Wednesday, 28 March 2018

சிறுகதை விமர்சனப்போட்டி எண்: VGK.10- மறக்க மனம் கூடுதில்லையே!


கதையின் ஆரம்பத்திலேயே ஒரு பிளாஷ்பேக்காக தனது மலரும் நினைவுகளாக , நாற்பது வருடத்திற்கு முந்தைய மின்விளக்கே அதிகம் இல்லாத, திருச்சி நகரத்தையும், அந்தக் கால நடுத்தர மக்கள் ஒண்டு குடித்தனங்களாக வாழ்ந்த முறையையும் சுவைபடச் சொல்கிறார். அவர் சொல்லும், அப்போதைய மக்கள் பயன்படுத்திய சிம்னி அரிக்கேன் விளக்குகள், திரி ஸ்டவ் , ரம்பத்தூள் அடுப்புகள் இந்தக் கால பிள்ளைகளுக்கு தெரியாது. மேலும் அப்போதைய அங்கிருந்த  நடுத்தர மக்களது சமூக நிலைமை, பெண்களுக்கு இருந்த கட்டுப்பாடுகள் இவற்றைச் சொல்லி அந்த காலத்திற்கே அழைத்துச் செல்கிறார். இந்த காலத்து தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டிய பழைய கால குடித்தனம் பற்றிய செய்திகள் சுவையாக உள்ளன.

ஒரு பெண்ணிடம் ஒரு ஆண் அவ்வளவு லேசில் பேசிவிட முடியாது. ஏதாவது புத்தகம் அல்லது நோட்ஸ் வாங்க வேண்டும் என்றாலும் யாரேனும் ஒரு பெரியவர் துணையோடுதான் செய்ய வேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மலர்ந்த ஒரு காதல் கதையைச் சொல்லுகிறார்.

ஒரு பெண் தனது காதலை எப்படி வெளிப்படுத்துவாள் என்பதனை சுவையாகவே சொல்கிறார். அவனிடம் வலிய வந்து பேசுதல், அவன் வைத்து இருந்த குழந்தையை வாங்கி அவன் எதிரிலேயே முத்தம் கொடுத்தல், குழந்தையைத் தரும் சாக்கில் தொடுதல் என்று தெரியப் படுத்துகிறார்.

ஒருநாள் எதிர்பாராத விதமாக ஒரு தீபாவளி சமயம் அவள் வீட்டிற்கு அவள் பெற்றோர் இருக்கும் சமயம் அவள் வீட்டிற்கு அவன் செல்ல நேரிடுகிறது. அங்கு அவள் கையால் அவனுக்கு இனிப்பும் காரமும் தருகிறார்கள். மேலும் அவனது வேலை, சம்பளம் இவற்றையெல்லாம் அந்த பெண்ணின் பெற்றோர் விசாரிக்கிறார்கள். இதனால் அவன் தனக்குத்தான் இந்த பெண் அமையும், இவர்கள்தான் தனக்கு மாமனார் மாமியார் என்ற பரவசத்துடன் வீட்டுக்கு வருகிறான். அதற்குப் பிறகு அந்தப் பெண்ணை அவன் காணவே முடியவில்லை. அவனுடைய காதல் அவனுக்குள்ளேயே அடக்கமாகி விட்டது.  ஆனாலும் அவள் கையில் இருந்து வாங்கி சாப்பிட்ட ரவாலாடு மட்டும் அவன் நினைவை விட்டு அகலவில்லை. அவனுக்கு சொந்தத்தில் பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கிறார்கள். குடும்ப வாழ்க்கையும் நல்ல விதமாகவே அமைகிறது. இங்கே இன்னாருக்கு இன்னார் என்ற தத்துவதைச் சொல்லுகிறார் கதாசிரியர் திரு V.G.K அவர்கள்.  

இதற்கிடையில் எதிர்பாரத விதமாக பல வருடத்திற்குப் பிறகு அந்த பெண்ணை கடைவீதியில் சந்திக்கிறான். அவனும் அவளும் ஒரு உணவு விடுதிக்குச் சென்று பேசுகின்றனர். அப்போது இருவரும் அடையும் மனப் போராட்டங்களை சொல்லுகிறார். 

இருவருக்குமே வயதான தோற்றம். இருப்பினும் பழைய நினைவுகள். இவ்வாறு பேசியது போல் அப்போதே பேசி இருந்தால், ஒருவேளை இருவரது காதலும் நிறைவேறி இருக்கும். அவளிடம் அவன் தன் மணிபர்சைத் தந்து வேண்டியதை எடுத்துக் கொள் என்று சொல்கிறான். அவளோ அவன் நினைவாக ஒரு நோட்டை மட்டும் எடுத்துக் கொண்டு அப்படியே பர்சை கொடுத்து விடுகிறாள். இங்கே பணத்துக்காக அவள் விரும்பவில்லை என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறார்.

