Tuesday, 9 December 2014

சாம்பார் – கணேசன்சென்ற வாரம் பரதேசி @ நியூயார்க் என்ற பதிவினில் 
(http://paradesiatnewyork.blogspot.com/2014/12/blog-post_4.html) சாம்பாரின் கதை என்று ஒரு பதிவை வலைப்பதிவர் ஆல்ஃபிரட் தியாகராஜன் என்கிற ஆல்ஃபி எழுதி இருந்தார். அதில்

// பழம்பெரும் நடிகர்களில் ஒருவரான காதல் மன்னன் ஜெமினி கணேசனுக்கு இன்னொரு பட்டம் உண்டு அதுதான் 'சாம்பார் கணேசன்". அவர் சைவ உணவு சாப்பிடு பவர் என்பதால் இந்தப்பெயர் வந்ததா என்று தெரியவில்லை. அவர் சைவ உணவு மட்டும்தான் சாப்பிட்டாரா என்றும் தெரியவில்லை. சைவ உணவு சாப்பிடுபவர்களை இப்போதெல்லாம் "தயிர் சாதம்" என்று தானே கிண்டலடிக்கிறார்கள். ஆனால்  'சாம்பார் கணேசன்' என்று ஏன் சொன்னார்கள் என்று யாருக்காவது தெரியுமா? தெரிந்தால் சொல்லவும். //

என்று கேட்டு இருந்தார். அந்த பதிவைப் படித்ததும் எனக்கு வந்த நினைவுகள் இந்த பதிவு.

நான் ஒரு எம்.ஜி.ஆர் ரசிகன்:

(படம் மேலே: சிவாஜி கணேசன்,ஜெமினி கணேசன், எம்.ஜி.ஆர்     PHOTO THANKS TO http://www.callcinema.com/news/detail/52 )

அப்போதைய கால கட்டத்தில் (1960 70) தமிழ் திரையுலகில், எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என்ற மூவரும் கொடி கட்டிப் பறந்தார்கள். எம்ஜிஆர் நடித்த படங்களை மட்டுமே பார்த்த சாதாரண சினிமா ரசிகன் நான். அன்றைய நாட்டு நடப்பு என்னவென்றால் எம்ஜிஆர் ரசிகர்கள், சிவாஜி நடித்த படங்களைப் பார்க்க மாட்டார்கள். அதேபோல சிவாஜி ரசிகர்கள், எம்ஜிஆர் நடித்த படங்களைப் பார்க்க மாட்டார்கள். அது ஒரு காலம். இப்போது அதை நினைத்தால் சிரிப்பாகத்தான் வருகிறது. அதற்கப்புறம் பெரியவன் ஆனதும், விவரம் தெரிந்த பிறகுதான் நான் மற்ற நடிகர்கள் நடித்த  படங்களையே பார்க்கத் தொடங்கினேன். மற்றவர்களின் நடிப்புத் திறமையையும் ரசிக்கத் தொடங்கினேன்.

பட்டப் பெயர்கள்:

அப்போது நாட்டில் எல்லோரையும், சினிமா (இப்போது டீவி சீரியல் இருக்கும் இடத்தில்) ஆக்கிரமித்துக் கொண்டு இருந்தது. காரணம் அன்றைய பொழுது போக்கே அதுதான். சினிமாத் திரையில் கலைஞர்களுக்கு மக்கள் திலகம், புரட்சி நடிகர், நடிகர் திலகம், நடிகையர் திலகம், காதல் மன்னன் என்று சிறப்பான பட்டங்கள் இருந்தாலும், வெளியில்  அவர்களைக் கிண்டலாக பட்டப் பெயர்கள் வைத்தே சொல்வார்கள். எம்ஜிஆர் தனது வயதான காலத்திலும் வாலிபராகவே நடித்தார். இதனால் அவரை கிழட்டு நடிகர்என்று சிவாஜி ரசிகர்கள் சொல்வார்கள். இப்படி சொன்ன எனது வகுப்பு மாணவன் ஒருவனிடம்,  எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனான நான்,  சண்டையே (வாக்கு வாதம்தான்) போட்டு இருக்கிறேன். அதேபோல சிவாஜியை எம்ஜிஆர் ரசிகர்கள் “தொப்பைஎன்பார்கள். சிவாஜிக்கு தொப்பை உண்டு. கடைசிவரை அவரால் தொப்பையை ஒன்றும் செய்ய முடியவில்லை.

