Monday 23 December 2013

எனக்கு எம்ஜிஆர் என்றால் … ... ...




நமக்குத் தெரிந்த ஒருவரது பெயரைச் சொன்னாலோ அல்லது ஒருவரைப் பற்றிய நினைவு வந்தாலோ நமக்கென்று பழக்கமான அவரது முகம் நினைவினில் வந்து நிழலாடும். எனக்கு எம்ஜிஆர் என்றால் ... ... நினைவுக்கு வருவது நான் ஆணையிட்டால் என்று சவுக்கை சுழற்றும் “எங்க வீட்டுப் பிள்ளை எம்ஜிஆர் தான். அந்தப் படம் வந்தபோது (1965) நான் பள்ளி மாணவன். தீவிர ரசிகன் என்று சொல்ல முடியாது. எம்ஜிஆர் ரசிகன். அவ்வளவுதான். அந்த படத்தை பார்த்த பின்னர் , கிராமத்தில் எங்கள் தாத்தா வீட்டு மாட்டுக் கொட்டகையில் கயிற்றை சவுக்குபோல் முறுக்கி நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் “ என்று பாடிய சந்தோஷமான நாட்கள் இனி வராது.

எனது பள்ளிப் பருவத்தில் நான் எம்ஜிஆர் ரசிகன். அதற்காக அவரது படங்களே கதி என்று இருந்தவன் கிடையாது. படம் பார்ப்பதோடு சரி. படிப்பில் கோட்டை விட்டதில்லை. எம்ஜிஆர் பல நடிகைகளுடன் ஜோடியாக நடித்துள்ளார். இருந்தாலும் எனக்கு எம்ஜிஆர் சரோஜாதேவி ஜோடிதான் பிடிக்கும். இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்றே நான் நினைத்தேன். நான் மட்டுமல்ல நிறையபேர் அப்படித்தான் நினைத்தார்கள்.. அப்பொழுதெல்லாம் சினிமா என்றால் நைட்ஷோதான். எம்ஜிஆர் படங்கள் தவிர வேறு பார்ப்பதில்லை. அப்புறம் கல்லூரிக்குச் சென்ற பின்னர்தான் மற்றவர்கள் நடித்த  படங்களைப் பார்த்தேன்.

எங்கள் அம்மாவின் கிராமத்திலும் சரி, அப்பாவின் கிராமத்திலும் சரி உறவினர்கள் அனைவருமே அப்போது திமுக அனுதாபிகள். இயல்பாகவே நானும் திமுக அனுதாபியாகப் போனேன். ( இப்போது எந்த கட்சி அனுதாபியும் கிடையாது ) கூடவே எம்ஜிஆர் படங்களை காணும் ஆர்வம்.. நாங்கள் குடியிருந்த சிந்தாமணி பகுதியில் திராவிடப் பண்ணைஎன்று புத்தக பதிப்பாளர் வீடும், பதிப்பகமும் இருந்தது. இதன் உரிமையாளர் பண்ணை முத்துக் கிருஷ்ணன். அறிஞர் அண்ணா புத்தகங்களை வெளியிட்டதற்காக அபராதமும் சிறைத் தண்டனையும் பெற்றவர். அவருடன் எனது அப்பாவிற்கும், சித்தப்பாவிற்கும் நல்ல பழக்கம். அவருடைய வீட்டிற்கு திமுகவின் அப்போதைய முக்கிய தலைவர்கள் வருவார்கள். அப்போது அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, நெடுஞ்செழியன், மதியழகன், அன்பில் தர்மலிங்கம் ஆகியோரை நேரில் பார்த்து இருக்கிறேன். எம்ஜிஆர் இங்கு வந்ததில்லை. அவர் திருச்சி வந்தால் ஆஸ்பி ஹோட்டலுக்கு சென்று விடுவார். எம்ஜிஆரை நேரில் பார்க்கும் ஆசை இருந்தாலும் சந்தர்ப்பம் அமையவில்லை

அறிஞர் அண்ணா மறைந்த பிறகு கலைஞர் கருணாநிதி ஆட்சியின்போது திருச்சியில் 1970 இல் மாநில சுயாட்சி மாநாடு நடைபெற்றது. அந்த மாநாடு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ( இப்போது அண்ணா ஸ்டேடியம் ) நடந்தது.  மாநில சுயாட்சி கோஷம் எழுப்பப்பட்டது அங்குதான். அப்போது திருச்சியில் நடக்கும் திமுகவின் எந்த நிகழ்ச்சியானாலும்,  சிந்தாமணியில் உள்ள் அண்ணா சிலையிலிருந்துதான் தொடங்குவார்கள். அப்படியே இந்த மாநாட்டிற்கும் இந்த அண்ணா சிலையிலிருந்து ஊர்வலம் தொடங்கியது. மாலைவேளை என்பதால் அந்தபகுதி முழுவதும் விளக்குகள் மயம். ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தில் தேர் போன்று அலங்கரிக்கப் பட்ட ரதத்தில் தலைவர்கள். எம்ஜிஆர் நடுநாயகமாக இருந்தார். கூட்டம் எம்ஜிஆரை நேரில் பார்க்கும் ஆர்வத்துடன் அந்த ரதத்துடனேயே சென்றது. அவர்களில் நானும் ஒருவன். அப்போதுதான் எம்ஜிஆரை முதன் முதல் பார்த்தேன். கொஞ்சதூரம் சென்றுவிட்டு நேரில் பார்த்த திருப்தியில் பாதியிலேயே வந்துவிட்டேன்.

அடுத்து அந்த மாநாட்டிற்கு நானும் சென்று இருந்தேன். மாநாட்டு மேடையில் அப்போது ஒருவர் முழங்கிக் கொண்டு இருந்தார். திடீரென்று மாநாட்டு பந்தல் முன்பு ஒரே சலசலப்பு. மைக் முன்பு பேசிக் கொண்டு இருந்தவர் நிறுத்தி விட்டார். எம்ஜிஆர் எம்ஜிஆர் ‘ என்று கத்தினார்கள். கூடவே வாழ்க, வாழ்க என்று கோஷம். அப்போதுதான் மேடைக்கு வந்தார் எம்ஜிஆர். இதுமாதிரி கூட்டம் நடந்து கொண்டு இருக்கும் போது திடீரென்று மேடைக்கு வருவதுதான் எம்ஜிஆர் ஸ்டைல். கூடவே ஜெயலலிதா. மாநாட்டில் நடக்கவிருக்கும் காவிரி தந்த கலைச்செல்வி நாடகத்திற்காக வந்து இருந்தார். 



