Saturday 15 August 2015

டாக்டர் பிலோ இருதயநாத் – மானிடவியல் ஆராய்ச்சியாளர்



                                              (டாக்டர் பிலோ இருதயநாத் 1915 - 1986)

பள்ளியில் படிக்கும்போது, ஏதேனும் சுவாரஸ்யமான நூல் கிடைக்குமா என்று பள்ளி நூலகத்தில் தேடியபோது பிலோ இருதயநாத் எழுதிய ஒரு புத்தகம் கிடைத்தது. அவரது காடு, காட்டுவாசிகள், யானைகள் என்று அவரது பயணக் கட்டுரைகளைப் படித்தது முதல் அவரது தீவிர வாசகன் ஆனேன். அதன்பிறகு பெரியவன் ஆனதும் நூலகங்களில் இவரது நூல்களைத் தேடி படிப்பேன். அன்றைய நாட்களில் பத்திரிகைகள் வெளியிட்ட எல்லா தீபாவளி மலர்களிலும் இவரது பயணக் கட்டுரைகள் வந்திருக்கக் காணலாம்.

வாழ்க்கைக் குறிப்பு:

இவரைப் பற்றி வலைப்பதிவில் எழுதலாம் என்று முயற்சி செய்ததில் முழு விவரம் ஏதும் கிடைக்கவில்லை. அவர் எழுதிய கட்டுரைகள், அவருடைய நூல்கள் பற்றிய மற்றவர்களது விமர்சனங்களே அதிகம் இருக்கின்றன.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் பிலோ இருதயநாத் பற்றி தரும் செய்திகள் இவை.
/// சென்னை மந்தை வெளியில் உள்ள லாசர் கோவில் தெருவில் வசித்தவர். 1915ல் மைசூரில் பிறந்த இவர் சாந்தோமில் படித்தார். பள்ளி ஆசிரியராக இருபத்தைந்து ஆண்டுகாலம் வேலை செய்திருக்கிறார் …….. ……. பிலோ இருதயநாத்தின் அப்பா டாக்டர் ஏ.எப். மைக்கேல். பொது மருத்துவர். உலக யுத்ததின் போது கேப்டனாக பணியாற்றியிருக்கிறார். அதனால் பல்வேறு நாடுகளுக்கு சென்று வந்த அனுபவம் அவருக்கிருந்தது. இருதயநாத்தின் தாய்வழி பாட்டனோ, இந்தியாவிற்கு வரும் வெள்ளைக்காரர்களுக்கு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை சுற்றிக்காட்டும் வழிகாட்டி. ஆகவே அவரும் ஒரு ஊர்சுற்றியே. ….. ….. ஒரு சைக்கிள். தலையில் தொப்பி, கறுப்பு கண்ணாடி, பாக்ஸ் டைப் கேமிரா  அணிந்த அவரது தோற்றம் தனித்துவமானது. ///

இருபத்து ஐந்து ஆண்டுக் காலம் தமிழாசிரியராக பணிபுரிந்த இவருக்கு,  தமிழக அரசின் நல்லாசிரியர் விருது (1960), இந்திய அரசின் நல்லாசிரியர் விருது (1978) மற்றும் டாக்டர் பட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த ஆசிரியர் பணிக்கு இடையிலும், தான் வைத்து இருந்த அந்த காலத்து சைக்கிளிலேயே பயணம் சென்று, பல பழங்குடி மக்களைக் கண்டு உடனிருந்து அவர்களைப் பற்றிய பல விவரங்களை சுவைபட கட்டுரைகளாக எழுதி உள்ளார். நீலகிரி படுகர் இன மக்களைப் பற்றிய இவரது குறிப்புகள் மிகவும் சுவாரஸ்யமானவை. பல பயணக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூல்களாக வெளி வந்துள்ளன. தமிழாசிரியரான இவரது பயணக் கட்டுரைகளில் பல இடங்களில் புறநானூறு போன்ற சங்க இலக்கியச் செய்திகளும் இடம் பெற்றுள்ளன.

ஒருமுறை குமுதத்தில் வெளிவந்த அவரது கட்டுரையில், அவரது பெயரை ஆபிலோ ஐயோ இருதயநாத் என்று தப்பாக அச்சிட்டு விட்டார்கள். ஆனாலும் டாக்டர் பிலோ இருதயநாத் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.


 டாக்டர் பிலோ இருதயநாத் அவர்களது பயணக் கட்டுரைகள்  பற்றிய பல்வேறு செய்திகள், படங்கள் ஆகியவற்றை  www.facebook.com/researcher.philo?fref=nf என்ற ’பேஸ்புக்’ முகவரியில் அறிந்து கொள்ளலாம். அதில் உள்ள அதிகப்படியான தகவல்களை அப்படியே இங்கு எடுத்து எழுதுவது சரியன்று என்று நினைக்கிறேன்.

இவரது நூல்கள்:

டாக்டர் பிலோ இருதயநாத் அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதி உள்ளார். பல கட்டுரைகள் நூல்களாக வெளி வந்துள்ளன. அனைத்தும் மானிடவியல் கட்டுரைகள்.

ஆதிவாசிகள் (கலைமகள் காரியாலயம், சென்னை)
மேற்கு மலைவாசிகள் (மல்லிகை பதிப்பகம், சென்னை)
காட்டில் என் பிரயாணம் (இளங்கோ பதிப்பகம், சென்னை)
அறிவியல் பூங்கா (இளங்கோ பதிப்பகம், சென்னை)
காட்டில் மலர்ந்த கதைகள் (வானதி பதிப்பகம், சென்னை)
காட்டில் கண்ட மர்மம் (வானதி பதிப்பகம், சென்னை)
யார் இந்த நாடோடிகள் (வானதி பதிப்பகம், சென்னை)
பழங்குடிகள் (தமிழ் செல்வி நிலையம், சென்னை)
ஆதிவாசிகள் மறைந்த வரலாறு (தமிழ் செல்வி நிலையம்)
காடு கொடுத்த ஏடு ((தமிழ் செல்வி நிலையம்)
இமயமலை வாசிகள் (மல்லிகை பதிப்பகம், சென்னை)
கேரளா ஆதிவாசிகள் (வானதி பதிப்பகம், சென்னை)
நீலகிரி படுகர்கள் (வானதி பதிப்பகம், சென்னை)
கொங்கு மலைவாசிகள் (தென்றல் நிலையம், சிதம்பரம்)
கோயிலும் குடிகளும் (தென்றல் நிலையம், சிதம்பரம்)
தமிழக ஊர்களின் தனிச்சிறப்பு (தென்றல் நிலையம், சிதம்பரம்)
குறிஞ்சியும் நெய்தலும் (தென்றல் நிலையம், சிதம்பரம்)
கோயிலைச் சார்ந்த குடிகள் (தென்றல் நிலையம், சிதம்பரம்)

// ஓர் அரசின் அல்லது பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சித் துறையினர் எடுத்துச் செய்யவேண்டிய பெரும்பணியை, ஒரு தனி மனிதனாய் நின்று, பொருட் செலவையும், பிரயாசையையும் களைப்பையும் தவிப்பையும், கண்விழிப்பையும், உடல்நலத்தையும் பொருட்படுத்தாமல் 'முயற்சி திருவினையாக்கும்',  'கருமமே கண்ணாயினார்’ என்ற முதுமொழிகளுக்கேற்ப,  முயன்று முடித்தவர் பிலோ இருதயநாத்.  // -

என்று  பாராட்டுகிறார் , கடாரத் தமிழ்ப் பேரறிஞர் டாக்டர் எஸ். ஜெயபாரதி அவர்கள். (அபூர்வ எழுத்தாளர் பிலோ இருதயநாத்)

டாக்டர் பிலோ இருதயநாத் எழுதிய 63 நூல்களில் 37 மட்டுமே புத்தகமாக வெளிவந்துள்ளன. இன்னும் அச்சிடப்பட வேண்டிய கட்டுரைகளும் உண்டு. யாரேனும் இவற்றை அச்சில் அல்லது மின்நூல்களாக கொண்டு வந்தால் நல்லது. அவருடைய வாரிசுகள் யார், எங்கு இருக்கிறார்கள் என்ற விவரம் தெரிந்தால் அவர்களிடம் நமது கருத்தை சொல்லலாம்.

கட்டுரை எழுத துணை நின்றவை:

                     அனைவருக்கும் எனது உளங்கனிந்த 
                   இந்திய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்!

24 comments:

  1. டாக்டர் பிலோ இருதயநாத் குறித்த அறிய தகவல்களுக்கு நன்றி
    இனிய சுதந்திர தின வாழ்த்துகள்
    தமிழ் மணம் இணைப்புடன் ஒன்று.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  2. சிறுவயதில் இவருடைய கட்டுரைகளை ஆவலுடன் படித்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அய்யாவின் கருத்துரைக்கு நன்றி. இன்றைக்கும் அவருடைய கட்டுரைகளைக் கண்டால் பழைய ஆர்வத்துடன் படிக்க தூண்டும்.

      Delete
  3. உங்கள் எழுத்து அவரைப்பற்றி படிக்க துண்டுகிறது அய்யா... தகவலுக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. அன்பு தம்பி ஸ்ரீமலையப்பன் B ஸ்ரீராம் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. நீங்கள் டாக்டர் பிலோ இருதயநாத் நூல்களை அவசியம் படிக்க வேண்டும்; அவை உங்களைப் போன்ற இளைஞர்களுக்கு சுவாரஸ்யமானவை.

      நீங்கள் இப்போதுதான் வலைப்பக்கம் புதிதாக எழுதத் தொடங்கி இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் புதுக்கோட்டையில் இருப்பதால், கவிஞர் ஆசிரியர் முத்துநிலவன் அய்யா அவர்களுடன் ( http://valarumkavithai.blogspot.com ) வலைப்பதிவு சம்பந்தமாக, தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.


      Delete
  4. இவரைப் பற்றி சில கட்டுரைகள் படித்துள்ளேன். தங்களது பதிவு மூலமாக அதிகமான செய்திகளை அறிந்தேன். நன்றி. இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி. அவர் பழங்குடிகளைத் தேடி அலைந்தது போல, தற்போது நீங்கள் தமிழ்நாட்டில் பவுத்தத்தை தேடி அலைகின்றீர்கள். உங்கள் முயற்சி வெற்றி பெறட்டும்.

      Delete
  5. நம்மால் பயணித்து அறியமுடியாத தகவல்களை சுவாரஸ்யமாக தந்ததால், எனக்கும் திரு பிலோ இருதயநாத் அவர்களின் எழுத்து பிடிக்கும். எனக்கு பிடித்த எழுத்தாளர் அவர். அவர் ஒரு தமிழாசிரியர் என்பதை தங்கள் பதிவின் மூலம் தான் அறிந்தேன். புதியாய் தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி!

    இனிய விடுதலை நாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. அய்யா V.N.S அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நான் அவரை ஒரு அரசாங்க அதிகாரியாக இருந்திருப்பார் என்று நினைத்து இருந்தேன்.

      Delete
  6. இன்று தான் பிலோ இருதயநாத் பற்றி தங்கள் பகிர்வின் மூலம் தெரிந்துகொண்டேன். 6000 கட்டுரைகள் எத்தனை தேடல் நிறைந்திருக்கும் படிக்கும் ஆவல் எழுகிறது. அதற்கான லின்க்கும் கொடுத்திருக்கிறீர்கள் சென்று பார்க்க வேண்டும். பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. இங்கு எங்கள் மாவட்ட மைய நூலகத்தில் அவரது நூல்கள் உண்டு. உங்கள் பகுதி நூலகங்களிலும் அவரது நூல்கள் இருக்கும். அவசியம் எடுத்து படிக்கவும்.

      Delete
  7. thanks ayya; i know philo iruthiyanath. some books

    ReplyDelete
    Replies
    1. அனானிமஸ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  8. பிலோ இருதயநாத் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் தளிர் சுரேஷ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  9. எத்தனை சிறப்பான பணியினைச் செய்திருக்கிறார் அவர். அவர் குறித்த பல தகவல்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நண்பரே.

    சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நானே உங்கள் பயணக் கட்டுரைகளைப் படிக்கும் போது, உங்களை இன்னொரு பிலோ இருதயநாத் என்று நினைத்துக் கொள்வதுண்டு. இதுபற்றி கருத்துரைகளும் எழுதி இருக்கிறேன்.

      Delete
  10. டாக்டர் பிலோ இருதயநாத் போற்றுதலுக்குஉரியவர்
    அவரது எழுத்துக்களும் எண்ணங்களும்
    நூலாய் வெளிவர வேண்டும்
    தம +1

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  11. ஜோரான பதிவு
    அப்பாவும் அம்மாவும் இவர்குறித்து சிலாகித்து பேசிக்கொண்டிருப்பார்கள் ..
    தம +

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் எஸ்.மது அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      /// அப்பாவும் அம்மாவும் இவர்குறித்து சிலாகித்து பேசிக் கொண்டிருப்பார்கள் ///

      அப்படியானால் உங்கள் பெற்றோர் ஆசிரியர்களாத்தான் இருக்க வேண்டும். என் யூகம் சரியா?

      Delete
  12. சிறிய வயதில் படித்ததுண்டு. கல்லூரி சமயத்து கொஞ்சம்....அதன் பின்னர் வாசிக்க இயலவில்லை. தங்களின் பதிவு மூலம் வேறு பல தெரிந்து கொண்டோம். நல்ல பதிவு ஐயா!

    ReplyDelete