Saturday, 28 June 2014

துய்ப்பேம் எனினே தப்புன பலவே              படம் (மேலே) மாயாபஜார் படத்தில் எஸ்.வி.ரங்கராவ்

நாம் எப்போதும் சலிக்காமல் செய்யும் வேலை சாப்பிடுவதுதான். அதிலும் எதைச் சாப்பிடுவது என்ற விஷயத்தில் மட்டும் சலிப்பு வரும். பல வீட்டில் ஒலிக்கும் குரல்  இன்றைக்கும் இட்லிதானா? தோசைதானா? என்பதுதான். மற்றபடி மூன்று வேளையும் சாப்பிடும் தொழில் நடந்து கொண்டே இருக்கிறது. ஆனாலும் ஒருவர் ஒருவேளையில் எவ்வளவு சாப்பிட முடியும்? எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், அவன் நாட்டுக்கே ராஜாவாக அல்லது மந்திரியாகவே இருந்தாலும், பணக்காரனாக இருந்தாலும் அல்ல்து ஏழையாக இருந்தாலும் அல்லது பிச்சைக்காரனாகவே இருந்தாலும் வயிறு நிரம்பச் சாப்பிடலாம். அதற்கு மேல் சாப்பிட முடியாது. உணவின் நிறம்,மணம்,ருசி என்பது அவரவர் வசதிக்கு ஏற்ப தொண்டை வரைக்கும்தான்.  அப்புறம் ஒன்றும் இல்லை. இதற்குத்தான் இவ்வளவு அடிதடி சமாச்சாரம்.

இதே போலத்தான் ஆடை அணியும் விஷயமும். யாராக இருந்தாலும் அணிவது இரண்டு ஆடைகள்தாம். ஒன்று மேலாடை. இன்னொன்று கீழாடை. ஆடைகளின் வடிவ அமைப்பினில், தரத்தினில், விலையினில் மட்டும்தான் வேறுபாடு. விழாக் காலங்களில் எல்லா தரப்பு மக்களும் ஆடை எடுத்து மகிழ்கிறார்கள். ஆடை அணிவதில் மகிழ்ச்சி என்பது எல்லோருக்கும் ஒன்றுதான்.

மற்ற விஷயங்களை ஒப்பிட்டுப் பார்த்தாலும் இதே போலத்தான் உள்ளது. மாட மாளிகையில் இருப்பவன் பஞ்சணையில் அடையும் சுகமும், குடிசையில் இருப்பவன் பாயினில் அடையும் சுகமும் எல்லாம் ஒன்றுதான். நுகர்வு (CONSUMPTION ) என்ற அடிப்படியில் நுகர்வோர் (CONSUMER) பயன்பாடு என்பது ஒரே நிலைதான்.

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான்
இல்லை ஊருக்காகக் கொடுத்தான்
மண் குடிசை வாசலென்றால்
தென்றல் வர வெறுத்திடுமா
மாலைநிலா ஏழையென்றால்
வெளிச்சம் தர மறுத்திடுமா
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று
ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை
          ( - பாடல்: வாலி படம்: படகோட்டி ( 1964 )

ஒரு நோய் வந்தாலும் அது இருப்பவனுக்கு ஒரு மாதிரியாக அல்லது இல்லாதவனுக்கு இன்னொரு விதமாக வருவதில்லை. உதாரணத்திற்கு தலைவலி! வசதி படைத்தவனுக்கு ஒரு மாதிரியாகவும் சாதாரணமானவனுக்கு ஒரு மாதிரியாகவும் தலை வலிப்பதில்லை. இயற்கையின் அளவுகோல் ஒரே வலிதான். அவரவர் எடுக்கும் மருத்துவம் மட்டுமே அவரவர் வசதிக்கு ஏற்ப மாறுபடுகிறது.

ஒருமுறை சேர மன்னன் அரசபைக்குச் சென்றிருந்த கம்பர், அங்கே நடந்த உரையாடலில் அவனிடம் “ உலகத்தில் கவலையே இல்லாத மனிதர் எவருமில்லை. விஷயம் பெரிதாயினும்,சிறிதாயினும், அதனால் விளையும் காரியமாகிய துக்கமோ அவரவர் தன்மையை நோக்குமிடத்தில் ஒரே தன்மைதான்என்று சொல்லி ஒரு பாடலையும் பாடினார்.

