Saturday, 20 April 2013

வீட்டு நிலையின்மேல் கீதோபதேசம் படம் வைக்கலாமா?எங்கள் வீட்டுக்கு வந்த நெருங்கிய உறவினர் ஒருவர் (அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வருபவர்தான்) சென்றமுறை வந்து சென்றபின் செல்போனில் சொன்ன கருத்து இது. “ நீங்கள் உங்கள் வீட்டு நிலைப்படியில், மகாபாரதத்தில் போர்க்களத்தில் கிருஷ்ணன் அர்ச்சுனனுக்கு உபதேசம் செய்யும் காட்சியை வைத்து இருக்கிறீர்கள். இதுமாதிரி படங்களை வீட்டில் வைக்க மாட்டார்கள். அதனால்தான் உங்களுக்கு சில கஷ்டங்கள் வருகின்றன. எனவே அதனை எடுத்துவிட்டு  வேறு படத்தை வையுங்கள்  என்பதுதான். அதற்குக் காரணம் அப்போது எனக்கு ஏற்பட்ட சில பிரச்சினைகள்தான். அந்த உறவினர் ஒவ்வொன்றுக்கும் நாள், நட்சத்திரம், சகுனம் என்று எதற்கெடுத்தாலும்  ஜோதிடர்களிடம் அடிக்கடி செல்பவர். எனக்கு இதுமாதிரி விஷயங்களில் அதிகம் ஈடுபாடு கிடையாது. எனவே அவர் சொன்னபடி நான் எதுவும் செய்யவில்லை. மேலும் நாங்கள் வீடு கட்டத் தொடங்கி வைத்த முதல் நிலை அது.

எங்கள் வீட்டு நிலைப்படியில் கீதா உபதேசம் வந்த கதை:


  நான் படித்த திருச்சி தேசிய உயர்நிலைப் பள்ளியில் எங்களுக்கு அப்போது தலைமை ஆசிரியராக இருந்த பூவராக அய்யங்கார் அவர்கள் எங்கள் வகுப்பிற்கு வந்தபோது, ஒரு மாணவனிடம் மகாபாரதத்தைப் பற்றி ஒரு கேள்வி கேட்டார். அவனுக்கு மட்டுமல்ல அங்குள்ள யாருக்குமே பதில் சொல்லத் தெரியவில்லை. உடனே அவர் பள்ளிக்கூடம் விட்டதும் மாணவர்களுக்கு மாலையில் மகாபாரதம் சொல்ல வேண்டும் என்று பள்ளியில் பணியாற்றிய தமிழ் ஆசிரியர் ஒருவரை ஏற்பாடு செய்தார். அந்த தமிழாசிரியர் சமஸ்கிருத புலமை உடையவர். வடகலை அய்யங்கார். அவரும் தினமும் வகுப்புகள் முடிந்ததும் மாலையில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் மகாபாரதக் கதையை இடையிடையே சமஸ்கிருத சுலோகங்களோடு சுவாரஸ்யமாய் சொன்னார். விடுமுறை நாட்கள் தவிர இரண்டு வாரம் தொடர்ந்து சொல்லப்பட்டது. நான் கதை கேட்கும் ஆர்வத்தில் தவறாமல் எல்லா நாட்களும் சென்று வந்தேன். அன்றிலிருந்து எனக்கு மகாபாரதக் கதையில் ஈடுபாடு ஏற்பட்டது.

