Monday, 8 June 2015

நினைவுகள் - சில பழைய இந்தி பட பாடல்கள்
எப்போதும் காலையில் எழுந்தவுடன் காபி சாப்பிடும் வரை கம்ப்யூட்டரில் இண்டர்நெட்டில் மேய்வது வழக்கம். சென்ற வாரம் ஒருதினம் ( ஜூன் 1, 2015) வழக்கம் போல எனது முதல் மேய்ச்சல் நிலமான கூகிள் (GOOGLE) சென்றேன். ‘Nargis’ 86th birth day’ – என்று மின்னியது. உடனே எனக்கு நர்கீஸ் நடித்த அந்நாளைய இந்தி பாடல்களோடு மற்றைய சில இந்தி பாடல்களும் நினைவுக்கு வந்தன. அன்றைக்கே இந்த பதிவை எழுதியிருக்க வேண்டும். இயலவில்லை.

தமிழ்நாட்டில் இந்தி பட பாடல்கள்

நான் பள்ளி மாணவனாக இருந்த நாட்களில் பிரபலமான பல இந்தி பல பாடல்களை வானொலியில் ஒலி பரப்புவார்கள். மேலும் அப்போதெல்லாம் (அறுபதுகளில்) பெரும்பாலான வீடுகளில் ரேடியோப் பெட்டி என்பதெல்லாம் கிடையாது. ரேடியோ என்பது வசதி படைத்தவர்கள் சமாச்சாரம். ஆனாலும் பெரும்பாலும்  ஓட்டல்களில் ரேடியோ கட்டாயம் இருக்கும். அவ்வாறு ஒலி பரப்பி கேட்ட சில இந்தி பாடல்கள் மனதில் நின்று அசைபோட வைத்து விட்டன.


அப்புறம் கொஞ்சம் பெரியவன் ஆனதும்தான் இந்தி திரைப்படப் பாடல்களைப் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. அப்போது இந்தி எதிர்ப்பு உச்சத்தில் இருந்த நேரம். இந்தி எதிர்ப்பு என்பது மாணவர்கள் போராட்டமாக மாறிய சூழ்நிலையில், இந்தி படங்களை தமிழ்நாட்டில் திரையிடவே பயந்தார்கள். இருந்தாலும்,  சில இந்தி பாடல்களின் மெட்டுக்கள் அப்படியே காப்பி செய்யப்பட்டு தமிழ் திரைப்பட பாடல்களிலும் வந்தன. ஆனாலும் முஸ்லீம் நண்பர்களது திருமணம் போன்ற விசேச நிகழ்ச்சிகளில் அவர்கள் வீடுகளில் தமிழ் பாடல்களோடு ஒன்றிரண்டு இந்தி படப் பாடல்களையும் ரேடியோசெட் ஆள் வைப்பார். (அப்போதெல்லாம் திருமணம் என்பது வீடுகளில்தான்; அக்கம் பக்கத்து வீடுகளில் விருந்து நடைபெறும். இப்போது திருமண மண்டபங்கள் நிறைய வந்து விட்டன) அப்போது அடிக்கடி வைக்கும் பாடல்களை கேட்கும் போது யார் நடித்த படம் என்று கேட்பது வழக்கம். பெரும்பாலும் ராஜ்கபூர் நர்கீஸ் நடித்தது என்றுதான் சொல்வார்கள். நம்ப ஊர் எம்.ஜி.ஆர்- சரோஜாதேவி மற்றும் சிவாஜி பத்மினி திரையுலக ஜோடிகள் போல அந்நாளைய இந்தி திரையுலக ஜோடி ராஜ்கபூர் நர்கீஸ்.

பின்னர் தி.மு.க ஆட்சி வந்ததற்குப் பின் இந்தி எதிர்ப்பு என்பது கொள்கை அளவில் மாறிப் போன பின்பு, தமிழ்நாட்டில் தாராளமாக இந்தி படங்கள் திரையிடப்பட்டன. திருச்சியில் கெயிட்டி, பிளாஸா தியேட்டர்களில் இந்திப் படங்கள் நல்ல வசூலை குவித்தன. அப்புறம் மற்ற தியேட்டர்களிலும் திரையிட்டார்கள். நெஸ்காபி அறிமுகம் ஆன சமயம். அங்கங்கே கல்லூரி மாணவர்களையும், வேலையில்லாத இளைஞர்கள் ஒருங்கிணைக்கும் இடங்களாக நெஸ்கபே ஸ்டால்கள் விளங்கின. அப்போது இந்த காபி, டீக்கடைகளில் மட்டுமல்லாது திருவிழா, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளிலும் இளைஞர்களது விருப்பப் பாடல்களாக  இந்தி படப் பாடல்களை ஒலி பரப்பினார்கள். இப்போது காலம் மாறி விட்டது. இந்தியை தேவைப்படும் இடங்களில் பயன்படுத்திக் கொள்கிறோம்.

