Tuesday 3 December 2013

அரிக்கேன் விளக்கு – அனுபவம்



இப்போது மின்வெட்டு என்றாலே வீடுகளில் அலறுகிறோம். ஆனால் முழுக்க முழுக்க மின்சாரமே வீடுகளில் இல்லாத காலத்திலும் மக்கள் வாழ்ந்தார்கள் என்பதை நிறையபேர் மறந்து விட்டோம். அப்போது அரிக்கேன் விளக்குதான் அதிகமாக பயன்பாட்டில் இருந்தது. Hurricane  என்றால் புயல் என்று பெயர். எந்த புயல் காற்றிலும் விளக்கு அணையாத வண்ணம் வடிவமைக்கப் பட்டதால் Hurricane lamp என்று பெயர். தமிழில் அரிக்கேன் விளக்கு ஆயிற்று.

நகர்ப்புறம்:

அப்போது தமிழ்நாட்டில் மின்சாரம் என்பது தொழிற்சாலைகளில் மட்டும்தான். வீடுகளில் அவ்வளவாக பயன்பாட்டிற்கு வராதநேரம் நகரமாக இருந்தாலும் பெரும்பாலான வீடுகளில் மின்சார இணைப்பு இருக்காது. மின் இணைப்பு உள்ள ஸ்டோர் வீடுகளை கட்டி வாடகைக்கு விடுபவர் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு 40 வாட்ஸ் குண்டு பல்பு மட்டுமே எரிய அனுமதிப்பார். ஒரே ஒரு மெயின் ஸ்விட்ச் மட்டுமே இருக்கும். மின்சாரத்திற்கென்று தனி சார்ஜ் வசூலிக்கப்படும். .ஓட்டல்களில் அல்லது அரசு அலுவலங்களில் மட்டும் என்று ஒன்றிரண்டு இடங்களில் குண்டு பல்புகள் எரிந்து கொண்டு இருக்கும். வீடுகளில் கெரசினால் எரியும் அரிக்கேன் விளக்கு அல்லது சிம்னி விளக்குதான். எனவே இப்போது மின்வெட்டு போல அப்போது கெரசின் எனப்படும் மண்ணெண்ணைக்கு ( சீமை எண்ணெய்) ஏற்படும் தட்டுப்பாட்டில் மக்கள் கஷ்டப்பட்டார்கள்


எனது ஆனாஆவன்னா படிப்பு தொடங்கியபோது வீட்டில் இருந்தது அந்தக் கால அரிக்கேன் விளக்குதான். பள்ளிப் படிப்பு வரை இரவுநேரத்தில் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில்தான் படித்தேன். படிக்கும்போது அரிக்கேன் லைட் கண்ணாடியில் இங்க் பேனாவினால் பெயர் எழுதியது, சின்னச் சின்ன படங்கள் வரைந்தது என்பது அந்தக்கால சந்தோஷங்களில் ஒன்று. அதே போல நண்பர்களோடு அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் கைவிரல்களைக் வைத்து  சுவற்றில் மான், கொக்கு, பாம்பு வடிவங்களை காட்டி விளையாடுவதும் உண்டு. மழையில் நனைந்து வரும்போது சட்டைப் பையில் இருக்கும் ரூபாய் நோட்டுக்கள் ஈரமாக இருக்கும். அவற்றை காய வைக்க அரிக்கேன் விளக்கு கண்ணாடி அருகே கொஞ்ச நேரம் காட்டினால் போதும். அவை காய்ந்து பழைய நிலைக்கு வந்துவிடும்.



(PICTURE THANKS  TO  Trashball! A Subsidiary of Ex-Communicated Communications, Inc.)

அரிக்கேன் விளக்கில் தினம்தோறும் கெரசின் ஊற்றி விளக்கையும் கண்ணாடியையும்  சுத்தம் செய்வது என்பது அப்போது பெரிய வேலை. கண்ணாடியை அதில் மாட்டுவது அல்லது கழட்டுவது  என்பது ரொம்பவும் கவனமான விஷயம். அதிக ஜாக்கிரதையாக செய்ய வேண்டும். இல்லையேல் கண்ணாடி உடைந்துவிடும்.

கிராமங்களில்:

கிராமத்தில் பெரும்பாலும் எல்லோருடைய வீட்டிலும் அரிக்கேன் விளக்குதான். சமையல் கட்டில் மினுக்மினுக் என்று எரியும் சிறிய சிம்னி விளக்குதான். பெரும்பாலான சமயம் அதற்குரிய கண்ணாடி எப்போதோ உடைந்து போயிருக்கும். நடு வீட்டில் உள்ள கொஞ்சம் பெரிய சிம்னி விளக்கில் மட்டும கண்ணாடி இருக்கும். உடைந்தாலும் உடனே வாங்கி விடுவார்கள். அரிக்கேன் விளக்கை பெரும்பாலும் வீட்டுத் திண்ணையில் கட்டி தொங்க வைத்து இருப்பார்கள். அல்லது திண்ணையிலேயே இருக்கும். இதன் வெளிச்சம் நடு வீட்டிற்கும் திண்ணைக்கும் தெருவிற்கும் வரும்.

வண்டிப் போக்குவரத்து இருக்கும் கிராமங்களில் பேருந்து நிற்கும் மெயின்ரோட்டில் இருக்கும் டீக்கடைகளில் பெரும்பாலும் இந்த அரிக்கேன் விளக்குதான். பெட்ரோமாக்ஸ் விளக்கும் சில கடைகளில் அபூர்வமாக இருக்கும். ஊர் சத்திரங்களிலும் சாவடிகளிலும் அரிக்கேன் விளக்கு வெளிச்சம்தான். கிராமத்து சாலைகளில் மாட்டு வண்டியை இரவு நேரத்தில் ஓட்டும்போது இந்த அரிக்கேன் விளக்கு வண்டியின் நுகத்தடியில் தொங்கும்

எம்ஜிஆர் நடித்த ஒரு படம் பெரிய இடத்துப் பெண். அந்த படத்தில் அவனுக்கென்ன் தூங்கி விட்டான் அகப்பட்டவன் நானல்லவா “ என்று ஒரு பாடல். அதில்  இரவுநேரம் ஆள் இல்லாத, அரிக்கேன் விளக்கு மட்டும் தொங்கவிடப்பட்ட மாட்டு வண்டி போய்க்கொண்டே இருக்கும். இந்த பாடலை வீடியோவில் கண்டு மகிழ கீழே உள்ள இணையதள முகவரியினை கிளிக் செய்யுங்கள் ( YOUTUBE இல் பதிவு செய்திட்ட சகோதரர் அப்துல் கபூர் அவர்களுக்கு நன்றி)


