Sunday, 8 June 2014

வீட்டுக்கு ஒரு ஆட்டோ !



சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் கோர்ட் உத்தரவுப்படி ஆட்டோ
கட்டணம் நிர்ணயித்து விட்டதாக செய்தி வந்தது. ஆட்டோ கட்டண விவரம் தூள் பறந்தது. பத்திரிகைகளில் வலைப் பதிவுகளில் ஆஹா ஓஹோ என்று பிரமாதப் படுத்தினார்கள். டெலிவிஷன் பெட்டி சானல்களில் அக்கு வேறு ஆணி வேறாக அலசினார்கள். சென்னைக்கு நிர்ணயித்தது போல் தமிழ்நாடு முழுக்க இதேபோல் ஆட்டோ கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்றார்கள்.

ஆட்டோக்காரர்கள் மாறவில்லை

ஆனால் நடைமுறையில் பழைய குருடி கதவைத் திறடி க்தைதான். சென்னையில் மீட்டர் கட்டணப்படி ஆட்டோக்கள்  ஓடுவதாகத் தெரியவில்லை. மீட்டர் பற்றி பேசினாலே  பாதியிலேயே ஆட்களை இறக்கிவிடுவார்கள் அல்லது ஆட்டோ அங்கெல்லாம், வராது என்று சொல்லி விடுவார்கள். ஒன்றும் செய்ய முடியாது. அது அவருடைய ஆட்டோ. அவருடைய இஷ்டம்.. சென்னையில் மட்டுமல்ல. தமிழ்நாடு முழுக்க இதே நிலைமைதான். சட்டம் இருந்தும் அமுல் படுத்த முடியாத வகையறாக்களில் ஆட்டோ கட்டணமும் ஒன்று. இதற்கான காரணம் பற்றி காம்ரேடுகளும் ஆட்டோ கட்டணமும் http://tthamizhelango.blogspot.com/2013/12/blog-post_21.html என்று ஒரு கட்டுரையை வலைப் பதிவில் எழுதினேன்

முன்பு டாக்சிகள்:

இந்த ஆட்டோ ரிக்‌ஷாக்கள் வருவதற்கு முன்னர் டாக்சி டிரைவர்கள் இதே போல செய்து கொண்டு இருந்தார்கள். வாடகைக்கு மட்டும் (FOR HIRE ONLY) என்று போர்டு மாட்டிக்கொண்டு அவர்கள் செய்த பேரங்களைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. அப்புறம் ஆட்டோ ரிக்‌ஷாக்கள் அதிகமானதும், நிறைய வீடுகளில் சொந்த கார்கள் வந்ததும்  மற்றும் கால் டாக்சிகள் வரத் துவங்கியதும் அவர்கள் கொஞ்சம் இறங்கி வந்தார்கள். வங்கிக் கடன், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள்   ஊழியர்களுக்கு தந்த வாகனக் கடன் போன்றவற்றால் வாகனங்கள் பெருகப் பெருக,  இப்போது பல இடங்களில் டாக்சிகளுக்கு ஆட்கள் வந்தால் போதும் என்ற நிலைமை.

தனிநபர் (PRIVATE) ஆட்டோக்கள்

இதற்கு ஒரே தீர்வு வீட்டுக்கு ஒரு ஆட்டோ ரிக்‌ஷா திட்டம்தான். அதாவது பைக், ஸ்கூட்டர் வாங்குவதற்கு பதிலாக ஒவ்வொரு குடும்பத்திலும் ஆட்டோ ரிக்‌ஷா வாங்கலாம். கார் விற்கும் விலைக்கு ஆட்டோ ரிக்‌ஷா வாங்குவது எவ்வளவோ மேல். மேலும் அதிகப் பயன்பாடும் உண்டு.