இறுதியாக தனது மகனின் காதலியாக வருபவள் தனது முன்னாள் காதலியின் மகள்தான் என்று தெரிந்து கொள்ளும்போதும், தனது காதலி இப்போது மனநிலை பாதிக்கப்பட்டவள் என்பதனை அறியும் போதும் அவன் மறக்க மனம் கூடுதில்லையேஎன்று படும்பாட்டை திரு V.G.K அவர்கள் தனக்கே உரிய எழுத்துத் திறமையால் கதையை நகர்த்துகிறார். இறுதியில் அவன் அந்த பெண்ணின் மகளை தனது மருமகளாக ஏற்றுக் கொள்ளும்போது வாசகர்கள் மனதில் உயர்ந்து நிற்கிறான்.

முக்கிய குறிப்பு:

திரு V.G.K (வை.கோபாலகிருஷ்ணன் ( http://gopu1949.blogspot.in ) அவர்கள் நடத்திய, V.G.K சிறுகதைகள் விமர்சனப் போட்டிக்கு, நான் அனுப்பி வைத்த எனது இரண்டாவது விமர்சனக் கட்டுரை (26.03.2014) இது)

தொடர்புடைய எனது முந்தைய பதிவு:
சிறுகதை விமர்சனப்போட்டி எண்: VGK 03 - சுடிதார் வாங்கப் போறேன்

19 comments:

 1. உங்கள் விமரிசனம் படிக்கும்போது, கதை நினைவுக்கு வந்துவிட்டது.

  கோபு சார் எழுதிய அந்தக் கதை படிக்க நல்லா இருக்கும். என் நினைவு சரி என்றால், 'சீக்கிரமேவ மாமனாராக நீங்கள் வர ப்ராப்திரஸ்து' என்று 'அவன்' தான் காதலித்தவளுடைய பெற்றோரைப் பற்றி அந்தக் கதையில் நினைப்பான். கோபு சார்.. அந்தக் காலச் சூழ் நிலையை அப்படியே அந்தக் கதையில் கொண்டுவந்திருப்பார்.

  நேரம் கிடைக்கும்போது மற்றவர்களின் விமர்சனம் படிக்கவேண்டும்.

  உங்கள் விமர்சனம் பகிர்ந்ததற்கு நன்றி.

  ReplyDelete
 2. இந்தக் கதையும் வாசித்த நினைவுக்கு வருகிறது. ரசித்த கதையும் கூட. உங்கள் விமர்சனம் நன்றாக இருக்கிறது.

  கீதா

  ReplyDelete
 3. விமர்சனம் அருமையாக இருக்கிறது!

  ReplyDelete
 4. [ 1 ]

  இந்த மேற்படி கதைக்காக அறிவிக்கப்பட்டிருந்த ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்காக, தான் 26.03.2014 அன்று அடியேனுக்கு அனுப்பிவைத்த விமர்சனத்தை, சரியாக 4 ஆண்டுகள் + 48 மணி நேரங்களுக்குப் பிறகு, இங்கு இன்று (28.03.2018), தன் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு மகிழ்ந்துள்ள எனதன்பு நண்பர் திருச்சி, திருமழபாடி, திரு. தி. தமிழ் இளங்கோ அவர்களுக்கு என் அன்பு கலந்த வணக்கங்கள்.

  >>>>>

  ReplyDelete
 5. [ 2 ]

  இந்தப் போட்டிக்கான கதையினை முன்பு நான் என் வலைத்தளத்தினில், 2011-இல் என் வலையுலக ஆரம்ப நாட்களில், நான்கு பகுதிகளாகப் பிரித்து வெளியிட்டிருந்தபோது அதிலுள்ள பின்னூட்ட எண்ணிக்கைகள் (என்னுடைய பதில்கள் உள்பட): 69 + 64 + 60 + 83 = 276

  அதற்கான இணைப்புகள் (பகுதி-1 முதல் பகுதி-4 வரை):

  https://gopu1949.blogspot.in/2011/06/1-of-4_19.html

  https://gopu1949.blogspot.in/2011/06/2-of-4_20.html

  https://gopu1949.blogspot.in/2011/06/3-of-4_22.html

  https://gopu1949.blogspot.in/2011/06/4-of-4_26.html

  மேற்படி கதையினை, மீண்டும் தகுந்த படங்களுடன், 2014-ம் ஆண்டு என் வலைத்தளத்தினில் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’க்காக மீள் பதிவாகவும் ஒரே முழு நீள பதிவாகவும் கொடுத்திருந்தபோது கிடைத்துள்ள பின்னூட்டங்களின் எண்ணிக்கை: 52

  அதற்கான புதிய இணைப்பு: https://gopu1949.blogspot.in/2014/03/vgk-10.html

  >>>>>

  ReplyDelete
 6. [ 3 ]

  தங்களின் இந்தப்பதிவினை நான் படித்து மகிழ்ந்ததும், மேற்படி என் இணைப்புகளில் உள்ள 69+64+60+83+52 = 328 பின்னூட்டங்களையும் நான் மீண்டும் ஒருமுறை படித்து ரஸித்து எனக்குள் மிகவும் மகிழ்ந்துகொண்டேன்.

