Saturday, 1 August 2015

டாஸ்மாக்கை மூடிவிட்டால் போதுமா?கட்டுரையைத் தொடங்குவதற்கு முன்பே சொல்லி விடுகிறேன். எனக்கு பீடி,சிகரெட் புகைக்கும் பழக்கமோ; வெற்றிலை, பாக்கு, புகையிலை போடும் பழக்கமோ; மது அருந்தும் பழக்கமோ கிடையாது.

ஆட்சியைப் பிடிக்க:

 இந்த அரசியல்வாதிகள். ஒவ்வொரு தேர்தலின் போதும் தமிழ்நாட்டில் ஒரு பிரச்சினையைக் கையில் எடுத்துக்கொண்டு ஆட்சியைப் பிடிக்க முனைகிறார்கள்.  விலைவாசி உயர்வு, படி அரிசித் திட்டம், ஊழல் ஒழிப்பு, இலங்கைத் தமிழர் பிரச்சினை, மது விலக்கு,  இன்ன பிற என்று சொல்லலாம். உண்மையில் பெரும்பாலான மக்கள் இந்த பிரச்சினைகளை முன்னிட்டு ஓட்டு போடுவதில்லை. இன்று தி.மு.க. நாளை அ.தி.மு.க என்றுதான் அரசியல் போய்க் கொண்டு இருக்கிறது. அதிலும் “யார்தான் ஊழல் செய்யவில்லை;  ஊழல் செய்தால் தப்பே இல்லை” என்று வியாக்கியானம் செய்யும் காலமாக இன்று மாறி இருக்கிறது.

இப்போது டாஸ்மாக் எதிர்ப்பு. டாஸ்மாக்கை மூடிவிட்டால் உடனே தமிழ்நாட்டில் இதுவரை அங்கே குடித்துக் கொண்டு இருந்த குடிகாரர்கள் எல்லோரும் குடிப்பதை விட்டுவிடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இந்த குடிகாரர்கள் அப்படியே கள்ளச் சாராயத்தை தேடுவார்கள். அல்லது சாராயக் கடை உள்ள பாண்டிச்சேரி போன்ற பக்கத்து மாநிலத்திற்கு போய் வருவார்கள் கட்டாய ஹெல்மெட் போலீசார் போல் மதுவிலக்கு போலீசாரும் அதிகமாக உழைப்பார்கள். கள்ளச்சாராயம், கள்ளச்சாராய சாவுகள், கள்ளச்சாராய புள்ளிகள் என்று செய்திகளை அடிக்கடி பத்திரிகையில் காணலாம். எனவே ஒருநாளில் எல்லோரையும் திருத்திவிட முடியாது. படிப்படியாகத்தான் செய்ய வேண்டும்.

பழைய காங்கிரஸ் ஆட்சியில்:

எனது சின்ன வயதில், (அறுபதுகளில்) அப்போது காங்கிரஸ் ஆட்சியில் மதுவிலக்கு தீவிரமாக இருந்தது; சிவப்பு தொப்பி அணிந்த முழங்காலுக்கு மேலே முட்டி தெரிய காக்கி டவுசர், சட்டை போட்ட (உயரமான) போலீசார் வருவார்கள். ஆசாமி குடித்திருக்கிறானா இல்லையா இல்லை என்பதை தெரிந்து கொள்ள வாயை ஊதச் சொல்லுவார்கள். சாராய வாடை வீசினால் உடனே அவர்களை ‘லபக்கி’ கருப்புநிற போலீஸ் வேனில் ஏற்றி கொண்டு சென்று தண்டனை வாங்கிக் கொடுப்பார்கள். எனவே போலீஸ்காரர்கள் என்றாலே குடிகாரர்களுக்கு பயம்தான். டவுனில் மட்டும் இல்லாது கிராமத்திலும் இந்த ரெய்டுகள் நடக்கும். உண்மையில் மதுவிலக்கு இருந்தது.

