Wednesday 2 April 2014

மரத்தை மறைத்தது ( ஜோதிஜி திருப்பூருக்கு ஒரு மறுமொழி)



சகோதரர் ஜோதிஜி திருப்பூர் அவர்கள் ஆன்மீகம் சம்பந்தமாக தொடர் பதிவு எழுதி வந்தார். அதில் ஆன்மீகப் பற்றும் அடுத்தவர் சொத்தும்? (http://deviyar-illam.blogspot.com/2014/03/blog-post_27.html) என்ற பதிவிற்கு நான்

.... .....கட்டுரையின் இறுதியில் தன்னை உணர்தலே ஆன்மீகம் என்று சுருக்கமாக முடித்து விட்டீர்கள். ஆத்திகரும் நாத்திகரும் யூகங்களின் அடிப்படையில்தான் வாதங்களை வைக்கின்றனர்.

                                      
மரத்தை மறைத்தது மாமத யானை
                                      
மரத்தின் மறைந்தது மாமத யானை
                      
                                                 - திருமூலர் (திருமந்திரம் )

என்று கருத்துரை தந்தேன். ஜோதிஜி அவர்கள் மறுமொழியாக முடிந்தால் இதற்கு விளக்கம் சொல்ல முடியுமா? தெரிந்து கொள்ள விருப்பம்.
 
என்று கேட்டு இருந்தார். அதன் எதிரொலி இந்த கட்டுரை.

ஆன்மீகம் என்ற சொல்:

மனிதன் என்றைக்கு கடவுள் உண்டா இல்லையா என்று சிந்திக்கத் தொடங்கினானோ அன்றைக்கே ஆன்மீகமும் பிறந்து விட்டது. வாழ்க்கை என்றால் என்ன? மனித வாழ்க்கையில் பிறப்புக்கு முன் என்ன? இறப்புக்குப் பின் என்ன? பாவம், புண்ணியம் என்றால் என்ன என்று அனுமானத்தின் அடிப்படையிலும் சில காரண காரியங்களின் அடிப்படையிலும் சொல்வது ஆன்மீகம். இவற்றுள் அறிவியலுக்குப் புறம்பான  மூட நம்பிக்கைகளும் உண்டு. ஆன்மீகம் என்ற சொல்லுக்கு அகராதி சொல்லும் அர்த்தம் என்ன?

வாழ்க்கையின் சாராம்சத்தைப் பற்றியும் மனிதர்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் உள்ள உறவைப் பற்றியதுமான சிந்தனை. SPIRITUALITY  ( நன்றி: க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி)


சுருக்கமாகச் சொல்வதானால் ஆன்மீகம் என்றால் தத்துவ விளக்கம்.

கடவுள் உண்டா இல்லையா?

பொதுவான ஒரு விஷயம். எல்லா மதத்தினரும் நமக்கு மேலே ஒரு சக்தி , ஒரு இறைவன் இருப்பதை ஒப்புக் கொள்கின்றனர். என்னைப் பொறுத்தவரை நமக்கும் மேலே ஏதோ ஒன்று நம்மை வழி நடத்திச் செல்வதாகவே உணர்கின்றேன். எனவே ஏதோ ஒரு சக்தி உள்ளது என்ற இறை நம்பிக்கை உள்ளவன் நான்.

            தென்னாடுடைய சிவனே போற்றி!
                எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி (திருவாசகம்)

என்பது மாணிக்கவாசகர் வாக்கு  அதாவது தமிழ்நாட்டில் இறைவன் பெயரை சிவன் என்று சொல்லி போற்றி வழிபடுகின்றனர்; மற்றவர்கள் அவரவர் சமயச் சார்புக்கு ஏற்ப வெவ்வேறு பெயர்கள் வைத்து இறைவனை வழிபடுகின்றனர் என்பது பொருள். இறைவன் என்பது பொதுப் பெயர்.

            பொங்குபல சமயமெனும் நதிக ளெல்லாம்
           
புகுந்துகலந் திடநிறைவாய்ப் பொங்கி ஓங்கும்
           
கங்குகரை காணாத கடலே எல்லாம்
           
செய்யவல்ல கடவுளே தேவ தேவே!
                                    - திருவருட்பா 3-ம் திருமுறை

என்ற பாடலில் உலகில் உள்ள அனைத்து சமயங்களையும் ஆறுகளாகவும் அனைத்து ஆறுகளும் இறுதியில் ஒன்று சேரும் இடம் கடல் போல இறைவன் எனவும் உருவகப்படுததியுள்ளார் இராமலிங்க அடிகளார்.

கடவுள்  நம்பிக்கை என்பது அவரவர் சூழல், வாழ்க்கை முறை என்று வேறுபடும். பசியால் வாடும் சோமாலியா நாட்டு மக்களுக்கு உணவே தெய்வம். அவர்களிடம் போய் ஆன்மீகத்தை பற்றிப் பேசுவதைவிட உணவைக் கொடுத்து வயிற்றுப் பசியை தீர்ப்பதே மேல். கண்ணதாசன் இறைவன் பற்றி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு மாதிரி பாடுகிறார்.

ஆண் குரல்:
இறைவன் இருக்கின்றானா?
மனிதன் கேட்கிறான்
அவன் இருந்தால் உலகத்திலே
எங்கே வாழ்கிறான்? எங்கே வாழ்கிறான்?
நான் ஆத்திகனானேன் அவன் அகப்படவில்லை
நான் நாத்திகனானேன் அவன் பயப்படவில்லை

பெண்குரல்:

மனிதன் இருக்கின்றானா?
இறைவன் கேட்கிறான்
அவன் இருந்தால் உலகத்திலே
எங்கே வாழ்கிறான்?  எங்கே வாழ்கிறான்?
நான் அன்பு காட்டினேன் அவன் ஆட்கொள்ளவில்லை
இந்தத் துன்பம் தீர்க்கவும் அவன் துணை வரவில்லை


               - பாடல்: கண்ணதாசன் ( படம்: அவன் பித்தனா?)

அவரின், இன்னொரு பாடல் வரிகள், இவை.

பசித்த வயிற்றில் உணவு தெய்வம்
பாலைவனத்தில் தண்ணீர் தெய்வம்
கொட்டும் மழையில் கூரை தெய்வம்
கோடை வெயிலின் நிழலே தெய்வம்  
           - பாடல்: கண்ணதாசன் (படம்: எங்க வீட்டுப் பெண்)

இதே கண்ணதாசன் வேறு ஒரு இடத்தில் உள்ளம் என்பது ஆமை என்று தொடங்கும் திரைப்படப் பாடல் ஒன்றில்,

தெய்வம் என்றால் அது தெய்வம் - வெறும்
சிலையென்றால் அது சிலைதான்
உண்டென்றால் அது உண்டு
உண்டென்றால் அது உண்டு
இல்லையென்றால் அது இல்லை
இல்லையென்றால் அது இல்லை

-          பாடல்: கண்ணதாசன் (படம்:பார்த்தால் பசி தீரும்)


என்று சொல்லுகிறார்.


கவிஞர் கண்ணதாசன் அவர்கள் இன்னொரு இடத்தில் உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக என்று தொடங்கும் திரைப்படப் பாடல் ஒன்றில்,

காற்றில் மிதக்கும் ஒலிகளிலே
கடலில் தவழும் அலைகளிலே
இறைவன் இருப்பதை நானறிவேன்
என்னை அவனே தானறிவான்
           கவிஞர் கண்ணதாசன் (படம்: பாசம்)

என்று சொல்கிறார். கடவுளைத் தேடிதேடி அலைந்தவர்களைப் பற்றியும் அந்தக் கடவுள் எங்கிருக்கிறார் என்பது பற்றியும் சிவவாக்கியர் என்ற சித்தர்
 
            ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை
             நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய்
            வாடி வாடி வாடி வாடி மாண்டு போன மாந்தர்கள்
            கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே
                                                                                          - சிவவாக்கியர்

என்று பேசுகிறார். எனவே ஒருவன் நான் கடவுளை உணர்ந்தேன் என்று சொல்லுகிறான். இன்னொருவன் எனக்குத் தெரியவில்லை என்கிறான். உணர்பவனுக்குத் தெரியும் கடவுள், உணரர்தவனுக்குத் தெரிய நியாயமில்லை.

