. நீங்கள் பகிர்ந்திருக்கும் பாடலைக் கேட்பதில் கிடைக்கும் சுகமே தனிதான்
  அருமையான பதிவு ஐயா
  இதுபோன்ற பதிவுகளை ரசித்து ரசித்து எழுதுவதும் ஒரு சுகம்தானே
  நன்றி ஐயா
  தம +1

  ReplyDelete
 10. மறுமொழி > டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

  சகோதரர் மூங்கில் காற்று டி.என்.முரளிதரன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 11. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...

  // எல்லாமே இன்ப மயமாக உள்ளது. ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்றில் நாட்டம் + இன்பம். என்ன இருந்தாலும் சூடான சுவையான வெங்காய பஜ்ஜி சாப்பிடுவதுபோல எதுவுமே வராது என்பதே என் வாதமும். :) //

  அன்புள்ள V.G.K அவர்களின் கருத்துரைக்கு நன்றி. எனக்கும் அந்த வெங்காய பஜ்ஜி + தேங்காய் சட்னி சுவை பிடிக்கும். முன்பு திருச்சி ஆண்டார்தெரு ராமா கபேயில் அடிக்கடி ஆசையாய் சாப்பிடுவேன். இப்போதும் அந்த ஹோட்டலில் உண்டா என்று தெரியவில்லை.

  ReplyDelete
 12. மறுமொழி > பழனி. கந்தசாமி said...

  // தமிழ் இளங்கோ அவர்களுக்கும் வைகோ அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். வெங்காய பஜ்ஜி யார் யாரை, எப்படியெல்லாம் இணைக்கிறது பாருங்கள்? இதுதான் சுகம். //

  ஆமாம் அய்யா! வெங்காய பஜ்ஜி + கொஞ்சம் உறைப்பான தேங்காய் சட்னி சுவையோ சுவை! கொள்ளைச் சுவை! தனி சுகம்தான்.

  ReplyDelete
 13. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...

  // மிகவும் பிடித்த அருமையான பாடல்... இல்லாமல் இருப்பதிலிருந்து இருப்பதை கொண்டு வருவதே சுகம்... //

  என்ன இருந்தாலும் உங்களைப் போல் பாட்டுக்கு பாட்டு எடுத்து எழுதுவதில் எனக்கு சட்டென்று வராது.

  ReplyDelete
 14. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...

  // அருமையான மேற்கோள்களோடு சிறப்பான பகிர்வு.
  கடைசியில் குறிப்பிட்டிருக்கும் பாடலைக் கேட்டபடியே பின்னூட்டமிடுகிறேன். அருமையான பாடல்..... //

  சகோதரர் அவர்களுக்கு நன்றி. உண்மையிலேயே இந்த பாடல் கண்டு, கேட்டு ரசிக்க சிந்திக்க அருமையான பாடல்தான்.

  ReplyDelete
 15. இவ்வுலகில் துன்பம் பலவகைப்படும் பிறருக்கு துன்பத்தை கொடுத்துப் பார்ப்பதில்கூட சிலருக்கு இன்பம் என்ன செய்வது அவரவர் மனம் சார்ந்ததே இன்பம்
  நல்லதொரு கருத்தை ஆராய்ந்தமைக்கு நன்றி நண்பரே...
  தமிழ் மணம் 8

  ReplyDelete
 16. ‘’ ஒருவருக்கு இன்பமாக இருப்பது மற்றொருவருக்கு துன்பமாக இருக்கிறது.’’

  உண்மைதான். இதுபோல் ‘One man’s food is other man’s poison’ என்ற சொற்றொடரும் உண்டு. சுகம் பற்றி உமர் கயாம் பாடல் முதல் கவிஞர் மருதகாசி அவர்களின் அருமையான பாடல் வரை பல எடுத்துக்காட்டுகளை சொல்லி அழகாக விளக்கியிருக்கிறீர்கள். திரு துளசிதரன் அவர்கள் சொன்னது போல் தங்களது பதிவுகளை வாசிப்பதும் ஒரு சுகம் தான். வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 17. எல்லாமே இன்பமயம்தான் அதைத் தேடுபவரைப் பொறுத்து மாறுபடும்

  ReplyDelete
 18. அருமையான பதிவு! சுகம் பற்றிய ஆராய்ச்சியும் அருமை! படித்துக்கொன்டிருக்கும்போதே ' சுகம், சுகம் அது துன்பமான இன்பமானது' என்ற பாடல் நினைவுக்கு வந்தது!

  ReplyDelete
 19. மறுமொழி > துரை செல்வராஜூ said...

  சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களுக்கு நன்றி.

  ReplyDelete
 20. மறுமொழி > Thulasidharan V Thillaiakathu said...

  பாராட்டி கருத்துரை தந்த சகோதரர் தில்லைக்கது V துளசிதரன் அவர்களுக்கும் மற்றும் சகோதரி அவர்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 21. மறுமொழி > புலவர் இராமாநுசம் said...