எனது அனுபவம்:


பல குடிகாரர்கள் சாராயத்தை (அப்போது கள்ளச் சாராயம்தான் ) குடித்துவிட்டு ரோட்டில் அலங்கோலமாகக் கிடப்பதைக் கண்டு அருவெறுப்பு அடைந்தவன் குடித்துவிட்டு தனது குடும்பத்தை நாசமாக்கியவர்களை கண்கூடாக பார்த்து இருக்கிறேன். மேலும் நான் பார்த்த சினிமாப் படங்களில் எனது ஹீரோ எம்ஜிஆர்தான். அவருடைய ரசிகன். எம்ஜிஆர் அவர்கள், தான் நடித்த படங்களில் மதுவிலக்கு பிரச்சாரம் செய்ததோடு அவரும் தனது தனிப்பட்ட வாழ்வில் அப்படியே கடைபிடித்தார். இதனால் இயல்பாகவே மது என்றால் எனக்கு வெறுப்பு. குடிகாரனாக இல்லை. (அவரே ஆட்சிக்கு வந்த பிறகு, பின்னாளில் இந்த சாராயக்கடைகளைத் திறந்தபோது மனவேதனை அடைந்தேன்)

 தி.மு.க ஆட்சியின் போது கருணாநிதி கள்ளுக்கடைகளைத் திறந்த நேரம். எனது நண்பன் அவனுடைய அப்பாவிற்காக கள்ளு வாங்க சைக்கிளில் செல்லும்போது என்னையும் அழைப்பான். நானும் ஒரு ஜாலிக்காக அவன் சைக்கிளில் பின்னால் அமர்ந்து செல்வேன். அப்போதெல்லாம் வீதியில், தி.மு.க கூட்டங்களில் “கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே” என்ற பாடலை ஒலி பரப்புவார்கள். நாங்கள் இருவரும் இந்த பாடலை மாற்றி “கள்ளுக்கடை திறந்த கருணாநிதி  வாழ்கவே” என்று சிரித்துக் கொண்டு பாடியபடியே செல்வோம். ஆனாலும் நாங்கள் ஒருநாள் கூட கள்ளை சாப்பிட்டது கிடையாது.  நான் வேலைக்குச் சேர்ந்தவுடன் ( தி.மு.க அல்லது அ.தி.மு.க என்று மாறி மாறி வந்த ஆட்சிகளில் மதுவிலக்கே கிடையாது) இந்த சாராயக்கடை பக்கம் போனதே கிடையாது. பணிபுரிந்த இடத்தில் நடக்கும் , இந்த பார்ட்டிகளில் கலந்து கொள்வதே கிடையாது. ஒரு நண்பர் “ நீ ரிடையர்டு ஆவதற்குள், அரை டம்ளர் பீராவது நீ குடிக்கும்படி செய்து விடுவேன்” என்றார். அவர் ஆசை நிராசை ஆனதுதான் மிச்சம். இன்றைக்கும் என்னைப் போல, குடிக்காதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.                                    

மதுவிலக்கு பிரச்சாரம்:

எனவே இந்த மதுவை ஒழிக்க சிறந்தவழி தீவிர மதுவிலக்குப் பிரச்சாரம் மற்றும் ஊர் தோறும் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு  பயிற்சி முகாம் செய்தல் மட்டுமே ஆகும். அப்புறம் குடிப்பவர்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.  மாணவர்கள் தங்கள் குடும்பத்தில் மட்டுமல்லாது மற்றவர்களிடையேயும் 
இந்த மதுவிலக்கு பிரச்சாரத்தை தொடர்வார்கள். அப்புறம் கடையே இருந்தாலும் குடிக்க ஆள் இருக்காது.

”தைரியமாகச் சொல் நீ மனிதன்தானா?” என்ற எம்ஜிஆரின் சினிமாப்பாடலை கண்டு கேட்டு சிந்திக்க கீழே உள்ள இணையதள முகவரியைச்( CLICK ) சொடுக்கவும்

                                                  (ALL  PICTURES COURTESY: GOOGLE IMAGES)40 comments:

 1. எதையும் சட்டம் போட்டு ஒழித்து விட முடியாது சட்டங்களால் தடுக்க முடிந்தால் எப்போதோ குடிப் பழக்கம் ஒழிக்கப் பட்டிருக்கும்.ஆனாலும் ஓரளவுக்கு கட்டுப் படுத்த முடியும். இப்போது ஹெல்மட் போட்டுக் கொண்டு செல்பவர்களை அதிக மாக போட்டிருக்கிறது. அது போல குடிப்பழக்கமும் சட்டத்துக்கு பயந்து குறைய வாய்ப்பு உண்டு. அந்த நிலையில் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். முழுமையான மது ஒழிப்பு சாத்தியமில்லை என்றுதான் தோன்றுகிறது

  ReplyDelete
  Replies
  1. சகோதரர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நீங்கள் சொல்வது சரிதான். முழுமையான மது ஒழிப்பு என்பது இங்கே சாத்தியமில்லை.

