Thursday 19 December 2013

திருச்சி: புத்தூர் குழுமாயி அம்மன் கோயில்


திருச்சியிலுள்ள முக்கியமான அம்மன் கோயில்களில் புத்தூர் குழுமாயி அம்மன் கோயிலும் ஒன்று. (படம்.1) திருச்சி புத்தூர் பகுதியில் அமைந்துள்ளதாலும், இந்த கோயிலின் குட்டிகுடி திருவிழா இந்த பகுதியில் வெகு விமரிசையாக கொண்டாடப் படுவதாலும் புத்தூர் குழுமாயி அம்மன் கோயில் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த பகுதி காவல்தெய்வமும் இதுவே ஆகும்.

கோயில் அமைந்துள்ள இடம்:

திருச்சியில் உய்யகொண்டான் ஆற்றங்கரையில், உய்ய கொண்டான், கோரையாறு, குடமுருட்டி ஆறுகள் பிரியும் வனப் பகுதியில் இந்த குழுமாயி அம்மன் கோயில் அமைந்துள்ளது. கோயிலுக்கு அருகில் தொட்டிப் பாலம் உள்ளது. இந்த கோயிலுக்குச் செல்ல புத்தூர் நாலு ரோடு , பிஷப் ஹீபர் கல்லூரி வழியாக குமரன் நகர் செல்ல வேண்டு.ம். அங்கிருந்து இடது (தெற்கு) பக்கம் கோயிலுக்குச் செல்லும் பாதை வழியாக நடந்தும் செல்லலாம். நடக்க இயலாதவர்கள் இரு சக்கர வாகனத்திலோ காரிலோ அல்லது ஆட்டோவிலோ செல்வது நல்லது.

கோயில் வரலாறும் திருவிழாவும்:

நாயக்கர்கள் காலத்தில், புத்தூர் அருகே உள்ள கிராம மக்கள் தங்கள் நிலத்தை வெட்டி உள்ளனர். அப்போது அந்த இடத்தில் ரத்தம் பீறிட்டது. எனவே தெய்வ வாக்கு கேட்டபோது, வன தெய்வம் காளி அங்கு குடியிருப்பதாகக் கூறியது. எனவே அங்கு காவல் தெய்வமாக இந்த அம்மனை வைத்து வழிபடத் துவங்கினர். இதற்கு இடையில் ஒரு மலையாள மந்திரவாதி அம்மனின் சக்தியை அடக்க சில ஏவல் வேலைகள் செய்தான். இதனால் பயந்துபோன கிராம மக்கள் அருகிலுள்ள இரட்டை மலை ஒண்டி கருப்புசாமி கோயிலில்  அருள்வாக்கு கேட்டனர். அந்த கருப்புசாமி கடவுளும் தனக்கு ஆடு பலி கொடுத்து விழா நடத்தினால், அந்த மந்திரவாதியை அழிப்பதாகச் சொல்ல, அவர்களும் விழா எடுத்தனர். மந்திரவாதியும் அழிந்தான். அது முதல் இந்த கோயிலுக்கு குட்டி குடி திருவிழா என்று நடத்தப் படுகிறது. ( சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயில் தல புராணத்திலும் இதேபோல ஒரு மந்திரவாதி கதை உண்டு. நான் எழுதிய பதிவைக் காண்க:  சிறுவாச்சூர் மதுர காளியம்மன் http://tthamizhelango.blogspot.com/2012/01/blog-post_08.html
  
கிராம மக்கள் குழி வெட்டும்போது இந்த அம்மன் தோன்றியதால்  குழுமாயி அம்மன் என்று பெயர் வந்ததாகச் சொல்லுவார்கள். ( சற்று ஆராய்ந்து பார்த்தால், குளுமையான இந்த இடத்தில் அமர்ந்த அம்மன் , குளுமையான அம்மன் என்று பெயர் பெற்று குளுமாயி எனத் திரிபடைந்து, குழுமாயி என மாறி இருக்கலாம் என்பது எனது கருத்து) 

ஆபத்தான ஆறுகள்:

இந்த கோயில் இருக்கும் இடத்தில் உய்ய கொண்டான், கோரையாறு, குடமுருட்டி ஆறுகள் ஒரே இடத்திலிருந்து பிரிகின்றன. இந்த ஆற்றில் இறங்க உள்ளூர் மக்களே அஞ்சுவர். நீர்ச்சுழலும் பாதுகாப்பற்ற சூழலுமே இங்கு நிலவுகிறது. கோயிலுக்கு மேலே மேற்கே உள்ள ஆற்றங்கரையானது பக்கவாட்டு சுவர் இல்லாமல் செல்கிறது. ஆற்றில் சிக்கி நிறையபேர் இறந்து இருக்கிறார்கள். எனவே கோயிலுக்குச் செல்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகள் மீது கவனம் தேவை.