அதன்பிறகு கட்சியில் எவ்வளவோ மாற்றங்கள். அரசியலில் நண்பர்களிடையே பூசல். அதிமுக பிறந்தது. எம்ஜிஆர் இருந்தவரை கருணாநிதியால் ஆட்சிக் கட்டிலுக்கு வரவே முடியவில்லை. எம்ஜிஆர் ரசிகனாக இருந்தாலும் நான் அவர் கட்சியில் உறுப்பினராக  சேர்ந்ததில்லை.திமுக அனுதாபியாகவே இருந்தேன். இப்போது நான் எந்த கட்சி அனுதாபியும் இல்லை. ஆனாலும் நான் இப்போதும் எம்ஜிஆர் ரசிகன்தான். மனதை உற்சாகப் படுத்திக் கொள்ள எம்ஜிஆர் படப் பாடல்கள்தான .

( PICTURES THANKS TO GOOGLE )
 
வாசகர்களுக்கு: மேலே எனது அனுபவங்களைச் சொன்னேன். எம்ஜிஆர் பற்றிய மேலும் அதிக தகவல்கள், படங்கள், பாடல்கள். பேட்டிகள் ஆகியவற்றிற்கு கீழே உள்ள மய்யம் தளத்திற்குச் செல்லவும். கிட்டத்தட்ட நானூறு பக்கங்கள் அல்லது அதற்கும் மேல் என்று நினைக்கிறேன். பொறுமையாகப் பார்வையிடவும். நன்றி!
  





 

58 comments:

  1. எம்.ஜே. ஆர். நினைவு நாளுக்கு ஏற்ற பதிவு.
    அவர் திரைப்பட பாடல்கள் எல்லாமே நான் விரும்பிக் கேட்பவை. நீங்கள் கொடுத்துள்ள சுட்டியில் பார்க்கிறேன். நன்றி பகிர்விற்கு.

    ReplyDelete
  2. நல்ல நினைவலைகள். தம்முடைய படங்களின் ஒவ்வொரு அங்குலத்தையும் பார்த்துப் பார்த்துச் செதுக்கியவர் அவர். படத்தின் எடிட்டிங்கிற்கு அவரே உட்காருவார் என்று சொல்வார்கள். வேறு எந்த நடிகரும் இப்படியெல்லாம் தொழில்நுட்ப விஷயங்களில் எல்லாம் கவனம் செலுத்த மாட்டார்கள். (அப்படியே கவனம் செலுத்துவது என்றாலும் இயக்குநர் அனுமதிப்பாரா என்பது முக்கியம்; சிவாஜி நினைத்திருந்தால் அதனைச் செய்திருக்கலாம். ஆனால் எடிட்டிங் எல்லாம் அவர் போனதில்லை) அதே போல தம்முடைய படத்தில் வரும் பாடல்களின் மெட்டுக்களையும் சரி, பாடல் வரிகளையும் சரி எம்ஜிஆர் ஓகே செய்தால்தான் படத்தில் வரும். இத்தனை தூரம் தம்முடைய படத்திற்காக 'மெனக்கெட்ட' நடிகர்கள் யாரும் இல்லை.

    ReplyDelete
  3. நல்ல பதிவு. எனக்கும் எம்.ஜி.ஆரை பிடிக்கும். ஆனால் அவர் தி.மு.க வை விட்டு வெளியே வந்து தனிக் கட்சி ஆரம்பித்ததன் காரணம் ஊழலை ஒழிக்கவேண்டும் என்பதற்காக என்றாலும் அவராலும் அதை ஒழிக்கமுடியாமல் போனதால் அவர் மேல் இருந்த ஈர்ப்பு போய்விட்டது. ஆனாலும் அவரது திரைப்படப் பாடல்களை இன்றும் இரசித்துக் கேட்பேன்.

    ReplyDelete
  4. \\இருந்தாலும் எனக்கு எம்ஜிஆர் – சரோஜாதேவி ஜோடிதான் பிடிக்கும். \\ எங்களுக்கு நெருங்கிய மாமா ஒருத்தரும் இதையேதான் சொல்வார். "நான் எம்ஜிஆர் ரசிகன் அல்ல, எம்ஜிஆர் – சரோஜாதேவிரசிகன்" என்பார்!!


    \\இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்றே நான் நினைத்தேன். நான் மட்டுமல்ல நிறையபேர் அப்படித்தான் நினைத்தார்கள்.\\ எம்ஜிஆர்உடன் நடிக்கும் காட்சிகளில் சரோஜா தேவியின் முகம் அவ்வளவு பூரிப்பாக இருக்கும், எனக்கென்னவோ அவர் நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார் என்றே தோன்றுகிறது!!

    \\இதுமாதிரி கூட்டம் நடந்து கொண்டு இருக்கும் போது திடீரென்று மேடைக்கு வருவதுதான் எம்ஜிஆர் ஸ்டைல்.\\ நேரம் தவறாமை சிவாஜியின் ஸ்டைல், காக்க வச்சு வேடிக்கை பார்ப்பது இவரது ஸ்டைல். எங்கள் ஊர் பக்கம் பல முறை இவர் வருவாதகச் சொல்வார்கள், ஒரு போதும் நேரத்துக்கு வந்தது கிடையாது. வந்து கொண்டே இருக்கிறார், பக்கத்து ஊரை நெருக்கிக் கொண்டிருக்கிறார் என்று மூன்று நாளைக்குச் சொல்லிக் கொண்டிருப்பார்கள், ஆனாலும் கூட்டம் கலையாமல் காத்துக் கிடக்கும். அது தான் நம்முடைய வீக்னெஸ் என நினைக்கிறேன்!!

    லின்குகளுக்கு நன்றி, நேரம் கிடைத்தால் இந்தப் பதிவைப் பார்க்கவும்!!
    http://jayadevdas.blogspot.com/2012/11/blog-post_954.html

    ReplyDelete
  5. தி.தமிழ் இளங்கோ சார்,

    நல்ல நினைவுகூறல்!


    எனக்கு எம்ஜிஆர் படங்களில் "ஈஸ்மென்,கேவா கலர்" படங்களை விட கறுப்பு வெள்ளைப்படங்களே பிடிக்கும். ரோஸ் பவுடர் காலப்படங்கள் கவர்வதில்லை,, எனது காலத்துக்கு ரோஸ்பவுடர் "சரோசா தேவி"லாம் பார்த்தால் சிரிப்பு தான் வந்தது :))

    மேலும் பாடல்களே எனக்கு பிடிக்கும். அதே போல வசனங்கள் அரசியல் தீர்க்க தரிசனத்துடன் இருக்கும்.