  எத்தனை எத்தனை தோழர்களும், தோழிகளும் எனக்கும், என் எழுத்துக்களுக்கும் ஊக்கமும் உற்சாகமும் அளித்துள்ளார்கள், என்பதை இப்போது காணும்போது மேலும் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. :)

  >>>>>

  ReplyDelete
 7. [ 4 ]

  மேற்படி சிறுகதை விமர்சனப்போட்டியில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றவர்கள் பற்றிய விபரங்கள் + அவர்கள் எழுதி அனுப்பியிருந்த பரிசுக்குத் தேர்வான விமர்சனங்களைப் படிக்க இதோ சில இணைப்புகள்:

  முதல் பரிசுக்குத் தேர்வானவை:
  http://gopu1949.blogspot.in/2014/04/vgk-10-01-04-first-prize-winners.html

  இரண்டாம் பரிசுக்குத் தேர்வானவை:
  http://gopu1949.blogspot.in/2014/04/vgk-10-02-04-second-prize-winners.html

  மூன்றாம் பரிசுக்குத் தேர்வானது:
  http://gopu1949.blogspot.in/2014/04/vgk-10-03-04-third-prize-winner.html

  >>>>>

  ReplyDelete
 8. [ 5 ]

  இந்த என் கதையில் ‘A' என்ற ஓர் ஆண், தன் இளம் வயதில் ‘B' என்ற பெண்ணை தனக்குள் மட்டும் ஒருமுகமாகக் காதலித்து, அவளையே கல்யாணம் செய்துகொள்ள, தன் மனதுக்குள் ஆசைப்படுவார். அவரின் இந்த ஆசையை வெளியில் யாரிடமும் சொல்ல முடியாத சூழ்நிலையிலும், சமூகக் கட்டுப்பாடுகளிலும், அவர் சிக்கித் தவித்ததோர் காலம் அது.

  ‘C' என்ற மற்றொரு பெண், தன் சிறு வயதில், இந்த ‘A' என்பவரை தனக்குள் மட்டும் ஒருமுகமாகக் காதலித்துக்கொண்டு இருப்பாள்.

  இதற்கிடையில் ‘D' என்ற வேறொரு பெண்ணை ‘A' என்பவர் கல்யாணம் செய்துகொள்ள வேண்டிய நிர்பந்தம், குடும்பத்தாரால் (பெற்றோர்களால்) ஏற்படுத்தப்படும். 'A' + 'D' மனம் ஒத்த தம்பதிகளாகவே செளக்யமாக வாழ்ந்து வருவார்கள்.

  'A' விரும்பிய பெண்ணான 'B' and ’A' ஐ விரும்பிய பெண்ணான 'C' ஆகிய இரு பெண்களுக்கும் அடுத்தடுத்து வேறு இரு ஆண்களுடன் திருமணம் நடைபெற்று விடும்.

  'A', 'B' & 'C' ஆகிய மூன்று புதுமண தம்பதிகளுக்கும் பல குழந்தைகள் பிறந்து, பல்லாண்டுகள் ஆனபின் .................

  'A' என்பவர் 'C' ஐத் தனியாகவும், அதே ‘A' என்பவர் 'B' ஐத் தன் மனைவியாகிய ‘D' என்பவளுடனும் பார்க்க நேரிடுகிறது.

  அதுபோன்ற இவர்களின் ஒவ்வொரு சந்திப்புக்களிலும் நிகழ்ந்த சம்பவங்கள் என்ன? என்பதே இந்தக் கதையின் முக்கியமான + மிகவும் சுவாரஸ்யமான விஷயங்களாகும்.

  தங்களது மேற்படி விமர்சனம் இந்த நான் சொல்லியுள்ள முழு விஷயங்களையும் பிரதிபலிக்காமல் இருப்பது போல எனக்குத் தோன்றுகிறது. அதனால் ஒருவேளை தங்கள் விமர்சனம் போட்டியில் பரிசுக்குத் தேர்வாகாமல் இருந்திருக்கலாம் என்பது எனது அபிப்ராயமாகும்.

