Wednesday, 14 January 2015

தி இந்து – பொங்கல் மலர் – 2015 (ஒரு பார்வை)

பொதுவாகவே எந்த புத்தகம் வாங்கினாலும், குறிப்பாக பத்திரிகைகள் வெளியிடும் பொங்கல் மலர், தீபாவளி மலர் போன்றவற்றை மேலெழுந்த வாரியாக ஒரு பார்வை பார்ப்பது வழக்கம். அப்புறம், நேரம் கிடைக்கும்போது, சாவகாசமாக ஆழ்ந்து படிப்பது வழக்கம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தி இந்து பொங்கல் மலர் 2015 சிறப்பாக வெளி வந்துள்ளது. (விலை ரூ120/=) பேப்பர் போடும் தம்பியிடம் முன்கூட்டியே சொல்லி வைத்திருந்தேன். இரண்டு நாட்களுக்கு முன்னர் கிடைத்தது. வழக்கம் போல எனது ஒரு பார்வை இங்கே.

ஆன்மீகம்:

பெரும்பாலும் பத்திரிகைகள் வெளியிடும் தீபாவளி மலர்களில் இறைவன் படங்களை வெளியிடுவது வழக்கம். இந்த ஆண்டு தி இந்து பொங்கல் மலர் நிறைய ஆன்மீக விஷயங்களை உள்ளடக்கியதாக, சுருக்கமாக இருந்தாலும் தெளிந்த நீரோடைபோல விளக்குகிறது. புத்தகத்தின் இடையிடையே மேலே இணைத்துள்ள விஷ்ணுவின் படம் போன்று, மகேஸ்வர வழிபாடு, விஷ்ணு துர்கா, காயத்ரி தேவி, அனுமன், மதுரை மீனாட்சி அம்மன், கிருஷ்ணர், சீரடி சாய்பாபா ஆகிய தெய்வீக முழுபக்க வண்ண படங்களையும் காணலாம்.
  

“ சீரிய சிங்கம் செறிவுற தீ விழித்து என்று, தனது அஹோபிலம் நவ நரசிம்மர் ஆலய தரிசனம் பற்றி சொல்லுகிறார் என்.ராஜேஸ்வரி அவர்கள்.

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காணபது அறிவு என்றார் திருவள்ளுவர். திரிசிரபுரம் என்றழைக்கப் பட்ட இன்றைய திருச்சியில் அன்று வாழ்ந்தவர் தாயுமான சுவாமிகள். அவர் “ இறைவன் ஆனந்த மயமானவன். எல்லா உயிர்களும் ஆனந்தத்தையே விரும்புகின்றன. இறைவனிடம் லயிப்பதே பரமானந்தம் என்ற தத்துவத்தை உணர்த்தியவர் சுவாமிகள் என்று அவரது பாடல்களிலிருந்து  சிலவற்றை எடுத்துக் காட்டி விளக்குகிறார் சி.ஹரி அவர்கள். உங்களுக்கு இறைவன் வேண்டுமா? பிரம்ம சூத்திரத்தின் ஒரு பகுதியை தெய்வீகச் சுவையாக விளக்குகிறது இன்னொரு கட்டுரை.

திரைக் காலம்


நீங்கள் பழைய தமிழ் திரைப்படங்கள், பாடல்கள், நடிகர்-நடிகைகள் பற்றிய செய்திகள் மீது தனி ஆர்வம் உள்ளவரா? அப்படியானால் இந்த பொங்கல் மலர் உங்களுக்கு நிச்சயம் பிடித்துப் போகும். வாங்கி படியுங்கள்.


தமிழ் மவுனப்பட காலம் (1917) தொடங்கி, 1931 முதல் 1960 வரையிலான நிகழ்வுகளை சுவைபட விளக்குகிறது “ பயணத்தில் பளிச்சிடும் திருப்பங்கள். எழுதியவர்: கோ.தனஞ்ஜெயன்.


தமிழ் சினிமாவின் தந்தை - கே.சுப்ரமணியம் பற்றிய நினைவலைகள் பற்றி இன்னொரு கட்டுரை. ஆசிரியர் ஆர்.சி.ஜெயந்தன். இன்னும் “பாகவத நடிகர்கள் கட்டுரையில் M.K. தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா, டி.ஆர்.மகாலிங்கம் என்று வரிசைப் படுத்தி சுவையான செய்திகளைத் தருகிறார் சுரேஷ் கண்ணன்.