   Delete
 2. இந்த மதுவை ஒழிக்க சிறந்தவழி தீவிர மதுவிலக்குப் பிரச்சாரம் மற்றும் ஊர் தோறும் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு  பயிற்சி முகாம் செய்தல் மட்டுமே ஆகும்.
  அப்புறம் குடிப்பவர்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.  மாணவர்கள் தங்கள் குடும்பத்தில் மட்டுமல்லாது மற்றவர்களிடையேயும் 
  இந்த மதுவிலக்கு பிரச்சாரத்தை தொடர்வார்கள். அப்புறம் கடையே இருந்தாலும் குடிக்க ஆள் இருக்காது.//

  sariyaaka sonnirkal sir.

  ReplyDelete
  Replies
  1. .சகோதரர் திருப்பதி மஹேஷ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. மாணவர்கள் மூலம் மட்டுமே மதுவிலக்கு பிரச்சாரம் என்பது சாத்தியம்.

   Delete
 3. மதுவிலக்கு வருமோ, வராதோ... இந்த மனநோய் - தானாக திருந்தினால் தான் உண்டு...

  ReplyDelete
  Replies
  1. சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
   டாஸ்மாக்கை மூடுவதற்கு முன்பு குடியை ஒழிக்கும் மனநோய் மருத்துவமனைகளை அரசாங்கம் நிறைய திறக்க வேண்டும்.

   Delete
 4. முன்பெல்லாம் குடிகாரனுக்கு பென் கொடுக்க மாட்டார்கள்.. இப்போது மணவிழாவில் மது ஒரு அங்கமாகி விட்டது..

  குடிகாரர்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்ததில் மன அழுத்தம் அதிகமாகி விட்டது.. வேதனை தான் மிச்சம்!..

  ReplyDelete
  Replies
  1. “காலம் மாறிப் போச்சு” - சகோதரர் தஞ்சையம்பதி துரை.செல்வராஜூ அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

   Delete
 5. தீவிர மது விலக்கு அமல் செய்யப் படவேண்டும் 1950-60 களில் பிறந்திருந்தோரில் பலருக்கும் இந்த மது அருந்தும் பழக்கம் கிடையாது.மது விலக்கு அமலில் இருக்கும் போதும் குடித்தவர்கள் (கள்ளச் சாராயம் ) die hard drinkers. அவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. மது விலக்கு எடுத்தபின் பலரும் இளைஞர்கள் குறிப்பாக மதுவுக்கு அடிமை ஆகிறார்கள்.மது விலக்கு இருந்தால் சட்டம் போட்டு ஒழிக்கமுடியாவிட்டாலும் கணிசமான அள்வில்குறைக்க முடியும்

  ReplyDelete
  Replies
  1. அய்யா G.M.B அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

   // 1950-60 களில் பிறந்திருந்தோரில் பலருக்கும் இந்த மது அருந்தும் பழக்கம் கிடையாது.மது விலக்கு அமலில் இருக்கும் போதும் குடித்தவர்கள் (கள்ளச் சாராயம் ) die hard drinkers. அவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. //
   நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். ஏனெனில் நான் படித்த காலத்தில் குடிகாரன் என்றால் பிள்ளைகள் அப்பனை வெறுத்த காலம் நான் பிறந்தது 1955 இல்.

   Delete
 6. டாஸ்மாக்கை மூடிவிட்டால் மட்டும் போதாதுதான். ஆனாலும் இது ஒரு தொடக்கமாக இருக்கட்டுமே. சட்டம் இயற்றியதோடு நிற்காமல் அரசு தீவிரமாக கண்காணித்து விதியை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இன்றைக்கு குடித்து தங்கள் வாழ்வை தொலைப்போரை முழுமையாக தடுக்கமுடியாவிட்டாலும் தாங்கள் கூறியபடி மதுவிலக்குப் பிரச்சாரம் மற்றும் ஊர் தோறும் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடத்தினால் எதிர்கால சந்ததியினரை காப்பாற்றலாம்.

  ReplyDelete
  Replies
  1. அய்யா V.N.S அவர்களின் கருத்துரைக்கு நன்றி. இதுவரை குடித்தவர்கள், இப்போது குடிக்கின்றவர்களில் திருத்த முடிந்தவர்களை திருத்துவோம். எனினும் வருங்கால சந்ததியினர் குடியிலிருந்து விடுபட வேண்டும் என்ற உங்கள் நல்லெண்ணம் நிறைவேற வேண்டும்.

