Monday 18 November 2013

என்னைக் கவர்ந்த கிறிஸ்தவ கீதங்கள்



எனது சிறு வயதிலிருந்து எனக்கு திருமணம் ஆகும் வரை  நாங்கள் திருச்சி டவுனில் இருந்தோம்..(இப்போது புறநகர்) நாங்கள் வசித்த இடம் கிறிஸ்தவர்கள் நிறைந்த பகுதியாகும். மேலும் முதல் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை நான் படித்தது ஹோலிகிராஸ் கான்வெண்ட் நடத்திய ஒரு கிறிஸ்தவ ஆரம்பப் பள்ளி ஆகும். எனவே நான் ஒரு இந்து என்றாலும், எனக்கு மத வேறுபாடு கடந்த கிறிஸ்தவ நண்பர்கள் உண்டு. அவர்களது ஆலயங்களுக்குச் செல்வது, நல்லது கெட்டது நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வது என்ற வகையில், அவர்களுடைய ஜெப முறைகளையும் அவர்களது கிறிஸ்த பாடல்களையும் நான் அறிவேன். அந்த வகையில் திருச்சி: புனித லூர்து அன்னை ஆலயம் (St. Lourdes Church) http://tthamizhelango.blogspot.com/2012/09/st-lourdes-church_9.html என்று ஒரு பதிவையும் எழுதியுள்ளேன். இங்கு எனது மனம் கவர்ந்த சில கிறிஸ்தவ கீதங்களையும் அதனைச் சார்ந்த சில நிகழ்வுகளையும் குறிப்பிட விரும்புகிறேன். பாடல்களில் தொடக்கத்தில் உள்ள வரிகளை மட்டும் குறிப்பிட்டு உள்ளேன்.

கேளுங்கள் தரப்படும்

நாங்கள் முன்பு வசித்த வீட்டிற்கு அருகில் சர்ச் ஒன்று உண்டு. கிறிஸ்துமஸ் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னரே மூங்கில் குச்சிகளைக் கொண்டு “கிறிஸ்துமஸ் கூண்டு தயார் செய்தல், இயேசு பிறந்த மாட்டுக் கொட்டகை ஜோடித்தல், கலர்க் காகிதங்களைக் கொண்டு கொடிகள் செய்து தோரணங்கள் கட்டுவது என்று வேலைகள் நடக்கும். சிறுவனான நானும் அதில் பங்கு கொள்வேன். அந்த சர்ச்சில் விழாக் காலங்களில் ஒலிபெருக்கியில் முதலில் பாடும்பாடல்  கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் ... ... “ என்று தொடங்கும் பாடல்தான். இன்றும் அந்த கணீர் குரலில் தொடங்கும் பாடலைக் கேட்கும் போதெல்லாம் அந்தநாள் ஞாபகங்கள் வந்துவிடும்

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு 
தேடுங்கள் கிடைக்குமென்றார் 
பெத்லேகேம் நகரில் மாட்டு தொழுவமதில் பிறந்தார் பரமப்பிதா
சூசை கன்னி மரியின் மடியில் தவழ்ந்தார் ஏசுப்பிதா 

பாடலை வீடியோவில் கண்டு கேட்டு மகிழ இங்கே க்ளிக் செய்யுங்கள்.  

எனை ஆளும் மேரி மாதா
 
அப்போதைய மறக்க முடியாத இலங்கை வர்த்தக ஒலிபரப்பு வானொலியில் எல்லா சமயப் பாடல்களையும் காலையில் ஒலி பரப்புவார்கள். அவற்றுள் மிஸ்ஸியம்மா ( ஜெமினி கணேசன் சாவித்திரி நடித்தது ) படத்தில் வரும் “ எனை ஆளும் மேரி மாதா “ என்று தொடங்கும் பாடலை அடிக்கடி ஒலி பரப்புவார்கள்.

எனை ஆளும் மேரி மாதா
துணை நீயே மேரி மாதா
என்றும் துணை நீயே மேரி மாதா

எனை ஆளும் மேரி மாதா
துணை நீயே மேரி மாதா

பரிசுத்த ஆவியாலே
பரபுத்ரன் ஈன்ற தாயே
பரிசுத்த ஆவியாலே
பரபுத்ரன் ஈன்ற தாயே
ப்ரபு ஏசு நாதன் அருளால்
புவியோரும் புனிதம் அடைந்தார்

எனை ஆளும் மேரி மாதா
துணை நீயே மேரி மாதா

( படம்: மிஸ்ஸியம்மா (1955) - பாடல்: தஞ்சை ராமையாதாஸ்- பாடியவர் P லீலா இசை S ராஜேஸ்வர ராவ் )

பாடலை வீடியோவில் கண்டு கேட்டு மகிழ இங்கே க்ளிக் செய்யுங்கள். 
 
