Wednesday, 5 June 2013

கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் (அரியலூர்) தரிசனம்அரியலூர் அருகே உள்ளது கல்லங்குறிச்சி பெருமாள் கோயில். இதனை
கலியுக வரதராஜ பெருமாள் கோயில் என்று அழைப்பார்கள். அரியலூரிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் இந்த கோயில் மிகப் பிரசித்தம். இங்குள்ள பெரும்பாலோர் பெயர்கள், இந்த கோயில் பெருமாளின் பெயரை முன்னிலைப் படுத்தி கலியராஜ், கலியசுந்தரம், கலியம்மாள் என்று “கலியில் தொடங்குவதாகவே இருக்கும்.

கல்லங்குறிச்சி கோயிலுக்கு செல்லும் ஆசை:

எனது தாத்தாவின் (அம்மாவின் வழி) குடும்பத்தினருக்கு இந்த கோயில் எப்படி நெருக்கம் என்று தெரியவில்லை. என் தாத்தாவிற்கு முதல் இரண்டும் பெண் பிள்ளைகள். மூன்றாவதாக ஆண்பிள்ளை பிறந்தால் இந்த பெருமாள் பெயரை  வைப்பதாக வேண்டிக் கொண்டார்களாம். ஆனால் மூன்றாவதும் பெண்ணாகவே (என் அம்மா) பிறந்தது. என்றாலும் பெருமாள் பெயரையே என் அம்மாவிற்கு “கலிய சுந்தரம்என்று வைத்து விட்டார்கள். (ஆனால் பின்னாளில் அம்மாவின் பெயரை ஆவணங்களில் எழுதும் போது ஆண்/பெண் பெயர்க் குழப்பம் வந்தபடியினால், நாங்கள் எங்கள் அம்மாவின் பெயரை “சுந்தராம்பாள்என்று மாற்றி விட்டோம்). இந்த விஷயத்தை கேள்விப் பட்டதிலிருந்து, எங்கள் தாத்தா குடும்பத்தினர் வேண்டிக் கொண்ட கல்லங்குறிச்சி பெருமாள் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக இருந்து வந்தது. அந்த ஆசை சென்ற வாரம்தான் நிறைவேறியது.

திருச்சி அரியலூர் - கல்லங்குறிச்சி:

சென்ற ஞாயிறு (02.06.2013) அன்று நான் எனது மனைவி, மகன் ஆகிய
மூவரும் எங்கள் வீட்டை விட்டு காலை கிளம்பினோம். விடுமுறை நாள் என்பதால் புறப்பட்டதில் கொஞ்சம் தாமதம். பின்னர் திருச்சி சிந்தாமணி (சத்திரம்) பேருந்து நிலையம் வந்து அரியலூர் செல்லும் பஸ்சில் ஏறினோம். திருச்சி அரியலூர் சாலையில் அடிக்கடி சிமெண்ட் மூட்டைகளை ஏற்றி வரும் லாரிகள், கரும்பு ஏற்றி வரும் லாரிகளால் சாலை ரொம்பவும் மோசம். மேலும் அடிக்கடி விபத்தும் நிகழும். நாங்கள் அரியலூர் சென்று  சேர்ந்தபோது மதியம் 11.30 ஆகி விட்டது. அரியலூர் பேருந்து நிலையம் என்றுதான் அழகாக மாறும் என்று தெரியவில்லை. அரியலூரிலிருந்து கல்லங்குறிச்சிக்கு செல்ல மினி பஸ்கள் உண்டு. எனவே நடை சாத்துவதற்குள் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக  ஆட்டோ ஒன்றை பிடித்து (ஆட்டோ கட்டணம் செல்வதற்கு மட்டும் ரூ 150/=. ) சென்றோம்.

