Monday, 24 June 2013

எங்கள் கல்லூரி விழாவில் கண்ணதாசன்


நான் புகுமுக வகுப்பை (P.U.C) திருச்சி நேஷனல் கல்லூரியில் முடித்துவிட்டு, பெரியார் ஈவெரா கல்லூரி  திருச்சியில் இளங்கலை(B.A) தமிழ் இலக்கியம் சேர்ந்தேன். அப்போது CO – EDUCATION கிடையாது. ஆனாலும் கல்லூரியில் பேராசிரியைகள் உண்டு.  அது அரசு கல்லூரி என்பதால் மாணவர்களுக்கு  நல்ல சுதந்திரம். நான் கல்லூரிக்கு முதன் முதலாக நுழைந்தபோது பல பழையகாலத்து கட்டிடங்கள் அங்கொனறும் இங்கொன்றுமாக இருந்தன. அவைகளில் வகுப்பறைகள் அலுவலகங்கள் இருந்தன. புதிதாக கட்டப்பட்ட பிளாக்கில் ஷிப்டு முறையில் வகுப்புகள்.
  

மாணவர் தமிழ்ப் பேரவை:
 
பெரும்பாலும் மாணவர் தலைவர் தேர்தல், மாணவர் தமிழ்ப் பேரவைத் தேர்தல்களில் அனல் பறக்கும். ஆனால் பல கல்லூரிகளில் இப்போது நடக்கும் சாதி மோதல்கள், கட்சி மோதல்கள் போல் அன்று இருந்ததில்லை. தேர்தலுக்குப் பிறகு மாணவர்கள் அவரவர் வேலையை கவனிக்கப் போய் விடுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் மாணவர் தமிழ்ப் பேரவையின் சார்பாக முத்தமிழ் விழா நடைபெறும். அப்போது விழாவிற்கு அன்றைய தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள் என்று அழைப்பார்கள்.

கண்ணதாசன் சொற்பொழிவு:

நான் படித்தபோது ஒருமுறை  கவிஞர் கண்ணதாசனை அந்த விழாவிற்கு அழைத்து இருந்தார்கள். (அப்போது அரசியல் ரீதியாக அவரது பேச்சுக்களால் கண்ணதாசனுக்கும் எதிர்ப்பாளர்கள் உண்டு. ஆனாலும் அவர் மீது எல்லோரும் கொண்ட தமிழ்ப் பற்றின் காரணமாக யாரும் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை.)  அப்போது திருச்சி பெரியார் ஈவெரா கல்லூரியில் திறந்தவெளி அரங்கம்தான். அவரை பேச அழைத்தார்கள். அவர் மைக்கைப் பிடிப்பதற்கு முன்னர் கூட்டத்தின் கடைசியில் சிறு சலசலப்பு. அங்கிருந்த சிலர் ஓவென்று கத்தினார்கள். அவர்களில் சிலர் கடுமையாக திட்டினார்கள். அப்போதெல்லாம் போலீஸ் பாதுகாப்பெல்லாம் அவ்வளவாக கிடையாது. மாணவர்கள்தான் எல்லோரையும் கட்டுப்படுத்தினார்கள்.

கண்ணதாசன் பேச ஆரம்பித்தார். கையில் எந்தவிதமான குறிப்பு காகிதங்களையும் வைத்துக் கொள்ளவில்லை. மடை திறந்த வெள்ளமென பேச ஆரம்பித்தார். எந்தவிதமான தடுமாற்றமும் இல்லை. அதுவரை சலசலப்பு செய்தவர்கள் கூட மனம் லயிக்கும் வண்ணம் ஒரு இலக்கிய சொற்பொழிவைத் தந்தார். இடையிடையே சில பாடல்களை அருமையாக பாடவும் செய்தார். மாணவர்கள் மட்டுமல்லாது அங்கு இருந்த அனைவருமே மயங்கி ரசித்தனர். கூட்டத்தில் அவ்வளவு அமைதி.

தான் ஒரு பெண்ணை போகும்போதும் வரும்போதும் பார்வையிலேயே விரும்பியதாகவும், அந்த பெண்ணும் அப்படியே பார்வையிலேயே  விரும்பியபோதும் தனது காதல் கைகூடவில்லை என்று வருத்தமாகச் சொல்லிவிட்டு, அவளை நினைத்து தான் எழுதிய  ஒரு பாடலை முழுவதும் பாடினார். அந்த பாடல் … …

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய்
நான் அவள் பேரை தினம் பாடும் குயிலல்லவா
என் பாடல் அவள் தந்த மொழி அல்லவா
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய்
                                            
                                                        -              ( படம்: பாலும் பழமும்)

இன்னொரு பாடல். இந்தபாடல் உருவாக்கம் பற்றியும் சொன்னார். என்ன சொன்னார் என்று சரியாக நினைவில்லை. ஆனால் பாடம் நினைவுக்கு வருகிறது. இதனையும் மேடையில் பாடினார்.

பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்
பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்

                      - ( படம் :வீர அபிமன்யு )

அவரது சொற்பொழிவு முடிந்ததும் ஒரே கைதட்டல். மேடையில் ஒருவர் நன்றியுரை சொன்னதைக் கூட கவனிக்காமல் கூட்டம் கலையத் தொடங்கியது.

என்னைக் கவர்ந்த கண்ணதாசன்:

பள்ளி மாணவனாக இருந்த காலத்திலிருந்தே கண்ணதாசன் பாடல்களில் எனக்கும் மற்றவர்களைப் போல் ஒரு ஈர்ப்பு . இதற்கு முக்கிய காரணம், மறக்கமுடியாத இலங்கை வானொலியின் அன்றைய தமிழ் ஒலிபரப்பு. அவர்கள் அடிக்கடி ஒலிபரப்பிய கண்ணதாசன் பாடல்கள் நெஞ்சில் அப்படியே பதிந்தன. 

 தமிழால் தமிழர்களை மயங்க வைத்த, கவிஞர் கண்ணதாசனை அன்றுதான் நேரில் கண்டேன். அன்றுதான் அவருடைய பேச்சைக் கேட்டேன். இன்று கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாள். ( 24.06.1927)  மெல்லிசை மன்னர் எம் எஸ விஸ்வநாதனுக்கும் இன்று பிறந்தநாள்! அவருக்கு எனது வாழ்த்துக்கள்! 

சில பழைய படங்கள்:
படம்: (மேலே) மதியழகன், எம்.ஜி.ஆர்., அன்பில் தர்மலிங்கம், கண்ணதாசன், கருணாநிதி

படம்: (மேலே) தலைவர் காமராஜர் மற்றும் திரைப்படக் கலைஞர்களுடன் கண்ணதாசன்படம்: (மேலே) மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் (நடுவில் இருப்பவர்) ராமமூர்த்தி ஆகியோருடன் கண்ணதாசன்.


( PHOTOS  THANKS TO  “ GOOGLE ” )
 


 

30 comments:

 1. படங்கள் அனைத்தும் பொக்கிசம்...

  மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் - அவர்
  மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன்...
  நான் நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த
  நிலையிலும் எனக்கு மரணமில்லை...!

  ReplyDelete
 2. //கண்ணதாசன் பேச ஆரம்பித்தார். கையில் எந்தவிதமான குறிப்பு காகிதங்களையும் வைத்துக் கொள்ளவில்லை. மடை திறந்த வெள்ளமென பேச ஆரம்பித்தார். எந்தவிதமான தடுமாற்றமும் இல்லை. அதுவரை சலசலப்பு செய்தவர்கள் கூட மனம் லயிக்கும் வண்ணம் ஒரு இலக்கிய சொற்பொழிவைத் தந்தார். இடையிடையே சில பாடல்களை அருமையாக பாடவும் செய்தார். மாணவர்கள் மட்டுமல்லாது அங்கு இருந்த அனைவருமே மயங்கி ரசித்தனர். கூட்டத்தில் அவ்வளவு அமைதி.//

  மிகவும் அழகான தகவல். அருமையாவே பேசியிருப்பார் என்பதில் ஐயம் இல்லை, ஐயா.

  >>>>>

  ReplyDelete
 3. //என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
  இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய்
  நான் அவள் பேரை தினம் பாடும் குயிலல்லவா
  என் பாடல் அவள் தந்த மொழி அல்லவா
  என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
  இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய்//

  //பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
  அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்
  அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்
  பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
  உனைத் தேன் என நான் நினைத்தேன்
  அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்//

  இரண்டுமே எனக்கு மிகவும் பிடித்த அற்புதமான பாடல்கள். கண்ணதாசன் அவர்களின் பாடல்கள் அனைத்துமே கற்கண்டு தான். ;))))

  >>>>>

  ReplyDelete
 4. //இன்று கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாள். ( 24.06.1927) ” மெல்லிசை மன்னர்” எம் எஸ விஸ்வநாதனுக்கும் இன்று பிறந்தநாள்! அவருக்கு எனது வாழ்த்துக்கள்! //

  இந்த நல்ல நாளில் கண்ணதாசனை நினைவு படுத்தும் விதமாகக்கொடுத்துள்ள பதிவு மிகச்சிறப்பு.

  படங்களும் அருமை.

  ப்திவுக்கும் பகிர்வுக்கும் பாராட்டுக்கள் + நன்றிகள், ஐயா.

  ReplyDelete
 5. கண்ணதாசன் அவர்களை நான் நேரில் பார்க்க பல தடவை முயற்சி செய்திருந்தாலும்
  என்னால் பார்க்க இயலவில்லை.
  நான் சென்னையிலே ,அவர் வாழ்ந்த காலத்திலே , தங்கி இருந்த பொழுது
  மாதம் தோறும் ஒன்று இரண்டு நாட்கள் மட்டுமே
  இருந்ததால் அவரைப் பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லை.

  தமது பாடல்களின் மூலம் தமது கருத்தோவியங்கள் மூலம் தமது எண்ணங்களை எடுத்துச் சொல்லி தாம் வாழ்ந்த சமுதாயத்தை ஒரு நேர் கோட்டுக்குள்
  கொண்டு சென்ற அவரது தொண்டு உள்ளம் தமிழ் உள்ளம் என்றுமே மறக்க இயலாதது.

  தங்கள் பதிவினைப் பார்த்த உடன் உங்களைத் தொலை பேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிட நினைத்தேன்.
  இருப்பினும் எண் கிடைக்கவில்லை. எழுத்தைப் பார்த்து மன நிறைவு அடைந்தேன்.

  சுப்பு தாத்தா.
  www.subbuthatha72.blogspot.com

  ReplyDelete
 6. பொக்கிஷமான படங்கள்.

  கண்ணதாசன் பாடல்கள் இருக்கும் வரை அவருக்கும் அழிவில்லை....

  ReplyDelete
 7. தி.தமிழ் இளங்கோ சார்,

  நல்லதொரு மலரும் நினைவுகள்,

  ஹி..ஹி கண்ணதாசன் பல விடயத்திலும் நமக்கு முன்னோடி!

  ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு

  ஒரு கோலமயில் என் துணையிருப்பு

  (உங்கப்பதிவுகள் கைப்பேசியில் திறக்க ஏனோ அடம்ப்பிடிக்கிறது)

  ReplyDelete
 8. நல்ல மலரும் நினைவுகள். படங்கள் பொக்கிஷம்!

  ReplyDelete
 9. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...

