Sunday 25 January 2015

மாதொரு பாகனும் பெருமாள் முருகனும்



                  
                                                ( PICTURE - COURTESY: “GOOGLE”)

நாட்டில் அவரவருக்கு ஆயிரத்தெட்டு பிரச்சினைகள். வாய்க்கு இல்லை, வயிற்றுக்கு இல்லை என்று கால் வயிற்று கஞ்சிக்கு மக்களில் பலர், ஒருபக்கம் அல்லாடிக் கொண்டு இருந்தாலும், “ யார் சிறந்தவர் அல்லது விஞ்சியவர் என்று இன்னொரு பக்கம் பட்டிமன்றம் நடத்திக் கொண்டு இருக்கும் தேசம் இது. எனக்கு பெருமாள் முருகன் யாரென்று தெரியாது. அவர் நூல்களைப் படித்ததும் கிடையாது. அண்மையில் அவர் எழுதிய “மாதொரு பாகன் சர்ச்சை , மற்றும் அவரது உருக்கமான அறிக்கை என்று பரபரப்பான செய்திகளைப் படித்தவுடன் எனக்கும் என்ன ஏதென்று அறியும் ஆர்வக் கோளாறு வந்துவிட்டது.

என்ன பிரச்சினை?

மாலைமலரில் வந்த செய்தி இது:

திருச்செங்கோடு, டிச. 26– திருச்செங்கோட்டில் இன்று காலை பாரதீய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் , மோரூர் கண்டங்குல கொங்கு நாட்டு வேளாளர் அறக்கட்டளை அமைப்பினர் ஆகியோர் கைலாசநாதர் கோவில் வாசலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு திருச்செங்கோடு நகர காவல் நிலையத்துக்கு வந்தனர். இந்த ஊர்வலத்துக்கு ஏற்கனவே போலீசார் அனுமதி மறுத்த போதிலும் அவர்கள் தடையை மீறி ஊர்வலமாக வந்து போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர்.

திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோவிலைப் பற்றியும். பெண்களை பற்றியும் மிக இழிவாக சித்தரித்து மாதொரு பாகன் என்ற புத்தகம் எழுதிய எழுத்தாளர் நாமக்கல் பெருமாள் முருகன் மற்றும் அந்த புத்தகத்தை வெளியிட்ட பதிப்பகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அந்த அமைப்பினர் கோஷம் எழுப்பினார்கள்.

பின்னர் அந்த புத்தகத்தின் நகலை தீவைத்து எரித்தனர். அதன் பிறகு எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தனர்.
                                      -  (நன்றி : மாலைமலர் )
                                                                                      
வழக்கம் போல கூகிளில் (GOOGLE) தேடிய போது பிரச்சினையின் சாராம்சத்தை உணர முடிந்தது. மேலும் 2010 - இல் வெளிவந்த நூலுக்கு இப்போது எதிர்ப்பு. கடந்த நாலு வருடங்களாக அந்த ஊரைச் சேர்ந்தவர்களில் ஒருவர் கூடவா இந்த நூலை படிக்காமல் இருந்திருப்பார்கள் எனும்போது ஆச்சரியமாக இருக்கிறது. மேற்கொண்டு விவரம் தெரிந்து கொள்ளலாம் என்று பெருமாள் முருகனின் வலைத்தளம் www.perumalmurugan.com சென்றால்   404. That’s an error. ஒரு அறிவிப்பு வருகிறது. ஒருவேளை புத்தகம் கடையில் கிடைக்கிறதோ என்னவோ என்று, எதற்கும் உதவும் என்று சகோதரர் S.மது அவர்களது வலைத்தளத்திலிருந்து http://www.malartharu.org/2015/01/mothoru-paakan.html இந்த நூலை டவுன்லோட் (Download) செய்து கொண்டேன். அவருக்கு நன்றி.ஒரு புத்தகத்தை வாசிப்பது போல், மின்நூலை தொடர்ந்து வாசிக்க முடியாது என்பதால் புத்தகக் கடைகளில் சென்று கேட்டேன். எங்கும் இல்லை. ஆன் லைனில் வாங்கலாம் என்று நுழைந்தால் OUT OF STOCK என்ற பதில். வேறு வழியின்றி மேலே சொன்ன அடோப் ரீடர்(Adobe Reader) டவுன்லோட் வழியே நாவலை படித்தேன்.

கதைச் சுருக்கம்:

சுமார் நூறு ஆண்டுகளுக்கு முந்திய கதை என்பதனை, நாவலைப் படித்து முடித்த பின்னர்தான் தெரிந்து கொள்ள முடிகிறது.

அந்த கிராமத்துக்கு அருகில் இருக்கும் ஒரு பெரிய ஊரின் தேர்த் திருவிழாவின் போது, குழந்தை இல்லாதவர்கள், சாமிக் குழந்தை வரம்வாங்குவது வழக்கம் (கடவுளின் பெயரால், இருளில், காட்டில், கூட்டத்தோடு கூட்டமாய்  முகம் தெரியாத ஆணிடம் (சாமி) உறவு கொண்டு பெண் கர்ப்பம் தரிப்பது) காளி பொன்னா தம்பதியினருக்கு குழந்தை இல்லை. பொன்னாவின் அம்மாவும் மாமியாரும் அண்ணனும் , ஊர் வழக்கப்படி வரம் வாங்க தேர்த் திருவிழாவுக்கு பொன்னாவை போகச் சொல்ல, கணவன் காளிக்கு இதில் உடன்பாடு இல்லை. பொன்னா சாமி வரம் வாங்க, தேர்த் திருவிழா செல்கிறாள். கதை முடிவில் காளியின் வாழ்வு முடிகிறது. அவலச் சுவையில் முடியும் நாவல் இது.

நாவலில் வரும் கதை மாந்தர்கள் மற்றும் நிகழ்ச்சிகளை அந்தக் கால கிராமிய நடையிலேயே கொண்டு செல்லுகிறார் ஆசிரியர். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர் அடையும் ஏக்கத்தினையும், மற்றவர்கள் வறடன், வறடி என்று செய்யும் ஏளனத்தையும்  அவர்கள் அடையும் மனக்குமுறலையும் காளி பொன்னா (பொன்னாயீ) என்ற பாத்திரப் படைப்புகள் வழியே நூல் முழுக்க காணலாம். பழமையை எதிர்த்து அந்த காலத்தில் கிராப் வைத்துக் கொண்ட மைனர் வாழ்க்கை நடத்திய சித்தப்பா நல்லுப் பையன். அவருக்கு ஆக்கிப் போடும் அருந்ததியர் பையன்,  காளியை இரண்டாம் திருமணம் செய்யச் சொல்லும் மாட்டுத் தரகர் செல்லப்பா கவுண்டர், சேக்காளியாகவும் மச்சானாகவும் வரும் முத்து. இப்படி சிலர்.

இன்னும் பூவரசு மரம், நாடார் குறி சொல்லுதல், குழந்தை இல்லாததற்கு சாபம்தான் காரணம் என்று சொல்லப்படும் சாபக் கதைகள், பட்டியில் ஆடு வளர்த்தல், பிள்ளை இல்லாதவர்கள் கோயில் கோயிலாக போதல்,கடலைக்காய் பயிரிடும் முறை, தீண்டத் தகாதவர்கள் சூழல், தெய்வக் குழந்தை வாங்குதல் என்று கதை நீண்டு கொண்டே செல்கிறது.

இடையிடையே,

“முண்டை வளர்த்த பிள்ளை தண்டமாகத்தான் போகும்
நல்லாயி பொல்லாதவ நாளும் கெழமயும் இல்லாதவ
நாம என்ன கோட்ட கட்டி ஆள்ற வம்சமா
இன்னிக்கு நம்மள எவன் பாக்கறான். எல்லாப் பொம்பளைங்களும் இன்னக்கித் தேவடியாதான்

போன்ற வாசகங்களையும் காணலாம்
                                                                     
எழுத்தாளரின் ஆர்வக் கோளாறு:

இந்த நூலின் நடையைப் பார்க்கும் போது, ஒரு பேராசிரியர் ஒருவர்தான் இப்படி எழுதினாரா என்று யோசிக்க வைத்தது. காரணம் பச்சையாக, கிராமங்களில் பேசும் பல சொற்களை, குஜிலி அச்சக புத்தகங்கள் போல, நாவலின் பல இடங்களில் பேராசிரியர் பெருமாள் முருகன் சர்வ சாதாரணமாக கதா பாத்திரங்கள் வழியே பேசுகிறார். இவற்றை “இடக்கரடக்கல் என்ற முறையில் தவிர்த்து இருக்கலாம்.

