Monday, 2 October 2017

முத்தன் பள்ளம் – நூல் வெளியீட்டு விழா



இலக்கியக் கூட்டங்களுக்கு, நான் சென்று கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களுக்கும் மேலாகி விட்டது. காரணம் அப்பாவின் உடல்நிலை, அவரது மறைவு மற்றும் எனது உடல்நிலை ஆகியவைதான். இப்போது சூழ்நிலை பழைய நிலைமைக்கு திரும்பிக் கொண்டு இருப்பதால், இனி வெளியூர் கூட்டங்களுக்கு சென்று வரலாம் என்று நினைத்த போது கந்தர்வகோட்டையில் இன்று (02.10.2017 – திங்கள்) நடைபெற்ற, தோழர் ஆசிரியர் அண்டனூர் சுரா எழுதிய ”முத்தன் பள்ளம்” நூல் வெளியீட்டு விழாவிற்கு அழைப்பிதழ் வந்தது.

அழைப்பிதழ்:

ஒரு வாரத்திற்கு முன்பேயே இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை, வாட்ஸ்அப்பில் எனது மாமா மகன் தோழர் K. அம்பிகாபதி ( ஒன்றிய துணைச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, கந்தர்வகோட்டை) அவர்கள் அனுப்பி வைத்து வரச் சொல்லி இருந்தார்.


ஃபேஸ்புக் நண்பர் தோழர் ஆசிரியர் அண்டனூர் சுரா அவர்களும், பொதுவில் தனது அழைப்பை ஃபேஸ்புக்கில் சொல்லி இருந்தார்.

விழாவிற்கு சென்றேன்:

திருச்சியிலிருந்து இன்று காலை எட்டுமணிக்கு புறப்பட்டு, தஞ்சாவூர் பஸ் மார்க்கத்தில் செங்கிப்பட்டியில் இறங்கி, அங்கிருந்து கந்தர்வகோட்டைக்கு சென்று, நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்திற்கு சரியான நேரத்தில் சென்று விட்டேன்.

(படம் - மேலே) புத்தக வெளியீட்டு விழா நடைபெற்ற பாரத் திருமண மண்டபம். 

(படம் - மேலே) அங்கே இருந்த எனக்கு பழக்கமான ஆசிரியர்கள் கவிஞர் சோலச்சி மற்றும் திருப்பதி ஆகியோருடன் படம் எடுத்துக் கொண்டேன்.

(படங்கள் - மேலே) கூட்டம் துவங்குவதற்கு முன்

நூல் வெளியீடு:

(படம் - மேலே) பெரியவர் தோழர் R. நல்லக்கண்ணு அவர்கள் நூலை வெளியிட்டார்.

நூல் வெளியிட்டதும், நூல் விமர்சனம் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டு இருந்த இலக்கிய ஆர்வலர்கள், நூல் விமர்சனம் செய்யும்போது நிறையவே நேரம் எடுத்துக் கொண்டார்கள்.

இறுதியாக 91 வயது இளைஞர் தோழர் R. நல்லக்கண்ணு அவர்கள் தனக்கே உரிய இயல்பான நடையில் சிறப்புரை ஆற்றினார். அவ்வுரையில் முத்தன் பள்ளம் பற்றிய தனது கருத்துரையையும், தமிழ்நாட்டில் ஒருவரது ஜாதியை வைத்துதான் எதனையும் பார்க்கிறார்கள்; இந்த போக்கு மாற வேண்டும் என்ற தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்.

( கூட்டம் முடிந்ததும் உடனே நண்பர்களிடம் விடை பெற்றுக் கொண்டு, வெளியில் மெயின் ரோட்டில் உள்ள ஒரு எளிமையான ஹோட்டலில் சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டு இருந்தேன். சற்று நேரத்தில் அதே ஹோட்டலுக்கு தோழர் R. நல்லக்கண்ணு அவர்களும் அவரது கட்சி தோழர்களும் அங்கே சாப்பிட வந்தார்கள். இந்த எளிமையை வேறு எந்த அரசியல்வதியிடமும் காண முடியாது ) 

(படம் - மேலே) நிகழ்ச்சிகள் முடியும் தறுவாயில் நானும் எனது உறவினரும்.