இந்தி பாடல்கள் சில:

நர்கீஸ் - ராஜ்கபூர் நடித்துக் கொண்டிருந்த ஆரம்ப நாட்களில் நான் பிறக்கவே இல்லை. ஆனாலும் பின்னாளில் அவர் நடித்த இந்தி படப் பாடல்களை கேட்கும் சந்தர்ப்பங்கள் அமைந்தன. அப்புறம் டீவி, கம்ப்யூட்டர், இண்டர்நெட் என்று வந்த பிறகு அவர் நடித்த பழைய இந்தி பட பாடல்களை அடிக்கடி கண்டு கேட்டு ரசிக்க முடிகின்றது.


ஆஹ் (Aah ) - என்று ஒரு இந்தி திரைப்படம் 1953இல் வெளியானது. ராஜ்கபூர் - நர்கீஸ் நடித்தது. இதில் வரும் jaane naa nazar pehchane jigar –  என்ற பாடலையும் மறக்க முடியுமா என்ன? இந்த ஆஹ் (Aah )  படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு (பாடல்களின் மெட்டும் அப்படியே தமிழில்) அவன் என்ற பெயரில் வெளியானது (1953) மேலே சொன்ன இந்தி பாடலின் மெட்டில் கண் காணாததும் மனம் கண்டு விடும்‘ – என்ற பாடலை பாடலாசிரியர் கம்பதாசன் எழுதினார். ராஜா ஜிக்கி  பாடினார்கள். ராஜ்கபூர் நர்கீஸ் தமிழில் பாடும், இந்த பாடலைக் கண்டு கேட்டு மகிழ்ந்திட கீழே உள்ள யூடியூப் இணைய முகவரியை கிளிக் செய்யுங்கள்.சோரி சோரி (Chori Chori) என்ற படத்தில் (1956 இல் வெளிவந்தது) வரும் aa jaa sanam madnoor என்ற பாடல் மறக்க முடியாத ஒன்று. நர்கீஸ் ராஜ்கபூர் நடித்த இந்த பாடலைக் கண்டு கேட்டு மகிழ்ந்திட கீழே உள்ள யூடியூப் இணைய முகவரியை கிளிக் செய்யுங்கள்.


இந்த பாடலின் மெட்டில் முஸ்லிம் சமய பாடல் ஒன்று உள்ளது. பாடல் நினைவில் இல்லை.


அனாரி (Anari) என்ற 1959 இல் வெளிவந்த படத்தில் வரும்  Sab Kuchh Seekha Ham Ne என்ற பாடலையும் மறக்க முடியாது. 

sury Siva said...
அனாரி படத்தில் ராஜ் கபூர் உடன் நடித்திருப்பது நூடான்.
நர்கீஸ் அல்ல.
சுப்பு தாத்தா.


இந்த பாடலைக் கண்டு கேட்டு மகிழ்ந்திட கீழே உள்ள யூடியூப் இணைய முகவரியை கிளிக் செய்யுங்கள்.


இந்த பாடலின் மெட்டுக்கள் ஜெமினி கணேசன் நடித்த பாசமும் நேசமும் என்ற படத்தில் எல்லாம் நாடகமேடை என்ற பாடலில் அப்படியே இருப்பதைக் கேட்கலாம். 
(இந்த தமிழ் பாடல் பற்றி ஒரு பதிவு ஒன்றும் எழுதியுள்ளேன். தலைப்பு: எல்லாம் நாடக மேடை பாடலாசிரியர் யார்?  இணைப்பு: http://tthamizhelango.blogspot.com/2014/10/blog-post.html)

                                  (ALL  PICTURES COURTESY: GOOGLE IMAGES)


33 comments:

 1. அக்காலத்துப் பாடல்கள்
  இனிமையானவை அல்லவா
  நன்றி ஐயா
  தம 1

  ReplyDelete
 2. நர்கீஸ் நடித்த இந்தித் திரைப்படப் பாடல்களைத் தாங்கள் ரசித்ததை நாங்களும் ரசித்தோம். ஆங்காங்கே தமிழ்த் திரைப்பட நடிகர்களை ஒப்புமையாகத் தந்தது நன்றாக இருந்தது.

