Friday, 10 August 2012

விடைபெறும் பதிவர்கள்


ஆரம்பத்தில் முதன் முதலாக வலைப் பக்கங்களை நான் எட்டிப் பார்த்த போது எழுதிக் கொண்டு இருந்த பல பதிவர்களை இப்போது பார்க்க முடிவதில்லை. வலைப் பக்கங்களை எழுத ஆரம்பித்தவுடன் ஒரு உத்வேகம் காரணமாக எழுதுவதில் ஒரு விருப்பம் எல்லோருக்கும் இருக்கும். முதன் முதல் வலைப் பதிவை எழுதி அதனை தமிழ் மணம் போன்ற திரட்டிகளில் இணைத்து வெளிவந்தவுடன் ஏற்பட்ட, அந்த பரவசம் நாளடைவில் குறைந்து விடுகிறது. ஒரு பத்திரிகைக்கு நமது படைப்புகளை (புனை பெயரில் எழுதினால் கூட) கிடைக்கும் அங்கீகாரம் அல்லது எழுத்தாளன் என்ற பெயர் வலைப் பதிவுகளைப் போடுவதால் கிடைப்பதில்லை.. இருக்கின்ற வேலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு இன்னும் எத்தனை நாளைக்குத் தான் எழுதிக் கொண்டே இருப்பது என்று சிலர் சலிப்படைந்து இருக்கலாம் சிலர் அவர்கள் வீட்டில் ஏச்சுக்கு கூட ஆளாகி இருக்கலாம். அதிலும் முகமூடி அணிந்த பதிவர்களுக்கு இதைவிட சலிப்பு அதிகமாக இருக்கலாம்.

சொல்லாமல் சென்றவர்கள்:

இணைய குசும்பன், இந்துராணி கருணாகரன் (கமகம), இராதா கிருஷ்ணன் (நினைவோடை), உதயகுமார் (பாலக்கரை பாலனின் பால்ய பார்வை), அலெக்ஸ் பாண்டியன் (காவிரிக் கரையோரம்), கண்ணன் (அரட்டைக் கச்சேரி), குமரிமைந்தன் (குமரிமைந்தன் படைப்புக்கள்), தேசிகன் (தேசிகன் பக்கம்), பாலாஜி-பாரி (உருமி மேளம்), மாயவரத்தான் (ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது) என்று அப்போது பலர் பதிவுகளை எழுதி வந்தனர்.  எல்லோருடைய பெயர்களும் நினைவில் இல்லை. இதில் குமரி மைந்தன் என்பவர் 1984 இல் பொதுப்பணித் துறையில் இளநிலைப் பொறியாளராக இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர்.(See Profile) இப்போது அவருக்கு நிச்சயம் வயது எண்பதை நெருங்கியிருக்கும். எனவே இவர் இப்போது எழுதவில்லை என்று நினைக்கிறேன். மற்றவர்கள் facebook, twiter என்று பிற தளங்கள் பக்கம் போய்விட்டார்களா அல்லது  சொல்லாமல் எழுதுவதையே நிறுத்திக் கொண்டு விட்டனரா என்று தெரியவில்லை.   

விடை பெற்றுச் சென்றவர்கள்:

இன்னும் சிலர் விடை பெற்றுச் செல்கிறேன் என்று, குட் பை சொல்லி விட்டே சென்று விட்டனர். அப்படி சென்ற சிலர் மீண்டும் வந்து எழுதுகிறார்கள். இன்னும் சிலர் அப்போதைக்கு அப்போது எழுதுகின்றனர். நானும் இப்போதுதான் கடந்த ஓராண்டாக வலைப் பதிவை எழுதி வருகின்றேன். விடை சொல்லி விட்டு சென்றவர்களில் சிலர் சொல்லும் காரணங்களைப் பார்ப்போம்.

அல்வா சிட்டி (போட்டுத் தாக்கு) என்ற பதிவில் விஜயகுமார் அவர்கள் 

//ப்ளாக்கரிலிருந்து தற்காலிமாக என்னை விடுவித்துக் கொள்கிறேன். எனக்கு பயிற்சிகளமாக இருந்த தமிழ்மணத்திற்கு நான் என்றும் கடன் பட்டவன். தமிழ்மணமும் அங்கிருக்கும் நல்ல உள்ளங்களும் உடல்நலமும் மனநலமும் என்றும் பெற்று வாழ வாழ்த்துகிறேன். சில நாள் வாசிப்பில் ஆழ்ந்திருக்கப்போகிறேன்.//

என்று சொல்லுகிறார்.