  தாங்கள் அனுப்பியிருந்த இரு கதைகளுக்கான விமர்சனங்களுமே, இந்தப் போட்டியின் நடுவர் அவர்களால் பரிசுக்குத் தேர்வாகாமல் இருப்பினும், எனக்கு மிகவும் பிடித்தமான வெற்றிக்கதைகளான சிலவற்றிற்கு மட்டும் விமர்சனம் எழுதி அனுப்பியிருந்த அனைவருக்குமே என்னால் (மூன்றாம் பரிசுக்குச் சமமான) போனஸ் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.

  அந்த போனஸ் பரிசு தங்களின் இரு விமர்சனங்களுக்கும் (VGK-03 + VGK-10 ஆகிய இரு கதைகளுக்கும்) கிடைத்ததில் எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. இரு விமர்சனங்களுக்கும் போனஸ் பரிசு பெற்ற தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள் + அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

  >>>>>

  ReplyDelete
 9. [ 6 ]

  இந்த என் சிறுகதை, பத்திரிகை ஆசிரியர் அவர்களால் சற்றே சுருக்கப்பட்டு ’காதலும் கல்யாணமும்’ என்ற தலைப்பினில் 10.03.2010 தேதியிடப்பட்ட ”தேவி” தமிழ் வார இதழில், அச்சில் பிரசுரித்து வெளியிடப்பட்டதாகும்.

  இந்தக்கதையினில் வரும் 80% நிகழ்வுகள் எனக்கு ஏற்பட்ட என் சொந்த அனுபவத்திலும், 20% மட்டுமே என் கற்பனை கலந்தும் எழுதப்பட்டதாகும். அதனால் மட்டுமே இந்தக் கதை அனைவரையும் கவர்ந்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. :))

  இந்தப்பதிவின் மூலம் என் இனிய நினைவலைகளைக் கிளப்பி, இன்று மகிழ்வித்துள்ள தங்களின் பேரன்புக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள் ..... ஐயா.

  அன்புடன் VGK

  ooooooooooooooo

  ReplyDelete
 10. //அதனால் ஒருவேளை தங்கள் விமர்சனம் போட்டியில் பரிசுக்குத் தேர்வாகாமல் இருந்திருக்கலாம் என்பது எனது அபிப்ராயமாகும். //

  அதனால் இல்லை. எதனால்?..

  இதற்கு முன்னிட்ட சுடிதார் கதை பின்னூட்டப் பகுதியில் விவரமாகச் சொல்லியிருக்கிறேன்.

  ReplyDelete
 11. இந்தப் போட்டியில் பரிசு பெற்ற கட்டுரைகளைப் பற்றி இன்னொரு முக்கியமான தகவலையும் இந்த நேரத்தில் சொல்லி விட வேண்டும்.

  முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசுக்கான விமர்சனங்கள் எல்லாம் அவற்றின் விமர்சனச் சிறப்பிற்காக தேர்வானவை என்று அறுதியிட்டுச் சொல்லி விட முடியாது. போட்டிக்கு வந்த விமர்சனங்களில் அவைகள் சிறப்பாக இருந்தன என்று தேர்வாகின என்று சொல்வதே சரி.

  ReplyDelete
 12. ரசிக்கும்படியான விமர்சனம்.

  ReplyDelete
 13. பத்திரிகைகளில் columnist என்று சொல்வார்கள். தமிழ் இளங்கோ அவர்களின் அந்த மாதிரியான எழுத்துக்கு நான் ரசிகன். பல தலைப்புகளில் அவர் எழுதியிருப்பதை வாசித்து வியந்திருக்கிறேன்.

  ReplyDelete
 14. மிக அருமையான விமர்சனம்.. கோபு அண்ணனின் கதை எனில் நகைச்சுவை பின்னியிருக்கும்.

  இதில் இடையில் கொஞ்சம் சோகமும் வருகிறதே:).

  ReplyDelete
 15. மேலே கருத்துரைகள் தந்த,

  நண்பர் நெ.த, ஆசிரியர் தில்லையகத்து V.துளசிதரன், வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலன், மேடம் மனோ சாமிநாதன், நண்பர் வெங்கட் நாகராஜ், ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார், முனைவர் B. ஜம்புலிங்கம், சகோதரி அதிரா மற்றும் மரியாதைக்குரிய எழுத்தாளர் ஜீவி,

  ஆகிய அனைவருக்கும் எனது உளங்கனிந்த நன்றி. இன்னும் தனிப்பட்ட முறையில் என்மீது அன்பு வைத்து அதிக கருத்துரைகள் தந்த மூத்த வலைப்பதிவர் திரு V.G.K அவர்களுக்கும் நன்றி.

  ReplyDelete