  ReplyDelete
 3. பிடித்த வரிகள் :

  உண்மையில் ஒருநாள்... பொய்மையில் பலநாள்...
  ஒவ்வொரு நாளும் உங்களின் திருநாள்...
  எங்களின் இதயம் சிறியது தாயே...
  இதையும் ஏனோ உடைத்து விட்டாயே...
  எல்லாம் நாடக மேடை... இதில் எங்கும் நடிகர் கூட்டம்....
  உருவம் தெரிவது போல அவர் உள்ளம் தெரிவது இல்லை...
  எல்லாம் நாடக மேடை... இதில் எங்கும் நடிகர் கூட்டம்...

  ReplyDelete
 4. பள்ளிப் பருவத்தில் வானொலியில் கேட்டது மட்டும் தான். இன்று வரை வேறு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.

  ReplyDelete
 5. இசையின் ஏழு ஸ்வரங்கள் ஏழ் உலகங்களுக்கும் ஒன்றே.
  ஊர், நாடு, மொழி, இனம் என எல்லா எல்லைகளையும்
  கடந்து
  மனித இனம் மட்டுமல்ல, உலகத்து ஜீவ ராசிகள் அனைத்தையும் ஒரு கோட்டில் இணைக்க வல்லது.

  அந்தக் காலத்து கெயிட்டி டாக்கீஸ் நினைவுகளை திரும்பவும் கொண்டுவந்து

  1957 முதல் 1960 வரை எனது தூய வளவனார் கல்லூரிப் படிப்பிற் கவனம் முழுமையாக செலுத்த அளவுக்கு இந்த பாடல்களின் தாகம் தாக்கம் இருந்தது என்று சொன்னாலும் மிகையில்லை.

  1962ல் கெயிட்டி யில் படம் பார்த்து விட்டு வெளியே வந்தபோது அந்த பெரிய கடைத்தெருவில் ஹிந்தி போராட்டம் நடந்து பொலீஸ் தடியடியில் நானும் மாட்டிக்கொண்டு அடுத்த நாள் அலுவலகம் போக முடியாமல் தவித்ததும் நினைவில் வந்தது.

  எனக்குப் பிடித்த இந்தி, உருது பாடல்களுக்காகவே, மற்றும் எனது
  வட நாட்டு நன்பர்களுக்காக எனது வலையில், தாங்கள் குறிப்பிட்டுள்ள
  பல பாடல்கள் பதிவும் செய்து இருக்கிறேன்.

  நர்கீஸ், ராஜ் கபூர் ஒரு சகாப்தம்.
  எம்.கே.டி. ராஜகுமாரி சகாப்தம் போல்,
  சிவாஜி, பத்மினி போல்,
  ஜெமினி சாவித்திரி போல்,

  நினைக்க நினைக்க உருக வைக்கும் காவியங்கள்
  அந்த காலத்து படங்கள்.

  ஆஹ் போல ஒரு படம் அனாரி போன்று ஒரு படம் இன்றும் கூட இந்தி உலகத்திலே வருவதில்லை.

  தமிழில் பாச மலர் போன்று தான்.

  மிகவும் நன்றி. நீங்கள் ஒரு இந்தி இசைப் பிரியர் என்று தெரிந்து ஒரு நெகிழ்ச்சியும் மனதில் தோன்றுகிறது.

  என்றாவது ஒரு நாள் உங்களை சந்தித்து அந்த காலத்து கெயிட்டி டாக்கீஸ் படங்களை அலசி பார்ப்போமா....

  சுப்பு தாத்தா.
  www.sachboloyaar.blogspot.com

  ReplyDelete

 6. இசைக்கு மொழி தடையில்லை என்பதை இந்தி திரைப்பட பாடல்கள் நிரூபித்திருக்கின்றன. ஆராதனா திரைப் படத்தின் பாடல்களை பொருள் புரியாவிடினும் முணுமுணுத்தோர் பலர். எனக்கு பிடித்த பாடல் Dil
  Deke Deko என்ற திரைப்படத்தில் வந்த Bade Hain Dil Ke Kaale என்ற பாடல் தான். இது பற்றி எனது நினைவோட்டம் 70 என்ற பதிவில் எழுதியிருக்கிறேன். பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
 7. அருமையான பதிவு!

  மலரும் நினைவுகளைத் திரும்பக் கொண்டு வந்து விட்டீர்கள்!
  40 வருடங்களுக்கு முன், திருமணமானதும் முதன் முதலாக மும்பைக்கும் பூனாவிற்கும் இடையே உள்ள ஒரு கிராமத்தில் வாசம். அங்கே தான் ஹிந்திப்பாடல்களின் அறிமுகம் ஆரம்பமானது. ரஃபியும் லதா மங்கேஷ்கரும் முகேஷும் அறிமுகமாகி மனதை மயங்க வைத்து அங்கே பதிந்து போய் விட்டார்கள். ராஜ் கபூரிலிருந்து தொடங்கி அருமையான அனைத்து ஹிந்திப்பாடல்களும் எங்கள் வீட்டில் இருக்கின்றன!

  ராஜ்கபூர் நர்கிஸ் நடித்த படங்களில் பாடல்களும் அதற்கேற்ப காட்சிகளும் ஒன்றுக்கொன்று போட்டி போடும். உதாரணத்திற்கு இந்த இணைப்பைப் பாருங்கள். பாடலுக்காகவும் காட்சிக்காகவும் மிகவும் புகழ் பெற்ற‌து இந்த பாடல்!

  https://www.youtube.com/watch?v=y01uvU0UAoU

  ReplyDelete
 8. நீங்கள் முகப்பில் காண்பித்திருப்பது ஹிந்தி நடிகை நூடன். இவரும் நர்கிஸ் காலத்தில் இணைந்து நடித்த ஒரு புகழ் பெற்ற‌ நடிகை!

  ReplyDelete
 9. அன்பு வலைப்பூ நண்பரே!
  நல்வணக்கம்!
  இன்று 08/06/2015 அன்று முதலாம் ஆண்டினை நிறைவுசெய்யும் "குழலின்னிசை"க்கு
  தங்களது அன்பான ஆதரவும், கருத்தும், அளித்து அகம் மகிழ்வுற செய்ய வேண்டுகிறேன்.

  முதலாம் ஆண்டு பிறந்த நாள் அழைப்பிதழ்
  அன்பின் இனிய வலைப் பூ உறவுகளே!
  "குழலின்னிசை" என்னும் இந்த வலைப் பூ!
  உங்களது மனம் என்னும் தோட்டத்தில் மலர்ந்த மகிழ்ச்சிகரமான நாள் இன்று.
  ஆம்!
  கடந்த ஆண்டு இதே தினத்தன்றுதான் 08/06/2014, "குழலின்னிசை" வலைப்பூ மலர்ந்தது.
  http://kuzhalinnisai.blogspot.com/2015/06/blog-post_7.html#comment-form
  சரியாக ஓராண்டு நிறைவு பெற்று, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்த வலைப்பூவானது, நல் இசையை நாள்தோறும் இசைத்து, அனைவருக்கும் நலம் பயக்குவதற்கு, உள்ளன்போடு உங்களது நல்லாசியைத்தாருங்கள்.
  தங்களது வருகையை எதிர் நோக்கும் வலைப்பூ நண்பர்கள்.
  மற்றும்!
  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com
  tm5

  ReplyDelete
 10. ****** மறுமொழி > மனோ சாமிநாதன் said... ********

  வலைப்பதிவில் எனது தவறினை சுட்டிக் காட்டிய சகோதரி அவர்களுக்கு நன்றி.

  // நீங்கள் முகப்பில் காண்பித்திருப்பது ஹிந்தி நடிகை நூடன். இவரும் நர்கிஸ் காலத்தில் இணைந்து நடித்த ஒரு புகழ் பெற்ற‌ நடிகை! //

  Google Search - இல் Nargis Dutt என்று தேடுவதற்குப் பதிலாக Nargis என்று தேடியதால் வந்த பிழை இது. தவறுக்கு மன்னிக்கவும்.

  உங்கள் கருத்துரையைக் கண்டவுடன, முன்பு இந்த பதிவின் முகப்பில் இருந்த (ஹிந்தி நடிகை நூடன்) படத்தை நீக்கி விட்டு, இப்போது நர்கீஸ் படத்தை இணைத்து விட்டேன்.


  ReplyDelete
 11. அனாரி படத்தில் ராஜ் கபூர் உடன் நடித்திருப்பது நூடான்.
  நர்கீஸ் அல்ல.