பிரதீப் மாதவன், பா.தீனதயாளன்,பி.ஜி.எஸ் மணியன். மோகன் வி.ராமன்  ஆகியோரது கட்டுரைகளில் இன்னும் நிறைய பழைய சினிமா தகவல்கள். அன்றைய கனவுக் கன்னி டி.ஆர். ராஜகுமாரி, எம்.ஜி.ராம்சந்தர் (எம்ஜிஆர்), வி.சி.கணேசன் (சிவாஜி கணேசன்), ஜெமினி கணேசன், அஞ்சலிதேவி, பத்மினி, சாவித்திரி, எம்.ஆர்.ராதா, டி.எஸ்.பாலையா, என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம்  என்று நடிக நடிகையர் பட்டாள வரிசையை மேலும் காணலாம். அனைத்து கட்டுரைகளுக்கும் தேவையான புகைப்படங்கள் உதவி செய்தவர் ஞானம்.

“இப்போ நினைச்சாலும் ஆச்சரியமா இருக்கு என்று தனது பழைய நினைவுகளை சொல்லுகிறார் முதுபெரும் இயக்குநர் ஆண்டனி மித்ரதாஸ். ஜெயிலிலிருந்து வெளியே வந்த M.K.T பாகவதர்  நிலைமை பற்றி இவர் சொல்லும்போது உருக்கமாக உள்ளது

சினிமா என்றால் கண்ணதாசன் இல்லாமலா? “வண்ணமயமான கண்ணதாசன்என்ற கட்டுரையில் இடம் பெற்றுள்ளார்.

சுற்றுலா:
தன்னிகரற்ற பெருமைகள் என்ற பெயரில், யுனெஸ்கோ மரபுச் சின்னங்கள் (WORLD HERITAGE SITES) என்ற புகழ்பெற்ற மாமல்லபுரம், தஞ்சை பெரிய கோயில், கங்கைகொண்ட சோழபுரம், மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர், தாராசுரம், ஸ்ரீரங்கம், புனித ஜார்ஜ் கோட்டை, செட்டிநாடு, கழுகுமலை, பழவேற்காடு ஏரி ஆகிய சுற்றுலா இடங்கள் பற்றியும் மற்றும் நீலகிரி மலை ரயில், பட்டாடைகள் குறித்தும் உள்ள ஒரு பக்கக் குறிப்புகள் படங்களுடன் சிறப்பாக உள்ளன.

கொழும்பு டாக்டர் அ முத்துலிங்கம் தனது பயணங்கள் குறித்து (ஆதி பண்பு) பேசுகிறார். தனது டார்ஜிலிங் பயணம் எவ்வாறு இருந்தது என்று படங்களுடன் சொல்லுகிறார் பிருந்தா கணேசன். ஆந்திராவின் ராயலசீமா பகுதியில் சுற்றிய அனுபவம் மகுடேஸ்வரனுடையது.  சொர்க்கமே என்றாலும் ... ... அது சிங்கப்பூர் போலாகுமா என்று ஒரு கட்டுரை

இன்னும் பிற:


தாமிரபரணிக்கு அருகே உள்ள கல்லூர் என்ற தனது கிராமத்தில் பொங்கல் விழா நாட்களுக்கு முன்னும், பொங்கலன்றும் ஊர்மக்கள் எப்படியெல்லாம் மகிழ்வுடன் இருப்பார்கள் என்பது பற்றி பேசுகிறார் ஏ.வி.பெருமாள்.
ஓவியர்கள் கோபுலு, ஜெயராஜ், மணியம் செல்வன், மாருதி, ராமு, வீர சந்தானம் ஆகியோரைப் பற்றிய புள்ளி விவரங்கள் திரட்டப்பட்டு உள்ளன. தனது ஜல்லிக்கட்டு அனுபவங்கள் பற்றி பேசுகிறார்  புகைப்படக் கலைஞர் செந்தில் குமரன். இன்னும் பழைய எழுத்தாளர்கள் சிலரது கதைகளை மீள் வாசிப்பு செய்யலாம்.

தமிழ்நாட்டிலுள்ள நாட்டு நாய்கள் மிகவும் பேர் போனவை. குறிப்பாக ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை வகை வீட்டு வளர்ப்பு நாய்கள் உலகப் புகழ் பெற்றவை. இந்த இனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போவதாக ப.கோலப்பனின் ஒரு கட்டுரை.


படங்கள் நன்றி: தி இந்து.

முக்கிய குறிப்பு: இங்கு மேலே உள்ள அனைத்து படங்களும் தி இந்து பொங்கல் மலர் 2015 இலிருந்து கேனான் டிஜிட்டல் கேமரா (CANON POWERSHOT A800) வினால் எடுக்கப்பட்டவை.


                                      அனைவருக்கும் எனது உளங்கனிந்த
                                                பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
22 comments:

 1. அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!..

