Thursday, 19 January 2017

ஜல்லிக்கட்டும் மாற்று கருத்தும்நாணயத்திற்கு இரு பக்கம் இருப்பதைப் போல, எந்த ஒன்றினைப் பற்றியும், இருவேறு கருத்துகள் உண்டாவது இயல்பு. அது போலவே ஜல்லிக்கட்டு விஷயத்திலும் ஆதரவு அல்லது எதிர்ப்பு என்று இருவேறு நிலைகள் உண்டு. இதன் எதிரொலி, இப்போது கூகிளில் ‘நீங்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவளிப்பவரா இல்லையா’ என்று வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. 

எனது பதிவும் எதிர்ப்பும்

ஜல்லிக்கட்டு விஷயத்தில் எனது நிலை என்பது, எதிர்ப்பு நிலைதான். (ஜல்லிக்கட்டு ஆதரவாளர் இல்லை) எனவே ஒரு வலைப்பதிவர் என்ற முறையில், சென்ற ஆண்டு (2016), ’ஜல்லிக்கட்டு – தடை வேண்டும்’ என்ற தலைப்பினில் http://tthamizhelango.blogspot.com/2016/01/blog-post.html எனது வலைத்தளத்தில் ஒரு கட்டுரையை வைத்தேன். எனது கருத்துரைப் பெட்டியில் (Comments Box) ஆதரவு, எதிர்ப்பு என்று நண்பர்கள் தங்கள் கருத்துக்களை சொல்லி இருந்தார்கள்; நானும் அவற்றினுக்கு எனது நிலையில் மறுமொழிகளைத் தந்து இருந்தேன்.

பீட்டா (PETA) போன்ற அமைப்புகள் எதிலும் நான் சேரவில்லை. அவர்கள் ஜல்லிக்கட்டில் காளையை துன்புறுத்துகிறார்கள் என்ற ஒரு காரணத்தைச் சொல்லி எதிர்க்கிறார்கள். ஆனால் என்னைப் போன்றவர்கள், மனிதர்கள் இந்த ஜல்லிக்கட்டில் பலத்த காயமடைகிறார்கள், கை கால் ஊனமாகிறார்கள் மரணமடைகிறார்கள் என்ற ஆதங்கம் காரணமாக எதிர்க்கிறோம். இதில் என் போன்றவர்களது நிலைப்பாட்டில் தவறு ஏதும் இல்லை என்று நினைக்கிறேன். 
 
ஜல்லிக்கட்டு விஷயத்தில், சென்ற ஆண்டு இல்லாத அரசியல் பரபரப்பு , ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு இந்த ஆண்டில் அதிகம் உள்ளது. ஜல்லிக்கட்டை நடத்தக் கோரி, தமிழகத்தில் ஆங்காங்கே மாணவர்கள் போராட்டம், மறியல் என்று செய்திகள் வருகின்றன.(இந்நேரம் ஜெயலலிதா ஆட்சியில் இருந்து இருந்தால் என்ன நடந்து இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்)

இந்த சூழ்நிலையில் எனது ஃபேஸ்புக்கிலும், நான் இணைந்துள்ள இரு வாட்ஸ்அப் குழுக்களிலும் மேற்படி எனது பதிவினை அண்மையில் பகிர்ந்தேன். இது விஷயமாக, ஒரு வலைப்பதிவு நண்பர் ஒருவர், எனது பதிவிற்கு, அவரது நண்பர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து கருத்து சொன்னதாகவும், நீங்கள் இப்படி எழுதலாமா என்றும் ஆதங்கப்பட்டு என்னுடன் செல்போனில் பேசினார். நான் அவருக்கு மறுமொழியாக, உங்கள் நண்பர் எனது தளத்தில் கருத்துரை தந்தால் நான் விளக்கம் தருகிறேன் என்று சொல்லி விட்டு, ’இப்போது ஜல்லிக்கட்டுக்கு விரோதமாக யாரேனும் கருத்து சொன்னால், அவரைத் தமிழினத் துரோகியாகச் சித்தரிக்கும் போக்கு வந்துள்ளது’ என்றும் தெரிவித்தேன். 

இந்நிலையில், ஜல்லிக்கட்டை ஆதரிக்கும் நண்பர் ஒருவது வலைப்பதிவில் வந்த பின்னூட்டம் ஒன்றில்,

// நம்மில் இரு வலைப்பதிவர்களே மாறுபட்ட கருத்து சொல்கிறார்கள்... இதில் ஒருவர் தமிழ் இலக்கியம் (M.A) படித்தவர்... மற்றுமொருவர் ஊருக்கேற்ப குசும்புக்காரர்... இருவரும் பாவம்... இவர்களை திருத்த முடியாது..//

என்ற கருத்து பதியப்பட்டு இருந்தது. (இதில் தவறு ஏதும் இல்லை; அவர் கருத்தை அவர் சொல்லுகிறார்) இருந்தாலும் அவர் கருத்துப்படி, தமிழ் இலக்கியம் படித்தால் கட்டாயம் ஜல்லிக்கட்டை ஆதரிக்க வேண்டுமா? இல்லையேல் தமிழினத் துரோகி என்ற வரிசையில் வந்து விடுவார்களா?  இதில் மாற்றுக் கருத்து எதுவுமே சொல்லக் கூடாதா? என்பதுதான் எனது சந்தேகம். 

நமது இனம், கலாச்சாரம், பரம்பரை வழக்கம் என்று பலரும் பழைய பாதையிலேயே செல்லும் வேளையில், சிலர் மாற்றுக் கருத்தும் சொல்கிறார்கள் என்பதும் உண்மையே. பல பழைய கண்மூடிப் பழக்க வழக்கங்கள் (பரத்தையர் ஒழுக்கம், உடன்கட்டை ஏறுதல், விதவைக் கோலம், முதுமக்கள் தாழி, நரபலி, வெட்சி (ஆநிரை கவர்தல்) போன்றவை) இன்று இல்லாமல் போனதற்கு காரணம் என்னவென்று சொல்வது? காலப்போக்கில் ஏற்றுக் கொள்ளப்பட்ட மாற்றம்தானே.

வரலாற்றுப் பக்கம் பார்வையைத் திருப்பினால் சாக்ரடீஸ், இயேசு கிறிஸ்து, புத்தர், கலிலியோ, இராமாநுஜர், ராஜாராம் மோகன்ராய், பெரியார் ஈ.வெ.ரா என்று பல மாற்றுக்கருத்து சிந்தனையாளர்களைச் சொல்லலாம்.

இன்றைய போராட்டம்:

காவிரிப் பிரச்சினைக்காக கர்நாடகா மாநில பெங்களூருவிலிருந்து தமிழர்களைத் துரத்தி அடித்த போது வராத தமிழர் வீரம், ஜாதி ஆணவக் கொலைகள் நடந்தபோது வராத எல்லோரும் தமிழரே என்ற உணர்வு,  டாஸ்மாக்கை எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறையின் போது வராத மாணவர் என்ற உணர்வு, அண்மையில் பணமதிப்பு இழப்பை எதிர்த்து போராட்டம் நடத்திய பெண்களின் மார்பகங்களின் மீது கைவைத்த கயமைத்தனத்தின் போது வராத ரோஷம் – இந்த ஜல்லிக்கட்டை முன்னிட்டு வந்து இருப்பது எதனால் என்பது, இதன் பின்புலம் என்ன என்ற கேள்வியில்தான் முடியும். உண்மையில் இப்போது, ஜல்லிக்கட்டை வைத்து, மக்களுக்கான மற்ற பிரச்சினைகளிலிருந்து மக்களை  திசை மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதே உண்மை.


49 comments:

 1. நன்றி ஐயா... நண்பர்களிடம் பகிர்ந்து விடுகிறேன்...

  ReplyDelete
  Replies
  1. நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் கருத்துரைக்கும் பகிர்வினுக்கும் நன்றி.

   Delete
 2. Replies
  1. ’தமிழ்ப்பூ’ முனைவர் அ.கோவிந்தராஜூ அய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

   Delete
 3. ஜனநாயக நாட்டில் வெகுஜன மக்கள் விரும்புகிறார்கள் என்பதால் ,உடன்பாடு இல்லாத காரியங்கள் நடக்கத்தான் செய்கின்றன !மக்களை வழி நடத்தும் அளவுக்கு தலைவர்கள் இல்லாதது நமது பலவீனம் :)

  ReplyDelete
  Replies
  1. தோழரின் கருத்துரைக்கு நன்றி. முன்பெல்லாம் கொள்கைகள் அடிப்படையில் தலைவர்கள் உருவானார்கள். இன்று கொள்ளையின் அடிப்படையில் உருவாக்கப் படுகிறார்கள்.

   Delete
  2. கொள்ளை அடித்த பணத்தைக்காப்பாற்றிக்கொள்ள எந்த சமரசமும் செய்து கொள்கிறார்கள் ,அதிகார கட்டில் ஒன்றுதான் குறி:)

   Delete
 4. ’இப்போது ஜல்லிக்கட்டுக்கு விரோதமாக யாரேனும் கருத்து சொன்னால், அவரைத் தமிழினத் துரோகியாகச் சித்தரிக்கும் போக்கு வந்துள்ளது’ என்று தாங்களே இந்தத் தங்களின் பதிவினில் ஓரிடத்தில் தெரிவித்துள்ளீர்கள்.

