Sunday, 18 March 2012

சினிமா பாட்டு புத்தகம்

சின்ன வயது ஞாபகங்கள் என்று சொல்லும் போது சினிமா பாட்டு புத்தகம் மறக்க முடியாதது ஆகும். அப்போது புத்தகம் என்று சொல்ல மாட்டார்கள். புஸ்தகம் அல்லது பொஸ்தகம் என்றுதான் சொல்வார்கள். சினிமா பாட்டு புஸ்தகம் என்பது பழைய செய்தித்தாள் போன்ற ஒரு தாளில் ( சாணித் தாள் என்றே சொல்வார்கள் ) சினிமா பாடல்களை அச்சடித்து ஒரு அணா அல்லது இரண்டு அணா என்று விற்பார்கள். ஒரு சினிமாப் படம் வந்ததும் பாட்டு புத்தகமும் விற்பனைக்கு வந்துவிடும். அந்த புத்தகத்தின் அட்டைப் படம் பெரும்பாலும் அந்த படத்தின் அன்றைய போஸ்டரின் கறுப்பு வெள்ளை போட்டோ நகலாகத்தான் இருக்கும். உள்ளே அந்த படத்தின் நடிகர்கள், நடிகைகள், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என்று எல்லா விவரங்களையும் தந்து இருப்பார்கள். புத்தகத்தில் பாடலின் வரிகளை இஷ்டத்திற்கு வடிவம் கொடுத்து இருப்பார்கள்.  முக்கியமான அம்சம் படத்தின் கதைச் சுருக்கம் தந்து, கதாநாயகி என்ன ஆனாள்? கதநாயகன் கொலைகாரனைக் கண்டு பிடித்தானா? வில்லன் முடிவு என்ன? என்ற கேள்விகள் கேட்டு கடைசி வரியாக “ விடையை வெள்ளித் திரையில் காண்கஎன்று முடித்து இருப்பார்கள். இது  மறக்க முடியாத வாசகம்.

எம்ஜிஆர் சிவாஜி போன்ற பிரபல நடிகர்கள் நடித்த படங்களுக்கு திரைப்படக் கம்பெனிகளே பாட்டு புத்தகங்கள் வெளியிடுவார்கள். அது கொஞ்சம் விலை அதிகமாகவும் கொஞ்சம் தரமான வெள்ளை தாளிலும் வெளிவரும். சில சமயம் அட்டைப்படம் கலர் பிரிண்ட்டாகவும் இருக்கும். இந்த சிறப்பு சினிமா பாட்டு புத்தகங்களை தியேட்டரில் மட்டுமே கேண்டீனில் விற்பார்கள். சில தீவிர ரசிகர்கள் படம் வெளிவந்த முதல்நாளே முதல் காட்சிக்கு செல்வார்கள். போய் வந்ததை ஏதோ வீர தீர செயலைச் செய்தது போன்று பெருமையாக பேசுவார்கள். அவர்கள் கையில் இந்த புத்தகங்கள் இருக்கும். இவை ஒரு பதிப்போடு குறைந்த பிரதிகளோடு சரி!



பெரும்பாலும் இந்த சினிமா பாட்டு புஸ்தகங்களை சினிமா தியேட்டருக்கு அருகில் உள்ள பெட்டிக் கடைகளிலும், பள்ளிகளுக்கு அருகில் உள்ள தரைக் கடைகளிலும் விற்பனை செய்வார்கள். அந்தகாலத்து பத்திரிக்கைகளில் வரும் தொடர்கதைகளை பைண்டிங் செய்வது போல, பாட்டு புத்தக பிரியர்களும் சினிமா பாட்டு புஸ்தகங்களையும் பைண்டிங் செய்து வைத்து இருப்பார்கள். நான் பள்ளி விடுமுறையில் எங்கள் அம்மாவின் கிராமத்திற்கு செல்லும் போது கிராமத்து நண்பர்கள் திண்ணையின் எறவானத்தில் ( இறவானம் > சாய் கூரை (தாழ்வாரம்) செருகி வைத்து இருக்கும் சினிமா பாட்டு புஸ்தங்களை எடுத்து கொடுப்பார்கள்..தென்னந் தோப்பிற்கு எடுத்துச் சென்று, நண்பர்களோடு ராகம் போட்டு பாடுவோம். அந்த காலத்து அருமையான பொழுது போக்கு நூல்கள் அவை. அப்போது இருந்த இலங்கை வானொலியின் தமிழ்ச் சேவை ஒலி பரப்பிய பழைய திரைப் படப் பாடல்களும் சினிமா பாட்டு புத்தகங்களை வாங்க ஆர்வம் தந்தன.

முன்பெல்லாம் கோயில் திருவிழாக்கள், மாவட்டம் தோறும் அரசு நடத்தும் பொருட்காட்சிகள் ஆகிய பொது நிகழ்ச்சிகளில் இன்னிசை கச்சேரி நடைபெறும். அந்த இன்னிசை கச்சேரி நடத்த வரும் பாடகர்கள் , இசையமைப்பாளர்கள் கையில் இதுபோல் சினிமா பாட்டு புத்தகங்கள் அடங்கிய பைண்டிங்குகள் நிறைய இருக்கும். சினிமா பாட்டு புத்தகங்களை வைத்துதான் பாடுவதற்கு பயிற்சியும் எடுத்தார்கள். அப்பொழுதெல்லாம் திரைப்பட இன்னிசைக் கச்சேரிக்காரர்கள் மதுரை, சேலம் பக்கம்தான் அதிகம். அந்த ஊர்களில் இருந்துதான் மற்ற இடங்களுக்கு அழைப்பார்கள்.

இப்போதுகம்ப்யூட்டர்காலம்.எல்லாம் இண்டர்நெட்டிலேயே வந்து விடுகின்றன. பழைய மாதிரி சினிமா பாட்டு புஸ்தகங்கள் வெளி வருவதில்லை. அன்று தரையில் கிடந்து ரசிகர்களின் கைகளுக்கு வந்த பழைய சினிமா பாடல்கள்,  இன்று நல்ல தாளில் பாடலாசிரியர்களின் பெயரோடு “திரை இசைப் பாடல்கள்என்ற தொகுப்பாக நல்ல அமைப்போடு வெளி வருகின்றன. அதிலும் ஒவ்வொரு கவிஞரின் பெயரிலேயே வெளியிடுகிறார்கள். இன்னும் பழைய பாடல்களுக்கு மவுசு குறையவில்லை.

இந்த கட்டுரை சம்பந்தமாக சில பழைய சினிமா பாட்டு புஸ்தகங்களின் அட்டை படத்தை புகைப்படம் எடுத்த் போட்டால் நன்றாக இருக்கும் என்று எண்ணி, ஒரு கடைக்காரரை அணுகினேன். அவர் சினிமா பாட்டு புத்தக மொத்த வியாபாரி. அவர் “ இப்ப எல்லாம்... யார் சார் பழைய பாட்டு புஸ்தகங்களை வாங்குறாங்க. எல்லாமே இண்டர்நெட்டுலேயே பார்த்துக்கிறாங்க  “ - என்றார். பழைய புத்தக வியாபாரிகளிடமும் இல்லை. எனவே பழைய சினிமா பாட்டு புத்தகங்களின் முன் அட்டைப் படங்களை படம் பிடித்து கட்டுரையில் சேர்க்க இயலவில்லை. 

எனவே கூகிள் உதவியுடன்  தேடியதில் கிடைத்த சில படங்களை பதிவில் சேர்த்துள்ளேன். கூகிளுக்கு நன்றி!
( PICTURES :  THANKS TO  “ GOOGLE ” )






22 comments:

  1. அந்தக் காலத்தில் என்னிடமும் இதுபோல் நிறையப்
    பாட்டுப் புத்தகங்கள் இருந்தன.
    அதை வைத்திருப்பது கூட ஒரு
    பெருமைக்குரிய விசயமாக நினைத்திருந்த காலத்தை
    உங்க்கள் பதிவு நினைவுறுத்திப் போகுது
    படங்களுடன் பதிவு அருமை

    ReplyDelete
  2. Reply to //……Ramani said.....//

    கவிஞர் ரமணி அவர்களுக்கு வணக்கம்!

    // அந்தக் காலத்தில் என்னிடமும் இதுபோல் நிறையப் பாட்டுப் புத்தகங்கள் இருந்தன.//.

    கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், ஒரு காலத்தில், எல்லோருமே சினிமா பாட்டுப் புத்தக பிரியர்களாகவே இருந்திருக்கிறோம் என்பது தெரிய வருகிறது. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  3. உண்மையில் அது ஒரு பொற்காலம்...
    பாடல்களை படித்து மனம்பாடம் செய்து கொண்ட அனுபவமும் நம்மில் அநேகம்பேருக்கு இருக்கும்.

    உங்கள் போஸ்டிங்கை http://www.hotlinksin.com/ திரட்டியில் இணைத்திடுங்கள்

    ReplyDelete
  4. இன்றைக்கு விஞ்ஞானம் அசுரனாய் வளர்ந்து பல ரசனைகளை விழுங்கி விட்டது. அப்படி விழுங்கிய ரசனைகளில் இந்த பாட்டுப் புத்தகம் என்பதும் ஒன்று. அழகாய் சிறு வயதிற்குள் அழைத்துச் சென்ற NOSTALGIA பதிவுக்கு வாழ்த்துக்கள் இளங்கோ!

    ReplyDelete
    Replies
    1. எனது பாட்டு புத்தகங்கங்களையும் பதிவு செய்கிறேன்

      Delete
  5. Reply to … // HOTLINKSIN.com திரட்டி said. //

    வணக்கம்! தங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும், யோசனைக்கும் நன்றி!