இரவு நேரத்தில் களத்து மேட்டுக்கு காவலுக்குச் செல்லும் பெரியவர்கள் ஒரு பெரிய போர்வையைப் போர்த்தியபடி ஒரு கையில் பெரிய தடியையும் இன்னொரு கையில் அரிக்கேன் விளக்கையும் கொண்டு செல்வார்கள். ஒருமுறை விடுமுறையில் மழைக் காலத்தில் கிராமத்தில் எங்கள் தாத்தா வீட்டில் இருந்தேன். இரவு நேரம். ஐப்பசி அடை மழை. பின்புறம் மாட்டுத் தொழுவத்தில் மாடுகள் கத்த ஆரம்பித்தன. இரவு நேரத்தில் யாராவது புதியவர்கள் வந்தாலோ அல்லது ஏதேனும் ஆபத்து என்றாலோ அவை கத்தும். என்னுடைய தாத்தாவும் நானும் திண்ணையில் இருந்த அரிக்கேன் விளக்கை எடுத்துக் கொண்டு போய் பார்த்தோம். வழிதெரியாது வந்த வேறு தெரு நாய் ஒன்று மழைக்கு அங்கே ஒதுங்கி இருந்தது. அதனை விரட்டிய பின்னரே வந்தோம். அந்த மழை காற்றிலும் விளக்கு அணையவில்லை. இன்னும் பல கிராமங்களில் அரிக்கேன் விளக்கு பயன்பாட்டில் உள்ளது.

இன்னும் சில செய்திகள்:

பழைய எழுத்தாளர்கள் வடுவூர் துரைசாமி அய்யங்கார், கல்கி, மாதவையர் நாவல்களில் அவ்வப்போது இந்த அரிக்கேன் விளக்கு வந்து போகும். ரெயில்வே லைன்மேன்கள், கேட் கீப்பர்கள்  இந்த அரிக்கேன் விளக்கை வைத்துதான் காவல் காத்தார்கள். அப்போதைய ரெயில்வே கார்டு அரிக்கேன் விளக்கில் வடிவமைக்கப்பட்ட சிவப்பு, பச்சை விளக்குகளைத்தான் அசைத்தார்.


இப்போது நாடெங்கும் மின்வெட்டு. இன்வெர்ட்டரும் சமயத்தில் கை
கொடுப்பதில்லை. எனவே பழையபடி பல இடங்களில் அரிக்கேன் விளக்கு உபயோகத்தில் வந்து விட்டது. மின்வெட்டைக் கண்டித்து போராட்டம் செய்பவர்கள் இப்போது “அரிக்கேன் விளக்கு ஏந்தும் போராட்டம்நடத்துகிறார்கள். அப்போது நாடு முழுக்க இருந்ததே அரிக்கேன் விளக்குதான்.


( PICTURES  &  VIDEO - THANKS  TO  GOOGLE )




58 comments:

  1. மலரும் நினைவுகள் மனதில் மினுக்க வைத்த பகிர்வுகள்..

    அரிக்கேன் விளக்கு மாடலில் மின் விளக்குகள் பூங்காக்களிலும் ,ஸ்டார் ஹோட்டல்களிலும் காட்சிப்படுகின்றன..!

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா
    அரிக்கேன் விளக்கு பற்றி மிக அருமையாக ரசித்து எழுதியுள்ளிர்கள் முதலில்இப்படியான பதிவு எழுதியமைக்கு வாழ்த்துக்கள் ஐயா

    நீங்கள் எழுதிய பதிவின் மூலம் கடந்த கால நினைவுகள் நெஞ்சில் அலைபாய்ந்தது...இப்படித்தான் எங்கள் ஊரிலும் வயல்அறுவடை முடிந்தால் சூடுமிதிக்கும் போது.. இந்த அரிகேன் விளக்குத்தான் உதவியாக இருந்தது..இரவு நேரங்களில்
    ஆண்மா ஒரு உடலை விட்டு மற்ற உடலுக்கு பாய்வது போல.புதிய உலகத்தில் வாழ்ந்த நாம இப்போ பழைய உலகத்தில் வாழ வைத்தது இந்த மின் வெட்டு... பதிவு அருமை வாழ்த்துக்கள் ஐயா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. என் இளமைக்காலமும் இப்படித்தான் கழிந்தது!

    ReplyDelete
  4. அரிக்கேன் விளக்குகள் பற்றி அருமையான அலசல் கொடுத்து அசத்திவிட்டீர்கள், ஐயா.

    நான் முழுக்க முழுக்கப்படித்தது இதே அரிக்கேன் விளக்கு + சிம்னி விளக்குகளில் மட்டுமே ஐயா. சில சமயம் தெரு விளக்குகளிலும் படித்ததுண்டு. 1968 வரை எங்கள் வீட்டுக்கு மின் இணைப்பேதும் கிடையாது ஐயா.

    >>>>>

    ReplyDelete
  5. நிழல் படங்களும், விளக்குகள் படங்களும் நல்ல தேர்வுகள்.

    >>>>>

    ReplyDelete
  6. தாங்கள் சொல்வது போல அந்த அரிக்கேன் விளக்கு கண்ணாடிகளை சர்வ ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும்.

    தினமும் கரி பிடித்து மங்கிப்போகாமல் சுத்தமாக அலம்பித்துடைத்து பளிச்சென்று மாட்ட வேண்டும். அதன் விளிம்புகள் சமயத்தில் கத்திபோல நம் கைகளைப் பதம் பார்த்து விடுவதும் உண்டு.

    திரிகளையும் லெவெலாக கட் செய்து மண்ணெண்ணெயில் தோய்த்து பொருத்த வேண்டும். ஏற்றி இறக்கும் சிஸ்டமும் அதில் அழகாக வைத்திருப்பார்கள். இப்போதும் சில வீடுகளில் புழக்கத்திலும் பல வீடுகளில் பரணையிலும் உள்ளன.

    >>>>>

    ReplyDelete
  7. நினைத்தால் ஆச்சர்யமாக உள்ளது. நாமும் அந்த ரிக்கேன் விளக்கைக் கடந்து தான் வந்திருக்கிறோம். ஆனால் இப்பொழுது மின்வெட்டானால் உடனே முனுமுனுக்கிறோம்..
    உங்கள் அரிக்கேன் விளக்கு பல மறந்து போன விஷயங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தன.

    ReplyDelete
  8. எங்கள் மத வழக்கப்படி, ஒருவர் இறந்து போய் விட்டால், உடனே அவரின் தலையை தெற்கே இருக்கும்படியாக படுக்க வைத்து விட்டு, தலைப்பக்கமாக அகல் போன்ற ஏதாவது ஒரு விளக்கு ஏற்றி வைக்கச்சொல்வார்கள். பிறகு அவரைத் தூக்கிச்சென்ற பிறகும் ஒரு பத்து நாட்களுக்கு இந்த அரிக்கேன் விளக்கை ஏற்றச்சொல்வார்கள். பத்தாம் நாள் காரியத்திற்கும் காவிரிக்கரையில் இந்த விளக்குக்கு என்று சில வேலைகள் உள்ளன.