இடைவிடா சகாயமாதா:
 
திருச்சி பாலக்கரையில் சகாயமாதா கோவில் உள்ளது. என்னைவிட மூத்தவர், ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்த மார்ட்டின் என்பவர். அவர் ஒவ்வொரு புதன்கிழமையும் பணி முடிந்ததும் மாலைவேளை இந்த கோயிலுக்கு செல்வார். ஒருமுறை அவர் என்னையும் இந்த கோயிலுக்கு அழைத்துச் சென்றார். பிரார்த்தனைக்கு முன்னர் அந்த சர்ச்சில் சில பாடல்களை ஒலிபரப்பினர். அவற்றுள் எனது மனங் கவர்ந்த பாடல்  
“இடைவிடா சகாயமாதா “ என்று தொடங்கும் பாடல். இன்று அந்த மார்ட்டின் உயிரோடு இல்லை.

இடைவிடா சகாயமாதா
இணையில்லா தேவமாதா 
பாவவினை தீர்ப்பாள்
பதமுனை சேர்ப்பாள் 
நிதம் துணை சேர்ப்பாயே

பாடலை வீடியோவில் கண்டு கேட்டு மகிழ இங்கே க்ளிக் செய்யுங்கள்.

நீலக் கடலின் ஓரத்தில்:

கிறிஸ்தவ சமயம் சார்ந்த பல் திரைப் படங்கள் ஆங்கிலத்திலும் , தமிழிலும் வந்துள்ளன. ஆங்கிலத்தில் வெளிவந்த THE TEN COMMANDMENTS மற்றும் BENHUR இரண்டையும் மிகவும் ரசித்தவன் நான். இவற்றுள் பத்துக் கட்டளைகள் படம் பற்றி  திரைப் படம் - பத்து கட்டளைகள் (THE TEN COMMANDMENTS)  http://tthamizhelango.blogspot.com/2012/10/ten-commandments.html என்ற பதிவையும் எழுதி உள்ளேன்.

கவிஞர் கண்ணதாசன் சிறந்த கவிஞர். அவர் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதம் ( பத்து பாகங்கள் ) என்ற நூல் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று. அவர் இந்து மதத்தில் ஈடுபாடு மிக்கவராயினும் சமய நல்லிணக்கம் கொண்டவர். அவர் படைத்த “இயேசு காவியம் என்ற நூலே இதற்கு சான்று. அவர் “அன்னை வேளாங்கண்ணிஎன்ற படத்திற்காக எழுதிய நீலக் கடலின் ஓரத்தில்என்று தொடங்கும் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.

நீலக்கடலின் ஓரத்தில்
நீங்கா இன்பக் காவியாமாம்...
தென்னை உயர பனை உயர
செந்நெல் உயர்ந்து வளம் செழிக்கும்
வேளாங்கண்ணி என்னும் ஊராம்

(பாடல்: கண்ணதாசன் படம்: அன்னை வேளாங்கண்ணி பாடியவர்கள்:T.M.சௌந்தரராஜன் & P மாதுரி, இசை: ஜி தேவராஜன் )

பாடலை வீடியோவில் கண்டு கேட்டு மகிழ இங்கே க்ளிக் செய்யுங்கள்
  
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில்:


நாங்கள் இருந்த பகுதியில் கடைவீதியில் டேவிட் என்ற பெரியவர் “ டேவிட் மளிகை “ என்ற பலசரக்கு கடை வைத்து இருந்தார். அவரிடம்தான் எங்களுக்குத் தேவையான மளிகை சாமான்களை வாங்குவோம். அவர் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு  சென்று இருந்தபோது, மணமக்கள் மேடைக்கு வரும் வரை கிறிஸ்தவ கீதங்கள் பலவற்றை ஒலி பரப்பினார்கள். அவற்றுள் ஒன்று கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம் “ என்று தொடங்கும் இந்த பாடல் -

கட்டடம்  கட்டிடும் சிற்பிகள் நாம்
கட்டிடுவோம் கிறிஸ்தேசுவுக்காய்
சுத்தியால்  வைத்து அடித்தல்ல
ரம்பத்த்தால்  மரத்தை அறுத்தல்ல

ஒவ்வொரு நாளும் கட்டிடுவோம்
ஒவ்வொரு செயலாம்  கற்களாலே
உத்தமர் இயேசுவே  அஸ்திபாரம்
பத்திரமாக தாங்கிடுவார்

பாடலை வீடியோவில் கண்டு கேட்டு மகிழ இங்கே க்ளிக் செய்யுங்கள்.

