Saturday, 17 August 2013

நித்திய கல்யாணி ( கல்லறைப் பூக்கள் )



நான் எனது தொடக்கக் கல்வியை கிறிஸ்தவ மெஷினரி நடத்தும் ஒரு பள்ளியில் படித்தேன். அந்த பள்ளியில் ஒரு சிறிய தோட்டம். தோட்டத்திற்குள் வாசலில் வெள்ளை மற்றும்  இளஞ் சிவப்பு நிறங்களில் அல்ங்கார வண்ணபூக்கள். பள்ளியில் அவற்றை கல்லறைப் பூக்கள் என்று சொன்னார்கள்.. சிலர் இதனை சுடுகாட்டுப் பூ என்றும் சொன்னார்கள்.( பின்னாளில் இதன் பெயர் நித்திய கல்யாணி என்று தெரிந்து கொண்டேன் ) எங்கள் பள்ளிக்கு அடுத்து இருந்தது கிறிஸ்தவர்கள் கல்லறை. பள்ளிக்கும் கல்லறைக்கும் நடுவில் ஒரு சுவர் மட்டுமே. சுவரை ஒட்டி வரிசையாக நெட்டிலிங்க மரங்கள். சில சமயம் நானும் எனது நண்பர்களும் அவற்றின் மீது ஏறி அருகிலுள்ள கல்லறையை எட்டிப் பார்ப்போம். அங்கு இந்த பூச்செடிகள் அதிகம் இருந்தன.


கல்லறைப் பூக்கள் பெயர்க் காரணம்:

இந்து மதத்தில் இறந்தவர்களைப் புதைத்தவுடன் மண்போட்டு மேடாக்கி மண்சமாதி செய்து விடுவார்கள். பால் ஊற்றும் சடங்கின்போதோ அல்லது 16 - ஆம் நாள் காரியத்தின் போதோ அந்த சமாதியின் தலைமாட்டில் ஒரு மரக்கன்றை நட்டு வைப்பார்கள். தமிழ்நாட்டில் கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு கல்லறையிலும் மரம் வைப்பதில்லை. பெரும்பாலும் இந்த கல்லறைப் பூக்கள் செடியைத்தான் அதிகம் வைத்தனர். பெரும்பாலும் மண்ணால் அமைந்த கல்லறைகளிலும், கல்லறை தோட்டங்களிலும் இந்த செடிகள் அழகாக பூத்துக் குலுங்குவதைக் காணலாம். (இப்போது கல்லால் அல்லது சிமெண்டினால் கட்டுகிறார்கள்) எனவே நம்நாட்டு மக்கள் இந்த நித்தியகல்யாணிப் பூக்களை கல்லறைப் பூக்கள் அல்லது சுடுகாட்டுப் பூக்கள்  என்று அழைக்கின்றனர்.


எங்கள் வீட்டில்:

எங்கள் வீட்டு மனையில் முன்புறம் பின்புறம் இரண்டிலும் இடம் விட்டு வீடு கட்டியுள்ளோம். முன்புறம், சில மாதங்களுக்கு முன்பு,  அழகுக்காக இந்த நித்திய கல்யாணிச் செடிகளை நட்டுவைத்தேன். அவை பலவாகி அடம்பலாக இருந்தன. அந்த செடிகளில்  வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு வண்ணப் பூக்களை அழகாக பூத்துக் குலுங்கின. ஒருநாள் இரவு எங்கள் வீட்டுநாய் “ஜாக்கி  ரொம்பவும் வித்தியாசமாக குரைத்துக் கொண்டே இருந்தது. வெளி விளக்கைப் போட்டுவிட்டு வெளியே எட்டிப்பார்த்தால் ஜாக்கி அந்த செடிகளைப் பார்த்தே குரைத்துக் கொண்டிருந்தது. அங்கே சுமாரான நீளமுள்ள பெரிய நல்ல பாம்பு ஒன்று படம் எடுத்தபடி இருந்தது. நித்தியகல்யாணி செடிகளின் நெருக்கத்தில் அது செடிகளோடு செடியாய் இருந்தது. உடனே வீட்டில் இருந்த ஒரு மூங்கில்கழியை எடுத்து செடியை அலசியபோது அது ஓடி விட்டது. ( இந்த மூங்கில்கழி, கிராமத்து உறவினர் ஒருவர் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்திருந்த போது எங்களுக்காக வாங்கித் தந்தது). அடுத்தநாள் நித்தியகல்யாணி செடி ஒன்றை மட்டும் வைத்துவிட்டு மற்றவற்றை வெட்டிவிட்டேன்.