எங்கள் பகுதியில் ஒரு ஓட்டல் உரிமையாளர் இருக்கிறார். அவர் கார், ஆட்டோ ரிக்‌ஷா இரண்டையும் வைத்து இருக்கிறார். மார்க்கெட், பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடம் சென்று வர ஆட்டோவை பயன்படுத்துகிறார். அவரே சமயத்தில் ஆட்டோவை ஓட்டுகிறார். வெளியூர் பயணம், திருமண நிகழ்ச்சிகள் போன்றவற்றிற்கு காரை எடுத்துக் கொள்கிறார். பெரும்பாலும் அவர்கள் குடும்பம் உபயோகிப்பது ஆட்டோதான். அவர்களது ஆட்டோ கரும் பச்சை வண்ணத்தில் இருக்கும். முகப்பிலும் பின்புறமும் பெரிதாக ஆங்கிலத்தில் PRIVATE என்று எழுதி இருக்கும். நிறைய ஓட்டல் அதிபர்களிடம் இந்த PRIVATE ஆட்டோ இருப்பதைக் காணலாம். ஓட்டல் வியாபாரத்திற்கும் (CATERING SERVICE) இந்த ஆட்டோதான்.
  
இந்த ஆட்டோ வாங்கும் திட்டத்திற்கு அரசாங்கமே வங்கிகள் மூலம் உதவி செய்யலாம். இதனால் நமது உறவினர்களை தெரிந்தவர்களை அழைத்து வர, மார்க்கெட், பள்ளி, அலுவலகம் சென்று வர என்று சொந்த உபயோகத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். இரண்டு சக்கர வாகனங்களில் இரண்டு பேருக்கு மேல் ஏறிக் கொண்டு அவதிப்படுவது போன்ற தொல்லைகள் இல்லாமல் இருக்கும். மேலும் தனிநபர் (PRIVATE) ஆட்டோ ரிக்‌ஷாக்கள் அதிகமாகும் போது உள்ளூர்க்காரர்கள் நிறையபேர் ஆட்டோ ஸ்டாண்ட் பக்கம் வரவே மாட்டார்கள். எனவே ஆட்டோக்காரர்கள் கட்டணத்தைத் தாங்களாகவே குறைத்துக் கொள்ளும் வாய்ப்பு உண்டு.

அரசு நடவடிக்கை:

எனவே தனிநபர்கள் கார்கள் வைத்துக் கொள்ள அனுமதி இருப்பது போல , தனிநபர் (PRIVATE) ஆட்டோ ரிக்‌ஷாக்கள் வைத்துக் கொள்ள அனுமதியும் ஆட்டோ ஓட்டுநர் லைசென்ஸ் வழங்க அனுமதியும் தமிழக அரசு தாராளமாக வழங்க வேண்டும். இதன் மூலம் பொது மக்களுக்கும் அதிக பயன்பாடு.


( PICTURES THANKS TO GOOGLE )




47 comments:

  1. வணக்கம் ஐயா, அருமையான அலசலும் + எளிமையான தீர்வும் சொல்லியுள்ளீர்கள். இதெல்லாம் நடைமுறைக்கு ஒத்து வருமா என்று யோசித்தால் எல்லோருக்கும் இது ஒத்து வராது.

    மேலும் அவரவர்களின் தேவைகள் + பயன்பாடு அடிப்படையிலேயே இது அமையக்கூடும்.

    பைக், கார் ஓட்டப் பிரியப்படுபவர்கள் ஆட்டோ ஓட்டுவதை ஒரு மாதிரி நினைக்கவும் கூடும். ஆனால் ஆட்டோவில் உள்ள வசதிகள் வேறு எதிலுமே கிடையாது என்பதும் உண்மை தான்.

    கூட்டிக்கழித்துப்பார்த்தால் [Cost Working செய்தால்] எல்லா செலவுகளும் கடைசியில் ஒன்றாகவே இருக்கும். அநாவஸ்யமாக RISK எடுக்காமல், அவர்கள் கேட்கும் தொகையைக் கொடுத்து நல்ல ஆட்டோவிலோ அல்லது நல்ல டாக்ஸியிலோ செல்வதே மிகச் சிறந்ததாகும் என்பது என் தனிப்பட்ட கருத்து.

    பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.

    ReplyDelete
  2. தற்போது சிலவிடங்களில் தனி நபர் ஆட்டோக்களைக் காணமுடிகிறது. தாங்கள் சொன்னது நல்ல தீர்வுதான். ஆனால் நடைமுறைப் படுத்தப்பட்டால் மட்டுமே முழுமையான பலனைப் பெறலாம்.