கல்லங்குறிச்சி கோயிலில் வழிபாடு:

கோயிலுக்கு சென்று சேர்ந்தபோது மணி மதியம் பன்னிரண்டு. உச்சிகால பூஜை மதியம் 12.30 என்பதால், கோயில் நடை திறந்து இருந்தது. கோயிலுக்கு வெளியே அந்த ஊர் ஜனங்கள் வைத்து இருந்த கடைப் பெண்கள் சொல்லியபடி இரண்டு அர்ச்சனை தட்டுகள் ஒன்று மூலவருக்கு இன்னொன்று உற்சவருக்கு ( இரண்டு துளசி மாலைகள்,ஒரு தேங்காய் , குங்குமம் ) வாங்கிக் கொண்டோம். அர்ச்சனை சீட்டு தட்டு ஒன்றுக்கு ரூ 2/=. வீதம் இரண்டு வாங்கினோம். நான் எந்தக் கோயிலுக்குப் போனாலும் அந்த கோயில் தலபுராண புத்தகத்தை வாங்குவது வழக்கம். இங்கும் வாங்கினேன். பின்னர், கோயிலின் உள்ளே நுழைந்ததும் கருடாழ்வார்
சந்நிதியில் சூடம் ஏற்றி வழிபட்டோம். மூலவருக்கான அர்ச்சனை தட்டை அங்குள்ள பூசாரியிடம் கொடுத்தோம். அவர் தேங்காயை வெளியில் நீங்களே உடைத்துக் கொள்ளுங்கள் “ என்று கொடுத்து விட்டார். மூலஸ்தானத்தில் 12 அடி உயரத்திலான கம்பத்தை ஆஞ்சநேயர் தாங்கி கொண்டிருப்பது போன்ற உருவம் உள்ளது.  இவர்தான் மூலவர். வேறு சிலைகள் எதுவும் இல்லை. பூசாரி காட்டும் சிறிய தீப ஒளியில் சரியாகத் தெரியவில்லை. நாங்கள் மூலவரை வழிபட்டதும், உட்பிரகாரத்திலேயே வெளியில் உள்ள உற்சவரை வழிபட்டோம். அங்கு இளைய குருக்கள் ஒருவர் பூசை செய்தார். அவர் உற்சவரை புகைப்ப்டம் எடுப்பதில் தடை இல்லை என்றதும், அங்குள்ள உற்சவரை நானும் எனது மகனும் படம் பிடித்தோம். ( வெளியேயும் படங்கள் எடுத்தோம்.) பின்னர் வெளியே வந்து மூலவருக்கு எதிரே இருக்கும் கருடாழ்வார் சன்னதியின் அருகில் இருந்த தேங்காய் உடைக்கும் எந்திரத்தில் தேங்காயை நாங்களே உடைத்து கருடாழ்வாரை வழிபடுவதற்கும்., உச்சிகால பூஜை முடிவதற்கும் சரியாக இருந்தது. இனிமேல் மாலை 3 மணிக்குத்தான் நடை திறக்கும்..  

கோயில் பற்றிய சில செய்திகள்:

பெரும்பாலும் பெருமாள் கோயில் மடப்பள்ளிகளில் பொங்கல், புளியோதரை விற்பனைக்கு கிடைக்கும். இந்த பெருமாள் கோயிலில் அவை சனிக்கிழமை மற்றும் சிறப்பு நாட்களில் மட்டும் கிடைக்கும். அன்னதானம் எல்லா நாட்களிலும் உண்டு. நாங்கள் சென்ற நேரம் அன்னதானமும் முடிந்து விட்டது.


