Tuesday, 21 October 2014

தீபாவளி மலர்கள் – 2014


உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது பள்ளி நூலகம் சென்றால் அந்த வருட தீபாவளி மலர்களை கண்ணில் காட்ட மாட்டார்கள். பள்ளி அலுவலக ஊழியர்கள் அல்லது ஆசிரியர்கள் எடுத்து போய் இருப்பார்கள். எனவே இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முந்திய கல்கி, அமுதசுரபி தீபாவ்ளி மலர்களையே நூலகர் தருவார். அதிலும் அடிக்கடி கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். வீட்டிற்கெல்லாம் எடுத்துச் செல்ல முடியாது. பள்ளி நூலகத்திலேயே பார்த்து விட்டு கொடுத்து விட வேண்டும். அப்புறம் கல்லூரி மாணவனாக இருந்த போது ஒன்றிரண்டு தீபாவளி மலர்களை பழைய புத்தகக் கடைகளில் பேரம் பேசி மலிவாக வாங்கிப் படித்ததுதான். ஆனால் இப்போதோ வேலையிலிருந்து ஓய்வு பெற்றவுடன் நிறைய தீபாவளி மலர்கள் வீட்டிற்கு வந்துவிட்டன. ஆனாலும் அப்போது படித்த, அந்த நாளைய தீபாவளி மலர்கள் போன்று இல்லை என்பது ஒரு குறை. ஒருவேளை இது வயது ஆக ஆக மனதில் ஏற்படும் சலிப்பாகவும் இருக்கலாம்.
 
கல்கி:


அன்று முதல் இன்று வரை கல்கி தனது பழமை குன்றாத தீபாவளி மலரை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு சிறுவர்களுக்கென்று “கோகுலம் பக்கங்கள்மற்றும் மகளிர்களுக்காக “ மங்கையர்மலர் பக்கங்கள் “ இணைத்துள்ளனர். (கல்கி வெளியிட்ட அத்தனை தீபாவளி மலர்களையும் ஒன்று விடாமல் யாரேனும் வைத்து இருக்கிறார்களா? என்று தெரியவில்லை)

ஆனந்த விகடன்:


இந்த ஆண்டு விகடன் தீபாவளி மலர் சற்று முன்னதாகவே வந்து விட்டது. வழ்க்கம் போல பழமையும் புதுமையும் கலந்து வந்துள்ளது. முன்பெல்லாம் தீபாவளி மலர் அட்டைப்படமாக பிரபல ஓவியர்களின் நகைச்சுவைப் படங்கள் இருக்கும். இப்போது சில வருடங்களாக சினிமா நட்சத்திரங்கள்தான்.

அட்டையிலும் உள்ளேயும் நடிகர் சிவகார்த்திகேயன் ஜொலிக்கிறார். இன்னொரு பக்கம், மறைந்த டைரக்டர் ஸ்ரீதர் அவர்களது “காதலிக்க நேரமில்லைபடம் பற்றிய சுவையான நினைவுகள். “ ஆண்களின் நலனுக்காக உருவாக்கப் பட்டதே குடும்பம்என்கிறார் எழுத்தாளர் சு. தமிழ்ச் செல்வி. இன்னும் கம்போடியாவில் பல்லவ மன்னர்கள் எடுத்த சிலைகள், தஞ்சை சரஸ்வதி மகால் என்று காணலாம்.

தி இந்து :


தமிழில் இந்து வெளிவரத் தொடங்கியவுடன் வெளியிட்ட முதல் தீபாவளி மலரை, சென்ற ஆண்டு வாங்க இயலாமல் போய்விட்டது. இந்த ஆண்டு வந்த இரண்டாவது ஆண்டு தீபாவளி மலர் இது.. புதுமையாக பிரபலமானவர்கள் பற்றி ஒரு பக்கக் கட்டுரைகள் வெளியிட்டு இருக்கிறார்கள். கோட்டோவியப் படங்களுடன். ஓவியர் மனோகர் தேவதாஸின் மதுரை நினைவுகள் பார்த்தேன். ஓவியர் சில்பி நினைவுக்கு வந்தார்.

சக்தி:


தெய்வீகக் கட்டுரைகள், கதைகள் இவற்றிற்காகவே இதனை வாங்குவது வழக்கம். இடையில் சில ஆண்டுகள் வாங்க இயலவில்லை. அண்மையில் மறைந்த தொழிலதிபர் நா.மகாலிங்கம் அவர்கள் இதன் ஆசிரியர். இவர் கொடுத்த ஆதரவில் சக்தி தீபாவளி மலர்கள் சிறப்பாக அமைந்து இருந்தன.

