Friday 9 January 2015

மறைந்த பதிவரின் பெயரில் கேள்வியும் - பதிலும்



அய்யா பழனி கந்தசாமி அவர்களது பதிவுகள் ரொம்பவும் சுவாரஸ்யமானவை. அவரது வாசகர்களில் நானும் ஒருவன். சிலசமயம் தனது கம்ப்யூட்டரில் ஏதாவது செய்து விட்டு, மாட்டிக்கொண்டு ஙேஎன்று விழிப்பார்; பின்னர் மீண்டு வந்த கதையை ஒரு பதிவாகப் போடுவார். அல்லது தான் வாங்கிய புதிய பொருட்களைப் பற்றிய தனது அனுபவத்தினை எழுதுவார். இவை என் போன்றவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். இதுவாவது பரவாயில்லை. சில சமயம், பிரச்சினையான தலைப்புகளில் பதிவுகளைப் போட்டு விட்டு , எக்கச்சக்கமான கருத்துரைகளை சாதகமாகவும், பாதகமாகவும் பெற்று, எல்லாவற்றிற்கும் அசராது பதில்கள் சொல்லியும்,  வலையுலகில் பரபரப்பாக இருப்பார்.

கேள்வியும்- பதிலும்:

அண்மையில், அவர் பரபரப்பாக குடும்பப் பெண்கள் கடைப் பிடிக்க வேண்டியவை  என்று ஒரு பரபரப்பான பதிவை வெளியிட்டார். அதில் பொன்னியின் செல்வன் என்ற பெயரில் சில கேள்விகள்..

// எவ்வளவு மூடத்தனமான குறிப்புகள். வாசல் எங்கே இருக்கிறது , சாணம் தெளிக்க? பொட்டில்லாமல் இருக்கக் கூடாது சரி, அப்படியானால் கணவனை இழந்தோர்? தயவு செய்து அறிவியல் ரீதியான விஷயங்களை தாருங்கள். //

அதற்கு அய்யா பழனி. கந்தசாமி அவர்கள்,

//அது தெரியாத மூடனாக இருப்பதால்தானே இப்படிப்பட்ட பதிவுகள் எழுதிக்கொண்டு இருக்கிறேன். அறிவியல் ரீதியான விஷயங்களைத் தருவதற்குத்தான் உங்களைப் போன்றவர்கள் இருக்கிறார்களே?//

என்று பதில் அளித்ததோடு, இதற்காகவே ஒரு தனி பதிவு ஒன்றினை,

மூடத்தனமான பதிவுகள்

என்று வெளியிட்டு இருந்தார். இதில் என்ன  பெரிதாக கண்டு பிடித்து விட்டாய்? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. மேற்கொண்டு படியுங்கள்.

பொன்னியின் செல்வன்:

பொன்னியின் செல்வன் என்ற அந்த பதிவரின் பெயரில் கேள்வி கேட்டது பற்றியோ அல்லது அய்யா அவர்கள் பதில் எழுதியது அல்லது பதிவு போட்டதெல்லாம் பெரிய விஷயமில்லை. ஆனால் பொன்னியின் செல்வன் என்ற பதிவர் இறந்து  ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆகி விட்டன என்பதும், இறந்து போன அந்த வலைப் பதிவரின் தாய், தனது மகனின் நினைவாக அந்த வலைத் தளத்தினை தொடர்ந்து நடத்தி வருகிறார் என்பதும் அவர்தான் இந்த கேள்வியைக் கேட்டவர் என்றும், அய்யாவுக்கு தெரிய வாய்ப்பில்லை. எனவேதான் இந்த பதிவு.

இறந்த மகனின் நினைவாக அம்மா:

கார்த்திகேயன் என்பவர் ஒரு சாப்ட்வேர் என்ஜீனியர். பெங்களூரில் பணிபுரிந்து வந்தார். இவர் கார்த்திக் என்ற பெயரில் “விஜயநகரம்” ( Vijayanagar – விஜயநகரம் http://vijayanagar.blogspot.in )  என்ற வலைத் தளம் ஒன்றினைத் தொடங்கி எழுதி வந்தார். இவர் ஒருநாள் தனது பைக்கில் சென்று கொண்டு இருந்தபோது , சாலையில் சறுக்கி விழ, வேறு வேலையாக அங்கு சாலை ஓரம் நின்று கொண்டிருந்த செந்தழல் ரவி அவர்கள், ஓடிச் சென்று கார்த்திக்கை தனது மடியில் கிடத்துகிறார். இவரும் ஒரு பதிவர். ஆனால் இருவருக்கும் ஒருவருக்கொருவர் யாரென்று தெரியாது. அறிமுகம் கிடையாது. அப்போது அங்கு என்ன நடந்தது என்பதனை, சகோதரர் செந்தழல் ரவி அவர்கள், கீழ்க்கண்ட தனது பதிவினில் விவரிக்கிறார். இந்த பதிவினையும் அதற்கு வந்த பின்னூட்டங்களையும் அவசியம் படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். ( இந்த பதிவினை நான் ஒரு வாசகனாக , எனது வலைத்தளம் தொடங்குவதற்கு முன்பு படித்தது)