தொட்டிப் பாலம்:

இந்த அம்மன் கோவில் அருகே கோரையாறு, உய்யக்கொண்டான் வாய்க்காலுடன் கலக்கிறது. மழைக் காலங்களில் கோரையாற்றில் வரும் வெள்ளம் இந்த கோயிலுக்கு அருகேயுள்ள புத்தூர், உறையூர் பகுதிகளை சேதப்படுத்துவதால், அதனைத் தவிர்க்க தொட்டிப்பாலம் ஒன்றை கட்டியுள்ளனர். இந்த பாலத்திலும் ஆங்காங்கே ஆறுகள் பற்றிய எச்சரிக்கை வாசகங்களை எழுதி வைத்துள்ளார்கள்

கோயில் படங்கள்:

இந்த மாதம் முதல் வாரத்தில் 06.12.2013 அன்று திருச்சி தீரன் நகர் செல்ல வேண்டி இருந்தது. (அங்கிருந்து காட்டுப் பகுதி வழியே உள்ள ஒருசாலை வயலூர் ரோட்டில் உள்ள குமரன் நகருக்கு செல்கிறது. வழியில் இயற்கை எழில் கொஞ்ச  குழுமாயி அம்மன் கோயில் உள்ளது.) நான் அந்த பாதை வழியே எனது TVS – XL SUPER வண்டியில் அந்த அம்மன் கோயிலுக்குச் சென்று எனது கேமராவில் படம் பிடித்தேன். திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோயிலில் என்னால் எடுக்கப்பட்ட சில வண்ணப்படங்கள் இங்கே:



படம்.2 மேலே: புத்தூர் குழுமாயி அம்மன் கோயில் எழில் தோற்றம் 



படம்.3 மேலே: அருவியுடன் கூடிய அம்மன் கோயில்  




படம்.4 மேலே: கோயிலின் முகப்பு  
   

படம்.5 மேலே: கோயிலின் அருகே உள்ள அருவி  
     
                                           
படம்.6 மேலே: கோயிலின் அருகே உள்ள பாலம்  
   
                             
படம்.7 மேலே:  கோயிலின் அருகே உள்ள அருவியின் மற்றொரு காட்சி 

  
                                                      
படம்.8 மேலே: கோயிலின் இன்னொரு காட்சி 
        

                           

படம்.9 மேலே:  கோயிலின் அருகே உள்ள மரம் 
            



படம்.10 மேலே: கோயிலின் அருகே உள்ள ஆறு மற்றும் குமரன்நகர் செல்லும் பாதை.
                         


படம்.11 மேலே: கோயிலுக்குச் செல்ல ஆற்றைக் கடக்க உதவும் நடைபாலம்.
                                            


படம்.12 மேலே:  பாலத்தில் உள்ள எச்சரிக்கை அறிவிப்பு

 









32 comments:

  1. இதுவரை அறிந்திராத அருள்மிகு குழுமாயி அம்மன் கோவில் பற்றிய தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி. படங்கள் அருமை. அடுத்த தடவை திருச்சி செல்லும்போது இந்த கோவிலுக்கு செல்லலாம் என இருக்கிறேன்.

    ReplyDelete
  2. இருபது ஆண்டுகளுக்கு முன்னால்
    நான் இந்தக் கோவிலுக்குப் போனது
    தங்கள் படங்களுடன் கூடிய அருமையான
    பகிர்வைப் பார்த்ததும் மீண்டும் தரிசிக்கத் தூண்டுகிறது
    மனம் கவர்ந்த பகிர்வுக்கு நல்வாழ்ழ்த்துக்கள்

    ReplyDelete
  3. பயனுள்ள அருமையான பகிர்வுகள்.. சிறப்பான படங்கள்..பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. புத்தூர் குழுமாயி அம்மன் கோயிலின் சிறப்பான தகவல்களுக்கு நன்றி ஐயா... படங்கள் அனைத்தும் அருமை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. புகைப்படங்களும் தகவல்களும் மிகவும் நன்றாய் இருக்கின்றன!
    கோவில் ஏதோ தனித்திருந்து தவம் செய்கிற மாதிரி, தனிமையில் இருக்கிறது!