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
 12. நம் கெயிட்டி டாக்கீஸில் நானும் 1970-1972 காலக்கட்டத்தில் ஒருசில ஹிந்திப்படங்கள் மட்டுமே பார்த்துள்ளேன். அதில் இன்றும் என் நினைவில் நிற்கும் பாடல் “ரூப்பு தேரா .... மஸ்தானா” மட்டுமே. பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 13. வணக்கம்
  ஐயா

  அந்த காலத்து பாடல்களுக்கு ஈடு கொடுக்க முடியுமா இந்த கால பாடல்கள். மிக அருமையாக தொகு வழங்கியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம6

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 14. இளவயதில் மொழி பேதமின்றி திரைப்படங்களையும் பாடல்களையும் ரசித்ததுண்டு. ராஜ் கபூர் நர்கிஸ் நடித்த ஜாக்தே ரஹோ என்னும் படத்தில் வருமொரு காட்சியே ராஜ்கபூர் ஃபில்ம்ஸின் அடையாளமாக இருந்தது ( இருக்கிறதா?)அந்தக் காலப் பாடல்கள்காதுக்கு இனிமையாக இருந்தன. இப்போதைய பாடல்கள் ஒரே கூச்சல். நினைவுகளைக் கிளறிய பதிவு. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. நிறைய விடயங்கள் தந்தீர்கள் நண்பரே..
  தமிழ் மணம் 10

  ReplyDelete
 16. என் தந்தை அடிகடி ராஜ்கபூரும் நர்கிசும் நடித்த 'ஸ்ரீ 420' படத்தைப் பற்றி கூறுவார். அதில் மலையில் நினைந்தபடி பாடும் 'கியாகுவா' பாடல் மிகவும் பிடிக்கும். அருமையான நடிகை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!
  த ம 11

  ReplyDelete
 17. மறுமொழி> கரந்தை ஜெயக்குமார் said...

  // அக்காலத்துப் பாடல்கள் இனிமையானவை அல்லவா
  நன்றி ஐயா தம 1 //

  பொதுவாகவே அந்த காலத்து திரைப்படப் பாடல்கள் அனைத்தும், பிறமொழிகளிலும் இனிமையாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். காரணம் இப்போது போல காதுகளை அதிர வைக்கும் இசை அப்போது இல்லை. கருத்துரை தந்த ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி.

  ReplyDelete
 18. மறுமொழி> Dr B Jambulingam said...

  // நர்கீஸ் நடித்த இந்தித் திரைப்படப் பாடல்களைத் தாங்கள் ரசித்ததை நாங்களும் ரசித்தோம். ஆங்காங்கே தமிழ்த் திரைப்பட நடிகர்களை ஒப்புமையாகத் தந்தது நன்றாக இருந்தது. //

  நர்கீஸ் படப் பாடல்களை மட்டுமன்றி, நான் ரசித்த மற்ற இந்தி பாடல்களையும் குறிப்பிட வேண்டுமென்றுதான் தொடங்கினேன். காலம் கருதி சுருக்கமாக முடித்துக் கொண்டேன். கருத்துரை தந்த முனைவர் அவர்களுக்கு நன்றி.

  ReplyDelete
 19. மறுமொழி> திண்டுக்கல் தனபாலன் said...

  கருத்துரை தந்த திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி. ஆம்! எல்லாம் நாடக மேடைதான் சகோதரரே! நான் அடிக்கடி கேட்டு ரசிக்கும் பாடல்.

  ReplyDelete
 20. மறுமொழி> ஜோதிஜி திருப்பூர் said...

  // பள்ளிப் பருவத்தில் வானொலியில் கேட்டது மட்டும் தான். இன்று வரை வேறு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. //

  நானும் பள்ளிப் பருவத்தில் கேட்டதுதான் நண்பரே. இப்போது கண்டு கேட்டு மகிழ யூடியூப் வசதி வந்து விட்டது. கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 21. மறுமொழி> sury Siva said...

  நல்ல பல கருத்துரைகள் அடங்கிய நீண்ட கருத்துரை தந்த சுப்பு தாத்தா அவர்களுக்கு நன்றி.