மேலே சொன்ன திருமண நிகழச்சியில் மணமக்கள் மேடைக்கு வந்து அமர்ந்தவுடன் அங்கு ஒலிபரப்பப்பட்ட பாடல்

ரோஜாப்பூ வாசமலர்கள் நாம்
இப்போ நேச மணாளர் மேல்  தூவிடுவோம்

மல்லிகை முல்லை சிவந்தி பிச்சி 
மெல்லியர் சேர்ந்து அள்ளியே வீசி 
நல்மணமக்கள் மீது நாம்...
எல்லா மலரும் தூவிடுவோம்.

ரோஜாப்பூ வாசமலர்கள் நாம்
இப்போ நேச மணாளர் மேல்  தூவிடுவோம்

மன்னனாம் மாப்பிள்ளை பண்புள்ள பெண்ணுடன் 
அன்றிலும் தேனும் போல் ஒன்றித்து வாழ
ஆண்டவர் ஆசீர்வதிக்க...
நம் வேண்டுதலோடு தூவிடுவோம்.

பாடலை வீடியோவில் கண்டு கேட்டு மகிழ இங்கே க்ளிக் செய்யுங்கள்.


இவைகள் மட்டுமல்லாது இன்னும் பாடல்கள் உண்டு. இங்கு எழுத இடமும், உங்களுக்கு படிக்க நேரமும் இல்லாத படியினால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

(PICTURES  &  VIDEOS  THANKS  TO  GOOGLE) 



42 comments:

  1. நீலக்கடலின் ஓரத்தில் பாட்டு எனக்கு ரொமப் பிடிக்கும்.

    ReplyDelete
  2. நான் சென்றதுமில்லை! கேட்டதுமில்லை!

    ReplyDelete
  3. தாங்கள் குறிப்பிட்டவற்றுள் சில என் மனம் கவர்ந்தவை!..

    ReplyDelete
  4. அனைத்துத்தகவல்களும், பாடல்களும் மிக அருமை.

    //கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
    தேடுங்கள் கிடைக்குமென்றார்// ;)))))

    கவிஞர் கண்ணதாசன் பற்றிச்சொல்லியுள்ளவை சுவையான தகவல்கள்.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.

    ReplyDelete
  5. மறுமொழி > ராஜி said...
    // நீலக்கடலின் ஓரத்தில் பாட்டு எனக்கு ரொமப் பிடிக்கும். //

    சகோதரி ராஜி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  6. மறுமொழி > புலவர் இராமாநுசம் said...
    // நான் சென்றதுமில்லை! கேட்டதுமில்லை! //

    புலவர் அய்யாவின் வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  7. மறுமொழி > துரை செல்வராஜூ said...
    // தாங்கள் குறிப்பிட்டவற்றுள் சில என் மனம் கவர்ந்தவை!.. //

    தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  8. அருமை... வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  9. எனக்கும் ‘நீலக்கடலின் ஓரத்தில்’ பாடல் மிகவும் பிடிக்கும். அருமையான பாடல்களை கேட்டு இரசிக்கும் வண்ணம் அதற்குரிய இணைப்பைத் தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  10. கல்லூரி விடுதியில் பல கிறிஸ்துவ தோழியர் உண்டு.. கிறிஸ்துமஸ் சமயங்களில் பாட்டு ஆசிரியையை பல கிறிஸ்து பாடல்களை பாட பயிற்சி தருவார்... , ஞாயிற்றுக்கிழமைகளில் சர்ச்சுகளுக்கும் சென்று பாடிய இனிய நினைவுகளை தங்கள் பதிவு மீட்டெடுத்தது ..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  11. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...
    // அனைத்துத்தகவல்களும், பாடல்களும் மிக அருமை. //

    அன்புள்ள VGK அவர்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  12. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...
    // அருமை... வாழ்த்துக்கள் ஐயா.. //

    சகோதரர் திண்டுக்கல் தனபாலன் வாழ்த்துக்களுக்கு நன்றி!