பின்னர் கோயிலை சுற்றிப் பார்த்தோம். கோயிலின் மூல ஸ்தானத்தில் ஆஞ்சநேயர் இருப்பதால் இந்த கோயிலில் திருமண நிகழ்வுகளை யாரும் நடத்துவதில்லை, காது குத்துதல் போன்ற நிகழ்ச்சிகளை மட்டும் வைத்துக் கொள்கிறார்கள். கோயிலின் தலபுராணம் மங்கான் படையாட்சி என்பவரது குடும்ப வரலாறாக இருந்த போதிலும், இந்த கோயிலுக்கு எல்லா சமூக மக்களும் வந்து வழிபடுகின்றனர். கோயிலில் பெரும்பாலும் ஆடு மாடுகள் மற்றும் நெல், பயறு, மிளகாய் போன்ற விளை பொருட்களைத்தான் இங்கு வரும்  பக்தர்கள் காணிக்கையாக தருகின்றனர்.  கோயில் உண்டியல்களும் உண்டு. கோயிலின் உள்ளே கருடாழ்வார் சன்னதி எதிரே உள்ள, தசாவதார மண்டபத்தில் 12 தூண்கள் உள்ளன. முதல் இரண்டு தூண்கள் தவிர, மீதமுள்ள பத்து தூண்களிலும் திருமாலின் பத்து அவதாரங்களையும் சிற்பங்களாக வடிவமைத்துள்ளனர். கோயிலுக்கு வெளியே காற்றோட்டமான பெரிய திடல் உள்ளது. பஸ், வேன், காரில் செல்பவர்கள் கார் நிறுத்தம் ( CAR PARKING ) குறித்து கவலை அடையத் தேவையில்லை.  
கல்லங்குறிச்சி அரியலூர் திருச்சி:

எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்துவிட்டு கல்லங்குறிச்சி பஸ் நிலையம் வந்தோம்.  சற்று நேரத்தில், பாரதிராஜா படங்களில் வருவது போன்று,  சாலையில் புழுதியை கிளப்பிக் கொண்டு மண்வாசனையுடன் ஒரு மினி பஸ் வந்தது. அரியலூர் செல்ல பயணச் சீட்டு கட்டணம் ரூ 4/=. அரியலூரில் ஒரு நல்ல சாப்பாடு ஹோட்டலை தேடியலைந்தோம். பஸ் ஸ்டாண்டிலிருந்து கொஞ்சம் தொலைவில் திருச்சி ரோட்டில் இருந்த மாருதி ரெஸ்டாரெண்ட் வந்து பகல் உணவை முடித்துக் கொண்டு மாலை திருச்சி வந்து சேர்ந்தோம்.  

இந்த பதிவை இவ்வளவு விரிவாக எழுதுவதற்கு காரணம், கல்லங்குறிச்சி பெருமாள் கோயிலுக்குப் புதிதாக செல்பவர்கள் அறிந்து கொள்வதற்காகத்தான்.
23 comments:

 1. கலியுக வரதராஜ பெருமாளை தங்களால் நாங்களும் தரிசித்தோம் அய்யா. நன்றி

  ReplyDelete
 2. மண்வாசனையுடன் ஒரு மினி பஸ் உட்பட இனிய பயணம்... கோவிலைப் பற்றிய தகவல்கள் அருமை... படங்களும்... நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. நாங்களும் பயணம் செய்தது போல ஒரு உணர்வு... நன்றி ஐயா..

  ReplyDelete
 4. கலியுக வரதராஜ பெருமாள் கோயில் பற்றி எழுதி எனது பழைய நினைவுகளை அசை போட வைத்துவிட்டீர்கள். இந்த ஊரை இன்னும் சுருக்கி கலியபெருமாள் கோயில் என்றும் சொல்வதுண்டு. நான் 1954-56 களில் அரியலூரில் எனது மாமா வீட்டில் தங்கி முதல் படிவம் & இரண்டாம் படிவம் (ஆறாவது மற்றும் ஏழாவது வகுப்புகள்) படிக்கும்போது ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் விழாவுக்கு சென்றிருக்கிறேன். பின்பு 1988 இல் சென்றதுதான். சிமெண்ட் ஆலை வருவதற்கு முன் அந்த சிற்றூர் அமைதியாய் அழகாய் இருந்தது. ஆனால் இப்போது ஆலை வந்ததும் சாலைகள் மோசமாகி சுற்றுப்புறமும் கெட்டுவிட்டது. தங்கள் பதிவை படித்ததும் திரும்பவும் அங்கு சென்றது போல உணர்ந்தேன்.

  ReplyDelete
 5. விரிவான அருமையான பகிர்வுகள்..

  பாராட்டுக்கள் ஐயா...