இது ஒரு நாவல் என்ற படியினால், கதையினில் வரும் ஒரு பெரிய ஊரின் பெயரை கற்பனைப் பெயராக வைத்து புனைந்து இருந்தால் இவ்வளவு தூரம் பிரச்சினை வந்து இருக்காது என்று எண்ணத் தோன்றுகிறது. முன்பெல்லாம் ஒரு கதையை நூலாக வெளியிடும் போது சட்ட பாதுகாப்பிற்காக, “இந்த கதையில் வரும் பெயர்கள், சம்பவங்கள் யாவும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்லஎன்று ஒரு அறிவிப்பை செய்து இருப்பார்கள். இப்போது நிறையபேர் அப்படி செய்வது இல்லை. ஆனால் நூலாசிரியர் பெருமாள் முருகன் அவர்கள், தனது முன்னுரையில் ரகசிய ஊற்றுக்களில் ஒன்று“ என்று தனது கருத்துக்களை  நியாயப்படுத்தி இருப்பது, நூலை எதிர்ப்பவர்களுக்கு வசதியாகப் போய் விட்டது. பெருமாள் முருகனே இவ்வளவு தூரத்திற்கு இது போகுமென்று எதிர்பார்த்து இருக்க மாட்டார். தன்னுடைய சொந்த ஜாதிதானே ஒன்றும் ஆகாது என்று அசட்டையாக நினைத்து , ஆர்வக் கோளாறு காரணமாக எழுதியதாகவே தெரிகிறது.

நூலைப் பற்றி பொதுவாகச் சொல்வதானால் கொங்கு வட்டார வழக்கு மொழி நிரம்பிய ஒரு நாவல், எதிர்ப்பாளர்களால் இலக்கிய உலகில், அனைவரது பார்வையையும் தன் பக்கம் இழுத்து விட்டது.

சாதாரண குடிமகன் தனக்குத் தெரிந்ததை சொல்லிவிட்டு போய்விடுவான். அவன் சொன்னது அன்றே அப்போதே காற்றோடு காற்றாய் மறைந்து விடும். ஆனால் அதனையே எழுத்தாக்கி அச்சில் ஏற்றினால் ஆவணமாக மாறிவிட வாய்ப்பு அதிகம். உலகம் இதிலே அடங்குதுஎன்று தொடங்கும் பாடலில் வரும்

பொய் சொன்னாலும்
மெய் சொன்னாலும்
வாயால் சொல்லிப்
பலனில்லே - அதை
மையில நனச்சுப்
பேப்பரில் அடிச்சா
மறுத்துப் பேச ஆளில்லே

                - பாடல் கண்ணதாசன் (படம்: குலமகள் ராதை)

என்ற வரிகள் இதைத்தான் சொல்லுகின்றன..
  
மிரட்டல் தவறு

எது எப்படி இருந்த போதிலும், சட்டப்படி வழக்கு தொடருவதை விடுத்து, எல்லோருமாகச் சேர்ந்து, ஒரு எழுத்தாளரையும் அவரது குடும்பத்தாரையும்  மிரட்டியது தவறாகவே தோன்றுகிறது. இதே அவர் வெளிநாட்டில் வசிப்பவராக இருந்திருந்தால் நடவடிக்கை எப்படி இருந்திருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. பெருமாள் முருகன் மீதுள்ள பொறாமை அல்லது தனிப்பட்ட விரோதம் காரணமாகவே யாரோ சிலர் இந்த நூலைப் பற்றி பெரிதாக்கி இருக்கிறார்கள் என்பது வெளிப்படை. ஏனெனில் 2010 - இல் வெளியான இந்த நூலுக்கு இப்போதுதான் (2014 2015 இல்) எதிர்ப்பு காட்டப்பட்டுள்ளது.  

எழுத்தாளன் பெருமாள் முருகன் செத்துவிட்டான். அவன் கடவுள் அல்ல, ஆகவே உயிர்த்தெழப் போவதில்லை. மறுபிறவியில் அவனுக்கு நம்பிக்கையும் இல்லை. இனி அற்ப ஆசிரியனாகிய பெ.முருகன் என்பவன் மட்டுமே உயிர் வாழ்வான்

என்று எழுத்தாளர் எழுதிக் கொடுக்கும் அளவிற்கு நிலைமை போய் விட்டது வருத்தமான விஷயம்தான். ஒருவேளை அவர் மீண்டும் எழுதத் தொடங்கினாலும், அவருடைய எழுத்துக்களில் பழைய யதார்த்தத்தை எதிர் பார்க்க இயலாது என்பது உண்மை. அவரும் அவர் குடும்பத்தினரும் இப்போது எப்படி இருக்கின்றனர்? பாதுகாப்பாக இருக்கின்றார்களா என்பது பற்றிய செய்திகள் ஏதும் இல்லை.



51 comments:

  1. நான் இரண்டு நாட்கள் வெளியூர் பயணமாக செல்வதால், இந்த பதிவிற்கான மறுமொழிகளை வந்துதான் தர இயலும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  2. மேலும் தொடர்ந்து அவர் எழுத வேண்டும்... அப்போது தான் விளக்கமும் அளிக்க முடியும்...

    ReplyDelete
  3. இன்னார் என்பது கண்டுபிடிக்க முடியாத மாதிரி கதாபாத்திரங்களை வடித்து இருக்கலாம் !
    த ம +1

    ReplyDelete
  4. அவர் எழுதியது போல கிராங்களில் பலவற்றை நானும் பார்த்துள்ளேன். அப்பட்டமாக அதை எழுத்து வடிவமாக கொடுக்கும் போது பலரால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

    ReplyDelete
  5. . முன்பெல்லாம் ஒரு கதையை நூலாக வெளியிடும் போது சட்ட பாதுகாப்பிற்காக, “இந்த கதையில் வரும் பெயர்கள், சம்பவங்கள் யாவும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல” என்று ஒரு அறிவிப்பை செய்து இருப்பார்கள். இப்போது நிறையபேர் அப்படி செய்வது இல்லை. ஆனால் நூலாசிரியர் பெருமாள் முருகன் அவர்கள், தனது முன்னுரையில் ” ரகசிய ஊற்றுக்களில் ஒன்று“ என்று தனது கருத்துக்களை நியாயப்படுத்தி இருப்பது, நூலை எதிர்ப்பவர்களுக்கு வசதியாகப் போய் விட்டது. பெருமாள் முருகனே இவ்வளவு தூரத்திற்கு இது போகுமென்று எதிர்பார்த்து இருக்க மாட்டார். தன்னுடைய சொந்த ஜாதிதானே ஒன்றும் ஆகாது என்று அசட்டையாக நினைத்து , ஆர்வக் கோளாறு காரணமாக எழுதியதாகவே தெரிகிறது.//

    மிகவும் சரியே ஐயா! அவரது கொங்கு தமிழ் கிராமத்து வட்டார வழக்கு வசனங்களை அவர் அப்படியே கொடுத்திருக்கின்றார்தான். இது பல கிராமங்களிலிலும் வழக்கில் இருந்து வரத்தான் செய்கின்றது. அதை அவர் அந்த கிராமிய வாழ்வியல் அதுவும் 1930-40 களில் நடப்பதாக விவரித்து உள்ளதால் அப்படியே கொடுத்திருக்கின்றார். பலரால் அதை ஜீரணிப்பது கொஞ்சம் கஷ்டம்தான்.....

    நல்ல பதிவு ஐயா தங்களது பார்வையில்.

    ReplyDelete
  6. நீங்கள் சொல்வதுபோல் எல்லாவற்றையும் அப்படியே சொல்லக்கூடாது. ஒளிவு மறைவாகத்தான் சொல்லவேண்டும். அதுவும் தான் சொல்லும் கருத்து பெரும்பாலான மக்களால் விரும்பப்படாது எனத் தெரிந்தால் இன்றைய கால கட்டத்தில் அதை தவிர்ப்பது நல்லது. ஆனாலும் அவர் செய்தது தவறு என யாரேனும் நினைத்தால் சட்டப்படி அவரது எழுத்தை தடை செய்ய முயற்சித்திருக்கலாம். தற்சமயம் இந்த விஷயம் நீதிமன்றத்தில் இருப்பதால் மேற்கொண்டு நாம் இதுபற்றி பேசாமல் இருப்பது நல்லது.

    ReplyDelete
  7. அவர் மீண்டும் எழுத வரவேண்டும் என்பதே எமது அவா...
    தமிழ் மணம் 6

    ReplyDelete
  8. படித்தேன். சிக்கலான விவகாரம். ஏதாவது உள்நோக்கம் இருக்கலாம்.