    ReplyDelete
  6. அருவியை பார்க்கும் போதே இந்த கோவிலுக்கு செல்லும் ஆசை வந்து விட்டது...முடியும் போது சென்று வர வேண்டும்...

    படங்களுடன் பகிர்வு அருமையாக இருந்தது..

    ReplyDelete
  7. வணக்கம்
    ஐயா

    புகைப்படங்களும் கோயில் பற்றிய தகவலும் அருமை வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. வணக்கம்
    ஐயா
    த.ம 3வது வாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  9. படங்களும் பகிர்வும் மிகவும் அருமை ஐயா. பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    அந்த ஆற்றில் யாரும் இறங்கவே கூடாது. சுழல் அதிகம். இதுவரை நடந்துள்ள இழப்புகள் மிக அதிகம் என்பது உண்மையே.

    என்னுடன் BHEL இல் பணியாற்றிய திரு. துரை என்ற நண்பரின் மாப்பிள்ளை, புதிதாகக் கல்யாணமாகி ஓராண்டுக்குள் [மனைவி நிறை மாத கர்ப்பிணியாக இருந்தபோது] இதே ஆற்றில் இறங்கியவர் சுழலில் சிக்கி உயிரை இழந்தார். மிகவும் கொடுமையாக இருந்தது அந்த நிகழ்ச்சி.

    தயவுசெய்து இதை வாசிக்கும் யாரும் அந்தப்பகுதியில் உள்ள உய்யக்கொண்டான், கோரையாறு, குடமுருட்டி போன்றவற்றில் தயவுசெய்து இறங்காமல் இருப்பதே நல்லது.

    எச்சரிக்கையுடன் கூடிய பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.

    ReplyDelete
  10. மறுமொழி > வே.நடனசபாபதி said...
    // இதுவரை அறிந்திராத அருள்மிகு குழுமாயி அம்மன் கோவில் பற்றிய தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி. படங்கள் அருமை. அடுத்த தடவை திருச்சி செல்லும்போது இந்த கோவிலுக்கு செல்லலாம் என இருக்கிறேன். //

    அய்யாவின் கருத்துரைக்கு நன்றி! இந்த கோயிலுக்கு சென்று வந்தவுடன், மறக்காமல் தங்கள் அனுபவத்தை பதிவு செய்யவும். மேலே உள்ள திரு வை கோபாலகிருஷ்ணன் அவர்களின் எச்சரிக்கையோடு கூடிய கருத்துரையை அவசியம் வாசிக்கவும்.


    ReplyDelete

  11. மறுமொழி > Ramani S said... ( 1, 2 )
    // இருபது ஆண்டுகளுக்கு முன்னால் நான் இந்தக் கோவிலுக்குப் போனது தங்கள் படங்களுடன் கூடிய அருமையான பகிர்வைப் பார்த்ததும் மீண்டும் தரிசிக்கத் தூண்டுகிறது மனம் கவர்ந்த பகிர்வுக்கு நல்வாழ்ழ்த்துக்கள் //

    நீங்கள் திருச்சியில் இருந்த நாட்களைக் கூட மலரும் நினைவுகளாக எழுதலாமே! வாருங்கள்! மறுபடியும் கோயில் தரிசனம் செய்யுங்கள்! கவிஞரின் கருத்துரைக்கும் வாழ்த்திற்கும் நன்றி!

    ReplyDelete
  12. மறுமொழி > இராஜராஜேஸ்வரி said... .
    அருமையான பகிர்வுகள்.. சிறப்பான படங்கள்.. என்று பாராட்டுக்கள் சொன்ன ஆன்மீகப் பதிவர் சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  13. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...

    // புத்தூர் குழுமாயி அம்மன் கோயிலின் சிறப்பான தகவல்களுக்கு நன்றி ஐயா... படங்கள் அனைத்தும் அருமை... வாழ்த்துக்கள்... //

    எங்கிருந்த போதும் என்னை ஆதரித்து ஊக்கப்படுத்தும் திண்டுக்கல்லாருக்கு நன்றி!

