Monday 5 February 2018

வேதம் புதிது - கபிலரும் பாரதிராஜாவும்



குறிஞ்சிக்கலி பாடிய சங்ககாலப் புலவர் கபிலர் பாடிய பாடல்களைப் படித்து இருக்கிறேன். ஆனால் இதே கபிலர் என்ற பெயர் கொண்ட மற்றவர்கள் எழுதிய பாடல்களைப் படித்ததில்லை. அண்மையில் ‘கபிலர் அகவல்’ என்ற நூலை இண்டர்நெட்டில் படிக்கும் வாய்ப்பு அமைந்தது இந்த நூலைப் பாடியவர் 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கபிலதேவ நாயனார் எனும் புலவர். தமிழ் இலக்கிய வரலாற்றில் காலந்தோறும் ஒரு கபிலர் இருக்கக் காணலாம். காலப்போக்கில் கபிலர் என்பவர் ஒருவர் போலவே கதை சொல்லும் போக்கு அதிகம் உள்ளது.


கபிலரின் பிறப்பு

கபிலரைப் பற்றிய ஒரு பழைய கதை ஒன்று உண்டு. அந்த கதைப்படி ஒருமுறை ப்ரம்மா எனப்படும் நான்முகன் ஒருமுறை யாகம் ஒன்று செய்கின்றான். அந்த வேள்வியில் இருந்த கும்பத்திலிருந்து கலைமகளும் அடுத்து அகத்தியனும் தோன்றுகிறார்கள். அந்த கலைமகளை நான்முகனே மணந்து கொள்கிறான், 

கலைமகளின் உடன்பிறப்பான அகத்தியன் சமுத்திரக் கன்னியை மணந்து கொள்ள, இவர்கள் இருவருக்கும் பெருஞ்சாகரன் என்ற மகன் பிறக்கிறான். இந்த பிரம்மபுத்திரன் (பெருஞ்சாகரன்) திருவாரூரைச் சேர்ந்த புலைச்சாதிப் பெண் ஒருத்தியை மணந்து கொள்ள, இருவருக்கும் பகவன் என்ற மகன் பிறக்கிறான். 

ஒவ்வொரு ஊராக தலயாத்திரை செல்லும் பகவன் வழியில், உறையூரைச் சேர்ந்த ஆதி என்ற தாழ்த்தப்பட்ட ஜாதி பெண்ணை மணந்து கொண்டு, அவளையும் அழைத்துக் கொண்டு  யாத்திரையை தொடர்கின்றான்.
                                                                                                                                                          
கதைப்படி, ஆதியும் பகவனும், யாத்திரைக்கு இடைஞ்சலாக குழந்தைகள் இருக்கக் கூடாது என்று, தங்களுக்கு பிறந்த ஏழு குழந்தைகளையும் அந்தந்த ஊரிலேயே விட்டுச் செல்கின்றனர். அந்த ஏழு குழந்தைகளையும் வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்த ஏழு பேர் எடுத்து வளர்க்கின்றனர் உப்பை என்ற பெண் குழந்தையை ஊற்றுக் காட்டில் வளர்த்தவர்கள் வண்ணார்:. அவ்வையை எடுத்து வளர்த்தவர்கள் ஒரு பாணர் குடும்பம்.: உறுவை என்ற குழந்தையை எடுத்து வளர்த்தவர்கள் சாணார்: வள்ளி என்ற குழந்தையை வளர்த்தவர்கள் குறவர்கள்: அதிகமான் இல்லத்தில் அதிகமான் என்ற குழந்தை வளர்ந்தது.:கபிலனைக் கண்டெடுத்து வளர்த்தவர் திருவாரூர் வேதியர் குடும்பம். வள்ளுவனை எடுத்து வளர்த்தது தொண்டை மண்டலம் சேர்ந்த மயிலாப்பூர் பறையர் எனப்படுபவர்.