    ReplyDelete
  9. ஒரு பேராசிரியர் இப்படி எழுதியிருக்கிறார் அதாவது கெட்ட வார்த்தைகளை என்று சொல்வதற்குப் பதிலாக, இப்படி எழுதியிருக்கும் நாவலாசிரியர் ஒரு பேராசிரியராக தொழில் செய்கிறார் என்பதுவே சரி. பி இ படித்தவன் சைக்கிள் ரிப்பேரல்லவா பார்க்கிறான் என்பதை சைக்கிள் ரிப்பேர்க்காரன் பி இ படித்தவன் என்பதைப்போல.

    இலக்கியம் இன்னார்தான் எழுத வேண்டும்; இன்ன படித்திருக்க வேண்டுமென்பது என்று எவருமே விதிகள் போடவில்லை. அப்படி விதி போடுவது அதிகப்பிரசிங்கித்தனம்.

    திண்ணைப்பள்ளிக்கூடமே சென்று நின்ற சேக்ஸ்பியர் பலகலைக்கழகங்களில் ரொம்ப படித்த நாடகாசிரியர்களைவிட பெரிதாக இன்று வைக்கப்படுகிறார். அதைப்போல தமிழ் இலக்கிய உலகில் நாவலாசிரியர்களும் கவிஞர்களும் எல்லாரும் மெத்தப்படித்தவர்களல்ல, பெரிய பதவி வகித்தவர்களுமல்ல. பாரதிதாசன், ஐந்தாம் வகுப்பாசிரியர் மட்டுமே. எனக்குத் தெரிந்த தமிழக அரசின் பரிசு பெற்ற, பலகலைக்கழகங்களில் - தில்லிப்பலகலைகழகத்தில்கூட - வைக்கப்பட்ட தமிழ்நாவலை எழுதிய படைப்பாளிக்குத் தமிழ் ஒழுங்காக எழுதத்தெரியாது. அவரின் பதிப்பாளர்களே அவர் தமிழைப் பிழைதிருத்தம் செய்வார்கள். எப்படி?

    மேலும், நாவல் எழுதும்போது இப்படித்தான் எழுத வேண்டும் என்று எவருக்கும் விதிகள் போடப்படவில்லை. நாவலின் பிற்புலத்துக்கேற்பவே சம்பாஷனைகள் வரும். அதுவே எதார்த்தம். நாவலில் சம்பாஷனைகளில் நீங்கள் காணும் அசிங்கமான சொற்கள் அன்றாடம் உலவும் சொற்களே. அவற்றைத் தள்ளிவிட்டு டீசன்டான சொற்களைப்போட்டு அவர்கள் பேசினார்கள் என்றெழுதினால் நாவல் செத்துப்போச்சு.

    ReplyDelete
  10. சிக்கல்கள் ஏற்பட்டுள்ள ஓர் பிரச்சனையான விஷயத்தை, பொறுமையாகப் பலவழிகளில் அலசி ஆராய்ந்து, தங்கள் பாணியில் அனைவருக்கும் ஓரளவு புரிவதுபோல, இந்தப்பதிவினில் எடுத்து எழுதியிருப்பது தங்களின் தனிச்சிறப்பு.

    ReplyDelete
  11. [[[இந்த நூலின் நடையைப் பார்க்கும் போது, ஒரு பேராசிரியர் ஒருவர்தான் இப்படி எழுதினாரா என்று யோசிக்க வைத்தது. காரணம் பச்சையாக, கிராமங்களில் பேசும் பல சொற்களை, குஜிலி அச்சக புத்தகங்கள் போல, நாவலின் பல இடங்களில் பேராசிரியர் பெருமாள் முருகன் சர்வ சாதாரணமாக கதா பாத்திரங்கள் வழியே பேசுகிறார்.]]]

    "எழுதுவது யார்" என்று பார்க்கக்கூடாது! "எழுதுவது யாரைப் பற்றி" என்று தான் பார்க்கவேண்டும்; இல்லை என்றால் அந்த கதையில் "மண் வாசனை" இருக்காது. எழுத்தாளரின் வாசனை தான் இருக்கும்;

    எனக்கு எல்லா மட்டங்களிலும் நண்பர்கள் உண்டு. எனக்கு வயது ஒரு 16 இருக்கும். கிராமத்தில் ஒரு சிறுவன் வயது 11, என் நண்பனின் தம்பி. ஒரு நல்ல குடும்பத்தை சேர்ந்தவன் தான். அவன் அம்மா அப்பா முன்னாடியே, வக்காளி என்ற வார்த்தையை அடிக்கடி உபயோகப் படுத்தினான். சென்னயில் பிறந்து வளர்ந்த எனக்கு அது அப்போ பெரிய ஷாக்! அதிர்ச்சி! அசிங்கம்--அதுவும் பெற்றோர் முன்னிலையில் பேசுவது என்பது உதரணமா, "வக்காளி!, கட்டையப்பன் வேலைக்கு வாரேன்னு சொன்னான் இன்னும் வரலை" எனபது போல சர்வ சாதாரணமாக பேசுவார்கள்.

    அப்படி அந்த மக்கள் பேசுகிறார்களா என்று தான் பார்க்கவேண்டும்; அப்படி அவர்கள் பேசுவது தவறு இல்லை அது தான் வட்டார வழக்கு என்றால் தாராளமாக பிரிண்ட் மீடியாவில் கொண்டு வரலாம்---அது தான் Freedom of Speech and Expression. இல்லாததையே so-called குடும்ப பத்திரிகைகளில் எழுதும் போது...இருப்பதை எழுதினால் என்ன?

    தாத்தாச்சாரி எழுதாததா? பெரிய பண்டிதர்; ஆன்மீகவாதி--அவர் வண்ட வண்டைய எழுதினார்--இந்து மதம் எங்கே போகிறது என்ற புத்தகத்தில்--அவர் என்ன செய்வார்; தமிழில் மொழிபெயர்த்தார். இந்து மதத்தை பற்றி அந்தக் காலத்தில் எழுதினவன் அசிங்கமா நம்மளைப் பற்றி எழுதினான்-அதில் இருப்பதை மறைத்து பொய்யாக உயர்வாக கொடுத்தால் அது இடைச்செருகல். உண்மையை ஒத்துக்கொண்டு போகவேண்டும்; இன்றும் black history-ஐ யாரும் மறைப்பது இல்லை; எவ்வவளவு கீழ்த்தரமாக அன்று நடத்தினார்கள் என்று எழுதப்பட்டுள்ளது--இன்று அதில் ஒருவர் ப்ரெசிடென்ட்--நம் நாட்டில் அன்றும் மலம் அள்ளினான்--இன்றும் அள்ளுகிறான்; இது தான் நாம நாடு; கேட்டால் கடவுளுக்கு செய்யும் சேவை!

    ReplyDelete
  12. மறுமொழி> திண்டுக்கல் தனபாலன் said...

    // மேலும் தொடர்ந்து அவர் எழுத வேண்டும்... அப்போது தான் விளக்கமும் அளிக்க முடியும்... //

    கருத்துரை தந்த சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி. எழுத்தாளர் பெருமாள் முருகன் மீண்டும் தொடர்ந்து எழுத வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பமும்.

    ReplyDelete
  13. மறுமொழி> Bagawanjee KA said...

    // இன்னார் என்பது கண்டுபிடிக்க முடியாத மாதிரி கதாபாத்திரங்களை வடித்து இருக்கலாம் ! த ம +1 //

    சகோதரர் கே.ஏ.பகவான்ஜீ அவர்களுக்கு நன்றி. நீங்கள் சொன்னது போல , எல்லோரும் இந்த அபிப்பிராயம்தான் வைத்துள்ளதாகத் தெரிகிறது.

    ReplyDelete
  14. மறுமொழி> ஜோதிஜி திருப்பூர் said...

    // அவர் எழுதியது போல கிராங்களில் பலவற்றை நானும் பார்த்துள்ளேன். அப்பட்டமாக அதை எழுத்து வடிவமாக கொடுக்கும் போது பலரால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. //

    குழந்தை பாக்கியம் மட்டுமல்ல பல விஷயங்கள் நடைபெறுவதை, இன்றைய பத்திரிகைகளில் செய்திகளாகவே வருவதைக் காணலாம். சகோதரர் ஜோதிஜி திருப்பூர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  15. மறுமொழி> Thulasidharan V Thillaiakathu said...