  // படங்கள் அனைத்தும் பொக்கிசம்... //

  கூகிளுக்கு நன்றி! எந்த நிலையிலும் அந்த கவிஞனுக்கு மரணமில்லைதான் ! தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 10. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 1 )
  // மிகவும் அழகான தகவல். அருமையாவே பேசியிருப்பார் என்பதில் ஐயம் இல்லை, ஐயா. //

  கவிஞர் கண்ணதாசன் நீண்டநேரம் மிகவும் சுவையாகவே பேசினார். திரைப்படத்தில் இல்லாத சில தனிப்பாடல்களையும் சொன்னார். நினைவில் நின்றவற்றை மட்டும் எழுதினேன்.

  ReplyDelete
 11. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 2 )
  // இரண்டுமே எனக்கு மிகவும் பிடித்த அற்புதமான பாடல்கள். கண்ணதாசன் அவர்களின் பாடல்கள் அனைத்துமே கற்கண்டு தான். ;)))) //

  உண்மைதான். இந்த பாடல்களை படிப்பதைவிட வாய்விட்டு பாடினால் இன்னும் ரசிக்கலாம்.

  ReplyDelete
 12. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 3 )

  //படங்களும் அருமை. பதிவுக்கும் பகிர்வுக்கும் பாராட்டுக்கள் + நன்றிகள், ஐயா. //

  அன்பு VGK அவர்களின் பாராட்டிற்கு நன்றி! படங்களுக்கான பாராட்டு GOOGLE – இற்குத்தான் சேரும்.

  ReplyDelete
 13. கவியரசர் பிறந்த நாளில் ஊரில் இல்லாததால் உங்கள் பதிவை படித்து உடன் பின்னூட்டம் இட இயலவில்லை. தங்கள் கல்லூரியில் கவியரசர் ஆற்றிய சொற்பொழிவைப் பற்றி படித்தவுடன் அவர் நான் அண்ணாமலை பல்கலை கழகத்தில் படித்தபோது வந்து பேசியது நினைவுக்கு வருகிறது. நீங்கள் சொன்னதுபோல் அவரை எதிர்த்தவர்கள் கூட அவரது பேச்சைக் கேட்டவுடன் ‘மகுடியால் கட்டுண்ட நாகம்’போல் ஆனார்கள் என்பது உண்மை. அவரது பிறந்தநாளில் அவரைப்பற்றி எழுதிய தங்களுக்கு வாழ்த்துக்கள்!

  தாங்கள் இணைத்துள்ள புகைப்படங்கள் காணக் கிடைக்காதவை.

  ReplyDelete
 14. மறுமொழி > sury Siva said...
  // தமது பாடல்களின் மூலம் தமது கருத்தோவியங்கள் மூலம் தமது எண்ணங்களை எடுத்துச் சொல்லி தாம் வாழ்ந்த சமுதாயத்தை ஒரு நேர் கோட்டுக்குள் கொண்டு சென்ற அவரது தொண்டு உள்ளம் தமிழ் உள்ளம் என்றுமே மறக்க இயலாதது. //

  உங்களது கருத்தை அப்படியே ஆமோதிக்கிறேன். தங்கு தடையற்ற தமிழ் சொற்கள் வார்த்தைகளாகி ஒருவர் (கண்ணதாசன்) நாவினில் விளையாடுவதை அன்றுதான் கண்டேன். தங்கள் அன்பான எண்ணத்திற்கும், கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 15. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...
  // பொக்கிஷமான படங்கள். //
  பொக்கிஷமான படங்கள் தந்த கூகிளுக்கு எனது நன்றி!

  // கண்ணதாசன் பாடல்கள் இருக்கும் வரை அவருக்கும் அழிவில்லை.... //
  தமிழ் இருக்கும் வரை கண்ணதாசன் பாடல்கள் இருக்கும். தமிழுக்கு என்றும் அழிவில்லை.

  ReplyDelete
 16. மறுமொழி > வவ்வால் said...
  // நல்லதொரு மலரும் நினைவுகள், //

  நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் தியேட்டரில் ” மர்மயோகி” என்பதைப் போல வந்து இருக்கிறீர்கள்! நன்றி!