    ReplyDelete
  13. மறுமொழி > வே.நடனசபாபதி said...
    // எனக்கும் ‘நீலக்கடலின் ஓரத்தில்’ பாடல் மிகவும் பிடிக்கும். அருமையான பாடல்களை கேட்டு இரசிக்கும் வண்ணம் அதற்குரிய இணைப்பைத் தந்தமைக்கு நன்றி. //

    அய்யா வே.நடனசபாபதி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  14. மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...
    // கல்லூரி விடுதியில் பல கிறிஸ்துவ தோழியர் உண்டு.. கிறிஸ்துமஸ் சமயங்களில் பாட்டு ஆசிரியையை பல கிறிஸ்து பாடல்களை பாட பயிற்சி தருவார்... , ஞாயிற்றுக்கிழமைகளில் சர்ச்சுகளுக்கும் சென்று பாடிய இனிய நினைவுகளை தங்கள் பதிவு மீட்டெடுத்தது ..பாராட்டுக்கள்..! //

    நீங்கள் ஆன்மீகப் பதிவர் என்று பெயர் எடுத்தவர். இருந்த போதிலும் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் போதும் உங்கள் பதிவுகள் சிறப்பாக இருக்கும். எனவே நீங்கள் கிறிஸ்தவ கல்வி நிறுவனத்தில் பயின்றவராகவோ அல்லது கிறிஸ்தவ தோழியர்கள் நட்புடையவராகவோ இருக்கலாம் என்று அப்போதே நினைத்தேன். உங்களது மத நல்லிணக்கம் வாழ்க!

    சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்களின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!

    ReplyDelete
  15. தாங்கள் குறிப்பிட்ட பாடல்கள் எனக்கும் பிடித்தவை.அருமை ஐயா! மின்சாரக் கனவு என்ற படத்தில் இடம் பெறும் "அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே" என்ற வைரமுத்துவின் பாடலும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

    ReplyDelete
  16. மறுமொழி > டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...
    // தாங்கள் குறிப்பிட்ட பாடல்கள் எனக்கும் பிடித்தவை.அருமை ஐயா! மின்சாரக் கனவு என்ற படத்தில் இடம் பெறும் "அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே" என்ற வைரமுத்துவின் பாடலும் எனக்கு மிகவும் பிடிக்கும். //

    சகோதரர் மூங்கில் காற்று – முரளிதரன் அவர்களின் கருத்துரைக்கும் , வைரமுத்து எழுதிய பாடல் பற்றிய தகவலுக்கும் நன்றி!

    ReplyDelete
  17. இஸ்லாமிய கிறிஸ்துவ தனிப்பாடல்கள் பலவற்றையும் இன்னமும் விரும்பிக் கேட்பவன் நான்.

    ReplyDelete
  18. நான் அதிகமாக படித்தது கிருத்துவ பள்ளிகள் கல்லூரிகள் தான். ஏன் என் மூன்றவது வகுப்பு உசிலம்பட்டியில் உள்ள கிருத்துவபள்ளியில் தான் படித்தேன்.

    என் நீங்கா இளமை நினைவுகள்: அந்த பள்ளி கிருத்துவ வாத்தியார் தான் எங்களை முதன் முதலில் மதுரை மீனாட்சி கோவிலுக்கு (excursion) கூட்டி சென்றார்.இன்றும் எனக்கு அந்த ஞாபகம் உள்ளது.

    அதே மாதிரி, முதன் முதலில் திருவண்ணாமலை கோவிலுக்கு (excursion) கூட்டி சென்றவ்ரர் ஒரு கத்தோலிக் பள்ளியில் உள்ள Brother! அவர் அவரது அங்கியை கழட்டி வைத்து விட்டு எங்களுடன் கோவிலுக்கு வந்தார். ஏன் அப்படி வந்தார் என்று எனக்கு இன்று புரிகிறது!

    ஆனால், நான் படித்த எந்த பள்ளியிலும், கல்லூரியிலும், எங்களை அவர்ககள் சர்ச்சுக்கோ chapel -க்கோ வர சொல்லி கட்டாயப்படுத்தவில்லை. அதனால் எனக்கு எந்த கிருத்தவமதப் பாடல்களும் சுத்தமாக தெரியாது. அந்த நல்ல உள்ளங்கள் எனக்கு மிக மக மிக நல்ல கல்வியை மட்டுமே---நல்ல கல்வியை மட்டுமே எனக்கு கொடுத்தார்கள்.

    ஆனால், அதே செங்கல்பட்டு ராமக்ரிஷ்ணா பள்ளியில்--அறியாத 9 வயதில் பஜனை! நான் ஏற்கனவே மூன்று வயதிலேயே பஜனை செய்ததால் ஒன்றும் கஷ்டம் இல்லை.