  ReplyDelete
 2. பயணத்தில் பளிச்சிடும் திருப்பங்களுக்காக வாங்க வேண்டும் என்றுள்ளேன்...

  இனிய தமிழர் தின நல்வாழ்த்துக்கள் ஐயா...

  ReplyDelete
 3. வாங்கிப் பார்க்க ஆவல்.

  இனிய பொங்கல் தின நல்வாழ்த்துகள் ஐயா.

  ReplyDelete
 4. வணக்கம். அனைத்தையும் பற்றி அருமையான படங்களுடன் மிக அழகாகச் சொல்லி அசத்தியுள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. மலரைக் கண்டேன். பகிர்வில் மிக சுருக்கமாக தாங்களி பகிர்ந்துள்ள விதம் பாராட்டத்தககது. புகைப்படங்கள் அருமை. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.ஆழ்ந்த வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததற்கு நன்றி.

  ReplyDelete
 7. கிடைக்குதா பார்க்கிறேன்.

  ReplyDelete
 8. பொங்கலை (பொங்கல் மலரை) சுடச்சுட பரிமாறியதற்கு (பகிர்ந்தமைக்கு) நன்றி. அருமையான படங்களை உங்கள் ஒளிப்படக் கருவி மூலம் மேலும் அழகூட்டியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. எனது உளங்கனிந்த
  பொங்கல் நல்வாழ்த்துக்கள்!


  ReplyDelete
 10. சிறப்பான பகிர்வு! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 11. நல்ல பகிர்வு ஐயா!

  தங்கள் குடும்பத்தாருக்கும், சுற்றத்தார் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நிய தமிழர்/உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 12. தங்களது பார்வையின் விமர்சனம் அருமை நண்பரே,,,
  இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
  எனது புதிய பதிவு மோதகமும், அதிரசமும்.

  ReplyDelete
 13. //கேனான் டிஜிட்டல் கேமரா (CANON POWERSHOT A800) வினால் எடுக்கப்பட்டவை.//you are Rich.

  ReplyDelete
 14. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 15. தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
  கைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
  தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
  பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்

  தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
  எனது மனம் நிறைந்த
  இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.fr

  ReplyDelete
 16. தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 17. தை பிறந்தாச்சு
  உலகெங்கும் தமிழ் வாழ
  உலகெங்கும் தமிழர் உலாவி வர
  வழி பிறந்தாச்சென வாழ்த்துகிறேன்!

  ReplyDelete
 18. பொங்கல் மலரைப்பற்றி சுவைபட எழுதியுள்ளீர்கள். இனிய நன்றி!

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 19. தி-இந்து பொங்கல் மலரை நாங்களும் படங்களுடன்
  பார்த்து மகிழ்ந்தோம் நன்றி ஐயா இனியபொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 20. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஐயா. தம 3

  ReplyDelete
 21. விகடன் அளவிற்கு இவர்கள் இங்குள்ள வாசகர்களுக்கேற்ற மாதிரி எதிலும் முழுமையாக அக்கறை காட்டுவதில்லை என்பது என் கருத்து.

  இனிய வாழ்த்துகள்.

  ReplyDelete
 22. இந்த பதிவினில், கருத்துரையும் பொங்கல் (2015) வாழ்த்துக்களும் தந்த,

  சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ,
  சகோதரர் திண்டுக்கல் தனபாலன் ,
  சகோதரர் வெங்கட் நாகராஜ்,
  அய்யா V.G.K (வை.கோபாலகிருஷ்ணன்),
  முனைவர் B.ஜம்புலிங்கம்,
  அய்யா G.M B,
  முனைவர் பழனி. கந்தசாமி,
  அய்யா V.N.S (வே.நடனசபாபதி),
  அன்பு சூரி தாத்தா,
  சகோதரர் ‘தளிர்’ சுரேஷ்,
  சகோதரர் தில்லைக்கது V.துளசிதரன்,
  நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி,
  Anonymous (1) அவர்கள்,
  சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார்,
  சகோதரர் யாதவன் நம்பி (புதுவை வேலு),
  அய்யா ஆறுமுகம் அய்யாசாமி,
  கவிஞர் யாழ் பாவாணன் காசிராஜலிங்கம்,
  சகோதரி மனோ சாமிநாதன்,
  சகோதரி டீச்சர் K.மாலதி,
  சகோதரி R.உமையாள் காயத்ரி,
  சகோதரர் ஜோதிஜி திருப்பூர்,

  ஆகிய அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும். (வெளியூர் பயணம் மற்றும் அலைச்சல் காரணமாக, ஒவ்வொருவருக்கும் தனித்தனியே மறுமொழி கூற இயலாமல் போய்விட்டது. மன்னிக்கவும்)

  ReplyDelete