    // மிகவும் சரியே ஐயா! அவரது கொங்கு தமிழ் கிராமத்து வட்டார வழக்கு வசனங்களை அவர் அப்படியே கொடுத்திருக்கின்றார்தான். இது பல கிராமங்களிலிலும் வழக்கில் இருந்து வரத்தான் செய்கின்றது. அதை அவர் அந்த கிராமிய வாழ்வியல் அதுவும் 1930-40 களில் நடப்பதாக விவரித்து உள்ளதால் அப்படியே கொடுத்திருக்கின்றார். பலரால் அதை ஜீரணிப்பது கொஞ்சம் கஷ்டம்தான்..... நல்ல பதிவு ஐயா தங்களது பார்வையில்.//

    பிரச்சினை வந்ததற்கு காரணம், அவர் பயன்படுத்திய கொங்கு வட்டார வழக்கு தமிழ் சொற்கள் இல்லை. வெளிப்படையாக அவர் சொன்ன ஊரின் பெயரும், ஜாதி சூழலும்தான் என்று எண்ண வேண்டி இருக்கிறது.

    ReplyDelete
  16. மறுமொழி> வே.நடனசபாபதி said...

    // நீங்கள் சொல்வதுபோல் எல்லாவற்றையும் அப்படியே சொல்லக்கூடாது. ஒளிவு மறைவாகத்தான் சொல்லவேண்டும். அதுவும் தான் சொல்லும் கருத்து பெரும்பாலான மக்களால் விரும்பப்படாது எனத் தெரிந்தால் இன்றைய கால கட்டத்தில் அதை தவிர்ப்பது நல்லது.//

    அய்யா V.N.S அவர்களின் கருத்தினை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். இதனைத்தான் நமது முன்னோர்கள் ”இடக்கரடக்கல்” என்று மொழிந்தார்கள். அனைத்து தரப்பினரும் பார்க்கும் தமிழ் திரைப்படங்களில் கூட இதனை கடை பிடிப்பதில்லை. ஆனால் இலக்கியத்தில் இப்படித்தான் ஒருவர் எழுத வேண்டும் என்று வரையறுக்கக் கூடாது என்று வாதிடுபவர்களும் உண்டு.

    //ஆனாலும் அவர் செய்தது தவறு என யாரேனும் நினைத்தால் சட்டப்படி அவரது எழுத்தை தடை செய்ய முயற்சித்திருக்கலாம். தற்சமயம் இந்த விஷயம் நீதிமன்றத்தில் இருப்பதால் மேற்கொண்டு நாம் இதுபற்றி பேசாமல் இருப்பது நல்லது. //

    நீதி மன்ற விஷயம் என்பதால் பல விஷயங்களைப் பற்றி இங்கு பேசாமல், இலக்கிய சர்ச்சையை மட்டும் தொட்டு சென்று இருக்கிறேன் அய்யா.

    தங்கள் வருகைக்கும், அன்பான ஆலோசனையுடன் கூடிய கருத்துரைக்கும் நன்றி.


    ReplyDelete
  17. மறுமொழி> KILLERGEE Devakottai said...

    // அவர் மீண்டும் எழுத வரவேண்டும் என்பதே எமது அவா...
    தமிழ் மணம் 6 //

    தேவகோட்டை கில்லர்ஜியின் ஆவல் நிறைவேற வேண்டும்.

    ReplyDelete
  18. எல்லோருக்கும் இந்திய குடியரசு நாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  19. மறுமொழி> மலரன்பன் said...

    நீண்ட கருத்துரை தந்த மலரன்பன் அவர்களுக்கு நன்றி. நீங்கள்
    யாரென்று தெரியவில்லை. ஆன போதிலும், நீங்கள் விமர்சனம் செய்யும் முறை நன்றாகவே உள்ளது.

    // ஒரு பேராசிரியர் இப்படி எழுதியிருக்கிறார் அதாவது கெட்ட வார்த்தைகளை என்று சொல்வதற்குப் பதிலாக, இப்படி எழுதியிருக்கும் நாவலாசிரியர் ஒரு பேராசிரியராக தொழில் செய்கிறார் என்பதுவே சரி. பி இ படித்தவன் சைக்கிள் ரிப்பேரல்லவா பார்க்கிறான் என்பதை சைக்கிள் ரிப்பேர்க்காரன் பி இ படித்தவன் என்பதைப்போல. //

    நீங்களே சொல்லி விட்டீர்கள், கெட்ட வார்த்தைகள் என்று. அவரேதான் (பேராசிரியர்) இவரே (எழுத்தாளர்). இவரேதான் அவரே. வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.

    // இலக்கியம் இன்னார்தான் எழுத வேண்டும்; இன்ன படித்திருக்க வேண்டுமென்பது என்று எவருமே விதிகள் போடவில்லை. அப்படி விதி போடுவது அதிகப்பிரசிங்கித்தனம்.//

    இலக்கியத்திலிருந்து பிறந்ததுதான் இலக்கணம். எனவே இதுதான் இலக்கியம் என்று இதற்கென்று விதிகள் எங்கும் எழுதப்பட வில்லை. ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒரு நடை. எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கென்று ஒரு நடை. ஆனால் அந்த எழுத்துக்களை விமர்சனம் செய்யும் போது , எழுதியவர் இன்னார் என்ற எண்ணம் படிப்பவர் மனதில் தோன்றுவதை, அது பற்றிய கருத்தினச் சொல்வதை தடுக்க இயலாது. அதிகப் பிரசிங்கித்தனம் என்று இதனை சொல்லுதல் முறையில்லை.

    // திண்ணைப்பள்ளிக்கூடமே சென்று நின்ற சேக்ஸ்பியர் பலகலைக்கழகங்களில் ரொம்ப படித்த நாடகாசிரியர்களைவிட பெரிதாக இன்று வைக்கப்படுகிறார். அதைப்போல தமிழ் இலக்கிய உலகில் நாவலாசிரியர்களும் கவிஞர்களும் எல்லாரும் மெத்தப்படித்தவர்களல்ல, பெரிய பதவி வகித்தவர்களுமல்ல. பாரதிதாசன், ஐந்தாம் வகுப்பாசிரியர் மட்டுமே. எனக்குத் தெரிந்த தமிழக அரசின் பரிசு பெற்ற, பலகலைக்கழகங்களில் - தில்லிப்பலகலைகழகத்தில்கூட - வைக்கப்பட்ட தமிழ்நாவலை எழுதிய படைப்பாளிக்குத் தமிழ் ஒழுங்காக எழுதத்தெரியாது. அவரின் பதிப்பாளர்களே அவர் தமிழைப் பிழைதிருத்தம் செய்வார்கள். எப்படி? //

    படைப்பாளிகள் பலரும் பல்கலைக் கழகங்களில் படித்து விட்டு உருவாவதில்லை. இந்த வகையில் வான்மீகி (வழிப்பறி திருடனாக இருந்தவர்),கம்பன் (சாதாரண ஒரு பூசாரியின் மகன்), அவ்வையார் (நடுத்தர குடும்பம்) – ஆகியோரையும் சேர்த்துக் கொள்ளலாம்.

    பெரும்பாலும் எழுதியவர்களுக்கு (அவர் மெத்த படித்தவர்களாக இருந்தாலும்) அவர்களது எழுத்துப் பிழைகள் சிலசமயம் அவர்களது கண்களை மறைத்துவிடும். அதற்காகத்தான் “ப்ரூப் ரீடர்” முறையே வைத்து இருக்கிறார்கள். இதனாலேயே படைப்பாளிக்கு ஒழுங்காக எழுதத் தெரியாது என்று முடிவு கட்டிவிட இயலாது.

    // மேலும், நாவல் எழுதும்போது இப்படித்தான் எழுத வேண்டும் என்று எவருக்கும் விதிகள் போடப்படவில்லை. நாவலின் பிற்புலத்துக்கேற்பவே சம்பாஷனைகள் வரும். அதுவே எதார்த்தம். நாவலில் சம்பாஷனைகளில் நீங்கள் காணும் அசிங்கமான சொற்கள் அன்றாடம் உலவும் சொற்களே. அவற்றைத் தள்ளிவிட்டு டீசன்டான சொற்களைப்போட்டு அவர்கள் பேசினார்கள் என்றெழுதினால் நாவல் செத்துப்போச்சு. //

    நீங்கள சொல்வதெல்லாம் சரியே. ஏற்கனவே குறிப்பிட்டது போல், ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒரு நடை. எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கென்று ஒரு நடை. எழுத்தாளர். ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் மக்கள் மனதில் உள்லது.

