Tuesday 11 August 2015

தமிழர்களும் மதுவும்



தெனாலிராமன் பூனை பாலை வெறுத்த கதையாக, தமிழ்நாட்டில் இப்போது ஆளாளுக்கு மதுவை எதிர்த்து கோஷம் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இந்த சத்தத்தில் யார் முதன் முதல் கோஷம் போட்டது என்பது மறந்தே போய் விட்டது.

இலக்கியங்களில்:

தமிழ் இலக்கியத்தை எடுத்துக் கொண்டால் தமிழர்கள் மதுவை ஒரு மகிழ்ச்சிக்காகவே எடுத்துக் கொண்டதாகத் தெரிகிறது. சங்ககால தமிழிலக்கியங்களில் தமிழர்கள் மது அருந்தியதை ஒரு சாதாரண நிகழ்வாகவே சொல்லி இருப்பதைக் காணலாம். ஹோமர் எழுதிய கிரேக்க இலக்கியங்களான இலியதம் (ILIAD) ஒதிஸியம், (ODYSSEY)  இரண்டிலும் மக்கள் மதுவை உண்டு களித்ததாகவே சொல்லப்பட்டு இருக்கிறது. (நான் இவைகளின் தமிழாக்க நூல்களைப் படித்து இருக்கிறேன்).

மதுவைப் பற்றி  சொல்லும்போது மது, நறவு, கள், பெரியகள், சிறியகள், தேறல், சொல்விளம்பி என்றெல்லாம் தமிழ் இலக்கியத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. அப்போது மதுவை உணவாக , உணவே மருந்தாக உண்டார்கள். ( இப்போது போதைக்காக, உடல் திமிருக்காக சாராயம் எனப்படும் மதுவை நாடுகிறார்கள்)

தனக்கு அதியமான் கள் கொடுத்ததையும் , அவனோடு அமர்ந்து கள் உண்டதையும் அவ்வையார்,

சிறிய கள் பெறினே எமக்கு ஈயும் – மன்னே!
பெரிய கள் பெறினே
யாம் பாட, தான் மகிழ்ந்து உண்ணும் மன்னே!  ( புறநானூறு 235)

என்று சொல்லுகிறார். (இங்கு சிறிய கள், பெரிய கள் என்பது அளவைக் குறிக்கும்)

வேள் பாரியின் புகழ்பாட வந்த கபிலர்,

மட்டுவாய் திறப்பவும் மையிடை வீழ்ப்பவும்
அட்டான் றானாக் கொழுந்துவை யூன்சோறும்  (புறநானூறு 113)

என்ற பாடல் வரிகளில் மது இருந்த ஜாடி (மட்டுவாய்) பற்றியும் கறிசோறு (அந்தக் கால பிரியாணி போலும்) பற்றியும் சொல்லுகிறார்.
அடுத்த பாடலில், அதே கபிலர், பாரி வந்தவர்களுக்கு மதுவை வழங்கியதையும் குறிப்பிடுகிறார்.

ஈண்டு நின் றோர்க்கும் தோன்றும்; சிறு வரை
சென்று நின் றோர்க்கும் தோன்றும், மன்ற;
களிறு மென்று இட்ட கவளம் போல,
நறவுப் பிழிந் திட்ட கோதுடைச் சிதறல்
வார் அசும்பு ஒழுகு முன்றில்,
தேர் வீசு இருக்கை, நெடியோன் குன்றே.  – (புறநானூறு 114)

காவிரிபூம் பட்டினத்தில், கடற்கரையில் கள்ளுக்கடைகள் பிற கடைகளைப் போன்றே அடையாளக் கொடிகளோடு இருந்தமையை பட்டினப்பாலை சொல்லும்.

மீன் தடிந்து விடக்கு அறுத்து
ஊன் பொரிக்கும் ஒலி முன்றில்
மணல் குவைஇ மலர் சிதறிப்
பலர் புகு மனைப் பலிப் புதவின்
நறவு தொடைக் கொடியோடு    - ( பட்டினப்பாலை 176-180)

தமிழர்கள் போர் நெறியைப் பற்றி ஐயனாரிதனார் எழுதிய “புறப்பொருள் வெண்பாமாலை” என்ற நூலில் தெரிந்து கொள்ளலாம். இந்த நூலில், வீரர்கள் மது அருந்தி விட்டு ஆடிப்பாடியதை ’உண்டாட்டு” என்று சொல்கிறது.