ஆச்சி ஆச்சி ( http://aatchi.blogspot.in ) என்ற பதிவர் 2012 மார்ச்சு 14 ஆம் தேதி ஒரு பெரிய பதிவையே இதற்காகப் போட்டு விட்டார்.. 

// எனக்கு விலை மதிப்பில்லா ஆசான் என் அப்பாதான்.சென்ற ஆண்டு அக்டோபரில் ஓய்வுபெற்று வயல் மற்றும் புதிய வீட்டின் வேலைகளை பார்த்துக்கொண்டிருக்கிறார்.தினமும் எங்களுடன் ஃபோனில் பேசுவார்.பதிவுகள் எழுதுவதை ஒரு நாள் சொன்னபோது இணையத் தொடர்பால் பிரச்சனைகள் வரும்னு கேள்விப்படுகின்றேன். யோசித்து கொள்ளம்மா என்று மட்டும் சொன்னார். சொந்த காரணங்களால் இந்த நூறாவது பதிவோடு சில காலங்களுக்கு பதிவுலகிலிருந்து விடைபெறுகின்றேன். //

இதில் அவர் வலைப் பதிவு எழுதுவதில் ஒரு பெண் என்ற முறையில் தனக்கிருந்த சூழ்நிலையை விளக்கி விட்டார்.

அண்மையில் திரு VGK ( வை.கோபாலகிருஷ்ணன்) அவர்கள் ஒரு கருத்தினை (மே மாதம்,2012 ) வெளியிட்டு இருந்தார். http://gopu1949.blogspot.in/2012 05 01 archive.html

// பகிர்ந்து கொள்ள ஆயிரக் கணக்கான விஷயங்கள் மனதினில் கொட்டிக் கிடப்பினும், ஒருசில சொந்தக் காரணங்களால், பதிவுகள் பக்கம் தொடர்ந்து வர முடியாத இக் கட்டான சூழ்நிலையில் உள்ளேன் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதுவரை நீங்கள் எல்லோரு்ம் எனக்குக் கொடுத்து வந்த ஆதரவுக்கும், ஒத்துழைப்புக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்  //

தற்பொழுது, பதிவுகள் எழுதா விட்டாலும் மற்ற பதிவர்களை ஊக்குவிக்கும் விதமாக VGK அவர்கள் கருத்துரைகள் தந்து கொண்டு இருக்கிறார்.

தமிழ்வாசி பிரகாஷ் ( www.tamilvasi.com ) என்ற பதிவரைப் பற்றி எல்லோருக்கும் தெரியும் அவர் அண்மையில் விடை பெற்றார். ஜூன் 2012 இல் அவர் சொன்ன காரணம்.... ...

// நண்பர்களே... தலைப்பில் சற்று ஓய்வு பெறப் போகிறேன் என போட்டுள்ளேன். ஆமாம்... தொடர்ந்து என்னால் இடுகைகள் எழுத முடியவில்லை. காரணம், சொந்த வேலைகள் சில தலைக்கு மேலே உள்ளது. அதற்காக நேரம் ஒதுக்க வேண்டி உள்ளது. சில மாதங்களாகவே, பதிவுலகில் ஓய்வு பெற வேண்டும் என்ற எண்ணம் என்னுள் இருந்தது. அப்புறம் சில நேரம் பதிவெழுத நேரம் கிடைத்ததால் சில பதிவுகள் எழுதி வந்தேன். ஆனாலும் சொந்த வேலைகளுக்கு கண்டிப்பாக நேரம் தேவை என்ற சமயம் இப்போது வந்து விட்டதால் இந்த ஓய்வு முடிவு... பதிவுலகில் ஓய்வு என்றாலும் எனது நண்பர்களை மறந்துவிட மாட்டேன். கண்டிப்பாக தொடர்பில் இருப்பேன். அவர்களின் பதிவுகளை நேரம் கிடைக்கையில் கண்டிப்பாக வாசிப்பேன்... //

திரும்பவும் வந்தவர்கள்:

சில பதிவர்கள் சில காரணங்களை முன்னிட்டு விடை பெற்றுச் சென்றாலும் மீண்டும் வந்து எழுதுகிறார்கள்.