    அருமையான பதிவுக்கும் பகிர்வுக்கு பாராட்டுக்கள், நன்றிகள், ஐயா.

    ReplyDelete
  9. தி.தமிழ் இளங்கோ சார்,

    நல்ல அரிக்கேன் நினைவுகள்!

    பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேண்டுமானு கேட்டாப்போல அரிக்கேன் லைட்டே தான் வேண்டுமானு கேட்கும் காலம் மீண்டும் வந்துடுச்சு மின் வெட்டால் அவ்வ்!


    # எங்க ஊர்ப்பக்கமெல்லாம் மாட்டு வண்டியின் ,அச்சில் கட்டி தொங்க விட்டிருப்பார்கள், இதான் இன்டிகேட்டர் லைட், முன்னால் மாட்டு வண்டி போகுதுனு தெரிய.

    சட்டம் இருக்கானு தெரியாது, ஆனால் அக்காலத்தில் காவல் துறையினர் மாட்டு வண்டிகளில் இரவு நேரத்தில் இப்படி அரிக்கேன் லைட் கட்டி வச்சிருக்கனும் என கண்டிப்பாக உத்தரவு போட்டிருந்தார்கள் என கேள்விப்பட்டுள்லேன்.

    நுகத்தடியில் கட்டினால் விளக்கு உடைஞ்சிடுமே?

    அதே போல டயர் மாட்டு வண்டி எனில் , வண்டி ஓட்டுபவர் இருக்கைக்கு அடியில் "ப" வடிவ இரும்பு சட்டம் இருக்கும் அதனிடையே பாதுகாப்பாக கட்டி வைத்திருப்பார்கள்.

    இப்போலம் மண்னெண்ணெய் கிடைக்கறதே ரொம்ப கஷ்டமாச்சே , கேஸ் சிலிண்டர் வச்சிருந்தா கெரசின் கட் பண்ணிடுறாங்க, சமீபத்தில ஒரு தேவைக்காக மண்ணெண்ணெய் வாங்க அலைஞ்சால் ,எந்த கடையிலும் இப்போ விக்கிறதேயில்லைனு சொல்லிட்டாங்க., ரேஷன் கடையில வான்கினா தான் உண்டு.

    ReplyDelete
  10. ஆமாம் நானும் வளர்ந்துது நினைவு வருகிறது.
    பின்னால் பெட்ரோமாக்ஸ் வியக்கு எரித்தோம்.
    2 லாண்ரன்(அரிக்கேன்) விளக்கு ஓரு மேசை விளக்கு படிக்க.
    குசினியல் ஓர கால் விளக்கு என அருமையான காலங்கள்.
    பதிவிற்கு மிக்க நன்றி.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  11. +2 படிக்கும்பொழுது அரிக்கேன் விளக்கை கயிற்றில் கட்டித் தொங்கவிட்டு படித்த ஞாபகம் உள்ளது. பொழுதோட படித்துவிடு, ரா முழுக்க விளக்க வச்சிக்கிட்டு கூத்தடிக்கக் கூடாது, எண்ணை இல்லை என்று பாட்டி திட்டுவார்கள். இப்பொழுது பேட்டரியில் இதே டிசைன் வந்துள்ளது.

    ReplyDelete
  12. அருமை! நானும் ஹரிகேன் விளக்கில் படிச்சுருக்கேன். வாடகைக்கு இருந்தோம். அப்போது அங்கே மின் இணைப்பு இல்லை:(

    அண்ணனுக்கு தனி அறையும் தனி விளக்கும் உண்டு. சாப்பிடும் நேரத்தில் சமையலறையை ஒட்டின சாப்பாட்டறையில் விளக்கு இருந்தாலும் அவர் தன்னுடைய அறை விளக்கைக் கையோடு எடுத்து வருவார். சாப்பிடும் அறை இன்னும் பளிச்சாகிவிடும். ஆனால் அவர் உணவை முடித்த கையோடு விளக்கும் போய்விடும்:(

    நான் ஒருத்திதான் சாப்பிட அதிகநேரம் எடுத்துக் கொள்வேன். சாப்பாட்டுத் தட்டில் படம் வரைவதும், அணை கட்டுவதும் கட்டம்போட்டு சின்னச்சின்ன கட்டத்தை எடுத்து முழுங்குவதுமாக படுத்தி எடுப்பேன். ஊசித்தொண்டை என்ற வசவு வேறு கிடைக்கும்:-)

    கொசுவத்தி ஏத்தி வச்சதுக்கு நன்றி.

    BTW கொசுவத்தி ஹோல்ஸேல் துளசிதளத்தில் கிடைக்கும்:-))))

    ReplyDelete
  13. அந்தக் காலம் ஞாபகம் வந்தது... ம்...

    இன்று ஒரு காட்சிப் பொருளாக...

    ReplyDelete
  14. சிறு வயதில் அரிக்கேன் விளக்குகளைப் பார்த்திருக்கின்றேன் ஐயா.
    என் வீட்டில்கூட ஒரு விளக்கு இருந்ததாக நினைவு.
    நன்றி

    ReplyDelete
  15. மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...
    // மலரும் நினைவுகள் மனதில் மினுக்க வைத்த பகிர்வுகள்..//

    சகோதரியின் பாராட்டிற்கு நன்றி1

    //அரிக்கேன் விளக்கு மாடலில் மின் விளக்குகள்பூங்காக்களிலும் ,ஸ்டார் ஹோட்டல்களிலும் காட்சிப்படுகின்றன..//

    மனிதனால் இன்னும் அந்த அமைதியான பழைய சூழலை மறக்க முடியவில்லை என்பதன் வெளிப்பாடுகளே இவை.

    ReplyDelete
  16. மறுமொழி > 2008rupan said...
    // வணக்கம் ! ஐயா !
    அரிக்கேன் விளக்கு பற்றி மிக அருமையாக ரசித்து எழுதியுள்ளிர்கள் முதலில்இப்படியான பதிவு எழுதியமைக்கு வாழ்த்துக்கள் ஐயா //

    கவிஞர் ரூபன் அவர்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி!

    // நீங்கள் எழுதிய பதிவின் மூலம் கடந்த கால நினைவுகள் நெஞ்சில் அலைபாய்ந்தது...இப்படித்தான் எங்கள் ஊரிலும் வயல்அறுவடை முடிந்தால் சூடுமிதிக்கும் போது.. இந்த அரிகேன் விளக்குத்தான் உதவியாக இருந்தது.//

    உங்கள் மலரும் நினைவும் எனக்கு அந்நாளைய களத்து மேட்டுக்கு இழுத்துச் செல்கிறது.