விருப்ப ஓய்வு பெற்றவுடன் ஏதேனும் ஒரு புத்தகம் மட்டும் வாங்குவேன். இந்த ஆண்டு பேப்பர் போடும் தம்பிக்காக (பேப்பர் பையன்?) அதிகப் படியாக தீபாவளி மலர்களை வாங்கி விட்டேன் போலிருக்கிறது. பதிவில் எழுதுவதற்காக ஒரு பார்வை பார்த்தாகி விட்டது. எல்லா மலர்களிலும் வழக்கம்போல வண்ண ஓவியங்கள், சிறு கதைகள், பேட்டிகள் என்று போகின்றன. கவிதைகள் என்றாலே பொங்கல் மலருக்குத்தான் என்று முடிவு செய்து விட்டார்கள் போலிருக்கிறது. வாங்கிய அனைத்து தீபாவளி மலர்களையும் முழுமையாக இனிமேல்தான் நேரம் கிடைக்கும் போது படிக்க வேண்டும்!            

  அனைவருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

 




28 comments:

  1. வணக்கம் !

    சிறப்பான பகிர்வு !தங்களுக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ஐயா !

    ReplyDelete
  2. //ஆனாலும் அப்போது படித்த, அந்த நாளைய தீபாவளி மலர்கள் போன்று இல்லை என்பது ஒரு குறை..//

    நீங்கள் சொல்வது சரியே. இப்போது வரும் தீபாவளி மலர்கள் பிரபல எழுத்தாளர்களின் கதைகளை வெளியிடுவது இல்லை. அதற்கு பதில் திரை உலக நட்சத்திரங்கள் பற்றிய செய்திகளைத் தான் வெளியிடுகிறார்கள்.

    அப்போதெல்லாம் தீபாவளி மலர்கள்ரூபாய் ஐந்துக்குள் இருக்கும். Value for Money என்பது போல் கொடுத்த பணத்திற்கு குறைவில்லாத சுவையான கதைகள் கட்டுரைகள் படங்கள் இருக்கும். ஆனால் இன்றோ?

    தீபாவளி மலர்கள் பற்றிய பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  3. அன்புடையீர்..
    வாழ்க நலம்..
    தங்களுக்கும் தங்கள் அன்பின் இனிய குடும்பத்தினருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
  4. தீபாவளி மலர்கள்.. சிறப்பான ஓவியங்களுடன் படிப்பது ஒரு தனி சுகம். தீபாவளி நல் வாழ்த்துகள் !

    ReplyDelete
  5. ஆம்! இப்போதெல்லாம் தீபாவளி மலர்கள் சுரத்து குறைவாகத்தான் இருக்கின்றது! நல்ல பகிர்வு!

    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  6. உங்கள் தீபாவளி மலர் பற்றிய பதிவு எனக்கும் எனது சிறு வயது நினைவுகளை கொண்டுவந்தது. அப்போது போல இப்போது வரும் மலர்கள் அத்தனை சுவாரஸ்யம் இல்லை. அதனால் வாங்க வேண்டும் என்ற உந்துதலும் ஏற்படுவதில்லை.
    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!

    ReplyDelete
  7. அன்புள்ள ஐயா, வணக்கம்.

    தங்களுக்கும் தங்கள் இல்லத்தார்கள் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    >>>>>

    ReplyDelete
  8. தீபாவளி மலர்களை அலங்கரித்துக் காட்டியுள்ள மலர் மாலை அணிவகுப்பு அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.

    >>>>>

    ReplyDelete
  9. //ஆனால் இப்போதோ வேலையிலிருந்து ஓய்வு பெற்றவுடன் நிறைய தீபாவளி மலர்கள் வீட்டிற்கு வந்துவிட்டன. ஆனாலும் அப்போது படித்த, அந்த நாளைய தீபாவளி மலர்கள் போன்று இல்லை என்பது ஒரு குறை. ஒருவேளை இது வயது ஆக ஆக மனதில் ஏற்படும் சலிப்பாகவும் இருக்கலாம்.//

    மலர்களில் ஏற்பட்டுள்ள தரக்குறைவு + நம்மிடமே வயது முதிர்ச்சிகளால் ஏற்பட்டுள்ள மஹாஅலுப்பு என்ற குறைகள் அனைத்துமே உண்மைதான். :)

