Friday 15 July 2016

வாலி 1000 திரையிசைப் பாடல்கள்



கடந்த சில நாட்களாக, உடல்நலமில்லை. கம்ப்யூட்டரில் அதிக நேரம் செலவிட உடல் ஒத்துழைக்கவில்லை. ஆனால் வழக்கம் போல புத்தகங்களை வாசிக்க முடிந்தது. எனவே வாங்கி ரொம்பநாள் ஆன ’வாலி 1000’ (இரண்டு தொகுதிகள்) தொகுப்பை ஒவ்வொரு பக்கமாக படித்துப் பார்க்க நேரம் அதிகம் கிடைத்தது. 

பாட்டுப் புஸ்தகம்
                                                                                                                                                         
இந்த தொகுதியை வாங்கியவுடன் அப்போது எனக்கு அந்தக்கால சினிமா பாட்டு புஸ்தகம்தான் நினைவுக்கு வந்தது. ஒரு காலத்தில் சினிமாப்பாடல்கள் என்றால் இலக்கிய வரிசையில் வைத்துப் பேச மாட்டார்கள். இப்போது சினிமா பாடல்களைப் பாடாத பட்டிமன்றங்களே இல்லை. அப்போதெல்லாம் சினிமா பாடல் ரசிகர்களும், மேடைப் பாடகர்களும் சினிமா பாட்டு புத்தகங்களை ஒன்றாகத் தைத்து அல்லது காலிகோ பைண்ட் செய்து வைத்து இருப்பார்கள். அந்தக்கால பாட்டுப் புஸ்தகம் பற்றி கூட ஒரு பதிவு எழுதியுள்ளேன்.

// சினிமா பாட்டு புஸ்தகம் என்பது பழைய செய்தித்தாள் போன்ற ஒரு தாளில் ( சாணித் தாள் என்றே சொல்வார்கள் ) சினிமா பாடல்களை அச்சடித்து ஒரு அணா அல்லது இரண்டு அணா என்று விற்பார்கள். ஒரு சினிமாப் படம் வந்ததும் பாட்டு புத்தகமும் விற்பனைக்கு வந்துவிடும். அந்த புத்தகத்தின் அட்டைப் படம் பெரும்பாலும் அந்த படத்தின் அன்றைய போஸ்டரின் கறுப்பு வெள்ளை போட்டோ நகலாகத்தான் இருக்கும். உள்ளே அந்த படத்தின் நடிகர்கள், நடிகைகள், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என்று எல்லா விவரங்களையும் தந்து இருப்பார்கள். புத்தகத்தில் பாடலின் வரிகளை இஷ்டத்திற்கு வடிவம் கொடுத்து இருப்பார்கள் ( http://tthamizhelango.blogspot.com/2012/03/blog-post_18.html சினிமா பாட்டு புத்தகம் ) //

வாலியின் பாடல்கள்: 

ஆனால் அந்த பாட்டு புஸ்தகம் போல் இல்லாமல், இந்த இரண்டு தொகுதிகளும் நல்ல வழவழப்பான வெள்ளைத் தாள்களில் பளிச்சென அச்சிட்டு இருக்கிறார்கள்.. முதல் தொகுதியிலும் இரண்டாவது தொகுதியிலும் வாலியின் அன்புரை, மற்றும் இதனை வெளியிட்ட எஸ்.வைரவன் (குமரன் பதிப்பகம்) அவர்களது பதிப்புரையும் , இடம் பெற்றுள்ளன. 

இந்த புத்தகத்தைப் பற்றி எழுதுவது என்பது கவிஞர் வாலியின் பாடல்கள் என்பதாகத்தான் இருக்கும். எனவே இந்த பதிவு என்பது, அந்த நூற் தொகுப்பின் விமர்சனம் அல்ல. புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டும்போது மலரும் நினைவுகளாக எம்.ஜி.ஆர், சிவாஜி, ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், நாகேஷ், ரஜினிகாந்த், கமலஹாசன், சரோஜாதேவி, கே.ஆர்.விஜயா, ஜெயலலிதா, மஞ்சுளா, லட்சுமி, எல்.விஜயலட்சுமி, சிஐடி சகுந்தலா – என்று பல திரைப்பட நட்சத்திரங்கள் நடித்த பல பாடல் காட்சிகள் வந்து போயின. 