 
( எங்கள் வீட்டில் அப்போது இருந்த நித்திய கல்யாணி செடிகள் பூக்களுடன்) 


சில குறிப்புகள்:       

கல்லறைப் பூக்கள் எனப்படும் நித்தியகல்யாணியின்  பிறப்பிடம் மடகாஸ்கர் தீவுகள் ஆகும். இதற்கு Catharanthus roseus என்று பெயர். பின்பு அங்கிருந்து மற்ற நாடுகளுக்கு பரவியது. நித்தியகல்யாணி, சுடுகாட்டுப் பூ, கல்லறைப் பூ, மதுக்கரை, மறுக்கலங்காய் என்று தமிழில் அழைக்கின்றனர். தமிழ்நாட்டில் இது அழகுக்காக வளர்க்கப்படுகிறது. இந்த நித்திய கல்யாணி செடியிலிருந்து இரத்தப் புற்றுநோய்க்கான மருந்தும் சில ரசாயனப் பொருட்களும்  தயாரிக்கப்படுகின்றன.. இதனால் இதனை வியாபார நோக்கிலும் சில் இடங்களில்அதிக அளவில் பயிரிடுகிறார்கள். இது எல்லா இடங்களிலும் தானாகவே வளரும். எனவே அதிக முயற்சியோ செலவோ இல்லாமல் லாபம் பார்க்கலாம். பாட்டி வைத்தியத்திலும் இதன் பயன்பாடு உள்ளது. (தகவலுக்கு நன்றி: விக்கிபீடியா )


ஒரு கேள்வி:

சுடுகாட்டுப் பூ, கல்லறைப்பூ என்று பெயரைச் சொல்லும்போது என்னவோ போல் இருக்கிறதே? வீட்டில் அழகுக்காக இதனை வைக்கலாமா? நமது நாட்டில் பல விஷயங்கள் மூடநம்பிக்கையின் காரணமாக இப்படித்தான் பார்க்கப்படுகின்றன. ஒப்பு உவமை இல்லாத ஒப்பிலியப்பன், உப்பு உணவு இல்லாத உப்பிலியப்பன் ஆக்கப்பட்டான். இந்த செடிக்கு இங்கிலீஷ்காரன் ஒரு பெயர் வைத்தான். ந்ம்ம ஊரில் நித்தியகல்யாணி ( தினமும் பூத்து குலுங்குவதால் ) என்றார்கள். அதன் அழகையும் பயன்பாட்டையும் நாம் பார்ப்போம். எனது கவிதை ஒன்று இங்கே

 
கல்லறைப்பூக்கள் (கவிதை)

நேற்றுவரை உன்னோடு - நெருங்கி
இருந்தவர்கள் எல்லோரும்
இன்று எங்களை மட்டும் 
விட்டுச் சென்றனர் கண்ணீரோடு!
கவலைப் படாதே மனமே!
அவர்களும் வருவார்கள்! 
ஒருநாள் அன்போடு!
நாங்கள் என்றும் உன்னோடு!
 


 


 





28 comments:

  1. நித்திய கல்யாணி பூக்களுடைய வாசனை பாம்புகளை ஈர்க்கும் என்று சொல்வார்கள். அதனால்தான் அவற்றை வீடுகளில் வளர்ப்பதில்லை. கல்லறைகளிலும் அவை தாமாகவே எப்படியோ முளைத்துவிடுகின்றன.

    ஆனால் அவற்றை கல்லறைப் பூ என்று சொல்லி கேள்விப்பட்டதில்லை. ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு பழக்கம்.

    ReplyDelete
  2. Vinca rosea (பழைய பெயர் ) எனப்படும் இந்த ‘நித்ய கல்யாணி’ ஒரு மருத்துவக் குணம் கொண்ட செடி. கேன்சரை குணப்படுத்த உதவும் மருந்தை தயாரிக்க இந்த தாவரம் பயன்படுத்தப்படுகிறது. இதை ஏன் சுடுகாட்டு செடி என சொல்கிறார்கள் எனத் தெரியவில்லை. ஒருவேளை இந்த செடியில் உள்ள மருந்தை உபயோகப்படுத்தினால் சுடுகாடு செல்வதை தள்ளிப்போடலாம் என்பதனாலோ என்னவோ! இதை வளர்த்தால் பாம்பு வருமா எனத் தெரியவில்லை. இதை மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்காக தென் தமிழகத்தில் பல ஏக்கர் நிலங்களில் பயிரிடுகிறார்கள்.
    கவிதை அருமை. பதிவுக்கு நன்றி!

    ReplyDelete
  3. நித்தம் பூக்கிற செடியாதலால்
    கல்லறையில் வைத்தால் தினமும் பூவைத்தது
    போலிருக்கும் என நினைத்து அப்படி அந்தச் செடியை
    வைத்துப் பழக்கி இருப்பார்களோ
    ஒப்பு உயர்வு இல்லா உப்பிலியப்பன் விளக்கம்
    எனக்குப் புதியதகவல்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete

  4. எனது முதல் கணனி அனுபவம் எழுதியிருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது வந்து படிக்கவும். இணைப்பு:

    http://thiruvarangaththilirunthu.blogspot.in/

    நன்றி

    ReplyDelete
  5. நித்தியகல்யாணி மலர்களுக்கு இப்படி ஒரு பெயர் இருப்பதே தெரியாது.

    கல்லறைப்பூ என்ற பெயர் இருந்தாலும், புற்றுநோய்க்கு மருந்தாகிறது என்ற செய்தி சந்தோஷத்தைக் கொடுக்கிறது.

    ReplyDelete
  6. கல்லறையில் பூக்கும் பூ, மனிதர்கள் கல்லறைக்குப் போகாமல் காக்கம் மருந்து தயாரிக்கப் பயன்படுவது விந்தைதான். நன்றி ஐயா

    ReplyDelete
  7. மறுமொழி > டிபிஆர்.ஜோசப் said...
    //நித்திய கல்யாணி பூக்களுடைய வாசனை பாம்புகளை ஈர்க்கும் என்று சொல்வார்கள். அதனால்தான் அவற்றை வீடுகளில் வளர்ப்பதில்லை. //

    ஒரு புதிய தகவல் சொன்னதற்கு நன்றி! இப்போது எங்கள் வீட்டில் ஒரே ஒரு செடி மட்டும்தான் உள்ளது.

    // கல்லறைகளிலும் அவை தாமாகவே எப்படியோ முளைத்துவிடுகின்றன. //

    ஒரு செடி விரைவில் பல்வாக பல்கி விடும்.

    // ஆனால் அவற்றை கல்லறைப் பூ என்று சொல்லி கேள்விப்பட்டதில்லை. ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு பழக்கம். //

    எனது சிறுவயதில் எங்கள் பக்கம் அப்படித்தான் சொன்னார்கள். இந்தகாலத்துப் பிள்ளைகளுக்கு இந்த பெயர் தெரியுமா என்று தெரியவில்லை.

    ReplyDelete
  8. மறுமொழி > வே.நடனசபாபதி said...

    // Vinca rosea (பழைய பெயர் ) எனப்படும் இந்த ‘நித்ய கல்யாணி’ ஒரு மருத்துவக் குணம் கொண்ட செடி. கேன்சரை குணப்படுத்த உதவும் மருந்தை தயாரிக்க இந்த தாவரம் பயன்படுத்தப்படுகிறது. //
    வேளாண் அதிகாரியாக் இருந்த உங்களுக்கு, இந்தச் செடி கேன்சரை குணமாகக உதவும் விவரங்கள் அதிகமாகத் தெரிந்து இருக்கும். எனவே இதுபற்றி அதிக விவரங்களோடு ஒரு பதிவினைத் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.


    // கவிதை அருமை. பதிவுக்கு நன்றி! //

    உங்களின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!