கவிமணி தேசிக விநாயம் பிள்ளை அவர்கள், பாரசீகக் கவிஞன் உமர்க்கய்யாம் பாடல்களை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். அவற்றுள் ஒன்று இது.

வெய்யிற்கேற்ற நிழலுண்டு
வீசுந்தென்றல் காற்றுண்டு
கையில் கம்பன் கவியுண்டு
கலசம் நிறைய மதுவுண்டு
தெய்வகீதம் பலவுண்டு,
தெரிந்து பாடநீயுண்டு
வைய்யம் தருமிவ் வனமன்றி
வாழும் சொர்க்கம் வேறுண்டோ

நமது கவிஞர் கண்ணதாசன், தான் வாழும் காலத்திலேயே எழுதிய (அப்போது காங்கிரஸில் இருந்தார்) வரிகள் இவை.

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு
                   - ( கவிஞர் கண்ணதாசன்; படம்: ரத்தத்திலகம்)

மேலே சொன்ன மேற்கோள்களிலிருந்து , தமிழர்கள் வாழ்வில் மதுவும் ஒரு முக்கிய அம்சமாக இருந்ததை தெரிந்து கொள்ளலாம். ஆனாலும் இந்நாள் போன்று அந்நாளில் குடிகாரர்கள் வீதிகளில் செய்த அலம்பல்கள் பற்றி ஒன்றும் சொல்லக் காணவில்லை.

புழல் சிறையில் திருவள்ளுவர்:

   துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
   நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.    திருக்குறள் (926)

உண்மையில் மதுவை எதிர்த்து முதன் முதல் குரல் கொடுத்தவர் நமது திருவள்ளுவர்தான். ”கள்ளுண்ணாமை” என்று ஒரு அதிகாரமே திருக்குறளில் இருக்கிறது. இன்றைக்கு அவர் இருந்திருந்தால் மதுவை எதிர்த்த குற்றத்திற்காக புழல் சிறையில் பிடித்து போட்டு இருப்பார்கள்.

திருவள்ளுவரைப்  பின்னுக்கு தள்ளி விட்டு எல்லோரும் நான்தான், நான்தான் என்று சொல்லிக் கொள்கிறார்கள். எல்லாம் தேர்தல் படுத்தும்பாடு. உண்மையில் பலபேர் தேர்தலுக்காக டாஸ்மாக்கை திடீரென்று மூடுவதை விரும்பவில்லை என்பதையும், அவைகள் ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஒரு மூலையில் இருந்து விட்டுப் போகட்டும் என்பதையும், ஊருக்குள் மட்டும் தெருவுக்கு தெரு டீக்கடைகள் போன்று வேண்டாம் என்பதையும் பலர் சொல்ல கேட்க முடிகிறது. காரணம் இதனால் ஏற்படும் பின்விளைவுகள்தான்.

விழிப்புணர்ச்சி தேவை:

ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் (எழுபதுகளில்) ”சிலோன் பாப் இசைப் பாடல்கள்” மேடைதோறும் பாடப்பட்டது. மறக்கமுடியாத அந்தநாள் இலங்கை வானொலியிலும் அடிக்கடி ஒலிபரப்பாயின. அவற்றுள் பிரபலமான ஒன்று நித்திகனகரத்தினம் என்ற இலங்கை பாப் இசைக் கலைஞரின் “கள்ளுக்கடை பக்கம் போகாதே” என்ற பாடல். மதுவைக் குடித்தவனும் அவனுக்கு அறிவுரை சொல்பவரும் பாடுவது போன்ற பாடல் இது. பாடலை கேட்டு மகிழ https://www.youtube.com/watch?v=f9gjso8qodQ என்ற முகவரியை ‘க்ளிக்’ செய்யுங்கள்.