மரமும் யானையும்:

சைவசமயத்தில் திருமூலர் என்ற சித்தர் குறிப்பிடத் தக்கவர். இவர் எழுதிய திருமந்திரம் பத்தாம் திருமுறை என்று போற்றப்படுகிறது. இதிலுள்ள பாடல்கள் அனைத்தும் மறைபொருள் விளக்கமாகவே இருப்பதைக் காணலாம். மரத்தை மறைத்தது மாமத  யானை என்ற பாடல் பலராலும் அடிக்கடி மேற்கோளாகக் காட்டப்படும் பாடல்களில் ஒன்று. அவர் எழுதிய பாடலுக்கு விளக்கம் சொல்லலாம். ஆனால் முழுமையாகச் சொல்ல முடியாது. காரணம் திருமந்திரம் போன்ற சித்தர்களின் பாடல்கள்,  படிக்கும் ஒவ்வொரு முறையும் ஒரு அர்த்தம் தரக் கூடியவை.

ஒருவன் கோயிலுக்கு போகிறான். பெரிய யானை ஒன்று நின்று கொண்டிருக்கிறது. அவனுக்கு யானை என்றால் பயம். எனவே மனதினில் கலவரம் தோன்ற பயத்தால் நின்று விடுகிறான். நேரம் ஆக ஆக அந்த யானை அசைவேதும் இல்லாது இருப்பதைக் காணுகிறான். பயம் தெளிந்து இன்னும் கொஞ்சம் நெருங்கிப் பார்க்கும் போது அது மரத்தினால் ஆன யானை என்பதனைத் தெரிந்து கொள்கிறான். பின்னர் இன்னும் நெருங்கி அந்த மரச் சிற்பத்தை தொட்டு பார்க்கிறான். முதன் முதலில் பார்க்கும்போது அவனது மனதில் அது யானை என்ற உணர்வே இருந்ததால் அது மரத்தால் ஆனது என்ற உணர்வு இல்லை. மரம் என்று தெரிந்த பிறகு அவனது மனதினில் அது யானையாகத் தோன்றவில்லை.

இதே போலத்தான் பரம்பொருள் என்று ஒன்று இருப்பதை மனிதனிடம் உள்ள, ஆணவம்,கன்மம், மாயை என்ற மும்மலங்கள் (அழுக்கு) மறைக்கின்றன. இவற்றுள் ஆணவம் என்பது மனத்திமிர். கன்மம் (கர்மம்) என்பது ஊழ் அல்லது விதி. மாயை என்பது பொய்யான தோற்றம். இந்த மூன்றையும் நீக்கிவிட்டு பரம்பொருளை உணரலாம்.

                     மரத்தை மறைத்தது மாமத  யானை
                    
மரத்தின் மறைந்தது மாமத யானை
                    
பரத்தை மறைத்தது பார்முதற் பூதம்
                    
பரத்தின் மறைந்தது பார்முதற் பூதமே
                                                     - திருமூலர் (திருமந்திரம் 2290)

பொதுவாக சித்தர் பாடல்களை மேலெழுந்தவாறு படிக்கும் போது ஒரு அர்த்தமும், உள்நுழைந்து பார்க்கும் போது வேறு நுட்பமான கருத்தும் இருக்கும். இந்த பாடலை  கல்லைக் கண்டால் நாயைக் காணோம்; நாயைக் கண்டால் கல்லைக் காணோம் என்ற ஒரு பழமொழியோடு ஒப்பிட்டு சுருங்க விளங்கிக் கொள்ளலாம். மேலே சொன்ன யானை சிற்பத்திற்குப் பதிலாக அந்த இடத்தில் நாய் சிற்பத்தை வைத்துப் பார்க்கலாம். (சிறு தெய்வ வழிபாட்டுக் கோயில்களில் நாய் சிற்பத்தைக் காணலாம்) ஆனால் நாளடைவில் இந்த பழமொழியின் விளக்கம் என்பது நாயை அடிக்க கல் என்று மாறி விட்டது.

பெரும்பாலும் ஆன்மீகப் பேச்சு  என்றாலே பற்றறு இருத்தல், நிலையாமை என்றுதான் முடியும். ஆனால் இக்கால நடைமுறையில் நாம் எல்லாவற்றையும் உதறிவிட்டு போவது என்பது முடியாது எனவே குடும்பப் பொறுப்பில் உள்ளவர்கள் ஆன்மீகம் பற்றித் தெரிந்து கொள்வதில் தேவையான விஷயங்களை எடுத்துக் கொள்வதில் தவறு இல்லை. ஆன்மீகம் பற்றி சுவாரஸ்யமாகப் பேசலாம், எழுதலாம், கேட்கலாம்.. விடைதெரியாத கேள்விகள் ஆயிரமாயிரம் உள்ள இந்த உலகில் ஆன்மீகம் என்பது நமக்கு ஒரு ஆறுதல்! 

(குறிப்பு : இரண்டு நாட்களுக்கு முன்னரே எழுதி வைத்த இந்த கட்டுரையை எனது வலைத்தளத்தில் பதிவு செய்தபோதுதான், சகோதரர் ஜோதிஜி திருப்பூர் அவர்களின் மேலே சொன்ன அதே பதிவுக்கு சகோதரர் ஜெயதேவ் தாஸ் அவர்களும் பதிலுக்கு  ஒரு கட்டுரையை எழுதியுள்ளார் என்ற விவரம் தெரிய வந்தது)




48 comments:

  1. ஆன்மிகம் என்பது அனுபவம் மட்டுமே. உண்டு என்றால் தெய்வம் உண்டு, இல்லை என்றால் தெய்வம் இல்லை.. மனதில் தான் அனைத்தும் உண்டு, தம் மனமும், தம் எண்ணமும் மட்டுமே உயர்வானது என எண்ணிய மனித மனம் கர்வத்தையும் குரோதத்தையும் வளர்க்கும் இடமாய் அமைகின்றது.. ஆன்மிகம் தனி மனித ஆற்றலை வளர்க்குமானால் நல்லது, அதுவே மற்றவனை அழிக்கும் எனில் அது வெறும் குப்பை தான். மனிதாபிமானமே வாழ்வில் பிரதானமானது. மனிதத்துவம் தான் நம் மனித இனத்தையும் பண்பாட்டையும் சமூகத்தையும் காத்து வருகின்றது. மனிதமுள்ள ஆன்மிகம் தெய்வமாகிவிடும், மனிதமற்ற ஆன்மிகம் சூன்யமாகிவிடும்.. !ஆன்மிகம் போலித்தனங்களையும் பொய்மைகளையும் கட்டுக்கதைகளையும் உள்ளடக்கி மனிதம் கொல்லும் போது, அங்கு நாத்திக வாழ்வியல் வளரத்தொடங்குகின்றது.. நாத்திகமோ ஆத்திகமோ மனிதமும் ஜீவகாருண்யமும் மாத்திரமே உள்ளங்களில் தங்கும் வாழ்வை உயர்த்தும்..

    ReplyDelete
  2. மறுமொழி >ரா. விவரணன் said...

    பொதுவான கருத்துரை தந்த சகோதரர் ரா விவரணன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  3. //இதே போலத்தான் பரம்பொருள் என்று ஒன்று இருப்பதை மனிதனிடம் உள்ள, ஆணவம்,கன்மம், மாயை என்ற மும்மலங்கள் (அழுக்கு) மறைக்கின்றன. இவற்றுள் ஆணவம் என்பது மனத்திமிர். கன்மம் (கர்மம்) என்பது ஊழ் அல்லது விதி. மாயை என்பது பொய்யான தோற்றம். இந்த மூன்றையும் நீக்கிவிட்டு பரம்பொருளை உணரலாம்.//

    விளக்கங்கள் எல்லாமே மிகவும் அருமையாக உள்ளன.

    // மரத்தை மறைத்தது மாமத யானை
    மரத்தின் மறைந்தது மாமத யானை//

    திருமூலர் திருமந்திரம் பற்றி தாங்கள் சொல்லி இன்று மீண்டும் கேட்டதில் மேலும் மகிழ்ச்சி.

    ReplyDelete
  4. திருமந்திரம் சொல்லாதது ஒன்றுமில்லை என்பார்கள். மகப்பேறு பற்றி கூட திருமந்திரத்தில் உண்டு என ஒரு மருத்துவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆன்மீகம் பற்றிய விளக்கம் அருமை. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. இதையேதான் ஆழ்வாரும் உளன் எனில் உளன்; இலன் எனில் இலன் என்கிறார், இல்லையா?
    இன்றைக்குத்தான் 'மரத்தில் மறைந்தது மாமதயானை' பாடலின் நான்கு வரிகளையும் தெரிந்து கொண்டேன்.
    அடுத்த இரண்டு வரிகளுக்கும் கூட விளக்கம் எழுதுங்களேன், ப்ளீஸ்!
    ஆத்திகனாக இருந்து கடவுளை நம்புவதோ, நாத்திகனாய் இருந்து கடவுள் இல்லை என்று தீர்மானமாகச் சொல்லுவதோ, அவரவர் விருப்பம். ஆனால் இரண்டுக்கும் இடையே ஊசலாடுபவர்கள் பாடுதான் திண்டாட்டம்.

    ReplyDelete
  6. நல்ல பதிவு
    //முதன் முதலில் பார்க்கும்போது அவனது மனதில் அது யானை என்ற உணர்வே இருந்ததால் அது மரத்தால் ஆனது என்ற உணர்வு இல்லை. மரம் என்று தெரிந்த பிறகு அவனது மனதினில் அது யானையாகத் தோன்றவில்லை.//

    முதலில் இறைவன் என்று தோன்றும் பிறகு ஆன்மீக முன்னேற்றத்தில் அது இறைவன் என்ற வேறு ஒன்று அல்ல தான் தான் அது என்று தோன்றும்

    ReplyDelete
  7. குறிப்பிட்ட பாடல்களை எல்லாம் எனது தளத்தில் கருத்துரையாக சொல்லி உள்ளதையும் அறிவேன்... விளக்கங்களுக்கு நன்றி ஐயா...

    ReplyDelete
  8. தக்க உதாரணங்களுடன் தெளிவாக விளக்கியுள்ளீர்கள்!

    ReplyDelete
  9. ஆன்மீகம் என்பது - எல்லாவற்றையும் நடைமுறையில் உதறிவிட்டு போவது அல்ல!..
    அதனின்று - பற்றற்று - நீங்கி இருத்தலே!..
    தாமரை இலைத் தண்ணீர் போல - பற்றுகள் அற்ற நிலையில் - இருக்கும் ஒருவரால் பாவச் செயல்களைச் செய்ய இயலாது.

    விடை தெரியாத கேள்விகள் ஆயிரமாயிரம் உள்ளன - என்பது கூட மாயையே!..
    உள்முகச் சிந்தனையில் அவரவர்க்கும் விடைகள் காத்திருக்கின்றன.

    அருமையான விளக்கங்களுடன் இனிய பதிவு.

    ReplyDelete
  10. பதிவைப் படித்துக் கொண்டு வரும்போது நான் எழுதி இருந்த கடவுள் என்பது அறிவா உணர்வா என்னும் பதிவு நினைவுக்கு வந்தது. சுட்டி தருகிறேன் படித்துக்கருத்துக் கூறுங்கள்
    gmbat1649.blogspot.in/ 2013/03/blog-post_26.html

    ReplyDelete
  11. நல்ல விளக்கம்
    எடுத்தாண்ட கவிதைகள் அனைத்தும்
    மிக மிக அருமையானவை
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...

    // விளக்கங்கள் எல்லாமே மிகவும் அருமையாக உள்ளன.//

    திரு VGK அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  13. மறுமொழி > வே.நடனசபாபதி said...

    அய்யா வே.நடனசபாபதி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    // திருமந்திரம் சொல்லாதது ஒன்றுமில்லை என்பார்கள். மகப்பேறு பற்றி கூட திருமந்திரத்தில் உண்டு என ஒரு மருத்துவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆன்மீகம் பற்றிய விளக்கம் அருமை. வாழ்த்துக்கள்! //

    பத்தாம் திருமுறை என்று திருமந்திரம் சிறப்பிக்கப்பட்ட ஒன்றே இதன் பெருமையை உணர்த்தும்.

    ReplyDelete
  14. மறுமொழி > Ranjani Narayanan said...

    சகோதரி ரஞ்சனி நாராயணன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    // இதையேதான் ஆழ்வாரும் உளன் எனில் உளன்; இலன் எனில் இலன் என்கிறார், இல்லையா?//

    ஒரு சிறந்த மேற்கோள் (நம்மாழ்வார்) ஒன்றை எனக்கு எடுத்துக் கொடுத்தமைக்கு நன்றி!

    //இன்றைக்குத்தான் 'மரத்தில் மறைந்தது மாமதயானை' பாடலின் நான்கு வரிகளையும் தெரிந்து கொண்டேன். அடுத்த இரண்டு வரிகளுக்கும் கூட விளக்கம் எழுதுங்களேன், ப்ளீஸ்!//

    திருமந்திரம் பற்றிய ஒரு தனிக் கட்டுரையை எழுதும்போது நிச்சயம் எழுதுகிறேன்!

    // ஆத்திகனாக இருந்து கடவுளை நம்புவதோ, நாத்திகனாய் இருந்து கடவுள் இல்லை என்று தீர்மானமாகச் சொல்லுவதோ, அவரவர் விருப்பம். ஆனால் இரண்டுக்கும் இடையே ஊசலாடுபவர்கள் பாடுதான் திண்டாட்டம். //

    சரியாகச் சொன்னீர்கள். சிலர் வெளியுலகிற்காக நடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

    ReplyDelete
  15. மறுமொழி > R.Puratchimani said..

    சகோதரர் ஆர் புரட்சிமணி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!.

    ReplyDelete
  16. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said..
    .
    // குறிப்பிட்ட பாடல்களை எல்லாம் எனது தளத்தில் கருத்துரையாக சொல்லி உள்ளதையும் அறிவேன்... விளக்கங்களுக்கு நன்றி ஐயா... //

    சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி! கவிஞர்கள் கண்ணதாசனும், வாலியும் திரைப்படப் பாடல்கள் மூலம் எளிமையாக ஆன்மீகக் கருத்துக்களை மக்கள் மனதில் பதியச் செய்தவர்கள் என்பதில் ஐயமில்லை!

    ReplyDelete
  17. கே. பி. ஜனா... said...

    // தக்க உதாரணங்களுடன் தெளிவாக விளக்கியுள்ளீர்கள்! //

    எழுத்தாளர் கே பி ஜனா அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  18. மறுமொழி > துரை செல்வராஜூ said..