கபிலரின் கேள்வி

திருவாரூர் சிவன் கோயிலில் ஆதி – பகவனால் விட்டுச் செல்லப்பட்ட, அவர்களது  குழந்தையை குழந்தைப் பேறு இல்லாத ஒரு பிராமண தம்பதியினர் எடுத்து, கபிலன் என்று பெயரிட்டு வளர்க்கின்றனர். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய தங்களது வளர்ப்பு மகனுக்கு, தங்கள் குல வழக்கப்படி உபநயனம் செய்ய (பூணூல் அணிவிக்க) ஆசைப்பட்டு, தங்கள் உறவினர்களான, அவ்வூர் வேதியர்களை அணுகுகின்றனர். ஆனால் அவர்களோ, இந்த குழந்தை நமது ஜாதியில் பிறந்தது இல்லை என்று சொல்லி, உபநயனம் செய்து வைக்க மறுக்கின்றனர். இது பற்றி அறிந்த கபிலன், அவர்களிடம் வந்து 

// நான்முகன் படைத்த இவ்வுலகில், ஆண் முந்தியதா, பெண் முந்தியதா அல்லது அலி முந்தியதா? எல்லா பிறப்பும் இயற்கையா அல்லது செயற்கையா? உணவை உண்பது உடலா அல்லது உயிரா? மனிதருக்கு வயது நூறுதான். அதற்கு அதிகம் இல்லை. அதிலும் ஐம்பது ஆண்டுகள் தூக்கம் காரணமாக இரவில் கழிந்து விடுகின்றன. மேலும் குழந்தைப் பருவம் ஐந்து ஆண்டுகளும், இளமைப் பருவம் பதினைந்து ஆண்டுகளும் போக மீதி இருப்பது முப்பதே. இதனுள்ளும் இன்புறும் நாட்களும், துன்புறும் நாட்களும் சிலவே. ஆதலினால்,

ஒன்றே செய்யவும் வேண்டும் அவ்வொன்றும்
நன்றே செய்யவும் வேண்டும் அந்நன்றும்
இன்றே செய்யவும் வேண்டும் அவ்வின்றும்
இன்னே செய்யவும் வேண்டும்
       (கபிலர் அகவல் வரிகள் 29 முதல் 32 முடிய )

என்றெல்லாம் தருக்கம் செய்கிறான்.

மேலும்

”எப்போது கூற்றுவன் வருவான் என்று யாருக்கும் தெரியாது. ஒருவர் இறந்தால் நீங்கள் அழுவது அவருடைய உயிரற்ற, உடலுக்கா அல்லது உடலை விட்டுப் பிரிந்த உயிருக்கா? நீங்கள் இறந்தவர் சார்பாக, அவர் பிள்ளைகள் தரும் உணவை பெற்றுக் கொள்ளும் போது, இறந்தவர் உண்மையிலேயே பசி அடங்கினாரா? உண்மையில் யார் பசி அடங்கியது? மனிதருள் பேதம் உண்டோ?” – என்றெல்லாம் வேதியர்கள் செய்யும் மூட செயல்களையும் கண்டிக்கிறான். அத்தோடு தனது பிறப்பு – வளர்ப்பு பற்றியும் சொல்லுகிறான்.

அருந்தவமாமுனி
            யாம்பகவற்கூழ்
இருந்தவாறிணைமுலை
            ஏந்திழைமடவரல்
ஆதிவயற்றினில்
            அன்றவதரித்த
கான்முளையாகிய
            கபிலனும்யானே
என்னுடன்பிறந்தவர்
            எத்தனைபேரெனில்
ஆண்பான்மூவர்
            பெண்பானால்லர்
யாம்வளர்திறஞ்சிறி
            தியம்புவன்கேண்மின்
ஊற்றுக்காடெனும்
            ஊர்தனிற்றங்கியே
வண்ணாரகந்தனில்
            உப்பைவளர்ந்தனள்
காவிரிப்பூம்பட்டினத்திற்
            கள்விலைஞர்சேரியில்
சான்றாரகந்தனில்
            உறுவைவளர்ந்தனள்
நரப்புக்கருவியோர்
            நண்ணிடுஞ்சேரியில்
பாணரகந்தனில்
            ஒளவைவளர்ந்தனள்
குறவர்கோமான்
            கொய்தினைப்புனஞ்சூழ்
வண்மலைச்சாரலில்
            வள்ளிவளர்ந்தனள்
தொண்டைமண்டலத்தில்
            வண்டமிழ்மயிலையில்
நீளாண்மைக்கொளும்
            வேளாண்மரபுயர்
துள்ளுவரிடத்தில்
            வள்ளுவர்வளர்ந்தனர்
அரும்பார்சோலைச்
            சுரும்பார்வஞ்சி
அதிகமானில்லிடை
            அதிகமான்வளர்ந்தனன்
பாரூர்நீர்நாட்
அந்தணர்வளர்க்க
            யானும்வளர்ந்தேன்
                      ( கபிலர் அகவல் வரிகள் 96 முதல் 118 முடிய )