    ReplyDelete
  3. வீட்டுக்கு ஒரு ஆட்டோ என்றதும் ‘வீட்டுக்கு ஆட்டோ வரும்’ என்று சொல்வார்களே அது போலவோ என நினைத்தேன். நல்ல வேளை பதிவு அதைப்பற்றியதல்ல. ஆனால் எல்லோரும் ஆட்டோ வாங்கிவிட்டால் தெருவில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாதோ? மேலும் திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் சொன்னதுபோல் பெட்ரோல், காப்பீடு, பராமரிப்பு செலவுகளைக் கணக்கெடுத்தால் தனி நபர் ஆட்டோ என்பது இலாபகரமாக இருக்காது என்பதே என் கருத்தும். இருப்பினும் புதிய கருத்தை சொல்லி சிந்திக்க வைத்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  4. தமிழகத்தைத தவிர வெளிமாநிலங்களில் ஆட்டோ கட்டணங்கள் நியாயமாக இருக்கின்றன. காவல்துறையின் கண்ட்ரோலிலும் இருக்கின்றன. தமிழ்நாட்டில் இப்படி செய்ய முடியாததற்கு காரணமாக நிறைய ஆட்டோக்களுக்கு மறைமுக முதலாளிகளாக காவல்துறையினரே இருப்பதுதான் என்கிறார்கள்.... நிஜமோ, பொய்யோ.... போலீசுக்கே வெளிச்சம். சென்னையில் இப்ப கொஞ்சம் ஸ்ட்ரிக்டா சோதனை பண்ணிட்டு வர்றாங்க. நிலைமை மாறுதா பாக்கலாம். என்னைக் கேட்டா... வீட்டுக்கு ஒரு ஆட்டோங்கறதவிட, ஆளுககு ஒரு சைக்கிள்னு வெச்சுக்கிட்டுப் போறது ரொம்ப பெட்டர். செலவும் குறையும், உடல் நலனும் கூடும்.

    ReplyDelete
  5. ஆச்சர்யம்!..
    நேற்று இரவு தான் நானும் எனது நண்பரும் - நாமே நமக்காக ஒரு ஆட்டோ வாங்கிக் கொள்வது பற்றி பேசிக் கொண்டிருந்தோம்..
    இன்று காலையில் -
    மனதில் இருக்கும் குறைகள் அனைத்தும் தங்களது கை வண்ணத்தில்..
    நிச்சயமாக பிரச்னைகளும் மன உளைச்சல்களும் குறைய வேண்டும்!..

    ReplyDelete
  6. ஆட்டோ பற்றிய அலசல் நாட்டு நடப்பை அறிய உதவியாக உள்ளது.
    நன்றி ஐயா.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  7. இது ஒரு நல்ல திட்டம் இருப்பினும் போக்கு வரத்து வசதிகளைக் கருதி வீட்டிற்கு
    ஓர் ஆட்டோ என்று பயன்படுத்த வெளிக்கிட்டால் போக்கு வரத்து நெரிசல்கள் ,
    விபத்துக்கள் வீண் பெற்றோல் செலவு இவைகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளதே
    ஆதலால் பல குடும்பம் ஒன்று சேர்ந்து முடிந்தவரைக் கூட்டாக பயணிக்கும் திட்டத்தினை
    வரையறுத்து தெரிந்த ஆட்டோக்களை அழைத்துச் செல்வதன் மூலம் புரிந்துணர்விற்கு
    உட்பட்ட தொகையைச் செலுத்தி பயணித்தால் செலவும் மிச்சம் பாதுக்கப்பும் இங்கே
    ஓரளவிற்கு உறுதிப்படுத்தப் படும் அல்லவா ?...இது என் தாழ்மையான கருத்தே .
    எது எவ்வாறு இருப்பினும் சமூக நலன் கருதித் தாங்கள் எடுக்கும் முயற்சியானது
    போற்றுதற்குரியது வாழ்த்துக்கள் அன்புச் சகோதரனே .அருமையான இப் பகிர்விற்கு மிக்க நன்றி .

    ReplyDelete
  8. புதிய யோசனைதான்!
    பயன்படுத்தினால்தான் தெரியும் சரிவருமா என்பது!
    பின்னூட்டங்களிலும் சாதக, பாதகங்களுடன் கருத்துக்கள்.
    நன்றி!

    ReplyDelete
  9. கருத்து புதுமைதான்.ஆனால் நடை முறைக்கு ஒத்துவருமா?
    ஆட்டோக்காரர்கள் என்றும் மாற மாட்டார்கள்.ஏதாவது செய்யத்தான் வேண்டும்

    ReplyDelete
  10. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...

    அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்!

    // வணக்கம் ஐயா, அருமையான அலசலும் + எளிமையான தீர்வும் சொல்லியுள்ளீர்கள். இதெல்லாம் நடைமுறைக்கு ஒத்து வருமா என்று யோசித்தால் எல்லோருக்கும் இது ஒத்து வராது.
    மேலும் அவரவர்களின் தேவைகள் + பயன்பாடு அடிப்படையிலேயே இது அமையக்கூடும். //

    வீட்டுக்கு ஒரு ஆட்டோ என்பது நடைமுறைக்கு ஒத்து வராவிட்டாலும், நாளடைவில் நாடு முழுக்க தனிநபர் ஆட்டோ (PRIVATE AUTO) என்பது கார் போல பயன்பாட்டுக்கு வந்துவிடும்.

    // பைக், கார் ஓட்டப் பிரியப்படுபவர்கள் ஆட்டோ ஓட்டுவதை ஒரு மாதிரி நினைக்கவும் கூடும். ஆனால் ஆட்டோவில் உள்ள வசதிகள் வேறு எதிலுமே கிடையாது என்பதும் உண்மை தான். //

    // கூட்டிக்கழித்துப்பார்த்தால் [Cost Working செய்தால்] எல்லா செலவுகளும் கடைசியில் ஒன்றாகவே இருக்கும். அநாவஸ்யமாக RISK எடுக்காமல், அவர்கள் கேட்கும் தொகையைக் கொடுத்து நல்ல ஆட்டோவிலோ அல்லது நல்ல டாக்ஸியிலோ செல்வதே மிகச் சிறந்ததாகும் என்பது என் தனிப்பட்ட கருத்து. பகிர்வுக்கு நன்றிகள், ஐயா. //

    தங்களது அனுபவபூர்வமான நீண்ட நெடிய விளக்கத்திற்கு நன்றி!

    ReplyDelete
  11. மறுமொழி > Dr B Jambulingam said...

    முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  12. மறுமொழி > பால கணேஷ் said...

    மின்னல் வரிகள் பால கணேஷ் அவர்களின் வருகைக்கும் நீண்ட கருத்துரைக்கும் நன்றி!

    // .... .... என்னைக் கேட்டா... வீட்டுக்கு ஒரு ஆட்டோங்கறதவிட, ஆளுககு ஒரு சைக்கிள்னு வெச்சுக்கிட்டுப் போறது ரொம்ப பெட்டர். செலவும் குறையும், உடல் நலனும் கூடும். //

    ஆசை ஆசையாய் சைக்கிள் ஓட்டிய காலம் போய்விட்டது.

    ReplyDelete
  13. மறுமொழி > துரை செல்வராஜூ said...

    சகோதரர் துரை செல்வராஜூ அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    // ஆச்சர்யம்!..நேற்று இரவு தான் நானும் எனது நண்பரும் - நாமே நமக்காக ஒரு ஆட்டோ வாங்கிக் கொள்வது பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.. இன்று காலையில் - மனதில் இருக்கும் குறைகள் அனைத்தும் தங்களது கை வண்ணத்தில்.. நிச்சயமாக பிரச்னைகளும் மன உளைச்சல்களும் குறைய வேண்டும்!.. //

    சிலசமயம் நாம் நினைப்பது போலவே நம்மோடு தொடர்பு உடையவர்களும் அப்போதே எண்ணுவதை தொலைவில் உண்ர்தல் என்கிறார் மறைமலையடிகள்.

    இன்று இல்லாவிட்டாலும் என்றேனும் ஒருநாள் நாடு முழுக்க தனிநபர் ஆட்டோ பயன்பாடு பரவலாக வந்து விடும்.



    ReplyDelete
  14. மறுமொழி > kovaikkavi said...

    சகோதரி கவிஞர் வேதா. இலங்காதிலகம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  15. மறுமொழி > அம்பாளடியாள் வலைத்தளம் said...