கொஞ்சுதமிழ்:

கவிஞர் வாலி தனது வாலிப வயதில் எழுதிய பல பாடல்களில் தமிழ் அவருடைய கவிதைகளில் வந்து கொஞ்சி விளையாடுவதைக் காணலாம்.

சத்தியம் சிவம் சுந்தரம்
சரவணன் திருப்புகழ் மந்திரம்
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
அண்ணல் உறவுக்கென்றே உடலெடுத்தேன்
அவன் அருளைப் பெறுவதற்கே உயிர் வளர்த்தேன்
                               (படம்: பஞ்சவர்ணக்கிளி)
Xxxxxxx

தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்
தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்

கண்கள் படாமல் கைகள் தொடாமல் காதல் வருவதில்லை
நேரில் வராமல் நெஞ்சைத் தராமல் ஆசை விடுவதில்லை
                              - (படம்: படகோட்டி)
Xxxxxxx

குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும்

குமரி பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சை தரவேண்டும்
காதல் நெஞ்சை தந்து விட்டு குடியிருக்க நீ வரவேண்டும்
(படம்: எங்க வீட்டுப் பிள்ளை)
Xxxxxxxx

குயிலாக நானிருந்தென்ன
குரலாக நீ வர வேண்டும்
பாட்டாக நானிருந்தென்ன
பொருளாக நீ வர வேண்டும்
வர வேண்டும் !      (படம்: செல்வமகள்)
Xxxxxx

சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்
சிந்திய கண்ணீர் மாறியதாலே
அன்புத் திருமுகம் காணாமல் -
நான்துன்பக் கடலில் நீந்தி வந்தேன்
காலப் புயலில் அணையாமல் -
நெஞ்சில்காதல் விளக்கை ஏந்தி வந்தேன்
உதய சூரியன் எதிரில் இருக்கையில்
உள்ளத்தாமரை மலராதோ ?
உள்ளத்தாமரை மலராதோ ?
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இருண்ட பொழுதும் புலராதோ ?
இருண்ட பொழுதும் புலராதோ
(படம்: நல்லவன் வாழ்வான்)

எம்.ஜி.ஆர் படப் பாடல்கள்:

மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த பல படங்களில், அவர் தனியாகப் பாடும் பல பாடல்களை எழுதியவர் கவிஞர் வாலி அவர்கள். எழுதியது இவரே என்றாலும் , எம்ஜிஆர் கொள்கைப் பாடல்கள் என்றே பின்னாளில் சொன்னார்கள்.

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்
மண்குடிசை வாசலென்றால்
தென்றல் வர வெறுத்திடுமா
மாலை நிலா ஏழையென்றால்
வெளிச்சம் தர மறுத்திடுமா
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று
ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை (படம்: படகோட்டி)
Xxxxxxxxxxx

நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார் 
                    (படம்: எங்க வீட்டுப் பிள்ளை)
Xxxxxxxx

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி

கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம்
கடமை இருந்தால் வீரன் ஆகலாம்
பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம்
மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்
இந்த மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்
                         (படம்: பெற்றால்தான் பிள்ளையா)
Xxxxxxxxx

கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா
(படம்: பணம் படைத்தவன்)
Xxxxxxxx

என்று நிறையவே சொல்லிக் கொண்டே போகலாம்.

இலங்கை வானொலியில்:

எனது மாணவப் பருவத்தில் மறக்க முடியாத ஒன்று, அன்றைய இலங்கை வானொலி நிலையம். அந்த வானொலியில் தினமும் காலையில் பிறந்தநாள் நிகழ்ச்சியாக நேயர்களுக்கு பிடித்தமான பாடல்களை ஒலி பரப்புவார்கள். அதன் தொடக்கமாக கவிஞர் வாலி எழுதிய கீழே சொன்ன பாடல் வரிகளை ஒலிபரப்பி விட்டுத்தான் அடுத்து செல்வார்கள்.

பிறந்தநாள் – இன்று பிறந்தநாள்
நாம் பிள்ளைகள் போல
தொல்லைகள் எல்லாம்
மறந்தநாள் –
Happy Birthday to you (படம்: நாம் மூவர்)


xxxxxx

இதேபோல,

ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி
ஆயிரம் இருக்குது சுபதினம்
அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு
ஆயுள் முழுவதும் சுபதினம்   - (படம்: சுபதினம்)

என்ற பாடலையும் சொல்லலாம்.