    ஜெயகாந்தன் அவர்கள் “சினிமாவுக்கு போன சித்தாளு” என்ற நாவலை எழுதிய போது கூட, அரசியல் காரணமாக கடும் விமர்சனம் எழுந்தது. ஆனாலும் அதில், இந்த நாவலில் உள்ளது போன்ற பச்சையான வாசகங்கள் இல்லை.

    கூளப்ப நாயக்கன் காதல் மற்றும் விறலிவிடு தூது – என்ற காமரச இலக்கியங்களும் தமிழில் உண்டு. கவிஞர் கண்ணதாசன் இந்த இரண்டினுக்கும் இலக்கிய உரைகள் எழுதியுள்ளார். கவிஞரின் ”அர்த்தமுள்ள இந்துமதம்” மறு பதிப்புகள் கண்டது. பலருடைய வீடுகளில் இந்த நூலினைக் காணலாம். ஆனால் மேலே சொன்ன நூல்களை நூலகங்களில் மட்டுமே பார்க்க இயலும்.

    இலக்கியம் சம்பந்தப்பட்ட ஒரு நீண்ட உரையைச் சொல்ல சந்தர்ப்பம் தந்த மலரன்பன் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  20. மறுமொழி> வை.கோபாலகிருஷ்ணன் said...

    // சிக்கல்கள் ஏற்பட்டுள்ள ஓர் பிரச்சனையான விஷயத்தை, பொறுமையாகப் பலவழிகளில் அலசி ஆராய்ந்து, தங்கள் பாணியில் அனைவருக்கும் ஓரளவு புரிவதுபோல, இந்தப் பதிவினில் எடுத்து எழுதியிருப்பது தங்களின் தனிச்சிறப்பு. //

    எப்போதும் போல எனக்கு ஊக்கம் தந்து கருத்துரை தரும் அன்புள்ள V.G.K அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  21. ஐயா, பெருமாள் முருகன் சரணாகதி அடைந்ததற்கு காரணம், அவர் அரசு கல்லூரி பேராசிரியராக பணியாற்றுவதே. வேலைக்கு இடையூறு, பணியிட மாறுதல் போன்ற பிரச்னைகள் வரும் என பயந்திருக்கலாம்.
    இந்த விஷயத்தில் அரசு அதிகாரிகள் கட்டப்பஞ்சாயத்து செய்தார்கள் என்று சொல்வது, சரியல்ல. சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கும் அதிகாரி, அமைதிப் பேச்சுக்கு ஏற்பாடு செய்வதை தவறென்று சொல்லி விட முடியாது. ஒரு பெரும் போராட்டம் வெடித்து, தடியடி, துப்பாக்கிச்சூடு வரை சென்றிருந்தால், அதே அதிகாரிகள் மீது தான் எல்லோரும் குறைசொல்வர். ஆகவே அவர்களது முயற்சியில் குறை கூறமுடியாது; மன்னிப்பு கடிதம் வாங்கியிருக்கக்கூடாது. அதுதான் அதிகாரிகள் செய்த பெரும் தவறு.

    ReplyDelete
  22. மறுமொழி> நம்பள்கி said... ( 1, 2)

    அன்பு சகோதரர் நம்பள்கி அவர்களின் நீண்ட கருத்துரைக்கு நன்றி.

    // "எழுதுவது யார்" என்று பார்க்கக்கூடாது! "எழுதுவது யாரைப் பற்றி" என்று தான் பார்க்கவேண்டும்; இல்லை என்றால் அந்த கதையில் "மண் வாசனை" இருக்காது. எழுத்தாளரின் வாசனை தான் இருக்கும்; //

    உங்களுடைய எழுத்துக்களை தொடர்ந்து வாசிப்பவர்களில் நானும் ஒருவன். மேலே மலரன்பன் அவர்களுடைய கருத்தும், உங்களது கருத்தும் ஒரே மாதிரி தொனிப்பதால், மேலே மலரன்பன் அவர்களுக்கு அளித்த அதே மறுமொழியை இங்கும் எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    // எனக்கு எல்லா மட்டங்களிலும் நண்பர்கள் உண்டு. எனக்கு வயது ஒரு 16 இருக்கும். கிராமத்தில் ஒரு சிறுவன் வயது 11, என் நண்பனின் தம்பி. ஒரு நல்ல குடும்பத்தை சேர்ந்தவன் தான். அவன் அம்மா அப்பா முன்னாடியே, வக்காளி என்ற வார்த்தையை அடிக்கடி உபயோகப் படுத்தினான். சென்னயில் பிறந்து வளர்ந்த எனக்கு அது அப்போ பெரிய ஷாக்! அதிர்ச்சி! அசிங்கம்--அதுவும் பெற்றோர் முன்னிலையில் பேசுவது என்பது உதரணமா, "வக்காளி!, கட்டையப்பன் வேலைக்கு வாரேன்னு சொன்னான் இன்னும் வரலை" எனபது போல சர்வ சாதாரணமாக பேசுவார்கள். //

    பொதுவாகவே கிராமங்களில் ”வக்காளி (ஒக்காளி)’ போன்ற சொற்களை அடிக்கடி பயன்படுத்துவதைக் காணலாம். எனது கிராமத்து மாமா (விவசாயி) ஒருவர் இன்றும் வார்த்தைக்கு வார்த்தை இந்த சொல்லை சொல்லுவார். கிராமத்து டீக்கடைப் பக்கம், ஒரு அரைமணி நேரம் நின்றால் பலரும் சொல்வதைக் காணலாம்.

    // அப்படி அந்த மக்கள் பேசுகிறார்களா என்று தான் பார்க்கவேண்டும்; அப்படி அவர்கள் பேசுவது தவறு இல்லை அது தான் வட்டார வழக்கு என்றால் தாராளமாக பிரிண்ட் மீடியாவில் கொண்டு வரலாம்---அது தான் Freedom of Speech and Expression. இல்லாததையே so-called குடும்ப பத்திரிகைகளில் எழுதும் போது...இருப்பதை எழுதினால் என்ன? //

    வட்டார வழக்கு ஆராய்ச்சி செய்வதில் தவறு ஏதும் இல்லை. அது ஒரு குறிப்பிட்ட வட்டத்தோடு முடிந்து விடும். குடும்ப பத்திரிகைகள் பல சர்க்குலேசன் குறைந்து போனதற்கு முக்கிய காரணம் , இந்த “பச்சை”யான சமாச்சாரங்கள் என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.


    //தாத்தாச்சாரி எழுதாததா? பெரிய பண்டிதர்; ஆன்மீகவாதி--அவர் வண்ட வண்டைய எழுதினார்--இந்து மதம் எங்கே போகிறது என்ற புத்தகத்தில்--அவர் என்ன செய்வார்; தமிழில் மொழிபெயர்த்தார்.//

    இந்த நூலைப் படித்ததில்லை. வாங்கி பார்க்கிறேன்.

    ReplyDelete
  23. மறுமொழி> Yarlpavanan Kasirajalingam said...

    // எல்லோருக்கும் இந்திய குடியரசு நாள் வாழ்த்துகள்! //

    நன்றி யாழ் பாவாணன் காசிராஜலிங்கம் அவர்களே. அனைவருக்கும் எனது, இந்திய குடியரசு தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. அன்புடையீர்..
    வாழ்க நலம்!..
    இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்!..

    ReplyDelete
  25. இளங்கோ:
    நீங்கள் படிக்கவில்லை என்பதினால்...
    இந்து மதம் எங்கே போகிறது? கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
    http://thathachariyar.blogspot.com/

    இதில் இருந்து இரண்டு சாம்பிள்; ஒன்று...
    [[[ஆபாசமே! இதுதான் தமிழ் வருடப் பிறப்பா? நாரதருக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த பிள்ளைகளா தமிழ் வருடங்கள்? படித்த, பட்டம் பெற்ற தமிழர்களே! தெளிந்து, மற்றவர்க்கும் தெளிவூட்டுங்கள்.]]

    இரண்டு::

    இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 44. (2)

    இன்றும்... அம்மாவுக்கு சிரார்த்தம், திவசம், திதி செய்கிறேன் என ஆற்றங்கரைகளிலும், கடற்கரைகளிலும் பவ்யமாய் கடமைகளை நிறைவேற்றும் மகன்களை நாம் பார்ர்க்கிறோம்.

    ஒரு வாத்யாரை பணம் கொடுத்து அமர்த்தி... அவர் மூலமாக, தன்னை விட்டுப் பிரிந்த தன் தாய்க்கு வருஷாவருஷம் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தும் அந்த மகன்கள் இதன் வாயிலாக அம்மாவின் அன்பையும் ஆசிர்வாதத்தையும் பரிபூரணமாக பெறுவதாக நம்பிக்கையோடு செய்கிறார்கள்.