    //.இரவு நேரங்களில் ஆன்மா ஒரு உடலை விட்டு மற்ற உடலுக்கு பாய்வது போல.புதிய உலகத்தில் வாழ்ந்த நாம இப்போ பழைய உலகத்தில் வாழ வைத்தது இந்த மின் வெட்டு.. பதிவு அருமை வாழ்த்துக்கள் ஐயா.//

    ஒருவிதத்தில் மின்வெட்டு மறைந்துபோன சில குடிசைத் தொழில்களுக்கு வாழ்வளிக்கிறது.

    ReplyDelete
  17. மறுமொழி > புலவர் இராமாநுசம் said...

    //என் இளமைக்காலமும் இப்படித்தான் கழிந்தது! //

    புலவர் அய்யாவிற்கு நன்றி! உங்களுக்கு அடுத்த தலைமுறை நான். எனக்கும் கழிந்துபோன அந்தநாள் இளமைக்காலத்தை நினைக்கும் தோறும் ” இனி நினைந்து இரக்கம் ஆகின்று ” என்றுதான் தோன்றுகிறது.

    ReplyDelete
  18. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 1 )

    // அரிக்கேன் விளக்குகள் பற்றி அருமையான அலசல் கொடுத்து அசத்திவிட்டீர்கள், ஐயா. நான் முழுக்க முழுக்கப்படித்தது இதே அரிக்கேன் விளக்கு + சிம்னி விளக்குகளில் மட்டுமே ஐயா. சில சமயம் தெரு விளக்குகளிலும் படித்ததுண்டு. 1968 வரை எங்கள் வீட்டுக்கு மின் இணைப்பேதும் கிடையாது ஐயா. //

    அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்! தங்கள் வருகைக்கு நன்றி! அந்நாளில் நாம் படிப்பை மட்டுமே நினைத்தோம்.

    ReplyDelete
  19. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 2 )
    // நிழல் படங்களும், விளக்குகள் படங்களும் நல்ல தேர்வுகள். //

    தங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  20. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 3 )

    // தாங்கள் சொல்வது போல அந்த அரிக்கேன் விளக்கு கண்ணாடிகளை சர்வ ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும். //

    //தினமும் கரி பிடித்து மங்கிப்போகாமல் சுத்தமாக அலம்பித்துடைத்து பளிச்சென்று மாட்ட வேண்டும். அதன் விளிம்புகள் சமயத்தில் கத்திபோல நம் கைகளைப் பதம் பார்த்து விடுவதும் உண்டு. //

    // திரிகளையும் லெவெலாக கட் செய்து மண்ணெண்ணெயில் தோய்த்து பொருத்த வேண்டும். ஏற்றி இறக்கும் சிஸ்டமும் அதில் அழகாக வைத்திருப்பார்கள். இப்போதும் சில வீடுகளில் புழக்கத்திலும் பல வீடுகளில் பரணையிலும் உள்ளன.//

    அரிக்கேன் விளக்கு நம்மோடு இருந்த நாட்களை அருமையாகச் சொன்னீர்கள்.

    ReplyDelete
  21. மறுமொழி > rajalakshmi paramasivam said...

    // நினைத்தால் ஆச்சர்யமாக உள்ளது. நாமும் அந்த அரிக்கேன் விளக்கைக் கடந்து தான் வந்திருக்கிறோம். ஆனால் இப்பொழுது மின்வெட்டானால் உடனே முனுமுனுக்கிறோம்..உங்கள் அரிக்கேன் விளக்கு பல மறந்து போன விஷயங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தன. //

    சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  22. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 4 )

    // எங்கள் மத வழக்கப்படி, ஒருவர் இறந்து போய் விட்டால், உடனே அவரின் தலையை தெற்கே இருக்கும்படியாக படுக்க வைத்து விட்டு, தலைப்பக்கமாக அகல் போன்ற ஏதாவது ஒரு விளக்கு ஏற்றி வைக்கச்சொல்வார்கள். பிறகு அவரைத் தூக்கிச்சென்ற பிறகும் ஒரு பத்து நாட்களுக்கு இந்த அரிக்கேன் விளக்கை ஏற்றச்சொல்வார்கள். பத்தாம் நாள் காரியத்திற்கும் காவிரிக்கரையில் இந்த விளக்குக்கு என்று சில வேலைகள் உள்ளன.//

    நீங்கள் சொன்னதும்தான் எனக்கும் ஞாபகம் வருகிறது. எனது அப்பாவின் நண்பர், எனக்கு ஆசிரியர். அந்த ஆசிரியரின் அப்பா இறந்தபோது இப்படித்தான் இந்த விளைக்கை வைத்து இருந்தார்கள்.

    // அருமையான பதிவுக்கும் பகிர்வுக்கு பாராட்டுக்கள், நன்றிகள், ஐயா. //

    தங்களுக்கு மீண்டும் நன்றி!

    ReplyDelete
  23. மறுமொழி > வவ்வால் said...

    //தி.தமிழ் இளங்கோ சார், நல்ல அரிக்கேன் நினைவுகள்! //

    வவ்வால் சாரின் வருகைக்கு நன்றி!

    // பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேண்டுமானு கேட்டாப்போல அரிக்கேன் லைட்டே தான் வேண்டுமானு கேட்கும் காலம் மீண்டும் வந்துடுச்சு மின் வெட்டால் அவ்வ்! //

    காலம் மறுபடியும் பின்னோக்கி ஒரு ரவுண்ட் வரும் போலிருக்கிறது.

    // # எங்க ஊர்ப்பக்கமெல்லாம் மாட்டு வண்டியின் ,அச்சில் கட்டி தொங்க விட்டிருப்பார்கள், இதான் இன்டிகேட்டர் லைட், முன்னால் மாட்டு வண்டி போகுதுனு தெரிய.//

    எங்கள் அம்மா ஊர் பக்கம் (தஞ்சை மாவட்டம்) பெரும்பாலும் கூண்டு இல்லாத இரட்டை மாட்டு வண்டியில் வைக்கோல் பரப்பி அதன் மீது உட்கார்ந்து செல்வோம். அந்த வைக்கோலில் அரிக்கேன் விளக்கின் புகை அல்லது நெருப்பு பட்டு, தீ பிடித்துவிடும் என்பதால் அச்சில் கட்டுவதில்லை.

    // சட்டம் இருக்கானு தெரியாது, ஆனால் அக்காலத்தில் காவல் துறையினர் மாட்டு வண்டிகளில் இரவு நேரத்தில் இப்படி அரிக்கேன் லைட் கட்டி வச்சிருக்கனும் என கண்டிப்பாக உத்தரவு போட்டிருந்தார்கள் என கேள்விப்பட்டுள்லேன்.//

    காவல்துறையினரின் உத்தரவுக்கு பயந்துதான் கட்டி இருப்பார்கள்.