    சகோதரி அம்பாளடியாள் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    // இது ஒரு நல்ல திட்டம் இருப்பினும் போக்கு வரத்து வசதிகளைக் கருதி வீட்டிற்கு ஓர் ஆட்டோ என்று பயன்படுத்த வெளிக்கிட்டால் போக்கு வரத்து நெரிசல்கள் ,விபத்துக்கள் வீண் பெற்றோல் செலவு இவைகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளதே
    ஆதலால் பல குடும்பம் ஒன்று சேர்ந்து முடிந்தவரைக் கூட்டாக பயணிக்கும் திட்டத்தினை வரையறுத்து தெரிந்த ஆட்டோக்களை அழைத்துச் செல்வதன் மூலம் புரிந்துணர்விற்கு உட்பட்ட தொகையைச் செலுத்தி பயணித்தால் செலவும் மிச்சம் பாதுக்கப்பும் இங்கே ஓரளவிற்கு உறுதிப்படுத்தப் படும் அல்லவா ?...இது என் தாழ்மையான கருத்தே .//

    தனிநபர் ஆட்டோ என்பது ஏற்கனவே உள்ள திட்டம்தான். நடைமுறையில் அதிகமாக்கப் படவில்லை என்பதே உண்மை. கூட்டுறவு சங்கங்கள் உதவியில் செயல்படும் தொழில்கள் யாவும் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் பயன்பாட்டைத் தரவேண்டும் என்பது விதி. ஆனால் இங்குள்ள பலர் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் கிடைத்த ஆட்டோ தொழிலில் நியாயமான கட்டணங்களை வசூலிப்பதில்லை.

    // எது எவ்வாறு இருப்பினும் சமூக நலன் கருதித் தாங்கள் எடுக்கும் முயற்சியானது போற்றுதற்குரியது வாழ்த்துக்கள் அன்புச் சகோதரனே .அருமையான இப் பகிர்விற்கு மிக்க நன்றி//

    தங்கள் அன்பிற்கும் பாராட்டிற்கும் நன்றி.

    ReplyDelete
  16. மறுமொழி > அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

    சகோதரர் அ.முஹம்மது நிஜாமுத்தீன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  17. மறுமொழி > kuppu sundaram said...

    சகோதரர் குப்பு சுந்தரம் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    // கருத்து புதுமைதான்.ஆனால் நடை முறைக்கு ஒத்துவருமா?
    ஆட்டோக்காரர்கள் என்றும் மாற மாட்டார்கள்.ஏதாவது செய்யத்தான் வேண்டும் //

    ஆட்டோக்காரர்கள் மாறமாட்டார்கள் என்பது உண்மைதான். நாம் மாறிக் கொள்ள வேண்டியதுதான்.

    ReplyDelete
  18. வணக்கம்
    ஐயா.

    தங்களின் பதிவை பார்த்த போது தங்கள் சொல்வது சரிதான் முச்சக்கர வண்டி கட்டணம் கண்மூக்கு தெரியாமல் உயர்கிறது.. அரசு நாளுக்கு நாள் மாதத்துக்கு மாதம் எரிபொருள் விலையை உயர்த்துகிறது.. அதனால் மாதத்துக்கு மாதம் நாளுக்கு நாள் உயர்கிறது... .இதில் தப்பில்லை ஐயா.. பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  19. சிறப்பான சிந்தனை ஐயா
    என்ன கார் ஓட்டுவதற்கு பதில் ஆட்டோவா என சிலர் தயங்கலாம்
    ஆனாலும் நடைமுறைக்கு ஒத்துவரக்கூடியதுதான்
    நன்றி ஐயா

    ReplyDelete
  20. நல்ல யோசனை தான்...

    தங்களின் [கோபமான] ஆதங்கமும் புரிகிறது...

    ReplyDelete
  21. மறுமொழி > வே.நடனசபாபதி said...