கள்ளுக்கடைப் பக்கம் போகாதே
காலைப்பிடித்துக் கெஞ்சுகிறேன்
கண்ணும் புகைந்திடும் நெஞ்சும் வரண்டிடும்
கைகால் உலர்ந்திடும் இந்த கள்ளாலே

ஆச்சி எந்தன் அப்புவும் இந்தக் கடையில் தான்
அடுத்தவீட்டு வாத்தியாரும் கடையில்தான்
விட்டமின் பீ எண்டு வைத்தியரும் சொன்னதாலே
விட்டேனோ கள்ளுக்குடியை நான்

பாவிப் பயலே கொஞ்சம் கேளடா
பாலூட்டி வளர்த்த நானுன் தாயடா
பற்றி எரியுதெந்தன் வயிறடா
பனங்கள்ளை மறந்து நீயும் வாழடா

கடவுள் தந்த பனைமரங்கள் தானடா
கடவுள் கள்ளைத் தொட்டதுண்டோ கேளடா
வாய்க்கொழுப்பும் மனத்திமிரும் வளர்ந்துவரும்
உனக்கு நானும் வாலறுக்கும் நாளும் வருமோ

கள்ளுக்குடி உன் குடியைக் கெடுத்திடும்
கடன்காரனாக உன்னை மாற்றிடும்
கண்டகண்ட பழக்கமெல்லாம் பழக்கிடும்
கடைசியில் கட்டையிலே கொண்டு போய்ச் சேர்த்திடும்

கடவுளே என் மகனும் இதனை உணரானோ
கள்ளுக்குடியை விட்டொழிந்து திருந்தானோ
அன்னை சொல்லு கேட்பானென்றால்
ஆறறிவு படைத்த அவனும் பேரறிஞன் ஆகிடுவானே.

(நன்றி: சந்திரவதனா http://padalkal.blogspot.in/2005/03/blog-post.html )

எனவே மது ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை தீவிரப் படுத்துவோம். அரசாங்கம்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. நாமே நம்மால் முடிந்த வரை மற்றவர்களோடு இன்றே உரையாடுவோம். வரும் தலைமுறையைக் காப்போம்.


42 comments:


  1. வணக்கம் நண்பரே...
    மது வேண்டுமா ? வேண்டாமா ? 80தை மக்கள் உணர்ந்தால் போதுமானது இது சரியென்று சொல்வதற்க்கு அரசோ, ஓட்டுப்பொறுக்கிகளோ தேவையில்லை 80 எமது கருத்து.
    அழகாக சங்க காலம் தொடங்கி இன்றைய சினிமாக்காலம் வரை பரிந்தநமைக்கு நன்றி
    தமிழ் மணம் 1

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் குறிப்பிட்ட

      /// மது வேண்டுமா ? வேண்டாமா ? என்பதை மக்கள் உணர்ந்தால் போதுமானது ///

      என்ற இந்த கருத்துதான் எதார்த்தமானது. கருத்துரை தந்த நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி.

      Delete
  2. மது அருந்தியவர் பக்கத்தில் வந்தால் குடலை பிடுங்கும் அளவுக்கு நாற்றம்.அதை எப்படித் தான் குடிக்கிறார்களோ.?
    சந்தோஷமாக இருப்பவனுக்கும் தன்னை மறந்த நிலை வேண்டும். துக்கத்தில் இருப்பவனுக்கும் தன்னை மறந்த நிலை வேண்டும் . இந்த பலவீனமே மதுவின் காலடியில் மனிதனை விழ வைக்கிறது .
    மது விலக்கு பெருமளவுக்கு மதுப் பயன்பாட்டை குறைக்கும் என்பதில் ஐயமில்லை