    சகோதரர் தஞ்சையம்பதி செல்வராஜூ அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    // ஆன்மீகம் என்பது - எல்லாவற்றையும் நடைமுறையில் உதறிவிட்டு போவது அல்ல!.. அதனின்று - பற்றற்று - நீங்கி இருத்தலே!.. தாமரை இலைத் தண்ணீர் போல - பற்றுகள் அற்ற நிலையில் - இருக்கும் ஒருவரால் பாவச் செயல்களைச் செய்ய இயலாது. //

    ஆன்மீகம் பற்றிய தங்களது தெளிவான அறிவுறுத்தலுக்கு நன்றி! நானும் ஆன்மீகத்தை ஒரு விட்டேற்றியாக எண்ணி எழுதவில்லை. கடைசியில் ஆன்மீக விவாதம் என்பது சூனியத்தில் நிலைப்பு என்ற எண்ணத்திலேயே முடியும் என்பதால் அவ்வாறு எழுதினேன்.

    // விடை தெரியாத கேள்விகள் ஆயிரமாயிரம் உள்ளன - என்பது கூட மாயையே!.. உள்முகச் சிந்தனையில் அவரவர்க்கும் விடைகள் காத்திருக்கின்றன. அருமையான விளக்கங்களுடன் இனிய பதிவு. //

    தங்கள் இனிய கருத்திற்கு மீண்டும் நன்றி!


    ReplyDelete
  19. மறுமொழி > G.M Balasubramaniam said...

    அய்யா GMB அவர்களின் கருத்துரைக்கும், தங்கள் பதிவு ஒன்றினை நினைவுபடுத்தியமைக்கும் நன்றி! தங்களது அந்த பதிவினில் நான் இன்று இட்ட கருத்துரை இதுதான்.

    // எங்கும் நிறைந்தவனிடம்
    குறைகளைச் சொல்லி அழ
    ஆலயங்கள் ஏனைய்யா.? //

    // சிறிது நேரம் கழிந்தது.
    கந்தன் என்ன சொன்னான்?
    எங்கும் நிறைந்தவன் என்னிலும்தானே
    நானும் அவனே அவனும் நானே
    இந்தப் பதில்கள் என்னுள்ளே
    இருந்ததுதானே. என்னை நானே
    அறிய அவன் ஒரு கருவியோ? //

    உங்கள் பாடல் வரிகளைப் படித்ததும் அந்த புரட்சிகரமான சித்தர் சிவவாக்கியர் நினைவுக்கு வந்தார்.

    ReplyDelete
  20. மறுமொழி > Ramani S said... ( 1, 2 )

    // நல்ல விளக்கம் எடுத்தாண்ட கவிதைகள் அனைத்தும்
    மிக மிக அருமையானவை பகிர்வுக்கு வாழ்த்துக்கள் //

    கவிஞர் ரமணி அவர்களுக்கு நன்றி!


    ReplyDelete
  21. உங்கள் அக்கறைக்கு நன்றி. மிக அற்புதமான பதிவு.

    ReplyDelete
  22. தி.தமிழிளங்கோ சார்,

    இறைவன் என்றால் என்னனு எளிமையாக சொல்லிட்டீங்க சரி, அந்த இறைவனை இதே போல எளிமையாக வணங்கிட அனைவருக்கும் ஏன் முடிவதில்லை?

    ஒன்னுமில்லை ஶ்ரீரெங்கம் கோயிலுக்குள்ள போய் பெருமாலுக்கு உங்க கையால் ஒரு மாலைப்போட்டு வர முடியுமா?

    அப்போ மட்டும் வீட்டுல உக்காந்த்து கும்புடுனு சொல்லுவீங்க, அப்போ அந்த கோயில் யாருக்குனு இருக்கு?

    பெரும்ப்பான்மை மக்களுக்கு பயன்ப்படாத சமாச்சாரம்(கடவுள்) பத்தி எதுக்கு கவலைப்படனும்?

    இங்கே ஆகா அருமை, இறைவன் பத்தி சுகமா சொன்னீங்கனு "சிலாகிச்ச" எவராவது ஶ்ரீ ரெங்கம் கோயில் உள்ளே போய் பெருமாலுக்கு ஒரு மாலைப்போட்டு இருக்கேளா?

    இல்லை சிதம்பரம் நடராசனுக்கு மாலைப்போட்டு கும்பீட்டு இருக்கேளா? அப்போ மட்டும் பொத்துனாப்போல 100 அடிக்கு அந்தப்பக்கம் இருந்து எக்கிப்பார்த்து கன்னத்துல போட்டுப்பேள், கடவுள் எல்லாருக்கும் தான் இருக்கானாம் :-))

    ReplyDelete
  23. மறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said...

    // உங்கள் அக்கறைக்கு நன்றி. மிக அற்புதமான பதிவு. //

    சகோதரர் ஜோதிஜி திருப்பூர் அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  24. அருமையான விளக்கங்கள் ஐயா

    ReplyDelete
  25. மறுமொழி > வவ்வால் said...

    வவ்வால் சாருக்கு வணக்கம்! நீங்களும் இன்னும் சிலரும் இந்த பதிவிற்கு வந்தால் என்ன சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தே இந்த பதிவை எழுதத் தொடங்கினேன்..

    // தி.தமிழிளங்கோ சார், இறைவன் என்றால் என்னனு எளிமையாக சொல்லிட்டீங்க சரி, அந்த இறைவனை இதே போல எளிமையாக வணங்கிட அனைவருக்கும் ஏன் முடிவதில்லை? //

    அய்யா காலம் காலமாக இருந்து வரும் ஆத்திகம் – நாத்திகம் வாதத்திற்கு ஒரு தமிழ் இளங்கோவின் பதிவினால் மட்டும் விடை ஏற்பட்டு விடப் போவதில்லை. கடவுளை நம்புவதும் நம்பாததும் அவரவர் மனப்பக்குவத்தைப் பொறுத்தது. இருபது வயதில் நானும் நாத்திகம் பேசியவன்தான்.

    // ஒன்னுமில்லை ஶ்ரீரெங்கம் கோயிலுக்குள்ள போய் பெருமாலுக்கு உங்க கையால் ஒரு மாலைப்போட்டு வர முடியுமா?அப்போ மட்டும் வீட்டுல உக்காந்த்து கும்புடுனு சொல்லுவீங்க, அப்போ அந்த கோயில் யாருக்குனு இருக்கு? //

    // பெரும்ப்பான்மை மக்களுக்கு பயன்ப்படாத சமாச்சாரம்(கடவுள்) பத்தி எதுக்கு கவலைப்படனும்? இங்கே ஆகா அருமை, இறைவன் பத்தி சுகமா சொன்னீங்கனு "சிலாகிச்ச" எவராவது ஶ்ரீ ரெங்கம் கோயில் உள்ளே போய் பெருமாலுக்கு ஒரு மாலைப்போட்டு இருக்கேளா? இல்லை சிதம்பரம் நடராசனுக்கு மாலைப்போட்டு கும்பீட்டு இருக்கேளா? அப்போ மட்டும் பொத்துனாப்போல 100 அடிக்கு அந்தப்பக்கம் இருந்து எக்கிப்பார்த்து கன்னத்துல போட்டுப்பேள், கடவுள் எல்லாருக்கும் தான் இருக்கானாம் :-)) //

    சுற்றி வளைத்து நீங்கள் எப்போதும் எங்கே வருவீர்களோ, அங்கே சரியாக வந்து விட்டீர்கள். எல்லா மதத்திலும் சனாதனிகள் ஆதிக்கம் என்பது கண்கூடு. சனாதன தர்மம் என்பது அவர்களாகவே வகுத்தது. அரசர்களின் ஆதரவில் வளர்ந்தது பிராமணர்களிலும் சவுண்டிகள் என்ற ஒரு பிரிவினரை சாவு, கருமாதி காரியங்களை மட்டுமே செய்யச் சொல்லி காலம் காலமாக அடிமைப்படுத்தி வந்தனர். சனாதன காரியங்கள் யாவும் கடவுளின் பெயரால் ( IN THE NAME OF GOD) நடந்தன. இயேசுவை சிலுவையில் அறைந்ததும் இந்த சனாதனம்தான். நந்தனாரை தீயுனுள் பாயச் செய்ததும் இந்த சனாதனம்தான்.