    // நுகத்தடியில் கட்டினால் விளக்கு உடைஞ்சிடுமே? //

    நுகத்தடியின் கழுத்தில் கீழே தொங்குமாறு கட்டுவார்கள். சாலையில் மேடு பள்ளம் பார்க்க உதவும்.

    // அதே போல டயர் மாட்டு வண்டி எனில் , வண்டி ஓட்டுபவர் இருக்கைக்கு அடியில் "ப" வடிவ இரும்பு சட்டம் இருக்கும் அதனிடையே பாதுகாப்பாக கட்டி வைத்திருப்பார்கள்.//

    இப்போதும் கரும்பு ஆலைகளுக்கு செல்லும் டயர் வண்டிகளில் நீங்கள் சொல்வது போல்தான் வைக்கிறார்கள்.

    // இப்போலம் மண்னெண்ணெய் கிடைக்கறதே ரொம்ப கஷ்டமாச்சே , கேஸ் சிலிண்டர் வச்சிருந்தா கெரசின் கட் பண்ணிடுறாங்க, சமீபத்தில ஒரு தேவைக்காக மண்ணெண்ணெய் வாங்க அலைஞ்சால் ,எந்த கடையிலும் இப்போ விக்கிறதேயில்லைனு சொல்லிட்டாங்க., ரேஷன் கடையில வான்கினா தான் உண்டு. //

    அது என்னவோ, எந்த காலத்திலும் மண்ணெண்ணெய் கறுப்பு மார்க்கெட்டில் தாரளமாக கிடைக்கிறது. இன்வெர்ட்டர் படும்பாட்டைப் பார்த்தால் நமக்கே பரிதாபம்தான். எங்கள் கார்டுக்கு சீனியைத் தவிர எதுவும் கிடையாது. எனவே மண்ணெண்ணெய் கிடைத்தால் போதும் என்று வாங்க வேண்டி இருக்கிறது.


    ReplyDelete
  24. அரிக்கேன் விளக்கு பற்றி எழுதி பழைய நாட்களை நினைத்துப் பார்க்க செய்துவிட்டீர்கள். 1961 வரை எங்கள் ஊருக்கு மின் இணைப்பு தராததால் அரிக்கேன் விளக்கையும், சிம்னி விளக்கையும், காடா விளக்கையும் தான் நாங்கள் நாட வேண்டியிருந்தது.

    பின்னால் வங்கியில் சேர்ந்த பிறகு 1973 ஏப்ரல்- மே மாதங்களில் மின் வெட்டு வந்தபோது, C.A.I.I.B இறுதி தேர்வு படிப்பதற்காக, பொள்ளாச்சியில் அரிக்கேன் விளக்கு வாங்கியபோது எல்லோரும் என்னை வியப்போடு பார்த்தது நினைவுக்கு வருகிறது.

    இன்னொரு தகவல். பீகாரில் திரு லாலு பிரசாத் யாதவ் அவர்களின் தேர்தல் சின்னம் அரிக்கேன் விளக்கு என்பதுதான் அது!

    ReplyDelete
  25. அண்மையில் ஒரு லிட்டர் கெரொசின் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    ரூபாய் 58 என்று சொல்கிறார்கள். நான் 1968 ல் ஆலத்தூர் எனும் கிராமத்தில் இருந்தபோது சீமென்ண்ணையில் விலை ரூபாய் 2 அல்லது 3 ஆக இருந்தது என்று நினைவு. இல்லை, அதற்கும் குறைவோ ?

    அது என்னஇப்போது நீல கலரில் இருக்கிறது ?

    அந்த ராமர் பிள்ளை பெட்ரோலுக்கு பதிலாக மூலிகை சீமெண்ணை கண்டுபிடித்தால் நன்றாக இருக்கும்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  26. நினைவலைகள்......

    இப்போது கூட திருச்சியில் அம்மா இரண்டு அரிக்கேன் விளக்குகள் வைத்திருக்கிறார்!

    ReplyDelete
  27. சிறப்பான பகிர்வு. என்னுடைய சிறுவயதில் மின்வெட்டு சமயம் சிம்னி விளக்கு வைத்து படித்திருக்கிறேன். அரிக்கேன் விளக்கு நான் சினிமாவில் தான் பார்த்திருக்கிறேன். திருமணத்திற்கு பின் என்னுடைய மாமியார் பரணில் அரிக்கேன் விளக்குகள் வைத்திருந்தார்.. அவை இன்றும் நல்ல நிலையில் உள்ளன...

    ReplyDelete
  28. மறுமொழி > kovaikkavi said...
    // ஆமாம் நானும் வளர்ந்துது நினைவு வருகிறது.
    பின்னால் பெட்ரோமாக்ஸ் வியக்கு எரித்தோம்.2 லாண்ரன் (அரிக்கேன்) விளக்கு ஓரு மேசை விளக்கு படிக்க. குசினியல் ஓரகால் விளக்கு என அருமையான காலங்கள்.
    பதிவிற்கு மிக்க நன்றி. இனிய வாழ்த்து.//

    சகோதரி கவிஞர் வேதா. இலங்காதிலகம் அவர்களின் கருத்துரைக்கும், தனது அனுபவ பகிர்வுக்கும் நன்றி!

    ReplyDelete
  29. மறுமொழி > Packirisamy N said...
    // +2 படிக்கும்பொழுது அரிக்கேன் விளக்கை கயிற்றில் கட்டித் தொங்கவிட்டு படித்த ஞாபகம் உள்ளது. பொழுதோட படித்துவிடு, ரா முழுக்க விளக்க வச்சிக்கிட்டு கூத்தடிக்கக் கூடாது, எண்ணை இல்லை என்று பாட்டி திட்டுவார்கள். இப்பொழுது பேட்டரியில் இதே டிசைன் வந்துள்ளது. //

    சகோதரர் பக்கிரிசாமி.என் அவர்களின் கருத்துரைக்கும், அவரது அனுபவ பகிர்வுக்கும் நன்றி!

    ReplyDelete
  30. மறுமொழி > துளசி கோபால் said...

    // அருமை! நானும் ஹரிகேன் விளக்கில் படிச்சுருக்கேன். வாடகைக்கு இருந்தோம். அப்போது அங்கே மின் இணைப்பு இல்லை:(அண்ணனுக்கு தனி அறையும் தனி விளக்கும் உண்டு. சாப்பிடும் நேரத்தில் சமையலறையை ஒட்டின சாப்பாட்டறையில் விளக்கு இருந்தாலும் அவர் தன்னுடைய அறை விளக்கைக் கையோடு எடுத்து வருவார். சாப்பிடும் அறை இன்னும் பளிச்சாகிவிடும். ஆனால் அவர் உணவை முடித்த கையோடு விளக்கும் போய்விடும்://

    துளசி டீச்சர் அவர்களின் கருத்துரைக்கும், தனது அனுபவ பகிர்வுக்கும் நன்றி!