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் டி.என்.முரளிதரன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  3. வ்ரலாற்று ரீதியாக தாங்கள் தொகுத்துத் தந்துள்ள விதம் அருமை. எந்த ஒன்றும் நிர்ப்பந்தம் மூலமாக செயல்படுத்துவது கடினமே. தாமாகத் திருந்தினால் உண்டு. நீங்கள் சொல்வது ஒவ்வொருவரும் தம்மால் முயன்ற நிலையில் உரையாட, மாற்றத்தை ஏற்படுத்த முனைந்தால் அதுவே பெரிய வெற்றி. இக்காலத்திற்கேற்ற மிகப் பயனுள்ள பதிவு. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  4. வணக்கம் அய்யா,
    தங்கள் தொகுப்பு அருமை,
    மது ஒழிய வேண்டும் என்பது அவரவர் மனம் சார்ந்த விடயம் என்பது என் கருத்து,
    இங்கு கடைகள் மூடினால் வேறு எங்கோ, மற்றும் மாற்று வழி யோசிப்பார்கள்,
    இதில் மாயவர்களைக் கொண்டு சுயநலம் தேடுபவர்கள் ஒரு புறம்.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மது ஒழிய வேண்டும் என்பது அவரவர் மனம் சார்ந்த விடயம் என்ற தங்களின் கருத்தை அப்படியே வழிமொழிகின்றேன் சகோதரி. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      Delete
  5. சிலோன் பாப் இசைப் பாடல்கள்” கள்ளுக்கடை பக்கம் போகாதே” என்ற பாடல். அடிக்கடி கேட்போம். பாட்ல் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. சகோதரி. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      Delete
  6. பண்டைய தமிழ் இலக்கியங்களில் மது அருந்தி வீதியில் புரள்வது பற்றியோ. மனைவி மக்களை அடித்துத் துன் புறுத்துவது பற்றியோ நகைகளை அடகு வைத்தோ திருடியோ குடித்தது பற்றி எழுதி இருக்கிறதா, ?

    ReplyDelete
    Replies
    1. அப்படி போடுங்க..

      சுப்பு தாத்தா.
      www.subbuthatha72.blogspot.com

      Delete
    2. மூத்த வலைப்பதிவர்கள் G.M.B மற்றும் சுப்பு தாத்தா இருவருக்கும் வணக்கம்.

      மறுமொழி > G.M.B :

      நான் படித்த வரையில், இந்நாள் போன்று அந்நாளில் குடிகாரர்கள் வீதிகளில் புரளுதல், மனைவி மக்களை அடித்தல் மற்றும் மதுவுக்காக திருடுதல் பற்றி பழைய இலக்கியங்களில் ஒன்றும் சொல்லப்பட வில்லை என்றே நினைக்கிறேன். மேலும் அந்நாளைய மது என்பது உண்மையில் தீங்கற்ற புளிக்க வைத்த பழரசம் ஆகும். இப்போதைய மது என்பது போதைக்காக மட்டுமே தயாரிக்கப்படும் ரசாயன சாராயம் ஆகும்.

      Delete
  7. //இன்றைக்கு அவர் இருந்திருந்தால் மதுவை எதிர்த்த குற்றத்திற்காக புழல் சிறையில் பிடித்து போட்டு இருப்பார்கள். //

    கற்பனைக் குதிரை யை ரொம்பவும் ஓட விடாதீர்கள்.

    பாவம்.வள்ளுவரை விட்டு விடுங்கள்.
    நல்ல மனிதர். பிழைத்துப்போகட்டும்.
    எங்கிருந்தாலும் வாழ்க அவர்.
    இங்கு வர, இல்லை வரவே வேண்டாம்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. சுப்பு தாத்தா அவர்களின் இரண்டாம் வருகைக்கு நன்றி. கட்டுரையின் சுவாரஸ்யத்திற்காக கொஞ்சம் வள்ளுவர் பற்றிய கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டேன் அவ்வளவுதான். மற்றபடி வள்ளுவரை உள்ளே பிடித்து போடும் எண்ணம் எனக்கு இல்லை.

      Delete
  8. திருக்குறளையே மறந்து விட்ட பிறகு, "கள்ளுண்ணாமை" அதிகாரம் இருப்பது எங்கே தெரியப் போகிறது...? மற்ற தொகுப்பிற்கு நன்றி ஐயா...