    இந்து மதத்திலும் சிவவாக்கியர், ஸ்ரீராமானுஜர் போன்ற சீர்திருத்த வாதிகள் எவ்வளவோ சொல்லி இருக்கிறார்கள். ஸ்ரீராமானுஜர் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக மற்றவர்கள் செய்யாத பெரிய சீர்திருத்ததையே செய்து இருக்கிறார். அவரையே கொல்ல முயன்றார்கள். பெரியாரின் நாத்திகம் என்பது தமிழ்நாட்டில் கடைசியில் பிராமண எதிர்ப்பாகவே போய்விட்டது. நாத்திகமதம் எனப்படும் புத்தமததையே உள்வாங்கிக் கொண்டு புத்தரையும் ஒரு அவதாரமாக்கிய பெருமை இந்து மதத்திற்கு உண்டு. எனவே அந்தந்த காலத்திற்கு ஏற்ப போராட்டங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றங்கள் நிகழ்ந்தும் வருகின்றன. வலைப்பதிவில் நீங்களும் உங்களைப் போன்றவர்களும் உங்கள் கருத்தை தெரிவித்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள். காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.





    ReplyDelete
  26. நாத்திக ஆத்திக விவாதங்கள் காலம் காலமாக இருந்து கொண்டுதான் வருகின்றன. எனக்கென்னவோ முழுமையாக ஆத்திகனாகவோ அல்லது முழுமையான ஆத்திகனாகவோ யாரும் இருக்க முடியாது என்றே தோன்றுகிறது.நீங்கள் சொல்வது நாத்திகத்தின் எண்ணத்தை வயது வலுவிழக்க செய்துள்ளது என்பதை பலருடைய வாழ்கையிலிருந்து அறிய முடிகிறது. போலி நாத்த்திக வாதிகளே அதிகம் என்று தோன்றுகிறது. உண்மையான நாத்திகவாதிகள் ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்

    ReplyDelete
  27. "நீங்கள் சொல்வது போல" என்பதில் போல விடுபட்டுள்ளது . சேர்த்து வாசிக்கவும்

    ReplyDelete
  28. மறுமொழி >கரந்தை ஜெயக்குமார் said... ( 1, 2 )

    // அருமையான விளக்கங்கள் ஐயா //

    சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  29. மறுமொழி > டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

    // நாத்திக ஆத்திக விவாதங்கள் காலம் காலமாக இருந்து கொண்டுதான் வருகின்றன. எனக்கென்னவோ முழுமையாக ஆத்திகனாகவோ அல்லது முழுமையான ஆத்திகனாகவோ யாரும் இருக்க முடியாது என்றே தோன்றுகிறது.நீங்கள் சொல்வது போல நாத்திகத்தின் எண்ணத்தை வயது வலுவிழக்க செய்துள்ளது என்பதை பலருடைய வாழ்கையிலிருந்து அறிய முடிகிறது. போலி நாத்த்திக வாதிகளே அதிகம் என்று தோன்றுகிறது. உண்மையான நாத்திகவாதிகள் ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் //

    கருத்துரை தந்த சகோதரர் மூங்கில் காற்று – டி.என்.முரளிதரன் அவர்களுக்கு நன்றி! எல்லாவற்றிலும் போலிகள் இருப்பது போல போலி ஆத்திகவாதிகளும் போலி நாத்திகவாதிகளும் இருக்கின்றனர்

    ReplyDelete
  30. தி.தமிழிளங்கோ சாருக்கு நமஷ்காரம்,

    //நீங்களும் இன்னும் சிலரும் இந்த பதிவிற்கு வந்தால் என்ன சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தே இந்த பதிவை எழுதத் தொடங்கினேன்..//

    நீங்க ஒரு தீர்க்கதரிசி சார் ! அப்படியே இந்த தேர்தலில் யார் ஜெயிப்பாங்கனு சொல்லிட்டிங்கனா புண்ணியமா போகும்!

    #//இருபது வயதில் நானும் நாத்திகம் பேசியவன்தான். //

    பத்துவயசில் நானும் ஆத்திகம் பேசியவன் தான்!

    இப்போ என்ன சங்கர மடத்துக்கு சங்கராச்சாரியராவோ இல்லை ஏதேனும் மடத்துக்கு ஆதினமாவோ ஆக்கிட்டா ஆத்திகம் பேசத்தயார் :-))

    மனிதர்களுக்கு எப்பவும் ஒரு "தப்பிக்கும்"வழி தேவைப்படுது,அதை ஆன்மீகம் வழங்குது!

    சுனாமி கடவுளின் கோபத்தால் உருவாச்சு ,அதில் செத்தவங்க எல்லாம் முற்பிறப்பில் பாவம் செய்தவங்கனு ஆத்திகன் சொல்லுவான், இதை சுனாமில செத்த குடும்பத்தாரிடம் சொன்னால் என்ன செய்வாங்க தெரியுமோ, ஆம் ஆத்மி சின்னத்தால் பாதாதிகேசத்துக்கும் "சிறப்பு பூஜை" செய்வாங்கோ :-))

    #//சனாதன காரியங்கள் யாவும் கடவுளின் பெயரால் ( IN THE NAME OF GOD) நடந்தன. இயேசுவை சிலுவையில் அறைந்ததும் இந்த சனாதனம்தான். நந்தனாரை தீயுனுள் பாயச் செய்ததும் இந்த சனாதனம்தான். //

    அப்படிப்பட்ட கொடுமையை மாற்ற முயல வேண்டும், மாற்ற முடியலைனா ஆதரிக்காமலாவது இருக்கணும்!

    # பூலோகத்தில் மனுசன் செத்தா மீண்டும் மறுப்பிறவி இல்லா நிலையை அடைவதை மோட்சம் என்கிறது ஆத்திகம். அப்படி ஒரு நிலை அடைய புண்ணியம் செய்திருக்கணுமாம்.

    ஆதியில் இருந்து இந்திய ஆத்திகர்கள் யாரும் புண்ணியமே செய்யலை போல,ஏன்னா மோட்சம் அடைந்திருந்தால் ,மீண்டும் பிறந்திருக்க மாட்டாங்க, ஆனால் நிறைய பேரு மீண்டும் பிறக்கிறாங்க போல , ஆதிக்காலத்தை விட இப்போ தான் மக்கள் தொகை அதிகமா இருக்கு :-))

    இந்திய மக்கள் தொகை பெருகாமல் இருக்க உதவும் நோக்கில் எல்லா ஆத்திகர்களும் மோட்சத்துக்கு போயிடுங்க, இல்லைனா மக்கள் தொகைப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியாது :-))
    ----------------------------

    முரளி அவர்களுக்கு போல் ஆத்திகன் யாரும் கண்ணுக்கே தெரியாது போல அவ்வ்.