    தமிழ்மணம் வோட்டு பிளஸ் +1

    ReplyDelete

  19. மறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said...
    // இஸ்லாமிய கிறிஸ்துவ தனிப்பாடல்கள் பலவற்றையும் இன்னமும் விரும்பிக் கேட்பவன் நான். //

    சகோதரர் ஜோதிஜி திருப்பூர் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! எனது இஸ்லாமிய நண்பர்களைப் பற்றியும் எழுத வேண்டும்.

    ReplyDelete
  20. மறுமொழி > நம்பள்கி said...
    // நான் அதிகமாக படித்தது கிருத்துவ பள்ளிகள் கல்லூரிகள் தான். ஏன் என் மூன்றவது வகுப்பு உசிலம்பட்டியில் உள்ள கிருத்துவபள்ளியில் தான் படித்தேன். //

    சகோதரர் நம்பள்கி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! தாங்கள் ” கிருத்துவ “ என்ற சொல்லைத் தவிர்த்து
    “ கிறிஸ்தவ ” என்று எழுதினால் நன்றாக இருக்கும்.. ஏனெனில் கிருத்துவம் என்பதற்கு அர்த்தமே வேறு.

    // என் நீங்கா இளமை நினைவுகள்: அந்த பள்ளி கிருத்துவ வாத்தியார் தான் எங்களை முதன் முதலில் மதுரை மீனாட்சி கோவிலுக்கு (excursion) கூட்டி சென்றார்.இன்றும் எனக்கு அந்த ஞாபகம் உள்ளது.

    அதே மாதிரி, முதன் முதலில் திருவண்ணாமலை கோவிலுக்கு (excursion) கூட்டி சென்றவ்ரர் ஒரு கத்தோலிக் பள்ளியில் உள்ள Brother! அவர் அவரது அங்கியை கழட்டி வைத்து விட்டு எங்களுடன் கோவிலுக்கு வந்தார். ஏன் அப்படி வந்தார் என்று எனக்கு இன்று புரிகிறது! //

    பள்ளி கல்லூரிகளில் பயின்ற அந்த இனியநாட்கள் இனி வராது. உங்கள் அனுபவத்தினை இங்கு சொன்னமைக்கு நன்றி!

    // ஆனால், நான் படித்த எந்த பள்ளியிலும், கல்லூரியிலும், எங்களை அவர்ககள் சர்ச்சுக்கோ chapel -க்கோ வர சொல்லி கட்டாயப்படுத்தவில்லை. அதனால் எனக்கு எந்த கிருத்தவமதப் பாடல்களும் சுத்தமாக தெரியாது. அந்த நல்ல உள்ளங்கள் எனக்கு மிக மக மிக நல்ல கல்வியை மட்டுமே---நல்ல கல்வியை மட்டுமே எனக்கு கொடுத்தார்கள். //

    நான் படித்த ஆரம்பப் பள்ளியிலும் அவர்களது கிறிஸ்தவ மதத்தை கட்டாயம் செய்தது கிடையாது. கிறிஸ்தவ மாணவர்களுக்கு ஞானோபதேசம் என்ற பெயரிலும், எங்களைப் போன்ற இந்து மாணவர்களுக்கு ந்ல்லொழுக்கம் என்ற பெயரிலும் தனியே சிறப்பு வகுப்புகள் நடத்தினார்கள்.

    // ஆனால், அதே செங்கல்பட்டு ராமக்ரிஷ்ணா பள்ளியில்--அறியாத 9 வயதில் பஜனை! நான் ஏற்கனவே மூன்று வயதிலேயே பஜனை செய்ததால் ஒன்றும் கஷ்டம் இல்லை.//

    எம்மதமும் சம்மதம்தான். ஒன்றே குலம் ஒருவனே தேவன். நன்றி!


    ReplyDelete
  21. மிகவும் அருமையான பாடல்கள் ஐயா...
    "எனை ஆளும் மேரி மாதா" போலவே "ஆதியே இன்ப ஜோதியே... அருள் தாரும் தேவ மாதாவே..." பாடலும் மிக அருமையாக இருக்கும். அப்பாடல் "ஞானசௌந்தரி" படத்தில் வந்ததாக ஞாபகம்...

    ReplyDelete
  22. நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்து பாடல்களும் இன்றளவும் கிறிஸ்த்துவர்கள் மத்தியில் பிரபலமானவைதான். அவற்றில் இடைவிடாத சகாயமாதா பாடல் மிகவும் இனிமையானது. இன்று தேவாலயங்களில் பாடப்படும் பல பாடல்களும் ரிதம் இசையைச் சார்ந்துள்ளன. முன்பு போல் ராகங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆகவே கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் நினைவில் நிற்பதில்லை. நண்பர் முட்டா நைனா (என்ன பேர் சார் இது எழுதறப்பவே ஒரு மாதிரி இருக்கே!!) குறிப்பிட்ட பாடல்களும் மிகவும் பிரபலமானவை. ஏ.எம்.ராஜா-ஜிக்கி தம்பதியினர் பாடிய பல கிறிஸ்துவ பாடல்கள் இனிமையானவை. மீண்டும் அவற்றை நினைவுக்கு கொண்டு வந்த உங்களுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete



  23. நீங்கள் சொன்ன பாட்டு எல்லாம் அருமை. தலைப்பை பார்த்ததும் மிஸ்ஸியம்மா, ஞானசெளந்தரி, மின்சார கனவு பாட்டுக்களை எழுத நினைத்தேன். நான் கொஞ்சம் லேட். அருள் தாரும் தேவமாதாவே"" ஜிக்கி திரையில் பாடிய முதல் பாட்டுன்னு நினைக்கிறேன். பி.ஏ.பெரியநாயகியும் படத்தில் பாடியிருப்பார்.அருமையான பாடல்.
    நன்றி

    ReplyDelete
  24. மறுமொழி > முட்டா நைனா said...
    // மிகவும் அருமையான பாடல்கள் ஐயா...
    "எனை ஆளும் மேரி மாதா" போலவே "ஆதியே இன்ப ஜோதியே... அருள் தாரும் தேவ மாதாவே..." பாடலும் மிக அருமையாக இருக்கும். அப்பாடல் "ஞானசௌந்தரி" படத்தில் வந்ததாக ஞாபகம்... //

    சகோதரர் முட்டா நைனா கருத்துரைக்கும்,. "ஞானசௌந்தரி" படப்பாடலை குறிப்பிட்டமைக்கும் நன்றி!

    ReplyDelete
  25. மறுமொழி > டிபிஆர்.ஜோசப் said...
    // நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்து பாடல்களும் இன்றளவும் கிறிஸ்த்துவர்கள் மத்தியில் பிரபலமானவைதான். அவற்றில் இடைவிடாத சகாயமாதா பாடல் மிகவும் இனிமையானது. //

    அய்யா டிபிஆர்.ஜோ அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்த சர்ச்சில் “இடைவிடாத சகாயமாதா” பாடலை ஆர்மோனியத்தில் வாசிப்பாரகள். கேட்க அவவள்வு இனிமை.

    // இன்று தேவாலயங்களில் பாடப்படும் பல பாடல்களும் ரிதம் இசையைச் சார்ந்துள்ளன. முன்பு போல் ராகங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆகவே கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் நினைவில் நிற்பதில்லை.//

    இப்போது எல்லாவற்றிலும் சினிமாத்தனம் புகுந்து விட்டது.

    //நண்பர் முட்டா நைனா (என்ன பேர் சார் இது எழுதறப்பவே ஒரு மாதிரி இருக்கே!!) குறிப்பிட்ட பாடல்களும் மிகவும் பிரபலமானவை. ஏ.எம்.ராஜா-ஜிக்கி தம்பதியினர் பாடிய பல கிறிஸ்துவ பாடல்கள் இனிமையானவை. மீண்டும் அவற்றை நினைவுக்கு கொண்டு வந்த உங்களுக்கு மிக்க நன்றி. //

    விரிவான கருத்துரை தந்த தங்களுக்கு மீண்டும் நன்றி!


    ReplyDelete
  26. மறுமொழி > சகாதேவன் said...
    // நீங்கள் சொன்ன பாட்டு எல்லாம் அருமை. தலைப்பை பார்த்ததும் மிஸ்ஸியம்மா, ஞானசெளந்தரி, மின்சார கனவு பாட்டுக்களை எழுத நினைத்தேன். நான் கொஞ்சம் லேட். அருள் தாரும் தேவமாதாவே"" ஜிக்கி திரையில் பாடிய முதல் பாட்டுன்னு நினைக்கிறேன். பி.ஏ.பெரியநாயகியும் படத்தில் பாடியிருப்பார்.அருமையான பாடல்.
    நன்றி //

    சகோதரர் ” வெடிவால்” சகாதேவன் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! நேரம் கிடைக்கும்போது உங்கள் பதிவின் பக்கம் வருகிறேன்.