    அய்யா வே.நடனசபாபதி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    // வீட்டுக்கு ஒரு ஆட்டோ என்றதும் ‘வீட்டுக்கு ஆட்டோ வரும்’ என்று சொல்வார்களே அது போலவோ என நினைத்தேன். நல்ல வேளை பதிவு அதைப்பற்றியதல்ல. ஆனால் எல்லோரும் ஆட்டோ வாங்கிவிட்டால் தெருவில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாதோ? மேலும் திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் சொன்னதுபோல் பெட்ரோல், காப்பீடு, பராமரிப்பு செலவுகளைக் கணக்கெடுத்தால் தனி நபர் ஆட்டோ என்பது இலாபகரமாக இருக்காது என்பதே என் கருத்தும்.//

    பதிவை வெளியிட்ட பிறகுதான், பதிவின் தலைப்பை வேறு விதமாக வைத்து இருக்கலாமோ என்ற எண்ணம் வந்தது. ஆனால் அதற்குள் பின்னூட்டங்கள் வந்து விட்டன. தனி நபர் ஆட்டோவில் இலாபம் இல்லையென்றாலும் நிறைய பயன்பாடுகள் உள்ளன என்பது எனது தாழ்மையான கருத்து.

    // இருப்பினும் புதிய கருத்தை சொல்லி சிந்திக்க வைத்தமைக்கு நன்றி! //

    ஒவ்வொரு முறையும் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து, எங்கள் பகுதிக்கு ஆட்டோவில் செல்ல பஸ் கட்டணத்தைப் போல 30 மடங்கு (Rs 5 x 30 – 150 ) கொடுக்கும்போதும் இந்த தனிநபர் ஆட்டோ பற்றிய எண்ணம் வரும். எங்கள் பகுதி ரெஸ்டாரண்ட் உரிமையாளர் ஆட்டோ ஓட்டிச் செல்வதை அடிக்கடி பார்த்ததால் எழுதிய கட்டுரை இது. எனவே இது பழைய கருத்தின் விரிவாக்கம்தான். பொது மக்கள் மத்தியில் கொஞ்சம் போட்டு வைக்கிறேன்.

    ReplyDelete
  22. வணக்கம் ஐயா
    வித்தியாசமான சிந்தனை. புதிய கருத்து வரும் போது பலரும் தயங்க தான் செய்வார்கள். நீங்கள் குறிப்பிட்டது போல பல நன்மைகள் இருப்பது அனுபவத்தில் உணர்ந்தவர்களுக்கு தெரியும். வீட்டுக்கொரு ஆட்டோ நினைத்தால் நன்றாக தான் இருக்கிறது. இருப்பினும் செயல்படுத்துவதிலும் பராமரிப்பதிலும் பல இடர்பாடுகள் இருப்பதையும் மறுப்பதற்கில்லை. தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்திருக்கிறீர்கள் அரசு செவி மடிக்குமா என்பதைப் பார்ப்போம். பகிர்வுக்கு நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  23. வீட்டுக்கு ஒரு ஆட்டோ. கேட்பதற்கு நன்றாகவே இருக்கிறது. அதுதான் இப்போது சிறிய கார்கள் வந்துவிட்டதே. இருக்கும் வசதிகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதே சரியாய் இருக்கும் என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  24. மறுமொழி > ரூபன் said...
    // வணக்கம் ஐயா. தங்களின் பதிவை பார்த்த போது தங்கள் சொல்வது சரிதான் முச்சக்கர வண்டி கட்டணம் கண்மூக்கு தெரியாமல் உயர்கிறது.. அரசு நாளுக்கு நாள் மாதத்துக்கு மாதம் எரிபொருள் விலையை உயர்த்துகிறது.. அதனால் மாதத்துக்கு மாதம் நாளுக்கு நாள் உயர்கிறது... .இதில் தப்பில்லை ஐயா.. பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா.//

    கவிஞருக்கு வணக்கம்! காரையே கட்டி மேய்க்கும்போது ஆட்டோவையும் ஓட்டித்தான் பார்ப்போமே! தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  25. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said... ( 1, 2 )

    சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
    // சிறப்பான சிந்தனை ஐயா என்ன கார் ஓட்டுவதற்கு பதில் ஆட்டோவா என சிலர்தயங்கலாம் ஆனாலும் நடைமுறைக்கு ஒத்துவரக்கூடியதுதான் நன்றி ஐயா //
    இன்று இல்லாவிட்டாலும் என்றேனும் ஒருநாள் நாடு முழுக்க தனிநபர் ஆட்டோ பயன்பாடு பரவலாக வந்து விடும் என்றே நினைக்கிறேன்.