    ஆனால்...? “என்மே மாதா ப்ரலுலோபசரதிஅனனவ் வ்ரதா தன்மேரேதஹாபிதா வ்ருந்த்தாம் ஆபுரண்யஹா அவபத்யதாம்...”

    நான் யாருக்குப் பிறந்தேன். என் அப்பா யாரென தெரியாது. மற்றவர்கள் சொல்வதால் நான் இன்னாருக்குத்தான் பிறந்தேன் என்பதை நம்பவேண்டியுள்ளது.


    ஆனால் என் அப்பா யார் என்பது இன்னும் தெரியவில்லை. அது அம்மாவுக்குத்தான் தெரியும். அப்படிப்பட்ட அம்மாவுக்கு என் அஞ்சலியை கொண்டுபோய் சேர்ப்பீர்.


    இப்படிப்பட்ட அர்த்தத்தை தன் அம்மாவையே சந்தேகப்படும் படியான மந்த்ரத்தை, வாத்தியர் சொல்லச் சொல்ல ‘மகன்’கள் திரும்பச் சொல்கிறார்கள் அர்த்தம் தெரியாமலேயே.

    இந்த அர்த்தத்தை விளங்கிக் கொண்டவர்கள் இனியொரு முறை திவசம் செய்யும்போது இந்த மந்த்ரத்தை உச்சரிப்பார்களா?

    உதடுபடக் கூட இப்படியொரு அர்த்தத்தை அறிவிக்கக் கூடாதென்று எச்சரிக்க வேண்டியவர்களை எச்சரிப்பார்களா?
    ________________________

    என் இடுகையில் தாத்தாசாரியைப் பற்றி கூறியுள்ளேன்; பார்க்க..
    http://www.nambalki.com/2015/01/blog-post_15.html

    தாத்தாசாரி பெரியவா, மறைந்த சரஸ்வதியின் நெருங்கிய ஆன்மீக நண்பர்; மேலே உள்ள லிங்கை க்ளிக் செய்து பாருங்கள்..

    ReplyDelete
  26. அருமையான அலசல். நானும் கூட இதைப்பற்றி எழுதலாமென்றிருந்தேன். இருபக்க கருத்துக்களையும் மாற்றி மாற்றி பல பதிவுகளில் படிக்கும்போது குழப்பமே மிஞ்சுகிறது.

    ReplyDelete
  27. என்னைப்பொறுத்தவரை கருத்துச்சுதந்திரம்ென்பதுமற்றவர் மனது பபடாதவரை ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான் . சேக்ஸ்பியரின் மெர்ச்சன்ட் ஆப் வெனிஸில்கூட யூதன் ஒருவனை நாசுக்காக அவமானப்படுத்தும்படி காட்டிவிட்டு கடைசியில் அவனின் இயலாமையை வெளிக்காட்டியிருப்பார் . வட்டார வழக்குச்சொற்களில் எழுதவதெல்லாம் சரி தான் . அதற்காக , படிப்பவர்களை முகம் சுழிக்கவைக்கும் மாதிரியாய் எழுதியது தவறுதான் . இது ஒன்றும் பேச்சரங்கம் கிடையாது . ஒரு ஊரில் பேசிவிட்டு செல்வதற்கு . உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள் படிக்கும் படியான அச்சுரிமை ஊடகத்தில் தன் கருத்தை எழுதும்போது கவனம் தேவை . 'தாயொலி' கண்டாரவோலி போன்ற வார்த்தைகளின் அர்த்தம் மி்கக்கொடுமையானது . அதை உலகம் முழுக்க நூலின்வழியே கடத்துவது தவறு . மேலும் சாதியே வேண்டாம் என்று அவரின் முந்தைய படைப்புகளில் வலியுறுத்தும் இவர் , இப்படைப்பில் குறிப்பிட்ட சாதியை மையமாகக்கொண்டு எழுதியுதும் தவறு .

    ஒரு குலம் , மதம், இனம் , நாடு என அதன் கலாசாரத்தில் ஆங்காங்கேஓட்டை இருக்கலாம் . அதெல்லாம் நான் வெளிக்கொணர்ரகிறேன் என்கிற மமதையில் எழுதியது தவறு .அவரவர் குடும்பங்களில் இருக்கும் ஓட்டை ஒடிசல்களை மற்றவர்முன் கூறி பெருமைப்படுவது அயோக்கியத்தனம் . பெ.முருகன் செய்தது அதுதான் . இன்செஸ்ட் , மாஸ்ஆர்ஜியெல்லாம் இருந்தது என குறிப்பிட பல சான்றுகள் இருந்ததாக குறிப்பிடும் இவர் , தன்னுடைய நாவலுக்கான எதிர்ப்பு வந்தபோது அதை காட்டியிருக்க வேண்டும் . ஒரு எழுத்தாளனாய் தன் எழுத்து சமூகத்திற்கு உறுதுணையாய் இருக்கும் பட்சத்தில் தன்னுடைய எழுத்துக்காக போராடியிருக்கவேண்டும் .

    என்னைப்பொறுத்தவரை நெகட்டிவ் பப்ளிசிட்டி செய்த எதிர்ப்பாளர்கள் எல்லாம் வடிகட்டியமுட்டாள்கள்தான் . என்னவோ வாசிப்பு என்பது உயிர்மூச்சு என்றநிலையில் தமிழ்நாடு இருப்பதுபோல் இவர்கள் போராடியதெல்லாம் ஓவர் . அதை அப்படியே விட்டுவிட்டால் ஒருவனும் சீண்டியிருக்கமாட்டான் .

    முடிவில் இந்த நாவல் எதிர்க்கும் அளவிற்கு வொர்த்தும் இல்லை . ஆதரிக்கும் அளவிற்கு அற்புதமான நாவலும் இல்லை .

    ReplyDelete
  28. இந்த இடுகையைப் படித்தவர்களுக்கும், இங்கு பின்னூட்டமிட்ட எல்லோருக்கும், மற்றும் எல்லா இந்துக்களுக்கும், பெருமாள் முருகன் எழுத்தை எதிர்த்தவர்களுக்கும் இந்த கேள்வி!

    [[[இந்து மதம் எங்கே போகிறது? கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
    http://thathachariyar.blogspot.com/]]]

    இந்த லிங்கில்..உள்ளதை படித்தால்...
    இதைவிட கேவலாமா இந்துமதத்தைப் பற்றி யாரும் அசிங்கமா ஆபாசமா எழுத முடியாது! ஏன் இதை தடுக்க நீங்கள் முயற்சி எடுக்கவில்லை? ஏன் தடுக்க முயற்சி எடுக்கக்கூடாது!

    பெருமாள் முருகன் கதை தாத்தாசாரியின் இந்த மதம் எங்கே போகிறது முன்னால்...ஜூஜூபி!...ஜூஜூபி...சென்னைத் தமிழில்...பிஸ்கோத்து...!

    இந்த இந்து மதம் எங்கே போகிறதை தடுக்க முயற்சி நீங்கள், ஆன்மீகவாதிகள், இந்து முன்னணியின் ஆணிவேர்கள் அர்ஜுன் சம்பத் , ராமகோபாலன் இவர்கள் முயற்சி எடுக்கவில்லை என்றால்----ஆன்மீக வாதி, பண்பாளர், காஞ்சி பெரியவா சரஸ்வதி சாமிகளின் நண்பர், "தாத்தாச்சாரி இந்து மதத்தை பற்றி சொன்னது எல்லாம் உண்மை என்று தான் ஆகிறது!"

    ReplyDelete
  29. நம்பள்கி அண்ணே ! நீங்க சுட்டிக்காட்டிய பக்கத்தை ஆதரித்தோ , எதிர்த்தோ எப்பிரச்சனையும் எழவில்லையே ! நீங்கள் மதத்தின் பெயரால் இந்த புத்தகத்தை படித்ததே தவறு . அது என்ன எல்லோரின் தாக்குதலும் கடைசியில் இந்து மதத்தின்மீது வந்துவிழுகிறது என்று தெரியவில்லை . உலகில் அனைத்து மதத்திலும் எல்லா பிரச்சனைகளும் உள்ளன . கிறித்துவர்களுக்கு எதிராக கருதப்பட்ட டாவின்சி கோட் நாவல் கூட ஒரு அற்புதமான திரில்லரைக்கொண்டிருக்கும் . இந்நாவலை எழுத்துச்சுவைக்காகவும் கொண்டாடமுடியாது , கருத்துச்சுவைக்காகவும் கொண்டாடமுடியாது . அப்படிபட்ட நாவலுக்கு எதிர்ப்புத்தெரிவித்து ஏற்கனவே விற்காமல் இருந்த அவருடைய புத்தகத்திற்கு இலவச விளம்பரம் தந்துள்ளனர் எதிர்ப்பாளர்கள் . ஆதரிக்கிறேன் என்ற போர்வையில் மதத்தினை எதற்கு இழுக்கிறிர்கள் என்றுதான் புரியவில்லை .