பதினைந்தாயிரத்திற்கும்

கவிஞர் வாலி அவர்கள் எழுதிய திரைப்படப் பாடல்கள் 15000 இற்கும் மேற்பட்டு இருக்கும் என்பார்கள். அவற்றை எல்லாம் இங்கு ரசித்து எழுத வாழ்நாள் போதாது. எனவே மேலே சொன்ன ‘வாலி 1000’ தொகுப்பில் உள்ள ஒன்றிரண்டை மட்டும் குறிப்பிட்டேன்.

அண்மையில் தி இந்து (தமிழ்) இணைய இதழில் இசைக் கவிஞர் … ரமணன் அவர்களின் தொடர் சொற்பொழிவு ஒன்றை தொடர்ந்து கண்டு கேட்டேன். அதில் அவர் ஒரு பாடலை ‘பொருளின் பொருள்‘ என்ற தலைப்பினில் (வாழ்வு இனிது - தொடர் – 5) பேசும்போது ஒரு முழு பாடலையும் ராகத்தோடு பாடிக் காட்டினார். அந்த பாடலை எழுதியவர் நமது கவிஞர் வாலி அவர்கள். அந்த பாடல் இதுதான் ....

ஆண்டவன் ஒருநாள் கடை விரித்தான்
அதில் ஆயிரம் ஆயிரம் பொருள் குவித்தான்
அவரவர் நிலைமைக்கு விலையைச் சொன்னான்
அவரவர் தேவைக்கு வாங்கச் சொன்னான்
                                                                                                                                                        
பெண்களோ அழகை வாங்க வந்தார்
ஆண்களோ ஆசையை வாங்க வந்தார்
தலைவர்கள் புகழை வாங்கிக் கொண்டார்
புலவர்கள் பொய்களை வாங்கிக் கொண்டார்
                                                                                                                                                        
குருடர்கள் பார்த்திட விழி கேட்டார்
ஊமைகள் பேசிட மொழி கேட்டார்
உறவினர் மாண்டவர் உயிர் கேட்டார்
ஒருசிலர் மேலுக்கு விலை கேட்டார்
                                                                                                                                                      
எதையும் வாங்கிட மனிதர் வந்தார்
விலை என்னவென்றாலும் அவர் தந்தார்
இதயம் என்பதை விலையாய்த் தந்து
அன்பை வாங்கிட எவரும் இல்லை
              (படம்: டில்லி மாப்பிள்ளை)

இந்த பாடலைக் கண்டு கேட்டு களித்திட ….. (Thanks to
cofiboardrajamohd)

32 comments:

  1. super...i think in the first poem annal is is correct. instead of annan..
    (tamil pond is not functioning --)

    ReplyDelete
    Replies
    1. ’அழகன் முருகனிடம்’ என்ற பாடல் வரிகளில் இருந்த பிழையைச் சுட்டிக் காட்டிய கவிஞர் அவர்களுக்கு நன்றி. பிழையை (அண்ணன் > அண்ணல்) திருத்தி சரி செய்து விட்டேன்.

      Delete
  2. திரைப்பாடல்களுக்கு இசையமைபு தான் உயிர் போல. வெற்று வரிகளை வெற்றிப் பாடல்களாகுவது அந்தப் பாடல்களுக்கென்றே அமைந்து விடும் இசையமைப்பு தான். அதனால் தான் எம்.ஜி.ஆர். தனது படங்களுக்கான பாடல்களின் இசையமைப்பில் மிகுந்த கவனம் கொண்டிருந்தார். அவரும் சங்கீதத்தில் பயிற்சி கொண்டிருந்தமையால் தன் படப்பாடல் ஒன்று கூட சோடை போகாமல் பார்த்துக் கொண்டார்.

    இசைக்காக தன் பாடல் வார்த்தைகளை வெகு பொருத்தமாக மாற்றித் தருவதில் கண்ணதாசன் ஈடு இணையற்றுத் திகழ்ந்தார். இசையமைப்பாளர் விருப்பத்திற்கேற்ப ஒரு நொடியில் மாற்றித் தருவாராம். திரைப்பாடலுக்கு இசை உயிர்நாடி என்பதால் இதில் எந்த சங்கடமும் எந்நேரமும் அவர் கொண்டதில்லை.