இது கபிலரே சொல்வதாக அமைந்த “கபிலர் அகவல்’ பாடல் வரிகள்.
பின்னர் அந்த வேதியர்கள், ஒரு வகையாக சமாதானம் அடைந்து  கபிலனுக்கு உபநயனம் செய்து வைக்கிறார்கள்.

பாரதிராஜாவின் வேதம் புதிது


பாரதிராஜா டைரக்ட் செய்து 1987 இல் வெளிவந்த தமிழ் திரைப்படம் வேதம் புதிது (சத்தியராஜ், சரிதா, சாருஹாசன், ராஜா, அமலா ஆகியோர் நடித்த படம். கதை - வசனம் K. கண்ணன்  -  படத்தின் முடிவில்  a film by bharathirajaa என்று காட்டுகிறார்கள்.

மேலே சொன்ன ‘கபிலர் அகவல்’ என்ற நூலைப் படித்து முடித்தவுடன், கூடவே, எனக்கு இந்த வேதம் புதிது திரைப்படமும் இப்போது நினைவுக்கு வந்தது. ஏனெனில், இந்த படத்தில், மேலே சொன்ன, கபிலர் கதையும், இந்த படத்தில் வரும் சங்கரன் என்ற சிறுவனின் கதையும் ஒன்று போலவே இருக்கும். அதிலும் நதிக்கரையில் சத்யராஜ் – வேதியர்கள் தர்க்கம் செய்யும் ஒரு காட்சியைப் பற்றி இங்கு கூறுவது அவசியம்.

தனது தந்தை நீலகண்ட சாஸ்திரியின் (சாருஹாஸன்) மறைவிற்குப் பிறகு, அவரது மகன் சங்கரன் அனாதை ஆகிறான். அவனை யாரும், அவன் பிறந்த சமுதாயமும் ஏற்றுக்கொள்ளாத நிலையில், அவ்வூர் பெரியமனிதர் பாலுத்தேவர் ( சத்யராஜ் ) அவனுக்கு, தன் வீட்டிலேயே புகலிடம் தந்து ஆதரவு தருகிறார். 

சங்கரன் தேவர் குடும்பத்தில் வளர்ந்தாலும், தன் அப்பாவின் குல ஆச்சாரப்படி பூணூல் அணிந்து கொள்ள விரும்புகிறான். ஆற்றங் கரையில் உபநயனம் (பூணூல் போடும் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. அப்போது அங்கே வந்த சிறுவன் சங்கரன்,  உறவினர்களான, அவ்வூர் வேதியர்ர்களிடம் தனக்கும் பூணூல் போட்டு விடும்படி கேட்கிறான். அவர்களோ மறுக்கிறார்கள். அப்போது அங்கே வந்த  பாலுத் தேவருக்கும், அந்த ஊர் வேதியர்களுக்கும் நடக்கும் விவாதம், கபிலர் – வேதியர்களிடம் கேள்வி கேட்ட நிகழ்ச்சியையே நினைவுறுத்தும்.

37 comments:

  1. அன்பின் அண்ணா..
    தங்கள் பதிவின் மூலமாக
    கபிலர் அகவலைப் பற்றித் தெரிந்து கொண்டேன்..

    வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் அவர்களின் கருத்தினுக்கு நன்றி.

      Delete
  2. கபிலர் அகவலைப் படித்தேன். வேதம் புதிது ஏற்கனவே பார்த்திருக்கிறேன்.

    இரண்டும் சொல்லிய கருத்துக்களை யார் மறுக்க இயலும்?

    "மனிதருக்கு வயது நூறுதான். அதற்கு அதிகம் இல்லை" இந்தப் பகுதியின் பாடல் என்ன? திவ்யப்ப்ரபந்தத்தில், 'திருமாலை'யில்,

    "வேதம் நூற் பிராயம் நூறு மனுசர்தாம் புகுவரேலும்
    பாதியும் உறங்கிப் போகும் நின்றதில் பதினையாண்டே
    பேதை பாலகன் அதாகி பிணி பசி மூப்புத் துன்பம்
    ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகருளானே"

    என்று வரும். இதே கருத்தை கபிலரின் பாடல் சொல்கிறதா?

