Friday, 3 August 2012

மலேசியா நாதசுரம்.ம.பழனிச்சாமி எழுதிய தாமரைக் குளம்: நூல் விமர்சனம்

திருச்சியிலுள்ள கவிஞர், பொறியாளர் சாந்த முத்தையா அவர்களைச் சந்திக்கச் சென்றபோது மலேசிய எழுத்தாளர் மற்றும் இசைக் கலைஞர் நாதசுரம். ம.பழனிச்சாமியைப் பற்றி பெருமையாகச் சொன்னார். மலேசிய பத்திரிக்கைகளில் அவரது கதைகள் வெளி வந்தமையையும், அவரது தாமரைக் குளம்என்ற தொகுப்பு நூலைப் பற்றியும் சொன்னார். அந்த நூலைப் பற்றிய எனது எண்ணங்களை இங்கு எழுதியுள்ளேன்.

நெடுங்கதைகள்:

ஆசிரியர் அவர்கள் மலேசியா வாழ் தமிழர். எனவே அவரது கதைகள் முழுக்க மலேசியாவிலேயே நடைபெறுகின்றன. “தாமரைக்குளம்என்ற கதையை மலேசியாவில் சிலியாவ் தோட்டம் என்னும் சிற்றூரில் நடப்பதாக எழுதியுள்ளார். ஒரு தாமரைக் குளத்தில் துள்ளி விளையாடிய லெட்சுமி முத்து  ஜோடியின் காதல் , மூட நம்பிக்கைகளை விளாசும் பெரியவர் ராமதாஸ், பேய்க் கதைகளில் சிக்கிய முனியன் மற்றும் கோபால் என்று இயல்பாக கதா பாத்திரங்களை நடத்திச் செல்கிறார். கதையானது துப்பறியும் நீலமேகத்தின் சாகசத்தோடு முடிகிறது.

நோயாபேயா? உளவியல் சிந்தனையோடு நெருங்கிய நெடுங்கதை. புல்லாங்குழல் ராஜேந்திரன் மந்திர தந்திரத்தில் மூட நம்பிக்கையில் மூழ்கிய கதை.

“ ஒரு பெண்ணும் பத்து ஆண்களும்என்று சஸ்பென்ஸ் கதை. பெண் என்றால் இந்த மனித சமுதாயம் எப்படியெல்லாம் வக்கிரத்தோடு பார்க்கிறது என்பதனை எடுத்துக் காட்டுகிறது.. கதை முழுக்க மலையாள நெடி. கதையின் முடிவில் எனக்கு உடன்பாடில்லை.

“ஆசை மனம்என்ற கதை அதிக வட்டிக்கு ஆசைப் பட்டு ஒரு குடும்பமே ஏமாந்து சீரழிந்த கதையைச் சொல்கிறது. ஆசைப் பட்டது பெற்றோர். அவர்கள் பட்ட கடனுக்கு மகள்கள் படும் அவமானமும் துயரமும் கண்ணீரை வரவழைக்கின்றன. ஆனால் இறுதியில் அனைவருமே பலிகடாவாகி விட்டனர். பைனான்சில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் பற்றிய செய்திகள் இப்போது அதிகம் பத்திரிக்கைகளில் வருகின்றன.
  
சிறுகதைகள்:

இடையிடையே ஆசிரியர் நாதசுரம் ம.பழனிசாமி குடும்பத்தினர் எழுதிய சிறு கதைகள். ஆசிரியரின் பேரன் ம.அர்வின் எழுதிய “மனிதர்களும் பன்றிகளும் என்ற கடுகுக் கதை  மனிதர்களைப் பற்றிய புதிய கண்ணோட்டம் கொண்டது. ம.கனிமொழி எழுதிய “சின்ன முயலும் சிறுத்தைப் புலியும்  என்ற கதை ஒரு நீதிக் கருத்தோடு முடிகிறது.

ஆசிரியர் எழுதிய ‘ஆசை பலித்திடுமா?என்ற கதை குடிகார மகனால் குடும்பம் சீரழிந்த நிலைமையச் சொல்கிறது. உடம்பில் கோளாறு கொண்ட  மாப்பிள்ளையைப் பற்றி  விசாரிக்காமல் கொள்ளாமல் கடைசிப் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்ததால் குழந்தை பாக்கியம் இல்லை. வாழ்க்கையே துயரமாகி விடுகிறது. இதற்கு ஆசிரியர் “ திருமணத்துக்கு முன்னரே அரசாங்கப் பரிந்துரையோடு, அனுமதியோடு ஒவ்வொரு ஆணும் பெண்ணும் முறையான மருத்துவச் சோதனை செய்து, மருத்துவச் சான்று பெற்று திருமணம் செய்யலாமே!  என்று தனது யோசனையை முன் வைக்கிறார்.

“அவளுடன் ஆறு மாதம்என்ற சிறுகதை மூலம், ஒரு பெண் கெட்டுச் சீரழிய இந்த சமுதாயமே காரணம் என்பதனைப் படம் பிடித்துக் காட்டுகிறார்  ஆசிரியர். பாம்பைப் பிடித்த பட்டாம் பூச்சிகள்என்ற கதையில் பெண்கள் நினைத்தால் எந்தத் துறையிலும் சாதிக்கலாம் என்பதனைச் சொல்லுகிறார்.  பூக்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து நடத்தும் “மாநாடு  என்ற கதையில் வருவது ஒரு கற்பனை நிகழ்ச்சி. “கதைக்குள் ஒரு கதைஎன்று கணவன் எழுதும் கடிதம். பராசக்தி திரைப் படக் கதையில் வரும் பூசாரிகள் இன்றும் இருக்கிறார்கள் என்று “மேனகாகதை மூலம் எச்சரிக்கிறார். “மஞ்சுவா மரகதமா?என்று ஒரு சிறு கதை. மணக்கவிருந்த பெண் மஞ்சு இறந்து போக, துயரத்தில் இருந்த புகழேந்திக்கு வாழ்வு தருகிறாள் மரகதம் என்ற அவள் தோழி. நல்ல முடிவு.

“அல்லித் துறையில் பூத்த வெள்ளி நிலா!என்ற சிறு கதையில் பரந்தாமன் உமா என்ற இரு பாத்திரங்கள். இருவேறு ஜாதியினர். இந்தக் கதையினில் ஜாதியை “சாதியென்ன சாதி. ஒட்டிக் கிடக்கிறது அல்லது கொட்டிக் கிடக்கிறது கொண்டு போக?.....  .... சாதியொன்றும் கொண்டு போகக் கூடியப் பொருளல்லவே? என்று வினவுகிறார். இருவரும் மனமொத்துப் போனாலும் உமா வீட்டார் ஒத்துக் கொள்ளவில்லை. முடிவில் கரை புரண்டோடும் காவிரி ஆற்றில் வீழ்ந்து உயிரை மாய்த்துக் கொண்டது போல் ஒரு நாடகத்தை அரங்கேற்றி கமுக்கமாக மலேசியாவுக்கு அனுப்பி வைத்து, மணம் புரிந்து கொண்டு மகிழ்வுடன் வாழ்ந்து வருவதாக முடித்துள்ளார்.  தீபாவளி விருந்து  என்று ஒரு கதை. இதுவும் ஒரு ரப்பர் தோட்டத் தொழிலாளியின் குடும்பக் கதைதான்.

பாடல்கள்:

பல்வேறு இசைக் கருவிகளில் திறமையாளரான, இசைக் கலைஞர் நாதசுரம் ம.பழனிச்சாமி அவர்கள் சில இசைப் பாடல்களையும் ராகக் குறிப்புகளோடு, இந்த தொகுப்பில் தந்துள்ளார். இசைப் புலமையில் எனக்கு அவ்வளவு பழக்கம் இல்லாத காரணத்தால் அவற்றை பற்றி எழுதவில்லை..

முடிவுரை:

ஆசிரியர் நல்ல சிறுகதை எழுத்தாளர். மேலும் இசைப் புலமையும் உள்ளவர்.. பொதுவாக இவரது பாத்திரப் படைப்புகள் அனைத்தும் அன்றாடம் நம் வாழ்வில் பார்க்கும் எளிய மக்கள்தான். ஒவ்வொரு கதையிலும் ஒரு நீதி மற்றும் சமூகத்தைச் சாடும் வரிகள் உள்ளன. கதையின் போக்கும் சலிப்பூட்டாமல் இயல்பாகச் செல்கிறது. நல்ல நடையும் கருத்தாழமும் கொண்ட அவரது “தாமரைக் குளம்தொகுப்பு ஒரு சிறந்த படைப்பு ஆகும்.

நூல் வெளீயீடு: மணிமாறன் வெளியீட்டகம், எண்.98, ஜலான் செரி மாம்பாவ் A – 4, டாமன் செரி மாம்பாவ், மாம்பாவ், 70300, சிரம்பான், நெகிரி செம்பிளான், மலேசியா Cell: 006 - 0166706056
( விலை: ரூ120/= / மலேசியன் டாலர் 5 வெள்ளி )

(குறிப்பு: இந்த கட்டுரை மேலே சொன்ன ”தாமரைக் குளம்” நூலில் உள்ளது)

12 comments:

 1. நல்லதொரு நூல் விமர்சன பகிர்வுக்கு நன்றி...

  ம.பழனிச்சாமி அவர்களுக்கும், பகிர்ந்து கொண்ட தங்களுக்கும் வாழ்த்துக்கள்...

  நன்றி…
  (த.ம. 1)

  ReplyDelete
 2. தாமரைக்குளத்திற்குள், இறங்கி அழகிய தாமரைகளை இதழ் இதழாகப் பிரித்து ரஸித்து அலசி ஆராய்ந்து பாராட்டிச் சோன்னதோடு மட்டுமல்லாமல், ஒருசில உடன்பாடு இல்லாத [படர்தாமரை போன்றவற்றையும்] விஷயங்களையும் தைர்யமாகக் க்ண்டித்து, தாஙகள் எழுதியுள்ள விமர்சனம், மிகவும் அருமையாக உள்ளது.

  பாராட்டுக்கள், ஐயா. பகிர்வுக்கு நன்றிகள்.

  அன்புடன்
  vgk

  ReplyDelete
 3. அருமையான புத்தகம் குறித்த விமர்சனத்தை
  பதிவாக்கிக் கொடுத்தமைக்கு
  மனமார்ந்த நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. நல்லதொரு நூல்.....பகிர்வுக்கு நன்றி ஐயா...

  ReplyDelete
 5. முடிவில் கரை புரண்டோடும் காவிரி ஆற்றில் வீழ்ந்து உயிரை மாய்த்துக் கொண்டது போல் ஒரு நாடகத்தை அரங்கேற்றி கமுக்கமாக மலேசியாவுக்கு அனுப்பி வைத்து, மணம் புரிந்து கொண்டு மகிழ்வுடன் வாழ்ந்து வருவதாக முடித்துள்ளார்.

  சிறந்த படைப்பை பகிர்ந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 6. REPLY TO… .. திண்டுக்கல் தனபாலன் said...

  எப்போதும் மனம் என்னும் மேடையில் பாடும் சகோதரர் திண்டுக்கல் தனபாலன் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 7. REPLY TO …. வை.கோபாலகிருஷ்ணன் said...
  VGK அவர்களுக்கு வணக்கம்! பொதுவாகவே நூல் விமர்சனம் என்றாலே பலர் ஒதுங்கி விடுகின்றனர். நீங்கள் எனது நூல் விமர்சனத்தினை முழுதும் படித்து ஊக்கம் கொடுத்தமைக்கு நன்றி!

  ReplyDelete
 8. REPLY TO …. Ramani said...
  எப்போதும் எனது ஆக்கங்களுக்கு அன்று முதல் ஊக்கம் தந்து வரும் கவிஞர் ரமணி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 9. REPLY TO …. வல்லத்தான் said...
  எங்கள் பக்கத்து ஊர்க்காரரின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 10. REPLY TO …. Sasi Kala said...

  சகோதரி கவிஞர் “தென்றல்” சசிகலா அவர்களது வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete