ஒரு கல்லூரி விரிவுரையாளராக ஆக வேண்டும் என்ற ஆசையில் , திருச்சி நேஷனல் கல்லூரியில் எம்.ஏ தமிழ்
இலக்கியத்தை விருப்ப பாடமாக எடுத்து சேர்ந்தேன். (1975 – 1977) அப்போது அந்த கல்லூரியில் எம்.ஏ தமிழ் இலக்கியத்தில்
இலக்கணத்தோடு கம்பராமாயணம் மற்றும் சைவசித்தாந்தம் இரண்டையும் முக்கிய பாடங்களாக (MAIN SUBJECTS) வைத்து இருந்தார்கள். ஏற்கனவே
பி.ஏ தமிழ் இலக்கியம் படித்து இருந்தபடியினால்
இலக்கியம், இலக்கண்ம் இவற்றில் எனக்கு பிரச்சினையில்லை.ஆனால்
சைவசித்தாந்தம் எனக்கு புதிது. கடினமான
பாடம். கல்லூரிகளில் பாடத்திட்டத்தின் கீழ் உள்ள தத்துவ இயல்தான் (PHILOSOPHY) சைவசித்தாந்தம் ( SAIVA SIDDHANTHA
PHILOSOPHY ) என்பதும். ஆர்வத்துடன் புரிந்து கொண்டு படித்தால் எளிமையாக
விளங்கும்.
குருவாக வந்த நண்பர்
அப்போதெல்லாம் இப்போது இருக்கும் இண்டர்நெட் வசதி கிடையாது. சைவசித்தாந்தம்
படிப்புக்கு நோட்ஸும் கிடையாது. பல புத்தகங்களை படித்து குறிப்புகள் எடுத்துதான்
படிக்க வேண்டும். கல்லூரி நூலகத்தில் நாம் தேடும் புத்தகங்களை யாரேனும் எடுத்து
போயிருப்பார்கள். மாவட்ட மைய நூலகத்திலும் இதே கதைதான். நல்லவேளையாக பி.ஏ படிக்கும்
போது எனக்கு சீனியராக இருந்த நண்பர் ஒருவர் நான் படித்த கல்லூரியிலேயே இரண்டாம்
ஆண்டு எம்.ஏ தமிழ் படித்துக் கொண்டு இருந்தார்.
அவர் பெயர் சு.பாலகிருஷ்ணன். அவருடைய சொந்த ஊர் திருச்சி மாவட்டம் லால்குடி
அருகேயுள்ள எசனைக்கோரை ஆகும். சிறந்த சிவபக்தர். அவர் தினமும் வாளாடி என்ற ரெயில்
நிலையத்தில் வண்டியேறி திருச்சி வந்து கல்லூரிக்கு வருவார். அவர் ரெயில்
பெட்டியில் ஏறியதுமே அவருக்கென்று உட்கார இடம் கொடுத்து விடுவார்கள்.
வாளாடியிலிருந்து திருச்சி வரும் வரை இலக்கியம், சைவ சம்பந்தப்பட்ட ஒரு பட்டி
மண்டபமே அங்கு நடக்கும். அவரை சின்ன வாரியார் என்று அன்பாக அழைத்தவர்களும் உண்டு.
அவர் சைவசமயம் சம்பந்தமாக நிறைய நூல்களை வைத்து இருந்தார். எனக்கு
சீனியராகவும் நண்பராகவும் இருந்த அவரையே சைவ சித்தாந்தம் பாடத்திற்கு குருவாக
ஏற்றுக் கொண்டேன். அவர் தான் எடுத்த
குறிப்புகளையும் நூல்களையும் கொடுத்து
உதவினார். மேலும் சைவசித்தாந்தம் என்றால் என்ன என்பதனையும் விளக்கினார். (அவர்
பின்னாளில் பட்டினத்தார் பாடல்களை தனது பி.எச்.டி ஆராய்ச்சி படிப்புக்காக
எடுத்தவர்; சர்க்கரை நோய் காரணமாக இளமையிலேயே இறந்து போனார்)
சில சமயம் எப்போதாவது நாம் தேடும் புத்தகங்கள் நூலகத்தில் கிடைக்கும்.
எல்லாவற்றையும் எழுதி எழுதி படித்தேன். எனவே முக்கியமான பாடல்கள் அப்போது மனப்பாடம்
ஆயின.
திருக்கோயில்கள் சுற்றுலா
சைவசித்தாந்தத்தை பாடமாக எடுத்து இருந்தபடியினால் கல்லூரியில் திருக்கோயில்கள்
சென்று வர ஏற்பாடு செய்து இருந்தார்கள். மாணவர்களும் ஆசிரியர்களுமாக தஞ்சை மாவட்டத்தில்
இருந்த சில (சீர்காழி,வைத்தீஸ்வரன் கோயில் போன்ற ) சைவ திருக்கோயில்கள் மற்றும் பூம்புகாரையும்
கண்டோம். எங்களுக்கு காலை உணவு, மதிய உணவு வழங்கும் பொறுப்பை திருவாவடுதுறை மடம்
மூலம் ஏற்பாடு செய்து இருந்தார்கள். திரும்பும் போது, தென்னிலக்குடி என்ற் ஊரில்
எங்கள் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் திருமேனி அவர்கள் வீட்டு தென்னந்
தோப்பில் இருந்த இளநீர்கள் தாகம் தீர்த்தன.
சைவ சித்தாந்தம் என்பது:
இந்த தத்துவத்தை விளக்க ஒரு கையில் உள்ள ஐந்து விரல்களே போதும். ஐந்து
விரல்களில் கட்டை விரல் இறைவனைக் குறிக்கும். சுட்டுவிரல் என்பது ஆன்மா. நடுவிரல்
என்பது ஆணவம்.. மோதிர விரல் என்பது கன்மம் (அதாவது கருமம்). ஐந்தாவதாக உள்ள சுண்டு
விரல் மாயை. சுட்டுவிரலானது (ஆன்மா) எப்போதும் மற்றைய மூன்று விரல்களுடன் (பாசம் எனப்படும் ஆணவம், கன்மம்,
மாயை என்ற மூன்றுடன் ) சேர்ந்தே இருக்கும். அது கட்டைவிரலை (இறைவன்) அடைய வேண்டுமானால் அந்த
மூன்றையும் (பாசத்தை) விட்டு விலகினால்தான் முடியும். அதைப் போலவே இறைவனை அடைய ஆன்மாவானது
ஆணவம்,கன்மம்,மாயை என்ற பாசமாகிய மூன்றையும் விட்டு விலக வேண்டும். பதி,பசு,பாசம் எவ்வாறு என்று விளக்குவதே சைவ சித்தாந்தம்.
இதில் இறைவன் என்றால் என்ன என்பது குறித்து பல பாடல்கள். அப்புறம் ஆன்மா
என்றால் என்ன என்பது குறித்தும் ஆணவம், கன்மம், மாயை மூன்றினைக் குறித்தும் பல
பாடல்கள். இவ்வாறு பல பாடல்களை தலைப்பு வாரியாக படித்ததால் சைவசித்தாந்தம் என்ற
தத்துவ இயல் குறித்து அறிந்து கொள்ள முடிந்தது. மேலும் பாடத் திட்டத்தின்படி
சைவசமய வரலாறு, சைவசமய இலக்கியம் ஆகியவற்றிற்கும் குறிப்புகள் எடுக்க வேண்டி
இருந்தது. இதனால் சைவசமயம் பற்றி
விரிவாக தெரிந்து கொள்ள முடிந்தது.
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி இல்லை நும் சித்தத்து
நன்றே நிலைபெற நீர் நினைநதுய்மனே
நன்றே நிலைபெற நீர் நினைநதுய்மனே
- திருமந்திரம்
( குறிப்பு: இங்கு எனது படிப்பு (சைவ சித்தாந்தம்) சம்பந்தமான அனுபவத்தை
மட்டுமே நான் சுருக்கமாக பதிந்துள்ளேன் சைவசித்தாந்தம்
என்பது பற்றி ஒரு பதிவினில் விளக்கிட முடியாது. விவாதத்தை தொடங்கினால் நீண்டு
கொண்டே போகும். ஆர்வம் உள்ளவர்கள் அது சம்பந்தமான நூல்களைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்,)