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது போல மக்கள் திருக்குறளை இன்னும் முழுமையாக மறந்து விடவில்லை என்றே நினைக்கிறேன். அதிலும் உங்களைப் போன்றவர்கள் , வலைப்பதிவில் திருக்குறளை மேற்கோளாக அடிக்கடி எழுதும்போது எப்படி மறக்க இயலும். சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      Delete
  9. தகுந்த நேரத்தில் வந்த பதிவு!
    சிலோன் பப் இசைப் பாடலையும் இணைத்த விதம் அருமை.


    இந்தப் பாடலைக் கேட்டுள்ளீர்களா?:

    !எத்தனை நாள் பிரிந்து... பாடல்.

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் நிஜாமுதீன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. நீங்கள் மேலே குறிப்பிட்ட பாடல் சம்பந்தமாக உங்கள் வலைப்பக்கம் வந்து பார்த்தேன். இந்த பாடலை நான் கேட்டதாகவோ அல்லது இதற்கு முன் படித்ததாகவோ நினைவில் இல்லை. இருப்பினும் நேரம் கிடைக்கும் போது முயற்சி செய்து பார்க்கிறேன்.

      Delete
  10. வணக்கம்
    பதிவு ஆரம்பித்த வேகத்தில் மூடர்களே மதுவை ஏன் எதிர்க்கிறீர்கள் என்று எழுதி விடுவீர்களோ என்று பார்த்தேன்...
    ஆரோக்கியமான வேண்டுகளை விடுத்திருக்கிறீர்கள்..
    நன்றி
    நானும் வழிமொழிகிறேன்
    தம +

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் ஆசிரியர் கஸ்தூரி ரெங்கன் (எஸ். மது ) அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      எனக்கு பீடி,சிகரெட் புகைக்கும் பழக்கமோ; வெற்றிலை, பாக்கு, புகையிலை போடும் பழக்கமோ; மது அருந்தும் பழக்கமோ கிடையாது. குடிகாரர்களைக் கண்டால் இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று வருத்தப் படுபவன் நான். நிச்சயம் மதுவுக்கு ஆதரவான நிலையில் எழுத மாட்டேன். இதற்கு முன்பு நான் எழுதிய “ டாஸ்மாக்கை மூடிவிட்டால் போதுமா? http://tthamizhelango.blogspot.com/2015/08/blog-post.html ” என்ற பதிவினை நேரம் கிடைக்கும் போது படித்துப் பார்க்கவும்..

      Delete
  11. //எல்லாம் தேர்தல் படுத்தும்பாடு.//

    அதே தான்.. தேர்தலுக்குப் பிறகு இதை மறந்து விடுவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  12. >>> கள்ளுக்கடை பக்கம் போகாதே.. <<<

    அந்த காலத்திலிருந்து - நினைவிலிருக்கும் இனிய பாடல் அது!..

    முழுமையாகக் கண்டதில் மகிழ்ச்சி..

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் தஞ்சையம்பதி துரை.செல்வராஜூ அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  13. போகிற போக்கில் வள்ளுவருக்கும் சிறையைக் காட்டிவிட்டீர்கள்.

    ஒரு நல்ல கருத்துத் தொகுப்பு.

    God Bless You

    ReplyDelete
    Replies
    1. அய்யா வேதாந்தி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  14. ஆய்வு செய்து எழுதி ஆதாரங்களை சுட்டிய தங்கள் பதிவு அருமை! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. புலவர் அய்யாவின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  15. அருமையான ஆய்வுக்கட்டுரை ஐயா
    நன்றி
    இன்று ஒவ்வொரு கட்சியும்
    மதுவிலக்கை கோருகிறதே ஒழிய,
    எக்கட்சியினரும் தங்களின் தொண்டர்களிடம்
    மது அருந்தாதீர்கள் என்று கூறவேஇல்லையே
    ஏன்?
    தம+1

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி..

      பல அரசியல்வாதிகள் தங்கள் வாரிசுகளின் பெயரில் அல்லது பினாமி பெயரில் நடத்தும் நட்சத்திர ஓட்டல் ‘பார்’களில் உயர்ரக வெளிநாட்டு மது விற்பனை உண்டு. இன்னும் பலபேர் டாஸ்மார்க் கடைகளுக்கு தங்கள் இடத்தை வாடகைக்கு விட்டு இருக்கிறார்கள். இவர்கள் எப்படி அய்யா தங்கள் கட்சிக்காரனைப் பார்த்து குடித்துவிட்டு வராதே, குடிக்காதே என்று சொல்லுவார்கள்.