  // இசையின் ஏழு ஸ்வரங்கள் ஏழ் உலகங்களுக்கும் ஒன்றே.
  ஊர், நாடு, மொழி, இனம் என எல்லா எல்லைகளையும்
  கடந்து மனித இனம் மட்டுமல்ல, உலகத்து ஜீவ ராசிகள் அனைத்தையும் ஒரு கோட்டில் இணைக்க வல்லது. //

  ஆமாம் அய்யா! ஏழு ஸ்வரங்கள் ஏழ் உலகங்களுக்கும் ஒன்றே. இதில் கருத்து வேறுபாடு யாருக்கும் இருக்க முடியாது.

  // அந்தக் காலத்து கெயிட்டி டாக்கீஸ் நினைவுகளை திரும்பவும் கொண்டுவந்து

  1957 முதல் 1960 வரை எனது தூய வளவனார் கல்லூரிப் படிப்பிற் கவனம் முழுமையாக செலுத்த அளவுக்கு இந்த பாடல்களின் தாகம் தாக்கம் இருந்தது என்று சொன்னாலும் மிகையில்லை.

  1962ல் கெயிட்டி யில் படம் பார்த்து விட்டு வெளியே வந்தபோது அந்த பெரிய கடைத்தெருவில் ஹிந்தி போராட்டம் நடந்து பொலீஸ் தடியடியில் நானும் மாட்டிக்கொண்டு அடுத்த நாள் அலுவலகம் போக முடியாமல் தவித்ததும் நினைவில் வந்தது. //

  தங்கள் நினைவலைகளோடு மலரும் நினைவுகளின் காலத்தில் நானொரு சிறுவன். (நான் பிறந்த ஆண்டு 1955 என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.) இன்றும் கெயிட்டி டாக்கீஸ் ஓடிக் கொண்டு இருக்கிறது. பழைய இந்தி படங்களோடு பழைய தமிழ் படங்களையும் போடுகிறார்கள். முன்பு போல் தியேட்டர் பக்கம் போக நேரம் இல்லை.
  // எனக்குப் பிடித்த இந்தி, உருது பாடல்களுக்காகவே, மற்றும் எனது வட நாட்டு நன்பர்களுக்காக எனது வலையில், தாங்கள் குறிப்பிட்டுள்ள பல பாடல்கள் பதிவும் செய்து இருக்கிறேன். //

  உங்கள் வலைத்தளத்தை புக் மார்க் செய்து கொண்டேன். வெகு விரைவில் உங்கள் வலைத்தளம் வந்து பாடல்களைக் கேட்க வேண்டும்.

  // நர்கீஸ், ராஜ் கபூர் ஒரு சகாப்தம்.
  எம்.கே.டி. ராஜகுமாரி சகாப்தம் போல்,
  சிவாஜி, பத்மினி போல்,
  ஜெமினி சாவித்திரி போல்,

  நினைக்க நினைக்க உருக வைக்கும் காவியங்கள்
  அந்த காலத்து படங்கள். ஆஹ் போல ஒரு படம் அனாரி போன்று ஒரு படம் இன்றும் கூட இந்தி உலகத்திலே வருவதில்லை.

  தமிழில் பாச மலர் போன்று தான். மிகவும் நன்றி. நீங்கள் ஒரு இந்தி இசைப் பிரியர் என்று தெரிந்து ஒரு நெகிழ்ச்சியும் மனதில் தோன்றுகிறது. //

  அந்த பழைய அனுபவம், அந்த சந்தோசம் இனிமேல் வராது. நான் வேலைக்கு சேர்ந்த புதிதில் பழைய தமிழ்ப் பட பாடல்களோடு, பழைய இந்தி பட பாடல்களையும் முணுமுணுத்துக் கொண்டு இருப்பேன். எங்களது ஹெட் கேஷியரும் என்னோடு சேர்ந்து இந்தி பட பாடல்களை முணுமுணுப்பார்.

  // என்றாவது ஒரு நாள் உங்களை சந்தித்து அந்த காலத்து கெயிட்டி டாக்கீஸ் படங்களை அலசி பார்ப்போமா....//

  நிச்சயமாக. புதுக்கோட்டையில் வலைப்பதிவர்கள் மாநாடு நடைபெற இருக்கிறது அய்யா.

  ReplyDelete
 22. மறுமொழி> வே.நடனசபாபதி said...

  // இசைக்கு மொழி தடையில்லை என்பதை இந்தி திரைப்பட பாடல்கள் நிரூபித்திருக்கின்றன. ஆராதனா திரைப் படத்தின் பாடல்களை பொருள் புரியாவிடினும் முணுமுணுத்தோர் பலர். எனக்கு பிடித்த பாடல் Dil //

  ”இசைக்கு மொழி தடையில்லை” என்ற கருத்துரை தந்த அய்யா V.N.S அவர்களுக்கு நன்றி.