  // ஹி..ஹி கண்ணதாசன் பல விடயத்திலும் நமக்கு முன்னோடி!ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு , ஒரு கோலமயில் என் துணையிருப்பு //

  நீங்களும் கண்ணதாசனைப் போல வெளிப்படையானவர்தான். கவிஞர் கண்ணதாசன் சொன்னது: “ எப்படி எல்லாம் வாழக் கூடாதோ, அப்படி எல்லாம் வாழ்ந்திருக்கிறேன். ஆகவே, 'இப்படித்தான் வாழ வேண்டும்' என்று புத்தி சொல்லக் கூடிய யோக்கியதை எனக்கு உண்டு.”

  // (உங்கப்பதிவுகள் கைப்பேசியில் திறக்க ஏனோ அடம் பிடிக்கிறது) //
  எனக்கும் காரணம் தெரியவில்லை . தெரிந்தவர்களிடம் விசாரிக்க வேண்டும்.

  ReplyDelete
 17. மறுமொழி > கே. பி. ஜனா... said...
  சகோதரரின் கருத்துரைக்கு நன்றி! உங்கள் வலைப் பக்கம் வரவேண்டும். நீண்ட நாட்களாகி விட்டன.

  ReplyDelete
 18. மறுமொழி > வே.நடனசபாபதி said...
  // தங்கள் கல்லூரியில் கவியரசர் ஆற்றிய சொற்பொழிவைப் பற்றி படித்தவுடன் அவர் நான் அண்ணாமலை பல்கலை கழகத்தில் படித்தபோது வந்து பேசியது நினைவுக்கு வருகிறது //

  உங்களது அண்ணாமலைப் பல்கலைக் கழக, கண்ணதாசன் மலரும் நினைவினை வலையில் பகிர்ந்து கொள்ளவும். தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete

 19. THE ANECDOTES ON KANNADASAN ARE MANY AND INTERESTING, நன்றி.

  ReplyDelete
 20. //பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
  அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன் //

  தேனாய் இனிக்கும் மலரும் நினைவுகள்..

  அருமையான படங்கல்..பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 21. மறுமொழி > G.M Balasubramaniam said..
  தங்கள் கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 22. மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...

  சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 23. MSV க்கும் இன்று தான் பிறந்த நாளா? சில படங்களை இப்போது தான் பார்க்கின்றேன்.

  (உங்கப்பதிவுகள் கைப்பேசியில் திறக்க ஏனோ அடம்ப்பிடிக்கிறது)

  பாருடா கொடுமைய? அந்த கைப்பேசிக்கு வவ்வால் யாருன்னு தெரியாமா இருக்கும் போல.

  ReplyDelete
 24. படங்களும் நினைவுகளும் பொக்கிசங்கள்.

  நாங்களும் கண்டு மகிழ்ந்தோம்.

  ReplyDelete
 25. மறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said...

  தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 26. மறுமொழி > மாதேவி said...

  சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 27. அத்தனையும் அருமையானப் படங்கள்.
  பாடல்கள் எதையும் விட்டுவிட முடியாது.இந்த பிறந்த நாள் தருணத்தில் நினைவு கூர்ந்தமைக்கு நன்றி

  ReplyDelete
 28. மறுமொழி > கவியாழி கண்ணதாசன் said..
  .
  // அத்தனையும் அருமையானப் படங்கள். //

  படங்கள் தந்த கூகிளுக்கு எனது நன்றி!
  கவிஞரின் வருகைக்கும் கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 29. படங்கள் அனைத்தும் காலப் பெட்டகம் அய்யா. அருமையான பதிவு. கண்ணதாசன் கண்ணதாசன்தான். எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் அய்யா

  ReplyDelete
 30. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...

  // படங்கள் அனைத்தும் காலப் பெட்டகம் அய்யா. //

  படங்கள் தந்த கூகிளுக்கு எனது நன்றி!

  // அருமையான பதிவு. கண்ணதாசன் கண்ணதாசன்தான். எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் அய்யா //

  கரந்தை ஆசிரியரின் பாராட்டிற்கு நன்றி!

  ReplyDelete