பாலுக்குச் சர்க்கரை இல்லை என்பார்க்கும்
பருக்கையற்ற
கூழுக்குப் போட உப்பில்லை என்பார்க்கும் முள்
குத்தித் தைத்த
காலுக்குத் தோல் செருப்பு இல்லை என்பார்க்கும்
கனக தண்டி
மேலுக்குப் பஞ்சணை இல்லை என்பார்க்கும்
விசனம் ஒன்றே.
                   (  தனிப்பாடல் - கம்பர் பாடியது )

இப்பாடலில் கவலை என்று வரும்போது எல்லோருடைய மனநிலையும் ஒன்றுதான் என்கிறார் கம்பர்.. ஒருவனுக்கு பாலுக்கு சர்க்கரை  இல்லையே என்று கவலை. இன்னொருவனுக்கு கூழுக்கு உப்பு இல்லையே என்று கவலை. ஆகக்கூடி கவலை என்பது இல்லை என்ற ஒன்றுதான்.

எனவே கோடி கோடியாக சேர்த்து வைத்து இருந்தாலும் அவன் அனுபவிப்பது குறிப்பிட்ட அளவுதான். இதனைத்தான் நாட்டுப்புற பழமொழி ஒன்றில் “ விளக்கெண்ணையை உடம்பு முழுக்க பூசிக் கொண்டு புரண்டாலும் ஒட்டுவதுதான் ஒட்டும் “  என்றார்கள். இரண்டு அரசியல்வாதிகள். பெயர் வேண்டாம். கோடிக் கணக்கில் சொத்து. ஊரெங்கும் அடுத்தவர் பெயரில் வாங்கப்பட்ட இடங்கள். அத்தனை இருந்தும் அவர்களால் ஆசையாக எதனையும் சாப்பிட முடியாது. வயிற்றில் தீராத புண். இறுதிக்காலம் வரை இப்படியே இருந்தார்கள். எத்தனை இடங்களை வளைத்துப் போட்டாலும் அவன் தினமும் படுத்துக் கிடப்பதும் இறந்தபின் படுக்கப் போவதும் ஆறடி நிலம்தான். அவன் எரிக்கப்பட்டால் அதுவும் இல்லை. அவன் சேர்த்த அனைத்தும் உறவினர்களுக்கோ அல்லது பினாமிகளுக்கோ போய் விடுகின்றது. அப்புறம் யாரும் அவனை நினைப்பதில்லை.


ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு
பேரினை நீக்கி பிணம என்று பெயரிட்டு
சூரையங்காட்டிடை கொண்டு பொய் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பு  ஒழிந்தார்களே
                                 ---   திருமூலர் (திருமந்திரம்)

இவை எல்லாவற்றையும் உணர்ந்த சங்ககாலப் புலவர் நக்கீரனார் என்பவர் ஒரு பாடலை பாடி வைத்து இருக்கிறார். அதனால் செல்வத்தின் பயன் என்பது ஈதல். நாம் மட்டுமே அனுபவிப்போம் என்று கட்டி காத்தாலும் நம்மிடமே இருந்தும் நாம் அனுபவிக்காமலேயே நாம் இழப்பவை அதிகம் “ என்கிறார்.

(அதற்காக எல்லாவற்றையும் யாரோ ஒருவனிடம் கொடுத்துவிட்டு போய் விட முடியுமா? என்று கேட்காதீர்கள். தர்மம் செய்வதிலும் சில தர்மங்கள் இருக்கின்றன.)

படம் (மேலே) திருவிளையாடல் படத்தில் சிவனாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் நக்கீரனாக ஏ.பி.நாகராஜன்


தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்,
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,
உண்பது நாழி ; உடுப்பவை இரண்டே;
பிறவும் எல்லாம் ஓரொக் குமே;
அதனால், செல்வத்துப் பயனே ஈதல்;
துய்ப்பேம் எனினே, தப்புந பலவே.          -  புறநானூறு 189

( பாடியவர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் )


இதன் விளக்கம்:

இந்த உலகம் முழுவதையும் ஒரு குடையின்கீழ் ஆளும் மன்னவனும், இரவு பகல் பாராது தூக்கமின்றி கடுமையான விலங்குகளை வேட்டையாடும் ஒருவனும் உண்பது நாழிச் சோறு; உடுப்பது மேலாடை கீழாடை என்ற இரண்டே ஆகும். மற்றவைகளும் இதே போலத்தான். நாமே எல்லாவற்றையும் அனுபவிப்போம் என்றாலும் நமக்கு அனுபவிக்க கிடைக்காமல் போய் விடுவதும் உண்டு. எனவே செல்வத்தின் பயன் என்பது ஈதல் ஆகும்.