    ReplyDelete
  14. மறுமொழி > மனோ சாமிநாதன் said...
    // புகைப்படங்களும் தகவல்களும் மிகவும் நன்றாய் இருக்கின்றன! //

    சகோதரி மனோ சாமிநாதன் அவர்களின் பாராட்டிற்கு நன்றி!

    // கோவில் ஏதோ தனித்திருந்து தவம் செய்கிற மாதிரி, தனிமையில் இருக்கிறது! //

    கோயில் இருக்கும் இடம் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாது இருந்த ஒரு வனாந்திரம். இப்போது கோயிலைச் சுற்றி பிளாட்டுகள் போடத் துவங்கி விட்டனர். பகல் வேளையில் மற்றும் சிறப்பு நாட்களில் ஆட்கள் நடமாட்டம் உண்டு.

    ReplyDelete
  15. மறுமொழி > ADHI VENKAT said...
    // அருவியை பார்க்கும் போதே இந்த கோவிலுக்கு செல்லும் ஆசை வந்து விட்டது...முடியும் போது சென்று வர வேண்டும்...
    படங்களுடன் பகிர்வு அருமையாக இருந்தது.. //

    சகோதரியின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி! கோயிலுக்கு கவனமாகச் சென்று வரவும். நான் பதிவில் செய்துள்ள எச்சரிக்கைகளையும், திரு வை கோபாலகிருஷ்ணன் அய்யா சொன்ன அறிவுரைகளையும் மறந்து விடாதீர்கள்.

    ReplyDelete
  16. மறுமொழி > Rupan com said... ( 1, 2 )
    // புகைப்படங்களும் கோயில் பற்றிய தகவலும் அருமை வாழ்த்துக்கள் ஐயா//

    உணர்ச்சிக் கவிஞர் ரூபன் அவர்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி!

    ReplyDelete
  17. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...

    // படங்களும் பகிர்வும் மிகவும் அருமை ஐயா. பாராட்டுக்கள், வாழ்த்துகள். //

    அன்பு VGK அவர்களுக்கு வணக்கம்! தங்களின் பாராட்டுகளுக்கு எளியேனின் நன்றி!

    //அந்த ஆற்றில் யாரும் இறங்கவே கூடாது. சுழல் அதிகம். இதுவரை நடந்துள்ள இழப்புகள் மிக அதிகம் என்பது உண்மையே. //

    ஆமாம் அய்யா! அடிக்கடி பத்திரிகைகளில் செய்தி வரும்.

    // என்னுடன் BHEL இல் பணியாற்றிய திரு. துரை என்ற நண்பரின் மாப்பிள்ளை, புதிதாகக் கல்யாணமாகி ஓராண்டுக்குள் [மனைவி நிறை மாத கர்ப்பிணியாக இருந்தபோது] இதே ஆற்றில் இறங்கியவர் சுழலில் சிக்கி உயிரை இழந்தார். மிகவும் கொடுமையாக இருந்தது அந்த நிகழ்ச்சி. //

    படிக்கும்போதே மனதிற்கு நெருடலாக உள்ளது.

    // தயவுசெய்து இதை வாசிக்கும் யாரும் அந்தப்பகுதியில் உள்ள உய்யக்கொண்டான், கோரையாறு, குடமுருட்டி போன்றவற்றில் தயவுசெய்து இறங்காமல் இருப்பதே நல்லது. //

    தங்கள் எச்சரிக்கையை இந்த பதிவை படிக்கும் அன்பர்கள் யாவரும் கவனத்தில் வைக்க வேண்டும்

    // எச்சரிக்கையுடன் கூடிய பகிர்வுக்கு நன்றிகள், ஐயா. //

    மீண்டும் நன்றி அய்யா!




    ReplyDelete
  18. வணக்கம் ஐயா!..

    கோயில் பற்றிய தகவல்களும் கூடவே கண்கொள்ளாக் காட்சியாக
    அள்ளித் தந்த படங்களும் மனதை நிறைக்கின்றது.

    கோயில் குன்றில் தனியாக இருக்கின்ற அழகு என்னை மிகவும் கவர்ந்தது. ஆவலைப் பெருக்குகின்றது!
    அமைதியும் சாந்தியும் வேண்டி அங்கேயே இருந்திடச் சொல்கிறது சூழல்!