    // (நான் ஒருத்திதான் சாப்பிட அதிகநேரம் எடுத்துக் கொள்வேன். சாப்பாட்டுத் தட்டில் படம் வரைவதும், அணை கட்டுவதும் கட்டம்போட்டு சின்னச்சின்ன கட்டத்தை எடுத்து முழுங்குவதுமாக படுத்தி எடுப்பேன். ஊசித்தொண்டை என்ற வசவு வேறு கிடைக்கும்:-) //

    இப்போதெல்லாம் அப்படி அணைகட்டி, கட்டம் போட்டு சாப்பிட முடியாது.

    // கொசுவத்தி ஏத்தி வச்சதுக்கு நன்றி.
    BTW கொசுவத்தி ஹோல்ஸேல் துளசிதளத்தில் கிடைக்கும்:-)))) //

    என்ன சொல்ல வருகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை.


    ReplyDelete
  31. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...
    // அந்தக் காலம் ஞாபகம் வந்தது... ம்... இன்று ஒரு காட்சிப் பொருளாக... //

    சகோதரர் திண்டுக்கல் தனபாலன் கருத்துக்கு நன்றி!

    ReplyDelete
  32. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...
    // சிறு வயதில் அரிக்கேன் விளக்குகளைப் பார்த்திருக்கின்றேன் ஐயா. என் வீட்டில்கூட ஒரு விளக்கு இருந்ததாக நினைவு.
    நன்றி //

    சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயகுமாருக்கு நன்றி!



    ReplyDelete
  33. எனக்கு தெருக்களில் கூடகம்பங்களில் மண்ணெண்ணை விளக்கு எரிய விட்டதைப் பார்த்த நினைவு. தினம் மாலை ஆறேழு மணி அளவில் ஒருவர் இம்மாதிரிக் கம்பங்களில் விளக்கேற்றிப் போவார். நினைவுகள் எங்கெல்லாம் சஞ்சரிக்கின்றன. ..!

    ReplyDelete
  34. மலரும் நினைவுகள்!.. தினந்தோறும் அரிக்கேன் விளக்கின் கண்ணாடியை கழுவி துடைத்து மாட்டுவது அலுப்பாக இருக்கும் .ஆனாலும் கவனமாக செய்தது நெஞ்சில் நிழலாடுகின்றது. அந்த அரிக்கேன் விளக்கிலும் எத்தனை நுட்பமான பாகங்கள்!..

    அதேபோல சைக்கிள் லைட்!.. டைனமோ விளக்கு வருவதற்கு முன் எண்ணெயில் எரியும் சிறு விளக்கு!.. அதுவே ஜட்கா வண்டிகளில் வேறு மாதிரி இருக்கும்!..

    மறக்க மனம் கூடுதில்லையே!..

    ReplyDelete
  35. 'அரிக்கலாம்பு' என்பார்கள் அப்போது... அது hurricane lamp என்பதன் மருவுதல் என்று தெரிந்து கொண்டேன் பிற்பாடு. எந்தக் காற்றிலும் அணையாத வண்ணம் வடிவமைத்திருப்பார்கள். அந்த நாட்களை மனதில் கொண்டுவந்த அழகிய பதிவு.

    ReplyDelete
  36. அருமையான அரிக்கேன் நினைவுகள்.... சிறு வயதில் கிராமங்களில் இருக்கும் உறவினர்களின் வீட்டுக்குச் செல்லும்போது நிறைய அனுபவித்திருக்கிறேன்...த.ம.6

    ReplyDelete
  37. அரிக்கேன் விளக்கு பற்றி சுவையான தகவல்கள் அறிந்து கொண்டேன்.

    ReplyDelete
  38. மறுமொழி > வே.நடனசபாபதி said...

    // அரிக்கேன் விளக்கு பற்றி எழுதி பழைய நாட்களை நினைத்துப் பார்க்க செய்துவிட்டீர்கள். 1961 வரை எங்கள் ஊருக்கு மின் இணைப்பு தராததால் அரிக்கேன் விளக்கையும், சிம்னி விளக்கையும், காடா விளக்கையும் தான் நாங்கள் நாட வேண்டியிருந்தது. //

    அய்யா வே நடனசபாபதி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    // பின்னால் வங்கியில் சேர்ந்த பிறகு 1973 ஏப்ரல்- மே மாதங்களில் மின் வெட்டு வந்தபோது, C.A.I.I.B இறுதி தேர்வு படிப்பதற்காக, பொள்ளாச்சியில் அரிக்கேன் விளக்கு வாங்கியபோது எல்லோரும் என்னை வியப்போடு பார்த்தது நினைவுக்கு வருகிறது. //

    அப்போது கோடையில் மட்டுமே மின்வெட்டு இருந்தது. படிப்படியாக இப்போது தினம்தோறும் மின்வெட்டு என்று செய்கிறார்கள்.

    // இன்னொரு தகவல். பீகாரில் திரு லாலு பிரசாத் யாதவ் அவர்களின் தேர்தல் சின்னம் அரிக்கேன் விளக்கு என்பதுதான் அது! //

    மறந்துபோன தகவலை நினைவுபடுத்தியமைக்கு நன்றி

    ReplyDelete
  39. மறுமொழி > sury Siva said...

    // அண்மையில் ஒரு லிட்டர் கெரொசின் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ரூபாய் 58 என்று சொல்கிறார்கள். நான் 1968 ல் ஆலத்தூர் எனும் கிராமத்தில் இருந்தபோது சீமென்ண்ணையில் விலை ரூபாய் 2 அல்லது 3 ஆக இருந்தது என்று நினைவு. இல்லை, அதற்கும் குறைவோ ? //

    சூரிசிவா என்கிற சுப்பு தாத்தாவின் வருகைக்கு நன்றி! அப்போது விலைவாசி மட்டுமல்ல ,சம்பளமும் குறைவாகத்தான் இருந்தது. சம்பளம் ஏற ஏற விலைவாசியும் ஏறி விட்டது.

    // அது என்னஇப்போது நீல கலரில் இருக்கிறது ? அந்த ராமர் பிள்ளை பெட்ரோலுக்கு பதிலாக மூலிகை சீமெண்ணை கண்டுபிடித்தால் நன்றாக இருக்கும். //

    ரேசனில் விற்கப்படும் சீமெண்ணெய் மட்டும் நீலக்கலர்! கடைக்குப் பக்கத்திலேயே வாங்கின கையோடு அதிக விலைக்கு விற்றுக் கொண்டு இருப்பார்கள். பிளாக்கில் தாரளமாக கிடைக்கும்.

    ReplyDelete
  40. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...

