Tuesday, 3 June 2014

மூட்டைப் பூச்சி தொல்லை



சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் கடையில் “ கில் பக் “ இருக்கா என்று கேட்டால் உடனே தந்துவிட மாட்டார்கள். கேட்டவர் பெரியவர் என்றால் என்ன ஏது எதற்கு என்று விசாரித்துவிட்டு தருவார்கள். சின்ன பையன் என்றால் வீட்டில் பெரியவர்களை வரச் சொல்லுவார்கள். அப்போது மூட்டைப் பூச்சி கடியும், மூட்டைப் பூச்சியைக் கொல்லும் கில்பக் (KILL BUG) பூச்சி மருந்தும் அவ்வளவு பிரபலம். வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர்கள் நிறையபேர் அப்போது நாடியதும் இந்த பூச்சி கொல்லி மருந்தைத்தான். அதனால் இந்த மருந்தை, கடைகளில் கேட்டால் உடனே தந்துவிட மாட்டார்கள். இந்த மருந்து இப்போது இல்லை.

மூட்டைப் பூச்சி:

மூட்டைப் பூச்சி என்பது சிறிய வகை பூச்சி. உடம்பு தட்டையாக, மேற்புறம் வரிவரியாக அரக்கு கலரில் இருக்கும். ஆறு கால்கள், இரண்டு மீசைகள், ரத்தத்தை உறிஞ்ச உதவும் கொடுக்கு ஆகியவை உண்டு. ஆங்கிலத்தில் BED BUG என்று பெயர். கிட்டதட்ட பெரிய கரப்பான் பூச்சியின் சிறிய வடிவம் கரப்பான் பூச்சிகளுக்கு இறக்கைகள் உண்டு. மூட்டைப் பூச்சிகளுக்கு இறக்கைகள் கிடையாது.

மூட்டைப் பூச்சி கடி:

மூட்டைப் பூச்சி கடி என்பது பட்டவர்களுக்குத்தான் தெரியும். பகலில் பதுங்கிக் கிடக்கும் இவை இரவில்தான் தமது திறமையை நம்மிடம் காட்டுகின்றன. பார்த்தால் சின்னதாக இருக்கும் இவை நம்மை கடிக்கும்போதும் நம்முடைய இரத்தத்தை  உறிஞ்சும் போதும் நமக்கு ஒன்றும் தெரியாது. இரத்தத்தைக் குடித்து முடிந்தவுடன் கடித்த இடத்தில் தடிப்பும் அரிப்பும் ஏற்படும். கடிபட்டவர் தூக்கத்தை மறந்து விட வேண்டியதுதான். படுக்கையில் இருந்து எழுந்து மூட்டைப் பூச்சிகளை வேட்டையாடுவதற்கே நேரம் சரியாகி விடும். அவற்றை நசுக்கினால் வரும் நாற்றம் சக்கிக்காது. சில வீடுகளில், மாணவர் விடுதிகளில் சுவற்றில் போர்க்களம் போல மூட்டை பூச்சியை நசுக்கிய இரத்த சுவடுகளைக் காணலாம்.