  // Deke Deko என்ற திரைப்படத்தில் வந்த Bade Hain Dil Ke Kaale என்ற பாடல் தான். இது பற்றி எனது நினைவோட்டம் 70 என்ற பதிவில் எழுதியிருக்கிறேன். பகிர்ந்தமைக்கு நன்றி! //

  அவசியம் சென்று பார்க்கிறேன் அய்யா.

  ReplyDelete
 23. மறுமொழி> மனோ சாமிநாதன் said...

  // அருமையான பதிவு! மலரும் நினைவுகளைத் திரும்பக் கொண்டு வந்து விட்டீர்கள்! //

  சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

  // 40 வருடங்களுக்கு முன், திருமணமானதும் முதன் முதலாக மும்பைக்கும் பூனாவிற்கும் இடையே உள்ள ஒரு கிராமத்தில் வாசம். அங்கே தான் ஹிந்திப்பாடல்களின் அறிமுகம் ஆரம்பமானது. ரஃபியும் லதா மங்கேஷ்கரும் முகேஷும் அறிமுகமாகி மனதை மயங்க வைத்து அங்கே பதிந்து போய் விட்டார்கள். ராஜ் கபூரிலிருந்து தொடங்கி அருமையான அனைத்து ஹிந்திப்பாடல்களும் எங்கள் வீட்டில் இருக்கின்றன!

  ராஜ்கபூர் நர்கிஸ் நடித்த படங்களில் பாடல்களும் அதற்கேற்ப காட்சிகளும் ஒன்றுக்கொன்று போட்டி போடும். உதாரணத்திற்கு இந்த இணைப்பைப் பாருங்கள். பாடலுக்காகவும் காட்சிக்காகவும் மிகவும் புகழ் பெற்ற‌து இந்த பாடல்!

  https://www.youtube.com/watch?v=y01uvU0UAoU //

  சுவாரஸ்யமான கிராமத்து நினைவுகள்.நீங்கள் ரசித்த பழைய திரைப்படங்கள், பாடல்களை மலரும் நினைவுகளாக பதிவுகள் எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன். ஆகக் கூடி மூத்த வலைப்பதிவர்கள் அனைவரும் மொழியைக் கடந்து இசையை மட்டுமே கருத்தில் கொண்டு ரசிப்பதைஅறிந்து கொண்டேன். நீங்கள் குறிப்பிட்ட இணையதளம் (யூடியூப்) சென்று பார்க்கிறேன்.

  ReplyDelete
 24. மறுமொழி> மனோ சாமிநாதன் said...

  // நீங்கள் முகப்பில் காண்பித்திருப்பது ஹிந்தி நடிகை நூடன். இவரும் நர்கிஸ் காலத்தில் இணைந்து நடித்த ஒரு புகழ் பெற்ற‌ நடிகை! //

  தி.தமிழ் இளங்கோ said...
  ****** மறுமொழி > மனோ சாமிநாதன் said... ********

  வலைப்பதிவில் எனது தவறினை சுட்டிக் காட்டிய சகோதரி அவர்களுக்கு நன்றி.

  // நீங்கள் முகப்பில் காண்பித்திருப்பது ஹிந்தி நடிகை நூடன். இவரும் நர்கிஸ் காலத்தில் இணைந்து நடித்த ஒரு புகழ் பெற்ற‌ நடிகை! //

  Google Search - இல் Nargis Dutt என்று தேடுவதற்குப் பதிலாக Nargis என்று தேடியதால் வந்த பிழை இது. தவறுக்கு மன்னிக்கவும்.

  உங்கள் கருத்துரையைக் கண்டவுடன, முன்பு இந்த பதிவின் முகப்பில் இருந்த (ஹிந்தி நடிகை நூடன்) படத்தை நீக்கி விட்டு, இப்போது நர்கீஸ் படத்தை இணைத்து விட்டேன்.

  ReplyDelete
 25. மறுமொழி> yathavan nambi said...

  வாழ்த்துக்கள் நண்பரே! உங்கள் வலைப்பக்கம் எனது வாழ்த்துரையை பதிந்துள்ளேன்.

  ReplyDelete
 26. மறுமொழி> sury Siva said...