பொன்னியின் செல்வன் என்ற கார்த்திகேயன் ( கார்த்திக்) இறந்த பிறகு, தனது மகன் மீதுள்ள பாசத்தால், அவரது நினைவாக, அவரது தாய் அவரது Vijayanagar – விஜயநகரம் “ என்ற பதிவினை தொடர்ந்து நடத்தியும், பதிவுகள் எழுதியும் வருகிறார். இந்த செய்தி மலைப்பூட்டும் செய்தியாகவே உள்ளது. அந்த வலைத் தளத்தில், இறந்து போன கார்த்திக் பற்றிய நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது. திறமைசாலியான ஒரு இளைஞன் சின்ன வயதிலேயே முடிந்து போனது கண்ணீரை வரவழைத்தது.  

என்னுடைய கருத்து:

கார்த்திக்கின் அம்மா அவர்கள் இன்னும் எத்தனை நாளைக்கு தன மகன் பெயரிலேயே பதிவுகள் எழுதப் போகிறார்? ஒரு மன சாந்திக்காகவே என்றாலும், மற்றவர்கள் பதிவினில் இன்னொருவர் பெயரினில் கருத்துரைகள் எழுதுவதும் கேள்விகள் கேட்பதும் தவறு அல்லவா? சில சமயம் குழப்பமும் வரலாம். எனவே சகோதரி (கார்த்திக்கின் அம்மா) அவர்கள், தனது மகன் பற்றிய சோகத்திலிருந்து மீண்டு வந்து, தனது பெயரிலேயே ஒரு வலைத் தளத்தினைத் தொடங்கி எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன். இதில் தனது மகனைப் பற்றிய நினைவலைகளை மற்றவர்களுக்குச் சொல்லி, மகனுக்கு அஞ்சலி செய்யலாம். அவரது மகனின் ஆன்மாவும் சாந்தி அடையும். 

  



48 comments:

  1. ஆமாம், நீங்கள் சொல்வது சரியே! காலம் இன்னும் அவர் சோகத்தை மாற்றவில்லை என்பதும் சோகம்தான்:(

    ReplyDelete
  2. விவரங்களுக்கு மிகவும் நன்றி, தமிழ் இளங்கோ. என்னுடைய நிறை குறைகளையும் திறந்த மனதுடன் சுட்டிக்காட்டியதற்கும் நன்றி.

    நீங்க்ள சுட்டிக் காட்டியுள்ள கேள்வி ஒரு பெண்மணி கேட்டது என்று தெரிந்திருந்தால் என் பதில் வேறு மாதிரியாக இருந்திருக்கும். அதுவும் கமனை இழந்த ஒரு தாய் என்றால் அவர்கள் கேட்கும் கேளவிகளை வேறு ஒரு தளத்தில் இருந்து பார்க்கவேண்டும். இந்த விவரங்கள் எனக்குத் தெரியாததால் தவறான பதில்கள் வெளிப்பட்டு ஒரு வேண்டாத விவாதத்தைத் துவங்கி விட்டது. நிகழ்வுகளுக்காக நான் வருந்துகிறேன். அந்த சகோதரிக்கு என் வருத்தங்களைத் தெரிவிக்கிறேன்.

    ReplyDelete


  3. "சகோதரி (கார்த்திக்கின் அம்மா) அவர்கள், தனது மகன் பற்றிய சோகத்திலிருந்து மீண்டு வந்து, தனது பெயரிலேயே ஒரு வலைத் தளத்தினைத் தொடங்கி எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன். இதில் தனது மகனைப் பற்றிய நினைவலைகளை மற்றவர்களுக்குச் சொல்லி, மகனுக்கு அஞ்சலி செய்யலாம். அவரது மகனின் ஆன்மாவும் சாந்தி அடையும்." என்ற தங்கள் கருத்தையே நானும் வெளிப்படுத்த விரும்புகிறேன்.