எம்.ஏ. சுசீலா என்ற பதிவர் ( www.masusila.com ) மதுரை பாத்திமா கல்லூரியில் பேராசிரியை பணி புரிந்தவர்.அவர் நல்ல பதிவுகளை தந்துள்ளார். அவர்  

//என் பயணம் முடிந்து 25.08.09 புது தில்லி திரும்பிய பின்னர் வலைப் பதிவுகளைத் தொடர்கிறேன்.  அதுவரை வலை வாசக அன்பர்களிடமிருந்து தற்காலிகமாக விடை பெறுகிறேன். //
 
என்று சொன்னார். சொன்னது போலவே இப்போது  மீண்டும் வந்து எழுதுகிறார். பரிசல்காரன், உண்மைத் தமிழன், சேட்டைக்காரன் முதலானவ்ர்களும் மீண்டும் பதிவுலகம் வந்து எழுதிக் கொண்டு இருக்கிறார்கள் இதில் சேட்டைக்காரன் ( http://settaikkaran.blogspot.in ) முன்பு சொன்ன வாசகங்கள் இவை. (. Sunday, June 13, 2010 )

// இப்போதைக்கு விடைபெறுகிறேன் வலையுலகம் சலித்து விட்டது! இறைவன் சித்தமும் எனக்கு விருப்பமுமிருந்தால் திரும்ப வருவேன் ஆதரித்த அனைவருக்கும் நன்றி! //

உதாரணத்திற்காக இங்கு ஒரு சிலரை மட்டுமே  குறிப்பிட்டேன். தமிழ் வலைப் பதிவாளர்கள்( TAMIL BLOGGERS LIST ) கணக்கைப் பார்த்தால் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே போகிறது. அத்தனை பேரும் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருப்பதாகத் தெரியவில்லை. ஆக சொந்தக் காரணங்களை முன்னிட்டே வலைப் பதிவு எழுதுவதிலிருந்து பெரும்பாலோனோர் நின்று விடுகின்றனர். யாரும் வலைப் பதிவை வெறுக்கவில்லை.

எழுதிச் செல்லும் விதியின்கை
     
எழுதி எழுதி மேற்செல்லும்;
தொழுது கெஞ்சி நின்றாலும்
     
சூழ்ச்சி பலவும் செய்தாலும்
வழுவிப் பின்னால் நீங்கியொரு
     
வாரத்தை யேனும் மாற்றிடுமோ?
அழுத கண்ணீ ராறெல்லாம்
     
அதிலோர் எழுத்தை அழித்திடுமோ?
                  - கவிஞர் உமர் கய்யாம்


நண்பர்களே உங்களுக்கும் வீட்டில் உள்ளவர்களுக்கும் சலிப்பு வரும் அளவுக்கு வலைப் பதிவிலேயே மூழ்கி அடிமை (addict) ஆகி விடாதீர்கள சொந்த வேலைகளையும் பாருங்கள். நண்பர்களோடும், மற்றவர்களோடும் உரையாட நேரம் ஒதுக்குங்கள்.  தினம் எழுத வேண்டும் என்று கட்டாயம் இல்லை. நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள். தங்களுக்கு வரும் விமர்சனங்களை எதிர் கொள்ளுங்கள். தாங்கள் படித்து முடித்த பதிவுகளுக்கு மட்டுமே கருத்துரை தாருங்கள். படிக்காமலேயே  ஆகா!  ஓகோ! பேஷ்! பேஷ்! “ என்ற பாணியில் விமர்சனம் செய்யாதீர்கள். இப்போது ஆங்காங்கே வலைப் பதிவர்கள் சந்திப்பை நட்பு மனம் கொண்டவர்கள் நடத்துகிறார்கள். இந்த சந்திப்பினால் வலைப் பதிவர்கள் இன்னும் உற்சாகம் அடையலாம். எனவே எழுதுங்கள். எழுதிக் கொண்டே இருங்கள்.






20 comments:

  1. நீங்களும் ஏதாவது சொல்லிவிடுவீர்களோ
    என பயந்து கொண்டே படித்தேன்
    நல்லவேளை அப்ப்டியில்லை எனத் தெரிந்ததும்
    சந்தோஷம் கொண்டேன்
    கடைசிப் பத்திபதிவர்கள் அனைவரும்
    அவசியம் படிக்கவேண்டிய து
    பயனுள்ள பதிவு
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நல்லதொரு தொகுப்பு... (தெரியாத சிலரைப் பற்றியும்)

    /// சொந்தக் காரணங்களை முன்னிட்டே வலைப் பதிவு எழுதுவதிலிருந்து பெரும்பாலோனோர் நின்று விடுகின்றனர். யாரும் வலைப் பதிவை வெறுக்கவில்லை. ///

    இது கூட உண்மையாக இருக்கலாம்...