    ReplyDelete
  30. [[நம்பள்கி அண்ணே ! நீங்க சுட்டிக்காட்டிய பக்கத்தை ஆதரித்தோ , எதிர்த்தோ எப்பிரச்சனையும் எழவில்லையே ! ][

    என் கேள்வியே என் எதிர்ப்பு எழவில்லை என்பதே; அப்ப..நீங்க அந்த தாத்தாசாரியார் கூறியி அசிங்கத்தை ஆபாசத்தை ஒத்துக் கொள்கிறீர்களா? இல்லை என்றால் எதிர்க்க வேணும

    [[நீங்கள் மதத்தின் பெயரால் இந்த புத்தகத்தை படித்ததே தவறு ]]
    ஏன் படித்தது தவறு! ஒரு இந்து இதைப் படித்தது தவறு என்றால் மாதொரு பாகன் புத்தகத்தை கவுண்டர்கள் படித்ததும் தவறு தான்!

    [[அது என்ன எல்லோரின் தாக்குதலும் கடைசியில் இந்து மதத்தின்மீது வந்துவிழுகிறது என்று தெரியவில்லை ]]

    எல்லோரு தாக்குதல் என்று இல்லை--சுரனை உள்ள இந்துக்கள் தாக்குதல் என்று வாசிக்கவும்!

    [[ஆதரிக்கிறேன் என்ற போர்வையில் மதத்தினை எதற்கு இழுக்கிறிர்கள் என்றுதான் புரியவில்லை ]]
    இது உங்கள் பார்வை! நீங்கள் என்னைப் பற்றி எப்படி வேண்டுமானாலும் நினைக்கலாம்; அது உங்கள் உரிமை!

    மேலும்...என் [இந்து] மதத்தை நான் இழுப்பேன்; அது என் உரிமை!.

    நீங்கள் தாத்தாச்சாரியின் அர்த்தமுள்ள இந்து மதத்தை அப்ப ஆதரிக்காமாதிரி தெரிகிறது!

    .

    ReplyDelete
  31. மறுமொழி> ஆறுமுகம் அய்யாசாமி said...

    அய்யா ஆறுமுகம் அய்யாசாமி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  32. மறுமொழி> துரை செல்வராஜூ said...

    // அன்புடையீர்.. வாழ்க நலம்!.. இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்!.. //

    சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களுக்கு நன்றி. அனைவருக்கும் எனது, இந்திய குடியரசு தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  33. மறுமொழி> நம்பள்கி said... (3)

    // இளங்கோ: நீங்கள் படிக்கவில்லை என்பதினால்...
    இந்து மதம் எங்கே போகிறது? கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள். http://thathachariyar.blogspot.com/ //

    நம்பள்கியின் தகவலுக்கு நன்றி. சென்று பார்க்கிறேன்.

    ReplyDelete

  34. மறுமொழி> கவிப்ரியன் கலிங்கநகர் said...

    சகோதரர் கவிப்ரியன் கலிங்கநகர் அவர்களுக்கு நன்றி.

    // அருமையான அலசல். நானும் கூட இதைப்பற்றி எழுதலாமென்றிருந்தேன். இருபக்க கருத்துக்களையும் மாற்றி மாற்றி பல பதிவுகளில் படிக்கும்போது குழப்பமே மிஞ்சுகிறது. //

    கண்ணால் கண்டதும் பொய்; காதால் கேட்டதும் பொய் என்பார்கள். எனவே ஒரு நூலினைப் பற்றி பேசும் முன், அந்த நூலினை முழுக்கவும் படித்து விடுவது நல்லது. இதனால் குழப்பம் வராது.

    ReplyDelete
  35. மறுமொழி> megneash k thirumurugan said... ( 1 )

    சகோதரர் திருமுருகன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  36. உங்களின் பதிவு படித்தேன் அய்யா. ஜோதிஜி அவர்கள் கருத்துடன் உடன்படுகிறேன். மேலும் எழுத்து ஒரு காலத்தை சமூகத்தை பிரதிபலிக்கிறது என்பதாகக் கொள்ளலாமல்லவா.... அந்த புத்தகம் குறித்த என் பதிவையும் முடிந்தால் படித்துப் பாருங்கள் அய்யா. http://www.nigalkalam.blogspot.com/2015/01/blog-post_21.html

    ReplyDelete
  37. நல்ல அலசல். இவ்வாறான நிலையில் விவாதிக்கப்படும்போதுதான் சரியான புரிதல் ஏற்படும்.

    ReplyDelete
  38. // என் கேள்வியே என் எதிர்ப்பு எழவில்லை என்பதே; அப்ப..நீங்க அந்த தாத்தாசாரியார் கூறியி அசிங்கத்தை ஆபாசத்தை ஒத்துக் கொள்கிறீர்களா? இல்லை என்றால் எதிர்க்க வேணும //

    எதிர்ப்பு என்ற பெயரில் ஏற்கனவே நெகட்டிவ் பப்ளிசிட்டியை உண்டாக்கி பெ.முருகனை வளர்த்ததுபோல் , இந்த ஆச்சாரியரையும் வளர்க்கவேண்டாம் என்ற தொனியில் தான் . ஆச்சாரியர் என்ற பெயரிலேயே தெரியவில்லையா ? இவர்களெல்லாம் போலிக்கபோதிகள் என்று . இவர்களை எதிர்ப்பதுகூட ஒருவகையில் மோசமான பப்ளிசிட்டிதான் . மௌனத்தின் பெயர் தான் சம்மதம் . அமைதிக்குப்பெயர் சம்மதமல்ல .

    // ஏன் படித்தது தவறு! ஒரு இந்து இதைப் படித்தது தவறு என்றால் மாதொரு பாகன் புத்தகத்தை கவுண்டர்கள் படித்ததும் தவறு தான்! //
    இவ்விடத்தில் கவுண்டர் என்பதற்கு பதில் உண்மையாக வாழும் ஒரு குடும்பத்தின் பெயரை போட்டிருந்தாலும் தங்களின் கருத்து அதுவாகத்தான் இருக்குமா ? அப்படியானால் நீங்கள் ஆதரிப்பது பெருமாள் முருகனை அல்ல , அவருடைய எழுத்துகளையும் அல்ல . எதிர்ப்பவர்களைத்தான் எதிர்கிறீர்களே தவிர , அவரை நீங்கள் ஆதரிக்கவில்லை என்பதே நீங்கள் கூறும் கருத்திலிருந்து என் சிறிய மூளைக்கு எட்டுகிறது . ஒருவேளை அவரின் எழுத்துக்களைத்தான் ஆதரிக்கிறீர்கள் எனில் , அவரின் சார்பாக வாதாடியிருக்கவேண்டும் . பழைய இலக்கியங்களில் வருகிறது , கோவில்களில் உள்ளது , தமிழர்கள் மாஸ் ஆர்ஜியில் தொன்றுதொட்டு வருகிறார்கள் என பல சான்றுகள் உள்ளன என்றெல்லாம் சொல்லாமல் , அவர் களப்பணி செய்திட்ட இடங்களையும் அங்கே தற்போது வாழும் வரலாறு அறிந்த மனிதர்களிடமிருந்து பெறப்பட்ட உண்மைச்செய்திகளையும் வெளியிடுங்கள் . அதைவிட்டு விட்டு , எதிர்ப்பவர்களை எதிர்க்கிறோம் என்பது எவ்வகையில் நியாயம் ?

    // எல்லோரு தாக்குதல் என்று இல்லை--சுரனை உள்ள இந்துக்கள் தாக்குதல் என்று வாசிக்கவும்!//

    இதுவேண்டுமானால் ஏற்றுக்கொள்கிறேன் . இந்துக்களுக்கு மட்டுமல்ல , தமிழர்களுக்கும் இந்த சொரனை என்பது துளிகூடக்கிடையாது .நன்றி அண்ணே !


    நன்றி இளங்கோ அண்ணா !