    ஆனால் திரைப்பட கவிஞர்களுக்குத் தெரிகிற இந்த நிதர்சன உண்மை திரைப்படப் பாடல்கள் பற்றிப் பேசும் பொழுதெல்லாம் பாடல்களுக்கான இசை என்பது வெளிச்சத்திற்கு வராமல் பின்னால் தள்ளப்பட்டு விடுகிறது.

    மேலே கண்ட பாடல்களை நாம் படிக்கும் பொழுதே நம்மையறியாமல் அதற்காக அமைந்த இசை வடிவிலேயே படிப்போம். தனிக் கவிதை மாதிரி வார்த்தை வார்த்தையாக நம்மால் படிக்க முடியாது. இது தான் திரைப்படப் பாடல்களுக்கான இசையமைப்பின் வெற்றி.

    ReplyDelete
    Replies
    1. திரைப்படப் பாடல்களின் இசைவடிவம் பற்றி விளக்கிய, எழுத்தாளர் ஜீவி அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.

      Delete
  3. வயதான பின்னாலும் 'வாலி'ப கவிஞராகவே இருந்தவரை மறக்க முடியுமா :)

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது சரிதான் பகவான்ஜீ. என்றும் அவர் வாலிப வாலிதான். அவர் எழுதிய ‘நினைவு நாடாக்கள்’ படித்துப் பாருங்கள்.

      Delete
  4. >>> எதையும் வாங்கிட மனிதர் வந்தார்
    விலை என்னவென்றாலும் அவர் தந்தார்
    இதயம் என்பதை விலையாய்த் தந்து
    அன்பை வாங்கிட எவரும் இல்லை!.. <<<


    இந்தப் பாடல் மிகவும் பிடித்த பாடல்..
    அப்போதிருந்தே நெஞ்சில் பதிந்து விட்ட பாடல்..

    இலங்கை வானொலியைப் பற்றியெல்லாம் சொன்னதில் -
    மனம் - அந்த நாள் ஞாபகத்திற்குள் ஆழ்ந்து விட்டது..

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.

      Delete
  5. கம்பனுக்குப் பிறகு தமிழில் அதிகமான வார்த்தைகளைக் கையாண்ட கவிஞர், வாலி அவர்களே! - இராய செல்லப்பா

    ReplyDelete
    Replies
    1. மூத்த வலைப்பதிவர் அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.

      Delete
  6. கவிஞர் வாலி அவர்களையும், கவிஞர் கண்ணதாசன் அவர்களையும் இன்னும் பல நூற்றாண்டுகள் ஆனாலும் தமிழர்களால் மறக்கவே முடியாது. இருவருமே காலத்தினால் அழியாத காவியங்களைப் படைத்துள்ளனர்.

    மேலே நம் ஜீவி சார் அவர்கள் சொல்லியுள்ளவற்றவையும் அப்படியே ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். இசையமைப்பினால் மட்டுமே இவர்கள் எழுதியுள்ள வைரமான வரிகள் மேலும் பட்டை தீட்டிய வைரமாக ஜொலிக்கின்றன.

    நம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் தனது படப்பாடல்களின் வரிகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த கவனமாக இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

    தாங்கள் சுட்டிக்காட்டியுள்ள பாடல்கள், சாம்பிளாக சிலமட்டுமே என்றாலும் அவை எல்லாமே மிகவும் அருமையான பாடல்களே.

    பதிவுக்குப் பாராட்டுகள், வாழ்த்துகள், நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள V.G.K. அவர்களின் அன்பான நீண்ட கருத்துரைக்கு நன்றி. முதலில் ‘கண்ணதாசனும் வாலியும்’ என்றுதான் எழுதுவதாக இருந்தேன். வாலியின் நினைவுநாள் வருவதை ஒட்டி வாலியின் பாடல்களை மட்டும் எழுத வேண்டியதாயிற்று.