  புலவர் அய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி

  // சுகம் என்பது ஆளுக்கு ஆள் நேரத்துக் ஏற்ப மாறுபடும் !எனவே இதுதான் சுகம் சொல்ல இயலாது! //

  ஆமாம் அய்யா சுகத்தை ஒரு அளவீட்டால் அடக்க இயலாது. உணர்ந்தவருக்கே அது புரியும்.

  ReplyDelete
 22. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...

  சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி.

  ReplyDelete
 23. மறுமொழி > KILLERGEE Devakottai said...

  நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் ஆழ்ந்த கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete

 24. மறுமொழி > வே.நடனசபாபதி said...

  // ‘’ ஒருவருக்கு இன்பமாக இருப்பது மற்றொருவருக்கு துன்பமாக இருக்கிறது.’’உண்மைதான். இதுபோல் ‘One man’s food is other man’s poison’ என்ற சொற்றொடரும் உண்டு.//

  ஒரு ஆங்கில சொற்றொடருடன் அழகான கருத்துரை தந்த, அய்யா V.N.S அவர்களுக்கு நன்றி.

  ReplyDelete
 25. மறுமொழி > மறுமொழி > G.M Balasubramaniam said...

  அய்யா G.M.B அவர்களுக்கு நன்றி.

  ReplyDelete
 26. மறுமொழி > மனோ சாமிநாதன் said...

  ஒரு அருமையான திரைப்படப் பாடல் வரியோடு கருத்துரை தந்த சகோதரிக்கு நன்றி.

  ReplyDelete
 27. சுகம் பற்றிய அலசல், திரைப்பாடலிலும் தேடியதால், இதோ கண்ணதாசனின் சுகம்-
  “தொழுவது சுகமா? வண்ணத் தோகையின் கனிந்த மார்பில்
  விழுவது சுகமா? உண்ணும் விருந்துதான் சுகமா? இல்லை,
  பழகிய காதல் எண்ணிப் பள்ளியில் விழுந்து நித்தம்
  அழுவதே சுகம் என்பேன்யான், அறிந்தவர் அறிவா ராக!”
  அந்தக் கடைசி வரியில்தான் கண்ணதாசன் நிற்கிறார் இல்ல?

  ReplyDelete
 28. சுகம் பற்றிய நல்லதொரு அலசல். அவரவர் பார்வையில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது. அதிலும் பாடல்களில் மூலம் தந்தது வெகுசிறப்பு.

  ReplyDelete
 29. உங்கள் நண்பர் சொன்னது முற்றிலும் உண்மை. உடம்பில் இருந்து கழிவு வெளியேறும் போது உள்ளமும் உடமும் அடையும் ஆனந்தத்திற்கு எதுவுமே இணையில்லை.

  ReplyDelete
 30. வணக்கம்
  ஐயா
  சுகம் என்ற தலைப்பில் சொல்லிய விதம் வெகு சிறப்பு ஐயா அதிலும் பாடல்கள் மூலம் விளக்கம் கொடுத்துள்ளீர்கள் பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா த.ம 10
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 31. மறுமொழி > Muthu Nilavan said...

  கவிஞர், ஆசிரியர் முத்து நிலவன் அய்யா அவர்களுக்கு நன்றி.

  ReplyDelete
 32. மறுமொழி > சசி கலா said...

  சகோதரி கவிஞர் தென்றல் – சசிகலா அவர்களுக்கு நன்றி.

  ReplyDelete
 33. மறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said...

  சகோதரர் ஜோதிஜி திருப்பூர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நீங்கள் வலையில் வேறு ஒரு திரட்டிக்கு போனதிலிருந்து, உங்கள் பக்கம் என்னால் தொடர்ந்து வர இயலாமல் போயிற்று. மன்னிக்கவும்.

  // உங்கள் நண்பர் சொன்னது முற்றிலும் உண்மை. உடம்பில் இருந்து கழிவு வெளியேறும் போது உள்ளமும் உடமும் அடையும் ஆனந்தத்திற்கு எதுவுமே இணையில்லை. //

  நீங்கள் சொல்வது சரிதான். எனக்கும் அந்த சுகமான அனுபவம் நேர்ந்ததுண்டு. அந்த சீனியரை நான் எப்போது எங்கு பார்த்தாலும் அவர் சொன்ன டாய்லெட் சமாச்சாரம்தான் எனக்கு நினைவுக்கு வரும்.

  ReplyDelete
 34. மறுமொழி > ரூபன் said...

  கவிஞர் ரூபன் அவர்களுக்கு வணக்கம். தங்கள் அன்பான கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 35. சுகம் என்பதற்குத் தாங்கள் சொன்ன விளக்கம் தெனாலிராமன் கதையின் படித்த நினைவு உள்ளது. இதுபோன்ற சுகமான பதிவுகளைப் படிப்பதும் சுகம்தானே?

  ReplyDelete
 36. மறுமொழி > Dr B Jambulingam said...

  முனைவர் அய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 37. இன்ப மனதிற்கு அத்தனையும் இன்பமாயும்
  துன்ப மனதிற்கு அத்தனையும் துன்பமாயும் தெரியும் மனிதமனம்.
  அருமையான அலசல்.
  தமிழுள் புகுந்து அலசலே பெரும் இன்பம்
  வாழ்க!

  ReplyDelete