    என்னைப் பொறுத்தவரை : என் வாழ்வில் இது ஒரு சிறு பகுதி என்றே நினைக்கிறேன்...

    பல நண்பர்கள் (புது பதிவர்கள்) கைபேசியில் பல தகவல்களை (Thiratti, Widgets, etc.,) கேட்கும் போது அவர்களிடம் சொல்வது இது தான். "செய்யும் தொழிலை சிறப்பாக செய்யுங்கள்; அதைப் பற்றி யோசியுங்கள்; நிறைய புத்தகம் படியுங்கள்... அவை தான் வாழ்வின் கடைசி வரை உதவும்." என்று...

    அவர்களிடம் வந்த பெரும்பான்மையான பதில் : "அதெல்லாம் தெரியும் சார்... இது சும்மா ஜாலிக்காக" ...ம்... அவர்களாக அறிந்து, தெரிந்து, புரிந்து கொள்வார்கள்... அதுவும் நல்லதே... நன்றி சார்... (TM 2)

    ReplyDelete
  3. சிறந்த கருத்துடன் அனைவருக்கும் உணரும் படி சொன்னீர்கள் நல்லதுங்க நன்றி.

    ReplyDelete
  4. தி.த.இளங்கோ சார்,

    நீங்க சமீபத்தில பதிவுக்கு வந்தவங்கன்னு நினைச்சேன், ஆனால் ரொம்ப நாளாப்பதிவுகளைப்படிச்சுக்கிட்டு வரிங்கன்னு நினைக்கிறேன் ,அல்லது நீங்களும் ஒரு ப்ழைய முகமூடிப்பதிவரா :-))

    ஹி..ஹி நானும் ஒரு முகமூடி என்பதால் கேட்டேன்.

    நிறைய சொல்லி இருக்கீங்க. எனக்கு சலிப்பெல்லாம் வரலை, காரணம் நான் எழுதுவது எனக்காக, இப்போ பசிச்சா யாருக்காக சாப்பிடுகிறோம், நமக்காக தானே.அப்படியே.

    தினம் தினம் எழுதினா சலிப்பு தட்டிறும் என்பது எனது எளிய கருத்து.

    ஏன் எனில் பதிவு எழுதவே சிந்திக்க ஆரம்பிச்சுடுறாங்க, இன்ன என்ன எழுதலாம்,அதுக்கு என்ன தலைப்பு வைக்கலாம், எந்த டைமில் வெளியிட்டால் அதிக ஹிட்ஸ் வரும்னு யோசிச்சு பதிவு போடும் போது அதுவும் தினம் தினம் எனில் ஒருக்கட்டத்தில் அதுவே ஒரு சுமையாகி சோர்வாகிவிடும்.

    அதே சமயத்தில் நமக்கே இது எழுதினா நல்லா இருக்கும்னு ஒரு ஃபீல் வந்து எழுதினா அவ்வளவு சீக்கிரம் சோர்வாகாது.உணர்வுகளை பகிர்வதாக இருக்கும்,ஆனால் அது போல எழுதினால் மாதம் 4-5 க்கு மேல எழுத முடியாது என்பதும் உண்மை.

    பதிவு எழுத சரக்கை தேடிப்போகக்கூடாது ,நம்மக்கிட்டே தானா சரக்கு வந்து சேர்ந்து அது பதிவாக்கினால் நல்லது. சோர்வாகமால் ரிலாக்ஸ் ஆஹ் போகும்.

    அதே போல விடை பெருபவர்கள் சொந்தக்காரத்திற்காக என்பது நிஜமாகவும் இருக்கலாம். நான் பல முறை காணாமல் போய் மீண்டு வந்தவன் ,போகும் போது சொல்லிக்க மாட்டேன் அதை சொன்னேன் ஆனால் வரும் போது தோ வந்துட்டேன் என வருவேன்.

    என்னைப்பொருத்தவரையில் நம்ம வலைப்பதிவுக்கு வருவதும் ,போவதும் நம்ம விருப்பம் இதில என்ன விடப்பெறுகிறேன், வடைப்பெறுகிறேன்.

    நான் எப்போ வேலையோ அப்போ போய்விடுவேன் , உயிரோடு இருந்தால் திரும்பி வருவேன்.