    அன்புடன் VGK

    ReplyDelete
  10. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் எனது இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  11. ஒரு காலத்தில் தினமலர், மாலைமலர், தினகரன் தீபாவளி மலர்கள் போட்டி போட்டு வாங்குவேன்! அதில் வரும் சுவாரஸ்ய கதை, கட்டுரை கவிதைகளுக்காக! போன வருடம் விகடன் தீபாவளி மலர், இந்து தீபாவளிமலர் வாங்கினேன்! இந்தவருடம் எதுவும் வாங்கவில்லை! இனிதான் வாங்கவேண்டும். என்ன இருந்தாலும் பழைய தீபாவளி மலர்களின் சுவையே தனிதான்! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. உளங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  13. அன்புள்ள அய்யா,

    பழைய நினைவுகளில்... தீபாவளி மலர்கள்...அந்த இனிமை ... இலவசங்கள்... தேடித் தேடிச் சேகரிப்பது...படிப்பது...இப்பொழுதெல்லாம் இல்லை....படிக்க எங்க நேரம் என்றாகி விட்டதே!

    பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  14. வணக்கம்
    ஐயா

    இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  15. உங்கள் பதிவைப் படித்தபின்னர் நானும் கல்கி தீபாவளி மலர் வாங்கி விட்டேன். எந்த மலரை வாங்குவது என்கிற குழப்பதிலிருந்தேன். உங்கள் பதிவு எனக்கு உதவியது.
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. தீபாவளி மலர்கள் பற்றிய ஒரு கண்ணோட்டம் சுவையாக இருக்கின்றது, ஐயா!
    தீபாவளி நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  17. மாறும் கால ஓட்டம் உங்களின் பதிவோட்டதில் உணரமுடிந்தது ...
    அருமையான பதிவு...
    செய்தித்தாள் சிறுவன் வாழ்க
    நிறய பதிவுகள் கிடைக்கும் எங்களுக்கு

    அப்புறம் ..
    தங்களுக்கும் குடும்பத்தினர்க்கும் எனது இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்

    அறிவியல் செய்தி ஒன்று !

    ReplyDelete
  18. தீபாவளி மலருக்கு முந்திக் கொண்டு கடைகளில் முயற்சித்தது நினைவுக்கு வருகிறது. தீபாவளி வாழ்த்துக்கள். நன்றி

    ReplyDelete
  19. சிறந்த பகிர்வு
    தங்களுக்கும்
    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
    http://yppubs.blogspot.com/2014/10/blog-post_21.html

    ReplyDelete
  20. தில்லி தமிழ்ச் சங்கத்தில் பல தீபாவளி மலர்கள் வைத்திருக்கிறார்கள் - ஆண்டு வாரியாக.......

    தீபாவளி மலர்கள் படித்து/பார்த்து நாளாயிற்று - தில்லியில் கிடைப்பதில்லை....

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  21. அந்த கால கல்கி தீபாவளி மலர்களில் 'பளபள 'பக்கங்களைப் பார்த்து பிரமித்து இருக்கிறேன் !இனிய தீபாவளி வாழ்த்துகள்!
    த ம 8

    ReplyDelete
  22. தீபாவளி மலரை உடனே படிப்பது என்பது த்ரில்லிங் ஆக இருக்கும் அந்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன.

    ReplyDelete
  23. மலர்கள் பற்றிய விபரமும் விளக்கமும் கண்டேன்! நன்று!

    ReplyDelete
  24. மறுமொழி >

    வலைப்பதிவர் சந்திப்பை முன்னிட்டு, ஒரே சமயத்தில் இரண்டு பதிவுகளை வெளியிடும்படி ஆகிவிட்டது. எனவே இந்த பதிவினில் கருத்துரை தந்த ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக
    மறுமொழிகள் தர இயலாமல் போய்விட்டது.! மன்னிக்கவும்!

    எனவே கருத்துரைகளும், தீபாவளி வாழ்த்துக்களும் தந்த சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் நன்றி!

    ReplyDelete
  25. தீபாவளி மலர் யார் முதலில் படிப்பது என்று வீட்டில் முன்பு பெரிய போட்டி இருக்கும்.
    பழைய நினைவுகளை மலர வைத்த தீபாவளி மலர்.

    ReplyDelete
  26. தமிழ் இந்து தீபாவளி மலருக்கு சொல்லி வைத்தேன். இன்னமும் கிடைக்கவில்லை. இந்த வார மதுரை வாசகர் திருவிழாவில் வாங்கி அதை படித்தபின் பதிவிட வேண்டும். நாலு தீபாவளி மலர்களை வாசித்தது குறித்த தங்கள் பதிவு அருமை.

    ReplyDelete