(நாழி என்பது (ஒரு படி) அந்தக் கால அளவு. குப்பனுக்கு தேவை சட்டிச் சோறு என்று ஒரு பழமொழியும் உண்டு. இப்போது ஒரு வேளைச் சாப்பாடு (FULL MEALS) என்கிறோம்)


PICTURES THANKS TO GOOGLE


52 comments:

 1. கவிதைகள் நயம்
  கட்டுரை அருமையான வாசித்தல் அனுபவம்
  ஜோரான பதிவு
  துய்ப்போம் இனி ? நல்ல எண்ணங்களை விதைத்திருக்கிறது..
  ஏன் ஓட்டுப் பட்டை வேலை செய்ய வில்லை ?

  ReplyDelete
 2. தமிழ் படித்தவரல்லவா. அதனால் தான் ‘செல்வத்தின் பயனே ஈதல்.’ என்பதை விளக்க அழகான பாடல்களை மேற்கோள் காட்டி ஒரு தமிழாசான் போல் விளக்கியுள்ளீர்கள்.

  முதல் பத்தியில் அவ்வையாரின் இந்த பாடலையும் சேர்த்திருக்கலாம்.

  ‘’ஒரு நாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
  இரு நாளுக்கு ஏலென்றாய் ஏலாய்- ஒருநாளும்
  என்நோ(வு) அறியாய் இடும்பைகூர் என்வயிறே
  உன்னோடு வாழ்தல் அரிது’’

  அருமையான பதிவு, வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. வணக்கம்
  ஐயா.

  பாடலுடன் நல்ல கருத்தையும் விதைத்துள்ளீர்கள் நல்ல சிந்தனைமிக்க பதிவு.. அதிலும் புறநானூற்றுப்பாடல் மிக அற்புதம்... நல்ல சிந்தனையோடு பணிப்போம்..பகிர்வுக்கு நன்றி ஐயா
  த.ம 2வது வாக்கு
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 4. //மண் குடிசை வாசலென்றால் .....
  தென்றல் வர வெறுத்திடுமா//

  ;)))))

  >>>>>

  ReplyDelete
 5. //செல்வத்தின் பயன் என்பது ஈதல். நாம் மட்டுமே அனுபவிப்போம் என்று கட்டி காத்தாலும் நம்மிடமே இருந்தும் நாம் அனுபவிக்காமலேயே நாம் இழப்பவை அதிகம் “ //

  ;)))))

  //அதற்காக எல்லாவற்றையும் யாரோ ஒருவனிடம் கொடுத்துவிட்டு போய் விட முடியுமா? //

  அதானே

  //என்று கேட்காதீர்கள். தர்மம் செய்வதிலும் சில தர்மங்கள் இருக்கின்றன.//

  அப்படியா, நல்லது, நல்லது.

  >>>>>

  ReplyDelete
 6. சினிமாக்காட்சிகள் இரண்டும் ஜோர் ஜோர் !

  நாழியும் குருணியும் அதைவிட அற்புதம். எப்படித்தான் இவற்றைப்பிடித்தீர்களோ ! ;))

  எல்லாம் அருமையாகச் சொல்லி சிந்திக்க வைத்துவிட்டீர்கள். பாராட்டுக்கள், ஐயா.

  அன்புடன் VGK

  ReplyDelete
 7. பதிவும் சிந்தனையும் ,படங்களும் ரசிக்கவைத்தன.. பாராட்டுக்கள்.!

  ReplyDelete
 8. செல்வத்தின் பயன் மட்டுமல்ல, ஈதல் இசைபட வாழ்வதே நாம் உயிர் வாழ்வதற்கான ஊதியம் என்றும் நம் வள்ளுவரும் சொல்லியிருக்கிறாரே. இதுபோன்று நல்ல தமிழை அறிமுகப்படுத்துவதற்கு மிக்க நன்றி

  ReplyDelete
 9. இன்றைய பதிவு - நல்லதோர் சிந்தனையின் விளைவு!..