அப்போதெல்லாம் சொந்த வீட்டுக்காரர்களை விட வாடகை வீடுகளில் இருந்தவர்கள் அதிகம். மூட்டைப் பூச்சி என்பது வீட்டுக்கு வீடு சாதாரணமாக இருந்தது. அதிலும் ஒண்டு குடித்தனங்கள் இருந்த ஸ்டோர் போன்ற வீடுகளில் மக்களோடு மக்களாய் அவைகளும் வசித்தன. இந்த மூட்டைப் பூச்சிகள் மரச் சாமான்களின் இடுக்குகளிலும், சுவற்றில் உள்ள ஓட்டைகளிலும் (அப்போதெல்லாம் சுவற்றில் ஆணிகள் அடித்து போட்டோ படங்களை வரிசையாக மாட்டி வைப்பார்கள்) பாய், தலையணை, படுக்கையிலும் அண்டி கிடக்கும்  வீடு விட்டு வீடு மாறும்போது அவைகளும் பெண்டு பிளைகளோடு கூடவே குடித்தனம் வந்துவிடும். நம்மீது அவ்வளவு ரத்த பாசம் அவைகளுக்கு. மூட்டைக்கு பயந்து தியேட்டர்களுக்கு இரவுக் காட்சி படம் போனவர்களும் உண்டு. அங்கே போனாலும் இதே தொல்லைதான். பல ஊர்களில் மூட்டைப் பூச்சி கடிக்கு என்றே பேர் பெற்ற தியேட்டர்கள் இருந்தன. அந்த தியேட்டர்களில் படம் பார்க்கும்போது ஒரு மாதிரி நெளிந்து கொண்டேதான் உட்கார வேண்டும். அங்குதான் அப்படி என்றால் பஸ், ரெயில் இவற்றையும் இவை விட்டு வைப்பதில்லை. இப்போதும் ரெயில், அரசு பஸ்களில் மூட்டைப் பூச்சி கடியோடு கொசுக்கடியும் உண்டு.

மூட்டைப் பூச்சி ஒழிப்பு:

இவற்றை ஒழிக்க ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் வீடுகளில் சுடுதண்ணீரை கொதிக்க கொதிக்க மரச்சாமான்களின் இடுக்களில் ஊற்றுவது அல்லது மண்ணெண்ணெயை சொட்டு சொட்டாக தெளிப்பது அல்லது மரச்சாமான்களை வெயிலில் காயவைத்தல் அன்று சர்வ சாதாரணம். இவற்றை அழிக்க பூச்சி மருந்தை தெளிக்க வேண்டும். இதற்கென்று இருக்கும் பம்ப் ஒன்றில் கில்பக் மருந்தையும் மண்ணெண்ணெயையும் கலந்து மூக்கில் துணியை கட்டிகொண்டு நானும் தெளித்து இருக்கிறேன். இப்போது ஸ்பிரேயர்களுடன் மருந்துகள் வந்துவிட்டன. அப்படியும் அவை சாவதில்லை. தப்பி விடுகின்றன. மூட்டைக் கடிக்கு பயந்து வீட்டை அப்படியே கொளுத்தி விட்டால் கூட தேவலை என்ற எண்ணம் கூட சிலருக்கு உண்டாகி இருக்கிறது போலிருக்கிறது.. எனவே மூட்டை பூச்சிக்கு பயந்து யாரேனும் வீட்டைக் கொளுத்துவார்களா? என்ற பழமொழியையும் நம்மவர்கள உருவாக்கி இருக்கின்றனர். அதாவது அல்பமான எதிரிக்கு பயந்து நீ ஓடி ஒளியாதே என்பது பொருள்.

நாங்கள் மக்கள் நெருக்கம் மிகுந்த நகர்ப்புறத்தில் வாடகை வீட்டில் இருந்தபோது மூட்டைப்பூச்சி தொல்லையால் ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்கிறோம். இப்போது நாங்கள் இருக்கும் புறநகர்ப் பகுதியில் சொந்த வீட்டில் இந்த தொல்லை இல்லை. காரணம் வீடு கட்டும்போதே PEST CONTROL பயன்படுத்தியதுதான் என்று நினைக்கிறேன். ஆனாலும் பாம்புகள் நடமாட்டம் உண்டு.

இப்போது மூட்டைப் பூச்சிகள் அதிகம் இல்லை. இவற்றை அடியோடு ஒழிக்க அரசு எந்த முயற்சியும் செய்யாமலேயே இவை தாமாகவே குறைந்து விட்டன. காரணம் நவீனமயம் தான். ஆனாலும் ஆங்காங்கே சில இடங்களில் இவற்றைக் காணலாம். மனிதர்களிலும் சில மூட்டைப் பூச்சி கடி ஆசாமிகள் உண்டு. அவர்கள் அங்கே வரும்போதே பார்த்தவுடன் இங்கேயே சிலர் ஓடிவிடுவார்கள்.