போர்க்களத்தில் எதிரிகளாக எதிரில் நிற்கும் உறவினர்களை நினைத்து அர்ச்சுனன் போர்புரிய விரும்பாது, வில்லையும் அம்பையும் அம்பறாத்துணியையும் கீழே வைத்துவிடுகிறான்.  அப்போது கிருஷ்ணன் தர்மம், யுத்தம் என்று வந்து விட்டால், எதிரில் நிற்பவன் உறவினன்,ஆசிரியன் என்று பார்க்கக் கூடாது. கடமையைச் செய். “ என்று அர்ச்சுனனுக்கு உபதேசம் சொன்ன காட்சி எனது மனதில் பதிந்து விட்டது. அதன் பிறகு கல்லுரி நாட்களில் ராஜாஜி எழுதிய மகாபாரதம், அ.லெ. நடராஜன் மொழிபெயர்த்த மகாபாரதம் ( நான்கு பாகங்கள்) படித்தேன். என்னைப் பொருத்தவரை மகாபாரதம் என்பது அனைவரும் படிக்க வேண்டிய ஒரு இதிகாசம். குறிப்பிட்ட ஒரு மதத்திற்கு மட்டும் சொந்தமானதாக நினைக்கக் கூடாது. அதில் வரும் பாத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒரு கருத்தை உணர்த்துவன.  மகாபாரதத்தில் பல கிளைக் கதைகளும் நீதிக் கருத்துக்களும் உள்ளன. பக்தி உணர்வோடு படிப்பவர்கள் அல்லது ஒரு இதிகாசம் (MYTHOLOGY) என்ற முறையில் படிப்பவர்கள் என்று எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். விமர்சனம் எதில்தான் இல்லை?

வங்கிப் பணியில் சேர்ந்து  சில ஆண்டுகள் கழிந்து, வீடு கட்டத் தொடங்கியவுடன் நிலை வைக்கும் நேரம் அது. நிலைக்கு மேல் வைக்கும் கார்விங் ( CARVING) எதை வைப்பது என்பதனை தேர்வு செய்வதற்காக நானும் கட்டட ஆசாரியும் ஒரு தொழிற்கூடம் சென்றோம். அஙுகு தாமரை , கஜலட்சுமி, ராஜலட்சுமி, சூரியன் என்று பல கார்விங் பணிகளைக் காட்டினார்கள். அப்போது அதில் ஒன்று  மாணவப் பருவத்தில் எனது மனதில் பதிந்த  கீதா உபதேசம்”. அங்கிருப்பவர்களிடம் இதை வீட்டில் வைக்கலாமா? என்று கேட்டேன் . தாராளமாக வைக்கலாம். அதனால்தான் கார்விங் செய்து விற்பனைக்கு  வைத்துள்ளோம் என்றார்கள். எங்கள் கட்டட  ஆசாரி அவர்களும்  வைக்கலாம் என்றார். மேலும் பல பிரபல ஓட்டல்களில், காசாளர் ( CASHIER) இருக்கும் இடத்தில் இந்த படத்தை பார்த்துள்ளேன். எனவே அந்த கீதா உபதேசம் கார்விங் பலகைக்கு ஆர்டர் கொடுத்தேன்.  இவ்வாறாக எங்கள் வீட்டு நிலைப்படியில் கீதா உபதேசம் காட்சி வந்தது

 இந்த வீட்டிற்கு வந்த பிறகு எனக்கும் எனது மனைவிக்கும் (மத்திய அரசு ஊழியர்) பதவி உயர்வு வந்தது. எனது மகள் எம்.எஸ்சி முடித்து வங்கிப் பணிக்கு சென்றார்; அவருக்கு. திருமணமும் நடைபெற்றது. அடுத்தவர்களுக்கு உதவும் வகையில் சேமிப்பும் இருந்தது. மகனும் கல்லூரிக்கு சென்று வருகிறார்.

யார் மனதில்தான் கவலை இல்லை?

வாஸ்து என்ற பெயரில் சிலர் ஏதேதோ சொல்லுகிறார்கள்.  காவி உடை அணிந்த முருகன், சனீஸ்வரன், ருத்ரதாண்டவ நடராசர் போன்ற படங்களையும் வைக்கக் கூடாது என்கிறார்கள். எனது கிறிஸ்தவ நண்பர்கள் சிலர் தங்கள் வீடுகளில் இருதய ஆண்டவர் படம் , இயேசு சிலுவையில் உள்ள படம் போன்றவற்றை வைப்பதில்லை. எனக்கு இவைகளில் நம்பிக்கை இல்லை.