   Delete
 7. சட்டங்களால் யாரையும் திருத்தமுடியாது. மதுவிலக்கு கொணர்ந்தாலும் கள்ளச்சாராயம் என்ற நிலையில் மக்கள் வீணாவர். ஏனென்றால் அந்த அளவிற்கு பலர் குடிமக்களாகிவிட்டனர். தாமாகத் திருந்தினால்தான் உண்டு. உரிய விழிப்புணர்வினை முன்வைப்பதன்மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வு காணலாம்.

  ReplyDelete
  Replies
  1. அய்யா முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

   Delete
 8. மது விற்பனையில் வரும் வருமானத்தைக் கொண்டு தான் அரசு இன்று பல்வேறு நலத்திட்டங்களை அமல் படுத்தி வருகிறது.

  என்னென்ன திட்டங்கள் இவை ? அவை எத்தனை செலவினை ஏற்படுத்துகின்றன, மது விற்பனை வருமானம் இல்லாவிடின் இவற்றை எப்படி அரசு சமாளிக்கும் என்பதை எல்லாம் புள்ளி விவரத்துடன் ஆங்கில நாளேடு தா ஹிந்து பிரசுரித்து இருந்தது.

  ஆக, இந்தக் கால கட்டத்தில் மது விலக்கு கொண்டு வந்தாலும் அதை ஒரு உடனடியாக அமல் படுத்த முடியாது. மேலும் அந்தத் துறையில் வேலை பார்க்கும் லட்சத்திற்கும் மேல் பட்ட ஊழியர்களை அரசே எடுத்துக்கொள்ளுமா என்பதையும் கவனிக்க வேண்டும்.

  இன்னும் ஒன்று. மது விலக்கு இப்போது கொண்டு வரப்பட்டாலும் அதன் வெளிப்பாடு, பலன் யாவையுமே இந்த ஒரு பத்து பதினைந்து ஆண்டுகட்கு தெரியாது. இப்போது குடிக்க பழக்கத்தில் இருக்கும் இளம் வயதினரை ஒரே நாளிலோ ஒரு வருடத்திலோ நிறுத்திட இயலாது.

  இவை எல்லாம் எல்லா கட்சிகளுக்கும் நன்றாகவே தெரியும்.

  பின்னும் எதற்காக இந்த கோஷங்கள் ??

  குமுதத்தில் ஒரு கார்டூன் கவனித்தீர்களா ?


  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. அய்யா சூரி என்கிற சுப்பு தாத்தா அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. நீங்கள் சொல்வது சரிதான். இந்த மதுப் பிரியர்களை ஒரே நாளில் புத்தர்களாக மாற்றிவிட முடியாது.

   எங்கள் வீட்டில் இந்த வாரப் பத்திரிகைகள் பலவற்றை வாங்குவதை நிறுத்தி விட்டோம். எனவே குமுதம் கார்ட்டூன் என்னவென்று தெரியாது. நாளை வாங்கிப் பார்க்கிறேன்.

   Delete
 9. அன்று குடித்தால் சிறை செல்ல வேண்டும்...இன்று குடிக்காவிட்டால் சிறை செல்ல வேண்டும்.. இதுதான் வல்லரசு அய்யா...

  ReplyDelete
  Replies
  1. தோழர் வலிப்போக்கன் அவர்களது கருத்துரைக்கு நன்றி. அன்று ஜெயில்; இன்று பெயில். அவ்வளவுதான்.

   Delete
 10. தங்கள் பதிவில் கூறியுள்ள அனைத்தும் உண்மையே!

  ReplyDelete
  Replies
  1. புலவர் அய்யாவின் கருத்துரைக்கு நன்றி.

   Delete
 11. பெண்கள் மனசு வைத்தால் ஊரில் ஒரு சாரயக் கடையும் இருக்காது!

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமாக. வடக்கில் ஏதோ ஒரு ஊரில் , சாராயம் குடிப்பவர்களுக்கும் விற்பவர்களுக்கும் பெண்கள் விளக்குமாற்று பூசை கொடுப்பதாக இன்று செய்தி படித்தேன். சகோதரரின் மேலான கருத்துரைக்கு நன்றி.

   Delete
 12. //அப்போதெல்லாம் வீதியில், தி.மு.க கூட்டங்களில் “கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே” என்ற பாடலை ஒலி பரப்புவார்கள். நாங்கள் இருவரும் இந்த பாடலை மாற்றி “கள்ளுக்கடை திறந்த கருணாநிதி வாழ்கவே” என்று சிரித்துக் கொண்டு பாடியபடியே செல்வோம்.//

  - சிரிப்பான சம்பவம்...!

  ReplyDelete
  Replies
  1. சகோதரரின் நகைச்சுவை ரசனைக்கு நன்றி.

   Delete
 13. //குமுதத்தில் ஒரு கார்டூன் கவனித்தீர்களா ? //

  சுப்பு தாத்தா கேட்ட அந்த கார்ட்டூன் என்ன?

  ReplyDelete
  Replies

  1. எங்கள் வீட்டில் இந்த வாரப் பத்திரிகைகள் பலவற்றை வாங்குவதை நிறுத்தி விட்டோம். எனவே குமுதம் கார்ட்டூன் என்னவென்று தெரியாது. நாளை வாங்கிப் பார்க்கிறேன்.

   Delete
 14. இன்றைய சினிமாவில் மது அருந்துவது மகிழ்ச்சியின் உச்சம் என்பதுபோல் தொடர்ந்து காட்டப் படுவதால் மாணவர்களும் இந்த பழக்கத்திற்கு விரும்பி வருகிறார்கள். இது மிகவும் ஆபத்தான போக்கு. இதை மாற்றுவதற்கு ஊடகங்கள் முன் வர வேண்டும்.
  த ம 11

  ReplyDelete
  Replies
  1. கருத்துரை தந்த சகோதரர் எஸ்.பி. செந்தில் குமார் அவர்களுக்கு நன்றி. சினிமாவில் மது. நல்லவேளை நினைவு படுத்தினீர்கள். நீங்கள் சொல்வது போல சினிமா, சின்னத் திரை ஆகியவற்றில் மதுவிலக்கு காட்சிகளை அவசியம் புகுத்த வேண்டும்.

   நகைச்சுவை என்ற பெயரில் சிரிப்பு நடிகர்கள் மது குடித்துவிட்டு செய்யும் அலம்பல் காட்சிகளைப் பார்த்தாலே எரிச்சல்தான். இங்கு ஹீரோக்களும் விதி விலக்கு அல்ல.

   சினிமாவில் புகை பிடிக்கும் காட்சிகளில் நடித்ததற்காக ரஜினி மற்றும் குடிக்கும் காட்சிக்காக தனுஷ் ஆகியோரை கண்டிக்கும் சின்ன அய்யா, பெரிய அய்யாக்கள், படம் முழுக்க பாட்டிலும் கையுமாக வரும் சிரிப்பு நடிகர் சந்தானத்தை மட்டும் ஒன்றும் சொல்வதில்லை. ஏன் என்று தெரியவில்லை.

   Delete
 15. அது மட்டுமல்ல இப்போதிருக்கும் குடி நோயாளிகளுக்காக மருத்துவமனைகளைத் திறந்து அவர்களை குடிமறக்கச் செய்யும் பணியும் அரசுக்கு உண்டு.

  மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

  God Bless You

  ReplyDelete
  Replies
  1. வேதாந்தி (வெட்டிப் பேச்சு) அவர்களது கருத்துரைக்கு நன்றி

   Delete
 16. மதுவிலக்கு சட்டம் கொண்டு வருவது மிகவும் அவசியம். முழு மனதுடன் நிறைவேற்றினால் எதுவும் முடியும். அந்த நிலையிலும் தடங்கல்களை மீறி குடிக்கும் மக்கள் ஒரு விதிவிலக்காகவே காணப்படுவர். குடியினால் தற்போது சீரழிபவர்கள் அநேகம் பேர் தற்போதய அரசு (விலையிலா)பயன் திட்டங்களில் பயனாளிகள் ஆவர். குடியை மறுத்தால் தங்கள் சொந்த வருமானத்திலயே தங்கள் தேவைகளை அவர்கள் சரி செய்ய இயலும். இப்போது தமிழக மக்களை , குறிப்பாக இளைஞர்களை , குடி மிகவும் சீரழித்துள்ளது. எனவே இப்போதைய நிலையில் மது விலக்கிற்கு எதிராக வைக்கும் எந்த வாதமும் சரியானதல்ல.

  ReplyDelete
  Replies

  1. சகோதரர் பாபு அவர்களது கருத்திற்கு நன்றி. முழு மதுவிலக்கு என்பது, மதுப்பிரியர்கள் முழுதுமாக குடிக்கும் பழக்கத்தை நிறுத்தினால் மட்டுமே சாத்தியம். மதுவிலக்கு பிரச்சாரத்தை, எய்ட்ஸ் ஒழிப்பு பிரச்சாரம் போல தீவிரப் படுத்த வேண்டும்.