    ReplyDelete
  26. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...

    சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  27. மறுமொழி > அ. பாண்டியன் said...

    ஆசிரியர் மணவை அ.பாண்டியன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  28. மறுமொழி > G.M Balasubramaniam said...

    அய்யா G.M.B அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    // வீட்டுக்கு ஒரு ஆட்டோ. கேட்பதற்கு நன்றாகவே இருக்கிறது. அதுதான் இப்போது சிறிய கார்கள் வந்துவிட்டதே. இருக்கும் வசதிகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதே சரியாய் இருக்கும் என்று தோன்றுகிறது. //

    சிறிய காரை வாங்க விருப்பம் இல்லாதவர்கள் ஆட்டோவை வாங்கலாம். ஒரே தொந்தரவு, கார்களைப் போல ஆட்டோவை தொலை தூரத்திற்கு எடுத்துச் செல்ல இயலாது.

    ReplyDelete
  29. சமீபத்தில் நான் படித்த செய்தி: கோவையில் மக்கள் ஆட்டோ என்ற நிறுவனம் கால் டாக்சி போன்று கால் ஆட்டோ நிறுவனம் ஒன்றினை ஸ்தாபித்து நூறு ஆட்டோக்களை வாங்கி விட்டு சரியான கட்டணத்தில் பொதுமக்களுக்கு உபயோகப்படும் முறையில் நடத்தியதாகவும், ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் இந்த முயற்சியை போராட்டம் மூலம் எதிர்த்து நிறுத்திவிட்டதாகவும் அறிந்தேன். தொண்டு நிறுவனங்கள் ஏன் இத்தகைய முயற்சிகளை ஊக்குவித்து மக்களுக்குப் பயன் படும் வகையில் செயல்பட உறுதுணையாக இருக்கக் கூடாது? உபயோகிப்பாளர்கள் ஒருங்கிணைந்து ஏன் இவ்வாறான நிறுவனங்களை நடத்த முயலக்கூடாது?

    ReplyDelete
  30. அருமையான ஐடியா. ஆட்டோக்காரர்களின் கொட்டமும் அடங்கும். வருமானம் குறைந்தால்தான் இவர்கள் திருந்துவார்கள்.

    ReplyDelete

  31. சிறந்த அலசல் பதிவுvisit

    http://ypvn.0hna.com/

    ReplyDelete
  32. அற்புதமான யோசனை. இதனால் மன உளைச்சல், பண விரயம் முதற்கொண்டு பல சிக்கல்கள் தவிர்க்கப்படும். ஆனால் இப்படியொரு பதிவைப் போட்டதற்காக ஆட்டோ ஓட்டுநர்கள் எவரும் வழக்கு பதிவு செய்துவிடப்போகிறார்கள். எச்சரிக்கையாக இருக்கவும் ஐயா.

    ReplyDelete
  33. மறுமொழி > Selvadurai said...

    சகோதரர் செல்வதுரை அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  34. மறுமொழி > டிபிஆர்.ஜோசப் said...

    அய்யா டி.பி.ஆர்.ஜோசப் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  35. மறுமொழி > Jeevalingam Kasirajalingam said...

    சகோதரர் ஜீவலிங்கம் காசிராஜலிங்கம் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  36. அய்யா
    பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவர் இதை செய்து ஒரு வார இதழில் படமாக வந்துவிட்டார்.

    சட்டம் தனது சாட்டையை வீசினால் போதும்...
    http://www.malartharu.org/2014/06/rural-children.html

    ReplyDelete
  37. மறுமொழி > கீத மஞ்சரி said...

    // அற்புதமான யோசனை. இதனால் மன உளைச்சல், பண விரயம் முதற்கொண்டு பல சிக்கல்கள் தவிர்க்கப்படும். //

    சகோதரி அவர்களின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!