ஒவ்வொருவர் மனதிலும் ஒரு கவலை இருக்கத்தான் செய்கிறது.  சிலருடைய கவலை வெளியில் தெரிந்து விடுகிறது. பலருடைய கவலை வெளியில் தெரிவதில்லை. எல்லோரும் சந்தோஷமாக இருப்பதாக காட்டிக் கொள்கிறார்கள். அவ்வளவுதான். நமக்கும் மேலே ஏதோ ஒரு சத்தியத்திற்கு கட்டுப்பட்டு எல்லாம் இயங்கி வருகின்றன. நமது எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைப்பதில்லை. நீங்கள் வீட்டில் எந்த படத்தை வைத்தாலும் வைக்காவிட்டாலும் வருவது வந்துதான் தீரும். அதனை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம்தான் நமக்கு வேண்டும். படம் வைப்பது  என்பது அவரவர் நம்பிக்கையையும் ஆர்வத்தையும் பொறுத்தது. 

கீதாசாரம்:

இப்போது “கீதாசாரம்என்ற தலைப்பில் கீதோபதேசம் காட்சி வண்ணப் படமாக பல்வேறு வடிவங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. நிறையபேர் வீட்டில் இந்த தத்துவத்தைக் காணலாம். சிலர் சட்டைப் பையிலும், கைப் பைகளிலும் இதனை வைத்துக் கொள்கிறார்கள்.34 comments:

 1. உங்களுக்குப் பிடித்திருக்கிறது... அதனால் வைத்துக் கொள்வதில் தப்பில்லை என்றே எனக்கும் தோன்றுகிறது.


  ReplyDelete
 2. ungal mudive sari
  .vaazhththukkaLudan...

  ReplyDelete
 3. //
  ஒவ்வொருவர் மனதிலும் ஒரு கவலை இருக்கத்தான் செய்கிறது. சிலருடைய கவலை வெளியில் தெரிந்து விடுகிறது. பலருடைய கவலை வெளியில் தெரிவதில்லை. எல்லோரும் சந்தோஷமாக இருப்பதாக காட்டிக் கொள்கிறார்கள். அவ்வளவுதான். நமக்கும் மேலே ஏதோ ஒரு சத்தியத்திற்கு கட்டுப்பட்டு எல்லாம் இயங்கி வருகின்றன. நமது எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைப்பதில்லை. நீங்கள் வீட்டில் எந்த படத்தை வைத்தாலும் வைக்காவிட்டாலும் வருவது வந்துதான் தீரும். அதனை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம்தான் நமக்கு வேண்டும். படம் வைப்பது என்பது அவரவர் நம்பிக்கையையும் ஆர்வத்தையும் பொறுத்தது. //

  தங்களின் இந்தக்கருத்தே கீதாச்சாரம் போலத்தான் உள்ளது. நல்லதொரு பகிர்வு. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.

  ReplyDelete

 4. நலம்தானே. ? உங்கள் சிந்தனை தெளிவாக இருக்கிறது. இதிகாசங்களை நான் புகழ் பெற்ற கதைகளாகவே எண்ணுகிறேன். அவற்றில் பல நல்ல செய்திகள் இருக்கின்றன. அதேபோல் பல நிகழ்வுகளும் என் மனதுக்கு ஒவ்வாததாக இருக்கிறது. வீட்டின் நிலை அழகாக இருக்க தேர்ந்தெடுத்ததை ஒரு மர சிற்பமாகவே எண்ணினால் எந்தக் குழப்பமும் இல்லை. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. இது அவரவர் நம்பிக்கையை பொறுத்தது என்பதுதான் எனது எண்ணமும்.

  இன்பமும் துன்பமும் கலந்து வருவதுதான் வாழ்க்கை எதற்கு எடுத்தாலும் வாஸ்து என முடிச்சுப்போடுவதுதான் தவறாகத்தெரிகிறது..

  ReplyDelete
 6. REPLY TO > வெங்கட் நாகராஜ் said...

  உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 7. REPLY TO > Ramani S said...

  கவிஞரின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! இன்னும் தங்கள் வெளியூர்ப் பயணம் முடியவில்லை ( ஆங்கில எழுத்துக்களில் தமிழ் பின்னூட்டம் இருப்பதால் )என்று நினைக்கிறேன்.


  ReplyDelete
 8. REPLY TO > வை.கோபாலகிருஷ்ணன் said...

  VGK அவர்களுக்கு வணக்கம்.

  // தங்களின் இந்தக்கருத்தே கீதாச்சாரம் போலத்தான் உள்ளது. நல்லதொரு பகிர்வு. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள். //

  நாம் ஒவ்வொருவருமே கீதையின் துணப் பாத்திரங்கள்தானே? பாராட்டிற்கு நன்றி!