    ReplyDelete
  27. இவற்றில் சில பாடல்களை நண்பர் ஒருவரின் வீட்டில் கேட்டு ரசித்திருக்கிறேன்.

    இனிமையான பாடல்கள்.....

    ReplyDelete
  28. சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  29. அருமையான பாடல்களை ஞாபகப்படுத்தியமைக்கு மிக்க
    நன்றி ஐயா.
    இன்று திரும்பவும் அவைகளை மனத்தில் கொண்டு வந்து பாடிப்பார்த்தேன்.

    ReplyDelete
  30. மறுமொழி > அருணா செல்வம் said...
    // அருமையான பாடல்களை ஞாபகப்படுத்தியமைக்கு மிக்க
    நன்றி ஐயா. இன்று திரும்பவும் அவைகளை மனத்தில் கொண்டு வந்து பாடிப்பார்த்தேன். //

    சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  31. அருமையானப் பாடல்கள்.

    எனக்கு மிகவும் பிடித்த (திரைப்படத்தில் இடம் பெற்ற) பாடல்:

    Maestro's Mesmerizing பாடல் :

    மாதா உன் கோவிலில்....

    ReplyDelete
  32. லூர்து அன்னை ஆலயம் திருச்சியின் அடையாளங்களில் ஒன்று. வாரந்தோறும்
    அவ்வாலயத்திற்குச் செல்வோம். தூய வளனாரில் படித்த போது.

    ReplyDelete
  33. மறுமொழி > Peppin said... ( 1 )
    // அருமையானப் பாடல்கள். எனக்கு மிகவும் பிடித்த (திரைப்படத்தில் இடம் பெற்ற) பாடல்: Maestro's Mesmerizing பாடல் :
    மாதா உன் கோவிலில்.... //

    மாதா உன் கோவிலில்.... என்ற பாடலை கிறிஸ்தவ விழாக் காலங்களில் கேட்டு இருக்கிறேன். பெப்பின் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  34. மறுமொழி > Peppin said... ( 2 )
    // லூர்து அன்னை ஆலயம் திருச்சியின் அடையாளங்களில் ஒன்று. வாரந்தோறும் அவ்வாலயத்திற்குச் செல்வோம். தூய வளனாரில் படித்த போது. //

    தூய வளனாரில் நான் படித்ததில்லை. ஆனால் எனது நண்பர்களோடு அங்கு அடிக்கடி சென்றதுண்டு. கோயிலின் வாசலில் இருக்கும் நூலகத்தில் அப்போது உறுப்பினராகவும் இருந்தேன். பெப்பின் அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  35. தாங்கள் குறிப்பிட்ட அனைத்துப் பாடல்களுமே மனம் கவர் பாடல்கள்தான் ஐயா. நன்றி

    ReplyDelete
  36. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...
    // தாங்கள் குறிப்பிட்ட அனைத்துப் பாடல்களுமே மனம் கவர் பாடல்கள்தான் ஐயா. நன்றி //

    சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  37. எங்கள் இலங்கை வானொலி, காலையில் பக்தி பாடல்கள் நிகழ்ச்சியில் மும்மதப் பாடல்களை ஒலிபரப்பும்
    இன்று வரை அதில் மாற்றமில்லை, அத்துடன் ஞாயிற்றுக் கிழமை நிகழ்ச்சியில் திரைப்படங்களில் வெளிவந்த கிருஸ்தவப் பாடல்களை இடம் பெறச் செய்வதில் என்றும் அவர்கள் தவறுவதில்லை.
    அத்துடன் கிருஸ்தவ விழாக்களுக்கு ஒலிபெருக்கி அமைக்கும் போது இப்பாடல்களுக்குக் குறைவிருக்காது.
    "கேளுங்கள் தரப்படும்"-அந்தக் கம்பீரக் குரல் மறக்கக் கூடியதல்ல.
    இத்துடன் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய "எங்கே சுமந்து போறீரே - சிலுவையை
    நீர் எங்கே சுமந்து போறீரே" எனும் ராகமாலிகையாக அமைந்த மனதை உருக்கும் தனிப் பாடலை நான் கேட்டுள்ளேன்.
    இன்று வரை அதைத் தேடுகிறேன்; கிடைக்கவில்லை.
    கிடைத்தால் இடவும்; எனக்கும் ஒரு பிரதி மின்னஞ்சலில் இடவும்.johan.arunasalam@gmail.com

    ReplyDelete
  38. மறுமொழி > யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
    // எங்கள் இலங்கை வானொலி, காலையில் பக்தி பாடல்கள் நிகழ்ச்சியில் மும்மதப் பாடல்களை ஒலிபரப்பும் இன்று வரை அதில் மாற்றமில்லை, அத்துடன் ஞாயிற்றுக் கிழமை நிகழ்ச்சியில் திரைப்படங்களில் வெளிவந்த கிருஸ்தவப் பாடல்களை இடம் பெறச் செய்வதில் என்றும் அவர்கள் தவறுவதில்லை. //

    சகோதரர் யோகன் பாரிஸ் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! அன்றைய மறக்க முடியாத இலங்கை வானொலியின் இன்றைய ஒலிபரப்பு தகவல்களைத் தந்தமைக்கு நன்றி!

    // அத்துடன் கிருஸ்தவ விழாக்களுக்கு ஒலிபெருக்கி அமைக்கும் போது இப்பாடல்களுக்குக் குறைவிருக்காது."கேளுங்கள் தரப்படும்"-அந்தக் கம்பீரக் குரல் மறக்கக் கூடியதல்ல.//

    இந்த அருமையான பாடலை எழுதியவர், முதன் முதல் கம்பீரமாக பாடியவர் யாரென்று எனக்குத் தெரியவில்லை.

    // இத்துடன் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய "எங்கே சுமந்து போறீரே - சிலுவையை நீர் எங்கே சுமந்து போறீரே" எனும் ராகமாலிகையாக அமைந்த மனதை உருக்கும் தனிப் பாடலை நான் கேட்டுள்ளேன்.
    இன்று வரை அதைத் தேடுகிறேன்; கிடைக்கவில்லை.
    கிடைத்தால் இடவும்; எனக்கும் ஒரு பிரதி மின்னஞ்சலில் இடவும்.johan.arunasalam@gmail.com //

    இந்த பாடல் குறித்த தேடும் ஆவலில் நீங்கள் அதிக ஆர்வமாக இருப்பதை GOOGLE ( TAMIL ) SEARCH மூலம் தெரிந்து கொண்டேன். தேடுங்கள் கிடைக்கும் என்றார். உங்கள் முயற்சி வீண் போகாது. இன்றும் என்னுடன் தொடர்பில் இருக்கும் சிறுவயது கால நண்பர்களையும், இங்குள்ள சர்ச்சுகளிலும் கேட்ட பின்னர் தகவல் தெரிவிக்கின்றேன்.

    ReplyDelete
  39. வணக்கம்
    ஐயா

    அருமையான தொகுப்பு வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  40. மறுமொழி > 2008rupan said...

    கவிஞர் ரூபன் அவர்களின் வாழ்த்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  41. நீலக்கடலின் ஓரத்தில் வரையும் உள்ள பாடல்கள் நானும் பாடியுள்ளேன்.
    உறவுகள், நண்பர்கள், அயலவர்கள் கிறிஸ்தவ மதத்தில் உள்ளனர்.(in srilanka.)
    எனக்கும் பழைய நினைவுகள் வந்தது.
    இப்போது இங்கு டெனிசில் கிறிஸ்தவப் பாடல்கள் பாடுகிறோம்.
    நான் இந்து. நல்ல பதிவு.
    மிக்க நன்றி.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்

    ReplyDelete
  42. மறுமொழி > kovaikkavi said...
    // நீலக்கடலின் ஓரத்தில் வரையும் உள்ள பாடல்கள் நானும் பாடியுள்ளேன்.//

    சகோதரி கவிஞர் வேதா. இலங்காதிலகம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    // உறவுகள், நண்பர்கள், அயலவர்கள் கிறிஸ்தவ மதத்தில் உள்ளனர்.(in srilanka.) எனக்கும் பழைய நினைவுகள் வந்தது.
    இப்போது இங்கு டெனிசில் கிறிஸ்தவப் பாடல்கள் பாடுகிறோம்.
    நான் இந்து. //

    எனக்கும் உறவின் முறைகள், நண்பர்கள், கிறிஸ்தவ மதத்தில் உள்ளனர். நானும் உங்களைப் போலவே மத நல்லிணக்கம் உடையவன்.

    // நல்ல பதிவு. மிக்க நன்றி. இனிய வாழ்த்து.//

    சகோதரிக்கு நன்றி!

    ReplyDelete