      Delete
  7. வாலி மிக அற்புதமான கவிஞர். ஆனால் அவரே பின்னாளில் குறிப்பாக இளையராஜா இசையில் நிறைய பாடல்கள் இரட்டை அர்த்தத்தில் ஏனோதானோ என்ற வார்த்தைகளை போட்டும் எழுதியிருக்கிறார். எனக்கு முதன்முதலில் வாலி அந்தப் பாடல்களின் வழியே தான் அறிமுகமானார். அவரை ஒரு மோசமான கவிஞர் என்றே நினைத்திருந்தேன். வெகுநாட்கள் கழித்துதான் அவர் எழுதிய பழைய பாடல்களைக் கண்டு வியந்து போனேனேன். உண்மையில் அற்புதமான கவிஞர் இடையில் இப்படி ஆபாசக் குப்பைகளை எழுதியதை தவிர்த்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். நூல் பற்றி அருமையான பதிவு.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே சினிமா என்பதே போட்டியும், பொறாமையும், கவிழ்ப்பு வேலையும் நிறைந்த (அரசியலைப் போலவே) தனி உலகம். எனவே காலச்சூழலுக்கு ஏற்ப கவிஞர்கள் எழுதி இருப்பார்கள். கவிஞர் கண்ணதாசன் ’எலந்தப்பயம்’ எழுதியதும், கவிஞர் வாலி ‘நேத்து ராத்திரி யம்மா’ என்று எழுதியதும் இதனால்தான்.

      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      Delete
  8. வாலி நல்லதொரு கவிஞர்தான் இருப்பினும் அவரது கடைசி காலத்தில் சில பாடல்கள் கீழ்த்தரமாக எழுதி விட்டார்
    காணொளி கண்டேன்
    த.ம.2

    ReplyDelete
    Replies
    1. நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.! கம்பன் என்றாலே தமிழ்; அந்த கம்பனின் பாடல்களில் ஆபாசம் இருப்பதாகச் சொல்லி ‘கம்பரசம்’ என்ற பெயரில் ஒரு நூல் வந்தது. இந்த நூலின் ஆசிரியர் அறிஞர் அண்ணா அவர்கள். எனவே வாலி எழுதிய பாடல்களைப் பற்றிய விமர்சனம் என்பது இலக்கிய சர்ச்சையில் புதிது இல்லை.

      Delete
  9. தமிழ் திரையுலகில் மறக்க முடியாத கவிஞர்!!!

    ReplyDelete
  10. அருமையான கவிஞர் - சில பாடல்களில் விரசம் சொட்டும்படி எழுதி இருந்தாலும்.....

    ReplyDelete
    Replies
    1. நண்பர் வெங்கட்நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  11. ரசனை மிக்க தொகுப்பு வாழ்த்துகள்
    தம +

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் மது அவர்களுக்கு நன்றி.

      Delete
  12. வைரமுத்து தனது 1000 பாடல்கள் கொண்ட தொகுதியை வெளியிட்டார்.பின்னரே வாலியும தனது தொகுதியை வெளியிட்டார்.வாழும் நாள் வரை திரையலகில் வரவேற்பு கிடைத்த கவிஞர்.அற்புதமான பாடல்கள் பல எழுதி இருக்கிறார். ஆனால் கண்ணதாசனைப் போல முதலிடம் பிடிக்க முடியவில்லை. கண்ணதாசன் காலத்திற்குப் பிறகு வைரமுத்து ஆக்ரமித்துக் கொண்டார். வாலிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றே கருதுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மூங்கிற் காற்று டி.என். முரளிதரன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. மக்கள் அங்கீகாரம் இருந்தாலும், எம்.எஸ்.விஸ்வநாதன் போன்று, அரசின் அங்கீகாரம் கிடைக்காத திரைப்படக் கலைஞர்களில் கவிஞர் வாலியும் ஒருவர். இதற்கு முக்கிய காரணம், கவிஞர் வாலி எதார்த்தமானவர்; நடிக்கத் தெரியாதவர். எம்.ஜி.ஆரோடு நட்பு இருந்த போதும், கலைஞரோடு இருந்த நட்பையும் விரும்பியவர். வசந்த் தொலைக்காட்சியின் 'வாலி 1000′ என்ற சிறப்பு நிகழ்ச்சியில் திரைப்பட நட்சத்திரம் குஷ்பு அவர்கள் கேள்வி ஒன்றினுக்கு கவிஞர் வாலி அளித்த பதில் இது.

      // திமுக மீது மட்டும் உங்களுக்கென்ன தனி பாசம்…

      ஏன்னா… அது ஒண்ணுதான் தமிழுக்கும் தமிழறிஞர்களுக்கும் உரிய மரியாதை கொடுக்கிற கட்சி. தமிழறிஞர்கள் சொல் சபையேறும் என்றால் அது திமுக ஆட்சிக்காலத்தில்தான்.