    எம்சிஆர் செத்தப்பிறகே படங்கள் பார்த்தேன் அப்போலாம் அவர் செத்துட்டார்னே எனக்கு தெரியாது அவ்வ். அப்புறம் விவரம் தெரிஞ்சக்காலத்தில என்னது எம்சிஆரு செத்துட்டாரானு கேட்டு அதிர்ச்சியானேன் அவ்வ்!

    ReplyDelete
  6. பகுத்தறிவுத்தமிழனின் எண்ணமும் நோக்கமும் தமிழ் மக்கள் பகுத்தறிவுடன் இந்த BளாGஐ பார்த்து சிரிக்கவேண்டும். சிரித்து மகிழ வேண்டும்.

    kgopaalan@blogspot.com

    ReplyDelete
  7. பகுத்தறிவுத்தமிழனின் எண்ணமும் நோக்கமும் தமிழ் மக்கள் பகுத்தறிவுடன் எனது BளாGஐ பார்த்து சிரிக்கவேண்டும். சிரித்து மகிழ வேண்டும்.
    kgopaalan@blogspot.com

    ReplyDelete
  8. உங்கள் பார்வையில்
    உங்கள் அனுபவத்தில்
    புரட்சித் தலைவர் குறித்து
    பகிர்ந்த விதம் மிக மிக அருமை
    இதனை அந்த காலக்கட்டத்தில்
    இளமைப் பருவத்தில் இருந்தவர்களால்தான்
    மிகச் சரியாக உணர முடியும்
    மனம் கவர்ந்த பகிர்வு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. மறுமொழி > rajalakshmi paramasivam said...

    // எம்.ஜிஆர். நினைவு நாளுக்கு ஏற்ற பதிவு. அவர் திரைப்பட பாடல்கள் எல்லாமே நான் விரும்பிக் கேட்பவை. //

    சகோதரி ராஜலக்‌ஷ்மி பரமசிவம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    // நீங்கள் கொடுத்துள்ள சுட்டியில் பார்க்கிறேன். நன்றி பகிர்விற்கு. //

    நானும் அந்த இணைப்ப்புகளை முழுமையாகப் பார்க்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக நேரம் கிடைக்கும்போது பார்வையிடலாம் என்று இருக்கிறேன்.

    ReplyDelete
  10. மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...

    // இனிய நினைவுகள்...! //

    சகோதரிக்கு நன்றி! வருடா வருடம் அழகான படங்களோடு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு செய்தியை தெரிவிப்பீர்கள். இந்த ஆண்டு நீங்கள் செய்யப் போகும் புதுமையை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  11. மறுமொழி > Amudhavan said...

    // நல்ல நினைவலைகள். தம்முடைய படங்களின் ஒவ்வொரு அங்குலத்தையும் பார்த்துப் பார்த்துச் செதுக்கியவர் அவர். படத்தின் எடிட்டிங்கிற்கு அவரே உட்காருவார் என்று சொல்வார்கள். வேறு எந்த நடிகரும் இப்படியெல்லாம் தொழில் நுட்ப விஷயங்களில் எல்லாம் கவனம் செலுத்த மாட்டார்கள். (அப்படியே கவனம் செலுத்துவது என்றாலும் இயக்குநர் அனுமதிப்பாரா என்பது முக்கியம்; சிவாஜி நினைத்திருந்தால் அதனைச் செய்திருக்கலாம். ஆனால் எடிட்டிங் எல்லாம் அவர் போனதில்லை) அதே போல தம்முடைய படத்தில் வரும் பாடல்களின் மெட்டுக்களையும் சரி, பாடல் வரிகளையும் சரி எம்ஜிஆர் ஓகே செய்தால்தான் படத்தில் வரும். இத்தனை தூரம் தம்முடைய படத்திற்காக 'மெனக்கெட்ட' நடிகர்கள் யாரும் இல்லை. //

    அமுதவன் அய்யாவின் விரிவான கருத்துரைக்கு நன்றி! எம்ஜிஆர் பன்முக ஆற்றல் கொண்டவர் என்பதில் ஐயமில்லை!


    ReplyDelete
  12. மறுமொழி > வே.நடனசபாபதி said...

    //நல்ல பதிவு. எனக்கும் எம்.ஜி.ஆரை பிடிக்கும். ஆனால் அவர் தி.மு.க வை விட்டு வெளியே வந்து தனிக் கட்சி ஆரம்பித்ததன் காரணம் ஊழலை ஒழிக்கவேண்டும் என்பதற்காக என்றாலும் அவராலும் அதை ஒழிக்கமுடியாமல் போனதால் அவர் மேல் இருந்த ஈர்ப்பு போய்விட்டது. ஆனாலும் அவரது திரைப்படப் பாடல்களை இன்றும் இரசித்துக் கேட்பேன். //

    அய்யா திரு வே நடனசபாபதி அவர்களின் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் நன்றி! திமுக அனுதாபியாக இருக்கும் பலரது கருத்தும் இதுவே ஆகும். ஆனாலும் சென்றமுறை திமுக கவுன்சிலர்கள் முதல் மேல்மட்டம் வரை செய்த அட்டூழியத்தை யாராலும் தாங்கிக் கொள்ள முடியாது.




    ReplyDelete
  13. மறுமொழி > Jayadev Das said...

    // எங்களுக்கு நெருங்கிய மாமா ஒருத்தரும் இதையேதான் சொல்வார். "நான் எம்ஜிஆர் ரசிகன் அல்ல, எம்ஜிஆர் – சரோஜாதேவிரசிகன்" என்பார்!! //

    உங்கள் மாமா உண்மையிலேயே சிறந்த சினிமா ரசிகராகத்தான் இருக்க வேண்டும்.

    // .... \\இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்றே நான் நினைத்தேன். நான் மட்டுமல்ல நிறையபேர் அப்படித்தான் நினைத்தார்கள்.\\ எம்ஜிஆர்உடன் நடிக்கும் காட்சிகளில் சரோஜா தேவியின் முகம் அவ்வளவு பூரிப்பாக இருக்கும், எனக்கென்னவோ அவர் நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார் என்றே தோன்றுகிறது!! .... //

    நானும் உங்களைப் போலவே நினைக்கிறேன். இதனால்தான் நானும் ” எம்ஜிஆருக்குப் பின் சரோஜாதேவி முதலமைச்சராக.”
    http://tthamizhelango.blogspot.com/2011/10/blog-post_07.html என்று ஒரு பதிவு எழுதினேன்.