    ReplyDelete
  39. மறுமொழி> நம்பள்கி said... ( 4,5)
    மறுமொழி> megneash k thirumurugan said... (2, 3)

    சகோதரர்கள் இருவரும் பதிவினை ஒட்டிய கருத்துரை தராமல், வேறு எங்கோ செல்வதாகத் தெரிகிறது. இருவரும் இத்துடன் மேற் கொண்டு மதம் சம்பந்தமாக எதுவும் இழுக்க வேண்டாம்; நீங்கள் மதம் பற்றிய விவாதம் செய்வதற்கான தளம் இது அல்ல என்றும் தெரிவித்துக் கொள்கிறேன். – மேலும் இதனாலேயே மீண்டும் எனது தளத்தில் COMMENTS MODERATION வைக்க வேண்டியதாயிற்று என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  40. மறுமொழி> ezhil said...

    // உங்களின் பதிவு படித்தேன் அய்யா. ஜோதிஜி அவர்கள் கருத்துடன் உடன்படுகிறேன். மேலும் எழுத்து ஒரு காலத்தை சமூகத்தை பிரதிபலிக்கிறது என்பதாகக் கொள்ளலாமல்லவா.... அந்த புத்தகம் குறித்த என் பதிவையும் முடிந்தால் படித்துப் பாருங்கள் அய்யா. //

    சகோதரி எழில் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. உங்கள் வலைத்தளம் சென்று, நீங்கள் குறிப்பிட்ட பதிவினில் எனது கருத்துரையைத் தந்துள்ளேன்.

    ReplyDelete
  41. மறுமொழி> Dr B Jambulingam said...

    // நல்ல அலசல். இவ்வாறான நிலையில் விவாதிக்கப்படும் போதுதான் சரியான புரிதல் ஏற்படும். //

    முனைவர் அய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  42. //நீங்களே சொல்லி விட்டீர்கள், கெட்ட வார்த்தைகள் என்று. அவரேதான் (பேராசிரியர்) இவரே (எழுத்தாளர்). இவரேதான் அவரே. வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை. //

    என் கருத்தைப்புரியவில்லை. அடைப்புக்குறிகளுக்குள் நான் கெட்ட வார்த்தைகள் என்ற சொற்றொடரைப்போட்டிருக்க வேண்டும். இல்லை...எனவே நான் அவற்றை நிராகரிப்பதாக நினைத்துவிட்டீர்கள்.

    இதைப்படியுங்கள் - http://solvanam.com/?p=37558.

    பெ.மு, கெட்ட வார்த்தை பேசுவோம் என்ற நூலை யாத்திருக்கிறார். அதன் விமர்சனமது.

    எம்மொழியும் இருவகையாகப் ;புழங்கப்படும். நாகரிகப்பேச்சில் நாசூக்காக; பாமரர் பேச்சில் அவர்கள் உணர்வுகளுக்கேற்ப. கல்லூரி ஆசிரியர் பாடம் நடத்துவது முதல் வகை மொழியில். அவரே தன் வீட்டுக்கருகில் குப்பை போட்டுச் செல்வரைத் திட்டும்போது இரண்டாம் வகை மொழியைத்தேர்ந்தெடுப்பார். இரண்டாம் வகை மொழி - அதாவது கெட்ட வார்த்தைகள், மனித வாழ்க்கைக்கும் அத்தியாவசியமாகிறது. இல்லாவிட்டால் பலவகை உணர்ச்சிகளை மாந்தர்கள் வெளியிட முடியாது.

    தாயோலி என்ற சொல் ஒரு அசிங்கம் என்கிறார் ஒருவர் இங்கே. அசிங்கமே. ஆனால், அது தேவைப்படுகிறது. அச்சொல், ஊம்பு போன்ற‌ சொற்களெல்லாம் ஜெயமோகன் சிறுகதைகளில் காணலாம். தலித்தாசிரியர்கள் நாவல்களின் இவற்றைவிட கெட்ட வார்த்தைகள் காணப்படும். சடையன் குளம் என்ற தலித்திய நாவலைப்படிக்கவும்.

    எழுத்தாளர்கள் கீழ்த்தட்டு மக்களின் வாழ்க்கையை நிலைக்களனாக வைத்தெழும்போது அம்மக்கள் பேசியவாறு மொழியைக் கையாளும்போது இக்கெட்ட வார்த்தைகள அவர்கள் பேசியதாக எழுதுவார்கள். மாதொருபாகன், கல்லா மனிதர்கள், மூடநம்பிக்கைகள், ஜாதித்துவேசத்தினால், தீண்டாதாரைத் திட்டுதல், கொண்ட வாழ்க்கைதான் மாதொருபாகன். அங்கே கெட்ட வார்த்தைகள் எழுதப்படாவிட்டால் அந்நாவல் போலியாகிவிடும். It is not a coffee table book to keep in the drawing hall or in reception. It is a bitter novel of bitter realities of the peasant life.

    அச்சொற்கள் நிறைந்த புதினத்தை தவிர்த்துவிடுவது நல்லது. நாமெல்லாரும் நல்லவர்கள். அவர்க‌ளெல்லோரும் கெட்டவர்கள். அவர்கள் அங்கே. நாமிங்கே என்று வாழ்ந்து விட்டால் பிரச்சினையேது? ஆனால், அவர்கள் அப்படி வாழக்கூடாது. நம்மைப் போலத்தான் வாழவேண்டுமென எதிர்பார்க்கும்போது பிர்ச்சினை எழுகிறது. சேரிகளுக்குள் உள்ளுழைந்து வெளிவர உங்களால் முடியாது. முடிந்தவன் எழுத்தாளாகிறான். அவர்கள் வாழ்க்கையை இலக்கியமாக்க விழைகிறான். அப்படிப்பிறக்கும் இலக்கியமும் உங்களுக்காக எழுதப்படும் நல்ல வார்த்தைகள் கொண்ட இலக்கியமும் வேண்டுமென்கிறார்கள் ஒரு மொழியின் இலக்கியம் செழிக்க என்கிறார்கள்.

    விவாதம் வேண்டாம். உங்கள் கருத்துடன் என் கருத்து ஒத்துவராது எனவே. Bye !

    ReplyDelete
  43. மறுமொழி> பழனி. கந்தசாமி said...

    // படித்தேன். சிக்கலான விவகாரம். ஏதாவது உள்நோக்கம் இருக்கலாம். //

    அய்யா முனைவர் பழனி. கந்தசாமி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. (முன்பே எழுதி வைத்த மறுமொழி எப்படியோ விட்டுப் போனது)

    ReplyDelete
  44. மறுமொழி> மலரன்பன் said... ( 2 )

    // விவாதம் வேண்டாம். உங்கள் கருத்துடன் என் கருத்து ஒத்துவராது எனவே. Bye ! //

    சகோதரர் மலரன்பன் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  45. வணக்கம்!

    "இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள்!"
    ஜெய் ஹிந்த்!

    நன்றியுடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    (இன்றைய எனது பதிவு "இந்திய குடியரசு தினம்" கவிதை காண வாருங்களேன்)

    ReplyDelete
  46. மறுமொழி> yathavan nambi said...

    சகோதரர் யாதவன் நம்பி (புதுவை வேலு) அவர்களுக்கு வணக்கம்! எனது உள்ங் கனிந்த இந்திய குடியரசு தின நல் வாழ்த்துக்கள். வாழ்க இந்தியா! (உங்கள் பதிவின் பக்கம் விரைவில் வருகிறேன்) நன்றி.

    ReplyDelete
  47. நானும் தரவிரக்கம் செய்து வைத்துள்ளேன். படிக்க வேண்டும்!

    ReplyDelete
  48. மறுமொழி> வெங்கட் நாகராஜ் said...

    // நானும் தரவிரக்கம் செய்து வைத்துள்ளேன். படிக்க வேண்டும்! //

    தங்கள் வருகைக்கு நன்றி. படித்தவுடன் ஒரு விமர்சனம் எழுதுங்கள்.

    ReplyDelete
  49. இந்த சர்ச்சையால் புத்தகத்தின் விற்பனை கூடி இருக்கும்

    ReplyDelete
  50. மறுமொழி> டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

    // இந்த சர்ச்சையால் புத்தகத்தின் விற்பனை கூடி இருக்கும் //

    மாதொருபாகன் பற்றிய பிரச்சினை ஜாதீய வடிவம் கொடுக்கப் பட்டவுடன், நூல் விற்பனை. இல்லை. விற்பனைக்கு கொடுக்கப்பட்ட நூல்கள் உடனே வாபஸ் பெறப்பட்டன. எனவே இந்நூலின் விற்பனை அமோகம் என்று சொல்வதற்கில்லை. கருத்துரை தந்த டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று அவர்களுக்கு நன்றி.


    ReplyDelete