    மிக அருமை! பகிர்விற்கு மிக்க நன்றி ஐயா!

    முதன்முறையாக உங்கள் தளத்திற்கு வந்தேன். நல்ல தரிசனம் கிடைத்த மகிழ்ச்சி!
    தொடருகிறேன் ஐயா... வணக்கமுடன் வாழ்த்துக்களும்!

    த ம.5

    ReplyDelete
  19. மறுமொழி > இளமதி said...

    // வணக்கம் ஐயா!..கோயில் பற்றிய தகவல்களும் கூடவே கண்கொள்ளாக் காட்சியாக அள்ளித் தந்த படங்களும் மனதை நிறைக்கின்றது. //

    இளம்பிறை சூடிய சகோதரி இளமதி அவர்களின் பாராட்டிற்கு நன்றி!

    // கோயில் குன்றில் தனியாக இருக்கின்ற அழகு என்னை மிகவும் கவர்ந்தது. ஆவலைப் பெருக்குகின்றது! அமைதியும் சாந்தியும் வேண்டி அங்கேயே இருந்திடச் சொல்கிறது சூழல்! //

    அது ஒரு வனாந்திரம். இப்போது சூழல் மாறி வருகிறது.

    // மிக அருமை! பகிர்விற்கு மிக்க நன்றி ஐயா!
    முதன்முறையாக உங்கள் தளத்திற்கு வந்தேன். நல்ல தரிசனம் கிடைத்த மகிழ்ச்சி! தொடருகிறேன் ஐயா... வணக்கமுடன் வாழ்த்துக்களும்! //

    முதல் முறையாக வந்ததற்கும், தமிழ்மணம் வாக்களிப்புக்கும் நன்றி! நானும் தொடர்கிறேன்!

    ReplyDelete
  20. வயலூர் செநிருக்கிறேன். இந்தக் கோவில் போனதில்லை. நீங்கள் அஒல்லிய்ருக்கும் கதையும், அருவ சலசலத்து ஓடுவதையும், அதனருகே கோவிலையும் பார்க்கும் போது அங்கு சென்று வர மனம் விழைகின்றது.
    பாராட்டுக்கள்......

    ReplyDelete
  21. மறுமொழி >rajalakshmi paramasivam said...

    சகோதரி ராஜலக்‌ஷ்மி பரமசிவம் அவர்களின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!

    ReplyDelete
  22. படமும் கோயில் பற்றிய விளக்கமும் அருமை!
    த ம 6

    ReplyDelete
  23. மறுமொழி > புலவர் இராமாநுசம் said...
    // படமும் கோயில் பற்றிய விளக்கமும் அருமை! //
    த ம 6 //

    புலவர் அய்யாவிற்கு நன்றி!

    ReplyDelete
  24. ஒவ்வொரு முறையும் சற்று தாமதாக உள்ளே வரும் பொழுது ஏழாவது ஓட்டு எனக்காக காத்துக் கொண்டிருக்கின்றது. இது போன்ற பதிவுகளைத் தான் ஒவ்வொரு பகுதிகளிலும் வாழ்பவர்கள் எழுத வேண்டும் என்று நினைப்பதுண்டு. தெளிவாக அழகாக எழுதியிருக்கீங்க. படங்கள் ரொம்பத் துல்லியமாக வந்துள்ளேதே?

    ReplyDelete
  25. மறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said...
    //ஒவ்வொரு முறையும் சற்று தாமதாக உள்ளே வரும் பொழுது ஏழாவது ஓட்டு எனக்காக காத்துக் கொண்டிருக்கின்றது. //

    சகோதரர் ஜோதிஜி திருப்பூர் அவர்களது கருத்துரைக்கும், தமிழ்மணம் ஏழாவது ஓட்டிற்கும் நன்றி!