    // நேரம் தவறாமை சிவாஜியின் ஸ்டைல், காக்க வச்சு வேடிக்கை பார்ப்பது இவரது ஸ்டைல். எங்கள் ஊர் பக்கம் பல முறை இவர் வருவாதகச் சொல்வார்கள், ஒரு போதும் நேரத்துக்கு வந்தது கிடையாது. வந்து கொண்டே இருக்கிறார், பக்கத்து ஊரை நெருக்கிக் கொண்டிருக்கிறார் என்று மூன்று நாளைக்குச் சொல்லிக் கொண்டிருப்பார்கள், ஆனாலும் கூட்டம் கலையாமல் காத்துக் கிடக்கும். அது தான் நம்முடைய வீக்னெஸ் என நினைக்கிறேன்!! //

    ஒவ்வொருவரும் ஒரு மாதிரி. அதில் எம்ஜிஆரின் ஸ்டைல் ஒரு மாதிரி!

    ReplyDelete
  14. மறுமொழி ( 2 ) > Jayadev Das said...

    // லின்குகளுக்கு நன்றி, நேரம் கிடைத்தால் இந்தப் பதிவைப் பார்க்கவும்!! http://jayadevdas.blogspot.com/2012/11/blog-post_954.html //

    நானும் நீங்கள் சுட்டிய உங்கள் பதிவுக்கு சென்று பார்க்கிறேன். தங்கள் வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  15. மறுமொழி > வவ்வால் said...
    // தி.தமிழ் இளங்கோ சார், நல்ல நினைவுகூறல்! //

    சகோதரர் வவ்வால் அவர்களின் வருகைக்கும், விரிவான கருத்துரைக்கும் நன்றி!

    // எனக்கு எம்ஜிஆர் படங்களில் "ஈஸ்மென்,கேவா கலர்" படங்களை விட கறுப்பு வெள்ளைப்படங்களே பிடிக்கும். ரோஸ் பவுடர் காலப்படங்கள் கவர்வதில்லை,, எனது காலத்துக்கு ரோஸ்பவுடர் "சரோசா தேவி"லாம் பார்த்தால் சிரிப்பு தான் வந்தது :)) //

    எம்ஜிஆரை என்றும் இளமையாகக் காட்டியது கறுப்பு வெள்ளைப் படங்களே! நீங்கள் சொல்லும் அந்த ரோஸ்பவுடர் காலத்தில், நடிப்பவர்களுக்கு (பாட்டி என்றாலும்) முகத்தில், ஒரு இஞ்சிற்கு ரோஸ் பவுடரை ஏற்றி அப்பி இருப்பார்கள். பார்க்க தமாஷாக இருக்கும்.

    // மேலும் பாடல்களே எனக்கு பிடிக்கும். அதே போல வசனங்கள் அரசியல் தீர்க்க தரிசனத்துடன் இருக்கும். //

    எம்ஜிஆர் படத்திற்கு முக்கிய அம்சங்களே இவைதான்.

    // எம்சிஆர் செத்தப்பிறகே படங்கள் பார்த்தேன் அப்போலாம் அவர் செத்துட்டார்னே எனக்கு தெரியாது அவ்வ். அப்புறம் விவரம் தெரிஞ்சக்காலத்தில என்னது எம்சிஆரு செத்துட்டாரானு கேட்டு அதிர்ச்சியானேன் அவ்வ்! //

    நீங்கள் சொல்வதை என்னால் நம்பமுடியவில்லை.

    ReplyDelete
  16. மறுமொழி > K Gopaalan said... ( 1, 2 )

    // பகுத்தறிவுத்தமிழனின் எண்ணமும் நோக்கமும் தமிழ் மக்கள் பகுத்தறிவுடன் எனது BளாGஐ பார்த்து சிரிக்கவேண்டும். சிரித்து மகிழ வேண்டும். kgopaalan@blogspot.com //

    உங்கள் இணையதளத்தின் சரியான முகவரி இதுதானே http://kgopaalan.blogspot.in பகுத்தறியும் தமிழன். சென்று பார்க்கிறேன்!

    ReplyDelete

  17. மறு மொழி > Ramani S said... (1, 2 )
    // உங்கள் பார்வையில்
    உங்கள் அனுபவத்தில்
    புரட்சித் தலைவர் குறித்து
    பகிர்ந்த விதம் மிக மிக அருமை
    இதனை அந்த காலக்கட்டத்தில்
    இளமைப் பருவத்தில் இருந்தவர்களால்தான்
    மிகச் சரியாக உணர முடியும்
    மனம் கவர்ந்த பகிர்வு
    தொடர வாழ்த்துக்கள் //

    கவிஞரின் அன்பான பாராட்டிற்கு நன்றி! எம்ஜிஆர் குறித்து இன்னும் விரிவாக எழுத வேண்டும்.

    ReplyDelete
  18. நல்லதொரு பகிர்வு. எனக்கும் தாங்கள் குறிப்பிட்டுச்சொல்லியுள்ள ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படம் மிகவும் பிடிக்கும். சுமார் 20 முறைக்கு மேல் நான் அந்தப்படத்தைப் பார்த்துள்ளேன். அந்த ’நான் ஆணையிட்டால்’ பாட்டின் போது தியேட்டரில் உள்ள ரஸிகர்கள் படு குஷியாக ஆகி விடுவார்கள். அதுபோல அதில் வரும் எல்லாப்பாட்டுக்களுமே ஜோர் தான். முதல் பாட்டும் சீன் செட்டிங் மிக நன்றாக இருக்கும்.

    ’நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் ...அவர் மாம்பழம் வேண்டுமென்றார் ... அதைக் கொடுத்தாலும் வாங்கவில்லை ... இந்தக்கன்னம் வேண்டுமென்றார் .... ஹொய்ன ஹொய்னஹோ ஹொய்னா ....’ அதுவும் எனக்கும் மிகவும் பிடிக்கும்.

    >>>>>

    ReplyDelete
  19. 1975ல் எம்.ஜி.ஆர். அவர்களை அதிக கும்பல் இல்லாமல் மிக அருகில் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது.

    எங்கள் BHEL Factory க்கு வருகை தந்திருந்தார். கேண்டீன் வாசலில் இருந்த மேடையில் ஏறி நின்று 10 - 15 நிமிடங்கள் பேசினார். நான் அங்கு அவருக்கு மிக அருகில் நின்று இருந்தேன். மொத்தமாக ஒரு 1000-2000 ஊழியர்கள் மட்டுமே இருந்தோம்.

    Protected Area ஆகையால் பொதுமக்கள் கூட்டமாக வர முடியாமல் இருந்தது. அந்த ஷிஃப்டில் இருந்த ஊழியர்கள் மட்டுமே.

    பேசி முடித்த பிறகு அந்த சற்றே உயரமான [சுமார் 4 அடி இருக்கும்] மேடையிலிருந்து படி இறங்கி வராமல் தொப்பென்று குதித்து விட்டார். பிறகு ரெடியாக இருந்த ஜீப்பில் ஏறி ஃபேக்டரியின் பல்வேறு தொழிற்கூடங்களைப் பார்வையிட்டுவிட்டு, கிளம்பி விட்டார்.

    வெள்ளை வேட்டி, வெள்ளை ஜிப்பா, வெள்ளைத்தொப்பி, கருப்பு கூலிங் க்ளாஸ், ரோஸ் கலரில் முகம், இன்றும் நன்றால நினைவில் உள்ளது.

    சுகமான நினைவலைப்பதிவுக்கு நன்றிகள், ஐயா.

    ReplyDelete
  20. புரட்சித் தலைவர் எம்.ஜ.ஆர் குறித்த செய்திகள் அருமை.
    இணைப்புகளைப் பார்க்கின்றேன் ஐயா. நன்றி
    த.ம.3

    ReplyDelete
  21. வணக்கம்
    ஐயா
    புரட்சிதலைவர் பற்றிய பதிவு மிகச்சிறப்பாக உள்ளது.பதிவை படிக்கும் போது. அவர் உயிருடன் இருப்பது போல ஒரு தோற்றம் என்னுள்ளே உதயமாகியது. அவரின் மனித நேயம் சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை படர்ந்துள்ளது... வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  22. வணக்கம்
    ஐயா.

    த.ம 4வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  23. சிறப்பான பகிர்வு...எம்.ஜி.ஆர் அவர்களைப் பற்றிய நினைவுகள் அருமை..

    ReplyDelete
  24. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 1 )

    // நல்லதொரு பகிர்வு. எனக்கும் தாங்கள் குறிப்பிட்டுச் சொல்லியுள்ள ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படம் மிகவும் பிடிக்கும். சுமார் 20 முறைக்கு மேல் நான் அந்தப்படத்தைப் பார்த்துள்ளேன். அந்த ’நான் ஆணையிட்டால்’ பாட்டின் போது தியேட்டரில் உள்ள ரஸிகர்கள் படு குஷியாக ஆகி விடுவார்கள். அதுபோல அதில் வரும் எல்லாப்பாட்டுக்களுமே ஜோர் தான். முதல் பாட்டும் சீன் செட்டிங் மிக நன்றாக இருக்கும். //

    அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்! ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தை 20 தடவை பார்த்து இருக்கிறீர்களா? நான் இன்னும் 3 ஐத் தாண்டியதில்லை. திருச்சியில் அந்த படம் ஜூபிடர் தியேட்டரில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது. அந்த தியேட்டர் மட்டுமல்லாது பல தியேட்டர்கள் இடிக்கப்பட்டு விட்டன.

    // ’நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் ...அவர் மாம்பழம் வேண்டுமென்றார் ... அதைக் கொடுத்தாலும் வாங்கவில்லை ... இந்தக்கன்னம் வேண்டுமென்றார் .... ஹொய்ன ஹொய்னஹோ ஹொய்னா ....’ அதுவும் எனக்கும் மிகவும் பிடிக்கும்.//

    மற்ற படங்களில் வரும் வேட்டி கட்டிய எம்ஜிஆரை விட. அந்த பாட்டுக்கு வரும் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ வேட்டி கட்டிய எம்ஜிஆர் பொருத்தமாக இருப்பார். அந்த் ஹம்மிங் ... எல்லோருக்கும் பிடிக்கும்.

    ReplyDelete
  25. மறுமொழி> வை.கோபாலகிருஷ்ணன் said... ( 2 )

    // 1975ல் எம்.ஜி.ஆர். அவர்களை அதிக கும்பல் இல்லாமல் மிக அருகில் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. எங்கள் BHEL Factory க்கு வருகை தந்திருந்தார். கேண்டீன் வாசலில் இருந்த மேடையில் ஏறி நின்று 10 - 15 நிமிடங்கள் பேசினார். நான் அங்கு அவருக்கு மிக அருகில் நின்று இருந்தேன். மொத்தமாக ஒரு 1000-2000 ஊழியர்கள் மட்டுமே இருந்தோம். Protected Area ஆகையால் பொதுமக்கள் கூட்டமாக வர முடியாமல் இருந்தது. அந்த ஷிஃப்டில் இருந்த ஊழியர்கள் மட்டுமே. //
    // வெள்ளை வேட்டி, வெள்ளை ஜிப்பா, வெள்ளைத்தொப்பி, கருப்பு கூலிங் க்ளாஸ், ரோஸ் கலரில் முகம், இன்றும் நன்றால நினைவில் உள்ளது.//

    அன்புள்ள VGK அவர்களின் அனுபவப் பகிர்வுக்கும் பாராட்டிற்கும் நன்றி!

    ReplyDelete
  26. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...
    // புரட்சித் தலைவர் எம்.ஜ.ஆர் குறித்த செய்திகள் அருமை.
    இணைப்புகளைப் பார்க்கின்றேன் ஐயா. நன்றி த.ம.3 //

    சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி. இணைப்புகள் உங்களுக்கு நிச்சயம் பயன்படும். பொறுமையாகப் பார்க்கவும்.



    ReplyDelete
  27. இவரைப்பற்றி கடந்த பத்தாண்டுகளாகத்தான் அதிகமாக யோசித்துள்ளேன்.

    எந்த அளவுக்கு வறுமை ஒருவனை புரட்டி நசுக்கி அவமானப்படுத்தினாலும் முயற்சியும் சரியான நேரம் காலம் வந்த போது உருவான உருவாக்கிக் கொண்ட வாய்ப்புகளை எப்படி கனகச்சிதமாக பயன்படுத்தி மேலே வர முடியும் என்பதை உணர்த்திக் காட்டியவர்.

    ஆனால் இவர் அளவுக்கு மக்கள் செல்வாக்கு என்பது வேறு எவருக்கும் இனி வரும் காலங்களில் இங்கே உருவாகுமா? என்பது யோசிக்க வேண்டியதாக உள்ளது.

    ReplyDelete
  28. நல்லவேளை.......இவருக்கு பிள்ளைகுட்டிகள் இல்லை ..ஒரு வேளை இருந்திதிருந்தால் ?
    கருணாநிதி குடும்பம் படுத்தும் பாட்டை நினைத்து பார்க்கிறேன் !!!அந்தகுறையையும் நிறைவு செய்கிறார் ஜெயலலிதா தனது அடாவடிகளின் மூலம்!!!

    ReplyDelete

  29. மறுமொழி> Rupan com said... ( 1, 2 )

    // வணக்கம் ஐயா புரட்சிதலைவர் பற்றிய பதிவு மிகச்சிறப்பாக உள்ளது.பதிவை படிக்கும் போது. அவர் உயிருடன் இருப்பது போல ஒரு தோற்றம் என்னுள்ளே உதயமாகியது. அவரின் மனித நேயம் சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை படர்ந்துள்ளது... வாழ்த்துக்கள் ஐயா//

    கவிஞர் ரூபன் அவர்களின் கருத்துரைக்கும் வாழ்த்திற்கும் நன்றி!


    ReplyDelete
  30. மறுமொழி > ADHI VENKAT said...
    // சிறப்பான பகிர்வு...எம்.ஜி.ஆர் அவர்களைப் பற்றிய நினைவுகள் அருமை.. //

    சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  31. மிக அருமையாக எம்ஜிஆர் நினைவுகளைத் தொகுத்துத் தந்தீர்கள் ஐயா!
    பல விடயங்களை உங்கள் பதிவினாலே அறிய முடிந்தது.

    மிக அருமை ஐயா!
    பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  32. great. மலரும் நினைவுகள்!
    திருச்சி எம்ஜியார்!
    தமிழ்மணம்+1

    ReplyDelete
  33. எம்.ஜி.ஆரின் பாடல்கள் இன்றைக்கும் பொருத்தமானவை. அருமையான அடக்கமான பதிவு.
    அன்புடன்
    வர்மா

    ReplyDelete
  34. மறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said...

    // இவரைப்பற்றி கடந்த பத்தாண்டுகளாகத்தான் அதிகமாக யோசித்துள்ளேன். எந்த அளவுக்கு வறுமை ஒருவனை புரட்டி நசுக்கி அவமானப்படுத்தினாலும் முயற்சியும் சரியான நேரம் காலம் வந்த போது உருவான உருவாக்கிக் கொண்ட வாய்ப்புகளை எப்படி கனகச்சிதமாக பயன்படுத்தி மேலே வர முடியும் என்பதை உணர்த்திக் காட்டியவர்.//

    நீங்கள் சொன்னதெல்லாம் உண்மை! சகோதரர் ஜோதிஜி திருப்பூர் அவர்களுக்கு நன்றி!

    // ஆனால் இவர் அளவுக்கு மக்கள் செல்வாக்கு என்பது வேறு எவருக்கும் இனி வரும் காலங்களில் இங்கே உருவாகுமா? என்பது யோசிக்க வேண்டியதாக உள்ளது. //

    இன்னொரு எம்ஜிஆர் என்பது சாத்தியமே இல்லை!

    ReplyDelete
  35. மறுமொழி >. Anonymous said...

    // நல்லவேளை.......இவருக்கு பிள்ளைகுட்டிகள் இல்லை ..ஒரு வேளை இருந்திதிருந்தால் ? கருணாநிதி குடும்பம் படுத்தும் பாட்டை நினைத்து பார்க்கிறேன் !!!அந்தகுறையையும் நிறைவு செய்கிறார் ஜெயலலிதா தனது அடாவடிகளின் மூலம்!!! //

    பணம் படைத்தவன் என்ற படத்தில் “ எனக்கொரு மகன் இருப்பான். அவன் என்னைப் போலவே இருப்பான் “ என்று பாடி வருவார். எம்ஜிஆரின் நிறைவேறாத ஆசைகலில் இதுவும் ஒன்று. இன்றைய (24.12.13) தி இந்து நாளிதழில் எம்ஜிஆரின் நிறைவேறாத ஆசை ஒன்றை பற்றி எழுதி இருக்கிறார்கள்.
    Anonymous அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  36. மறுமொழி > இளமதி said...
    // மிக அருமையாக எம்ஜிஆர் நினைவுகளைத் தொகுத்துத் தந்தீர்கள் ஐயா! பல விடயங்களை உங்கள் பதிவினாலே அறிய முடிந்தது. மிக அருமை ஐயா! பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்களும்! //

    சகோதரியின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  37. மறுமொழி > நம்பள்கி said...
    // great. மலரும் நினைவுகள்! திருச்சி எம்ஜியார்!
    தமிழ்மணம்+1 //

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  38. மறுமொழி > வர்மா said...

    //எம்.ஜி.ஆரின் பாடல்கள் இன்றைக்கும் பொருத்தமானவை. அருமையான அடக்கமான பதிவு. அன்புடன் வர்மா //

    சகோதரர் வர்மாவிற்கு நன்றி!

    ReplyDelete
  39. அருமையான பதிவு அண்ணா .. ..மிக அருமையாக உங்கள் நினைவுகளை பகிர்ந்திருக்கீங்க நானும் பார்த்திருக்கேன் அவரை என்னுடைய சிறு வயதில் 1980 என்று நினைக்கிறேன் :)..எனக்கும் எம் ஜி ஆர் /சரோஜா தேவி இணையாக நடித்த படங்கள் ரொம்ப பிடிக்கும் .நான் ஆணையிட்டால் பாடலும் மற்றும்
    //எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே //என்று வருமே அந்த பாடல் எம்ஜிஆர் அவர்களது பாடல்களில் இன்னும் விரும்பி கேட்பது .

    எங்க அப்பா மருத்துவ கல்லூரியில் படிக்கும்போது தீவிர எம்ஜிஆர் ரசிகர் அவரைப்போலவே ..ஸ்லீவ்சை மடிச்சி விட்டுதான் அப்போ செல்வாராம் :)ஒரு தீவிர திமுக அனுதாபி ஆனால் படு தீவிர எம்ஜிஆர் ரசிகர் :) இந்த அளவு பெருமை புகழ் மக்கள் செல்வாக்கு வேறு யாருக்கும் கிடைக்காது எம்ஜிஆரைதவிர ..