  ReplyDelete
 6. I have lived in Ariyalur till my 17th year. Now I am in US and your post has brought golden momories.

  ReplyDelete
 7. மறுமொழி> கரந்தை ஜெயக்குமார் said...

  // கலியுக வரதராஜ பெருமாளை தங்களால் நாங்களும் தரிசித்தோம் அய்யா. நன்றி //

  கரந்தை ஆசிரியரின் கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 8. உடன்வந்து தரிசித்த திருப்தி
  படங்களுடன் பதிவு அருமை
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. மறுமொழி> திண்டுக்கல் தனபாலன் said...

  // மண்வாசனையுடன் ஒரு மினி பஸ் உட்பட இனிய பயணம்... கோவிலைப் பற்றிய தகவல்கள் அருமை... படங்களும்... நன்றி ஐயா... வாழ்த்துக்கள்... //

  சகோதரரின் அன்பான விமர்சனத்திற்கு நன்றி!

  ReplyDelete
 10. மறுமொழி> ஸ்கூல் பையன் said...

  // நாங்களும் பயணம் செய்தது போல ஒரு உணர்வு... நன்றி ஐயா.. //

  அன்பான உணர்வோடு கூடிய தங்களின் பாராட்டிற்கு நன்றி1

  ReplyDelete
 11. மறுமொழி> வே.நடனசபாபதி said...

  // கலியுக வரதராஜ பெருமாள் கோயில் பற்றி எழுதி எனது பழைய நினைவுகளை அசை போட வைத்துவிட்டீர்கள். இந்த ஊரை இன்னும் சுருக்கி கலியபெருமாள் கோயில் என்றும் சொல்வதுண்டு. நான் 1954-56 களில் அரியலூரில் எனது மாமா வீட்டில் தங்கி முதல் படிவம் & இரண்டாம் படிவம் (ஆறாவது மற்றும் ஏழாவது வகுப்புகள்) படிக்கும்போது ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் விழாவுக்கு சென்றிருக்கிறேன். //

  உங்கள் முந்தைய பதிவுகளில் இந்த இனிய நினைவுகளைப் பற்றி நீங்கள் எழுதி இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஏனெனில் உங்கள் வலைப்பதிவு அறிமுகமான புதிதில் உங்கள் பதிவுகள் அனைத்தையும் ஒரே நாளில் படித்தேன். அப்போது படித்ததாக நினைவு.

  // சிமெண்ட் ஆலை வருவதற்கு முன் அந்த சிற்றூர் அமைதியாய் அழகாய் இருந்தது. ஆனால் இப்போது ஆலை வந்ததும் சாலைகள் மோசமாகி சுற்றுப்புறமும் கெட்டுவிட்டது //

  ஆமாம அய்யா! இப்போதும் கோயிலுக்குச் செல்லும் வழி ஒரே மேடும் பள்ளமுமாய் இருக்கிறது. அரியலூரைச் சுற்றி சிமெண்ட் புழுதிதான்.

  // தங்கள் பதிவை படித்ததும் திரும்பவும் அங்கு சென்றது போல உணர்ந்தேன்.//

  தங்களின் அன்பான நீண்ட கருத்துரைக்கு நன்றி!  ReplyDelete
 12. மறுமொழி> இராஜராஜேஸ்வரி said..

  // விரிவான அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள் ஐயா..//

  சகோதரியின் பாராட்டிற்கு நன்றி!

  ReplyDelete
 13. .மறுமொழி> Anonymous said...

  // I have lived in Ariyalur till my 17th year. Now I am in US and your post has brought golden momories. //

  எங்கிருந்த போதும் தனது அரியலூர் நினைவுகளை மறவாது , எனது பதிவிற்கு வந்து கருத்துரை சொன்ன நல்ல இதயத்திற்கு நன்றி!


  ReplyDelete
 14. மறுமொழி> Ramani S said... ( 1, 2)

  // உடன்வந்து தரிசித்த திருப்தி. படங்களுடன் பதிவு அருமை. பகிர்வுக்கு வாழ்த்துக்கள் //

  கவிஞர் ரமணி அவர்களின் பாராட்டிற்கு நன்றி!

  ReplyDelete
 15. படங்களும் விளக்கங்களும் அருமையாக உள்ளன. பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.

  //இந்த பதிவை இவ்வளவு விரிவாக எழுதுவதற்கு காரணம், கல்லங்குறிச்சி பெருமாள் கோயிலுக்குப் புதிதாக செல்பவர்கள் அறிந்து கொள்வதற்காகத்தான்.//

  மிகச்சிறப்பான பணி. மிக்க நன்றி, ஐயா.

  ReplyDelete
 16. மறுமொழி> வை.கோபாலகிருஷ்ணன் said...

  // படங்களும் விளக்கங்களும் அருமையாக உள்ளன. பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள். //

  திரு VGK அவர்களுக்கு வணக்கம்! தங்களின் மனமார்ந்த பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!

  ReplyDelete
 17. படித்ததும், புகைப்படங்களைப் பார்த்ததும் நானே கோயிலுக்கு சென்று வந்த திருப்தி இருந்தது. அதிலும் அந்த உற்சவரின் புகைப்படம் மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது. உற்றுப்பாரத்தால் உற்சவர் தெரிந்து மறைகிறார்.

  அன்புடன்
  பக்கிரிசாமி N

  ReplyDelete
 18. மறுமொழி> Packirisamy N said...

  சகோதரரின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 19. தங்களோடு எங்களையும் கூட்டிச் சென்றீர்கள். படங்களும் தெளிவு மிக நன்றி. அனுபவித்து வாசித்தேன்.
  இனிய வாழ்த்து. தங்கள்வலை முன்பு ஆடியதால் சகோதரி கோமதி தந்த தொடுப்பு (மின்னஞசலை அழுத்தி) முலம் முதலில் வந்தென். இப்போது தங்கள் கருத்திலிருந்த இளங்கோவை அழுத்தி இங்கு வந்தேன் இப்பொது வலை துள்ளவில்லை.
  மிக மிக மகிழ்ச்சி (இவ்வளவு நாளும் துள்ளியது)
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 20. மறுமொழி > kovaikkavi said...

  //தங்களோடு எங்களையும் கூட்டிச் சென்றீர்கள். படங்களும் தெளிவு மிக நன்றி. அனுபவித்து வாசித்தேன்.//

  சகோதரியின் அன்பான கருத்துரைக்கு நன்றி!

  //இனிய வாழ்த்து. தங்கள் வலை முன்பு ஆடியதால் சகோதரி கோமதி தந்த தொடுப்பு (மின்னஞசலை அழுத்தி) மூலம் முதலில் வந்தேன். இப்போது தங்கள் கருத்திலிருந்த இளங்கோவை அழுத்தி இங்கு வந்தேன் இப்பொது வலை துள்ளவில்லை. //

  அன்பு சகோதரிக்கு, நீங்கள் மட்டும்தான் எனது வலை ஆடியதாகச் சொல்லுகிறீர்கள். வலைச்சரத்தில் தங்களைப் பற்றி எழுதியபோது கூட இதே கருத்தினைச் சொன்னதாக நினைவு. எனக்கும் என்ன காரணம் என்று (தொழில் நுட்பம்) தெரியவில்லை.

  ReplyDelete
 21. சிறப்பான தகவல்கள். நல்லதோர் கோவில் பற்றிய விவரங்கள். படங்களும் நன்று.

  நானும் செல்ல முயல்கிறேன் - அடுத்த பயணத்தின் போது.

  ReplyDelete
 22. மறுமொழி >வெங்கட் நாகராஜ் said...

  //சிறப்பான தகவல்கள். நல்லதோர் கோவில் பற்றிய விவரங்கள். படங்களும் நன்று. நானும் செல்ல முயல்கிறேன் - அடுத்த பயணத்தின் போது.//

  சென்று வாருங்கள்! நிறைய விவரங்களையும், படங்களையும் உங்கள் பதிவினில் தாருங்கள்! தங்கள் கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete