Monday 25 November 2013

ஏழைபடும்பாடு ( LES MISERABLES )


சுமார் 40 வருடங்களுக்கு முன்னர், எனது மாணவப் பருவத்தில் நான் படித்த தமிழ் மொழிபெயர்ப்பு நூல்களில் குறிப்பிடத்தக்க நூல்கள் இரண்டு. ஒன்று ஏழைபடும்பாடு. மற்றொன்று இளிச்சவாயன். பிரெஞ்சு இலக்கியத்தில் முக்கிய இடம் வகிப்பவர் விக்டர் ஹ்யூகோ ( VICTOR HUGO ) அவர் எழுதிய “ LES MISERABLES “  என்ற  நாவலை ஏழைபடும்பாடு “ என்ற பெயரில் யோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதியார் மொழிபெயர்த்து இருந்தார். அதேபோல விக்டர் ஹ்யூகோ எழுதிய இன்னொரு L’HOMME QUI RIT (THE MAN WHO LAUGHS )  என்ற நாவலை இளிச்சவாயன்  என்ற பெயரில் தமிழில் தந்தார்.

ஏழைபடும்பாடு கதைச் சுருக்கம்:

ஜாம் வல் ஜான் (Jean Valjean) ஒரு மரம் வெட்டும் தொழிலாளியின் மகன். சிறு வயதிலேயே தாய் தந்தையரை இழந்தவன். கணவனை இழந்த ஆதரவற்ற தனது சகோதரிக்காகவும் அவளது எட்டு குழந்தைகளுக்காகவும் ரொட்டிக் கடையில் திருடும்போது பிடிபட்டு தூலோன் ( Toulon) சிறைச்சாலைக்கு அனுப்பப்படுகிறான். இடையிடையே சிறைச்சாலையிலிருந்து தப்புதல், சின்னச் சின்ன குற்றங்கள் என்று. 19 வருட சிறை தண்டனை அனுபவிக்கிறான். பின்னர் விடுதலையாகி வெளியில் வரும் அவனுக்கு மஞ்சள் பாஸ்போர்ட் (Yellow Passport) தருகிறார்கள். அதில் அவன் ஒரு குற்றவாளி என்ற விவரம் சொல்லப்பட்டு இருக்கும். எங்கு சென்றாலும் அவன் அதனைக் காட்டவேண்டும். அவன் குற்றவாளி என்பதால் அவனுக்கு உண்ண உணவும் தங்கும் இடமும் மறுக்கப் படுகிறது.

வெளியில் வந்ததும் அவனது சகோதரியைப் பற்றியும் குழந்தைகளைப் பற்றியும் விசாரிக்கிறான். அவள் பாரீசில் ஏழு வயதான ஒரு குழந்தையோடு அச்சுக் கூடத்தில் கூலி வேலை செய்வதாகக் கேள்விப்பட்டான். மற்ற குழந்தைகள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. பின்னர்  அவன் பாரிசுக்கு வெளியே திங்கு (Digne) என்ற நகருக்கு வருகிறான். அங்கு தனக்கு அடைக்கலம் கொடுத்த மிரியல் (Myriel) என்ற பாதிரியார் வீட்டில் வெள்ளி விளக்குகளை திருடி போலீசாரிடம் சிக்க, அவர்கள் ஜாம் வல் ஜானை பாதிரியாரிடம் கொண்டு வருகிறார்கள். அந்த பாதிரியார் அந்த வெள்ளி விளக்குகளை அவன் திருடவில்லை என்றும், தானே அவனுக்கு கொடுத்தத்தாகவும் சொல்லி காப்பாற்றுகிறார். பின்னர் அவனுக்கு அறிவுரை சொல்லி நல்வழிப்படுத்துகிறார். இதனால் மனம் திருந்திய ஜாம் வல் ஜான் தனது பழைய வாழ்க்கையை மறந்து மதேலன் (Madeleine) என்ற பெயரில் தன்னுடைய உழைப்பால் மாந்த்ரேல் நகரில் ஒரு கண்ணாடி தொழிற்சாலையை நிறுவி ஏழை மக்களுக்கு உதவுகிறான்.  அவனுடைய சேவை மனப்பான்மயைக் கண்ட அந்நகரத்து மக்கள் அவனை மேயராக்குகிறார்கள். அப்போது ஜாம் வல் ஜானின் பழைய வாழ்க்கையை தெரிந்த  இன்ஸ்பெக்டர் ஜாவர் ( Javert) என்பவன் அந்த ஊருக்கு போலீஸ் அதிகாரியாக வருகிறான். அவன் பழைய குற்றவாளியான மேயர் மதேலன் என்ற ஜாம் வல் ஜானை கைது செய்ய அலைகிறான்.

மதேலன் தொழிற்சாலையில் பாந்தேன் ( Fantine ) என்ற பெண் வேலை செய்து வருகிறாள். அவளை இன்ஸ்பெக்டர் ஜாவர் விபச்சாரம் செய்ததாக கைது செய்கிறான். அவளது துன்பக் கதையையும் கோஸத் (Cosette) என்ற அவளது மகள் தென்னாடியர்(Thénardier) என்பவனது விடுதியில் வேலைக்காரியாக கஷ்டப்படுவதையும் கேட்டு மேயர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்கிறான். அவளது மகளை தென்னாடியரிடமிருந்து மீட்டுத் தருவதாகவும் உறுதி சொல்கிறான். இதற்கிடையே ஒரு திருடனை  ஜாம் வல் ஜான் என்று கைது செய்கிறார்கள். மனசாட்சி உறுத்த கோர்ட்டில் தான்தான் அந்த உண்மையான ஜாம் வல் ஜான் என்று சொல்லி அந்த கைதி  விடுதலை பெற வழி வகுக்கிறான்.. தனது மகள் என்ன ஆவாளோ என்ற அதிர்ச்சியில் பாந்தேன் இறந்து விடுகிறாள் இன்ஸ்பெக்டர் ஜாவர் அவனை கைது செய்து சிறையில் அடைக்கிறான். கைதிகளிடையே கப்பலில் வேலை செய்தபோது பாய்மரத்தில் ஏறிய ஒரு மாலுமி கீழே விழும் நிலையில் கதறுகிறான். அவனைக் காப்பாற்றிவிட்டு, கடலில் விழுந்து யாருக்கும் தெரியாமல் தப்பி விடுகிறான். உலகம் அவன் இறந்ததாக நம்புகிறது.

தப்பிய அவன்  போஷல்வான் என்ற பெயரில், கோஸத்தைக் கண்டு பிடிக்கிறான். விடுதி நடத்தி வந்த தென்னாடியரிடமிருந்து அவளை பணம் கொடுத்து, விடுதலை செய்து அவளை ஒரு கிறிஸ்தவ கன்னியர் மடத்தில் சேர்த்து விடுகிறான். கோஸத்தை தனது வளர்ப்பு மகளாகவே ஏற்றுக் கொள்கிறான். வளர்ந்து பெரியவளான கோஸத்தை மாரியன்(Marius) என்ற இளைஞன் விரும்புகிறான். அவளும் அவனை விரும்புகிறாள். ஜான் வல் ஜான் இறந்ததை நம்பாத இன்ஸ்பெக்டர் ஜாவர்  கடைசியில் அவனைக் கண்டு பிடித்து கைது செய்யப் போகிறான். தனது மனசாட்சி உறுததியதால்,  அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸேன் (Seine) என்ற நதியில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறான். இறுதியில் மாரியனையும் கோஸத்தையும்  சேர்த்து வைத்துவிட்டு ஜான் வல் ஜான் இறக்கிறான்.

( இங்கு கதாபாத்திரங்களின் பெயர்களை யோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதியார் சொன்னபடியே குறிப்பிட்டு இருக்கிறேன்)

தழுவல் மொழிபெயர்ப்பு:

ஏழைபடும்பாடு என்ற பெயரில் யோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதியார் அந்த பிரெஞ்சு நாவலை அப்படியே வரிக்கு வரி மொழிபெயர்ப்பு செய்யவில்லை. அவர் அந்த பிரெஞ்சு நாவலை தழுவல் நடையில் தமிழில் மொழிபெயர்ப்பு செய்து இருந்தார்.கதை நாயகனை ஜாம் வல் ஜான் என்று குறிப்பிடுகிறார்.பிரான்சில் இந்தக் கதை நடக்கும் சமயம் பிரெஞ்சுப் புரட்சி நடைபெற்றது. சுத்தானந்த பாரதியார் இந்த நாவலை அந்த புரட்சியோடு இங்கு நடந்த இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு தகுந்தவாறு மாற்றி ஒப்பிட்டு வசனங்கள் எழுதினார்.

பிரெஞ்சுப் புரட்சி, வாட்டர்லூ சண்டை, அந்தக் கால பாரீஸ் அண்டர் கிரவுண்ட் சாக்கடைகளில் திருடர்கள் மறைந்து வாழ்தல், திருடர்களின் சாகசம், கிறிஸ்தவ கன்னியர் மடம், கல்லறைத் தோட்டம் , சவப் பெட்டியின் உள்ளே படுத்து தப்புதல் - என்று அந்தக்கால பிரான்ஸைப் பற்றி சுவைபட தெரிந்து கொள்ளலாம்.

விடுதி நடத்திய தென்னாடியர் (Thénardier) என்ற பாத்திரப் படைப்பை முழுக்க முழுக்க தமிழ் நகைச்சுவை பாத்திரமாகவே காணலாம்.

இடையிடையே தான் எழுதிய கதைக்குப் பொருத்தமாக சில பாடல்களையும் அவர் இயற்றி சேர்த்துள்ளார்.

பாந்தேனின் காதலன் தொலோமியே விடுதி ஒன்றில் குடித்து விட்டு பாடுகிறான்.

இன்பமா யிருப்போம்!
  இகத்தினிற் சுகிப்போம்!
அன்பினிற் களிப்போம்!
  ஆசையை நிறைப்போம்!
துன்பத்தை மறப்போம்!
  துயர்களைப் பொறுப்போம்!
நண்பரே, காதலாம்!
  நல்விரு துகப்போம்!  
               - ( அத்தியாயம் - 15)

எபோநி என்பவளது தம்பி குரோஷன் பாடிவதாக ஒரு பாடல்.

கட்டுகளைஉடைப்போம் எங்கள்
  கைவலியுள்ள மட்டும்
முற்றுகை போட்டெதிர்ப்போம் எதிர்
  மூளும் பகைச் சினவாள்
வெட்டி மடித்திடினும் அஞ்சா
  வீரராக விழுவோம்!
சுட்டுப் பொசுக்கிடினும் நாங்கள்
  சுதந்தரராய் இறப்போம்  
                   - ( அத்தியாயம் - 92)

ஆரம்பத்தில் பிரெஞ்சுப் புரட்சியாளர்களை வெறுத்த ஒரு தாத்தா பினனர் அவர்களைப் பாராட்டி பாடுகிறார்.

குடியரசு வாழ்க வாழ்கவே
முடியரசு வீழ்க வீழ்கவே
கொடியுயர்த்தி வீர பேரிகை
கொட்டுவோம் உக்லக மெங்குமே!
குடியரசு வாழ்க வாழ்கவே
-          ( அத்தியாயம் 105 )

சினிமாவில் ஏழைபடும்பாடு:

இந்த நூலை மையமாக வைத்து ஏழைபடும்பாடு என்ற பெயரில் ஒரு தமிழ் திரைப்படம். வெளிவந்தது. பழைய முதுபெரும் நடிகர் நாகையா இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் ஜாவர் என்ற போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்த சீதாராமன் என்ற எழுத்தாளர் ஜாவர் சீதாராமன் ஆனார். இவர் பட்டணத்தில் பூதம் என்ற படத்தில் ஜீபூம்பா என்ற பூதமாக வந்தவர்.  

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த படம் “ ஞானஒளி . அதில் தனக்கு அடைக்கலம் கொடுத்த கிறிஸ்தவ பாதிரியாரிடமே வெள்ளி குத்து விளக்குகளை ஒருவன் திருடி விடுவதாக கதை ஒன்று சொல்லுவார்கள். அந்த திருடனை கையும் களவுமாக காவலர்கள் பிடித்துக் கொண்டு பாதிரியாரிடம் வரும்போது,அவர் அவனைக் காட்டிக் கொடுக்காது நல்வழிப் படுத்துவார். அந்த காட்சிக்கு அடிப்படை இந்த ஏழைபடும்பாடு என்ற நாவல்தான்.

(நான் படித்த இந்த ஏழைபடும்பாடு: என்ற நூல் நான்காம் பதிப்பாக 1952 ஆம் ஆண்டு சுத்த நிலையம் வெளியிட்டதாகும். இந்த நூலை இப்போது மணிவாசகர் பதிப்பகம், சென்னை மற்றும் கவிதா பதிப்பகம், சென்னை ஆகியோர் அழகுற வெளியிட்டு இருக்கிறார்கள். 400 பக்கங்கள்..)



( PICTURES   THANKS TO  “ GOOGLE ” ) * மணிவாசகர் பதிப்பகத்தாரின் அட்டைப்படம் மட்டும் என்னால் எடுக்கப்பட்டது)

 



        

37 comments:

  1. அன்புடையீர்.. இன்று தான் இந்தக் கதையைத் தெரிந்து கொண்டேன்!..முழு நாவலையும் படித்ததைப்போல அருமையான பதிவு!..

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா
    பதிவு மிக அருமையாக எழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள்
    தொடருகிறேன்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. ரசிக்கபடியான விமர்சனம்... ஞானஒளி படத் தகவலும் புதிது... நன்றி ஐயா...

    ReplyDelete
  4. அறியாத தகவல்கள். பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  5. ஏழை படும்பாடு படத்தில் நடித்ததால் தான், திரு சீதாராமன் ஜாவர் சீத்தாராமன் ஆனார் என்பது வரை தெரியும். ஆனால் அந்த கதையை தங்கள் பதிவின் மூலம் தான் தெரிந்துகொண்டேன். கதையைப் படிக்கும்போதே ‘ஞான ஒளி’ திரைப்படமும் நினைவுக்கு வந்தது.முடிவில் அது பற்றியும் சொல்லிவிட்டீர்கள். கதையைப் படித்ததும் திரைப்படத்தியப் பார்த்தது போல் இருந்தது. பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  6. சிறப்பான பகிர்வு. அறியாத தகவல்கள்.

    ReplyDelete
  7. மறுமொழி > துரை செல்வராஜூ said...
    //அன்புடையீர்.. இன்று தான் இந்தக் கதையைத் தெரிந்து கொண்டேன்!..முழு நாவலையும் படித்ததைப்போல அருமையான பதிவு!.. //

    சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜு அவர்களின் கருத்துரைக்கு நன்றி! ஏழைபடும்பாடு என்ற இந்த நூலை அவசியம் படிக்கவும்.

    ReplyDelete
  8. மறுமொழி > 2008rupan said...
    சகோதரர் ரூபன் அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  9. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...

    சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி! சோதனைகள் பல சந்திக்கும் நீங்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல்.

    ReplyDelete
  10. மறுமொழி > ராஜி said...

    சகோதரி ராஜி அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  11. மறுமொழி > வே.நடனசபாபதி said...

    // ஏழை படும்பாடு படத்தில் நடித்ததால் தான், திரு சீதாராமன் ஜாவர் சீத்தாராமன் ஆனார் என்பது வரை தெரியும். ஆனால் அந்த கதையை தங்கள் பதிவின் மூலம் தான் தெரிந்துகொண்டேன். //

    நானும் இந்த திரைப் படத்தை பார்த்ததில்லை. Youtube அல்லது கடைகளில் CD / DVD வாங்கித்தான் பார்க்க வேண்டும். ஏழைபடும்பாடு என்ற இந்த நூலை தாங்கள் அவசியம் படிக்கவும்.
    தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!





    ReplyDelete
  12. மறுமொழி > ADHI VENKAT said...
    சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  13. ஞான ஒளி திரைப்படம் நினைவுக்கு வந்தது ...பகிர்வுக்கு பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  14. கதை சொல்லி வரும்போதே
    ஞான ஒளி படம் நினைவுக்கு வந்து போனது
    அருமையாக கதைச் சுருக்கத்தைப் பதிவு செய்து
    தந்தது ,மன மகிழ்வு தந்தது
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. சிறப்பான ஓர் நூல் பற்றி அருமையாக எழுதியுள்ளீர்கள்.

    ReplyDelete
  16. டாம் சாயர்,ஏழை படும்பாடு இரண்டையும் பள்ளி வயதில் எங்கள் ஊர் நூலகத்தில் படித்ததாக நினைவு. மீண்டும் ஒரு முறை படிக்கத் தூண்டுகிறது பதிவு

    ReplyDelete
  17. LES MISERABLES ல் தாங்கள் கூறிய வெள்ளி விளக்குப் பகுதி, சில வருடங்களுக்கு முன் பத்தாம் வகுப்பு ஆங்கிலப் புத்தகத்தில் இடம் பெற்று இருந்தது ஐயா. தங்களின் வரிகளைப் படித்தவுடன் அப்புத்தகம் முழுவதையும் படிக்கும் ஆவல் எழுந்துள்ளது.
    நன்றி ஐயா
    த.ம.6
    நேற்றுதான் திரு ஜோக்காளியிடம்
    தமிழ் மணம் ஓட்டுப் போடுவது எப்படி
    என்பதைத் தெரிந்து கொண்டேன்.
    இனி தொடர்வேன்

    ReplyDelete
  18. மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...
    // ஞான ஒளி திரைப்படம் நினைவுக்கு வந்தது ...பகிர்வுக்கு பாராட்டுக்கள்..! //

    சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு நன்றி! இந்த பதிவைப் படிக்கும் நண்பர்கள் அனைவருக்கும் ஞான ஒளி திரைப்படம் நினைவுக்கு வந்ததாகச் சொல்லுகிறார்கள். நான் இன்னும் அந்த படம் பார்த்ததில்லை. இத்தனைக்கும் அந்த படத்தில் வரும் பூண்டிமாதா கோயிலுக்கு அடுத்து இருப்பது என்னுடைய அம்மாவின் ஊர்.

    ReplyDelete
  19. மறுமொழி > Ramani S said... ( 1 , 2 )
    // கதை சொல்லி வரும்போதே ஞான ஒளி படம் நினைவுக்கு வந்து போனது அருமையாக கதைச் சுருக்கத்தைப் பதிவு செய்து
    தந்தது ,மன மகிழ்வு தந்தது பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள் //

    கவிஞர் ரமணி அவர்களின் பாராட்டுக்கு நன்றி! உங்களுக்கும் ஞான ஒளி படம் நினைவுக்கு வந்து போனதா? அப்ப நான் அவசியம் அந்த படத்தை பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  20. மறுமொழி > கே. பி. ஜனா... said...
    // சிறப்பான ஓர் நூல் பற்றி அருமையாக எழுதியுள்ளீர்கள். //

    எழுத்தாளர் கே பி ஜனா அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  21. மறுமொழி > டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

    // டாம் சாயர்,ஏழை படும்பாடு இரண்டையும் பள்ளி வயதில் எங்கள் ஊர் நூலகத்தில் படித்ததாக நினைவு. மீண்டும் ஒரு முறை படிக்கத் தூண்டுகிறது பதிவு //

    சகோதரர் மூங்கிற் காற்று டி என் முரளிதரனுக்கு நன்றி!

    ReplyDelete
  22. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...

    // LES MISERABLES ல் தாங்கள் கூறிய வெள்ளி விளக்குப் பகுதி, சில வருடங்களுக்கு முன் பத்தாம் வகுப்பு ஆங்கிலப் புத்தகத்தில் இடம் பெற்று இருந்தது ஐயா. தங்களின் வரிகளைப் படித்தவுடன் அப்புத்தகம் முழுவதையும் படிக்கும் ஆவல் எழுந்துள்ளது. நன்றி ஐயா//

    தஞ்சைக்காரரான உங்களுக்கு பூண்டி மாதா கோவில் மற்றும் திருக்காட்டுப்பள்ளி பாலத்தில் எடுக்கப்பட்ட ஞானஒளி படம் ஞாபகம் வரவில்லையா?
    // நேற்றுதான் திரு ஜோக்காளியிடம் தமிழ் மணம் ஓட்டுப் போடுவது எப்படி என்பதைத் தெரிந்து கொண்டேன். இனி தொடர்வேன் //

    ஜோக்காளிக்கு நன்றி! தமிழ் மணத்தில் கணக்கு உள்ள ஒருவர் ஒருநாளில் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடலாம். ஆனால் ஒரு பதிவருக்கு ஒரு ஓட்டுதான் போட இயலும்.

    சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயகுமார் அவர்களின் அன்பான வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  23. நூல் விமர்சனங்கள் மிகவும் அருமை. ஏழை படும் பாட்டை நினைத்தாலே மனதுக்குக் கஷ்டமாகத்தான் உள்ளது. ஞான ஒளி திரைப்படம் நினைவில் உள்ளது. பகிர்வுக்குப் பாராட்டுக்கள், நன்றிகள், ஐயா.

    ReplyDelete
  24. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...
    // நூல் விமர்சனங்கள் மிகவும் அருமை. ஏழை படும் பாட்டை நினைத்தாலே மனதுக்குக் கஷ்டமாகத்தான் உள்ளது. ஞான ஒளி திரைப்படம் நினைவில் உள்ளது. பகிர்வுக்குப் பாராட்டுக்கள், நன்றிகள், ஐயா. //

    அன்புள்ள VGK அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! ஞானஒளி திரைப்படம் திருச்சியில் பிரபாத் தியேட்டரில் வெளியிட்டார்கள் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  25. இந்தப் புத்தகங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். படித்ததில்லை. அருமையான கதைச் சுருக்கம். நன்றிகள், ஐயா.

    ReplyDelete
  26. சிறப்பான புத்தகம் பற்றிய அறிமுகம். இங்கே நூலகத்தில் இருக்கிறதா பார்க்கிறேன்....

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  27. மறுமொழி > Packirisamy N said...
    // இந்தப் புத்தகங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். படித்ததில்லை. அருமையான கதைச் சுருக்கம். நன்றிகள், ஐயா. //

    சகோதரர் பக்கிரிசாமி.என் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
    வாய்ப்பு கிடைக்கும்போது அவசியம் அந்த இரு நூல்களையும் படியுங்கள்.

    ReplyDelete
  28. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...
    // சிறப்பான புத்தகம் பற்றிய அறிமுகம். இங்கே நூலகத்தில் இருக்கிறதா பார்க்கிறேன்.... //

    சகோதரரின் கருத்துரைக்கு நன்றி. மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்ட நூல் நூலகங்களில் இருக்க வாய்ப்பு அதிகம்.

    ReplyDelete
  29. அருமையான கதை . இது வரை நான் படித்ததில்லை. இன்று தான் படிக்கிறேன். மனதை நெகிழ்த்தும் கதை. அதை அழகிய நடையில் கொண்டு சென்றுள்ளீர்கள். பாராட்டுக்கள்.
    வாழ்த்துக்கள்......

    ReplyDelete
  30. நல்ல விமர்சனங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  31. ஏழைபடும்பாடு மற்றும் ஞானஒளி டிரைப்படமிரண்டும் பார்த்த நினைவு. ஏழைபடும்பாடு மொழிமாற்றப்பட்ட கதையும் படித்திருக்கிறேன். ஆசிரியஎ பெயர் நினைவுக்கு வரவில்லை. நல்ல கதைச் சுருக்கம் அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  32. மறுமொழி > rajalakshmi paramasivam said...

    சகோதரி ராஜலக்‌ஷ்மி பரமசிவம் அவர்களின் கருத்துரைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!

    ReplyDelete
  33. மறுமொழி > டிபிஆர்.ஜோசப் said...

    அய்யா டிபிஆர் ஜோசப் அவர்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி!

    ReplyDelete
  34. மறுமொழி > G.M Balasubramaniam said...

    // ஏழைபடும்பாடு மற்றும் ஞானஒளி டிரைப்படமிரண்டும் பார்த்த நினைவு. //

    நான் இரண்டு படஙகளையும் பார்த்ததில்லை.

    //ஏழைபடும்பாடு மொழிமாற்றப்பட்ட கதையும் படித்திருக்கிறேன். ஆசிரியஎ பெயர் நினைவுக்கு வரவில்லை. நல்ல கதைச் சுருக்கம் அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். //

    தமிழாக்கம் செய்தவர் யோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதியார்

    அய்யா GMB அவர்களின் கருத்துரைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!


    ReplyDelete
  35. தகவற் களஞ்சியம் என்று கூறலாம் இம் மொழி பெயர்ப்பை.
    மிக நன்றாக உள்ளது. சுவைத்தேன்.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  36. மறுமொழி > kovaikkavi said...
    சகோதரி கவிஞர் வேதா. இலங்காதிலகம். அவர்களின் அன்பான பாராட்டுரைக்கு நன்றி!

    ReplyDelete