      Delete
  16. நல்லதொரு சிந்தனையை முன்வைத்திருக்கிறீர்கள்.
    ஔவை ... கபிலர் திருக்குறள் என்று தொடங்கி கண்ணதாசன் வரை சொல்லிச்சென்ற விதம் ரசிக்கும் படியாகவும் அதே நேரத்தில் அரசாங்கத்தால் மட்டும் எதுவும் செய்துவிட முடியாது நாமும் முன்வரவேண்டுமென்பதை சிறப்பாகச் சொன்னீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  17. அருமையான பதிவு .காலத்தின் தேவை இந்த பதிவு .

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் கரிகாலன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete

  18. 1949 ஆண்டு வெளியான நல்ல தம்பி திரைப்படத்தில் கலைவாணர் திரு என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் ‘நாட்டுக்கு சேவை செய்ய நாகரிக கோமாளி வந்தானையா’ என்ற பாடலில்
    “குடிச்சுப் பழகணும் குடிச்சுப் பழகணும்
    படிச்சுப் படிச்சு சொல்லுறாங்க
    பாழுங்கள்ளை நீக்கிப் பாலைக்
    குடிச்சுப் பழகணும்”
    என்று குடியின் தீமையைப்பற்றி பாடுவார். அந்த சமயம் தான் கள்ளுக்கடைகள் தமிழ் நாட்டில் ஒழிக்கப்பட்டனவாம்.

    நம் மக்களுக்கு திரைப்படங்கள் மூலம் ஒரு தகவலை சொன்னால் அது உடனே போய் சேரும் அதுபோல இப்போதும் திரைப்படங்கள் மூலம் மதுவின் கேடுகள் குறித்து விழிப்புணர்ச்சி பரப்புரை செய்யலாம். அரசும் அதோடு சேர்ந்து தமிழ் திரையுலகினரும் மது ஒழிப்பு பற்றிய பரப்புரை செய்வார்களா?

    ReplyDelete
    Replies
    1. அய்யா V.N.S அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      // நம் மக்களுக்கு திரைப்படங்கள் மூலம் ஒரு தகவலை சொன்னால் அது உடனே போய் சேரும்அய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி.//

      நீங்கள் சொல்வது சரிதான். அந்தக் கால படங்களில் இதைச் செய்தார்கள். இப்போதுள்ளவர்கள் குடிப்பழக்கத்தை நியாயப் படுத்தி படம் எடுக்கிறார்கள்.

      Delete
  19. அரசர் காலத்து மது போதையைத் தரும், மதியை மயக்கும், ஆனால் கல்லீரலை காலி செய்யாது. இன்றை மது எரிசாராயம், கல்லீரல், கிட்னி, குடல் அத்தனையும் ஒரே அடியை காலி செய்துவிடும்.

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் ஜெயதேவ் தாஸ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  20. ஐயா வணக்கம், தங்களின் இப் பதிவு பன்னாட்டு "குளோபல் வாயசஸ்" ஆங்கில இணைய இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. நன்றிகள் !

    Students Push for Alcohol Prohibition in Southern India Street Protests

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி! தகவல் சொன்ன சகோதரர் விண்ணன் அவர்களுக்கு நன்றி!

      Delete
  21. இவை அனைத்தும் கொஞ்சம் நாளுக்குத்தான் என்று தோன்றுகின்றது! இப்போது மெதுவாக தலைக்கவசம் சட்டம் நீர்த்து வருவது போல்...

    நல்லதொரு பதிவு ஐயா! நாங்களும் கூட இந்த மது பற்றி சங்க இலக்கியங்களில் தமிழர் வாழ்வோடு பின்னிப் பிணைந்ததைக் குறித்து குறிப்பிட்டிருந்தோம்...தாங்கள் இன்னும் அழகாக விரிவாகவே சொல்லிவிட்டீர்கள்...ஐயா!

    ReplyDelete