சாம்பார் கணேசன்:

ஆனால் இரண்டு ரசிகர்களுமே ஜெமினி கணேசனை “சாம்பார்என்று கிண்டலடிப்பார்கள். எனக்கு அதன் அர்த்தம் புரியவில்லை. ஒருவேளை ஜெமினி கணேசன் சாம்பார் பிரியராக இருப்பாரோ என்று சந்தேகம். சினிமா படங்களைப் பார்ப்பதில், தீவிர ரசிகராக இருந்த சீனியர் மாணவன் ஒருவரிடம் சந்தேகத்தைக் கேட்டேன். (இவன் பள்ளிக்குப் போவதாக வீட்டில் சொல்லி விட்டு, பள்ளியை கட் பண்ணிவிட்டு, பள்ளிப் பையை யாரேனும் ஒருவரிடம்  கொடுத்து விட்டு மார்னிங் ஷோ பார்க்கப் போய் விடுவான். படம் முடிந்ததும் நல்ல பிளையாக மீண்டும் பையை வாங்கிக் கொண்டு வீடு திரும்புவான்) அவன் சிரித்து விட்டு “ ஓ அதுவா? " என்று ஒரு அரசியல் காரணத்தைச் சொன்னான். அன்றைக்கு இருந்த பிராமணர் , பிராமணர் அல்லாதார் என்ற அரசியலில் ஜெமினி கணேசன் என்ற சிறந்த நடிகருக்கு வைக்கப்பட்ட பட்டப் பெயர் இது.

வலைப்பதிவர் மறைந்த திரு. டோண்டுராகவன் அவர்கள், ஜெமினி கணேசனின் ரசிகர். அவர் சொல்வதையும் பாருங்கள்.

// ஜெமினிக்கு சாம்பார் என்ற பெயர் வந்ததற்கு: கைராசி என்னும் படத்தில் அவர் டாக்டராகவும் சரோஜாதேவி நர்ஸாகவும் நடித்தனர். அதில் ஒரு காட்சியில் ஜெமினி சரோஜாதேவின் டிபன் காரியரிலிருந்து ஒவ்வொரு தட்டாக எடுத்து ஒரு தட்டைப் பார்த்து சாம்பாருஎன்று திருப்தியுடன் கூவ அதுவே அவர் பெயராகவும் நிலைத்து விட்டதாக ஒரு கோஷ்டி சொல்லிக் கொண்டு திரிகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்  //


சினிமா கிசுகிசுக்கள்:

அப்போது நடிகர்-நடிகைகளைப் பற்றி கிசுகிசு செய்திகளை பகிங்கரமாக பெயர் போட்டு,  வெளியிடுவதற்கென்றே ஒரு பத்திரிக்கை வந்தது.. அதன் பெயர் இந்துநேசன்” . இது போன்ற பத்திரிகைகள், மஞ்சள் பத்திரிக்கைகள் எனப்பட்டன.  இதன் ஆசிரியர் லட்சுமி காந்தன். இவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு லட்சுமி காந்தன் கொலை வழ்க்குஎன்று பரபரப்பாக பேசப்பட்டது.. நடிகர் நடிகைகளுக்கு  பட்டப் பெயர் வைத்தே, (கடைகளில் தொங்கும்) வால்போஸ்டரில் போடும் வழக்கத்தை  இந்த பத்திரிகை கொண்டு இருந்தது. பல பத்திரிக்கைகள் இன்று சினிமா உலகைப் பற்றி வெளிப்படையாகவே கிகிசுக்கின்றன. இவற்றுள் குடும்ப பத்திரிகைகள் என்று சொல்லப் படுபவைகளும் அடக்கம். காலம் மாறிப் போச்சு.

 

45 comments:

 1. ஆம்..காலம் மாறித்தான் போச்சு..

  ReplyDelete
 2. அட! ஆமாம்... காலம் ரொம்பவேதான் மாறிப்போச்சு,இல்லே!!!!

  நல்ல அலசல்.

  அப்பெல்லாம் சினிமாத் திரையில் கலைஞர்களுக்கு மக்கள் திலகம், புரட்சி நடிகர், நடிகர் திலகம், நடிகையர் திலகம், காதல் மன்னன் என்று சிறப்பான பட்டங்கள் மக்கள் தந்தாங்களாம். இப்போ பட்டங்கள் எல்லாம் 'தமக்குத்தாமே திட்டத்தில் 'உருவாகுதுன்னு எங்கோ ஒரு அக்கப்போரில் படித்த நினைவு.

  ReplyDelete
 3. ஜெமினி கணேசன் அவர்கள் ஒரு பேட்டியில், தனக்கு சாம்பார் என்றால் மிகவும் பிடிக்கும் என்று கூறியதாகவும், அது முதல் சாம்பார் கணேசனாக மாறிவிட்டார் என்றும் கூறுவார்கள். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, வஞ்சிக் கோட்டை வாலிபன் படம், தஞ்சாவூர் ஞானம் தியேட்டரில் பார்த்தேன், ( இப்பொழுது அந்த தியேட்டரே இல்லை) அப்படத்தில் ஜெமினி கணேசன் தோன்றும் காட்சிகளில் எல்லாம், சாம்பார் வந்துட்டான்டா என்று கூச்சலிடுவார்கள்

  ReplyDelete
 4. அனேகமாக அவர் திரையில் சாம்பாரு என்று சொன்னதுதான் காரணமாக இருக்க வேண்டும் ..
  ஒருமுறை காரில் போனவரை சாம்பார் என்று சிலர் கூப்பிட இறங்கி நீங்க என்னடா ஊத்தி சாப்டுறீங்க என்று சப்தம் போட்டதாகவும் செய்தி உண்டு..

  ReplyDelete
 5. த ம ப்ளஸ் ப்ளஸ்

  ReplyDelete
 6. நம் மக்கள் திரையுலக நடிகர்களை தெய்வமாக எண்ணி வழிபடும் முட்டாள் தனமான போக்கால் தான் இந்த மாதிரி தங்களுக்கு பிடித்தவர்களுக்கு ஒரு பட்டப் பெயரையும், பிடிக்காதவர்களுக்கு ஒரு கிண்டலான பெயரையும் சொல்லி அழைக்கும் வழக்கம் இன்றைக்கும் தொடர்கிறது என எண்ணுகிறேன். திரு ஜெமினி கணேசன் அவர்களுக்கு ஏன் அந்த பட்டப் பெயர் வந்தது என்பதை திரு டோண்டு இராகவன் சொன்ன காரணம் கூட சரியாக இருக்க வாய்ப்புண்டு. ஏனெனில் தங்கவேலு அவர்களுக்கு ‘டணால்’ தங்கவேலு என்றும் திரு வேலன் அவர்களை ‘ஐசரி’வேலன் என்றும் திரு கன்னையா அவர்களை ‘என்னத்த’ கன்னையா என்றும் அவர்கள் பேசிய வசனத்தை வைத்து கூப்பிட்டதுபோல் திரு ஜெமினி கணேசன் அவர்களை சாம்பார் கணேசன் என அழைத்திருக்கலாம்.

  ReplyDelete
 7. பாலும் பழமும் படத்தில் இருந்து போலல்லாமல் - பராசக்தியில் மெலிந்திருந்தது போலவே - ராஜா, தெய்வமகன், வைரநெஞ்சம், கலாட்டா கல்யாணம் - போன்ற பல படங்களில் ஸ்மார்ட் சிவாஜியைக் கண்டதில்லையா!... சிக்கல் சண்முகசுந்தரத்திற்கு தொப்பை இல்லையே!..

  விடியற்காலையில் - டீக்கடை பெஞ்சுகளில் அமர்ந்து கொண்டு - அந்த ஒரு சீனுக்கே காசு சரியாப் போச்சுடா!.. - என்று மக்கள் திலகம் நடித்த படங்களுக்கு கூர் ஏற்றி விடுவதையும் கணேசன் படத்துக்குப் போனா கண்ணீரும் கம்பலையும் தான் என்று மட்டம் தட்டுவதையும் நாம் கேட்டிருக்கின்றோம் தானே!..