    // நினைவலைகள்...... இப்போது கூட திருச்சியில் அம்மா இரண்டு அரிக்கேன் விளக்குகள் வைத்திருக்கிறார்! //

    சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
    பழைய பொருட்கள் பத்திரமாக வைத்து இருப்பதே ஆச்சரியமான விஷயம்தான்.

    ReplyDelete
  41. மறுமொழி > ADHI VENKAT said...

    // சிறப்பான பகிர்வு. என்னுடைய சிறுவயதில் மின்வெட்டு சமயம் சிம்னி விளக்கு வைத்து படித்திருக்கிறேன். அரிக்கேன் விளக்கு நான் சினிமாவில் தான் பார்த்திருக்கிறேன். திருமணத்திற்கு பின் என்னுடைய மாமியார் பரணில் அரிக்கேன் விளக்குகள் வைத்திருந்தார்.. அவை இன்றும் நல்ல நிலையில் உள்ளன... //

    சகோதரி ஆதி வெங்கட் அவர்களின் கருத்துக்கு நன்றி!

    ReplyDelete
  42. மறுமொழி > G.M Balasubramaniam said...

    // எனக்கு தெருக்களில் கூடகம்பங்களில் மண்ணெண்ணை விளக்கு எரிய விட்டதைப் பார்த்த நினைவு. தினம் மாலை ஆறேழு மணி அளவில் ஒருவர் இம்மாதிரிக் கம்பங்களில் விளக்கேற்றிப் போவார். நினைவுகள் எங்கெல்லாம் சஞ்சரிக்கின்றன. ..! //

    அய்யா GMB அவர்களின் கருத்துரைக்கு நன்றி! நீங்கள் சொல்லும் விளக்குத் தூண்கள் எனக்கும் ஞாபகம் வந்தது. இன்னும் சில கிராமங்களில் அந்த தூண்கள் அப்படியே பழைய நினைவுகளைச் சுமந்தபடி இருக்கின்றன.


    ReplyDelete
  43. மறுமொழி > துரை செல்வராஜூ said...

    //மலரும் நினைவுகள்!.. தினந்தோறும் அரிக்கேன் விளக்கின் கண்ணாடியை கழுவி துடைத்து மாட்டுவது அலுப்பாக இருக்கும் .ஆனாலும் கவனமாக செய்தது நெஞ்சில் நிழலாடுகின்றது. அந்த அரிக்கேன் விளக்கிலும் எத்தனை நுட்பமான பாகங்கள்!.. //

    சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களுக்கு நன்றி! சாதாரண கட்டுரையாக எழுதினாலும் அது மலரும் நினைவுகளாகவே அமைந்து விடுகிறது. சுத்தம் செய்யும்போது அரிக்கேன் விளக்கு கண்ணாடிகளை நிறைய தடவை உடைத்து இருக்கிறேன்.

    //அதேபோல சைக்கிள் லைட்!.. டைனமோ விளக்கு வருவதற்கு முன் எண்ணெயில் எரியும் சிறு விளக்கு!.. அதுவே ஜட்கா வண்டிகளில் வேறு மாதிரி இருக்கும்!.. //

    நீங்கள் உங்கள் மலரும் நினைவுகளை எழுத வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்

    //மறக்க மனம் கூடுதில்லையே!.. //

    இந்த தலைப்பில் அய்யா வை கோபாலகிருஷ்ணன் அவர்கள் ஒரு பதிவு எழுதி இருக்கிறார்.

    ReplyDelete
  44. மறுமொழி > கே. பி. ஜனா... said...

    // 'அரிக்கலாம்பு' என்பார்கள் அப்போது... அது hurricane lamp என்பதன் மருவுதல் என்று தெரிந்து கொண்டேன் பிற்பாடு. எந்தக் காற்றிலும் அணையாத வண்ணம் வடிவமைத்திருப்பார்கள். அந்த நாட்களை மனதில் கொண்டுவந்த அழகிய பதிவு. //

    எழுத்தாளர் கே பி ஜனா அவர்களின் அருமையான விளக்கத்திற்கு நன்றி!

    ReplyDelete
  45. மறுமொழி > ஸ்கூல் பையன் said...

    // அருமையான அரிக்கேன் நினைவுகள்.... சிறு வயதில் கிராமங்களில் இருக்கும் உறவினர்களின் வீட்டுக்குச் செல்லும்போது நிறைய அனுபவித்திருக்கிறேன்...த.ம.6 //

    சகோதரரின் கருத்துக்கு நன்றி! மின்வெட்டை முன்னிட்டு இப்போது நகர்ப்புறங்களிலும் அந்த அரிக்கேன் விளக்கு விற்பனைக்கு வந்து விட்டது.

    ReplyDelete
  46. ஹரிக்கேன் விளக்கு மற்றும் சின்ன சிம்னி விளக்குக் கண்ணாடிகளை நாங்க கழுவ மாட்டோம். விறகு அடுப்பில் (இதைப்பற்றிக்கூட எழுதலாம்) கிடைக்கும் மென்மையான சாம்பலைப்போட்டுத் தேய்த்து ஒரு உலர்ந்த துணியால் துடைச்சால் பளிச். ட்ரை க்ளீனிங் மட்டுமே:-))))

    விளக்குகளுக்குக் கெரஸின் ஊத்தும்போது சில சமயம் ஓவர்ஃப்ளோ ஆகிரும். அப்படிப்பட்ட சமயங்களில் சட்ன்னு கொஞ்சம் சாணி எடுத்து மெழுகி வச்சுருவேன். மண்தரை என்பதால் பிரச்சனை இல்லை.ஆனால்...... அந்த கெரஸின் மணம் காட்டிக்கொடுத்துரும்:-)

    அப்புறம் அக்காவிடம் கொஞ்சம் 'பாட்டு' கேட்க வேண்டி இருக்கும்:-)

    கொசுவத்தி = நினைவலைகள், . துளசிதளத்தில் முதல்முதலா கொசுவத்தி ஏத்தி வச்சதுமுதல் இவைகளுக்கு நான் மட்டுமே மொத்த வியாபாரி:-))))

    ReplyDelete
  47. மேலைநாடுகளில் ஒருகாலத்தில் சூறாவளி காற்றிலும் இத்தகைய விளக்குகளைத்தான் பயன்படுத்துவார்களாம். இதனாலேயே hurricane lamps என்று பெயர் வந்தது என்பார்கள். எங்களுடைய வீட்டிலும் எனக்கு நினைவு தெரிந்து பல வருடங்கள் இத்தகைய விளக்கை பயன்படுத்தியுள்ளோம். ஆனால் விளக்கு எரிந்துக்கொண்டிருக்கும்போது விளையாட்டுக்காக ஒரு சொட்டு நீரை சுண்டினாலும் சூடாக இருக்கும் சிம்னி பட்டென்று வெடித்துவிடும். அதையும் விளையாட்டுத்தனமாக செய்து அடி வாங்கிய அனுபவமும் உண்டு.