    போலிநாத்திகனால் பிரச்சினை இல்லை,ஆனால் போலி ஆத்திகன் அடுத்தவன் பொண்டாட்டி பொண்ணுனு வேட்டையாடுறானுங்க,கொலை ,கடத்தல் என பலவும் செய்றாங்க :-))

    ReplyDelete
  31. மறுமொழி > வவ்வால் said... ( 2 )

    வவ்வால் அவர்களின் இரண்டாம் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  32. அருமையான விளக்கங்களுடன் பதிவை எழுதியிருக்கும் தமிழ் இளங்கோ அவர்களுக்குப் பாராட்டுக்கள். 'மரத்தில் மறைந்தது மாமத யானை' பாடலுக்கு திரு ஜோதிஜி கேட்டிருந்த விளக்கம் எழுதலாமா என்று யோசித்துப் பிறகு பேசாமலிருந்துவிட்டேன். நான் என்ன எழுதியிருப்பேனோ அதைவிடவும் சிறப்பாக நீங்கள் விளக்கம் எழுதியிருக்கிறீர்கள்.
    எல்லாம் சரி.
    கவிஞர் கண்ணதாசன் தமது பாடல்கள் மூலம் தெய்வம் பற்றி நிறையப் பேசியிருக்கிறார். அவர் நாத்திகராக இருந்தபோது எழுதிய பாடல்களும் சரி, கடவுள் நம்பிக்கை வந்தபிறகு எழுதிய பாடல்களும் சரி எல்லாமே அருமையானவை. இவையெல்லாம் ஒருபுறமிருக்க -
    அவருடைய புகழ்பெற்ற பாடல்களில் ஒன்றான பாசம் படத்தில் வரும் 'உலகம் பிறந்தது எனக்காக' பாடலை எப்படி நீங்கள் வாலி எழுதிய பாடலாகச் சொல்லியிருக்கிறீர்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. கண்ணதாசன் பெயரை உரக்கச் சொல்லும் பாடல்களில் ஒன்று இது. பாசம் படத்தின் அத்தனைப் பாடல்களும் கவிஞர் எழுதியவையே.
    பொதுவாக எம்ஜிஆருக்காக எழுதப்படும் பாடல்கள் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ அவரைப் பற்றி, அவரது புகழ்பாடும் பாடல்களாகவே அமையும். ஆனால் இந்தப் பாடலில் ஒரு நுட்பம் உண்டு. இது எம்ஜிஆர் பாடலாக, எம்ஜிஆர் பாடும் பாடலாக படத்தில் இடம் பெற்றாலும் தன்னைப் பற்றித்தான் அந்தப் பாடலை எழுதியிருப்பார் கண்ணதாசன். 'தவழும் நிலவாம் தங்கரதம் தாரகைப் பதித்த மணிமகுடம் குயில்கள் வாழும் கலைக்கூடம் கொண்டது எனது அரசாங்கம்' என்று ஒரு கவிஞனின் சிந்தனையைத்தான் சொல்லியிருப்பார்.
    "எம்ஜிஆர் படத்தில் இப்படி 'உங்கள் அரசாங்கத்தை' எப்படி எழுத முடிந்தது?" என்று நான் அவரிடமே கேட்டிருக்கிறேன். சிரித்துக்கொண்டே "கவனிச்சீங்களா?ரொம்பப்பேரால் கவனிக்க முடியாத விஷயம் இது" என்று பதிலிறுத்தார் கவிஞர்.
    திரு வவ்வால்கூட இந்த விஷயத்தைச் சுட்டிக்காட்டத் தவறியிருக்கிறார் என்பதும் ஆச்சரியமே.
    இந்தப் பாடல் பற்றியும் கண்ணதாசனுடைய நுட்பம் பற்றியும் நான் என்னுடைய முன்னொரு பதிவில்கூட எழுதியிருக்கிறேன்.

    ReplyDelete
  33. மறுமொழி > Amudhavan said...

    எழுத்தாளர் அமுதவன் அவர்களின் வருகைக்கும், அன்பான நீண்ட கருத்துரைக்கும் நன்றி!

    // அருமையான விளக்கங்களுடன் பதிவை எழுதியிருக்கும் தமிழ் இளங்கோ அவர்களுக்குப் பாராட்டுக்கள். 'மரத்தில் மறைந்தது மாமத யானை' பாடலுக்கு திரு ஜோதிஜி கேட்டிருந்த விளக்கம் எழுதலாமா என்று யோசித்துப் பிறகு பேசாமலிருந்துவிட்டேன். நான் என்ன எழுதியிருப்பேனோ அதைவிடவும் சிறப்பாக நீங்கள் விளக்கம் எழுதியிருக்கிறீர்கள்.//

    நான் மேற்கோள் சொன்ன திருமந்திரப் பாடலை என்னிடமே சகோதரர் ஜோதிஜி அவர்கள் விளக்கம் கேட்டபோது சற்று தயக்கமாகவே இருந்தது. என்ன எழுதுவது எப்படி தொடங்குவது என்ற குழப்பம்தான் காரணம். திருச்சி நேஷனல் கல்லூரியில் எம்.ஏ (தமிழ்) படித்தபோது எங்களுக்கு வைக்கப்பட்டு இருந்த முக்கிய பாடங்களில் ஒன்று “சைவசித்தாந்தம்”. எனவே அப்போதைய படிப்பின் அடிப்படையில் இந்த கட்டுரையை எழுதினேன். உங்களைப் போன்றவர்கள் எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும். நீங்களும் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    // எல்லாம் சரி. கவிஞர் கண்ணதாசன் தமது பாடல்கள் மூலம் தெய்வம் பற்றி நிறையப் பேசியிருக்கிறார். அவர் நாத்திகராக இருந்தபோது எழுதிய பாடல்களும் சரி, கடவுள் நம்பிக்கை வந்தபிறகு எழுதிய பாடல்களும் சரி எல்லாமே அருமையானவை. இவையெல்லாம் ஒருபுறமிருக்க -//

    தனிப்பட்ட வாழ்க்கையில் கவிஞர் கண்ணதாசன் எப்படி இருந்தபோதிலும் தமிழ் உலகம் போற்றும் சிறந்த கவிஞர் அவர்.

    // அவருடைய புகழ்பெற்ற பாடல்களில் ஒன்றான பாசம் படத்தில் வரும் 'உலகம் பிறந்தது எனக்காக' பாடலை எப்படி நீங்கள் வாலி எழுதிய பாடலாகச் சொல்லியிருக்கிறீர்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. கண்ணதாசன் பெயரை உரக்கச் சொல்லும் பாடல்களில் ஒன்று இது. பாசம் படத்தின் அத்தனைப் பாடல்களும் கவிஞர் எழுதியவையே.//

    க்விஞர் கண்ணதாசன், கவிஞர் வாலி இருவருடைய கவிதைகளையும் மனம் விட்டு ரசித்தவர்களுக்கு, சில பாடல்களில் கண்ணதாசன் எழுதியதா? வாலி எழுதியதா என்ற மயக்கம் அடிக்கடி வரும். கவிஞர் வாலி அவர்களும் தனது மேடைப் பேச்சொன்றில் இதுபற்றி சுட்டிக் காட்டியுள்ளார்.

    அதே மயக்கம் எனக்கும்! தவறினைச் சுட்டி காட்டியமைக்கு நன்றி! எனது பதிவினில் திருத்தி விட்டேன்!

    //பொதுவாக எம்ஜிஆருக்காக எழுதப்படும் பாடல்கள் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ அவரைப் பற்றி, அவரது புகழ்பாடும் பாடல்களாகவே அமையும். ஆனால் இந்தப் பாடலில் ஒரு நுட்பம் உண்டு. இது எம்ஜிஆர் பாடலாக, எம்ஜிஆர் பாடும் பாடலாக படத்தில் இடம் பெற்றாலும் தன்னைப் பற்றித்தான் அந்தப் பாடலை எழுதியிருப்பார் கண்ணதாசன். 'தவழும் நிலவாம் தங்கரதம் தாரகைப் பதித்த மணிமகுடம் குயில்கள் வாழும் கலைக்கூடம் கொண்டது எனது அரசாங்கம்' என்று ஒரு கவிஞனின் சிந்தனையைத்தான் சொல்லியிருப்பார்.
    "எம்ஜிஆர் படத்தில் இப்படி 'உங்கள் அரசாங்கத்தை' எப்படி எழுத முடிந்தது?" என்று நான் அவரிடமே கேட்டிருக்கிறேன். சிரித்துக்கொண்டே "கவனிச்சீங்களா?ரொம்பப்பேரால் கவனிக்க முடியாத விஷயம் இது" என்று பதிலிறுத்தார் கவிஞர்.//

    உங்களுக்கும் திரையுலகிற்கும் மற்றும் தமிழ் இலக்கிய உலகிற்கும் உள்ள நட்பைப் பற்றி உங்கள் பதிவுகளைப் படிப்பதன் மூலம் தெரிந்து வைத்திருக்கிறேன். கவிஞர் கண்ணதாசன் எழுதிய ” உலகம் பிறந்தது எனக்காக” என்ற பாடலைப் பற்றியும் அதன் உண்மை தத்துவம் பற்றியும் உங்கள் மூலமே தெரிந்து கொண்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி! நன்றி!

    // திரு வவ்வால்கூட இந்த விஷயத்தைச் சுட்டிக்காட்டத் தவறியிருக்கிறார் என்பதும் ஆச்சரியமே. இந்தப் பாடல் பற்றியும் கண்ணதாசனுடைய நுட்பம் பற்றியும் நான் என்னுடைய முன்னொரு பதிவில்கூட எழுதியிருக்கிறேன். //

    வவ்வால் சார், எப்போது வருவார் எனறே தெரியாது. திடீரென்று வருவார்.

    ReplyDelete
  34. அமுதவன் சார்,

    // திரு வவ்வால்கூட இந்த விஷயத்தைச் சுட்டிக்காட்டத் தவறியிருக்கிறார் என்பதும் ஆச்சரியமே. இந்தப் பாடல் பற்றியும் கண்ணதாசனுடைய நுட்பம் பற்றியும் நான் என்னுடைய முன்னொரு பதிவில்கூட எழுதியிருக்கிறேன்//

    அடடா இப்படில்லாம் வேற நினைச்சுக்கிறிங்களா அவ்வ்! thanks a lot!


    நாம கூட கண்ணதாசன் எப்படி "அவரைப்பத்தி" படத்தில பாட்டு வச்சிக்கிட்டார்னு ஒருப்பதிவில் பேசினோம் என நினைக்கிறேன்.

    தி.தமிழ் இளங்கோ சார் ரொம்ப நல்லவர் சாத்வீகமாக பதிவு போடுபவர்,எப்ப நம்ம பின்னூட்டத்தினை வெளியிடுவார் எப்ப தூக்கி குப்பையில போட்டு ,உங்க பின்னூட்டம் பதிவுக்கு சம்பந்தமில்லாம இருக்குனு சொல்வார்னே தெரியாது எனவே "ரொம்ப "ஆராய்ச்சிலாம்" செய்து பின்னூட்டுவதில்லை :-))

    இப்பதிவுலகமே "ஒரு நாடகமேடை" எல்லாருக்குமே "நல்ல வசனங்கள்" பேசுவதில் மட்டுமே விருப்பம் :-))

    I know i'm an unwanted or un invited one in these kind of blog, so i will restraint myself! no hard feelings for both :-))

    ReplyDelete
  35. மறுமொழி > வவ்வால் said... ( 3 )

    வவ்வால் சாரின் வருகைக்கு நன்றி!

    // தி.தமிழ் இளங்கோ சார் ரொம்ப நல்லவர் சாத்வீகமாக பதிவு போடுபவர்,எப்ப நம்ம பின்னூட்டத்தினை வெளியிடுவார் எப்ப தூக்கி குப்பையில போட்டு ,உங்க பின்னூட்டம் பதிவுக்கு சம்பந்தமில்லாம இருக்குனு சொல்வார்னே தெரியாது எனவே "ரொம்ப "ஆராய்ச்சிலாம்" செய்து பின்னூட்டுவதில்லை :-)) //

    நான் விமர்சனங்களை வரவேற்பவன். எனது கருத்துரைப் பெட்டியில் (COMMENT BOX) மட்டுறுத்தல் (COMMENT MODERATION) எதுவும் வைக்கவில்லை. எனவே உங்கள் கருத்தை எனது கருத்துரைப் பெட்டியில் பதிவு செய்தவுடனேயே வந்துவிடும். மேலும் Anonymous பகுதியும் உண்டு. இதுவரை நீங்கள் சொன்ன கருத்துரைகள் அனைத்திலும் ஒன்றே ஒன்றினை மட்டும் (அது தனிமனிதர் சொத்து விஷயம் என்பதால்) நீக்கினேன். நீங்களும் அதனை சரிதான் என்று ஏற்றுக் கொண்டது நினைவுக்கு வருகிறது.

    // இப்பதிவுலகமே "ஒரு நாடகமேடை" எல்லாருக்குமே "நல்ல வசனங்கள்" பேசுவதில் மட்டுமே விருப்பம் :-))

    I know i'm an unwanted or un invited one in these kind of blog, so i will restraint myself! no hard feelings for both :-)) //

    வலைப்பதிவு உலகில் ”நண்பர்கள் வட்டம்” (FRIENDS CIRCLE) மட்டுமே உண்டு. “எதிரிகள் வட்டம்” (ENIMIES CIRCLE) என்பது கிடையாது. நான் உங்களை நண்பராகவே நினைக்கிறேன். நீங்கள் எப்போதும் போல உங்கள் பாணியிலேயே சுவாரஸ்யமான விமர்சனம் செய்யவும்.

    “ All the world's a stage,
    And all the men and women merely players.
    They have their exits and their entrances,
    And one man in his time plays many parts “
    - Shakespeare


    ReplyDelete
  36. என் வயதிற்கு ஏற்ற பதிவு! அருமையான ஆய்வு! நன்றி!இளங்கோ!

    ReplyDelete
  37. மறுமொழி > புலவர் இராமாநுசம் said...

    // என் வயதிற்கு ஏற்ற பதிவு! அருமையான ஆய்வு! நன்றி!இளங்கோ! //

    புலவர் அய்யாவின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  38. \\க்விஞர் கண்ணதாசன், கவிஞர் வாலி இருவருடைய கவிதைகளையும் மனம் விட்டு ரசித்தவர்களுக்கு, சில பாடல்களில் கண்ணதாசன் எழுதியதா? வாலி எழுதியதா என்ற மயக்கம் அடிக்கடி வரும். கவிஞர் வாலி அவர்களும் தனது மேடைப் பேச்சொன்றில் இதுபற்றி சுட்டிக் காட்டியுள்ளார்.

    அதே மயக்கம் எனக்கும்!\\

    கவிஞர் வாலி அவர்கள் மறைந்ததும் அவர் பற்றிய பதிவு ஒன்று எழுதினேன். மிகவும் நீளமாகப் போய்விட்டதால் அதனை இரு பிரிவுகளாக்கி முதல் பிரிவை என்னுடைய வலைத்தளத்தில் பகுதி-1 என்று போட்டுவிட்டேன். இரண்டாவது பகுதியைப் போடுவது சில காரணங்களால் ஒத்திப்போடப்பட்டது.

    அந்த இரண்டாவது பகுதியில் நீங்கள் சொல்லியிருக்கும் இந்த 'மயக்கம்' பற்றி, அல்லது 'பிரச்சினை'ப் பற்றிப் பேசியிருக்கிறேன். அடுத்து பல்வேறு நிகழ்வுகளைப் பற்றி எழுத நேர்ந்துவிட்டதால் வாலியைப் பற்றியஅந்த இரண்டாம் பகுதி வெளியிடப்படாமல் தள்ளிக்கொண்டே போய்விட்டது.

    முடித்து வெளியிட வேண்டும். விரைவில் வெளியிடுவேன் என்று நினைக்கிறேன். நன்றி.

    ReplyDelete
  39. வவ்வால் said...
    \\தி.தமிழ் இளங்கோ சார் ரொம்ப நல்லவர் சாத்வீகமாக பதிவு போடுபவர்,எப்ப நம்ம பின்னூட்டத்தினை வெளியிடுவார் எப்ப தூக்கி குப்பையில போட்டு ,உங்க பின்னூட்டம் பதிவுக்கு சம்பந்தமில்லாம இருக்குனு சொல்வார்னே தெரியாது\\

    உங்களுடைய இந்தக் கருத்திற்குத் தமிழ் இளங்கோ சார் பதில் சொல்லியிருக்கிறார் என்றாலும் இந்தக் கருத்தில் பொதிந்திருக்கிறதே ஒரு நக்கலும் நையாண்டியும் அதுதான் வவ்வாலின் டச். அதுதான் உங்கள் பதில்களை சுவாரஸ்யமாக்குகிறது.

    ReplyDelete
  40. மறுமொழி > Amudhavan said... (2)
    ஆசிரியர் அமுதவன் அவர்களின் நீண்ட கருத்துரைக்கு நன்றி!
    // கவிஞர் வாலி அவர்கள் மறைந்ததும் அவர் பற்றிய பதிவு ஒன்று எழுதினேன். மிகவும் நீளமாகப் போய்விட்டதால் அதனை இரு பிரிவுகளாக்கி முதல் பிரிவை என்னுடைய வலைத்தளத்தில் பகுதி-1 என்று போட்டுவிட்டேன். இரண்டாவது பகுதியைப் போடுவது சில காரணங்களால் ஒத்திப்போடப்பட்டது. //
    நேரம் கிடைக்கும்போது உங்கள் வலைத்தளத்தில் உள்ள பகுதி.1 ஐ படிக்கிறேன். இரண்டாவது பகுதியை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  41. மறுமொழி > Amudhavan said... (3)

    ஆசிரியர் அமுதவன் கருத்துரைக்கு நன்றி! வவ்வால் சுவாரஸ்யமானவர்தான்!

    ReplyDelete
  42. //ஆன்மீகம் பற்றி சுவாரஸ்யமாகப் பேசலாம், எழுதலாம், கேட்கலாம்.. விடைதெரியாத கேள்விகள் ஆயிரமாயிரம் உள்ள இந்த உலகில் ஆன்மீகம் என்பது நமக்கு ஒரு ஆறுதல்! //

    அரசியலும் சினிமாவும் பிரிக்க முடியாதது போல் ஆன்மிகமும் மதமும் பிரிக்க முடியாது, மதவாதங்களை புறக்கணிக்க முடியாதவரை ஆன்மிகம் என்று எதைப் பேச முடியும் ?

    ReplyDelete
  43. உள்ளத்தின் உணர்வுகளை ஒருசேர இணைத்து வெள்ளமென பாய்ந்து வந்தது
    பக்திமணம் பரப்பும் நிறைந்த அறிவுரைகளோடும் சாட்சிப்படுத்தும் பாடல்
    வரிகளோடும் அருமையான படைப்பு ! .இறையன்பர் தங்களின் இதயத்தை
    வணங்கிச் செல்கின்றேன் .வாழ்த்துக்கள் ஐயா மென்மேலும் இது போன்ற
    சிறப்பான படைப்புக்கள் வலம் வரட்டும் .

    ReplyDelete
  44. மறுமொழி > அம்பாளடியாள் வலைத்தளம் said...

    சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  45. மறுமொழி > கோவி.கண்ணன் said...
    //ஆன்மீகம் பற்றி சுவாரஸ்யமாகப் பேசலாம், எழுதலாம், கேட்கலாம்.. விடைதெரியாத கேள்விகள் ஆயிரமாயிரம் உள்ள இந்த உலகில் ஆன்மீகம் என்பது நமக்கு ஒரு ஆறுதல்! //

    அரசியலும் சினிமாவும் பிரிக்க முடியாதது போல் ஆன்மிகமும் மதமும் பிரிக்க முடியாது, மதவாதங்களை புறக்கணிக்க முடியாதவரை ஆன்மிகம் என்று எதைப் பேச முடியும் ?
    ---------
    சகோதரர் கோவி. கண்ணன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    // அரசியலும் சினிமாவும் பிரிக்க முடியாதது போல் ஆன்மிகமும் மதமும் பிரிக்க முடியாது, மதவாதங்களை புறக்கணிக்க முடியாதவரை ஆன்மிகம் என்று எதைப் பேச முடியும் ? //

    தமிழ்நாட்டிற்கு வேண்டுமானால் அரசியலும் சினிமாவும் பிரிக்க முடியாததாக இருக்கலாம். அதிலும் ஆந்திராவைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. எல்லா நாடுகளிலும் மக்கள் அப்படி இல்லை.

    ஆன்மீகம் என்றால் என்னவென்று கட்டுரையின் தொடக்கத்திலேயே சொல்லி விட்டேன். நீங்கள் அரைகுறை தத்துவவாதிகளும், போலி சாமியார்களும் சொல்வதை மட்டுமே ஆன்மீகம் என்று தவறாக எண்ணிக் கொண்டு இருக்கிறீர்கள்.

    ஆன்மீகம் என்பது ஆத்திகம், நாத்திகம் இரண்டு தர்க்கங்களுமே உடையது. சாங்கியம் எனப்படும் சாக்கியத்தை உதாரணமாகச் சொல்லலாம். காலப் போக்கில் ஆத்திகம் மட்டுமே ஆன்மீகம் என்று ஆகிவிட்டது. எல்லாவற்றிலும் புரையோடிப் போன தீவிரவாதம் உண்டு. இந்த கட்டுரையில் அதனைப் பற்றி நான் பேசவில்லை. ஏனெனில் தீண்டாமையைப் போன்று மதவாதமும் ஒரு நீண்ட SUBJECT. நான் இந்த இரண்டையுமே நியாயப்படுத்தவில்லை.

    ReplyDelete
  46. மிக அருமையான கட்டுரை ஐயா! இறை பக்திக்கும்/இறை நம்பிக்கைக்கும்/ஆத்திகத்திற்கும், ஆன்மீகத்திற்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆன்மீகம் என்பது இதற்கும் அப்பாற்பட்டது என்று எண்ணுகின்றோம். ஆன்மீகம் என்பது இவ்வுலக வாழ்வில் இருந்தாலும் பற்றற்று இருப்பது.

    //பசியால் வாடும் சோமாலியா நாட்டு மக்களுக்கு உணவே தெய்வம். அவர்களிடம் போய் ஆன்மீகத்தை பற்றிப் பேசுவதைவிட உணவைக் கொடுத்து வயிற்றுப் பசியை தீர்ப்பதே மேல்.// எங்கள் பேராசிரியர் ஒருவர் அடிக்கடி சொல்லுவது "டோன்ட் டாக் ஃபிலாசஃபி டு எ பெக்கர்" இது எல்லாவற்றிற்கும் பொருந்தும்.

    திருமூலமந்திரம் பாடலுக்குத் மரத்தை மறைத்தது மாமதயானை...தாங்கள் அளித்த விளக்கத்தைத் தெரிந்து கொண்டோம் ஐயா. அருமை...

    அழகான கருத்துகள். நிறைய தெரிந்தும் கொண்டோம் ஐயா.

    ReplyDelete