    நிறைய பேர் என்ன நினைச்சுக்கிறாங்க என்றால் இன்னிக்கு பதிவு எழுதவில்லை என்றால் நம்மை படிக்கிறவங்க ஏமாந்துவிடுவாங்க என்று ஏதோ வரா ,மாத பத்திரிக்கைகள் டெட் லைனில் இஷ்யூ போடுவது போல செயல்ப்படுவது ,பதிவு எழுதுவது ஒரு ஓய்நேர பொழுது போக்கு என்பதினை மாற்றி"ஒரு வேலை"ஆக மாற்றிவிடுகிறார்கள்.

    ஆனால் இதெல்லாம் அவர்களுக்கே தெரிந்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சரி விடுங்க , நாம வேலையை நாம பார்ப்போம்.

    கூடுதல் தகவல், மாயவரத்தான், தனி தளத்தில் இன்னும் இருக்கார், தேசிகன் ,சுஜாதா தேசிகன் என எழுதுகிறார், மற்றவர்கள் என்ன ஆனார்கள் எனத்தெரியவில்லை.

    பாலக்கரை பாலகன் அவரும் காணோம் ,அப்போ எல்லாம் நான் தொடர்ந்து படிப்பேன், இப்போ அவர்பதிவு பார்த்தாலும் என் பின்னூட்டம் அதில் இருக்கும், நட்பாக பழக கூடிய பதிவர், ஹி...ஹி முகமூடிப்பதிவரான என்னிடமும் சகஜமாக பேசுவார்.

    இங்கே பெரும்பாலும் பழமைவாத எண்ணங்களில் ஊறிப்போனவர்கள், முகம் தெரியவில்லை, முதுகு தெரியவில்லை என சொல்லிவிடுவார்கள் :-))

    நன்றி!வணக்கம்.

    ReplyDelete
  5. REPLY TO …………….. Ramani said...

    // நீங்களும் ஏதாவது சொல்லிவிடுவீர்களோ
    என பயந்து கொண்டே படித்தேன் நல்லவேளை அப்ப்டியில்லை எனத் தெரிந்ததும் சந்தோஷம் கொண்டேன் //

    நான் வலைப் பதிவில் தொடர்ந்து எழுத நீங்கள் தந்து வரும் உற்சாகமும் ஒரு காரணம். கவிஞர் ரமணி அவர்களின் அன்புக்கு நன்றி!

    ReplyDelete
  6. REPLY TO …………….. திண்டுக்கல் தனபாலன் said..
    // என்னைப் பொறுத்தவரை : என் வாழ்வில் இது ஒரு சிறு பகுதி என்றே நினைக்கிறேன்...
    //
    உண்மைதான். பல வேடிக்கை மனிதரைப் போல நம்மால் இருக்க முடிவதில்லை.

    ReplyDelete
  7. REPLY TO …………….. Sasi Kala said...
    சகோதரி கவிஞர் சசிகலாவின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி!

    ReplyDelete
  8. REPLY TO …………….. வவ்வால் said...
    வவ்வால் சார்! உங்கள் நையாண்டி தர்பாரை நான் எப்போதும் ரசித்துப் படிப்பவன். நான் முகமூடியும் அல்ல. முகமூடி பதிவர்களை வெறுப்பவனும் அல்ல. பணியில் இருக்கும் போது பதிவுகளை படிப்பதோடு சரி. இப்போது விருப்ப ஓய்விற்குப் பிறகுதான் வலைப்பதிவில் வந்துள்ளேன். எனது பெயர் – பெற்றோர் வைத்த பெயர்தான் என்ற பதிவில் என்னைப் பற்றி விவரமாக சொல்லி இருக்கிறேன்.

    கூடுதல் தகவல்கள் என்று பழைய பதிவர்களைப் பற்றிய தங்கள் தகவலுக்கு நன்றி. சென்று பார்க்கிறேன்.நன்றி!

    ReplyDelete
  9. ***ஆச்சி ஆச்சி ( http://aatchi.blogspot.in ) என்ற பதிவர் 2012 மார்ச்சு 14 ஆம் தேதி ஒரு பெரிய பதிவையே இதற்காகப் போட்டு விட்டார்..