  அதனால் இங்கு என்ன கருத்து எழுதுவது என்றே எனக்கும் புரியவில்லை.

  இருப்பினும் இங்கு பொதுவான ஒரு விஷயத்தைச் சொல்லித்தான் ஆக வேண்டியுள்ளது.

  கட்டிப்போடப்பட்டுள்ள காளைகளோ, கட்டுப்பாட்டுடன் உள்ள மாணவ மணிகளோ, கட்டறுத்துக்கொண்டு சீறிப்பாய்வார்களேயானால், அவர்களைப் பிறகு யாராலும் ஓர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவே இயலாது என்பதை, பொதுமக்களும், ஆட்சியாளர்களும், காவல்துறையும், நீதி மன்றங்களும் நினைவில் வைத்துக் கொண்டு முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்வது மிகவும் நல்லது.

  பிறரின் மாற்றுக் கருத்துக்களையும் படிக்க ஆவலுடன் உள்ளேன். பதிவுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. மூத்த வலைப்பதிவர் V.G.K அவர்களின் கருத்தினுக்கு நன்றி. கட்டுப்பாடற்ற இந்த மாணவர்களின் உணர்ச்சி மயமான இந்த போக்கை, இந்த அரசு அல்லது காவல்துறை எப்படி கையாளப் போகிறது என்று தெரியவில்லை. நல்லவிதமாகவே முடிய வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு.

   Delete
 5. தங்களின் நிலைப்பாட்டினைப் பகிர்ந்த விதம் அருமை.

  ReplyDelete
  Replies
  1. முனைவர் அவர்களுக்கு நன்றி.

   Delete
 6. இதை வெறும் ஜல்லிக்கட்டாக பார்க்க வேண்டாம். இது தமிழர்களின் அடையாளம்.

  ReplyDelete
  Replies
  1. தம்பி செ.பொன்னுதுரை அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. இன்றைய சூழலில் தாய்மொழி தமிழ் மட்டுமே தமிழரின் அடையாளமாக இலங்குகிறது. தமிழர் வீர விளையாட்டுகளில் ஒன்றான ஏறுதழுவல் என்பது கபிலர் பாடிய முல்லைக்கலியில், (கலித்தொகை பாடல் எண்.101) வருகிறது. ஜல்லிக்கட்டு என்பது இந்த ஏறுதழுவலில் இருந்து மாறுபட்டது. இப்போதுள்ள ஜல்லிக்கட்டு பாளையக்காரர்கள் எனப்படும் தெலுங்கு நாயக்கர் காலத்தில் வந்தது.

   Delete
  2. உண்மை. பாளையக் காரர்கள் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதே இப்போதைய ஜல்லிக்கட்டு. ஆந்திராவில் இன்றளவும் அது பிரபலமாகவும் காணப்படுகிறது.

   Delete
 7. நான் ஜல்லிக்கட்டுக்கு என்ற போராட்டமாகப் பார்க்கவில்லை. 'காவிரி நீர்' போன்ற பல விஷயங்களில் தமிழகம் ஏமாற்றப்படுவதையும், தமிழன் என்றால் எல்லோரும் இளக்காரமாக எண்ணுகிறார்கள் என்ற உணர்வும்தான் எல்லோரையும் polarize செய்ய வைத்துள்ளது.

  மற்றபடி, 'ஜல்லிக்கட்டை ஆதரிக்காவிட்டால் 'தமிழன் இல்லை' என்றெல்லாம் சொல்வது 'டூ டூ மச்'. இப்போது பொங்கி எழுந்திருப்பது 'தமிழுணர்வு' என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. அதுவும் இடையில், 'பொங்கலுக்கு விடுமுறை ரத்து' என்ற பொய்ச் செய்தியும் வந்ததில், 'தமிழன்' என்ற இன உணர்வு எல்லோருக்கும் வெளிப்பட ஆரம்பித்துவிட்டது. (சென்ற மத்திய அரசின் இறுதியில், ஊழலுக்காக நாடெங்கும் பொங்கிய அலை போல) அதைக் காக்கும் வலிமையான அரசுத் தலைமை இல்லை என்று மாணவர்களும் பொதுமக்களும் நினைப்பதால், உணர்வு அதீதமாக வெளிப்படுகிறது.

  ReplyDelete
  Replies
  1. நண்பர் நெல்லைத்தமிழன் அவர்களின் கருத்தினுக்கு நன்றி. நீங்கள் சொல்வது போல, இப்போது பொங்கி எழுந்திருப்பது உண்மையிலேயே தமிழுணர்வுதான் என்றால், சாதி சமயமற்ற புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் போன்றோர் கண்ட கனவு நினைவாகும் எனலாம்.

   Delete
  2. அதென்ன தமிழுணர்வு? தமிழருக்கு மட்டுமே உரியதுனு நினைக்கிறேன். :) அதைப் போல் ஆந்திரர்கள், கர்நாடக மக்கள், கேரளாக்காரர்களுக்கும் முறையே தெலுங்கு உணர்வு, கன்னட உணர்வு, மலையாள உணர்வுனு உண்டா? இரு தமிழர்கள் சந்தித்தால் ஆங்கிலத்தில் பேசிக் கொள்வதும், அதே இரு மலையாளிகளுக்கு இடையே ஒரு தமிழன் இருந்தால் தனித்து விடப்படுவதும் என்ன உணர்வு?

   Delete
  3. அவர்கள் ஜல்லிக்கட்டு உணர்வு என்று ஒன்று உள்ளது என்றும் அடித்துவிடுவார்கள்! ஜல்லிக்கட்டு உணர்வு இல்லாதவர்கள் தமிழினத் துரோகிகள் என்று அறிவிப்பார்கள்.
   தமிழ் பேச வராது என்று சொல்வதையும்,ஆங்கிலத்தில் பேசுவதையும், பீட்சா சாப்பிடுவதையும் பெருமையாக நம்புகிறவர்களும். மாட்டோடு சண்டை போடுவது தமிழர்களின் பாரம்பரியம், பண்பாடு, அது காக்கபடவேண்டும் என்று போராடுகிறர்ர்களாம்!!!

   Delete
  4. கீதா மேடம்... தமிழன் என்ற இன உணர்வை நான் 'தமிழுணர்வு' என்று சொல்லியுள்ளேன். நம்மிடம் எப்போதுமே ஒற்றுமை இருந்ததில்லை. இரண்டு தமிழர்கள் சேர்ந்தால், அங்கு ஒற்றுமை உணர்வு துளிர்விடாது. சமய, சாதிகளால் பெரும்பாலும் பிளவுபட்டவர்கள் நாம். ஆனால், நமக்கு இழைக்கப்பட்ட (சமீபகாலமாக, காவிரி நீர், முல்லைப்பெரியாறு போன்று) அநீதிகளின் காரணமாகப் பொங்கிய தமிழன் என்ற உணர்வுதான் இது. நான், 'ஜல்லிக்கட்டு' என்ற ஒரு காரணத்திற்காகப் பொங்கிய உணர்வல்ல என்று நம்புகிறேன். இல்லாட்ட ஏன் இத்தனை இளைஞர்கள் (ஜல்லிக்கட்டு என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் அவர்களில் பலர். 70 சதவிகிதத்துக்கும் மேல், வாழ்னாளில் ஜல்லிக்கட்டு பார்க்காதவர்கள் என்று நான் நம்புகிறேன்) போராட்டத்தில் ஈடுபடவேண்டும்?

   மலையாளிகள், அவர்களின் மொழியால் ஒன்றியவர்கள். தமிழன் அப்படி இல்லை. எந்த மலையாளியும், இன்னொரு முகம் தெரியாத மலையாளியைப் பார்த்தால் உடனே உதவுவான். இந்தக் குணம் தமிழர்களிடம் அறவே இல்லை. அதனால்தான், 'தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அதற்கொரு குணமுண்டு' என்று பாடினார்கள். இன்னொரு தமிழனைப் பார்த்தால், அவன் என்ன மதம், ஜாதி, தமிழகத்தில் எந்த மாவட்டம், எந்த இடம், என்ன சம்பாதிக்கிறான் என்றெல்லாம் ஆராய்ச்சி செய்து, பொதுவாக உதவாமல் இருப்பதற்கான காரணத்தைக் கண்டுபிடிப்பவன் தமிழன். (பெரும்பாலும்)

   Delete
  5. தனது அருகே இருப்பவரும் தமிழர் என்று தெரிந்த பின்பும், ஆங்கிலத்தில் தமிழரோடு பேசுபவர்கள் இந்தியாவிலேயே தமிழர்களாக தான் இருக்க முடியும்.தமிழில் பேசாததே ஒரு பெருமை.
   காவிரி நீர், முல்லைப்பெரியாறு போன்ற உண்மையான நீதி மறுப்புகளுக்கும், மாட்டோடு சண்டை போட்டு வீரம் காட்ட விளையாட வேண்டும், அது எமது தமிழ் பாரம்பரிய விளையாட்டு, அது அனுமதிக்கபடும் வரை ஓயமாட்டோம் என்ற விளையாட்டுதனமான இந்த போராட்டங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது.
   அங்கே பங்கு பற்றியவர்கள் கூட அப்படி பொய் சொன்னதில்லை.

   Delete
 8. அண்டை மாநிலங்கள் தமிழ்நாட்டை தண்ணீர் விஷயத்தில் ஏகத்துக்குக் கடுப்பேற்றுகின்றன. இந்த மாதிரி விஷயங்களை மனதில் வைத்துதான் மாணவர்களும், மக்க்களும் இதில் இவ்வளவு தீவிரம் காட்டுகிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. நீங்கள் சொல்லியிருக்கும் பல விஷயங்களில் எனக்கும் உடன்பாடே.

  ReplyDelete
  Replies
  1. நண்பர் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

   Delete
  2. அண்டை மாநிலங்களிடம் தண்ணீருக்கு நீதி கேட்டோ, விவாசாயிகளுக்கு நிவாரணம் கேட்டோ தமிழகத்தில் போராட்டம் நடத்தபடவில்லை.
   BBC செய்தி.
   Thousands of people in India's southern Tamil Nadu state are protesting against a ban on bullfighting.

   Delete
 9. மிருகவதையை எதிர்ப்பவர்கள் ஜல்லிக் கட்டுக்கு எதிராக இருக்கிறார்கள் என்பது போல் ஒரு கருத்து இருக்கிறது எந்த ஒரு கருத்தையும் கூறும்போதுவிருப்பு வெறுப்பு இல்லாமல் ஆராய வேண்டும் எதிர்ப்பவர்களை தமிழ் இனத்துக்கு துரோகம் செய்பவர் என்று கூறுவது ஏற்றுக் கொள்ள இயலாதது அறிவு உணர்வு இவற்றுக்கிடையே நடக்கும்போராட்டமே இது/ மக்கள் வெள்ளம் போல் கூடுவதைக் காணும் போது உணர்வே முன்னணியில் இருப்பது தெரிகிறது அரசும் நீதிமன்றங்களும் மக்களின் நாடித்துடிப்பைக் காண வேண்டும் ஜல்லிக் கட்டுக்கு எதிராகக் கருத்து கூறுபவர் முதலில் மாடுகளை அவற்றின் இறைச்சிக்காக கொல்வதை தடுக்க வேண்டும் என்னும் கருத்தையும் படித்தேன் ஏறு தழுவுதல் என்றால் ஒரு காளையை ஒருவன் அடக்குவதாகத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன் அதிலும் அம்மாதிரியான வீரனுக்கு காளையின் சொந்தக் காரர் தன் மகளைக் கல்யாணம் செய்து கொடுப்பார் என்றும் அந்தப் பெண்ணை மண முடிக்க விரும்பாதவர்கள் பலராக காளையை அடக்குகிறார்கள் என்றும் நகைச் சுவையாகவும் கருத்துகள் உலவுகின்றன. எழுத எழுத எண்ணங்கள் bias ஆகி விடுமோ என்று முடிக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. அய்யா ஜீஎம்பி அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. இந்த ஜல்லிக்கட்டில் நிறையவே அரசியல் ஒளிந்து இருக்கிறது அய்யா.

   Delete
 10. வணக்கம் அண்ணா ..நானும் peta போன்ற அனிமல் ரைட்ஸ் நிறுவனங்களுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்பதை கூறிக்கொண்டு இந்த பின்னூட்டத்தை இடுகிறேன் இந்த போராட்டம் பல விஷயங்களில் ஏமாற்றப்பட்ட தமிழர்களின் வெறுப்பை காட்டும் விளைவே ..
  காற்றடைத்த பலூனில் வேகமாக இன்னும் அதிகமாக காற்றை உட்புகுத்த நினைக்கும்போது வெடிப்பது போலத்தான் இதுவும் ..
  அமைதியாக இருப்பதால் நாம் தமிழின துரோகிகள் என அர்த்தம் கொள்ள முடியாது ..இனொரு விஷயம் நமது விருப்பு வெறுப்புக்களை அடுத்தவர் மீது திணிக்க ஏற்க வற்புறுத்துவதும் முறையில்லை ..ஆனால் இந்த போராட்டம் மக்கள் விழிப்படைந்ததையே காட்டுகிறது இனியாவது சாதி மதம் இனம் நிறம் இவற்றால் நம் தமிழ் மக்கள் பிளவுபடாமல் இருப்பார்கள் என நம்புகிறேன்

  ReplyDelete
  Replies
  1. சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.மேலே நெல்லைத்தமிழனும் இதே கருத்தினைக் கொண்டு இருக்கிறார். நீங்கள் சொல்வது போல, இனியாவது சாதி மதம் இனம் நிறம் இவற்றால் நம் தமிழ் மக்கள் பிளவுபடாமல் இருந்தால் நல்லதுதான்.

   Delete
 11. மாற்றுக்கருத்தை ஏற்கும் மனோபாவம் தமிழர்களிடையே குறைந்துவிட்டது.உங்கள் கருத்தும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றே!

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பர் தளிர் சுரேஷ் அவர்களே.

   Delete
 12. நாட்டில் நடைபெறும் அயோக்கியதனங்களுக்கு எதிராக வராத இந்த ரோஷம்,தடைசெய்யபட வேண்டிய மாட்டோடு சண்டை போடும் விளையாட்டிற்கு எதற்கு என்பதை அருமையாக சொல்லியுள்ளீர்கள்.
  ஜாதி வேறுபாடுகள், ஏற்ற தாழ்வுகள் பார்ப்பதும் தமிழர்களின் பாரம்பரியம், காலம் கலமாக பின்பற்றி வருகிறோம் அதுவும் தொடர வேண்டும் என்பார்கள்!
  சினிமாகாரர்கள் மாட்டு சண்டை போராட்டத்திற்கு நன்றாக கொம்பு சீவி விடுகிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பர் வேகநரி அவர்களே. இந்த போராட்டத்தில் உள் நுழைந்துள்ள உட்குத்து அரசியல் என்ன என்பது சில நாட்களில் தெரிய வரும்.

   Delete
 13. ஐயா என்னைப் பொறுத்தவரையில் ஜல்லிக் கட்டு தமிழனின் அடையாளம்.
  நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஆயிரக் கணக்கில், ஆடுகளும் மாடுகளும் வெட்டப் பட்டு உணவாகிறதே, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறதே, அது சரியான செயல்தானே. உயிரைக் கொல்லுதல், உணவிற்காக என்றால் சரியான செயல், உயிரைக் கொல்லாமல், ஜல்லிக் கட்டு என்றார் மிருக வதை என்னும் பெயரில் தடை. இது சரியா நியாயமா
  மேலும் இன்றைய இந்ததன்னெழுச்சி என்பது,ஜல்லிக் கட்டினால் மட்டுமல்ல,ஒவ்வொரு முறை வஞ்சிக்கப் படும் பொழுதும் ஏற்படும் உள்ளக் குமுறல், மெல்ல மெல்ல பீறிட்டு வெளிக்கிளம்பி இருக்கிறது என்றுதான் எண்ணுகின்றேன்.

  ReplyDelete
  Replies
  1. தி.தமிழ் இளங்கோFriday, January 20, 2017 8:28:00 am

   நண்பர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.. மேலே தம்பி செ.பொன்னுதுரை அவர்களுக்குச் சொன்ன எனது மறுமொழியையே இங்கு விரிவாகச் சொல்லிக் கொள்ளுகிறேன்.

   தமிழர்களின் ஏறுதழுவுதல் அல்லது மஞ்சு விரட்டு என்பதற்கும் இப்போதைய ஜல்லிக்கட்டுவிற்கும் நிறையவே வித்தியாசங்கள் உண்டு. தமிழ்நாட்டில் ஜமீன்தார் முறையை அடிப்படையாகக் கொண்ட பாளையக்காரர்கள் (தெலுங்கு நாயக்கர்கள்) ஆட்சிமுறை வந்தபோது தமிழர்களின் ஏறுதழுவுதல் அல்லது மஞ்சுவிரட்டு என்பது, ஜல்லிக்கட்டாக உருவெடுத்து விட்டது. சில ஜமீன்கள் தமிழ்நாட்டில் அப்போது இருந்த சில ஜாதிக்காரர்களிடமும் கொடுக்கப்பட்டன. தமிழ்நாட்டில் ஓவ்வொரு ஜமீனிலும் ‘எங்கள் காளையை அடக்க யாரும் இல்லை’ என்று ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து, ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தினார்கள். இதில் போட்டி, பொறாமை, வாரிசு சண்டை, ஜாதீயம் என்று வன்முறை அதிகம்.

   அப்புறம் இந்த பொங்கல் விழாவையே தமிழர்களின் திருநாள் என்று தமிழர்களுக்கு நினைவூட்ட வேண்டிய நிலையில் தமிழகம் இருந்தது. இதற்கான முன்னெடுப்பை முனைந்து செய்ததில் தனித்தமிழ் இயக்கத்தினருக்கு பெரும்பங்கு உண்டு. இந்த பொங்கல் விழாவில் ஜல்லிக்கட்டு என்பது தமிழர் விழாவாக உருவெடுத்து விட்டது என்பதே உண்மை. (இப்போது தமிழர்களாகிய நாமும், தெலுங்கு நாயக்கர்களும் இரண்டறக் கலந்து விட்டோம் என்பதும் அவர்களும் தமிழர்களாவே மாறி விட்டார்கள் என்பதும் வேறு விஷயம்.

   எனது கல்லூரி பருவத்தின் போது எனக்கு முக்கிய பாடமாக ‘தமிழக வரலாறும் மக்களின் பண்பாடும்’ என்ற தலைப்பை வைத்து இருந்தார்கள். அப்போது நூலகத்தில் எடுத்து நான் படித்த நூல்களின் சாராம்சமே மேலே நான் சொன்ன கருத்து.

   கீழே சொன்ன ‘திண்ணை’ இணைய இதழ் கட்டுரையை நேரம் கிடைக்கும்போது வாசித்துப் பார்க்கவும்.

   ஜல்லிக்கட்டும் ஃபார்முலா கார்பந்தயங்களும்
   http://puthu.thinnai.com/?p=8083

   Delete
  2. மேலும்,

   //இன்றைய இந்ததன்னெழுச்சி என்பது,ஜல்லிக் கட்டினால் மட்டுமல்ல,ஒவ்வொரு முறை வஞ்சிக்கப் படும் பொழுதும் ஏற்படும் உள்ளக் குமுறல், மெல்ல மெல்ல பீறிட்டு வெளிக்கிளம்பி இருக்கிறது என்றுதான் எண்ணுகின்றேன்.//

   என்ற தங்களின் கருத்திலும் எனக்கு மாற்றுக் கருத்து கிடையாது அய்யா.
   ReplyDelete

   Delete
 14. ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) பற்றிய
  தீர்வு கிட்டும் வரை
  எழுச்சி ஓயப்போவதில்லையாம்...

  காலம் பதில் சொல்லுமே!

  ReplyDelete
  Replies
  1. கவிஞர் யாழ்பாவாணன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. இந்த மாணவர் போராட்டம் என்பது, மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் என்று திசை மாறிவிட்ட படியினால், மத்திய அரசின் நடவடிக்கைக்குப் பிறகு இந்த எழுச்சியின் வடிவம் எப்படிச் செல்லும் என்று சொல்ல முடியாது.

   Delete
 15. ஐய்யா உங்களது ஆதங்கம் புரிகின்றது ஆனால் மக்கள் எல்லோரும் ஜல்லிக்கட்டு வேன்டும் என்றா போராடுகின்றார்கள்? போராடுபவர்களில் 99 விழுக்காட்டினர் ஜல்லிக்கட்டு காளை எப்படி இருக்கும் என்று கூட தெரியாதவர்கள்தான், தடை நீங்கிய பிறகு பார்த்து ரசிக்கப்போவது இல்லை.

  நகரங்களிலும், இனையத்திலும் ஏன் வெளிநாடுகளில் உள்ள தமிழர்களும் ஏன் தடையை எதிர்த்துப்போராடுகின்றார்கள் என்று தெரியலையா?

  சென்னையிலும் அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும், ஐரோப்பாவிலும் மற்றும் உலகெங்கும் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்றா இல்லை?

  தமிழர்களின் அடையாளங்களை அழிப்பதை எதிர்த்துதான்.
  ஜல்லிகட்டை எதிர்க்கும் நான்தான் உன்மையான தமிழன். மாடு பிடிக்கும் காட்டுமிராண்டி தமிழானே இல்லை என்ற கருத்தை நிறுத்தும் அதிகாரத்தை எதிர்த்துதான்.
  தமிழர்கள் எங்களுக்கு அடங்கித்தான் கிடக்கனும், நீ என்ன செய்யனும்ன்னு நான்தான் முடிவு பன்னுவேன் எனும் ஆனவத்தை எதிர்த்துத்தான்.

  ReplyDelete
  Replies
  1. தம்பி உசிலை விஜயன் அவர்களின் நீண்ட கருத்துரைக்கு நன்றி. உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன். வாழ்த்துகள்.

   Delete
 16. உங்கள் கட்டுரையில் சொல்லி இருக்கும் விஷயங்கள் அனைத்தையும் என் முகநூல் நண்பரின் பதிவில் பகிர்ந்திருந்தேன். தமிழினத் துரோகி என்றும் மோதி அரசுக்குக் கொடி பிடிக்கிறவர் என்ற பெயரும் கிட்டியது. எந்த அரசும் நீதிமன்றத்துக்கு ஆணையிட முடியாது என்னும் சட்ட நுணுக்கமே தெரியாதவர்கள் எல்லோரும் சேர்ந்து செய்யும் அரசியலே இந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம். உண்மையில் ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்துக்களும் கூடி ஜல்லிக்கட்டு கிராமப் பொதுவில் நடத்தத் தீர்மானம் நிறைவேற்றி ஊர் மக்களிடம் வரி வசூலித்து ஜல்லிக்கட்டை நடத்திக்கொள்ளலாம். இதில் நீதிமன்றம் கூடத் தடையிடாது!

  ReplyDelete
  Replies
  1. மேடம் அவர்களுக்கு நன்றி. தமிழர்கள் எப்போதுமே உணர்வு பூர்வமானவர்கள். அவர்கள் (என்னையும் சேர்த்துதான்) எப்போதுமே எந்த செயலையும் உணர்ச்சிகரமாக செய்து விட்டு, பின்னர் அறிவுப்பூர்வமாக நினைத்து வருந்துபவர்கள்.எனவே இதுவும் கடந்து போகும்.

   Delete
  2. "எந்த செயலையும் உணர்ச்சிகரமாக செய்து விட்டு, பின்னர் அறிவுப்பூர்வமாக நினைத்து வருந்துபவர்கள்" - ரொம்ப ரசித்தேன் இந்த வரிகளை.

   Delete
 17. ஒரு பானையில் நீரை நிறைக்கும் போது எப்போது வெளியே வழிகிறதோ, அந்தக் கடைசித் துளி போன்றதே இந்த ஜல்லிக்கட்டு. பொறுமையில் எல்லை கடந்து விட்டது.
  பொங்கல் திருநாள் விடுமுறையில் கைவைத்தார்கள். காவேரி நீர்பிரச்சனையில் சட்டம் தன் கடமையை செய்ததா?
  தமிழர் மாத்திரம் தானா? சட்டத்தை மதிக்க வேண்டியவர்கள்.
  ஏறு தழுவுதலோ, ஜல்லிக்கட்டோ, பொங்கலோ இவை தமிழனின் அடையாளம்.

  ReplyDelete
  Replies
  1. நண்பர் யோகன் பாரிஸ் அவர்களின் கருத்தினுக்கு நன்றி. சட்டத்தை சட்டத்தால் வெல்ல வேண்டும். தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவருக்கோர் குணமுண்டு. பார்ப்போம்.

   Delete
 18. வணக்கம்
  ஐயா
  நண்மையும் உண்டு தீமையும் உண்டு மக்கள் யாவரும்ஒருபக்கம் நிக்கும் போது நாம் தனித்து நிப்பது வேதனைதான்...
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. கவிஞர் ரூபன் அவர்களின் அன்பான கருத்திற்கு நன்றி.

   Delete
 19. அனைத்தும் நல்லபடியே முடியட்டும்.....

  ReplyDelete
  Replies
  1. ஆம் நண்பரே நல்ல விதமாக முடிய வேண்டும் என்பதே அனைவரது விருப்பமும்.

   Delete
 20. மனம் திறந்த உரையாடலுக்கு நன்றி. விவாதத்திற்கும் உரையாடலுக்கும் நிரம்ப வித்தியாசம் உண்டு. உரையாடல்களின் சிறப்பு என்னவென்றால் எந்த ஒரு உரையாடலின் ஆரம்பமும் அதற்கு மேற்கொண்டான உரையாடலைத் துவக்கி வைக்கும் என்பது தான். பதிவுலகில் பின்னூட்டங்கள் போட்டே பழக்கப்பட்டு விட்டதினால் பல உரையாடல்கள் ஒரு கை ஓசையாகவே அமுங்கிப் போய் விடுவதை நானும் பல நேரங்களில் அனுபவமாகக் கொண்டிருக்கிறேன்.

  இருந்தாலும் தாங்கள் குறிப்பிட்டிருக்கும் சில வரலாற்று உண்மைகளைப் பற்றித் தொடர்ந்து உரையாட வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது.

  தமிழக வரலாறு குறித்து நீங்களோ அல்லது நானோ வேறு தனிப்பதிவு இடும் பொழுது சில வரலாற்று உண்மைகளை மேலெடுத்துச் செல்லும் வாய்ப்பைப் பெறுவோம்.

  மனத்தில் அசை போடவாவேனும் ஒரு உரையாடலைத் துவக்கி வைத்தமைக்கு மிக்க நன்றி, ஐயா!

  ReplyDelete
  Replies
  1. மரியாதைக்குரிய எழுத்தாளர் ஜீவி அவர்களூக்கு வணக்கம்.. தங்களின் அன்பான

   // இருந்தாலும் தாங்கள் குறிப்பிட்டிருக்கும் சில வரலாற்று உண்மைகளைப் பற்றித் தொடர்ந்து உரையாட வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. //

   என்ற கருத்துரைக்கு நன்றி..என்னில் மூத்த, நிறைய அனுபவம் உள்ளவர் நீங்கள்.. நான் சரித்திர ஆசிரியன் கிடையாது. இருந்தாலும் எனது மாணவப் பருவத்தில் நான் கண்ட, கேட்ட , படித்த பல விஷயங்கள் இப்போது வலைத்தளத்தில் எழுத உதவுகின்றன எனும்போது ஒரு ஆத்ம திருப்தியாகவே இருக்கிறது.

   Delete