  // அனாரி படத்தில் ராஜ் கபூர் உடன் நடித்திருப்பது நூடான்.
  நர்கீஸ் அல்ல. - சுப்பு தாத்தா. //

  எனது தவறுக்கு மன்னிக்கவும். பிழையை சரி செய்து விட்டேன். உங்களின் இந்த கருத்துரையை எனது பதிவின் இடையே சேர்த்துள்ளேன் அய்யா.

  ReplyDelete
 27. மறுமொழி> வை.கோபாலகிருஷ்ணன் said...

  // நம் கெயிட்டி டாக்கீஸில் நானும் 1970-1972 காலக்கட்டத்தில் ஒருசில ஹிந்திப்படங்கள் மட்டுமே பார்த்துள்ளேன். அதில் இன்றும் என் நினைவில் நிற்கும் பாடல் “ரூப்பு தேரா .... மஸ்தானா” மட்டுமே. பகிர்வுக்கு நன்றிகள். //

  கருத்துரை தந்த அன்புள்ள V.G.K அவர்களுக்கு நன்றி. அந்தக் கால கெயிட்டி டாக்கீஸ் இந்தி படம் பார்த்த அனுபவங்களை யாராலும் மறக்க முடியாது அய்யா.

  ReplyDelete
 28. மறுமொழி> ரூபன் said...

  கவிஞர் ரூபன் அவர்களுக்கு வணக்கம்! பாராட்டுக்கும் கருத்துரைக்கும் நன்றி.

  ReplyDelete
 29. மறுமொழி> G.M Balasubramaniam said...

  அய்யா G.M B அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

  //இளவயதில் மொழி பேதமின்றி திரைப்படங்களையும் பாடல்களையும் ரசித்ததுண்டு. ராஜ் கபூர் நர்கிஸ் நடித்த ஜாக்தே ரஹோ என்னும் படத்தில் வருமொரு காட்சியே ராஜ்கபூர் ஃபில்ம்ஸின் அடையாளமாக இருந்தது ( இருக்கிறதா?)அந்தக் காலப் பாடல்கள்காதுக்கு இனிமையாக இருந்தன. இப்போதைய பாடல்கள் ஒரே கூச்சல். நினைவுகளைக் கிளறிய பதிவு. வாழ்த்துக்கள். //

  மலரும் நினைவுகளாக தனது அனுபவங்களைச் சொன்ன அய்யா G.M B அவர்களுக்கு நன்றி.

  ReplyDelete
 30. மறுமொழி> S.P. Senthil Kumar said...

  // என் தந்தை அடிகடி ராஜ்கபூரும் நர்கிசும் நடித்த 'ஸ்ரீ 420' படத்தைப் பற்றி கூறுவார். அதில் மழையில் நினைந்தபடி பாடும் 'கியாகுவா' பாடல் மிகவும் பிடிக்கும். அருமையான நடிகை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி! த ம 11 //

  அப்பாவின் அனுபவத்தோடு தனக்கு பிடித்த பாடலையும் குறிப்பிட்ட சகோதரர் எஸ்.பி.செந்தில் குமார் அவர்களுக்கு நன்றி.

  ReplyDelete
 31. மறுமொழி> KILLERGEE Devakottai said...

  நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி

  ReplyDelete
 32. அருமையான பாடல்களைத் தெரிவு செய்து இங்கு பகிர்ந்திருக்கின்றீர்கள். பல முறை கேட்டாலும் அலுக்காத பாடல்கள் அதுவும் ராஜா ஜிக்கி குரல்கள் அப்படியே மனதை அமைதியாக்கிவிடும் அப்போது அந்தக் காலகட்டத்தில் இவர்களின் பாடல்கள் தான் மிகவும் பிரபலம்...இப்போதும் கேட்டு ரசிக்கத் தக்கவை.

  மீண்டும் பழைய நினைவுகளைத் தட்டி எழுப்பியதற்கு மிக்க நன்றி ஐயா!

  ReplyDelete
 33. வணக்கம் அய்யா
  தங்களின் அழகியல் உணர்வுகளை இப்பதிவு எடுத்துரைக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். பாடல்கள் அனைத்தும் சரியான தேர்வு. நண்பர்களின் கருத்துரையும் தங்களின் மறுமொழியும் மனதை 80களுக்கு அழைத்துச் செல்கிறது. பகிர்வுக்கு நன்றிகள்...

  ReplyDelete