    ஏழாவது ஓட்டு என்று ஒரு பதிவே போடலாம். நான் எந்த பதிவாக இருந்தாலும் (மற்றவர்கள் எனக்கு வாக்களித்தாலும் அளிக்காவிட்டாலும்) படித்து முடிந்தவுடன், அந்த பதிவுக்கு தமிழ்மணத்தில் வாக்களித்து விடுவேன். இது கவிஞர் ரமணி அவர்களிடம் கற்றுக் கொண்டது. எனது பெரும்பாலான பதிவுகள் கருத்துரைப்பவர்கள் அதிகம் இருந்த போதிலும், ஆறாம் ஓட்டிலேயே நின்று விடும். தமிழ்மணம் வாசகர் பரிந்துரைப் பக்கம் வராமலேயே போய் விடும்.

    //இது போன்ற பதிவுகளைத் தான் ஒவ்வொரு பகுதிகளிலும் வாழ்பவர்கள் எழுத வேண்டும் என்று நினைப்பதுண்டு. தெளிவாக அழகாக எழுதியிருக்கீங்க.//

    தங்கள் பாராட்டிற்கு நன்றி! அரசியல், ஜாதி, மதம் என்று வலைப் பதிவில் நுழையும் போது ரொம்பவே யோசிக்க வேண்டியுள்ளது. எதார்த்தமான வாழ்வியல் சூழலை எழுதுவதில் ஒரு திருப்தி இருக்கிறது.


    // படங்கள் ரொம்பத் துல்லியமாக வந்துள்ளேதே? //

    வலைப் பதிவிற்கு கேனான் டிஜிட்டல் கேமரா (CANON POWERSHOT A800) என்ற சிறிய கேமராவை பயன்படுத்துகிறேன். சிலசமயம் போட்டோக்களை Microsoft Office Picture Manager உதவியுடன் எடிட் செய்து வெளியிடுவேன்.

    சகோதரர் ஜோதிஜி திருப்பூர் அவர்களுக்கு மீண்டும் நன்றி!

    ReplyDelete
  26. இதுவரை அறிந்திராத திருக்கோவில்...... அடுத்த திருச்சி பயணத்தின் போது செல்ல ஆசை. முடிந்தால் உங்களையும் அழைத்துக் கொண்டு....

    தகவல் மற்றும் படங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  27. மறுமொழி . வெங்கட் நாகராஜ் said...
    // இதுவரை அறிந்திராத திருக்கோவில்...... அடுத்த திருச்சி பயணத்தின் போது செல்ல ஆசை. முடிந்தால் உங்களையும் அழைத்துக் கொண்டு.... தகவல் மற்றும் படங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி. //

    நானும் அந்த கோயிலைப் பற்றி கேள்விப்பட்டதுதான். கோயிலுக்கு அதிகம் சென்றதில்லை. அன்றுதான் அருகில் சென்றேன். சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  28. This temple and the deity is very mysterious. I went last year to this temple .

    Despite the gory ritual taking place every year, there is definitely a full force behind this form of Kali.

    Below is my experience of the visit.

    http://devisrikuzhumayi.blogspot.in/2013/03/well-readers-i-managed-to-type-title-in.html

    ReplyDelete
  29. மறுமொழி > Krishna said...

    சகோதரருக்கு வணக்கம்! நீங்கள் குறிப்பிட்டுள்ள வலைத்தளம் மட்டுமன்றி மற்றைய தங்களது தளங்களையும் சென்று படிப்பேன். தகவலுக்கு நன்றி!


    ReplyDelete
  30. Dear Elango,

    Thankyou. I have started typing in tamil after long hours of spelling error corrections. Do you know any google tool to learn tamil correct spelling?

    Regards,
    Krishna

    ReplyDelete
  31. மறுமொழி > Krishna said...
    // Dear Elango, Thankyou. I have started typing in tamil after long hours of spelling error corrections. Do you know any google tool to learn tamil correct spelling?//

    அன்புள்ள சகோதரர் கிருஷ்ணா அவர்களுக்கு வணக்கம்! உங்கள் வேண்டுகோளுக்கு என்ன எழுதுவது என்று தெரியவில்லை, ஏனெனில் “சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் “
    என்பது அவ்வையார் வாக்கியம். நான் இணையதளத்தில் எழுத Phonetic முறையில் உள்ள NHM Writer ஐப் பயன்படுத்துகிறேன்.
    கீழே உள்ள ஜோதிஜியின் கட்டுரை உங்களுக்கு பயன்படும் என்று நினைக்கிறேன்.

    நாம் எழுதுவது சரியா?
    http://deviyar-illam.blogspot.com/2013/11/blog-post_18.html

    ReplyDelete