    தைப்பொங்கலா? சிறுகதைப் போட்டியா?
    http://eluththugal.blogspot.com/2015/01/blog-post.html
    படித்துப் பாருங்களேன்!

    ReplyDelete
  4. கார்த்திக் அம்மா என்றதும் எனக்கு நினைவுக்கு வந்து விட்டது.முன்பு ஒரு முறை ஜூனோ! எங்கள் செல்லமே என்ற நாய்க்கு எழுதிய இரங்கல் கவிதையை படித்து
    யயஒரு நாயின் பிரிவே உங்களை இவ்வளவு வாட்டுகிறது என்று சொன்னால், என் மகனின் பிரிவு எவ்வளவு என்னை வாட்டும்?
    அற்புதமான உணர்வு வெளிப்பாடு.இந்த கவிதையை என் ப்ளாக்கில் ,உங்கள் பெயரில்தான், வெளியிடட்டுமா?அனுமதி தருகிறீர்களா?
    அன்புடன்,
    கார்த்திக் அம்மா//
    என்ற கருத்தின் மூலம் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளமுடிந்தது.அவர்களுடைய வலைப் பதிவிற்கு சென்று பிற தகவல்களையும் அறிந்து கொண்டேன்.
    நீங்கள் சொல்வது போல கார்த்திக் அம்மா என்றே வலைப் பதிவர்க்கு பெயர் வைத்து விடலாம். என்றாலும் அந்தத் தாயின் மனதில் என்ன இருக்கிறதோ தெரியாது. அவர்களுக்கு அது ஆறுதல் அளிக்குமாயின் அப்படியே தொடர்ந்து விட்டுப் போகட்டும்.

    ReplyDelete
  5. ///சகோதரி (கார்த்திக்கின் அம்மா) அவர்கள், தனது மகன் பற்றிய சோகத்திலிருந்து மீண்டு வந்து, தனது பெயரிலேயே ஒரு வலைத் தளத்தினைத் தொடங்கி எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன். இதில் தனது மகனைப் பற்றிய நினைவலைகளை மற்றவர்களுக்குச் சொல்லி, மகனுக்கு அஞ்சலி செய்யலாம். அவரது மகனின் ஆன்மாவும் சாந்தி அடையும்." ///
    தங்களின் கருத்து சரியானதுதான் ஐயா
    ஆனாலும் பெற்ற தாய்க்கு , மகனின் பெயரில் உள்ள பதிவினை, மகனால் தொடங்கப் பெற்ற பதிவினிலி எழுதுவது, தன் மகனுடன் பேசுவதற்கு ஒப்பான செயல் என்று எண்ணலாம், என்னைப் பொறுத்தவரை, அவருடைய மகன் தொடங்கிய வளைத் தளமும், அவரது மகனாகவே அவருக்குத் தோன்றலாம்

    ReplyDelete
  6. மனதை உருக்கிய தகவல். பெற்ற மகனை இழந்த தாயின் சோகம் மனதை விட்டு அகலாது தான். ஆனாலும் கார்த்திக் அம்மா அவர்கள் விரைவில் இந்த சோகத்திலிருந்து விடுபட அவரது அருமை மகன் பெயரில் அறக்கட்டளை தொடங்கி சேவை செய்யலாம்.

    ReplyDelete
  7. மகனின் இழப்பு பேரிழப்பு . நீங்கள் சொல்வதும் சரிதான்

    ReplyDelete
  8. நேற்று கூட பிறந்தநாள் வாழ்த்து சொல்ல என்னிடம் பேசினார்கள்... அவர்கள் எண்ணம் முழுவதும் கார்த்திக் தான்...

    ReplyDelete
  9. முகப்பை மட்டும்தான் மாற்றவில்லை. ஆனால் எழுதும்போது '' '' ''கார்த்திக் அம்மா '' '' என்றுதான் எழுதுகிறேன். பலரும் அதை பார்ப்பதில்லை. எந்த இடத்திலும் கார்த்தி என்ற பெயரில் எழுதவில்லை. கார்த்திக் அம்மா அல்லது கலா கார்த்திக் என்றேதான் எழுதுகிறேன்.
    2)செந்தழலால் ரவி எழுதியதில் பல உண்மைக்கு புறம்பான விஷயங்கள் உள்ளன. கார்த்திக்கிற்கு விபத்து நடந்தது காலை 8.50 மணிக்கு. அப்போது அவர் அங்கே இல்லவே இல்லை. அவர் கார்த்திக்கிற்கு உதவவும் இல்லை.அவர் நிறைய புனைந்திருக்கிறார். என் இரண்டாவது மகனை பற்றி நான் கவலை கொள்ளவே இல்லை என்றெல்லாம் எழுதியுள்ளார். .
    போகட்டும்.
    என் உயிர் மகன் கார்த்தியின் புகைப்படத்தை ப்ளாகிலிருந்து மாற்ற எனக்கு எப்படி மனம் வரும்.? படிப்பவர்கள் கிழே இருக்கும் பெயரையும் படிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  10. என் சோகத்தை புரிந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.
    கந்தசாமி ஐயா ,
    மகனை மட்டும் அல்ல, கணவனையும் இழந்த வால்.
    YK
    ஒரே ஒரு நிமிடம் கூடநான் என்னை நானாக பார்க்கவில்லை.கார்த்தி அம்மாவாகவே இருக்கிறேன். அப்படிப்பட்ட அன்பு தெய்வம் அவன்.நான் கார்த்திக் அம்மாவாகவே இருந்து (வாழ்ந்து அல்ல ,..வாழ்வதற்கும் இருப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது நான் இருந்து கொண்டுதான் இருக்கிறேன்) மறைய விரும்புகிறேன்.எனவே என் பெயரில் வலை தொடங்குவதை நினைத்தாலே நெஞ்சம் நடுங்குகிறது.
    முரளி,
    அந்த கவிதையை வெளியிட வேண்டும் விரைவில்.
    நடந் சபாபதி ஐயா , அறக்கட்டளை 2005 லேயே தொடங்கி விட்டாயிற்று. இரண்டாவது மகன் மனம் முடித்தவுடன் பொது சேவை தொடங்குவேன் உறுதி.

    ReplyDelete
  11. என் சோகத்தை புரிந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.
    கந்தசாமி ஐயா ,
    மகனை மட்டும் அல்ல, கணவனையும் இழந்தவள .
    YK
    ஒரே ஒரு நிமிடம் கூடநான் என்னை நானாக பார்க்கவில்லை.கார்த்தி அம்மாவாகவே இருக்கிறேன். அப்படிப்பட்ட அன்பு தெய்வம் அவன்.நான் கார்த்திக் அம்மாவாகவே இருந்து (வாழ்ந்து அல்ல ,..வாழ்வதற்கும் இருப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது நான் இருந்து கொண்டுதான் இருக்கிறேன்) மறைய விரும்புகிறேன்.எனவே என் பெயரில் வலை தொடங்குவதை நினைத்தாலே நெஞ்சம் நடுங்குகிறது.
    முரளி,
    அந்த கவிதையை வெளியிட வேண்டும் விரைவில்.
    நடந் சபாபதி ஐயா , அறக்கட்டளை 2005 லேயே தொடங்கி விட்டாயிற்று. இரண்டாவது மகன் மனம் முடித்தவுடன் பொது சேவை தொடங்குவேன் உறுதி.

    ReplyDelete
  12. ஐயா! கார்த்திக் அம்மா அவர்கள் அவர்கள் சொல்லியிருப்பது போல கார்த்திக் அம்மா அல்லது கலா கார்த்திக் என்றுதான் எழுதுகின்றார். பலர் அதைக் கவனிப்பது இல்லை. உண்மையே! அவர்கள் தன் மகனின் வழி பேச நினைப்பதில் தவறு இல்லை. அப்படியாவது அவருக்கு மகனின் இழப்பு ஆறுதல் தருமாயின் நல்லதுதானே! அவர்தான் தன் பெயரைப் போடுகின்றாரே! கரந்தையாரும், முரளிதரன் அவர்களும் சொல்லுவது சரியே!

    ReplyDelete
  13. வணக்கம் ஐயா !

    இப் பகிர்வினைப் படிக்கும் போது மகனை இழந்த அந்தத் தாயின் மனம் போன
    போக்கில் போவதே சரியென்று தோன்றுகிறது .சில காலம் இப்படித் தன்னுள்
    எழும் பிரிவுத் துயரைப் போக்கவே அந்த வலைத் தளத்தில் பணி புரிகிறார் என்று
    தோன்றுகிறது எது எப்படியோ அந்த அம்மாவுக்கு மன அமைதியையும் நின்மதியையும்
    இறைவன் அருள வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன் ! பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா .

    ReplyDelete
  14. வணக்கம் நண்பரே கார்த்திக்கின் அம்மா அவர்களின் பதிவுக்கு அன்றே நான் ஆறுதல் சொல்லி கருத்துரை இட்டு இருந்தேன்.
    அதன் தலைப்பு - கார்த்திக்கின் பிறந்தநாள்


    2014/11/13
    இன்று பிறந்த நாள் :
    இன்று என் உயிர் மகன் கார்த்திக்கிற்கு பிறந்த நாள்.
    எனக்கும் இன்றே பிறந்த நாள்.
    ஆம்.
    இருவருக்கும் ஒரே நாள் பிறந்த நாள்.

    நான்:14.11.1958.
    கார்த்தி:14.11.1981

    ReplyDelete
  15. பதிவு என்னவோ எண்ணங்களைச் சொல்லிச் செல்கிறது. கார்த்திக்கின் அம்மா எழுதுவதுஅவரது மன சாந்திக்காகவா இல்லை மகனின் வலையில் மகனது எண்ணங்களை எடுத்துச் சொல்லவா.சிலருக்கு துக்கத்தைத் தொடர்ந்து அனுபவிப்பதும் பெருமையாய் இருக்கும். கார்த்திக்கின் அம்மா ஒரு ஆசிரியை. ”ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்” நிச்சயம் தெரிந்தவராகத்தான் இருப்பார்ஏதோ மனதில் தோன்றியது. கார்த்திக்கின் அம்மா மனம் புண்படுத்த அல்ல.

    ReplyDelete
  16. எதேச்சையாக ஓர் வலைபதிவில் இவரது பின்னூட்டம் பார்த்து வலைப்பக்கம் சென்று படித்து அதிர்ந்து போனேன். திறமையான இளைஞரின் திடீர் மரணம் அவரை மிகவும் பாதித்து இருப்பதையும் அந்த சோகத்தை மாற்ற வலைப்பூவில் எழுதி வருவதும் பாராட்டுக்குரியது. தொடர்ந்து அவரது வலைப்பக்கம் செல்ல முடிவது இல்லை! நன்றி!

    ReplyDelete
  17. நேற்று உங்க பதிவின் வாயிலாக அறிந்தேன் .இனி அவர் பக்கம் தொடர்ந்து செல்வேன் அண்ணா

    ReplyDelete
  18. என் பதிவில் வந்த பின்னூட்டம் "Ponniyinselvan/karthikeyan said..." என்று இருந்ததால் என் பதில் அந்த மாதிரி இருந்தது. இந்தப் பெயரின் பின்னால் இருக்கும் சோகத்தை நான் அறிந்திருக்கவில்லை பின்னூட்டங்களில் வரும் பெயர்களின் உள்ளே புகுந்து அவர்களின் பின்புலங்களைத் தெரிந்து கொள்வதில் எனக்கு ஆர்வமில்லை. ஆகவே அந்தப் பெயர்களை வைத்து என் பதில்களை எழுதுகிறேன். அந்தப் பின்னூட்டத்தில் இணைந்து இருந்த படமும் என் தவறான புரிதலுக்கு மற்றுமொரு காரணம். இதை கார்த்திக் அம்மா புரிந்து கொள்ள வேண்டுகிறேன்.

    ReplyDelete
  19. பதிவைப் படித்ததும் மனம் கனத்தது. வாழ்வின் சோகங்கள் என்பது தவிர்க்கமுடியாதவை. அதுவும் இவை போன்ற சோகங்களை ஈடுகட்டுவது என்பது முற்றிலும் முடியாதது. இளம் வயது மரணம் என்பது கொடுமை. அந்த சோகத்தைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் மேற்கொள்ளும் முயற்சியானது நல்ல பலனைத் தரும் என்று நம்புவோம். மற்றவர்களும் இணைந்து படிப்பதால் மனச் சுமை அதிகம் குறையவே வாய்ப்புள்ளது.

    ReplyDelete
  20. நீங்கள் சொன்னபிறகுதான் பதிவுலகிலும் எத்தனை ஈரமான நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன என்பது தெரிகிறது.

    ReplyDelete
  21. இப்படி ஒரு பதிவர் பெரிய விசயம்தான்
    அந்த அம்மாவிற்கு எனது வணக்கங்கள் ..

    ReplyDelete
  22. முக்கியமான பணியையும் செய்துவிட்டேன் ஆறு...