    // ஆனால் இப்படியொரு பதிவைப் போட்டதற்காக ஆட்டோ ஓட்டுநர்கள் எவரும் வழக்கு பதிவு செய்துவிடப்போகிறார்கள். எச்சரிக்கையாக இருக்கவும் ஐயா. //

    நான் ஒவ்வொரு கட்டுரையையும் வலைப்பதிவில் வெளியிடுவதற்கு முன்னர் இதனால் சட்டப் பிரச்சினை ஏதேனும் வருமா என்பதை ஆலோசித்த பின்னரே வெளியிடுவது வழக்கம். அவ்வாறே இந்த கட்டுரையும் நுகர்வோர் உரிமைகள் (CONSUMER RIGHTS ) என்ற அடிப்படையில், ஏற்கனவே நடைமுறையில் உள்ள தனிநபர் ஆட்டோ ( PRIVATE AUTO ) பற்றிய ஆலோசனைக் கட்டுரைதான் எனவே இதில் சட்ட மீறல் ஏதும் இல்லை.

    சகோதரியின் ந்ல்லெண்ண ஆலோசனைக்கு நன்றி!

    ReplyDelete
  38. புதுமையான கருத்தாக இருக்கிறது ஐயா, காலம் ஒருநாள் மாறலாம் எனநம்புவோம்.
    Killergee
    www.killergee.blogspot.com

    ReplyDelete
  39. மறுமொழி > Mathu S said...

    // அய்யா பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவர் இதை செய்து ஒரு வார இதழில் படமாக வந்துவிட்டார். சட்டம் தனது சாட்டையை வீசினால் போதும்...
    http://www.malartharu.org/2014/06/rural-children.html //

    சகோதரர் எஸ்.மது அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! எனக்கும் இந்த செய்தி ஞாபகம் வருகிறது. ஆனால் முழுமையாக எந்த பத்திரிகை, யார் என்று முழுமையாக நினைவுக்கு வரவில்லை. அந்த புதுமையை செய்தவர் யார், அந்த பத்திரிகை எது என்று தெரிவித்தால் பின்னாளில் உபயோகமாக இருக்கும்.

    ReplyDelete
  40. மறுமொழி > KILLERGEE Devakottai said...

    சகோதரர் கில்ல்ர்ஜீ அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! விரைவில் உங்கள் பதிவின் பக்கம் வருகிறேன்!

    ReplyDelete
  41. பதிவிடுமுன் தாங்கள் மேற்கொண்ட முன்னெச்சரிக்கையுடன் கூடிய ஆலோசனை பற்றிய விளக்கத்துக்கு மிகவும் நன்றி ஐயா.

    ReplyDelete
  42. அருமையான ஐடியா.
    முக்கியமாக ஆட்டோவில்
    போவதால் ஹெல்மெட் அணிய வேண்டியதில்லை.
    வெயிலிலிருந்தும் தப்பிக்கலாம்.

    அனைவரையும் யோசிக்கச் செய்யும் பதிவு ஐயா.

    ReplyDelete
  43. நல்ல யோசனை. தமிழகம் வரும்போது ஆட்டோ ஓட்டுனர்களிடம் ரொம்பவே அவஸ்தைப் பட வேண்டியிருக்கிறது - குறிப்பாக சென்னையில்.....

    தில்லியைப் பொறுத்த வரை ஆட்டோக்களால் பிரச்சனை இல்லை. மீட்டர் போட்டு தான் ஓட்டுகிறார்கள்.

    ReplyDelete
  44. அற்புதமான படைப்புக்களை எந்நாளும் வழங்கி வரும் தங்களுக்கு உலக
    வலைத்தள நாளான இன்று என் இனிய வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில்
    பெருமை கொள்கின்றேன் சகோதரா .என் உள்ளக் கிடக்கையில் கிடந்த
    உணர்வுகளின் பிரதிபலிப்பை இன்றைய சிறப்புப் பகிர்வாகத் தந்துள்ளேன்
    http://rupika-rupika.blogspot.com/2014/06/blog-post_14.html

    ReplyDelete
  45. ஒரு முறை கோவை வந்து பாருங்க. கொள்கைக்காரர்கள். ஆட்டோ என்றால் துள்ளிக்குதித்து ஓடும் அளவிற்கு.

    ReplyDelete
  46. மறுமொழி >
    கருத்துரை தந்த சகோதரிகள் கீத மஞ்சரி, அருணா செல்வம், அம்பாளடியாள் மற்ரும் சகோதரர்கள் வெங்கட் நாகராஜ், ஜோதிஜி திருப்பூர் அனைவருக்கும் நன்றி!

    ReplyDelete