    // எனக்கு விலை மதிப்பில்லா ஆசான் என் அப்பாதான்.சென்ற ஆண்டு அக்டோபரில் ஓய்வுபெற்று வயல் மற்றும் புதிய வீட்டின் வேலைகளை பார்த்துக்கொண்டிருக்கிறார்.தினமும் எங்களுடன் ஃபோனில் பேசுவார்.

    பதிவுகள் எழுதுவதை ஒரு நாள் சொன்னபோது இணையத் தொடர்பால் பிரச்சனைகள் வரும்னு கேள்விப்படுகின்றேன். யோசித்து கொள்ளம்மா என்று மட்டும் சொன்னார்.

    சொந்த காரணங்களால் இந்த நூறாவது பதிவோடு சில காலங்களுக்கு பதிவுலகிலிருந்து விடைபெறுகின்றேன். //

    இதில் அவர் வலைப் பதிவு எழுதுவதில் ஒரு பெண் என்ற முறையில் தனக்கிருந்த சூழ்நிலையை விளக்கி விட்டார்.***


    அன்புள்ள திரு தமிழ் இளங்கோ ஐயா,

    வணக்கம்.

    திருமதி ஆச்சி அவர்களின் பொறுப்புள்ள தந்தை தன் மகளுக்குக் கூறியுள்ள எச்சரிக்கை மிகவும் நியாயமானது தான் என்று நானும் நினைக்கிறேன்.

    ஆனால் திருமதி ஆச்சி அவர்களுடன் எனக்கு வலையுலகம் மூலமும், மெயில், சாடிங், முகநூல், தொலைபேசி போன்றவைகள் மூலமும், மிகவும் பழக்கம் உண்டு. இருப்பினும் நாங்கள் இதுவரை நேரில் ஒருவரையொருவர் சந்தித்தது இல்லை.

    அவர்களுக்கு சமீபத்தில் சுமார் 2 மாதங்கள் முன்பு, நாகப்பட்டிணத்தில், அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.

    குழந்தையின் பெயர்: ”யக்சிதா ஸ்ரீ”. ஏற்கனவே நான்கு வயதில் ”அம்ருதா” என்ற பெண் குழந்தை உள்ளது.

    டெல்லி அருகே ஹரியானாவில் உள்ளார்கள்.

    அதனால் நடுவில் சுமார் மூன்று மாதங்களாக அவர்கள் ஏதும் பதிவு வெளியிடவில்லை.

    இப்போது தான் மூன்று நாட்களாக பிறர் பதிவுகளுக்கு பின்னூட்டம் தந்து கொண்டு இருக்கிறார்கள்.

    இனி அவர்கள் பதிவு தருவார்கள் என எதிர்பார்க்கலாம்.

    இது தங்கள் தகவலுக்காக மட்டுமே.

    தொடரும்.....

    ReplyDelete
  10. *****அண்மையில் திரு VGK ( வை.கோபாலகிருஷ்ணன்) அவர்கள் ஒரு கருத்தினை (மே மாதம்,2012 ) வெளியிட்டு இருந்தார்.

    http://gopu1949.blogspot.in/2012 05 01 archive.html

    // பகிர்ந்து கொள்ள ஆயிரக் கணக்கான விஷயங்கள் மனதினில் கொட்டிக் கிடப்பினும், ஒருசில சொந்தக் காரணங்களால், பதிவுகள் பக்கம் தொடர்ந்து வர முடியாத இக் கட்டான சூழ்நிலையில் உள்ளேன் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதுவரை நீங்கள் எல்லோரு்ம் எனக்குக் கொடுத்து வந்த ஆதரவுக்கும், ஒத்துழைப்புக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் //

    தற்பொழுது, பதிவுகள் எழுதா விட்டாலும் மற்ற பதிவர்களை ஊக்குவிக்கும் விதமாக VGK அவர்கள் கருத்துரைகள் தந்து கொண்டு இருக்கிறார்.*****

    ஆம் ஐயா, எனக்கென்று சில பிரத்யேகப்பிரச்சனைகள் உள்ளன. அவை இறையருளால் தீர்க்கப்பட்டோ, அல்லது குறைக்கப்பட்டோ விடுமானால், எனக்கு மனநிம்மதி ஏற்படலாம். அவ்வாறு மன நிம்மதி ஏற்படும்போது, நானும் அதுசமயம் மீண்டும் பதிவுகள் வெளியிட முயற்சிக்கலாம்.

    அதுவரை, நான் ஏதோ ஒருசில பதிவுகளுக்கு மட்டுமே சென்று, அதுவும் என் ஆத்ம திருப்திக்காக மட்டுமே, என் கருத்துக்களைக் கூறி வருகிறேன்.