    Angelin

    ReplyDelete
  40. தி.தமிழ் இளங்கோ சார்,

    // நடிப்பவர்களுக்கு (பாட்டி என்றாலும்) முகத்தில், ஒரு இஞ்சிற்கு ரோஸ் பவுடரை ஏற்றி அப்பி இருப்பார்கள். பார்க்க தமாஷாக இருக்கும். //

    உங்களுக்கும் தமாசாத்தான் தெரிஞ்சிருக்கு :))

    # //நீங்கள் சொல்வதை என்னால் நம்பமுடியவில்லை.//

    பார்த்தீங்களா இப்பக்கூட எம்சிஆரு செத்துட்டாருன்னு உங்களால நம்ப முடியலைல அவ்வ்!

    சொன்னா நம்பணோம் சார், எம்சிஆர் செத்த காலக்கட்டங்களில் எல்லாம் நான் படிப்பறிவு இல்லாத ,கை நாட்டாத்தான் இருந்தேன் ஹி...ஹி அப்பத்தானே அ..ஆ எல்லாம் கத்துக்க ஆரம்பிச்சு இருந்தேன் , சரியா எதுவும் மனசில பதியவே இல்லை, எம்சிஆர்,சிவாசினு வித்தியாசம் கூட தெரியாது.... ஓரளவு விவரம் வந்து இவரு தான் எம்சிஆருனு அடையாளங்கண்டு பார்க்க ஆரம்பிச்சப்ப தான் ஒருக்கா சினிமா கொட்டாயிக்கு கூட்டிப்போயிருந்தப்போ ,ரசிகர்கள் "தலைவர்" படத்துக்கு மாலை எல்லாம் போட்டு அமர்க்களம் செய்துக்கிட்டு இருந்தாங்க அப்போத்தான் "தலைவரு செத்துட்டாலும் அவரப்போல" இன்னொருத்தர் வர முடியாதுனு சொல்வதை கேட்டுட்டு "என்னது எம்சிஆரு செத்துட்டாரா"னு அதிர்ச்சியானேன் அவ்வ்!

    அப்பவே விவரமா "செத்துட்டாருனு சொல்றிங்க படத்துல" வராரேனு கேட்டதாக நினைவு அவ்வ்! ஏன்னா அப்பலாம் சினிமா படம் பாக்கும் போது அதுல வரவங்க எல்லாம் திரைக்கு பின்னால நிஜமா இருப்பாங்கனு நினைப்பேன் அவ்வ்!
    (அவ்ளோ பெரிய கூமுட்டையா நீனு மனசுக்குள்ள சொல்றது கேட்குது)

    இதே போல " புருஸ்லி" செத்துட்டாருனு கூட தெரியாம படம் பார்த்து உசுரோட இருக்காருனு நினைச்சவன் நான் ஹி...ஹி!

    ReplyDelete
  41. மறுமொழி > Cherub Crafts said...
    // அருமையான பதிவு அண்ணா .. ..மிக அருமையாக உங்கள் நினைவுகளை பகிர்ந்திருக்கீங்க நானும் பார்த்திருக்கேன் அவரை என்னுடைய சிறு வயதில் 1980 என்று நினைக்கிறேன் :)..எனக்கும் எம் ஜி ஆர் /சரோஜா தேவி இணையாக நடித்த படங்கள் ரொம்ப பிடிக்கும் .நான் ஆணையிட்டால் பாடலும் மற்றும்
    //எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே //
    என்று வருமே அந்த பாடல் எம்ஜிஆர் அவர்களது பாடல்களில் இன்னும் விரும்பி கேட்பது .//

    சகோதரி ஏஞ்சலின் அவர்களின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி! உங்கள் அப்பா வழியில் நீங்களும் எம்ஜிஆர் படங்களையும், பாடல்களையும் ரசித்து இருப்பது தெரிகிறது.

    // எங்க அப்பா மருத்துவ கல்லூரியில் படிக்கும்போது தீவிர எம்ஜிஆர் ரசிகர் அவரைப்போலவே ..ஸ்லீவ்சை மடிச்சி விட்டுதான் அப்போ செல்வாராம் :) //

    நானும் உங்கள் அப்பாவைப் போல, முண்டா தெரியும் வண்ணம் அரைக்கை சட்டையை எம்ஜிஆர் போல மடித்துக் கொள்வேன். ஆனால் ஸ்கூலுக்குப் போகும்போது மட்டும் அவ்வாறு செல்ல வீட்டில் அனுமதிக்க மாட்டார்கள். தனக்குப் பிடித்த ஹீரோ போல இருப்பது என்பதும் ஒரு ஸ்டைல்தான். அது எந்தக் காலத்திலும் இருக்கும். எனக்கு பீடி, சிகரெட், மது அருந்தும் பழக்கம் இல்லை. நான் எம்ஜிஆர் ரசிகனாக இருந்ததால் கூட, ஒருவேளை இயல்பாக இந்த நல்ல பழக்கம் வந்து இருக்கலாம்.

    // ஒரு தீவிர திமுக அனுதாபி ஆனால் படு தீவிர எம்ஜிஆர் ரசிகர் :) இந்த அளவு பெருமை புகழ் மக்கள் செல்வாக்கு வேறு யாருக்கும் கிடைக்காது எம்ஜிஆரைதவிர .. //

    திமுக அனுதாபியாகவும் அதேசமயம் திமுகவை விட்டு விலகி எதிர்த்த எம்ஜிஆரின் ரசிகராவும் இருந்தது, ஒரு சுவையான சுமையான காலம்தான், எங்களுக்கு.

    சகோதரிக்கு மீண்டும் நன்றி!

    ReplyDelete
  42. மறுமொழி > வவ்வால் said...

    வவ்வால் சார்! உங்களிடம் எனக்கு பிடித்த அம்சம், கமெண்ட் போட்டுவிட்டு அந்த பதிவை மீண்டும் ஒரு தடவை எட்டிப் பார்ப்பதுதான். (நானும் உங்கள் வழிதான்)

    [ * // நடிப்பவர்களுக்கு (பாட்டி என்றாலும்) முகத்தில், ஒரு இஞ்சிற்கு ரோஸ் பவுடரை ஏற்றி அப்பி இருப்பார்கள். பார்க்க தமாஷாக இருக்கும். // *

    உங்களுக்கும் தமாசாத்தான் தெரிஞ்சிருக்கு :)) * ]

    உங்களின் பாராட்டிற்கு நன்றி! இப்போது, எல்லா புள்ளி விவரங்களையும் விரல் நுனியில் வைத்திருக்கும் உங்களுக்கு, அப்போது எம்ஜிஆர் இறந்தது, புரூஸ்லீ மரணம் போன்றவை தெரியாமல் போயிற்று என்பது சாதாரணமான விஷயம்தான்.

    [ * (அவ்ளோ பெரிய கூமுட்டையா நீனு மனசுக்குள்ள சொல்றது கேட்குது) * ]

    அப்படி எல்லாம் ஒன்றும் நினைக்கவில்லை. தமாஷ் செய்கிறீர்கள் என்றுதான் நினைத்தேன். ஆமாம் ... ... நீங்கள் தஞ்சாவூர்ப் பக்கமா? எங்கள் அம்மாவின் ஊர்ப்பக்கம்
    ( திருவையாறு வட்டாரம் ) கூமுட்டை என்ற இந்த சொலவடை சர்வ சாதாரணம்.

    மீண்டும் வெள்ளித் திரையில் மர்மயோகி – போல் வந்ததற்கு நன்றி!


    ReplyDelete
  43. தனது கடைசி படம் வரை
    அவர்தானே வசூல் மன்னனாய் இருந்தார்

    ReplyDelete
  44. நல்ல நினைவு கூறல். வவ்வால், அந்த ''மை'' மீசையை விட்டுட்டீங்களே! கருப்பு வெள்ளைப் படங்களில் இது அவ்வளவாகத் தெரியாது. கலர்ப்படங்களில் சின்ன வயசுல பார்க்கும்போது தெரியல. ஆனா இப்ப பார்க்கும்போது மட்டும் அந்த மை மீசை அகோரமாக தெரியுதே!

    ReplyDelete
  45. கருப்பு வெள்ளை படங்கள் தான் எனக்கும் பிடிக்கும்....... பிறகு வந்த படங்களை அவ்வளவாக பிடித்தது இல்லை.

    நல்ல பகிர்வு.

    ReplyDelete
  46. மறுமொழி > கவியாழி கண்ணதாசன் said...
    // தனது கடைசி படம் வரை அவர்தானே வசூல் மன்னனாய் இருந்தார் //
    நீங்கள் சொல்லும் கருத்து சரியானதுதான். இன்றும் எம்ஜிஆரின் பழைய படங்களை மட்டுமே நம்பி ஓடும், மாவுமில் டூரிங் டாக்கீஸ்கள் உண்டு. கவிஞரின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  47. மறுமொழி! கவிப்ரியன் ஆர்க்காடு said...

    // நல்ல நினைவு கூறல். வவ்வால், அந்த ''மை'' மீசையை விட்டுட்டீங்களே! கருப்பு வெள்ளைப் படங்களில் இது அவ்வளவாகத் தெரியாது. கலர்ப்படங்களில் சின்ன வயசுல பார்க்கும்போது தெரியல. ஆனா இப்ப பார்க்கும்போது மட்டும் அந்த மை மீசை அகோரமாக தெரியுதே! //

    சகோதரரின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  48. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...
    // கருப்பு வெள்ளை படங்கள் தான் எனக்கும் பிடிக்கும்....... பிறகு வந்த படங்களை அவ்வளவாக பிடித்தது இல்லை. நல்ல பகிர்வு. //
    எனக்கும் அப்படியே! சகோதரர் வெங்கட் நாகராஜ் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! எம்ஜிஆரின் பெரும்பாலான இளமைக்கால திரைப்படங்கள் கறுப்பு வெள்ளைதான்.

    ReplyDelete
  49. நான் மந்திரிகுமாரியிலிருந்து எம்ஜியார் படங்கள் பார்க்கிறேன். ரொம்ப பிடித்த படம் மலைக்கள்ளன்.

    ReplyDelete
  50. எம்.ஜி.ஆர்ப் பற்றிய மலரும் நினைவுகள் அருமை. எனக்கும் நான் ஆணயிட்டால் பாடலும், அந்த படமும் பிடிக்கும்.

    ReplyDelete
  51. மறுமொழி > சகாதேவன் said...
    // நான் மந்திரிகுமாரியிலிருந்து எம்ஜியார் படங்கள் பார்க்கிறேன். ரொம்ப பிடித்த படம் மலைக்கள்ளன். //

    மூத்த வலைப்பதிவர் ’வெடிவால்’ சகாதேவன் அவர்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete

  52. மறுமொழி > கோமதி அரசு said...

    // எம்.ஜி.ஆர்ப் பற்றிய மலரும் நினைவுகள் அருமை. எனக்கும் நான் ஆணயிட்டால் பாடலும், அந்த படமும் பிடிக்கும். //

    சகோதரி கோமதி அரசு அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! எல்லொருக்கும் எம்ஜிஆரின் எங்க வீட்டுப் பிள்ளைதான் அதிகம் பிடிக்கும்.

    ReplyDelete
  53. மறுமொழி > மாதேவி said...
    // இனிய நினைவுகள். //

    சகோதரியின் சுருக்கமான கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  54. தி.தமிழ் இளங்கோ சார்,

    நாம எப்பவும் படிக்கிறது தான்,பின்னூட்டம் போட்டு வருத்தமாகிடக்கூடாதேனு சில சமயங்களில் கம்முனு போயிடுறது. மேலும் வழக்கமாகவே என்ன பேசிக்கிறாங்கனு கவனிப்பேன்.நீங்களும் நம்மை போல் என அறிய மகிழ்ச்சி!

    # காவிரி டெல்ட்டா மாவட்டம் தான், வீராணம் ஏரிப்பாசனம்.ஒரு வேளை அதான் கூமுட்டை பழக்கமாயிறுச்சு போல.

    #//மீண்டும் வெள்ளித் திரையில் மர்மயோகி – போல் வந்ததற்கு நன்றி!//

    ஹி...ஹி மர்மயோகினே முடிவு பண்ணிட்டிங்களோ அவ்வ்!

    ReplyDelete
    Replies
    1. வவ்வாலின் பார்வைக்கு நன்றி. மீண்டும் வலைப்பக்கம் எப்போது வருவீர்கள்?

      Delete