      அப்படின்னா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆட்சியில் அப்படி நடக்கவில்லையா…

      உண்மைதான். அவரும் தமிழுக்கு அபார முக்கியத்துவம் கொடுத்தார். அவரும் நானும் 25 ஆண்டுகாலம் கட்டிப் புரண்டவர்கள். ஆனால் அவரும்கூட திமுகதான். மனதளவில் திமுகதான் //

      Delete
  13. வாலிபக் கவிஞர் வாலி அவர்களின் திரையிசைப் பாடல்கள் எல்லோர் தரப்பையும் திருப்தி செய்தது என்பது உண்மை. அவர் எம்.ஜி.ஆருக்காக எழுதிய பாடல்கள் அனைத்தும் அவரது இரசிகர்கள் மட்டுமல்லாமல் அவரை விரும்பாத மாற்று அணியினருக்கும் பிடித்தது என்பதற்கு காரணம் வாலி அவர்களின் வலிமையான கருத்துக்கள்கொண்ட பாடல்கள் தான் என்பதை யாரும் மறுக்க இயலாது.
    அவர் திரையுலகம் வருமுன் எழுதிய கவிதை ஒன்றை படித்திருக்கிறேன்.
    ஒரு காதலன் தன் காதலியிடம் சொல்கிறான்.
    ‘நிலவு வருமுன்னே நீ வரவேண்டும்.
    நீ வந்த பின்னே நிலவு எதற்கு வேண்டும்.’
    என்ன அருமையான வரிகள்! காதலி வந்த பிறகு நிலவின் ஒளி தேவையில்லையாம். காரணம் சொல்லவேண்டுமா?

    கவிஞரை நினைக்க வைத்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. அய்யா V.N.S. அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நான் ஆரம்பகாலத்தில் தி.மு.க.வின் அனுதாபியாக இருந்தவன். எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு வெளியேறிய போதும், தி.மு.க.வையே நான் தொடர்ந்தாலும், அவரது ரசிகனாகவே இருந்ததற்கு கவிஞர் வாலியின், எம்.ஜி.ஆர் படப் பாடல்களும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

      Delete
  14. \\வாலியின் பாடல்கள்: ஆனால் அந்த பாட்டு புஸ்தகம் போல் இல்லாமல், இந்த இரண்டு தொகுதிகளும் நல்ல வழவழப்பான வெள்ளைத் தாள்களில் பளிச்சென அச்சிட்டு இருக்கிறார்கள்..\\
    எனக்குப் புரியவில்லை. ஏனெனில் இதற்கு முன்னால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய திரை இசைப் பாடல்கள், கவிஞர் கண்ணதாசனின் திரை இசைப் பாடல்கள் என்பவையெல்லாம் அழகான புத்தகங்களாக பளிச்சிடும் தாள்களில் வெளிவந்து மிகுந்த புகழைப் பெற்றிருக்கின்றன. கவிஞரின் திரைஇசைப் பாடல்கள் மட்டும் ஆறு தொகுதிகளோ ஏழு தொகுதிகளோ வந்துள்ளன. (கவிஞரின் பாடல்கள் யாவும் அவர் உயிருடன் இருந்த காலத்திலேயே வெளிவர ஆரம்பித்துவிட்டன)
    ஒரு வேளை நீங்கள் வாலி எழுதிய பாடல்களைத்தான் அழகிய புத்தக வடிவில் முதல்முறையாகப் பார்க்கிறீர்களோ?

    ReplyDelete
    Replies
    1. மரியாதைக்குரிய எழுத்தாளர் அமுதவன் அய்யா அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. மறுத்துப் பேசுவதற்கு மன்னிக்கவும். பொதுவாக, பழைய பாட்டுப் புஸ்தகத்தையும், இன்றைய திரைப்படப் பாடல்கள் நேர்த்தியாக புத்தகமாக வரும் வடிவமைப்பையும் எண்ணியே அவ்வாறு எழுதினேன். நான் சொன்ன தொனி வேறு மாதிரியான கருத்தை தந்து விட்டது என நினைக்கிறேன்.