புலவர் கவிதை:

புலவர் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்தபோது, இரவில் தனக்கு ஏற்பட்ட மூட்டைப் பூச்சி கடி அனுபவத்தினைக் கவிதையாகத் தந்து இருக்கிறார் நமது வலைப்பதிவர் புலவர் சா.இராமாநுசம் அய்யா அவர்கள்
 
   மடித்தயிடம் மேலுறையின் சந்தும் பொந்தும்-நீங்கள்
           
மறைந்துறையப் புகலிடமே உமக்குத் தந்தும்
  
கடித்தயிடம் தெரியாமல்  துளியும் இரத்தம்-அட்டா
           
கசியாமல் கடிப்பதுதான் விந்தை நித்தம்
   
அடிக்கடியே வருகின்றீர் அந்தோ தொல்லை-மேலும்
           
அடுக்கடுக்காய் வருகின்றீர் உண்டா எல்லை!
   
படித்தியது போதுமினி க் காலி செய்வீர்-இன்றேல்
            
பழிவந்து சேருமய்ய மூட்டை யாரே!
                      
                           -  புலவர் சா இராமாநுசம்

நன்றி: புலவர் கவிதைகள்


(PICTURES THANKS TO GOOGLE)


49 comments:

  1. //..மனிதர்களிலும் சில மூட்டைப் பூச்சி கடி ஆசாமிகள் உண்டு!..//

    மூட்டைப்பூச்சி கடியின் வேதனையிலும் - இயல்பான நகைச்சுவை!..

    மூட்டைப்பூச்சிகள் ஓரளவுக்கு தாமாகவே ஒழிந்து விட்டாலும் - ஆங்காங்கே சில இடங்களில் இவை பிறர்க்கு இன்னல் விளைவிப்பதில் மும்முரமாக இருக்கின்றன..

    மூட்டைப் பூச்சியையும் ஒரு பொருட்டாக மதித்து ஒரு பதிவினையும் இட்டு,
    பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே!.. என்பதை - மெய்ப்பித்து விட்டீர்கள்..

    ReplyDelete
  2. மூட்டை பூச்சி இம்சையை அனுபவித்ததுண்டு...

    ஆனாலும் பாம்புகள் நடமாட்டம் உண்டு என்று பயமுறுத்துவது சரியா...?

    ReplyDelete
  3. இந்த மூட்டைப் பூச்சியை ஒழிப்பதே ஞாயிறு தோறும் ஸ்பெஷல் பணி ஆகிவிடும் என் பதிவு ஹாஸ்டல் வாழ்க்கையில் எழுதி இருக்கிறேன் . மூட்டைப் பூச்சியை முற்றிலும் அழிக்க என்று விளம்பரம் வரும் பணம் அனுப்பிக் கொடுத்தால் ஒரு சிறிய பார்சல் வரும். அதில் ஒரு சிறிய கல்லும் ஒரு சுத்தியும் ஒரு கிண்ணமும் இருக்கும் செய்முறை விளக்கத்தில்”மூட்டைப்பூச்சியைப் பிடித்து கல்லில் வைத்து சுத்தியால் அடித்துகிண்ணத்து நீரில் போடவும் It is a sure way to eliminate bed bugs " என்றிருக்கும் ...!

    ReplyDelete
  4. மூட்டைப் பூச்சி கடியுடன் ஒப்பிடும்போது பாம்புக் கடி பரவாயில்லையோ :)

    ReplyDelete
  5. முன்புலாம் தியேட்டருக்குப் போனால் மூட்டைப் பூச்சிக் கடி இலவசம்.