   Delete
 17. "இந்த மதுவை ஒழிக்க சிறந்தவழி தீவிர மதுவிலக்குப் பிரச்சாரம் மற்றும் ஊர் தோறும் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு பயிற்சி முகாம் செய்தல் மட்டுமே ஆகும். அப்புறம் குடிப்பவர்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். மாணவர்கள் தங்கள் குடும்பத்தில் மட்டுமல்லாது மற்றவர்களிடையேயும் இந்த மதுவிலக்கு பிரச்சாரத்தை தொடர்வார்கள். அப்புறம் கடையே இருந்தாலும் குடிக்க ஆள் இருக்காது." என்ற தெளிவுரையை ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. கவிஞர் யாழ்பாவாணன் அவர்களது கருத்துரைக்கு நன்றி.

   Delete
 18. உண்மைதான் ஐயா
  விழிப்புணர்வை ஏற்படுத்துதலே சிறந்த வழி
  நன்றி ஐயா
  தம +1

  ReplyDelete
  Replies
  1. சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களது கருத்துரைக்கு நன்றி,

   Delete
 19. மது என்பதற்கான விழிஇப்புணர்வு இப்போது எவ்வளவு பேசினாலும் அது அருந்துவது தவறு இல்லை என்பது போல திரைப்படங்க்ளிலும், சீரியல்களிலும் காட்டப்படுகின்றது....அது ஒரு ஸ்டேட்டச் சிம்பல் போலும். மலையாள நாட்டில் வீட்டில் அப்பா, மகன் உறவிவர் என்று அருந்துவது ஒரு சமூக கலாச்சாரமாகவே இருக்கின்றது. பல படங்களிலும் அப்படித்தான் காட்டப்படுகின்றது. இவ்வாறு காட்டப்படும் போது இளைஞர்கள் எப்படித் திருந்துவார்கள்? விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அவர்களாக உணர்ந்து திருந்த வேண்டும். மதுவை ஒழித்தால், கள்ளச்சாராயம் தலை தூக்கும். இது அடித்தட்டு மக்களுக்கு மட்டுமல்ல, அரசிய்லில் உள்ளவர்கள், னம்மை ஆள்பவர்களே அதை அருந்தும் போது, ஏன் மருத்துவர்களே மது அருந்தும் போது, ஆசிரியர்களே மது அருந்தும் போது எப்படி அதை அவர்கள் விழிப்புணர்வு என்று சொல்லிக் கொண்டு வருவார்கள்? ஆட்சியாளர்கள் முகமூடி அணிந்து தனியார் மதுக்கடை நடத்துகின்றார்கள்.

  திரைப்பட அரங்குகளில் இடைவேளையில் புகைப்பிடிப்பது தீங்கு என்று விளம்பரம் வரும். ஆனால் வெளியில் புகைப்பிடிப்போர் அதிகம். அது போல மது அருந்துவது கேடு என்று வந்தாலும் அருந்துவது குறையுமா என்று தெரியவில்லை. நாம் தான் அதைப் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதி வந்து கொண்டிருக்கின்றோம்...நமது ஆதங்கத்தை எழுத்துகளில்.

  கேரளத்தில் பொது இடங்களில் புகைபிடிப்பது இல்லை...ஆனால் வீடுகளில் தோட்டங்களில், மரங்கள் அடந்த பகுதிகளில், (போலீஸ் வராத பகுதிகளில்) பிடிக்கத்தான் செய்கின்றார்கள். எனவே மக்களாகத் திருந்தினால் தான் உண்டு....

  கீதா

  ReplyDelete
  Replies
  1. சகோதரி அவர்களின் கருத்துரையை அப்படியே வாசகர்களுக்கு வழி மொழிகின்றேன். தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

   Delete

 20. உடன்படுகிறேன்.. திடீரென்று ஒட்டுமொத்த டாஸ்மாகையும் மூடுவது நல்லதல்ல .. படிபடியாக முதலில் விற்கும் நேரத்தைக் குறைக்கவேண்டும்.. மது பற்றிய விழுப்புனர்னு முகாம்களை நடத்த வேண்டும்.... மக்கள் ஓரளவு தெளிவு பெற்ற பிறகு மொத்தமாக மூடிவிடலாம். tm13

  ReplyDelete
  Replies
  1. சகோதரர் மணிமாறன் அவர்களுக்கு நன்றி.

   Delete