    ReplyDelete
  23. மறுமொழி > (பொது)

    பேசாப் பொருளை, பேசத் துணிந்தேன் என்றபடியினால், தனிப்பட்ட முறையில் பொதுவாக, எனது கருத்தை, இந்த பதிவின் கடைசியில் சொல்லி விட்ட படியினால் , இந்த பதிவுக்கு மறுமொழிகள் ஏதும் எழுதக் கூடாது என்ற மனநிலையில்தான் இருந்தேன். ஆனாலும் சுருக்கமாக மறுமொழிகள் சொல்லி விடலாம் என்று எண்ணியுள்ளேன்.

    காரணம், இன்றுதான் பார்த்தேன். (நேற்று (09.01.15) முழுக்க நான் வீட்டில் இல்லை. ஒரு பெரிய காரியம். வெளியூர் சென்று விட்டேன்.) எதிர் பார்த்ததற்கு மாறாக, கருத்துரைப் பெட்டியில், நிறைய கருத்துரைகள். சில விவாதப் பொருளாய் உள்ளன. எனவே முடிந்தவரை எல்லாவற்றிற்கும் வழக்கம் போல மறுமொழிகள் எழுதி விடுகிறேன்.

    ReplyDelete
  24. மறுமொழி > துளசி கோபால் said...

    // ஆமாம், நீங்கள் சொல்வது சரியே! காலம் இன்னும் அவர் சோகத்தை மாற்றவில்லை என்பதும் சோகம்தான்:( //

    துளசி டீச்சர் அவர்களின் ஆழமான கருத்துரைக்கு நன்றி. காலம்தான் கார்த்திக் அம்மாவின் மனக் காயத்தை மாற்ற வேண்டும்.

    ReplyDelete
  25. மறுமொழி > பழனி. கந்தசாமி said... (1)

    அய்யா பழனி. கந்தசாமி அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி

    // விவரங்களுக்கு மிகவும் நன்றி, தமிழ் இளங்கோ. என்னுடைய நிறை குறைகளையும் திறந்த மனதுடன் சுட்டிக்காட்டியதற்கும் நன்றி. நீங்க்ள சுட்டிக் காட்டியுள்ள கேள்வி ஒரு பெண்மணி கேட்டது என்று தெரிந்திருந்தால் என் பதில் வேறு மாதிரியாக இருந்திருக்கும். அதுவும் கமனை இழந்த ஒரு தாய் என்றால் அவர்கள் கேட்கும் கேளவிகளை வேறு ஒரு தளத்தில் இருந்து பார்க்கவேண்டும். இந்த விவரங்கள் எனக்குத் தெரியாததால் தவறான பதில்கள் வெளிப்பட்டு ஒரு வேண்டாத விவாதத்தைத் துவங்கி விட்டது. நிகழ்வுகளுக்காக நான் வருந்துகிறேன். அந்த சகோதரிக்கு என் வருத்தங்களைத் தெரிவிக்கிறேன். //

    எனது பதிவினில் உங்களுடைய நிறைகளை மட்டுமே சுட்டிக் காட்டியுள்ளேன். குறை ஏதும் சொல்லவில்லை. ( உங்கள் மனம் வருத்தப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, பல தலைப்புகளை வைத்துப் பார்த்துவிட்டு , கடைசியாக இந்த தலைப்பினை வைத்தேன்)

    அவர் (கார்த்திக்கின் அம்மா) உங்களுக்கு எழுதிய முதல் பின்னூட்டத்தில், தான் இன்னார் என்று எங்கும் சொல்லவில்லை. எனவே உங்கள் மீது தவறேதும் இல்லை.


    ReplyDelete
  26. மறுமொழி > Yarlpavanan Kasirajalingam said...

    சகோதரர் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம் அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  27. மறுமொழி > டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

    சகோதரர் கல்வி அதிகாரி, டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று அவர்களின் அன்பான நீண்ட கருத்துரைக்கு நன்றி.
    // நீங்கள் சொல்வது போல கார்த்திக் அம்மா என்றே வலைப் பதிவர்க்கு பெயர் வைத்து விடலாம். என்றாலும் அந்தத் தாயின் மனதில் என்ன இருக்கிறதோ தெரியாது. அவர்களுக்கு அது ஆறுதல் அளிக்குமாயின் அப்படியே தொடர்ந்து விட்டுப் போகட்டும். //

    இதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை அய்யா.

    ReplyDelete
  28. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said... ( 1, 2 )

    சகோதரர், ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் அன்பான நீண்ட கருத்துரைக்கு நன்றி.

    // தங்களின் கருத்து சரியானதுதான் ஐயா ஆனாலும் பெற்ற தாய்க்கு , மகனின் பெயரில் உள்ள பதிவினை, மகனால் தொடங்கப் பெற்ற பதிவினிலி எழுதுவது, தன் மகனுடன் பேசுவதற்கு ஒப்பான செயல் என்று எண்ணலாம், என்னைப் பொறுத்தவரை, அவருடைய மகன் தொடங்கிய வளைத் தளமும், அவரது மகனாகவே அவருக்குத் தோன்றலாம் //

    உளவியல் அடிப்படையில் தாங்கள் சொன்ன கருத்திற்கு, மாற்றுக் கருத்து ஏதும் இல்லை அய்யா.

    ReplyDelete
  29. மறுமொழி > வே.நடனசபாபதி said...

    அய்யா V.N.S அவர்களின் கருத்துரைக்கு நன்றி. கார்த்திக்கின் அம்மாவே கீழே மறுமொழி தந்து விட்ட படியினால் எனது கருத்து ஏதும் இல்லை.

    ReplyDelete
  30. மறுமொழி > கவியாழி கண்ணதாசன் said...

    சுருக்கமான கருத்துரை தந்த, கவியாழி கண்ணதாசன் அவர்களுக்கு நன்றி

    ReplyDelete
  31. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...

    சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  32. மறக்கவே முடியாதவர்களை அவர்களது
    உடமைகள் சிலவற்றை வைத்து
    ஆறுதல் படுத்திக் கொள்வோம்

    வலைத்தளமும் அப்படி இருப்பது குறித்து அறிய
    நெகிழ்ந்து போனேன்

    ReplyDelete

  33. மறுமொழி > Ponniyinselvan/karthikeyan said... ( 1 )

    சகோதரி (கார்த்திக்கின் அம்மா) அவர்களின் அன்பான, நீண்ட கருத்துரைகளுக்கு நன்றி.

    // முகப்பை மட்டும்தான் மாற்றவில்லை. ஆனால் எழுதும்போது '' '' ''கார்த்திக் அம்மா '' '' என்றுதான் எழுதுகிறேன். பலரும் அதை பார்ப்பதில்லை. எந்த இடத்திலும் கார்த்தி என்ற பெயரில் எழுதவில்லை. கார்த்திக் அம்மா அல்லது கலா கார்த்திக் என்றேதான் எழுதுகிறேன்.//

    அய்யா பழனி. கந்தசாமி அவர்களுக்கு நீங்கள் எழுதிய முதல் பின்னூட்டத்தில், தான் இன்னார் என்று எங்கும் சொல்லவில்லை. அய்யா பழனி. கந்தசாமி அவர்களும் பதில் தந்து விட்டார். எனவே இனிமேல், இதனை விவாதப் பொருளாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இந்த விஷயத்தில் தங்கள் மனம் வருத்தப்படும்படி ஏதேனும் இருப்பின் மன்னிக்கவும்.

    // 2)செந்தழலால் ரவி எழுதியதில் பல உண்மைக்கு புறம்பான விஷயங்கள் உள்ளன. கார்த்திக்கிற்கு விபத்து நடந்தது காலை 8.50 மணிக்கு. அப்போது அவர் அங்கே இல்லவே இல்லை. அவர் கார்த்திக்கிற்கு உதவவும் இல்லை.அவர் நிறைய புனைந்திருக்கிறார். என் இரண்டாவது மகனை பற்றி நான் கவலை கொள்ளவே இல்லை என்றெல்லாம் எழுதியுள்ளார். .
    போகட்டும். //

    சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர், தமிழ்மணம் வாசகனாக மட்டும் நான் இருந்தபோது ( அப்போது நான் வலைப்பதிவு ஏதும் தொடங்கவில்லை) படித்த செந்தழல் ரவி அவர்கள் எழுதிய பதிவு இது. விபத்தின் அன்று, என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. நீங்களும் இதுவிஷயமாக, மறுப்பு எதுவும் வெளியிட்ட மாதிரியும் தெரியவில்லை.

    // என் உயிர் மகன் கார்த்தியின் புகைப்படத்தை ப்ளாகிலிருந்து மாற்ற எனக்கு எப்படி மனம் வரும்.? படிப்பவர்கள் கிழே இருக்கும் பெயரையும் படிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். //

    உங்களுடைய மகனின் வலைப்பதிவு என்ற, தனிப்பட்ட விஷயத்தில் உங்களுடைய முடிவே சரியானது.

    ReplyDelete
  34. மறுமொழி > Ponniyinselvan/karthikeyan said... ( 2, 3 )

    சகோதரி (கார்த்திக்கின் அம்மா) அவர்களின் சோகத்தினை, வலைப்பதிவர்கள் என்ற வகையில், இப்போது அனைவருமே தெரிந்து கொண்டோம். ஆறுதல் மொழிகளைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்?

    ReplyDelete
  35. மறுமொழி > Thulasidharan V Thillaiakathu said...

    சகோதரர் தில்லைக்கது V துளசிதரன் அவர்களது அன்பான, நீண்ட கருத்துரைக்கு நன்றி.

    // ஐயா! கார்த்திக் அம்மா அவர்கள் அவர்கள் சொல்லியிருப்பது போல கார்த்திக் அம்மா அல்லது கலா கார்த்திக் என்றுதான் எழுதுகின்றார். பலர் அதைக் கவனிப்பது இல்லை. உண்மையே! அவர்கள் தன் மகனின் வழி பேச நினைப்பதில் தவறு இல்லை. அப்படியாவது அவருக்கு மகனின் இழப்பு ஆறுதல் தருமாயின் நல்லதுதானே! அவர்தான் தன் பெயரைப் போடுகின்றாரே! கரந்தையாரும், முரளிதரன் அவர்களும் சொல்லுவது சரியே!//

    சகோதரி (கார்த்திக்கின் அம்மா) அவர்கள் அய்யா பழனி. கந்தசாமி அவர்களுக்கு எழுதிய முதல் பின்னூட்டத்தில், தான் இன்னார் (கலா கார்த்திக்) என்று எழுதவில்லை. எழுதியிருந்தால் இந்த குழப்பங்கள் வந்து இருக்காது.


    ReplyDelete

  36. மறுமொழி > அம்பாளடியாள் said...

    சகோதரி கவிஞர் அம்பாளடியாள் அவர்களுக்கு வணக்கமும் அன்பான கருத்துரைக்கு நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  37. மறுமொழி > KILLERGEE Devakottai said...

    கருத்துரை தந்த நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  38. மறுமொழி > G.M Balasubramaniam said...

    அய்யா G.M.B அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  39. மறுமொழி > ‘தளிர்’ சுரேஷ் said...

    தளிர்’ சுரேஷ் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  40. மறுமொழி > Angelin said...

    // நேற்று உங்க பதிவின் வாயிலாக அறிந்தேன் .இனி அவர் பக்கம் தொடர்ந்து செல்வேன் அண்ணா //

    உங்கள் கருத்துரைகள் அவருக்கு நல்ல ஆறுதலை கொடுக்கட்டும். சகோதரி ஏஞ்சலினுக்கு நன்றி

    ReplyDelete
  41. மறுமொழி > பழனி. கந்தசாமி said... ( 2 )

    அய்யா பழனி. கந்தசாமி அவர்களின் நல்லதொரு நீண்ட விளக்கத்திற்கு நன்றி.

    ReplyDelete
  42. மறுமொழி > Dr B Jambulingam said...

    முனைவர் அய்யா அவர்களது கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  43. மறுமொழி > Amudhavan said...

    கருத்துரை தந்த அமுதவன் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete

  44. மறுமொழி > Mathu S said... ( 1, 2 )

    ஆசிரியர் எஸ். மது அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  45. மறுமொழி > Ramani S said...

    // மறக்கவே முடியாதவர்களை அவர்களது உடமைகள் சிலவற்றை வைத்து ஆறுதல் படுத்திக் கொள்வோம்
    வலைத்தளமும் அப்படி இருப்பது குறித்து அறிய
    நெகிழ்ந்து போனேன் //
    இதுவரை யாரும் சொல்லாத, புதுமையான கருத்தை தந்த கவிஞர் எஸ். ரமணி அவர்களுக்கு நன்றி.



    ReplyDelete
  46. தங்கள் பதிவுடன் மூலப்பதிவையும் படித்தேன் அய்யா
    தாமத்திற்கு வருந்துகிறேன்.
    த ம கூடுதல் 1

    ReplyDelete
  47. நீங்கள் எழுதிய பழைய பதிவுகளை ஒவ்வொன்றாக படிக்க இப்போது தான் ஆரம்பித்தேன். ரவியின் அந்தப் பதிவை படித்தேன். மனம் கனத்துவிட்டது.

    ReplyDelete