    ReplyDelete
  6. முன்பு போல் மூட்டைத் தொல்லை இப்போது இருப்பதாக தெரிய வில்லை !
    என்று தீரும் இந்த மூட்டையின் தொல்லை!என்ற தலைப்பில் மூட்டைக் கடி தொல்லையை மையமாய் வைத்து எழுதிய கதை ...இதோ http://www.jokkaali.in/2012/10/blog-post_4767.html..படித்து சிரிக்க அழைக்கிறேன் !
    த ம 2

    ReplyDelete
  7. மூட்டைப் பூச்சி பற்றி மூட்டை மூட்டையாக தகவல்களை தந்துள்ளீர்கள். பகிர்ந்தமைக்கு நன்றி!
    இன்னொரு சேதி. தினம் உணவு(?) கிடைத்தால் மூட்டைப் பூச்சிகள் நாளொன்றுக்கு மூன்று முதல் நான்கு முட்டைகள் வரை அதனுடைய ஆயுட்காலமான ஒன்பது மாதங்கள் வரை முட்டையிடுமாம். அதனால்தான் ஹோட்டல் மற்றும் இரயில் பெட்டிகள் போன்ற இடங்களில் தாராளமாக அவைகளுக்கு உணவு கிடைப்பதால் ஆண்டு முழுதும் இவைகள் பல்கிப் பெருகி காணப்படுகின்றன.

    புலவர் இராமானுசம் ஐயா அவர்களின் அருமையான கவிதையை தந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  8. மூட்டைப் பூச்சி பதிவு கடிக்கவில்லை...
    அந்தக் காலத்தில் என்ன பாடு என்பது நினைவிற்கு வந்தது.
    எங்கள் ஊரில் ஒரு தியேட்டர் கடிக்கு பெயர்பெற்றது..


    ReplyDelete
  9. மறுமொழி > துரை செல்வராஜூ said...

    சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!

    ReplyDelete
  10. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...

    // மூட்டை பூச்சி இம்சையை அனுபவித்ததுண்டு...ஆனாலும் பாம்புகள் நடமாட்டம் உண்டு என்று பயமுறுத்துவது சரியா...? //

    எங்கள் பகுதியில் காலி மனைகளும் புதர்களும் அதிகம். அதனால் பாம்புகள் நடமாட்டம். மூட்டைக் கடிக்கு, பாம்பு பயம் எவ்வளவோ தேவலை என்று தோன்றுகிறது. கருத்துரை சொன்ன சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  11. மறுமொழி > டிபிஆர்.ஜோசப் said...

    அய்யா டி.பி.ஆர்.ஜோசப் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  12. மறுமொழி > ராஜி said...

    // முன்புலாம் தியேட்டருக்குப் போனால் மூட்டைப் பூச்சிக் கடி இலவசம். //

    இப்பவும் இலவசம்தான், சகோதரி! தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  13. கடவுளே இந்தத் தொல்லை வெளிநாடுகளில் இல்லை அதுவரைத்
    தப்பித்தோம் :))) இன்றைய பகிர்வுக்கு ஏற்ற நற் கவிதையும் கண்டு
    மகிழ்ந்தேன் .மனிதர்களுக்கு சாபம் கொடுக்கும் நாம் மூட்டைப் பூச்சிகளிடம்
    கெஞ்சிக் கூத்தாடித் தான் தப்பிக் கொள்ள முடியும் போலும் :)) .அருமையான
    பகிர்வுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ஐயா .
    http://rupika-rupika.blogspot.com/2014/06/blog-post.html

    ReplyDelete
  14. மறுமொழி > Bagawanjee KA said...

    // முன்பு போல் மூட்டைத் தொல்லை இப்போது இருப்பதாக தெரிய வில்லை ! என்று தீரும் இந்த மூட்டையின் தொல்லை!என்ற தலைப்பில் மூட்டைக் கடி தொல்லையை மையமாய் வைத்து எழுதிய கதை ...இதோ http://www.jokkaali.in/2012/10/blog-post_4767.html..படித்து சிரிக்க அழைக்கிறேன் ! த ம 2 //

    சகோதரர் ஜோக்காளி பகவான்ஜீ கே ஏ – அவர்களுக்கு நன்றி! நீங்கள் குறிப்பிட்டுள்ள உங்கள் பதிவிற்கு சென்றால்

    Sorry, the page you were looking for in this blog does not exist.

    என்ற செய்தி தருகிறது. எனவே என்னால் படிக்க இயலவில்லை.

    ReplyDelete
  15. பழைய நினைவுகளைக் கிளறிப் போனது
    தங்கள் பதிவு
    குறிப்பாக சினிமா தியேட்டருக்குப் போய்வந்தபின்புதான்
    பெரும்பாலும் மூட்டைப்பூச்சிகள் வீட்டுக்குள் வரும்
    என்பதால் சினிமாவிட்டு வந்ததும் துணிகளை
    கழட்டி வாளியில் போட்டுவிட்டு வேறு உடைகள்
    அணிவதும் உண்டு
    கடி குறித்து சுவையான பதிவு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. மூட்டைப்பூச்சியைப் பார்
    படுக்கையிலும் இருக்கையிலும்
    முட்டையிட்டுப் பெருகுதே!
    முற்காப்புத் தேடுவோம்!

    ReplyDelete
  17. மூட்டைப்பூச்சி தொல்லைகளை சிறுவயதில் நிறைய அனுபவித்தது உண்டு. சினிமா தியேட்டர்களிலெல்லாம் கூட இருக்கும். நல்லவேளையாக இப்போதெல்லாம் அதிகமாக எங்கும் காணப்படவில்லை. அதுபற்றி இங்கு தாங்கள் ஏராளமான தகவல்கள் கொடுத்துள்ளது, மூட்டைப்பூச்சி கடிப்பதுபோலவே மீண்டும் உணர வைக்கிறது. ;)

    ReplyDelete
  18. சில ஆண்டுகளுக்கு முன்பு தியேட்டர்களின் மூட்டைப் பூச்சுகள் அதிகம் காணப்படும்
    இன்று தியேட்டர்களில் இல்லை என்றே சொல்லாம்
    பூட்டைப் பூச்சி பற்றிய பதிவிற்கு நன்றி ஐயா

    ReplyDelete
  19. மூட்டைப் பூச்சி பற்றிய தங்களின் கட்டுரையும் புலவர் ஐயாவின் கவிதை அருமை

    ReplyDelete
  20. மூட்டைப் பூச்சிகள்...
    ஒரு நினைவூட்டல்.

    ReplyDelete
  21. Ethai arave ozhippathatku Enna vazhi irukkirathu??
    Therivitthaal nandraga irukkum..

    ReplyDelete
  22. அந்தப் பூச்சியைப் பார்த்தால் முட்டை போலத்தானே இருக்கிறது....
    பிறகு எதற்கு மூட்டைப் பூச்சி என்கிறார்கள்....?

    தியேட்டர்களில் நானும் அனுபவித்து இருக்கிறேன்.
    அதை நசுக்கிவிட்டால் அதன் நாற்றம்... உவ்வோ....

    பதிவைப் படித்ததும் பழைய நினைவுகள் வந்து போனது ஐயா.

    ReplyDelete
  23. மறுமொழி > வே.நடனசபாபதி said...

    அய்யா வே.நடனசபாபதி அவர்களின் கருத்துரைக்கும், மூட்டைப்பூச்சி பற்றிய மேலதிக தகவல்கள் தந்தமைக்கும் நன்றி!

    ReplyDelete
  24. மறுமொழி > Mathu S said... (1, 2 )

    சகோதரர் மலர்த்தரு எஸ்.மது அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  25. மறுமொழி > அம்பாளடியாள் வலைத்தளம் said...

    சகோதரி கவிஞர் அம்பாளடியாள் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    // கடவுளே இந்தத் தொல்லை வெளிநாடுகளில் இல்லை அதுவரைத் தப்பித்தோம் :))) //

    அமெரிக்காவில் நியூயார்க்கில் சில ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் மூட்டைப் பூச்சியால் ரொம்பவும் அவதிப்பட்டதாகவும், அப்போது நியூயார்க் மூட்டைப்பூச்சிகள் நகரம் என்று அழைக்கப்பட்டதாகவும் செய்தி உண்டு.

    // இன்றைய பகிர்வுக்கு ஏற்ற நற் கவிதையும் கண்டு
    மகிழ்ந்தேன் .மனிதர்களுக்கு சாபம் கொடுக்கும் நாம் மூட்டைப் பூச்சிகளிடம் கெஞ்சிக் கூத்தாடித் தான் தப்பிக் கொள்ள முடியும் போலும் :)) .அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ஐயா .http://rupika-rupika.blogspot.com/2014/06/blog-post.html //

    நமது புலவர் அய்யா அவர்கள், தனக்கு இம்சை கொடுத்த மூட்டைப் பூச்சிகளிடமும் அகிம்சாவாதியாகத்தான் பாடி இருக்கிறார்.

    ReplyDelete

  26. மறுமொழி > Ramani S said... (1, 2 )

    கவிஞர் எஸ்.ரமணி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் பழைய அனுபவத்தினை சொன்னதற்கும் நன்றி!

    ReplyDelete
  27. மறுமொழி > Jeevalingam Kasirajalingam said...

    // மூட்டைப்பூச்சியைப் பார்
    படுக்கையிலும் இருக்கையிலும்
    முட்டையிட்டுப் பெருகுதே!
    முற்காப்புத் தேடுவோம்! //

    சகோதரர் கவிஞர் ஜீவலிங்கம் காசிராஜலிங்கம் அவர்களின் உடனடி கவிதைக்கு நன்றி!

    ReplyDelete
  28. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...

    திரு V.G.K அவர்களுக்கு வணக்கம். தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! ந்ம்மூர் திருச்சியில் இருந்த ராக்ஸி – வெலிங்டன் தியேட்டர்கள் மூட்டைப்பூச்சி கடிக்கு பேர் போனவை.

    ReplyDelete
  29. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said..

    சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் . அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  30. மறுமொழி > டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

    சகோதரர் மூங்கில் காற்று டி.என்.முரளிதரன் அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  31. மறுமொழி > அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

    சகோதரர் மயிலாடுதுறை அ.முஹம்மது நிஜாமுத்தீன் அவர்களின் நினைவூட்டலுக்கு நன்றி!

    ReplyDelete
  32. yes irrukura mootai poochi ellam nammalunga, dubai ku parcel pannitanga pole, inga kadi romba athigam.

    moota poochi kadi padama orunthan kooda inga sambathikka mudiyathu...

    ReplyDelete
  33. என் வேண்டுகோளுக்கு முயற்சி செய்தமைக்கு நன்றி !
    கூகுளில் இந்த லிங்கை தேடினால் வருகிறதே ,நேரம் கிடைக்கையில் முயற்சி செய்ங்க ,நன்றி
    http://www.jokkaali.in/2012/10/blog-post_4767.html..