(கீழே உள்ள படங்கள் திரு துவாரகா சாமிநாதன் அவர்கள் தனது ஃபேஸ்புக்கில் வெளியிட்டவை. அவருக்கு நன்றி)


நூல் பற்றி:

நான் இனிமேல்தான் இந்த நூலைப் படிக்க வேண்டும். படித்து முடித்த பின்பு நூல்விமர்சனம் ஒன்றை எழுதலாம் என்று இருக்கிறேன்.

நூலின் பெயர்: முத்தன் பள்ளம்  / வகை: நாவல்
ஆசிரியர்:  அண்டனூர் சுரா
நூலின் விலை: ரூ 150  பக்கங்கள்: 212
பதிப்பகம்: மேன்மை வெளியீடு, 5/2 பெர்தோ தெரு, இராயப்பேட்டை, வி.எம்.தெரு,(கில் ஆதர்ஷ் பள்ளி அருகில்) சென்னை 600014 தொலைபேசி: 044 2847 2058

30 comments:

  1. வங்கி பணியில் இருந்தபோது AIBEA அமைப்பில் உறுப்பினராக இருந்தீர்கள் போலிருக்கே !வலது கம்யூனிஸ்ட்டின் த க இ பெ விழாவில் வெளியிடப் பட்டுள்ள 'முத்தன் பள்ளம் 'நூல் பற்றிய தங்களின் விமர்சனத்தை ஆவலோடு எதிர்பார்த்துள்ளேன் :)

    ReplyDelete
    Replies
    1. நண்பர் பகவான்ஜீ அவர்களின் அன்பான வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. நான் பள்ளி மாணவனாக இருந்த காலத்திலிருந்து, நூல் வாசிப்பில் ஆர்வம் உள்ளவன் என்ற வகையில், எனக்கு N.C.B.H எனப்படும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் – திருச்சி கிளையோடு எனக்கு நல்ல தொடர்பு. அதில் பணிபுரிந்த பழைய தோழர்கள் பலருக்கும் என்னைத் தெரியும். எனவே அந்த வகையில் கம்யூனிசத்திலும் எனக்கு ஆர்வம் உண்டு. இதுபற்றிய எனது பதிவும் உண்டு. மற்றபடி அந்த கட்சியில் நான் உறுப்பினர் இல்லை. இப்போதும் எனக்கென்று எந்த கட்சியின் அடையாளமும் கிடையாது.

      நான் பணிபுரிந்த காலத்தில் AIBEA இல் நான் உறுப்பினராக இல்லை. காரணம் அப்போது அதில் அதிகம் உறுப்பினர்கள் இல்லை.

      Delete
    2. ஒன்றுபட்ட ரஷ்யா இருந்தபோது NCBH அதிக செல்வாக்குடன் இருந்தது !

      ஆரம்பத்தில் AIBEA செல்வாக்குடன் இருந்தது ,இடதுகம்யூனிஸ்ட் சார்பு BEFI வரும் வரை,அப்படித்தானே ஜி :)

      Delete
    3. நண்பர் பகவான்ஜீ அவர்களின் மீள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. NCBH, AIBEA, BEFI என்று நிறையவே எழுதலாம்.

      Delete
  2. விழாவில் தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி...

    ReplyDelete
    Replies
    1. கவிஞருக்கு நன்றி. அன்று கந்தர்வகோட்டையில், உங்களை சந்தித்தபோது பேச நேரம் இல்லாமல் போய்விட்டது. எனவே விழா நிகழ்ச்சி முடிந்ததும் உங்களோடு பேசுவதற்காக உங்களைத் தேடினேன்.

      Delete
  3. எளிமைதானே கம்யூனிஸ்டுகளின் பலம்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. எல்லோரும் பெரியவர் - தோழர் R. நல்லக்கண்ணு போன்றே எளிமையானவர்களா என்று எனக்கு தெரியாது.

      Delete
  4. நூலாசிரியருக்கு வாழ்த்துகள். பகிர்ந்த உங்களுக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி.

      Delete
  5. நல்லக்கண்ணு ஐயாவின் எளிமையே எளிமை
    படங்கள் அருமை ஐயா
    நன்றி
    தம+1

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியரின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  6. விழாவில் நேரில் கலந்துகொண்டது போலிருந்தது பதிவு. நூலாசிரியருக்கு வாழ்த்துகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி. எளிமை, பொறுமை, நிதானம், பரிவு போன்ற பல அருங்குணங்களைக் கொண்ட நல்லக்கண்ணு ஐயாவைப் பற்றிய உங்களது கருத்து அனைவரும் ஏற்கத்தக்கதே.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நல்லக்கண்ணு அய்யாவை முதன் முதலாக இந்த நிகழ்ச்சியில்தான் நேரில் பார்த்தேன். இன்னும் அவரது எளிமையான வாழ்க்கை பற்றிய தகவல்களை நான் படிக்க வேண்டும்.

      Delete
  7. சிகப்பு துண்டைப் பார்த்ததும் பல நினைவுகள் வந்து போகுது.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் ஜோதிஜி திருப்பூர் அவர்களின் கருத்தினுக்கு நன்றி. ” சிகப்பு துண்டைப் பார்த்ததும் பல நினைவுகள் வந்து போகுது “ என்ற உங்களது ஒற்றை வரியே ஆயிரம் செய்திகளைச் சொல்லும். திருப்பூர் தொழிலாளர்களோடு நல்லுறவு வைத்திருக்கும் உங்களுக்கு சிகப்பு தோழமையாகத்தான் இருக்க வாய்ப்புகள் அதிகம். ஆனால் சிலருக்கு சிகப்பு கண்ணில் பட்டாலே எரிச்சல்தான்.

      Delete
  8. நல்ல பகிர்வு. நன்றிங்க அய்யா. நாவலை வாசித்து விரிவாக எழுதுங்கள். நன்றி....

    ReplyDelete
    Replies
    1. இந்த விழாவுக்கு நாயகன் ஆன, 'முத்தன் பள்ளம்’ நூலாசிரியர், ஆசிரியர்
      அண்டனூர் சுரா அவர்களுக்கு நன்றி. உங்களுடைய இந்த நூல் வெளியீட்டு விழா மூலம், பெரியவர் தோழர் அய்யாக்கண்ணு அவர்களை நேரில் காணவும் அவருடைய பேச்சைக் கேட்கவும் எனக்கு சந்தர்ப்பம் அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி.

      Delete
  9. நூலாசிரியர்க்கு வாழ்த்துக்கள்... நூல் அறிமுகத்திற்கும் நிகழ்வைப் பற்றிய தொகுப்பிற்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள்....

    துளசி, கீதா

    ReplyDelete
    Replies
    1. நண்பர்கள் இருவருக்கும் நன்றி.

      Delete
  10. நல்ல நிகழ்வை பதிவில் ‘படம் பிடித்து’ காண்பித்தமைக்கு நன்றி! தோழர் நல்லக்கணு அவர்களின் எளிமை பற்றி சொல்லியா தெரியவேண்டும். ‘முத்தன் பள்ளம்’ நூல் பற்றிய தங்களின் திறனாய்வை படிக்க காத்திருக்கிறேன்! நூலாசிரியருக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. மூத்த வலைப்பதிவர் அய்யா V.N.S அவர்களுக்கு நன்றி.

      Delete
  11. எனது மின்னூல்களும் உங்கள் விமரிசனத்துக்குக் காத்திருக்கின்றன

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள மூத்த வலைப்பதிவர் அய்யா G.M.B. அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. நீங்கள் எனக்கு அன்பளிப்பாக தந்த உங்களுடைய மின்னூலை படிக்கும் ஆர்வத்தில்தான் இருக்கிறேன். இதுவே அச்சு நூலாகவோ அல்லது பொதுவெளியில் கிடைக்கும் இலவச மின்னூலாகவோ இருந்திருந்தால் இந்நேரம் படித்து முடித்து இருப்பேன். உங்கள் மின்னூல் விஷயமாக நான் திரு வெங்கட் அவர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலையும் ( தேதி: 08.08.17 ) அன்றே எனக்கு அவர் அனுப்பிய மின்னஞ்சலையும் கீழே குறிப்பிட்டுள்ளேன்.

      நான் அனுப்பிய மின்னஞ்சல்: (08.08.17)

      அன்புள்ள நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு வணக்கம். நலம். நலனறிய ஆவல். மூத்த வலைப்பதிவர் G.M.B அவர்கள், தான் எழுதிய, ’ நினைவில் நீ ‘ என்னும் நாவலை மின்னூலாக புஸ்தகா மூலம் வெளியிட்டதை அன்பளிப்பாக தருகிறேன் படித்துப் பாருங்கள் என்று மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி இருந்தார். அவ்வாறே அந்த மின்னூல் புத்தக பதிப்பகத்தாரும், எனக்கு மின்னஞ்சல் அனுப்பி இருந்தனர். அவர்கள் சொன்னபடி அவர்களுடைய Bookself சென்று அந்த மின்நூலை க்ளிக் செய்தேன்; ஆனால் அந்த மின்நூலை பிரித்துப் பார்க்க இயலவில்லை. தங்களுக்கும் அவர் இதுபோல் ஒரு மின்நூலை அனுப்பி நீங்களும் நூல் விமர்சனம் செய்து இருப்பதால், இது பற்றிய பற்றிய உங்கள் உதவியை, என்ன செய்ய வேண்டும் என்பதனை தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். – இப்படிக்கு அன்புள்ள தி.தமிழ் இளங்கோ – நாள்: 08.08.17

      xxxxx

      திரு.வெங்கட் அவர்கள் எனக்கு அனுப்பிய பதில் மின்னஞ்சல்: (08.08.17)

      அன்பின் ஐயா, வணக்கம்.
      முதலில் www.pustaka.co.in தளத்தில் நீங்கள் உங்கள் கணக்கைத் துவங்க வேண்டும்.
      Login என்பதை க்ளிக் செய்தால், வருகின்ற பக்கத்தில் Register செய்து கொள்ளுங்கள்.
      பிறகு Login செய்து உள்ளே நுழைந்தால், உங்கள் கணக்கில் சில Menu வரும். அங்கே இருக்கும் Book Shelf Click செய்தால், Author Gifted Books என்ற Tab வரும். அதில் உங்களுக்கு ஆசிரியர்கள் அன்பளிப்பாக அளித்த புத்தகம் இருக்கும். அதை Click செய்து படிக்க முடியும்.
      மொபைல் மூலம் பார்க்கும்போது இந்த Tab தெரியாது. கணினி மூலம் மட்டுமே அன்பளிப்பாகக் கிடைத்த புத்தகங்கள் படிக்க முடியும்.
      இன்னும் விவரம் வேண்டுமெனில் கேளுங்கள்.
      நட்புடன்
      வெங்கட்
      புது தில்லி.

      Xxxxx

      மேலே நண்பர் திரு வெங்கட் அவர்கள் சொன்னதைப் போல, www.pustaka.co.in தளம் சென்று, எனது பெயரை பதிவு செய்தபோது, என்ன காரணத்தினாலோ, நான் பயன்படுத்தும் Firefox இல் பலமுறை முயன்றும் என்னால் செயல்படுத்த முடியவில்லை. இதுதான் காரணம்.

      Delete
  12. பலமுறை வந்தும் ஓட்டு விழுந்து விட்டதாக பொய் சொல்லுகிறது நண்பரே

    ReplyDelete
    Replies
    1. நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கு, எனக்கும் காரணம் புரியவில்லை. சில மாதங்களாகவே தமிழ்மணம் ஓட்டுப் பட்டையில் மட்டுமல்லது, அந்த தளத்திலும் ஏதோ பிரச்சினை. சிலசமயம் தமிழ்மணத்திலுள்ள இடுகைகளை க்ளிக் செய்தால், Domain Server Error என்று வருகிறது.

      Delete
  13. என்றுமே எளிமையானவர் நல்லக்கண்ணு த ம 8

    ReplyDelete
    Replies
    1. புலவர் அய்யாவின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  14. தோழர் நல்லக்கண்ணு அவர்களைப் பற்றிப் படிக்கையில் நெகிழ்வாக இருந்தது. அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டீர்களோ? ஒரு மனிதன் தன்னுடைய கொள்கைதான் தன்னுடைய வாழ்க்கை என்று இருக்க முடியுமா? 60 வயதானாலே, நான் ரிடையர்டு, ரெஸ்ட் எடுக்கணும்னு நினைக்கிற உலகத்தில் தோழர் நல்லக்கண்ணு வித்தியாசமானவர், பெரிய பாராட்டுதலுக்கு உரியவர்.

    பகிர்ந்த உங்களைப் பாராட்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் நெல்லைத்தமிழன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. பெரியவர் தோழர் R. நல்லக்கண்ணு அவர்களுடன் படம் எடுத்துக் கொள்ளும்படியான சந்தர்ப்பம் அன்று அமையவில்லை.

      Delete