    அதற்கே எனக்கு நேரமோ, கணினியின் ஒத்துழைப்போ, குடும்பத்தினரின் ஒத்துழைப்போ கிடைப்பதில்லை.

    என் வீட்டு கணினி நெட் வொர்க் கோளாறாகி விட்டது. இன்னும் அதை முற்றிலுமாக சரிசெய்ய இயலவில்லை. இதை இப்போது நான் வேறு ஒரு உறவினர் வீட்டிலிருந்து தான் தங்களுக்கு டைப் அடித்து அனுப்பிக்கொண்டு இருக்கிறேன்.

    மற்றவை பிறகு,

    என்றும் அன்புடன் தங்கள்,
    vgk

    ReplyDelete
  11. ஐயா,

    நான் 03.05.2012 க்குப் பிறகு, புதிய பதிவுகள் ஏதும் தருவதில்லை.

    அதன் பிறகு கொடுக்கப்பட்டுள்ள என்னுடைய எல்லாப் பதிவுகளுமே, எனக்கு விருது அளித்து கெளரவித்தவர்களுக்கு, ஓர் மரியாதை நிமித்தமாக, நான் நன்றி கூறி வெளியிட்டுள்ள பதிவுகள் மட்டுமே என்பதையும் தங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

    அன்புடன்
    vgk

    ReplyDelete
  12. REPLY TO …… ….. வை.கோபாலகிருஷ்ணன் said... ( 1, 2, 3 )

    அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்! உங்கள் மீது அன்பும் மதிப்பும் வைத்து இருப்பவன் நான். எனவே வேறொன்றும் எனக்குச் சொல்லத் தோன்றவில்லை. எங்கள் வீட்டிலும் கடந்த இரண்டு வார காலமாக BSNL BROADBAND – இல் SERVER NOT FOUND – என்று வந்தது. இன்று கம்ப்யூட்டர் நன்றாக இருந்தும் இண்டர்நெட் இணைப்பு இல்லாமல் போய்விட்டது. எனவே இப்போது எனது மகனின் செல்போன் உதவியுடன் ஏர்டெல் இணைப்பில் வலைப் பதிவு பக்கம் எழுத வந்துள்ளேன். நன்றி!

    ReplyDelete
  13. தி.த.இளங்கோ சார்,

    //வவ்வால் சார்! உங்கள் நையாண்டி தர்பாரை நான் எப்போதும் ரசித்துப் படிப்பவன். நான் முகமூடியும் அல்ல. முகமூடி பதிவர்களை வெறுப்பவனும் அல்ல. பணியில் இருக்கும் போது பதிவுகளை படிப்பதோடு சரி.//

    உங்களை முகமூடின்னு சொல்லவில்லை சார், நீங்க பதிவு இப்போ தான் ஆரம்பிச்சு இருக்கிங்க, ரொம்ப பழைய பதிவர்களை எல்லாம் சொல்லவும் அப்போ வேற ஒரு பேரில் பதிவுல இருந்தீங்களா என்பதை அப்படி சொன்னென், நீங்க அப்போ படிப்பது மட்டும் என அறிந்தேன் .

    என் நையாண்டியை ரசிப்பேன் என சொன்னதில் மிக்க மகிழ்ச்சி, நான் பொதுவாக கிண்டலாக பேசினாலும் அது அந்த கருத்தை மட்டுமே அந்த நபர்களை அல்ல அவர்களை நட்பாகவே எண்ணுவேன், அடுத்து இன்னொரு பதிவு, கருத்து நல்லா இருக்குன்னும் சொல்வேன்,ஆனால் சிலர் நான் கிண்டல் செய்ததை மட்டும் மனதில் ஏற்றிக்கொண்டு எப்போதும் உர்ரென்ன இருக்காங்க, :-))

    பதிவில தெரிஞ்சவங்க தெரியாதவங்க என அனைவரையும் சமமாக பாவிக்கணும் என்றே புரிவதில்லை, இவன் என் ஊரு, இவன் என் கூட வேலை செய்றான், இவன் பக்கத்து வீடு, இவன் என் ஜாதிக்காரன்னு பார்த்து பார்த்து பழக ஏன் இணையம் வர்ராங்கன்னு தெரியலை :-))

    உங்களை ஒரு 40 வயதுள்ளவர்னு நினைப்பேன் ஆரம்பத்துல அப்புறம் தான் நீங்க சீனியர்னு தெரிஞ்சது.அப்படி இருந்தும் ரொம்ப சகஜமாக பேசுவது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று.