  நாற்பது ஆண்டுகளுக்கு முன் வரை எங்களுக்கு அரிசி வியாபாரம் தான்..

  பெரிய மச்சு வீடு.. வீட்டின் கொல்லையில் தினமும் இரண்டு மூட்டை நெல்லை ஊற வைத்து அவித்து காயவைத்து - அருகிலேயே இருந்து அரைத்து ஆட்களை வைத்து புடைத்து, சலித்து - கல் மண் தூசி நீக்கி -

  தள்ளாத வயதில் உடல் சலித்தாலும் மனம் சலிக்காமல் - அறப்பணியாக என் அப்பாயி செய்து வந்தார்கள்..

  இதே - நாழி - மரக்கால் இவற்றால் - அரிசி அளந்து போடும்போது இரண்டு கைகளாலும் அரிசியை அள்ளி கொசுறு என்று கூடையில் போடுவார்கள்.. அப்படி அவர்கள் செய்த புண்ணியம் - இன்று வரை எங்களைக் காத்து வருகின்றது.

  செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல் - என்றார் அதிவீரராமபாண்டியர்.
  வறுமையிலும் செம்மை என்பது சொல்வழக்கு. இன்று அதையெல்லாம் - காண முடிகின்றதா!..

  ஒருகாலத்தில் கேட்டுப் பெறுதற்கும், கொடுத்ததை வாங்குதற்கும் மனம் கூசியது மனிதனுக்கு!..

  இன்றோ - இலவசம் கேட்டு அடிதடி.. தன்னைத் தாழ்த்திக் கொள்வதற்கு தெரு அடைத்துப் போராட்டம்..

  ஆகும் துணிதான் வெள்ளாவிக்குப் போகின்றது. ஆகாதது - போவதோ மண்மேட்டுக்கு!..

  ஐயா, தங்களது பதிவு கண்டு கருத்துரைக்க முற்பட்டால் - அதுவே - தனிப்பதிவாகும் போலிருக்கின்றது... மிக்க மகிழ்ச்சி..

  வளரட்டும் தங்களின் தமிழ்ப் பணி!..
  அன்னை அகிலாண்டேஸ்வரி அருகிருப்பாளாக!..

  ReplyDelete
 10. கோடி கோடியாக சேர்த்து வைத்து இருந்தாலும் அவன் அனுபவிப்பது குறிப்பிட்ட அளவுதான்.//

  உண்மை.
  பகிர்வு அருமை.

  ReplyDelete
 11. விருப்பங்களில் உணவை மட்டும்தான் போதும் என்று சொல்ல வைத்தான் இறைவன். மற்றவை அனைத்துமே எத்தனை இருந்தாலும் போறாது என்றுதான் சொல்கிறது மனது.

  ReplyDelete
 12. மறுமொழி > Mathu S said...

  // கவிதைகள் நயம் கட்டுரை அருமையான வாசித்தல் அனுபவம்
  ஜோரான பதிவு துய்ப்போம் இனி ? நல்ல எண்ணங்களை விதைத்திருக்கிறது.. //

  ஆசிரியர் எஸ்.மது அவர்களின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!

  // ஏன் ஓட்டுப் பட்டை வேலை செய்ய வில்லை ? //

  சமீபகாலமாக எனது கணினியிலும், டாஸ்போர்டிலும் பிரச்சினைகள். மெதுவாக (SLOW) இயங்குகிறது. தமிழ்மணத்தில் நான் இணைத்துக் கொண்டு இருக்கும்போது தாமதம் ஆனதால், நீங்கள் வாக்களிக்கும்போது ஓட்டுப்பட்டை வேலை செய்யவில்லை என்று நினைக்கிறேன். தங்கள் ஆர்வத்திற்கு நன்றி!

  ReplyDelete
 13. மறுமொழி > வே.நடனசபாபதி said...

  அய்யா வே.நடனசபாபதி அவர்களின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!

  // முதல் பத்தியில் அவ்வையாரின் இந்த பாடலையும் சேர்த்திருக்கலாம்.