    ReplyDelete
  34. இங்கு எங்கும் இத் தொல்லையை அனுபவித்ததில்லை, இளமையில் இலங்கையில் தாராளமாக அனுபவித்துள்ளேன். பாய்கள் அவிப்பதும், தலையணையைச் வெய்யிலில் காயவைப்பதுமாக போதும் போதுமென்றாகிவிடும்.
    மூட்டைப் பூச்சி கொல்லியுடன்,மலத்தீன், மண்ணெய் என நாடே அட்டகாசப் படும் போது, ஒரு பெரியவர் தேங்காய் எண்ணை பற்றிக் கூறினார். பின் கட்டில் கதிரை, மேசை இடுக்குகள்; சுவர் வெடிப்புகள் எங்கும் அதைத் தடவியபோது உண்மையில் மிக பயனளித்தது .அத்துடன் தேங்காய் எண்ணை வாசமும் சிரமம் தரவில்லை. ஆனால் விலை அதிகம். அந்தக் காலத்தை மறக்கமுடியாது.
    இலங்கையில் கொழும்பு வைத்தியசாலையில் கால்கள் முறிந்ததால் "பிளாஸ்டர் ஒவ் பாரிஸ்" போட்டுக் கட்டுப்போட்ட நோயாளியின் அக்கட்டுக்குள் சென்று குடித்தனம் நடத்திய மூட்டைப்பூச்சிகளின் கடியின் வேதனை தாங்காத நோயாளி, பலதடவை அதுபற்றிக் கூறியும் தாதிகள் அசட்டையாக இருந்ததால் ஜன்னலால் குதித்ததாக அன்று பத்திரிகையில் செய்தி வந்தது.
    நுளம்பு வலைபோட்டுத் தப்பிவிடலாம். ஆனால் மூட்டைப்பூச்சி வெகு சிரமம்.
    மகாத்மா காந்தியின் நகைச்சுவையுணர்வுக்கு ஒரு சம்பவம் சொல்வார்கள். ஒரு தடவை அவர் கூட்டத்துக்குச் சென்றபோது அங்குள்ள நிர்வாகியின் வீட்டில் தங்கும்படி ஆனதாம், விடிந்ததும் அந்த நிர்வாகி "ஐயா, படுக்கையெல்லாம் சௌகரியமாக இருந்ததா?" எனக் கேட்டபோது ,காந்தி கூறினாராம்.
    "நுளம்பெல்லாம் என்னைத் தூக்கக் கொண்டு போகத்தான் முயன்றன, ஆனால் மூட்டைப் பூச்சிகள் விடவேயில்லை".





    ReplyDelete
  35. மறுமொழி > Nasar said...

    // Ethai arave ozhippathatku Enna vazhi irukkirathu?? Therivitthaal nandraga irukkum.. //
    சகோதரர் நாசர் அவர்களே நாங்கள் டவுனில் குடியிருந்தபோது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை மண்ணெண்ணெயும் மூட்டைப்பூச்சி மருந்தும் கலந்து தெளித்தோம். இந்த பதிவின் பின்னூட்டங்களிலும் சிலர் யோசனை சொல்லி உள்ளனர்.

    ReplyDelete
  36. மறுமொழி > அருணா செல்வம் said...

    சகோதரி கவிஞர் அருணா செல்வம் அவர்களுக்கு நன்றி!

    // அந்தப் பூச்சியைப் பார்த்தால் முட்டை போலத்தானே இருக்கிறது....பிறகு எதற்கு மூட்டைப் பூச்சி என்கிறார்கள்....? //

    இதன் பெயர்க் காரணம் நான் அறியேன். மூட்டுப்பூச்சி என்றுகூட சொல்கிறார்கள்.

    // தியேட்டர்களில் நானும் அனுபவித்து இருக்கிறேன்.
    அதை நசுக்கிவிட்டால் அதன் நாற்றம்... உவ்வோ....பதிவைப் படித்ததும் பழைய நினைவுகள் வந்து போனது ஐயா. //

    இப்போது தியேட்டர்களே இல்லை. தமிழ்நாட்டில் ஒவ்வொறாக இடித்து காம்ப்ளெக்ஸ் அல்லது அடுக்குமாடி கட்டி வருகிறார்கள்.

    ReplyDelete
  37. மறுமொழி > Anonymous said...

    // yes irrukura mootai poochi ellam nammalunga, dubai ku parcel pannitanga pole, inga kadi romba athigam.
    moota poochi kadi padama orunthan kooda inga sambathikka mudiyathu... //

    துபாய் நண்பர்கள் இன்னும் விரிவாக எழுதலாம்.

    ReplyDelete
  38. மறுமொழி > Bagawanjee KA said...