    ReplyDelete
  9. மறுமொழி > Ramani S said... ( 1, 2 )
    // நித்தம் பூக்கிற செடியாதலால் கல்லறையில் வைத்தால் தினமும் பூவைத்தது போலிருக்கும் என நினைத்து அப்படி அந்தச் செடியை வைத்துப் பழக்கி இருப்பார்களோ //
    நீங்கள் சொல்லிய பிறகுதான் எனக்கும் இப்படியும் இருக்கலாம் எனத் தோன்றுகிறது.
    // ஒப்பு உயர்வு இல்லா உப்பிலியப்பன் விளக்கம் எனக்குப் புதியதகவல் //
    கும்பகோணம் அருகில் உள்ள உப்பிலியப்பன் கோயில் பற்றிய விவரம் இது.
    கவிஞரின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!

    ReplyDelete
  10. மறுமொழி > Ranjani Narayanan said... ( 1 )
    // எனது முதல் கணனி அனுபவம் எழுதியிருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது வந்து படிக்கவும். //

    சகோதரிக்கு நன்றி! படித்து கருத்துரையும் தந்துள்ளேன்.




    ReplyDelete
  11. மறுமொழி > Ranjani Narayanan said... ( 2 )

    //நித்தியகல்யாணி மலர்களுக்கு இப்படி ஒரு பெயர் இருப்பதே தெரியாது. //

    நான் பழகிய கிறிஸ்தவர்கள் மத்தியில் கல்லறைப் பூக்கள் என்றுதான் சொல்கிறார்கள்.

    // கல்லறைப்பூ என்ற பெயர் இருந்தாலும், புற்றுநோய்க்கு மருந்தாகிறது என்ற செய்தி சந்தோஷத்தைக் கொடுக்கிறது.//

    ஒரு நல்ல செடிதான்.
    கருத்துரை சொன்ன சகோதரிக்கு நன்றி!

    ReplyDelete
  12. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...
    // கல்லறையில் பூக்கும் பூ, மனிதர்கள் கல்லறைக்குப் போகாமல் காக்கம் மருந்து தயாரிக்கப் பயன்படுவது விந்தைதான். நன்றி ஐயா //
    விந்தையான விஷயம்தான். இன்னும் இதுபற்றி அறிய வேண்டும். கரந்தை ஆசிரியரின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  13. மறுமொழி > கே. பி. ஜனா... said...
    // புதிய தகவல்கள்! //
    எழுத்தாளர் கே பி ஜனா அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  14. இதில் உள்ள பல் செய்திகள் நான் இதுவரை அறியாதது.

    இந்தப்பூக்கள் உள்ள செடிகளை நிறைய பார்த்துள்ளேன்.

    எங்கள் அலுவலகமான BHEL Factory + Township இல் இவை நிறைய உண்டு.

    பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.

    ReplyDelete
  15. இந்தப் பூக்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் பெயர் இப்பொழுதுதான் தெரிந்துகொண்டேன். தாழம்பூ வாசனைக்குத்தான் நாகம் வருமென்று கேள்விப்பட்டிருக்கிறேன். தாழம்பூ, மருக்கொழுந்து போன்றவைகளின் நினைவே மணக்கிறது.

    ReplyDelete
  16. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...
    //இதில் உள்ள பல் செய்திகள் நான் இதுவரை அறியாதது.
    இந்தப்பூக்கள் உள்ள செடிகளை நிறைய பார்த்துள்ளேன்.
    எங்கள் அலுவலகமான BHEL Factory + Township இல் இவை நிறைய உண்டு. பகிர்வுக்கு நன்றிகள், ஐயா. //

    அன்புள்ள VGK அவர்களின் கருத்துரைக்கு நன்றி! திருச்சியிலிருந்து தஞ்சை வரை இந்த செடி பரந்து கிடக்கிறது.

    ReplyDelete
  17. மறுமொழி > Packirisamy N said...

    // இந்தப் பூக்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் பெயர் இப்பொழுதுதான் தெரிந்துகொண்டேன். தாழம்பூ வாசனைக்குத்தான் நாகம் வருமென்று கேள்விப்பட்டிருக்கிறேன். தாழம்பூ, மருக்கொழுந்து போன்றவைகளின் நினைவே மணக்கிறது. //

    ஒவ்வொருவரும் அவரவர் ஊர்களில் பார்த்து இருக்கலாம். பெயர் மட்டும் வேறாக இருந்திருக்கும். சகோதரரின் கருத்துரைக்கு நன்றி! உங்கள் வலைப் பக்கம் வரவேண்டும்.

    ReplyDelete
  18. நித்ய கல்யாணி பூ புற்றுநோய்க்கு மருந்தாகும் என்கிற செய்தி காதில் தேன் வந்து பாய்வதைப் போன்ற விஷயமாகும்.

    நித்ய கல்யாணிப் பூவைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.
    நன்றி.

    ReplyDelete
  19. மறுமொழி > rajalakshmi paramasivam said...

    சகோதரியின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete

  20. இம்மாதிரிப் பூக்களை எங்கள் வீட்டுத்தோட்டத்திலும் கண்டதுண்டு, பெயர் தெரியாது. அவற்றுக்கு மருத்துவக் குணம் உண்டு என்று சிலர் சொல்லக் கேள்வி. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  21. மறுமொழி > G.M Balasubramaniam said...

    நிறையபேர் இந்தசெடியைப் பார்த்து இருக்கிறார்கள். ஆனால் பெயர்தான் தெரியவில்லை என்கிறார்கள். GMB அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!


    ReplyDelete
  22. காலையில் எழுந்தவுடன் இது போல பூக்களின் மேல் கண் விழிப்பது என்பது கொடுத்து வைத்த ஆத்மாக்களுக்கு மட்டுமே கிட்டும்.

    ReplyDelete
  23. இதை நாங்கள் பட்டிப்பூ என்று கூறுவோம். நித்திய கல்யாணி என்பது கொத்துக் கொத்தாக வேலியில் தொங்கும் வெள்ளை - இளஞ்சிவப்பு - சிவப்பு நிறங்களில் உள்ளது. நல்ல தகவல்கள் நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  24. மறுமொழி> ஜோதிஜி திருப்பூர் said...

    //காலையில் எழுந்தவுடன் இது போல பூக்களின் மேல் கண் விழிப்பது என்பது கொடுத்து வைத்த ஆத்மாக்களுக்கு மட்டுமே கிட்டும். //

    சகோதரர் ஜோதிஜி திருப்பூர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி! ஒவ்வொரு நாளும் புத்தம் புது மலர்கள். அவை யாருக்காக பூத்து யாருக்காக உதிர்கின்றன?

    ReplyDelete
  25. மறுமொழி> kovaikkavi said...

    // இதை நாங்கள் பட்டிப்பூ என்று கூறுவோம். நித்திய கல்யாணி என்பது கொத்துக் கொத்தாக வேலியில் தொங்கும் வெள்ளை - இளஞ்சிவப்பு - சிவப்பு நிறங்களில் உள்ளது. நல்ல தகவல்கள் நன்றி. வேதா. இலங்காதிலகம். //

    நீங்கள் சொல்லும் நித்திய கல்யாணி பூ வேறு என்று நினைக்கிறேன். ஏனெனில் இங்கே குறிப்பிடப்பட்ட நித்திய கல்யாணி ஒரு பெரிய செடி ஆகும். வேலிச்செடியாக வைக்கப்படுவதில்லை.
    சகோதரி கோவைக்கவி, வேதா. இலங்காதிலகம். அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  26. இந்தப் பூவை எங்கள் ஊரில் (ஈழம்) பட்டிப்பூ என்றுதான் அழைப்போம். வீட்டில் வளர்க்கும் பூஞ்செடிகளோடுதான் வளர்க்கிறோம். கண் நோயால் ( மெட்ராஸ் ஐ ) பாதிக்கப் பட்டவர்கள், இரவில் இந்தப் பூவை தண்ணீரில் ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரில் பூவை தொட்டு கண்மீது தடவி கழுவி வர கண் நோய் விரைவில் குணமாகும்.

    ReplyDelete
    Replies
    1. வன்னி ரோஜா அவர்களின் கருத்துரைக்கு நன்றி. விடுபட்டுப் போன தாமதமான இந்த மறுமொழிக்கு மன்னிக்கவும்.

      Delete