      வாலி 1000 மட்டுமன்று பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடல்கள் (NCBH வெளியீடு), கண்ணதாசன் திரைப்படப் பாடல் தொகுதிகள், தஞ்சை ராமையாதாஸ் பாடல்கள் – ஆகிய நூல்களையும் பார்த்தும் படித்தும் இருக்கிறேன்.

      Delete
  15. ஆகா... நீர் ரசிகரய்யா..!
    என்னமா ரசிச்சு ரசிச்சுப் பாட்டுகளைப் பத்தி எழுதியிருக்கிங்க?!!!
    ஆனா, வாலிபக்கவிஞர் வாலியிடம் எனக்கு ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் (“தாத்தா கொடுத்தது ஒரு ரூபாய்க்கு ஒருகிலோ, பேரன் கொடுத்தது ஒரு ரூபாய்க்கு ஒரு அலோ” என்று கலைஞரைப் புகழ்ந்து பாடிய கையோடு, ரங்கநாயகீ என்று -தினமணிக் கதிரில் அந்தப்பக்கம் போய் எழுதியது உட்பட) அவரது வளமான தமிழ்ப் பாடல்களில் பல கண்ணதாசனுடையவை என்று பேசப்படும் அளவிற்குத் தரமானவை. (என்ன...சில எப்படி எப்படி என்னும் கீழ்த்தரமும் உண்டு) எனினும் அவரது “தரைமேல் பிறக்கவைத்தான்” எனும் மீனவர் பாடல் ஆயிரம் பாடலுக்குச் சமம்! வாலியின் பாடல் திறனில் என்பார்வையில் இன்றும் முதலிடத்தில் நிற்பவை படகோட்டி பாடல்களே! மற்றபடி அவரது “பெரும்புள்ளி” எனும் புதுக்கவிதைத் தொகுப்பு அவ்வளவாகப் புகழ்பெறவில்லை என்பதும் கவனிக்கத் தக்கது. பகிர்வுக்கு நன்றி அய்யா.

    ReplyDelete
    Replies
    1. அன்பான கருத்துரை தந்த, ஆசிரியர் அவர்களுக்கு நன்றி. திரையிசைப் பாடல்கள் என்றாலே,ரசிக்க வேண்டும் என்றுதானே தோன்றும்.

      Delete
    2. திரை இசைப் பாடல்கள் என்பது வியாபாரம் சென்டிமென்ட் சம்பந்தப்பட்டது. அதில் பல சமயம், முதலிரண்டு வரிகளை யாரோ எழுதி, மீதியை கவிஞர்களைக்கொண்டு முடிக்கச்சொல்வார்கள். ஆனால் பாடல் கவிஞர் பெயரில்தான் வரும். இந்த "யாரோ", இயக்குனராகவோ, கதையாசிரியராகவோ இசையமைப்பாளராகவோ அல்லது முக்கியமானவர்களாகவோ இருக்கலாம். முத்து நிலவன் ஐயா சொன்ன பாடலின் முதலிரண்டு வரிகளை எழுதியவர் இயக்குனர் பவித்திரன் என்று வாலி குறிப்பிட்டிருந்தார் என ஞாபகம். சில பல ரசக்குறைவான திரைப் பாடல்களை வைத்து ஒருவருடைய திறமையைக் கணிக்கக்கூடாது என்பது என் அபிப்ராயம். வாலி அவர்களே, காசுக்காக காம்ப்ரமைஸ் பண்ணிக்கொண்டுதான் திரை இசைப்பாடல்கள் எழுதமுடியும், எழுதியிருக்கிறேன் ஆனால் கவியரங்கத்தில் இலக்கியத்தரமாகத்தான் எழுதியிருக்கிறேன். அங்கு காம்ப்ரமைஸ் என்பதே கிடையாது என்று சொல்லியிருக்கிறார்.

      ஒரு மீனவன் பாடும் பாடல், அவனுடைய மொழி தொடர்பாக வந்தால்தான் நாம் ரசிக்கமுடியும், ரசித்தோம். மீனவன், வலையைப் போட்டுக்கொண்டே, சிலப்பதிகார இலக்கிய வார்த்தைகளைப் போட்டுப் பாடினால், கவிதை நன்றாக இருக்கும் ஆனால் அந்த இடத்தில் ஒன்றாது. இது என்னுடைய கருத்து. பெரியவர்கள் உங்களுக்கு சரியான கருத்து தெரிந்திருக்கும்.

      Delete