    ReplyDelete
  6. Reply to … // கணேஷ் said... //
    மின்னல் வரிகள் கணேஷ் அவர்களுக்கு வணக்கம்! //அழகாய் சிறு வயதிற்குள் அழைத்துச் சென்ற NOSTALGIA பதிவுக்கு வாழ்த்துக்கள் இளங்கோ!// - என்று கருத்துரை தந்தமைக்கு நன்றி! கடந்த காலத்தை நினைத்து ஏங்குதல் என்ற பொருள் படும் NOSTALGIA என்ற தாங்கள் குறித்த சொல் நல்ல தேர்வுதான்.

    ReplyDelete
  7. படிக்கும் போதே எனக்கும் இந்த ஆர்வம் உண்டு நண்பரே மன்னாதி மன்னன் , பாலும் பழமும் பட பாட்டு புத்தகங்களை சேகரித்தவள் அருமையான பகிர்வு .

    ReplyDelete
  8. 'கணவனே கண் கண்ட தெய்வம்' படத்தின் கம்பெனி பாட்டுப் புத்தகம் ரொம்ப நாள் கையில் வைத்து மகிழ்ந்தேன். செவ்வக வடிவில் நீல கலரில் அட்டகாசமாய் இருந்த ஞாபகம் இன்னும்.
    http://kbjana.blogspot.com/2012/03/blog-post_19.html

    ReplyDelete
  9. Reply to …. // சசிகலா said...//

    வணக்கம் சகோதரி அவர்களே! அன்றைக்கு வாங்கி வைத்து இருந்த சினிமா பாட்டு புத்தகங்கள் இன்றைக்கு இருந்திருந்தால், இன்னும் சிறப்பாக வலைப் பதிவு எழுத உதவி இருக்கும். தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  10. Reply to…. // கே. பி. ஜனா... said...//

    வணக்கம்! ” செவ்வக வடிவில் நீல கலரில் அட்டகாசமாய் இருந்த ஞாபகம் இன்னும்.’’ – என்று நீங்கள் சொல்வதைப் போல செவ்வக வடிவில் மட்டுமல்ல இசைத் தட்டு வடிவிலும் சில சமயம் புத்தகங்களை வெளியிட்டார்கள். தங்கள் வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  11. அந்தக்காலத்தில் சினிமா பாட்டுப்புத்தகங்கள் தான் பெரும்பாலோர் வீடுகளிலும் இருக்கும்.

    இனிய பாடல்கள் ரேடியோவிலும் அவ்வப்போது ஒலிபரப்பாகும்.

    அது ஒரு பொற்காலம்.

    இப்போ 24 மணிநேரமும், 100 சானல்களும், வீட்டுக்குள்ளே வந்தும் கூட அந்தக்கால இனிமையான பாடல்கள் போல அவ்வளவாக ஏதும் இல்லை.

    ReplyDelete
  12. Reply to … // வை.கோபாலகிருஷ்ணன் said... //
    VGK அவர்களுக்கு வணக்கம்! “இப்போ 24 மணிநேரமும், 100 சானல்களும், வீட்டுக்குள்ளே வந்தும் கூட அந்தக்கால இனிமையான பாடல்கள் போல அவ்வளவாக ஏதும் இல்லை. “ - என்ற அந்தக் கால நினைவுறுத்தலோடு கருத்துரை சொன்னமைக்கு நன்றி!

    ReplyDelete
  13. இனிய நினைவுகள்!அந்தக்காலத்தில் பாட்டுப் புத்தகம் வாங்கிய நினைவு வருகிறது.

    ReplyDelete
  14. Reply to ……. // சென்னை பித்தன் said... //

    வணக்கம்! அந்தக் கால நினைவுகளை இந்தக் காலம் நினைவு கூறி கருத்துரை சொன்னமைக்கு நன்றி!

    ReplyDelete
  15. உண்மைதான்.சினிமா பாட்டுப் புத்தகங்களில் போடப்பட்டிருக்கும் கதை சுருக்கம் சுவாரசியமாக இருக்கும்.மீதியை வெள்ளித்திரையில் காண்க என்று போட்டு படம் பார்க்கும் ஆவலைத் தூண்டும்

    ReplyDelete
  16. Reply to ….. // T.N.MURALIDHARAN said... //

    மீசைக் கவிஞனின் வரிகளை நேசிக்கும் டி.என். முரளிதரன் அவர்களுக்கு வணக்கம்! தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  17. அன்பரே!
    தங்கள் பதிவு, மலரும் நினைவுகளாக என்
    சின்ன வயது ஞாபகங்களை கிளறிவிட்டன!
    எனக்குப் பாட வராது என்றாலும் பழைய
    பாடல்கள் மனப்பாடம்
    படங்கள் அனைத்தும் அருமை!பாராட்டிக்கள்!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  18. Reply to..... //புலவர் சா இராமாநுசம் said... //
    புலவர் அய்யாவின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  19. கவிஞர் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  20. சார்! என்னிடம் 50 சினிமா படங்களின் பாட்டு புத்தகங்கள் உள்ளன!அதே போல் யாரிடம் இருந்தாலும் எனது நம்பர் 9597963706க்கு தொடர்பு கொண்டால் பகிர்ந்து கொள்ளலாம்!நன்றி!

    ReplyDelete