    ReplyDelete
    Replies
    1. நண்பர் நெல்லைத் தமிழன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. தொண்டரடிப் பொடியாழ்வாரின் பாடலின் மேற்கோளுக்கு நன்றி. இருவரது பாடல்களையும் ஒப்பிட்டு நோக்கும்போது, இதே கருத்தைத்தான் கபிலரின் பாடலும் சொல்கிறது. இருவரில் தொண்டரடிப்பொடியாழ்வார் மூத்தவர்.

      விப்ரநாராயணர் எனப்படும் தொண்டரடிப் பொடியாழ்வாரின் வரலாற்றை 'பொன் வட்டில்' என்ற தலைப்பில், ஒரு குறுநாவல் வடிவத்தில் எழுத்தாளர் பாலகுமரன் அவர்கள் எழுதியுள்ளார். படித்துப் பாருங்கள்(நூலின் பெயர் 'பேய்க் கரும்பு')

      Delete
  3. கபிலருக்கும் படம் போட்டுட்டாங்களா? இனி இவர் என் 'சாதி', நினைவுமண்டபம், சிலை என்று ஆரம்பித்துவிடப்போகிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் நெல்லைத் தமிழன் அவர்களின் மறு வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. கபிலரின் படம் என்பது கூகிளில் பழையது. என்னைப் பொருத்த வரையில் கபிலர் ஒரு தமிழ்ப் புலவர்.

      Delete
  4. கபிலர் அகவல் படித்திருக்கேன். பாரதிராஜா படத்தில் அந்தச் சிறுவன் வருவது ஆவணி அவிட்டம் உபாகர்மா செய்து கொள்ள என்று நினைவு! எப்போவோ பார்த்த படம். நினைவில் இல்லை! :) கபிலரை நினைத்து இந்தப் படம் எடுத்திருப்பாங்க என்றும் தோன்றவில்லை. 30 வருடங்கள் முன்னால் வந்த படம். மூலக்கதை வேறே ஒருத்தர்!

    ReplyDelete
    Replies
    1. மேடம் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. நானும் முப்பது வருடங்களுக்கு முன்னர் தியேட்டரில் இந்த படம் பார்த்ததுதான். இப்போது இந்த கட்டுரைக்காக youtube இல் இந்த படத்தைப் பார்த்தேன். படத்தின் கதை - வசனம் K.கண்ணன்.

      Delete
  5. இந்தக் கதை யாவரும் ஒன்றேஎன்னும் நிலைப்பாட்டினை கூறுகிறது இல்லையா /இதைஎல்லாம் ஏற்றுக்கொள்ளும் சமூகம் அந்தக் கட்டுப்பாடுகள்லிருந்து மாறமட்டும் ஏன் தயங்குகிறார்களோ தெரியவில்லை

    ReplyDelete
    Replies
    1. மூத்த வலைப்பதிவர் ஜீ.எம்.பி அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.

      // இந்தக் கதை யாவரும் ஒன்றே என்னும் நிலைப்பாட்டினை கூறுகிறது இல்லையா//

      என்ற தங்களது கருத்தினை அப்படியே வழிமொழிகின்றேன் அய்யா. வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான் இந்தியாவின் உண்மையான ஒருமைப்பாடு ஆகும்.

      Delete
  6. இந்த 'வேதம் புதிது' திரைப்பட ஆரம்ப காட்சிக்கு முன், டைட்டில் போடுவதற்கு முன் பாரதிராஜா 'என் இனிய தமிழ் மக்களே' என்று பேசும் பொழுது திரையில் காட்டப்படும் சில காட்சிகள் நிழலாய் நினைவுக்கு வருகிறது.

    இதே கதை, திரைப்படம் வெளிவருவதற்கு முன் நாடக மேடையையும் சந்தித்திருக்கிறது என்று நினைக்கிறேன். அப்பொழுதே கதாசிரியர் 'வேதம் புதிது' கண்ணணாக அழைக்கப்பட்டார் என்று நினைவு. ஆனந்த விகடனில் 'வேதம் புதிது' நாடகம் பற்றிய விமரிசனம் படித்த நினைவும் கூட.

    இந்த அரைகுறை நினைவுகள் சரியா என்று உங்களுக்கு நினைவிருந்தால் நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. மரியாதைக்குரிய எழுத்தாளர் ஜீவி அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.

      உங்கள் கருத்துரையைப் படித்தவுடன் Youtube இற்கு சென்று பார்த்தேன். படத்தின் தொடக்கத்தில், டைட்டிலில் கதை – வசனம்: K.கண்ணன் என்று காட்டுகிறார்கள். படத்தின் முடிவில் A film by bharathirajaa என்று சொல்லுகிறார்கள். மேலே பதிவிலும் கதை – வசனம்: K.கண்ணன் என்று திருத்தி விட்டேன்.

      நான் வேதம் புதிது திரைப்படத்தை மட்டுமே பார்த்து இருக்கிறேன். இதற்கு முந்தைய நாடக வடிவம் பற்றிய விவரம் எனக்கு தெரியாது. தங்களின் தகவலுக்கு நன்றி.

      Delete
  7. You tube-ல் பாரதிராஜாவின் 'என் இனிய தமிழ் மக்களே' உரை இருந்திருந்தால் ஒழிய நான் நினைப்பதை நிச்சயப்படுத்த முடியாது. தங்கள் பதிலுக்கு நன்றி.

    ஜெயகாந்தன் ஆனந்த விகடனில் 'சுய தரிசனம்' போன்ற முத்திரைக் கதைகளை எழுதி வந்த பாதிப்பில் திரையில் பாரதிராஜாவின் இந்தப் படம் மாதிரியான முயற்சிகள் நடந்திருக்கலாம் என்று கருதுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பான மறு வருகைக்கு நன்றி அய்யா. Youtube இல் பாரதிராஜாவின் 'என் இனிய தமிழ் மக்களே' என்று அழைக்கும் உரை இருக்கிறது.

      Delete
  8. நானும் இப்பொழுது பார்த்தேன். நான் நினைக்கிற காட்சி இல்லை. மன்னிக்கவும். வேறு நினைவில் இதைச் சொல்லியிருப்பேனோ என்னவோ.
    அது பாரதிராஜா படம் தான். புதுமைப்பெண் படமோ?..

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பான மறு வருகைக்கு நன்றி அய்யா.

      Delete
  9. அறியாத பல செய்திகள் அறிந்தேன் ஐயா
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. கரந்தை ஆசிரியர் அவர்களின் சுருக்கமான கருத்துரைக்கு நன்றி.

      Delete
  10. நிறைய கதைகள் ஒன்று போல ஒன்று என்று அமைந்து விடுகின்றன. அந்த வகையில் கபிலர் கதையும் இருந்திருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. நண்பரின் கருத்துரைக்கு நன்றி.

      //நிறைய கதைகள் ஒன்று போல ஒன்று என்று அமைந்து விடுகின்றன //

      அந்த காலத்து கதைசொல்லிகள் வழிவழியாக ஒப்புவித்த கதைகள். அவர்கள் மீது தவறில்லை.

      Delete
  11. வள்ளுவர் சொல்லும் "ஆதி பகவன்" இவர்கள்தானோ? கபிலர் சொல்லும் வரிகளை என்னைப்போல் ஒருவன் பாடலிலும் வரித்துக் கொண்டிருப்பார்கள். "என்றும் ஒன்றே செய்யுங்கள் ; ஒன்றும் நன்றே செய்யுங்கள் ; நன்றும் இன்றே செய்யுங்கள் ; நீங்கள் எதிலும் வெல்லுங்கள்."

    ReplyDelete
    Replies
    1. நண்பர் ஶ்ரீராமின் மறு வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. எப்படியோ எல்லோரும் நன்றே செய்தால் நல்லது தான்.

      Delete
  12. பாரதிராஜா வேதம் புதிது படைத்தது போலவே பாக்யராஜும் ஒரு புரட்சிப்படைப்பு வெளியிட்டார். அதில் இருளை அகற்ற ஒரு மெழுகுவர்த்தியாவது ஏற்றுங்கள் என்று அண்ணா சொன்னதை நினைவுபடுத்தி, அப்படி அந்தப் படத்தை எடுத்திருப்பதாய் டைட்டில்கார்டில் சொல்வார்.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே பாக்கியராஜ் சாரின் படத்தின் பெயரைச் சொன்னால் எனக்கு ஒருவேளை புரியும் என்று நினைக்கிறேன்.

      Delete
    2. ஸ்ரீராம் சொல்வது, 'இது நம்ம ஆளு' படம். இதில் பாக்கியராஜ் நடித்தார். ஆனால் பாலகுமாரன்-எழுத்தாளர் இயக்கினார் என்று நினைக்கிறேன். ஒருவேளை, படத்துக்குப் பிரச்சனை உண்டாயிரக்கூடாது என்பதற்காக டம்மியாக வசனம் எழுதிய பாலகுமாரன் பெயரை, டைரக்டராகவும் போட்டுவிட்டார்களா என்பது என் சந்தேகம்.

      Delete
    3. நண்பர் நெல்லைத் தமிழன் அவர்களின் தகவலுக்கு நன்றி. இது நம்ம ஆளு - திரைப்படத்தை டீவியில் பார்த்து இருக்கிறேன்.

      Delete
  13. ‘ஒன்றே செய்க. நன்றே செய்க. அதுவும் இன்றே செய்க’ என்ற சொல்லாடல் கபிலர் அகவல் வரிகளிலிருந்து எடுத்தாளப்பட்டிருக்கிறது என்ற தகவலை தங்கள் பதிவு மூலம் தெரிந்துகொண்டேன். மேலும் கபிலர் கதை மூலம் அவரது உடன் பிறந்தோர் யார் யார் என்பதையும் அவர்கள் யாரால் வளர்க்கப்பட்டனர் என்ற தகவல்களையும் அறிந்துகொள்ள உதவியமைக்கு நன்றி!


    கபிலரின் தர்க்கத்தை நினைவூட்டும், வேதம் புதிது திரைப்படத்தின் தர்க்க காட்சியையும் நினைவூட்டியமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. மரியாதைக்குரிய V.N.S அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      // ‘ஒன்றே செய்க. நன்றே செய்க. அதுவும் இன்றே செய்க’ என்ற சொல்லாடல் கபிலர் அகவல் வரிகளிலிருந்து எடுத்தாளப்பட்டிருக்கிறது என்ற தகவலை தங்கள் பதிவு மூலம் தெரிந்துகொண்டேன். //

      எனக்கும் இந்த தகவல், இந்த அகவலைப் படித்ததற்குப் பிறகுதான் தெரியும். இதற்கு முன்னரெல்லாம் இந்த சொல்லாடலை, தமிழ் பாக்கெட் டைரிகளிலும், தமிழ் பொன்மொழி காலண்டர்களிலும் படிக்கும் போதெல்லாம், யாரோ எழுதியது என்றே இருந்தேன்.



      Delete
  14. அழகாக நிறையச் சொல்லியிருக்கிறீங்க...

    வேதம் புதிது படம் பார்க்கோணும் என நினைப்பேன், இன்னும் பார்க்கவில்லை.

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களுக்கு நன்றி.

      // வேதம் புதிது படம் பார்க்கோணும் என நினைப்பேன், இன்னும் பார்க்கவில்லை //

      நான் இந்த படத்தை முதலில் தியேட்டரிலும், அப்புறம் youtube இலும் பார்த்தேன். நீங்களும் youtube பக்கம் செல்லலாம்.

      Delete
  15. கபிலர் பற்றி பல அரிய செய்திகள். பாரதிராஜாவின் வேதம் புதிது வசனம் இங்கிருந்தே கிடைத்துள்ளது என்பது உபரி தகவல். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அன்பரின் கருத்துரைக்கு நன்றி. இந்த படத்திற்கு கதை - வசனம் எழுதியவர் K. கண்ணன். இந்த கபிலர் அகவலை வைத்துத்தான் இந்த வேதம் புதிது படத்திற்கான கதை உருவானதாக சொல்ல முடியாது.

      Delete
  16. வேதம் புதிது ஒரு அருமையான படம்! ஒரு தேர்ந்த சிற்பி பார்த்து பார்த்து சிலையை வடிப்பது போல் ஒவ்வொரு காட்சியையும் செதுக்கியிருப்பார் பாரதிராஜா. பின்னூட்டங்கள் கபிலரை விட்டு விட்டு வேதம் புதிது பக்கம் சாய்ந்து விட்டதோ..?! அறியாத புதிய தகவல்களை தந்ததற்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துரைக்கு நன்றி மேடம்.

      Delete
  17. மூத்த வலைப்பதிவர் திரு V.G.K. (வை.கோபால கிருஷ்ணன்) அவர்கள், இந்த பதிவு சம்பந்தமான தனது கருத்துரைகளை மின்னஞ்சல் வழியே, 05.02.18 மற்றும் 11.02.18 தேதிகளில் அனுப்பி வைத்துள்ளார்.

    Gopalakrishnan Vai. Feb 5

    கபிலரும் மஹாவிஷ்ணுவின் ஓர் அவதாரம் என்றும், அவர் பிறக்கும்போதே, ஆத்ம ஞானம் அடைந்த, மிகப்பெரிய ஞானியாகவே பிறந்தவர் என்றும் நான், நொச்சூர் ப்ரும்மஸ்ரீ வெங்கடராமன் என்பவர் சொல்லியுள்ள, ஸ்ரீமத் பாகவத உபன்யாசத்தில் கேள்விப்பட்டுள்ளேன்.

    கபிலருக்கு தலையெல்லாம் செம்பட்டையாக FOREIGNER LOOK இருக்குமாம்.
    இன்றுள்ள கலிஃபோர்னியா நாட்டில் கபிலரின் வாழ்க்கை வரலாறு பற்றிச் சொல்லக்கூடிய பல்வேறு ஆதாரங்கள், இப்போதும் உள்ளதாக காஞ்சி ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவர் அவர்கள் ஆராய்ந்து சொல்லியிருப்பதாகவும், அந்த உபன்யாசகர் சொல்லியுள்ளார்.

    மேலும் அந்த உபன்யாசகர் சொல்லியுள்ள தகவல்கள்:

    ஆண் பெண் என்ற பேதங்களுடன், உலகில் சிருஷ்டி ஆரம்பித்த உடனே முதலில் பிறந்தவர்கள் மனுவும், சதரூபாவும். இவர்களுக்குப் பிறந்த பல குழந்தைகளில் ஒருத்தியின் பெயர்: தேவஹூதி. இந்த தேவஹூதிக்கும், கர்த்தமப் ப்ரஜாபதி என்பவருக்கும், மஹாவிஷ்ணு ‘கபிலர்’ என்ற பெயரில் அவதாரம் எடுத்துள்ளார்.
    தெய்வ ஸ்வரூபமாக ’கபிலர்’ என்ற குழந்தை பிறந்ததுமே அதன் பெற்றோர்கள் இருவரும் அதனைக் காலில் விழுந்து கும்பிட, அந்தக் குழந்தையும் அவர்களைத் தன் கை தூக்கி ஆசீர்வதித்து, பல்வேறு ஞான உபதேசங்கள் செய்து, ஆத்ம ஞானத்தை ஊட்டியதாம்.

    இவையெல்லாம் அந்த ஸ்ரீமத் பாகவத உபன்யாசம் செய்த நொச்சூர் ப்ரும்மஸ்ரீ வெங்கடராமன் என்பவர் சொன்னவை மட்டுமே.

    Gopalakrishnan Vai. Feb 11

    ஒருவேளை, தாங்கள் சொல்லியுள்ள இந்தக் கபிலர் வேறாகவும், நான் அந்த உபந்யாசத்தில் கேள்விப்பட்டுள்ள, அந்தப் புராணக்கதையில் வரும் கபிலர் வேறாகவும் இருக்கக்கூடும்.

    அன்புடன் VGK


    ReplyDelete
    Replies
    1. மூத்த வலைப்பதிவர் திரு V.G.K. (வை.கோபால கிருஷ்ணன்) அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  18. இன்றைய பகுத்தறிவாளர்களின் கருத்துக்கும் கபிலர் அகவலில் வரும் கருத்துக்கும் வேற்றுமையே இல்லை. காலத்திற்க்கு ஒரு பெரியார் இருந்திருப்பார் போல...

    ReplyDelete