  ‘’ஒரு நாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
  இரு நாளுக்கு ஏலென்றாய் ஏலாய்- ஒருநாளும்
  என்நோ(வு) அறியாய் இடும்பைகூர் என்வயிறே
  உன்னோடு வாழ்தல் அரிது’’

  அருமையான பதிவு, வாழ்த்துக்கள்! //

  அவ்வையார் பாடலை நினைவூட்டியதற்கு நன்றி. பிறிதொரு சந்தர்ப்பத்தில் நீங்கள் குறிப்பிட்ட இந்த பாடலை எடுத்தாளுவேன் அய்யா! நன்றி!


  ReplyDelete
 14. மறுமொழி > ரூபன் said...

  கவிஞர் வணக்கம் அவர்களுக்கு வணக்கம்! பாராட்டிற்கும் த.ம.2 இற்கும் நன்றி!

  ReplyDelete
 15. இந்த உலகம் முழுவதையும் ஒரு குடையின்கீழ் ஆளும் மன்னவனும், இரவு பகல் பாராது தூக்கமின்றி கடுமையான விலங்குகளை வேட்டையாடும் ஒருவனும் உண்பது நாழிச் சோறு; உடுப்பது மேலாடை கீழாடை என்ற இரண்டே ஆகும்.

  மனிதனின் வாழ்க்கை இது தான்

  சிந்திக்க வைக்கும் கட்டுரை சார் நன்றி

  ReplyDelete
 16. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... (1, 2, 3 )

  அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்.! தங்கள் அன்பான கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!

  ReplyDelete
 17. மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...

  சகோதரிக்கு நன்றி!

  ReplyDelete
 18. மறுமொழி >Packirisamy N said...

  வள்ளுவரின் குறளை மேற்கோளாக கருத்துரை தந்த சகோதரர் என்.பக்கிரிசாமி அவர்களுக்கு நன்றி!

  ReplyDelete
 19. மறுமொழி > துரை செல்வராஜூ said...

  சகோதரர் தஞ்சையம்பதி துரை.செல்வராஜு அவர்களின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!

  // பெரிய மச்சு வீடு.. வீட்டின் கொல்லையில் தினமும் இரண்டு மூட்டை நெல்லை ஊற வைத்து அவித்து காயவைத்து - அருகிலேயே இருந்து அரைத்து ஆட்களை வைத்து புடைத்து, சலித்து - கல் மண் தூசி நீக்கி - தள்ளாத வயதில் உடல் சலித்தாலும் மனம் சலிக்காமல் - அறப்பணியாக என் அப்பாயி செய்து வந்தார்கள்.. //

  ஆமாம் அய்யா அன்று எல்லாவற்றிலும் ஒரு தர்மம், நியாயம் இருந்தது.

  // இதே - நாழி - மரக்கால் இவற்றால் - அரிசி அளந்து போடும்போது இரண்டு கைகளாலும் அரிசியை அள்ளி கொசுறு என்று கூடையில் போடுவார்கள்.. அப்படி அவர்கள் செய்த புண்ணியம் - இன்று வரை எங்களைக் காத்து வருகின்றது. //

  நாம் இன்றைக்கு நன்றாக இருப்பதற்கு முன்னோர் செய்த புண்ணியம்தான் அய்யா!

  இப்போதெல்லாம் கொசுறு என்ற சொல்லையே மறந்து விட்டார்கள் போலிருக்கிறது. கொசுறு வியாபாரமே இல்லை.

  // ஐயா, தங்களது பதிவு கண்டு கருத்துரைக்க முற்பட்டால் - அதுவே - தனிப்பதிவாகும் போலிருக்கின்றது... மிக்க மகிழ்ச்சி.. //

  நன்றி அய்யா! மிக்க மகிழ்ச்சி! உங்களைப் போல நான் இலக்கியப் பாடல்களை அதிகமாக வலையினில் பதிந்துவிடவில்லை.

  // வளரட்டும் தங்களின் தமிழ்ப் பணி!..
  அன்னை அகிலாண்டேஸ்வரி அருகிருப்பாளாக!.. //
  தங்கள் ஆசீர்வாதம் பலிக்கட்டும்!

  ReplyDelete
 20. ஈதலின் அருமை விளக்க இதைச் சொல்லலாமா.?போதும் என்று திருப்தியோடு சொல்ல வைப்பது பசித்திருக்கும் போது உணவு படைத்தல்தான். வேறெந்த ஈதலாலும் திருப்தி செய்ய இயலாது.

  ReplyDelete
 21. மறுமொழி > கோமதி அரசு said...

  சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 22. மறுமொழி > டிபிஆர்.ஜோசப் said...

  அய்யா டி.பி.ஆர்.ஜோசப் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

  // விருப்பங்களில் உணவை மட்டும்தான் போதும் என்று சொல்ல வைத்தான் இறைவன். மற்றவை அனைத்துமே எத்தனை இருந்தாலும் போறாது என்றுதான் சொல்கிறது மனது. //

  அதனால்தான் தானத்தில் சிறந்தது அன்னதானம் என்று சொன்னார்கள் போலிருக்கிறது. வசதி படைத்தவர்கள் ஏழை மாணவ / மாணவியை படிக்க வைக்க பொறுப்பினை ஏற்றுக் கொள்ளலாம்.

  ReplyDelete
 23. #தமிழ்மணத்தில் நான் இணைத்துக் கொண்டு இருக்கும்போது தாமதம் ஆனதால், நீங்கள் வாக்களிக்கும்போது ஓட்டுப்பட்டை வேலை செய்யவில்லை என்று நினைக்கிறேன்#
  உங்கள் பதிவில் எனக்கு எந்த ஐயமும் இல்லை அருமையான சிந்தனை !
  மேலே சொல்லி இருக்கும் கருத்தால் ஒரு ஐயம் ..சில நாட்களுக்கு முன் என்தளத்தில் தாங்கள் 'நம் பதிவை வெளியிட்டதும்தமிழ் மணம் தானாக இணைத்துக் கொள்ளும் 'என்று கூறி இருந்தீர்கள் ,உங்களுக்கும் இணைக்கும் பணி இருக்கத்தானே செய்கிறது .விளக்குவீர்களா ?
  த ம +!

  ReplyDelete
 24. மறுமொழி > G.M Balasubramaniam said...

  அய்யா G.M.B அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 25. மிகவும் சிறப்பு ஐயா...

  உங்களின் இதற்கு முந்தைய பதிவு என்னிடம் உள்ளது... பகிர்ந்து கொள்வீர்களா...?

  ReplyDelete
 26. மறுமொழி > Bagawanjee KA said...

  சகோதரர் பகவான்ஜீ கே.ஏ அவர்களின் கருத்துரைக்கும் அருமையான வினாவிற்கும் நன்றி!


  // சில நாட்களுக்கு முன் என்தளத்தில் தாங்கள் 'நம் பதிவை வெளியிட்டதும்தமிழ் மணம் தானாக இணைத்துக் கொள்ளும் 'என்று கூறி இருந்தீர்கள் ,உங்களுக்கும் இணைக்கும் பணி இருக்கத்தானே செய்கிறது .விளக்குவீர்களா ? //

  பொதுவாகவே நான் எனது பதிவை BLOGGER DASHBOARD – இல் வெளியிட்டதும் SIGN OUT செய்து வெளியே வந்து கம்ப்யூட்டரை விட்டு நகர்ந்து வேறு வேலைகள் பார்க்க ஆரம்பித்து விடுவேன். சிறிது நேரம் கழித்து நான் கணக்கு வைத்துள்ள தமிழ்மணம், தமிழ்வெளி, தேன் கூடு, இண்டி ப்ளாக்கார் ஆகிய திரட்டிகள் தாமாகவே திரட்டிக் கொள்ளும். இதில் எந்த சந்தேகமும் இல்லை.

  ஆனால் சிலசமயம் நாங்கள் இணைப்பு வைத்திருக்கும் எங்கள் ஏரியா BSNL இண்டர்நெட் இணைப்பு அடிக்கடி தொடர்பு இழந்துவிடும். அதுமாதிரியான சமயங்களிலும் எங்களது கம்ப்யூட்டர் ( ஏழு வருடங்களுக்கு முன்னர் வாங்கியது ) மெதுவாக (SLOW) இயங்கும் சமயத்திலும் பதிவானது PUBLISH ஆகாமல் CONNECTING SYMBOL சுற்றிக் கொண்டே இருக்கும் பின்னர் பாதியிலேயே நிறுத்தி விடுவேன். ஆனாலும் BLOGGER இல் எனது பதிவு வெளிவந்து இருக்கும். இது மாதிரி சந்தர்ப்பங்களில் எதற்கு வம்பு என்று , பயம் காரணமாக எனது புதிய பதிவை தமிழ்மணத்தில் இணைத்து விடுவது வழக்கம்.


  ஆசிரியர் எஸ்.மது அவர்களின் ஏன் ஓட்டுப் பட்டை வேலை செய்ய வில்லை ? என்ற கேள்விக்கு அளித்த நான் அளித்த பதிலிலும் இதனை தெரிவித்து இருக்கிறேன்.

  // சமீபகாலமாக எனது கணினியிலும், டாஸ்போர்டிலும் பிரச்சினைகள். மெதுவாக (SLOW) இயங்குகிறது. தமிழ்மணத்தில் நான் இணைத்துக் கொண்டு இருக்கும்போது தாமதம் ஆனதால், நீங்கள் வாக்களிக்கும்போது ஓட்டுப்பட்டை வேலை செய்யவில்லை என்று நினைக்கிறேன். தங்கள் ஆர்வத்திற்கு நன்றி! //

  எனவே தமிழ்மணத்தில் நமது பதிவை நாமே இணைத்தால் உடனடியாக சீக்கிரம் இணைந்து விடும். இணைக்காமல் விட்டு விட்டால் தானாகவே இணைய சற்று நேரம் ஆகும். அவ்வளவுதான். நமது விருப்பம்தான்.

  உங்கள் பதிவில் நான் அந்தக் கருத்தை வெளியிடாமலே சென்று இருக்கலாம். ஆனாலும் நீங்கள் சுற்றுப் பயணத்தில் இருப்பதாக தெரிவித்து இருந்தபடியினால் உங்களுக்கு அதுபற்றிய கவலை தேவையில்லை என்பதற்காக அந்த கருத்தினை தெரிவித்து இருந்தேன். எல்லாம் ஆர்வக் கோளாறுதான்.

  ReplyDelete
 27. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...

  // மிகவும் சிறப்பு ஐயா... உங்களின் இதற்கு முந்தைய பதிவு என்னிடம் உள்ளது... பகிர்ந்து கொள்வீர்களா...? //

  சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் வருகைக்கு நன்றி! உங்களிடம் உள்ள எனது பதிவு. பகிர்தல் என்றால் ... ... எப்படி என்று தெரியவில்லை? என்ன செய்ய செய்ய வேண்டும் என்று தெரிவிக்கவும். அதன்படி செய்கிறேன்.

  ReplyDelete
 28. செல்வத்தின் பயன் ஈதல்
  என்பதை அழகுற தங்கள் அனுபவத்தின்
  எழுத்துக்களால் கோர்த்திருக்கிறீர்கள் ஐயா
  நன்றி

  ReplyDelete
 29. பாடல் பொழிப்பு
  நமக்கு விழிப்பு
  அருமை!

  ReplyDelete
 30. நல்ல சிந்தனைக்குறிய பதிவு ஐயா.

  ReplyDelete
 31. கப்பரின் தனிப்பாடல் மிக எளிதாக புரியும் படி இருந்தது.
  நற் சிந்தனையுடைய கலவைப் பதிவு!
  வாழ்த்துகள் அய்யா!.

  ReplyDelete
 32. உங்கள் விளக்கத்திற்கு நன்றி ,நீங்கள் சொன்ன படி இணைகிறதா என்று நானும் முயற்சி செய்து பார்க்கிறேன் !

  ReplyDelete
 33. சங்க காலம் இக்காலம் வரை அனைத்து நிலைகளிலும் காணலாகும் சிறப்புகளை உதாரணமாகத் தந்து பகிர்ந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 34. ஈதலோடு வாழ்வின் தத்துவத்தையும் மனம் இனிக்கத் தந்த அன்புச் சகோதரனுக்கு
  என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .அருமையான பகிர்வு :...!!

  ReplyDelete
 35. மறந்தவற்றை மறக்காதிருக்க செய்துள்ளீர்கள் நன்றி!!

  ReplyDelete
 36. அருமையான பகிர்வு ..இன்றைய உலகிற்கு தேவையான பதிவு...

  ReplyDelete
 37. மேலே கருத்துரை தந்த

  குடந்தை ஆர்.வி.சரவணன்
  ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார்
  கலிங்கநகர் கவிப்ரியன்
  ஜீவலிங்கம் காசிராஜலிங்கம்
  கில்லர்ஜி தேவகோட்டை
  வெங்கட் நாகராஜ்
  தோழன் மப.தமிழன் வீதி
  பகவான்ஜீ கே.ஏ ( 2 )
  முனைவர் அய்யா ஜம்புலிங்கம்
  கவிஞர் அம்பாளடியாள்
  தோழர் வலிப்போக்கன்
  கவிஞர் எழில்

  ஆகிய அனைவருக்கும் நன்றி! கடுமையான முதுகுவலி காரணமாக எல்லோருக்கும் தனித்தனியே கருத்துரை எழுத இயலவில்லை. மன்னிக்கவும்.


  ReplyDelete
 38. நல்ல ஒரு பதிவு ஐயா! பாடலும் அதன் விளக்கமும் சிறப்பு. படங்கள் மிக அருமை!

  தொடர்கின்றோம் தங்களை!

  ReplyDelete
 39. மிக மிக சிறப்பான பதிவு. ஓய்வு நேரத்தில் வாசிக்கக்கிடைத்த பொக்கிஷம். குறிப்பாக பழைய பாடல்களை வாசிக்க நேரம் கிடைத்தது. தற்போது உள்ள மொழிக்குழப்பத்தில் இவற்றைப் படிக்கும் போது நாம் பேசுவது தமிழா? என்று எண்ணத் தோன்றுகின்றது. எதை எடுத்தாலும் தெளிவுற எழுதி விடுறீங்க. ஆச்சரியமாக உள்ளது.

  ReplyDelete
 40. மறுமொழி > Thulasidharan V Thillaiakathu said...

  சகோதரருக்கு நன்றி! தங்கள் பெயரினை தமிழில் எழுதும்போது எப்படி எழுதுவது என்பதனைத் தெரிவிக்கவும்.

  ReplyDelete
 41. மறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said...

  அன்புள்ள ஜோதிஜி அவர்களுக்கு நன்றி!

  ReplyDelete
 42. அருமை! தமிழ்த்தேனில் மறுபடியும் திளைக்க வைத்து விட்டீர்கள்! அந்த கம்பர் தனிப்பாடல் மிக அருமை!

  ReplyDelete
 43. மறுமொழி > மனோ சாமிநாதன் said...

  சகோதரி அவர்களின் பாராட்டிற்கு நன்றி!

  ReplyDelete
 44. நல்ல சிந்தனை பதிவு. முடிந்தவரை கொடுத்து வாழ்வோம்.

  ReplyDelete
 45. நல்ல பதிவு. பாடல்களைத் தேடி எடுத்துத் தொகுத்தள்ளீர்கள் நன்றி.
  தங்கள் உடல் நலம் பெற இறையருள் நிறையட்டும்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 46. மறுமொழி > மாதேவி said...
  // நல்ல சிந்தனை பதிவு. முடிந்தவரை கொடுத்து வாழ்வோம். //

  சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 47. மறுமொழி > சிகரம் பாரதி said...

  //இன்று நமது வலையில்: உதவும் கரங்களிடம் ஒரு விண்ணப்பம்! //

  தங்கள் பதிவை ஏற்கனவே படித்துள்ளேன்! இங்கு நான் உறுப்பினராக இருக்கும் ஒரு அறக்கட்டளைக்கு மாதம்தோறும் குறிப்பிட்ட பணம் செலவாகின்றபடியினால், தற்போது உதவ இயலாத நிலையில் இருக்கிறேன்! மன்னிக்கவும்!

  ReplyDelete
 48. மறுமொழி > kovaikkavi said...

  // நல்ல பதிவு. பாடல்களைத் தேடி எடுத்துத் தொகுத்தள்ளீர்கள் நன்றி. தங்கள் உடல் நலம் பெற இறையருள் நிறையட்டும்.//

  சகோதரி கவிஞர் வேதா. இலங்காதிலகம் அவர்களின் பாராட்டிற்கும், நலம் விசாரிப்பிற்கும் நன்றி! எனது முதுகுவலி இன்னும் முழுதும் சரியாக குணமாகவில்லை. தங்கள் இறையருள் வேண்டுதல் பலிக்கட்டும். நானும் இறைவன் அருளை நம்புகிறேன்! .

  ReplyDelete