அப்போது நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நேரம். நாங்கள் வசித்த திருச்சி டவுன் பகுதியில் ஒரே பரபரப்பு. மக்கள் எல்லோரும் சீட்டுப் பணம் கட்ட முண்டியடித்துக் கொண்டு ஓடினார்கள். பேப்பரில் விளம்பரம் கிடையாது. ஒரு பிட் நோட்டிஸ் கிடையாது. எப்படி இந்த செய்தி முளைத்தது, யார் வந்து சொன்னார்கள் என்று அறிந்து கொள்ளவும் முடியவில்லை.அங்கங்கே ஒருவருக்கு ஒருவர் சொல்லி திருச்சி முழுக்க செய்தி பரவி பரபரப்பு அதிகமாகியது. இந்த சீட்டை நடத்தியவர் அலெக்ஸ் என்ற பெண்மணி. எனவே எல்லோரும் ”அலெக்ஸ் சீட்டு “ என்றே அழைத்தார்கள்.
இது பாத்திர சீட்டோ ஏலச் சீட்டோ அல்லது குலுக்குச் சீட்டோ கிடையாது. இது ஒரு புது மாதிரியான சீட்டு. தமிழ்நாட்டிலேயே திருச்சியில்தான் தொடக்கம் என்று நினைக்கிறேன். ஒரு பொருளுக்கு அந்த பொருளின் விலையை விட மிகமிகக் குறைவாக ஒரு விலையைச் சொல்லி ( மூன்றில் ஒரு பங்கு ) பணம் கட்டச் சொல்லுவார்கள். பணம் கட்டிய நாளிலிருந்து சில நாள் கழிந்ததும் பணம் கட்டிய ரசீதைக் காட்டியதும் அந்த பொருளைத் தந்துவிடுவார்கள். மேற்கொண்டு எதுவும் கட்ட வேண்டாம். அப்போதுதான் ஸ்டீல் சேர், ஸ்டீல் ஈசி சேர், ஸ்டீல் பீரோ, ஸ்டீல் கட்டில் என்று புதிதாக மக்களிடம் பரவலாகிக் கொண்டிருந்த சமயம். அந்த பொருட்களோடு பேன், டேபிள் பேன், சைக்கிள், ரேடியோ போன்றவற்றையும் அலெக்ஸ் அம்மாள் சீட்டில் தந்தார்கள். ஆரம்பத்தில் நடுத்தர மக்கள்தான் இதில் அதிக ஆர்வம் காட்டினார்கள். அதிக சீட்டுகள் சேர்ந்தார்கள்.
ஆரம்பத்தில் ஒருவாரத்தில் பொருட்கள் கிடைத்தது. அவ்வாறு வாங்கியவர்கள்
மேற்கொண்டும் வாங்க பல சீட்டுகளை கட்டினார்கள். அவர்களைப் பார்த்து மற்றவர்களும்
கட்டினார்கள். நாளுக்கு நாள் நிறையபேர் சேர்ந்தார்கள். பின்னர் ஒருவாரம் என்பதை பதினைந்து
நாட்கள் கழித்துதான் என்று சொன்னார்கள்.எங்கள் வீட்டில் என் அம்மா ஸ்டீல் ஈசி சேருக்கு பணம் கட்டி, சரியாக பதினைந்துநாள்
கழித்து வாங்கினார்கள். ( இன்னும் அந்த சேர் எங்கள் அப்பாவிடம் இருக்கிறது ) எனது
நண்பனின் வீட்டில் இரண்டு ஸ்டீல் சேர்கள் வாங்கினார்கள்.
ஒருநாள் நானும் எனது நண்பனும் அந்த சீட்டு ஆபிஸ் இருக்கும் இடத்தைப் பார்க்க நடந்தே
சென்றோம். அலெக்ஸ் அம்மாளின் சீட்டுக் கம்பெனி அப்போது திருச்சி தில்லை நகரில்
இருந்தது. அப்போதுதான் திருச்சி தில்லைநகர் உருவாகி இருந்த நேரம். அங்கொன்றும்
இங்கொன்றுமாய் வீடுகள். மெயின் ரோட்டில் வரிசையாய் தென்னங் கன்றுகள். இடத்தைக் கண்டுபிடிப்பது
ஒன்றும் சிரமமாய் இல்லை. அலெக்ஸ் சீட்டு என்றவுடனேயே வழி சொன்னார்கள். ஒரு பெரிய
வீட்டில் அந்த சீட்டுக் கம்பெனி இருந்தது. உள்ளே செல்ல முடியாதபடி மக்கள் வரிசை. சீட்டு முடிந்து பொருட்களை வாங்கியவர்கள்
கை ரிக்சாவிலும், தட்டு ரிக்சாவிலும் ஏற்றிக் கொண்டு இருந்தனர். சீட்டுப் பணம்
கட்ட ஒரு பெரிய வரிசை. வெளியே இருந்தபடியே ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தோம். அலெக்ஸ்
அம்மாள் கல்லூரி ஆசிரியை போன்ற மேக்கப் மற்றும் கெட்டப்பில் இருந்தார்.
கொஞ்சநாள் சென்றதும் காருக்கு சீட்டுப் பணம் கட்டலாம் என்று சொன்னார்கள். பணம்
கட்டிய நாளிலிருந்து ஒரு மாதமோ இரண்டு
மாதமோ ( சரியாக நினைவில் இல்லை ) கழித்து கார் கிடைக்கும் என்றார்கள். நிறையபேர்
கார் வாங்கும் ஆசையில் பல சீட்டுகளைக் கட்டினார்கள். மாதச் சம்பளம் வாங்குபவர்களும், அதிகாரிகளும், வசதி படைத்தவர்களும் என்று நிறையபேர் பணம் கட்டினார்கள்.
ஒருநாள் பணம் கட்டியவர்களுக்கு ஸ்டீல் சேர், ஸ்டீல் ஈசி சேர், ஸ்டீல் பீரோ,
ஸ்டீல் கட்டில் போன்றவற்றை சரியாகத் தரவில்லை என்று கலாட்டா. சீட்டுக் கம்பெனி
மூடப்பட்டதாக தகவல் வந்தது. பணம் கட்டியவர்கள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு
ஓடினார்கள். நாளிதழ்களில் செய்தியும் பலரது பேட்டியும் வந்தன. சிலர் போலீசில்
சொன்னார்கள். விசாரித்ததில் அலெக்ஸ் அம்மாள் வெளிநாடு சென்று விட்டதாக சிலரும்
சென்னைக்கு போய்விட்டதாவும் சொன்னார்கள். ஒன்றும் நடக்கவில்லை..
இதில் வேடிக்கை என்னவென்றால் அதே பெண்மணி சுமார் பத்து வருடங்களுக்குப் பிறகு
அதே கம்பெனியை தொடங்கினார். நான் படித்து முடிந்ததும் வங்கி வேலையில் சேர்ந்து
இருந்த நேரம். எனது அந்த நண்பன் பொன்மலை ரெயில்வேயில் இருந்தான். அவன் அலெக்ஸ்
அம்மாளிடம் பணம் கட்டும்போது என்னையும் அழைத்துச் சென்றான். ஏற்கனவே அந்த அம்மாள்
மோசடி செய்து இருப்பதால் வேண்டாம் என்று தடுத்தேன். அவனோ “ஆரம்பத்தில் ஓட
மாட்டார்கள். கொஞ்சநாள் கழித்துதான் ஓடுவார்கள் “ என்று சொல்லிவிட்டு ஏதோ ஒரு
பொருளுக்கு பணம் கட்டினான். நான் கடைசிவரை அதில் சேரவில்லை. நாங்கள் அந்த சீட்டுக்
கம்பெனிக்கு போனபோது முன்பு இருந்த கூட்டம் இல்லை. அலெக்ஸ் அம்மாள் அதே கல்லூரி ஆசிரியை போன்ற மேக்கப் மற்றும்
கெட்டப்பில் இருந்தார். பத்துவருடத்திற்கு முன்பு இருந்த இளமை இல்லை. ஆனாலும்
தைரியமான லேடிதான். இந்தமுறை போன தடவை ஏமாந்த மக்கள் முந்திக்கொண்டு போலீஸ்
ஸ்டேசன் சென்றனர். அலெக்ஸ் அம்மாள் கம்பெனி இழுத்து மூடப்பட்டது. ஆனால் யாருக்கும்
எதுவும் திரும்பவும் கிடைக்கவில்லை.
இப்போது விதம் விதமான சீட்டுக்கள். விதம் விதமான மோசடிகள். எல்லாவற்றிற்கும்
இந்த உலகில் இடம் உண்டு.
(
PICTURES : THANKS TO “ GOOGLE ” )
மோசடிகள் ஏதோ ஒரு வகையில் தொடர்ந்துகொண்டு இருக்கின்றந என்பது உண்மையே
ReplyDeleteஏமாறுகிறவர்கள் இருக்கிறவரைக்கும் ஏமாற்றுகிறவர்கள் இருப்பார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். இருந்தும் சிலர் ஏமாறத்தயாராக இருக்கிறார்கள் என்பதுதான் வேதனைக்குரியது. நல்ல பதிவு.
ReplyDeleteமிகவும் கஷ்ட நிலையில் அன்று இருந்த எங்கள் வீட்டிலும் ஒரு ஏழு ரூபாய் மட்டும் [இப்போது அது 700 ரூபாய்க்கு சமம்.] கட்டி ஏமாந்தார்கள்.
ReplyDeleteநாம் அவர்களை புரிந்து கொள்ளவில்லை
ReplyDeleteஎன்பதை தெளிவாகப் புரிந்து வைத்து
கொள்ளயடிக்கிறார்கள்
அதிக ஆசைப்பட்டவர்கள் அவதிப்படுகிறார்கள்
விழிப்புணர்வூட்டும் பகிர்வுக்கு நன்ரி
tha.ma 2
ReplyDeleteபேராசைதான் இதுக்கெல்லாம் காரணம். வேறென்ன சொல்ல?!
ReplyDeleteஇங்கே ஒருவர் தான் வைத்திருந்த நிறுவனத்தை விற்று ஒரு கோடி கட்டி ஏமாந்த கதைகளும் உண்டு.
ReplyDeleteஆசைக்கு எல்லையே இல்லை
என்னங்க இது ஆச்சரியமா இருக்கு. பத்து வருசத்துக்கு முன்னால ஏமாத்திட்டு ஓடினவங்க அதே இடத்துல அதே பேர்ல சீட்டு கம்பெனி நடத்தினாங்களா? திருச்சி மக்கள் அவ்வளவு நல்லவங்களா? நாலு பேர் புடிச்சி தர்ம அடி அடிச்சிருக்க வேணாம்....
ReplyDeleteஆனா ஒன்னுங்க. இந்த மாதிரி ஏமாத்தறவங்க எத்தன பேர் வந்தாலும் அவங்கக்கிட்ட ஏமாறுறதுக்கு நம்ம ஆளுங்க க்யூவுல நிப்பாங்க.
படங்களோட அருமையா சொல்லியிருக்கீங்க.
பணம் கட்டும் ஒவ்வொருவருக்கும் தெரியும் இது ஏமாத்துற கேஸ்தான்னு. தான் தப்பிச்சிடலாம், பின்னாடி கட்டுறவன் சாவுட்டுமே அப்படின்னு ஒரு நல்ல எண்ணத்துலதான் எல்லாரும் பணம் கட்டுவாங்கன்னு நினைக்கிறேன்.
ReplyDeleteஆமாங்க எவ்வளவு தான் செய்திகள் பார்த்தாலும் படிச்சாலும் இப்படி எதாவது ஒன்னுன்னா நம்ம மக்கள் ஓடிப்போய் ஏமாற தயாரா இருப்பாங்க. மிக நல்ல பகிர்வ.
ReplyDeleteஇதே போன்ற தொரு நிகழ்வு சென்னையில் நான் படித்துக்கொண்டிருந்த போது நிகழ்ந்தது...அங்கே நாங்கள் குடியிருந்த வீட்டின் உரிமையாளர் எப்படியும் ஏமாற்றப் போகிறார்கள் ...முன்னால் கட்டிய நாம் பொருளைப் பெற்றுக்கொள்ளலாம் என்றார்..தன்னலம் கருதும் மக்கள் இருக்கும்வரை இது போன்ற ஏமாற்றுக்காரர்கள் இருக்கத்தான் செய்வார்கள்....
ReplyDeleteமீண்டும் அதே இடத்தில சீட்டு கம்பெனி நடத்த முயன்ற அலேக்க்ஸ் அம்மாள் என்னைப் தைரியம் வியக்க வைக்கிறது ( அறிவற்ற செயல் என்றாலும் )
ReplyDeleteஏமாறுபவர்கள் இருக்கும் வரை
ReplyDeleteஏமாற்றுபவர்களுக்கு என்ன கவலை?
மறுமொழி > T.N.MURALIDHARAN said...
ReplyDelete// மோசடிகள் ஏதோ ஒரு வகையில் தொடர்ந்துகொண்டு இருக்கின்றது என்பது உண்மையே //
” சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாதது “ - என்று பாடுவதுபோல் “மோசடி எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாதது “ என்று பாட வேண்டும். சகோதரர் மூங்கிற் காற்று T N முரளிதரன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
மறுமொழி > வே.நடனசபாபதி said...
ReplyDelete// ஏமாறுகிறவர்கள் இருக்கிறவரைக்கும் ஏமாற்றுகிறவர்கள் இருப்பார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். இருந்தும் சிலர் ஏமாறத்தயாராக இருக்கிறார்கள் என்பதுதான் வேதனைக்குரியது. நல்ல பதிவு. //
நீங்கள் சொல்லும் உண்மை எக்காலத்தும் அழியாது இருக்கும் போலிருக்கிறது. வங்கி வேளாண் அதிகாரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDelete// மிகவும் கஷ்ட நிலையில் அன்று இருந்த எங்கள் வீட்டிலும் ஒரு ஏழு ரூபாய் மட்டும் [இப்போது அது 700 ரூபாய்க்கு சமம்.] கட்டி ஏமாந்தார்கள். //
திரு VGK அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி! உங்கள் வீட்டிலும், அலெக்ஸ் கம்பெனியால் நஷ்டம் என்பது ஆச்சரியம்தான். திருச்சியில், அந்த நேரத்தில் நிறையபேர் ஏதோ ஒரு வேகத்தில் அந்த சீட்டுக் கம்பெனியில் பணம் கட்டினார்கள். எங்கள் அம்மா பணம் கட்டியது வீட்டில் யாருக்கும் தெரியாது.
மறுமொழி > Ramani S said... ( 1, 2 )
ReplyDelete// நாம் அவர்களை புரிந்து கொள்ளவில்லை என்பதை தெளிவாகப் புரிந்து வைத்து கொள்ளயடிக்கிறார்கள்
அதிக ஆசைப்பட்டவர்கள் அவதிப்படுகிறார்கள் விழிப்புணர்வூட்டும் பகிர்வுக்கு நன்றி! //
நாம் புரிந்தும் புரியாதது போல்தான் இவ்விஷயங்களில் செயல்படுகிறோம். கவிஞர் ரமணி அவர்களின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!
மறுமொழி > ராஜி said...
ReplyDelete// பேராசைதான் இதுக்கெல்லாம் காரணம். வேறென்ன சொல்ல?! //
சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!
மறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said...
ReplyDelete// இங்கே ஒருவர் தான் வைத்திருந்த நிறுவனத்தை விற்று ஒரு கோடி கட்டி ஏமாந்த கதைகளும் உண்டு. ஆசைக்கு எல்லையே இல்லை //
இதுதான் பேராசை என்பது. ஜோதிஜி திருப்பூர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
மறுமொழி > டிபிஆர்.ஜோசப் said...
ReplyDelete// என்னங்க இது ஆச்சரியமா இருக்கு. பத்து வருசத்துக்கு முன்னால ஏமாத்திட்டு ஓடினவங்க அதே இடத்துல அதே பேர்ல சீட்டு கம்பெனி நடத்தினாங்களா? திருச்சி மக்கள் அவ்வளவு நல்லவங்களா? நாலு பேர் புடிச்சி தர்ம அடி அடிச்சிருக்க வேணாம்....//
டிபிஆர் ஜோசப் சார்! திருச்சி மக்கள் அன்றும் இன்றும் அமைதியானவர்கள்.
// ஆனா ஒன்னுங்க. இந்த மாதிரி ஏமாத்தறவங்க எத்தன பேர் வந்தாலும் அவங்கக்கிட்ட ஏமாறுறதுக்கு நம்ம ஆளுங்க க்யூவுல நிப்பாங்க. படங்களோட அருமையா சொல்லியிருக்கீங்க. //
நம்ம நாட்டில் எல்லாவற்றிற்கும் Q வில் வரச் சொல்லுவார்கள்.வங்கி அதிகாரி டிபிஆர் ஜோசப் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
மறுமொழி > Packirisamy N said...
ReplyDelete// பணம் கட்டும் ஒவ்வொருவருக்கும் தெரியும் இது ஏமாத்துற கேஸ்தான்னு. தான் தப்பிச்சிடலாம், பின்னாடி கட்டுறவன் சாவுட்டுமே அப்படின்னு ஒரு நல்ல எண்ணத்துலதான் எல்லாரும் பணம் கட்டுவாங்கன்னு நினைக்கிறேன். //
சார் அப்படி எல்லாம் ஒண்ணும் கிடையாது. இது ஒரு MASS PSYCHOLOGY . அதாவது வந்தவரை லாபம். இதை அந்த மோசடிக்காரர்கள் பணமாக்கிக் கொள்கிறார்கள்.
மறுமொழி > Sasi Kala said...
ReplyDelete// ஆமாங்க எவ்வளவு தான் செய்திகள் பார்த்தாலும் படிச்சாலும் இப்படி எதாவது ஒன்னுன்னா நம்ம மக்கள் ஓடிப்போய் ஏமாற தயாரா இருப்பாங்க. மிக நல்ல பகிர்வு //
சகோதரி கவிஞர் தென்றல் சசிகலா அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
மறுமொழி > ezhil said...
ReplyDelete// இதே போன்ற தொரு நிகழ்வு சென்னையில் நான் படித்துக்கொண்டிருந்த போது நிகழ்ந்தது...அங்கே நாங்கள் குடியிருந்த வீட்டின் உரிமையாளர் எப்படியும் ஏமாற்றப் போகிறார்கள் ...முன்னால் கட்டிய நாம் பொருளைப் பெற்றுக்கொள்ளலாம் என்றார்..தன்னலம் கருதும் மக்கள் இருக்கும்வரை இது போன்ற ஏமாற்றுக்காரர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.... //
எல்லா ஊரிலும் இதே டெக்னிக்கைப் பயன்படுத்தி ஏமாற்றி இருக்கிறார்கள். சகோதரி எழில் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
மறுமொழி > சீனு said...
ReplyDelete// மீண்டும் அதே இடத்தில சீட்டு கம்பெனி நடத்த முயன்ற அலேக்க்ஸ் அம்மாள் என்னைப் தைரியம் வியக்க வைக்கிறது ( அறிவற்ற செயல் என்றாலும் ) //
அவர்களுக்கு எல்லா மட்டத்திலும் ஆள் உண்டு. அந்த தைரியம்தான். வேறு என்னவாக இருக்கும்? சகோதரர் சீனுவின் கருத்துரைக்கு நன்றி!
மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...
ReplyDelete// ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களுக்கு என்ன கவலை? //
கலியுகக் கடவுள் அவதாரம் எடுத்து அழித்தால்தான் உண்டு. சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!
நல்ல கண்கட்டு வித்தை தான் இந்த மாதிரி வரும் சீட்டுக் கம்பெனிகள். நம் பலஹீனத்தைப் பயன்படுத்தும் கலை தெரிந்தவர்கள் இவர்கள்.
ReplyDeleteநல்ல எச்சரிக்கை பதிவு.
மறுமொழி >rajalakshmi paramasivam said... // நல்ல கண்கட்டு வித்தை தான் இந்த மாதிரி வரும் சீட்டுக் கம்பெனிகள். நம் பலஹீனத்தைப் பயன்படுத்தும் கலை தெரிந்தவர்கள் இவர்கள்.
ReplyDeleteநல்ல எச்சரிக்கை பதிவு. //
சகோதரி சொல்வதுபோல இது கண்கட்டு வித்தைதான். தங்கள் கருத்துரைக்கு நன்றி!
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்....
ReplyDeleteஆசை யாரை விட்டது. ஒவ்வொரு ஊரிலும் இதே போல சீட்டு விளையாட்டுகள் உண்டு. நெய்வேலியிலும் இது போல மோசடிகள் நடந்ததாக அம்மா சொல்லியதுண்டு....
மறுமொழி > வெங்கட் நாகராஜ் said... // ஆசை யாரை விட்டது. ஒவ்வொரு ஊரிலும் இதே போல சீட்டு விளையாட்டுகள் உண்டு. நெய்வேலியிலும் இது போல மோசடிகள் நடந்ததாக அம்மா சொல்லியதுண்டு.... //
ReplyDeleteஎல்லா ஊரிலும் ஏமாறுபவர்களும் ஏமாற்றுபவர்களும் இருக்கும் வரை இவைகள் தொடரும். சகோதரரின் கருத்துரைக்கு நன்றி!
ReplyDeleteஇதைப் படிக்கும்போது எனக்கும் நிகழ்ச்சிகள் நினைவுக்கு வருகிறது. நல்ல வேளைஇதில் ஏதோ மோசடி உள்ளது தெரிந்தோ என்னவோ நான் ஏமாறவில்லை.. பேராசை பெரு நஷ்டம்.!
மறுமொழி > G.M Balasubramaniam said...
ReplyDeleteஅய்யா GMB அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
இங்கு டென்மார்க்கிலும் இந்த மோசடி தான். சுவையான ஏமாற்றுவழி தான். உலகமெங்கும் இதே குளறுபடி தான்-.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
மறுமொழி> kovaikkavi said...
ReplyDelete// இங்கு டென்மார்க்கிலும் இந்த மோசடி தான். சுவையான ஏமாற்றுவழி தான். உலகமெங்கும் இதே குளறுபடி தான் //
சகோதரி கவிஞர் வேதா. இலங்காதிலகம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுகிறவர்களும் இருப்பார்கள். பேராசை பெருநஷ்டம்
ReplyDelete(ஏ) மாற்று வழிகளில் இதுவும் ஒன்று
ReplyDeleteமறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...
ReplyDeleteஆசிரியரின் கருத்துரைக்கு நன்றி!
மறுமொழி > கவியாழி கண்ணதாசன் said...
ReplyDeleteகவிஞரின் கருத்துரைக்கு நன்றி!