  மக்கள் திலகத்தையும் நடிகர் திலகத்தையும் - அவர்களை வளர்த்து விட்ட கட்சியினரே அவமதித்து கூக்குரல் இட்டதும் நினைவில் இருக்கின்றது.

  ஜெமினிகணேசன் அவர்களை பொது இடத்திலும் சாம்பார்!.. சாம்பார்!.. - என்று அழைத்து ரகளை செய்ததாகவும் படித்திருக்கின்றேன்..

  வழக்கம் போலவே - மலரும் நினைவுகளை எழுப்பியது தங்கள் பதிவு!..

  ReplyDelete
 8. மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...

  // ஆம்..காலம் மாறித்தான் போச்சு.. //

  ஆன்மீகப் பதிவர் சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்களின் சுருக்கமான கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete

 9. மறுமொழி > துளசி கோபால் said...

  கருத்துரை தந்த துளசி டீச்சருக்கு நன்றி.

  ReplyDelete
 10. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said... (1, 2 )

  சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 11. மறுமொழி > Mathu S said... ( 1, 2, 3 )

  // அனேகமாக அவர் திரையில் சாம்பாரு என்று சொன்னதுதான் காரணமாக இருக்க வேண்டும் ..ஒருமுறை காரில் போனவரை சாம்பார் என்று சிலர் கூப்பிட இறங்கி நீங்க என்னடா ஊத்தி சாப்டுறீங்க என்று சப்தம் போட்டதாகவும் செய்தி உண்டு.. //
  த ம இரண்டு
  த ம ப்ளஸ் ப்ளஸ் //

  ஆசிரியர் எஸ். மது அவர்களுக்கு நன்றி. சாம்பார் என்பதற்குப் பதிலாக, காதல் மன்னன் என்று சொல்லியிருந்தால் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டிருப்பார் என்று எண்ணுகிறேன்.

  ஒருமுறை, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே, பெட்ரோல் பங்கில் எனது மொபட்டிற்கு பெட்ரோல் போட்டுக் கொண்டிர்ந்தபோது ஒரு கார் வேகமாக வந்து நின்றது. காரினுள் ஜெமினி கணேசன் அரைக்கால் டவுசர், டி சர்ட் சகிதமாக இருந்தார். அருகில் அவர்மீது சாய்ந்தபடி ஒரு இளம் பெண். இது நடந்து 35 வருடங்கள் இருக்கும். ஜெமினி கணேசன் கடைசிவரை காதல் மன்னன்தான்.  ReplyDelete
 12. அந்தக்கால சினிமா நடிகர்கள் பற்றி அருமையான அலசல். இனிய நினைவலைகள் பகிர்வுக்கு நன்றிகள். அன்புடன் வீ ஜீ கே

  ReplyDelete
 13. சாம்பார் எனக்கு என்றும் பிடிக்கும் - பாடல்கள் உட்பட...

  ReplyDelete
 14. லட்சுமிகாந்தன் கொலை வழக்கு நடந்தது எனக்கு நான்றாக நினைவில் இருக்கிறது. அப்போது எனக்கு ஐந்து அல்லது ஆறு வயது இருக்கும். என்.எஸ் கிருஷ்ணன் பேரைச் சொன்னாலே போலீஸ்காரன் பிடிச்சுட்டுப் போயிடுவான் என்று சின்னப் பசங்கள் பயந்த காலம் அது. நானும் பயந்திருக்கிறேன்.

  ReplyDelete
 15. ஜெமினி கணேசன் சாம்பார் பெயர் விளக்கம் இன்றே அறிந்தேன். நல்லதொரு அலசல்.

  ReplyDelete
 16. இப்போது இருப்பவர்களின் பட்டப் பெயர்களை அலசலாமே. இன்னும் பரபரப்பாக இருக்கும்.

  ReplyDelete
 17. அந்தப்படத்தில்தான் இலையைச் சரியாக மாற்றிப் போடுவார்!
  இப்போது தனியாக ஒரு மஞ்சப் பத்திரிகைக்குத் தேவையே இல்லை!

  ReplyDelete
 18. மறுமொழி > வே.நடனசபாபதி said...

  அய்யா V.N.S அவர்களின் நீண்ட கருத்துரைக்கு நன்றி!

  // நம் மக்கள் திரையுலக நடிகர்களை தெய்வமாக எண்ணி வழிபடும் முட்டாள் தனமான போக்கால் தான் இந்த மாதிரி தங்களுக்கு பிடித்தவர்களுக்கு ஒரு பட்டப் பெயரையும், பிடிக்காதவர்களுக்கு ஒரு கிண்டலான பெயரையும் சொல்லி அழைக்கும் வழக்கம் இன்றைக்கும் தொடர்கிறது என எண்ணுகிறேன்.//

  இப்போது இந்த வழக்கம் ( சினிமா நடிகர்கள் மீதுள்ள மோகம்) முன்புபோல இல்லாமல் சிறிது சிறிதாக மறைந்து வருகிறது என்று நினைக்கிறேன்.

  // திரு ஜெமினி கணேசன் அவர்களுக்கு ஏன் அந்த பட்டப் பெயர் வந்தது என்பதை திரு டோண்டு இராகவன் சொன்ன காரணம் கூட சரியாக இருக்க வாய்ப்புண்டு. ஏனெனில் தங்கவேலு அவர்களுக்கு ‘டணால்’ தங்கவேலு என்றும் திரு வேலன் அவர்களை ‘ஐசரி’வேலன் என்றும் திரு கன்னையா அவர்களை ‘என்னத்த’ கன்னையா என்றும் அவர்கள் பேசிய வசனத்தை வைத்து கூப்பிட்டதுபோல் திரு ஜெமினி கணேசன் அவர்களை சாம்பார் கணேசன் என அழைத்திருக்கலாம். //

  ‘டணால்’ தங்கவேலு, ‘ஐசரி’வேலன், ‘என்னத்த’ கன்னையா, ’குலதெய்வம்’ ராஜகோபால், ’தேங்காய்’ சீனிவாசன் ஆகியோர், அவர்கள் ஏற்று நடித்த கதைமாந்தர், வசனம், படத்தின் பெயரை வைத்துதான் அழைக்கப் பட்டார்கள். ஜெமினி ஸ்டுடியோவில் பணிபுரிந்த கணேசனுக்கு மட்டும் இரண்டு பெயர்கள் வைத்து விட்டார்கள் போலிருக்கிறது.

  ReplyDelete
 19. மறுமொழி > துரை செல்வராஜூ said...

  சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.

  // பாலும் பழமும் படத்தில் இருந்து போலல்லாமல் - பராசக்தியில் மெலிந்திருந்தது போலவே - ராஜா, தெய்வமகன், வைரநெஞ்சம், கலாட்டா கல்யாணம் - போன்ற பல படங்களில் ஸ்மார்ட் சிவாஜியைக் கண்டதில்லையா!... சிக்கல் சண்முகசுந்தரத்திற்கு தொப்பை இல்லையே!..//

  சிவாஜியைப் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு நன்றி.

  அன்பு நண்பருக்கு நான் இந்த பதிவை எந்த உள்நோக்கமும் இன்றி சாதாரணமாக, அன்றைய சூழ்நிலையை பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கில் எழுதினேன். தங்களுக்கு வருத்தப் படும்படியாக ஏதேனும் இருப்பின் மன்னிக்கவும்.

  ஆரம்பத்தில் எம்ஜிஆர் படங்களை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த நான், பிற்பாடுதான் வேலை கிடைத்தவுடன், வாரா வாரம், ஞாயிற்றுக் கிழமைகளில், சின்ன வயதில் நான் பார்க்காத, பழைய தமிழ்ப்படங்களை பார்க்கத் தொடங்கினேன். இதில் சரியாக கவனிக்காது விட்டுப் போயிருக்கலாம்.

  // விடியற்காலையில் - டீக்கடை பெஞ்சுகளில் அமர்ந்து கொண்டு - அந்த ஒரு சீனுக்கே காசு சரியாப் போச்சுடா!.. - என்று மக்கள் திலகம் நடித்த படங்களுக்கு கூர் ஏற்றி விடுவதையும் கணேசன் படத்துக்குப் போனா கண்ணீரும் கம்பலையும் தான் என்று மட்டம் தட்டுவதையும் நாம் கேட்டிருக்கின்றோம் தானே!..//

  அப்போது ஒவ்வொரு ரசிகர் மன்றத்திலும், ஒருசிலர், அவரவர் ஹீரோவை உயர்த்தியும், எதிர்த் தரப்பு ஹீரோவை மட்டப் படுத்தியும் பொழுது போக்கிக் கொண்டு இருந்தார்கள். காரணம் அரசியல் கலப்புதான்.

  // மக்கள் திலகத்தையும் நடிகர் திலகத்தையும் - அவர்களை வளர்த்து விட்ட கட்சியினரே அவமதித்து கூக்குரல் இட்டதும் நினைவில் இருக்கின்றது.ஜெமினிகணேசன் அவர்களை பொது இடத்திலும் சாம்பார்!.. சாம்பார்!.. - என்று அழைத்து ரகளை செய்ததாகவும் படித்திருக்கின்றேன்..//

  இப்போதும், ஒரு சில இடங்களில், இன்றைய தலைமுறை ரசிகர்கள் அநாகரிகமாக நடந்து கொள்வதை செய்திகளில் காணமுடிகிறது. என்றுதான் இந்த “தமிழர்கள்” சினிமா மயக்கதிலிருந்து விடுபடுவார்களோ.


  // வழக்கம் போலவே - மலரும் நினைவுகளை எழுப்பியது தங்கள் பதிவு!..//

  தங்களது உணர்ச்சி பூர்வமான கருத்துரைக்கும், பாராட்டிற்கும் நன்றி.

  ReplyDelete
 20. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...

  // அந்தக்கால சினிமா நடிகர்கள் பற்றி அருமையான அலசல். இனிய நினைவலைகள் பகிர்வுக்கு நன்றிகள். அன்புடன் வீ ஜீ கே //

  அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்.! சுருக்கமான கருத்துரைக்கு நன்றி. தங்களது வெளிநாட்டு அனுபவங்களையும், அது தொடர்பான வண்ணப் படங்களையும், உங்களது வலைத்தளத்தில் காண ஆவலாய் இருக்கிறேன்.

  ReplyDelete
 21. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...

  // சாம்பார் எனக்கு என்றும் பிடிக்கும் - பாடல்கள் உட்பட... //

  தமிழ்நாட்டில் சாம்பாரை விரும்பாதவர் யார் இருக்கிறார்கள்? சகோதரரின் சுருக்கமான கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 22. மறுமொழி > Sasi Kala said... ( 1, 2 )

  // ஜெமினி கணேசன் சாம்பார் பெயர் விளக்கம் இன்றே அறிந்தேன். நல்லதொரு அலசல். // த.ம.4 //


  சகோதரி தென்றல் சசிகலா அவர்களுக்கு நன்றி.

  ReplyDelete
 23. மறுமொழி > G.M Balasubramaniam said...

  // இப்போது இருப்பவர்களின் பட்டப் பெயர்களை அலசலாமே. இன்னும் பரபரப்பாக இருக்கும். //

  அலச ....லாம்தான் .... பார்ப்போம். அய்யா G.M.B அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 24. மறுமொழி > சென்னை பித்தன் said...

  அய்யா சென்னைப் பித்தன் அவர்களுக்கு நன்றி.

  // அந்தப்படத்தில்தான் இலையைச் சரியாக மாற்றிப் போடுவார்!
  இப்போது தனியாக ஒரு மஞ்சப் பத்திரிகைக்குத் தேவையே இல்லை! //

  நீங்கள் கைராசி படத்தைச் சொல்லுகிறீர்கள் என்று நினைக்கிறேன். அந்த படத்தை நான் இன்னும் முழுமையாக பார்த்ததில்லை. அன்று ஒரு கொலையே நடந்தது. இன்று சம்பந்தப் பட்டவர்களே தங்களைப் பற்றிய கிசுகிசுக்களை கசிய விடுவதாக கேள்வி.


  ReplyDelete
 25. அன்பின் சகோதரர் அவர்களுக்கு,

  தங்களின் பதிலுரையைப் படித்ததும் எனக்கு மிகவும் வருத்தமாகி விட்டது.

  நான் இந்த பதிவில் எந்த உள்நோக்கமும் இன்றி சாதாரணமாகத் தான் கருத்து எழுதினேன்.,

  அன்றைய சூழ்நிலையை பதிவு செய்த தங்களின் பதிவில் மனம் லயித்து எழுதினேன்..
  தங்களுக்கு வருத்தப்படும் படியாக ஏதேனும் இருப்பின் மன்னிக்கவும்.

  உண்மையில் நானும் பழைய நிகழ்வுகளில் மூழ்கியிருப்பவன்..

  மக்கள் திலகம் மற்றும் நடிகர் திலகம் அவர்களுடைய படங்களில் இருந்து பற்பல நல்ல விஷயங்களைக் கற்றுக் கொண்டவர்களுள் நானும் ஒருவன்!..

  இருவருமே - தனித்துவமான தோற்றப் பொலிவினை உடையவர்கள்..
  அற்புதக் கலைச்செல்வங்களைக் குறைத்து மதிப்பிடுவேனோ!..

  அதேபோல, நிறைநலம் உடைய தங்களின் எழுத்தாற்றலில் பலமுறை பழைமையான நினைவுகளில் மகிழ்ந்திருக்கின்றேன்.
  தங்கள் கை வண்ணத்தில் எவ்வித குறையையும் நான் கண்டதில்லை..

  இனிய நட்பின் நலம் என்றென்றும் வாழ்க!..

  ReplyDelete
 26. மறுமொழி > பழனி. கந்தசாமி said...

  // லட்சுமிகாந்தன் கொலை வழக்கு நடந்தது எனக்கு நான்றாக நினைவில் இருக்கிறது. அப்போது எனக்கு ஐந்து அல்லது ஆறு வயது இருக்கும். என்.எஸ் கிருஷ்ணன் பேரைச் சொன்னாலே போலீஸ்காரன் பிடிச்சுட்டுப் போயிடுவான் என்று சின்னப் பசங்கள் பயந்த காலம் அது. நானும் பயந்திருக்கிறேன். //

  இந்த கொலை நடந்த போது (1944) நான் பிறக்கவே இல்லை. பின்னாளில் பத்திரிகைகளில், புத்தகங்களில் படித்து தெரிந்து கொண்டதுதான். இந்த வழ்க்கிற்குப் பிறகு N.S.K., தங்கத் தட்டில் சாப்பிட்ட M.K.T பாகவதர் மற்றும் ஸ்டுடியோ அதிபர் ஸ்ரீராமுலு நாயுடு – ஆகியோரது வாழ்க்கை திசைமாறிப் போனதென்னும் போது விதியின் வலிமையை என்னவென்று சொல்வது?

  அய்யா அவர்களின் மலரும் நினைவுகளுடனான, அன்பான கருத்துரைக்கு நன்றி.

  (முன்பு எழுதிய எனது மறுமொழியில் கொலை நடந்த ஆண்டினை, தப்பாக சொல்லி விட்ட படியினால், அதனை நீக்கி விட்டு , திருத்திய மறுமொழியைத் தந்துள்ளேன்)

  ReplyDelete
 27. நண்பரே எனக்கு தெரிந்ததை பதியவைக்க விரும்புகிறேன் அதாவது எம்ஜிஆர், சிவாஜி நடிக்கும் படங்களில் சண்டைக்காட்சிகள் பெரும்பாலும் இருக்கும், அதேபோல் ஜெமினி கணேசன் நடிக்கும் படங்களில் பெரும்பாலும் சண்டைக்காட்திகள் இருக்காது மேலும் அவர் கூடுதலாக காதல் செய்பவராகவே வருவார் இந்த காலகட்டங்களில் சண்டைப்பிரியர்கள் (ரசிகர்கள்) அவரை சாம்பார் என்றழைத்தனர் அதாவது சைவம் மற்ற இருவரும் அசைவம் அதாவது கத்தி கம்பு எடுத்து அடிப்பவர்கள் அதற்காக புராணப்படங்களில் ஜெமினி கணேசன் வாள் எடுக்காமல் இல்லை இருப்பினும் கூடுதல் படங்களில் இவர் இப்படியும், அவர்கள் இருவரும் அப்படியும் நடித்ததே காரணம்,
  நல்லதொரு அலசலை தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி நண்பரே,,,,,
  த,ம.6

  ReplyDelete
 28. பழைய சுவாரஸ்யமான நினைவுகளை அழகான பதிவாக்கித்தந்திருக்கிறீர்கள்!

  ReplyDelete
 29. சாம்பார் என்ற ஒரு சொல்லின் பின்னால் இவ்வளவா? இப்பொழுதுதான் இச்சொல்லின் பின்னணியினை அறிந்தேன். அழகான அரிய புகைப்படத்தை தாங்கள் சேர்த்துள்ள விதம் கட்டுரைக்கு மெருகூட்டுகிறது.

  ReplyDelete
 30. மறுமொழி > துரை செல்வராஜூ said...

  அன்பின் சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் இரண்டாம் வருகைக்கும், அன்பான விளக்கத்திற்கும் நன்றி.

  ReplyDelete

 31. மறுமொழி > KILLERGEE Devakottai said...

  அன்பு நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின், கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி.

  ReplyDelete
 32. மறுமொழி > மனோ சாமிநாதன் said...

  சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 33. மறுமொழி > Dr B Jambulingam said...

  முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 34. நானும் கொஞ்சம் அந்தக் கால நினைவுகளில்
  தங்கள் பதிவின் மூலம் மூழ்கிக் களித்தேன்
  சுவாரஸ்யமான பதிவு
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 35. சுவாரஸ்யமான பகிர்வு......

  த.ம. +1

  ReplyDelete
 36. மறுமொழி >மறுமொழி > Ramani S said... ( 1,. 2 )
  கவிஞர் எஸ். ரமணி அவர்களுக்கு நன்றி.

  ReplyDelete
 37. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...

  சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு நன்றி

  ReplyDelete
 38. நல்ல சுவையான பதிவு Sir!.

  சாம்பார் என்று நடிகர் ஜெமினி அழைக்கப்பட்டாலும், சொத்துகள் வாங்கி குவித்ததில் அவரை மிஞ்ச முடியாது.
  சென்னையில் மகாபலிபுரம் தாண்டி, ஒரு குக் கிராமத்திற்கு செல்ல நேர்ந்தது. அங்கே ஜெமினி-சாவித்திரி என்ற பெயர் பலகையோடு ஒரு பண்ணையை பார்க்க முடிந்தது. சொத்துகள் வாங்கி குவித்ததில் அவர் சூரர் என்று தெரிந்தவர்கள் கூற கேட்டு இருக்கிறேன்.

  ReplyDelete
 39. மறுமொழி > தோழன் மபா, தமிழன் வீதி said...

  ஜெமினி கணேசன் அவர்களைப் பற்றிய தங்கள் கருத்துரையை, தகவலாகத் தந்த சகோதரர் தோழன் மபா, தமிழன் வீதி அவர்களுக்கு நன்றி. இன்றைய கால கட்டத்தில், ரியல் எஸ்டேட்டில் இடம் வாங்கிப் போடவே யோசிக்க வேண்டியுள்ளது.

  ReplyDelete
 40. ஒவ்வொரு பதிவுக்கும் அச்சாரமாக ஆதாரங்களையும் தெளிவாக கொடுத்து விடுவது ஆச்சரியமாக உள்ளது. இன்று தான் அறிந்து கொண்டேன். நன்றி

  ReplyDelete
  Replies
  1. நண்பர் ஜோதிஜி திருப்பூர் அவர்களின் பாராட்டினுக்கு நன்றி. (நாள் கடந்து நன்றி தெரிவித்தமைக்கு மன்னிக்கவும். இன்று இப்போதுதான், மீள் பதிவாக படித்தேன்)

   Delete