    // என் வேண்டுகோளுக்கு முயற்சி செய்தமைக்கு நன்றி !
    கூகுளில் இந்த லிங்கை தேடினால் வருகிறதே ,நேரம் கிடைக்கையில் முயற்சி செய்ங்க ,நன்றி
    http://www.jokkaali.in/2012/10/blog-post_4767.html.. //

    சகோதரர் ஜோக்காளிக்கு நன்றி!

    ReplyDelete
  39. மறுமொழி > யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

    தங்களின் நீண்ட கருத்துரைக்கு நன்றி! தங்கள் அனுபவம் மற்றவர்களுக்கு பயன்படும். காந்திஜி ஜோக் சிரிக்க வைத்தது.

    ReplyDelete
  40. மூட்டைப்பூச்சி அனுபவ நினைவுகளைக் கிளறிவிட்ட பதிவு. தங்களுடைய மூட்டைப்பூச்சி அனுபவங்களோடு புலவர் ஐயாவின் கவிதையையும் ரசிக்கத் தந்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  41. 1980களில் சென்னையில் பணியாற்றிய பொழுது மூட்டைப்பூச்சியால் பட்ட அவதி நினைவிற்கு வந்தது. நன்றி.

    ReplyDelete
  42. மறுமொழி > கீத மஞ்சரி said...

    சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  43. மறுமொழி > சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country said...

    முனைவர் பா.ஜம்புலிங்கம் அய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி!


    ReplyDelete
  44. நினைவுகளை கிளறிய பதிவு. தில்லியில் நான்கு நண்பர்களாக அறை எடுத்து தங்கி இருந்தபோது ஒரு சமயம் இப்பூச்சித் தொல்லையினால் அவதிப்பட்டிருக்கிறோம். அறை நண்பர் ஒருவர் அதை அடித்தால்/நசுக்கினால் பல்கிப் பெருகிவிடும் என்று சொல்லி, மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்துக்கொண்டு பூச்சிகளை ஒவ்வொன்றாய் பிடித்து நெருப்பில் போடுவார்! :)

    ஒரு மாதம் அதோடு போராடி வெற்றி பெற்றோம்!

    ReplyDelete
  45. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...

    சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    //நினைவுகளை கிளறிய பதிவு. தில்லியில் நான்கு நண்பர்களாக அறை எடுத்து தங்கி இருந்தபோது ஒரு சமயம் இப்பூச்சித் தொல்லையினால் அவதிப்பட்டிருக்கிறோம். அறை நண்பர் ஒருவர் அதை அடித்தால்/நசுக்கினால் பல்கிப் பெருகிவிடும் என்று சொல்லி, மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்துக்கொண்டு பூச்சிகளை ஒவ்வொன்றாய் பிடித்து நெருப்பில் போடுவார்! :) ஒரு மாதம் அதோடு போராடி வெற்றி பெற்றோம்! //

    என்ன இருந்தாலும் உங்கள் நண்பரின் இந்த செயல கொடுமையானதுதான். இதனால் உங்கள் அறை முழுக்க ரத்தம் பொசுங்கிய வாடை அல்லவா இருந்திருக்கும்?. எப்படித்தான் அவருடன் அந்த அறையில் இருந்தீர்கள் என்று தெரியவில்லை.

    ReplyDelete
  46. இப்போது குழந்தைகள் பள்ளி விட்டு வரும் போது தலையில் ஈறும் பேணும் பல சமயம் பைகளில் மூட்டைப்பூச்சியையும் கொண்டு வந்து சேர்த்து விடுகின்றார்கள்.

    ReplyDelete
    Replies
    1. கருத்துரை தந்த சகோதரர் ஜோதிஜி திருப்பூர் அவர்களுக்கு நன்றி. சிலசமயம் பழைய பதிவுகளைப் பார்க்கும் போதுதான் சில கருத்துரைகளுக்கு மறுமொழி தராமல் போனது தெரிய வருகிறது. தாமதமான இந்த மறுமொழிக்கு மன்னிக்கவும்.

      Delete