    ------

    இணையம் வர்ர அதிகம் டவுண் லோட் செய்ய எனில் கேபிள் பிராட்பேன்ட் பயன்ப்படுத்தலாம் வலைப்பதிவு, சாட்டிங் மட்டும் எனில் கைப்பேசி மூலம் இணையம் போதும்.

    டோகோமோ சிக்னல் கிடைக்கும் எனில் அதனை முயற்சிக்கலாம், 67 ரூ க்கு 3ஜிபி டேட்டா பயன்ப்பாடு.

    அப்புறம் ஏர் டெல்லும் பயன்ப்படுத்துறேன் 97 ரூ ,1 ஜி.பி,

    அதனால் ஒரு பேக் அப் தான் அது.

    எனவே எனக்கு இணைய செலவு 200 ரூக்குள் தான் மாதம்.

    ReplyDelete
  14. என்னைப் போன்றவர்களுக்கு இப்பதிவை எச்சரிக்கையாக ஏற்றுக் கொள்கிறேன்.தரவரிசை மாயையிலிருந்து விடுபடவேண்டும்.அளவான பதிவுகள் இடுவது நல்லது என்பது அனுபவசாலிகளின் கருத்தாக உள்ளது.எது எப்படியோ பல்வேறு நாடுகளிருந்து நண்பர்கள் கிடைக்கும் வாய்ப்பை பதிவுலகம் ஏற்படுத்தி தருகிறது என்பதில் ஐயமில்லை

    ReplyDelete
  15. REPLY TO …………….. வவ்வால் said... ( 2 )

    பல்வேறு பணிகளுக்கு இடையிலும் எனது வலைப் பதிவிற்கு வந்து கருத்துரை, மற்றும் இணையம் இணைப்பு பற்றிய தகவல்கள் தந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  16. REPLY TO …………….. T.N.MURALIDHARAN said...

    வணக்கம்! இதனை எச்சரிக்கை பதிவாக கருத வேண்டாம். மனதில் பட்ட அனுபவம்தான்.

    // தரவரிசை மாயையிலிருந்து விடுபடவேண்டும்.அளவான பதிவுகள் இடுவது நல்லது என்பது அனுபவசாலிகளின் கருத்தாக உள்ளது. எது எப்படியோ பல்வேறு நாடுகளிருந்து நண்பர்கள் கிடைக்கும் வாய்ப்பை பதிவுலகம் ஏற்படுத்தி தருகிறது என்பதில் ஐயமில்லை //

    என்ற உங்கள் கருத்தோடு நானும் உடன்படுகிறேன். நன்றி!

    ReplyDelete
  17. குறிப்புகள் அருமை Sir! பொழுதுபோக்காக எழுத ஆரம்பித்தவர்கள் எழுதப்பழகிய பிறகு ஈடுபாட்டோடு எழுதுவார்கள்! ஈடுபாடோடு எழுத ஆரம்பித்தவர்கள் சிலரால் சரியாக தொடர முடிவதில்லை! காரணங்கள் எதுவாகினும் பதிவுலகம் சிறந்த பதிவர்களை தொலைப்பது வருத்தம் தான்! மேலும் தாங்கள் கடைசி பத்தியில் குறிப்பிட்ட கருத்துகள் கருத்துரை இடுவது, பதிவிலேயே மூழ்கிப்போவது,பதிவர் சந்திப்பை பற்றிய குறிப்புகள் அனைத்தும் அருமை! பகிர்வுக்கு நன்றி Sir!

    ReplyDelete
  18. REPLY TO ….. … யுவராணி தமிழரசன் said...

    சகோதரியின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! இன்றைய தலைமுறையினருக்கு வலைப்பதிவு என்பது ஒரு வரப்பிரசாதம்தான்.

    ReplyDelete
  19. அன்பின் தமிழ் இளங்கோ - விடை பெற்ற பல பதிவர்களைப் பற்றிய பதிவு அருமை - நன்று நன்று - நல்வாழ்த்துகல் - நட்புடன் சீனா

    ReplyDelete
  20. REPLY TO … … cheena (சீனா) said...
    அன்பின் ”வலைச்சரம்” சீனா அவர்களுக்கு வணக்கம்! பாராட்டிற்கு நன்றி!


    ReplyDelete