    ReplyDelete
  48. அரிக்கேன் விளக்கு பற்றிய அலசல் (பிரகாசமா) நல்லாருக்கு சார் அதிலும் கைகள் மூலம் நிழல்களால் செய்யும் வடிவங்கள் அருமை இது போல் சிறு வயதில் பார்த்ததுண்டு

    ReplyDelete
  49. மறுமொழி > வேகநரி said...
    // அரிக்கேன் விளக்கு பற்றி சுவையான தகவல்கள் அறிந்து கொண்டேன். //
    வேகநரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  50. மறுமொழி > துளசி கோபால் said...
    // ஹரிக்கேன் விளக்கு மற்றும் சின்ன சிம்னி விளக்குக் கண்ணாடிகளை நாங்க கழுவ மாட்டோம். விறகு அடுப்பில் (இதைப்பற்றிக்கூட எழுதலாம்) கிடைக்கும் மென்மையான சாம்பலைப்போட்டுத் தேய்த்து ஒரு உலர்ந்த துணியால் துடைச்சால் பளிச். ட்ரை க்ளீனிங் மட்டுமே:-))))

    விளக்குகளுக்குக் கெரஸின் ஊத்தும்போது சில சமயம் ஓவர்ஃப்ளோ ஆகிரும். அப்படிப்பட்ட சமயங்களில் சட்ன்னு கொஞ்சம் சாணி எடுத்து மெழுகி வச்சுருவேன். மண்தரை என்பதால் பிரச்சனை இல்லை.ஆனால்...... அந்த கெரஸின் மணம் காட்டிக்கொடுத்துரும்:-)

    அப்புறம் அக்காவிடம் கொஞ்சம் 'பாட்டு' கேட்க வேண்டி இருக்கும்:-)

    கொசுவத்தி = நினைவலைகள், . துளசிதளத்தில் முதல்முதலா கொசுவத்தி ஏத்தி வச்சதுமுதல் இவைகளுக்கு நான் மட்டுமே மொத்த வியாபாரி:-)))) //

    துளசிதளம் சகோதரி, டீச்சர் துளசி கோபால் அவர்களின் இரண்டாம் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! படித்துவிட்டு தொடராமல் இருக்கும் உங்கள் பதிவுகளை இனிமேல்தான் நான் படிக்க வேண்டும்.

    ReplyDelete
  51. மறுமொழி > டிபிஆர்.ஜோசப் said...
    // மேலைநாடுகளில் ஒருகாலத்தில் சூறாவளி காற்றிலும் இத்தகைய விளக்குகளைத்தான் பயன்படுத்துவார்களாம். இதனாலேயே hurricane lamps என்று பெயர் வந்தது என்பார்கள். எங்களுடைய வீட்டிலும் எனக்கு நினைவு தெரிந்து பல வருடங்கள் இத்தகைய விளக்கை பயன்படுத்தியுள்ளோம். ஆனால் விளக்கு எரிந்துக்கொண்டிருக்கும்போது விளையாட்டுக்காக ஒரு சொட்டு நீரை சுண்டினாலும் சூடாக இருக்கும் சிம்னி பட்டென்று வெடித்துவிடும். அதையும் விளையாட்டுத்தனமாக செய்து அடி வாங்கிய அனுபவமும் உண்டு. //

    அய்யா டிபிஆர்.ஜோசப் அவர்களின் கருத்துரைக்கும் அனுபவ பகிர்வுக்கும் நன்றி!

    ReplyDelete
  52. மறுமொழி > r.v.saravanan said...
    // அரிக்கேன் விளக்கு பற்றிய அலசல் (பிரகாசமா) நல்லாருக்கு சார் அதிலும் கைகள் மூலம் நிழல்களால் செய்யும் வடிவங்கள் அருமை இது போல் சிறு வயதில் பார்த்ததுண்டு //
    சகோதரர் குடந்தையூர் ஆர் வி சரவணனின் அலசலுக்கு நன்றி!

    ReplyDelete
  53. ஏழாவது ஓட்டு என்னுடையது. மகிழ்ச்சி. பலருக்கும் போய்ச் சேர வேண்டிய பதிவு. எத்தனையோ விசயங்களை முந்திக் கொண்டு எழுதியிருக்கின்றேன். இந்த அரிக்கேன் விளக்கு அனுபங்களை எழுத வில்லையே என்று யோசிக்க வைத்த பதிவு. நன்றி.

    ReplyDelete
  54. மறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said...

    சகோதரர் ஜோதிஜி திருப்பூர் அவர்களின் வருகைக்கும், அன்பான கருத்துரைக்கும் நன்றி!

    // ஏழாவது ஓட்டு என்னுடையது. //

    சகோதரருக்கு நன்றி! நான் எந்த பதிவைப் படித்தாலும் படித்து முடிந்தவுடன், உடனே தமிழ் மணத்தில் அந்த பதிவுக்கு ஓட்டு அளித்து விடுவேன். கவிஞர் ரமணியிடம் கற்றுக் கொண்டது.

    //மகிழ்ச்சி. பலருக்கும் போய்ச் சேர வேண்டிய பதிவு. எத்தனையோ விசயங்களை முந்திக் கொண்டு எழுதியிருக்கின்றேன். இந்த அரிக்கேன் விளக்கு அனுபங்களை எழுத வில்லையே என்று யோசிக்க வைத்த பதிவு. நன்றி. //

    ஒருவர் ஒரு தலைப்பில் எழுதினால் என்ன? நீங்கள் அதே தலைப்பில் உங்கள் அனுபவத்தை உங்கள் நடையில் எழுதுங்கள். ஒரே சினிமாவைப் பற்றி எத்தனை பேர் எழுதுகிறார்கள். உங்கள் பதிவை எதிர்பார்க்கிறேன்.




    ReplyDelete
  55. வணக்கம்
    இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_21.html?showComment=1392963937862#c5891393347810975556
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  56. மறுமொழி > ரூபன் said..

    இந்தவாரம் வலைச்சரம் ஆசிரியை சகோதரி ராஜியின் அறிமுகப் பதிவர்களில், என்னுடைய பெயரும் இருக்கும் தகவலை எனது வலைத்தளத்தில் தெரிவித்த சகோதரர் கவிஞர் ரூபன் அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  57. இந்தத் தலைமுறை அறிந்திராத மறக்கமுடியாத நினைவலைகள்.

    ReplyDelete
  58. மறுமொழி > கவிப்ரியன் ஆர்க்காடு said...

    // இந்தத் தலைமுறை அறிந்திராத மறக்கமுடியாத நினைவலைகள். //

    சகோதரரின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete