Monday 9 January 2017

பத்து ரூபாய் நாணயம்



செல்போனில் சமூக வலைத் தளங்கள், வந்தாலும் வந்தன வதந்திகள் தான் வேகமாக பரவுகின்றன. போகிற போக்கில் யாராவது எதையாவது கிளப்பி விடுகிறார்கள்; அது உண்மையா பொய்யா என்று கூட தெரியாமல் பலரும் பகிர்ந்து கொள்கின்றனர். ஒரு பொய்யை திரும்பத் திரும்ப கூறும்போது அந்த பொய், மெய் போலவே ஆகி விடுகிறது. அந்த வகையில் இப்போது நம்நாட்டில் ’பத்து ரூபாய் நாணயம்’ செல்லாது என்ற வதந்தியினால் படாத பாடு பட்டுக் கொண்டு இருக்கிறது. 

பஸ்சில் கடைகளில்:

ஒவ்வொரு பஸ்சிலும் நடத்துநர்களின் இப்போதைய புலம்பல் என்பது இதுதான்.

“ சார், யாரைப் பார்த்தாலும் பத்து ரூபாய் நாணயம் செல்லாது என்று வாங்க மாட்டேன் என்கிறார்கள். டெப்போவில் எங்களுக்கு சில்லறை தரும்போது, பத்து ரூபாய் நாணயங்களைத் தந்து விட்டு, நீங்கள் வாங்காதீர்கள் என்று சொல்லுகிறார்கள்” 

ஒருநாள் பஸ்சில் பயணம் செய்யும் போது, ஒரு பெண்மணியிடம் சில்லரை இல்லாத படியினால், நடத்துநர், ஒரு பத்து ரூபாய் நாணயத்தை எப்படியோ கொடுத்து விட்டார்; அந்த அம்மா புலம்பிக் கொண்டே இருந்தார். இரக்கப்பட்ட பயணிகளில் ஒருவர், பத்து ரூபாய் தாள் ஒன்றைக் கொடுத்து அதனை வாங்கிக் கொண்டார்.

ஒருமுறை ஒரு டீக் கடையில், ஒருவர் கொடுத்த பத்து ரூபாய் நாணயத்தை வாங்கிய கடைக்காரர் அதில் உள்ள கோடுகளை எண்ணிப் பார்த்து வாங்கிக் கொண்டார். அதாவது 10 கோடுகள் இருந்தால் நல்ல நாணயமாம்; 15 கோடுகள் இருந்தால் கள்ள நாணயமாம்; (இது தவறு) 

வங்கிகளில் ஏன் வாங்குவதில்லை?

அண்மையில் ஒரு செய்தியைப் படித்தேன்

// இதுதொடர்பாக வணிகர்களி டம் கேட்டபோது, "நாணயங்களைப் பராமரிப்பது மிக கடினம். ரூபாய் தாள்களாக இருந்தால் கவுண்டிங் மெஷினில் வைத்து சுலபமாக கணக்கிட முடியும். ஆனால், நாணயங்களை அப்படி கணக்கிட முடியாது. மேலும், இந்த நாணயங்களை, வங்கி அதிகாரிகள் வாங்க மறுப்பதால் வேறு வழியில்லாமல் நாங்களும் வாங்குவதில்லை" என்றனர்.// 

( நன்றி: தி இந்து (தமிழ்) தேதி டிசம்பர்,30,2016)

இங்கே இந்த வியாபாரிகள், தங்கள் சவுகரியத்திற்காக யார் மீது பழி போடுகிறார்கள் என்று பாருங்கள். ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா வெளியிட்ட நாணயங்களை புழக்கத்தில் விடுவதுதான் வங்கிகளின் பணி. வங்கி வாடிக்கையாளர்கள் அந்த நாணயங்களை, மீண்டும் கணக்கில் கட்டினாலும், மீண்டும் புழக்கத்தில் விட வேண்டும். அதிக நாணயங்களை வங்கியில் இருப்பு வைத்து இருந்தால், ஏன் புழக்கத்தில் விடவில்லை என்ற கேள்வி வரும். செல்லாது என்று அறிவிக்கப்பட்டால் மட்டுமே வங்கிகளில் திரும்பப் பெற்றுக் கொள்ளுதல் என்பது பொருந்தும்.. ஆனால் யாரோ கிளப்பிய வதந்திக்கு அதிகாரப் பூர்வமான நாணயங்களை திரும்பப் பெற்றுக் கொள்ளூதல் என்பது நாணயப் புழக்கத்திற்கு தீர்வாகாது.

பத்து ரூபாய் நாணயம் செல்லும்

சம்பந்தபட்ட அதிகாரிகள் பத்து ரூபாய் நாணயம் செல்லும் என்று அறிவித்த பிறகும் வாங்க மறுக்கிறார்கள். ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும், ஐம்பது பைசா நாணயங்களை வாங்க மறுக்கும் நிலையில், கூடுதலாக இந்த பிரச்சினை

இது பற்றி இணைய தளங்களில் தேடியபோது, 10 ரூபாய் நாணயம் வெளியான அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப, அது வெவ்வேறு வடிவங்களில் வெளியிடப்பட்டது தெரிய வருகிறது.

(படம் மேலே) 1969 இல் வெளியிடப்பட்டது.

(படம் மேலே) 1970 இல் வெளியிடப்பட்டது.

(படம் மேலே) 1972 இல் வெளியிடப்பட்டது.

(படம் மேலே) 2005 இல் வெளியிடப்பட்டது.

(படம் மேலே) 2006 இல் வெளியிடப்பட்டது.

(படம் மேலே) 2008 இல் வெளியிடப்பட்டது.

(படம் மேலே) 2009 இல் வெளியிடப்பட்டது. 

(படம் மேலே) 2010 இல் வெளியிடப்பட்டவை.

(படம் மேலே) 2011 இல் வெளியிடப்பட்டது. 

(படம் மேலே) 2012 இல் வெளியிடப்பட்டவை 

(படம் மேலே) 2014 இல் வெளியிடப்பட்டது. 

(படம் மேலே) 2015 இல் வெளியிடப்பட்டவை

                                     (ALL  PICTURES COURTESY: GOOGLE IMAGES)

35 comments:

  1. பல்வேறு ஆண்டுகளில் வெளியிடப்பட்டுள்ள 10 ரூபாய் நாணயங்களை அழகாகக் காட்டி அசத்தியுள்ளீர்கள்.

    இதில் 1972-இல் வெளியிடப்பட்டுள்ளது பெரிய சைஸ் நாணயமாகும். என் வீட்டில்கூட ஒன்று இருந்தது. தேடினால் எங்காவது கிடைக்கக் கூடும். அது பற்றிகூட என் பதிவு ஒன்றினில் காட்டியுள்ளேன்.

    http://gopu1949.blogspot.in/2013/03/4.html

    அரசாங்கம் வெளியிட்டுள்ள நாணயத்தை ஒருவருக்கொருவர் கொடுத்து வாங்கிக் கொள்ளமல் இருப்பது நாணயமான செயலே அல்ல.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள மூத்த வலைப்பதிவர் V.G.K அவர்களுக்கு வணக்கமும் நன்றியும்.. நீங்கள் இங்கு சுட்டிய உங்களுடைய பழைய பதிவினை மீண்டும் படித்தேன். அதில் இரண்டாவது முறையாக இன்று நான் எழுதிய பின்னூட்டம் இது.

      // மூத்த வலைப்பதிவர் V.G.K அவர்களுக்கு வணக்கம். என்னுடைய வலைப்பதிவிற்கான, ஒரு பின்னூட்டம் மூலம் மீண்டும் இங்கே வந்து இந்த பதிவை மீண்டும் படித்ததில் மிக்க மகிழ்ச்சி. அந்நாளைய முன்னணி வலைப்பதிவர்கள் பலரது பின்னூட்டங்களை மீண்டும் படித்தபோது, வலைப்பக்கம் அப்போதுதான் வந்து சேர்ந்த எனது நினைவுகளும் வந்தன. நானும் பின்னூட்டம் ஒன்றை அப்போது எழுதி இருக்கிறேன். ஆன்மீகப் பதிவர் இராஜராஜேஸ்வரி அவர்களின் ஒன்றுக்கு மேற்பட்ட பின்னூட்டங்களைப் படித்தபோது மனதில் ஒரு நெருடல்.//

      மேற்படி உங்களுடைய பதிவினில் நீங்கள் சுட்டிக் காட்டிய 10 ரூபாய் நாணயங்களை நான் பார்த்தும், பரிவர்த்தனைக்காக செலவும் செய்து இருக்கிறேன்.

      Delete
  2. இப்படி அவ்வப்போது எதையாவது கிளப்பி விட்டு இருக்கும் பிரச்சனை போதாது என அதிகம் பிரச்சனைகளை உருவாக்கி விடுகிறார்கள். தலைநகரில் கூட இப்படி சில வதந்திகள்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  3. மேற்படி பத்து ரூபாய் நாணயங்களைக் கொடுத்தால் கூடுதலாகப் பத்து பைசா வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவிக்கலாமே! ஒரே நாளில் வெளியிட்ட அத்தனை நாணயங்களும் வங்கிகளுக்கு வந்துசேருமே! மக்களை ஏன் தொடர்ந்து சிரமபடுத்தவேண்டும்? - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

    ReplyDelete
    Replies
    1. மூத்த வலைப்பதிவர் அய்யா Y.செல்லப்பா அவர்களின் நகைச்சுவையான கருத்தினுக்கு நன்றி.

      Delete
  4. அரசும் வருடா வருடம் புதுப்புது டிசைனில் வெளியிட்டுக் குழப்புகிறார்கள் என்று தெரிகிறது. செல்லாது என்கிற அந்த வதந்'தீ' சென்னையிலும் இருக்கிறது. இங்கு ஒரு கடைக்காரர் நல்ல நாணயத்துக்கு வேறு ஏதோ விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்ததைக் கவனித்தேன். காது (காசு கொடுத்து விட்டேன்!!) கொடுக்காமல் வந்துவிட்டேன்!

    ReplyDelete
    Replies
    1. நண்பர் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  5. பத்து ரூபாய் நாணயங்களின் பல்வேறு வடிவங்கள் பிரச்சினைக்குக் காரணம் என எண்ணுகின்றேன். 10 என்ற என் கீழே இருந்தால் செல்லும், நடுவில் இருந்தால் செல்லாது என்ற விளக்கம் வேறு தருகிறார்கள்
    மோடி வாழ்க
    தம +1

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      // பத்து ரூபாய் நாணயங்களின் பல்வேறு வடிவங்கள் பிரச்சினைக்குக் காரணம் என எண்ணுகின்றேன்.//

      என்று நீங்கள் சொல்லுவதும் சரிதான் அய்யா.

      Delete
  6. வங்கியில் வாங்க மறுப்பதால் ,என்னைப் போன்ற ஊழியர்களின் தலையில் சம்பளப் பணமாக விழுகிறது :)

    ReplyDelete
    Replies
    1. தோழரின் கருத்துரைக்கு நன்றி. சம்பள பணத்தில் 10 ரூபாய் நாணயங்களை கொஞ்சமாக கொடுத்தால் பரவாயில்லை. மூட்டையாக கொடுத்தால் சிரமம்தான்.

      Delete
  7. இருக்கும் குழப்பத்தில் இது வேறே... மிகவும் சிரமம்...

    ReplyDelete
    Replies
    1. நண்பரின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  8. இத்தனை விதப் பத்து ரூபாய் நாணயங்களை நான் பார்த்ததே இல்லை

    ReplyDelete
    Replies
    1. அய்யா ஜீ.எம்.பி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. வங்கிப் பணியாளர் என்ற முறையில், மேலே சொன்ன 10 ரூபாய் நாணயங்களில், 2015 இல் யோகா தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட நாணயத்தைத் தவிர மற்ற எல்லாவற்றையும் பார்த்தும், கைகளில் வாங்கியும், செலவு செய்தும் இருக்கிறேன்.

      Delete
  9. அருமையான பதிவு, பலரது ஐயத்தை போக்கிவிட்டீர்கள்! ஆனால் பொது மக்களுக்கு இதுபோன்று விரிவாக RBI விளக்கவேண்டும். இல்லாவிடில் இந்த குழப்பம் தொடரும். சட்டமுறை செலவாணிப் பணத்தை வங்கிகள் வாங்கமாட்டேன் என்று சொல்வது கண்டிக்கத்தக்கது.

    ReplyDelete
    Replies
    1. அய்யா V.N.S அவர்களின் பாராட்டினுக்கு நன்றி. நான் வங்கிப் பணியில் இருந்தபோது பல வியாபாரிகளும், பொது மக்களும் சில்லறை நாணயங்களை, வங்கியில் கேட்டு கேட்டு வாங்கிச் சென்றது நினைவில் வருகிறது.

      Delete
  10. பின்னூட்டம் எழுதி முடித்தபின் என் மனைவியிடம் சொன்னேன் அவளிடம் பத்து பத்து ரூபாய் நாணயங்கள் இருக்கின்றன அவளிடம் இரண்டு ஐந்து ரூபாய் நாணயங்கள் பத்து ரூபாய் நாணயதைவிடப் பெரிதாக இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. அய்யா ஜீ.எம்.பி அவர்களின் இரண்டாம் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      இப்போது கிடைக்கும் 10 ரூபாய் நாணயமானது அலுமினியம்,செம்பு, பித்தளை, நிக்கல் ஆகிய உலோகக் கலவை அடங்கியது. பின்னாளில் இந்த நாணயம் கிடைக்காமல், அரிதான ஒன்றாகவும் மாறலாம். எனவே பத்து ரூபாய் நாணயங்கள் வீட்டில் கொஞ்சம் இருப்பதால் நஷ்டம் ஏதும் இல்லை

      உங்கள் மனைவியிடம் இருக்கும், பெரிய 5 ரூபாய் நாணயங்கள் ஜவஹர்லால் நேரு அல்லது இந்திரா காந்தி உருவம் பொறிக்கப் பட்டவையாக இருக்கும் என்று. நினைக்கிறேன். இவற்றையும் நாணயச் சேகரிப்பில் வைத்துக் கொள்ளுங்கள். நான் இந்த பெரிய ஐந்து ரூபாய் நாணயம் சிலவும், புதிய பத்து ரூபாய் நாணயங்கள் பலவும் (யாரிடமும் கொடுக்கக் கூடாது என்று) வைத்து இருக்கிறேன்.

      Delete
  11. Replies
    1. அய்யா பஷீர் அலி அவர்களின் வாழ்த்துகளுக்கு நன்றி. ஃபேஸ்புக்கில் அடிக்கடி உங்களை சந்திப்பவன் நான். உங்கள் வலைப்பக்கத்தை புக் மார்க் செய்து கொண்டேன். விரைவில் உங்கள் வலைப்பக்கம் வருவேன்.

      Delete
  12. நாணயங்களைத் தேடி தொகுத்த விதம் அருமை. முக்கிய பிரச்சினைகளில் பொதுமக்களின் கவனம் அமைந்துவிடக்கூடாது என்பதற்காக அவ்வப்போது இவ்வாறாக சில நிகழ்வுகள் மக்களை திசைதிருப்பிவிடுவதற்காக என்றே கொள்வோம்.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அவர்களின் கருத்தினுக்கு நன்றி. ஐ.நா தினம், யோகா தினம், தலைவர்கள் நூற்றாண்டு என்று கவுரவப் படுத்தும் வகையில், ரிசர்வ் வங்கியில் அவ்வப்போது நாணயங்கள் வெளியிடுவது வழக்கம்தான். அறிவிப்புகளும் செய்யப்படுகின்றன. சிலர் தங்கள் சுயநலத்திற்காக சில வதந்திகளை பரப்புகிறார்கள் என்பதே உண்மை.

      Delete
  13. அட அருமையான கலெக்‌ஷன் சார் !

    ReplyDelete
    Replies
    1. ஆச்சி அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.

      Delete
  14. கவிஞர் அவர்களின் பாராட்டினுக்கு நன்றி.

    ReplyDelete
  15. வருடா வருடம் புதிதாக வெளியிட்டுக்கொண்டே செல்லாது செல்லாது என செல்லாத நாணயத்தையா வெளியிடுவார்கள்? நாணயம் குறித்து நாணயமில்லா செய்திகள். தகவலுக்கும் விதவிதமாக பத்து ரூபாய்களை புகைப்படங்களில் காட்டியமைக்கும் நன்றி

    ReplyDelete
    Replies
    1. கருத்துரை தந்த சகோதரி அவர்களுக்கு நன்றி. பத்து ரூபாய் நாணயம் அதிகம் இருந்தால், வரும் எடைச் சுமையையும், எண்ணிக் கணக்கிடுவதில் உள்ள சிரமத்தையும் நினைத்து ’செல்லாது செல்லாது, என்று வதந்திகளை கிளப்பி விடுகிறார்கள்.

      Delete
  16. அருமை ஐயா...

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் பரிவை சே.குமார் அவர்களின் வாழ்த்தினுக்கு நன்றி.

      Delete
  17. இந்தத் தகவல்களை எல்லாம் திரட்ட நீங்கள் எவ்வளவு சிரமப் பட்டிருக்க வேண்டியிருந்திருக்க வேண்டும் . நல்ல விவரமான பதிவு .
    பொங்கல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  18. நல்ல தகவல்கள் நண்பரே/சகோ! 500, 1000 செல்லாது என்று வந்ததும் இப்படி மக்கள் இதற்கும் புரளி கிளப்பிவிட்டிருக்கிறார்கள் போலும்...நீங்கள் சொல்லுவது போல் இணையம் அதுவும் செல்ஃபோனில் வந்த பிறது வாட்சப் மூலம் அதிகமான புரளிகள் சுற்றிவருகின்றன. வாட்சப் மிகவும் பயனுள்ள ஒரு தொடர்புத் தளம் ஆனால் மிகவும் மோசமாகப் பயன்படுத்தப்படுகிறது பல சமயங்களில்...

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் அவர்களின் கருத்தினுக்கு நன்றி.

      Delete