  ReplyDelete
 9. REPLY TO > G.M Balasubramaniam said...

  // நலம்தானே. ? உங்கள் சிந்தனை தெளிவாக இருக்கிறது.//

  பெரியவர் GMB அவர்களின் பாராட்டிற்கு நன்றி!

  ReplyDelete
 10. சிலர் வீட்டில் கிருஷ்ணன் படம் மாட்டக்கூடாது என்பார்கள். இதைப்பற்றி ஒரு ஆராய்ச்சியே செய்யலாம்!
  நம்பிக்கை வேண்டும் தான் ஆனால் மூட நம்பிக்கை கூடாது. அதை சரியாக சொல்லியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 11. REPLY TO > மாதேவி said...

  // இது அவரவர் நம்பிக்கையை பொறுத்தது என்பதுதான் எனது எண்ணமும். //

  சரியாகச் சொன்னீர்கள்! சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete


 12. // படம் வைப்பது என்பது அவரவர் நம்பிக்கையையும் ஆர்வத்தையும் பொறுத்தது. //

  இதெல்லாமே ஒரு பப்ளிக் பர்ஸெப்ஷன் தான்.

  படங்களைப் பொறுத்த அளவில் அல்லது சிலைகளைப்பொறுத்த வரையில் இதெல்லாம்
  வைக்கக்கூடாது என்பர்.


  1. நட்ராசர் இடது காலை தூக்கி நடனமாடுவது./ கீழே கீலகனை மிதித்து இருப்பது போல.
  2. மஹா காளி உக்ர ஸ்வரூபம்.
  3. க்ருஷணன் கையிலே குழல்வச்சுண்டு இல்ல ஊதுகிறார்போல.
  4. மஹா பாரதம் போர்க்களம்.
  5. வீட்டு பூஜை அறைலே இறைவன் படங்களுடன் அல்லது சிலைகளுடன் இறந்து போன பெற்றோர்கள்
  படங்கள் வைக்கக்கூடாது. அவர்களுக்கு தனியான கௌரவம் கொடுத்து தனி ஒரு இடம் தரவேண்டும். விதிவிலக்கு: அவர்களது திதியன்று மட்டும் அந்த படங்களை சாமி படங்களுடன் வைக்கலாம்.

  1 முதல் 4 வரை குறிப்பிட்டுள்ளவைகளை வருடாந்திர கொலுவில் வைக்கலாம். ஆட்சேபணை இல்லை.

  வண்டி எண்களில் 8 அய்யய்யோ...வேண்டவே வேண்டாம். என்பார்கள். அதனால் தான்
  கவர்ன்மென்ட் வண்டிகள் மட்டும் 8 எண் அதிகம் தென்படும். இப்பல்லாம், பெரிய பெரிய வளாகங்களிலும்
  ப்ளாக் எட்டு என்ற பெயர் இருக்காது. எங்கள் சீப்ராஸ் வளாகத்தில், 8 வது ப்ளாக் இல்லை. 7 க்கு பிறகு 9.
  8 என்பது சனியாம்.

  வீட்டிலே ராமாயணம் படிக்கலாம். சுந்தர காண்டம் எப்பவேணாலும் படிக்கலாம். ஆனா
  இதர காண்டங்களைப் படிக்கணும் அப்படி நினைத்தால் துவக்கத்திலிருந்து ஆரம்பிக்கணும்.
  எனிவே, ஆரண்ய காண்டத்தை க்ருஹஸ்தன் முதல் காண்டமாக படிக்கத் துவங்குதல் சரியல்ல.
  உத்தர காண்டமும் நோ..

  மஹா பாரதம் கோவில்லே உட்கார்ந்து படிக்கலாம். வீட்டிலே படிக்கக்கூடாது. ஆனா கீதை மட்டும்
  எப்ப வேணாலும் படிக்கலாம். இன் ஃபாக்ட், கீதைலே, சில அத்தியாயங்கள் தின்சரி படிக்கணும் அப்படின்னு
  விதி இருக்கு. என்ன அத்யாயங்கள் அப்படின்னு தெரிஞ்சுக்க விருப்பம் இருக்கறவர்கள் எனக்கு இ மெயில்
  தரவும்.

  அதே மாதிரி வேதங்கள் படிப்பவர்கள் எல்லாவற்றையும் முறையாக கற்றுக்கொள்ளலாம். ஒரு சன்யாசி
  சமகம் சொல்லக்கூடாது. ஏன் எனக் கேட்கக்கூடாது.  கருட புராணம், அதே மாதிரி கீதையோட லாஸ்ட்லே ஒரு அத்யாயம்.. வீட்டுலே படிக்கலாமா ? மூச்...
  படிக்கணும் அப்படின்னு ஏதாவது நதிக்கரைலே போய் ஒரு வேப்ப மர அடிலே உட்கார்ந்து படித்து விட்டு,
  முடிந்த உடன், கால் அலம்பி விட்டு, ஒரு சிவன் கோவில் போயிட்டு பிறகு தான் வூட்டுக்கு வரணும்.

  என்ன மாதிரி உடம்புக்கு வந்தாலும், பலர் செவ்வாய்க்கிழமை டாக்டரைப்பார்க்கமாட்டார்கள். டாக்டர்கள் கன்சல்டேஷனும் சென்று பாருங்கள். கூட்டம் குறைந்தே தான் இருக்கும். எமர்ஜென்ஸி மட்டும் தான் வரும் என நினைக்கிறேன்.

  ராத்திரி தயிர் , கீரை சாப்பிடக்கூடாது. இது மாதிரி ஏகப்பட்ட நம்பிக்கைகள் உலவுகின்றன. .

  ஆனா, எனக்கு இதுலே நம்பிக்கை இல்லை அதுலே நம்பிக்கை இல்ல என்று சொல்றவர்களுக்கு வேறு சில நம்பிக்

  கைகள்
  இருக்கும். அந்த பர்டிகுலர் நம்பிக்கை அது இல்லாதவர்களுக்கு ஸ்ட்ரேஞ்சா தோன்றும்.

  அதனாலே, ஒரு பர்டிகுலர் நம்பிக்கை இருப்பதனாலோ அல்லது இல்லாமல் இருப்பதனாலோ ஒரு தனித்துவம்
  தனக்கு வந்துவிட்டது எனக் கருதுவது கூடாது என்பது

  எனது நம்பிக்கை.

  இருந்தாலும் ஒண்ணு சொல்லவேணும். ஆஸ் லாங் ஆஸ் இட் டஸ் நாட் ஹர்ட் அஸ், நம்மை பாதிக்காத‌
  வரை, இதெல்லாம் இருக்கும். ஏதாவது ஒண்ணு நம் எதிர்பார்ப்புகளுக்கு விரோதமாக நடந்துவிடின், இதுனாலேயோ
  அதுனாலேயோ என்று மனசு அப்படின்னு ஒண்ணு நமக்குள்ளே ஒளிஞ்சுட்டு இருக்கு பாருங்க... அது அன்னிக்கு
  லபோ லபோன்னு கத்தி ஒரு தினுசாக்கிவிடும்.

  என்னுடன் ஒரு கிழவர் இருக்கிறார். வயசு 92 . நல்ல திடகாத்திரமாக இருக்கிறார். எனக்குத் தெரிந்து ஒரு அம்பது
  வருஷமாக தினசரி 10 சிகரட் பிடிக்கிறார். ஏன் ஸார், கான்சர் வந்துவிடும் என்று திட்மான ஆராய்ச்சிகள் சொல்லுதே
  அப்படின்னு சொன்னேன். எனக்கு அதிலே எல்லாம் நம்பிக்கை கிடையாது. மனுசன் மனசை அமைதியா இன்பமா
  வச்சுகினு இருந்தா அதுவே நீண்ட நாள் வாழ ரகசியம்.. தினம் 10 சிகரட்டாவது புடிச்சாத்தான் எனக்கு நிம்மதியா
  இருக்கு அப்படின்னு சொல்றாரு அந்த பொல்லாத நண்பர்.

  ஸோ வாட் ?
  ப்ளே ஸேஃப்.

  சுப்பு தாத்தா.
  www.subbuthatha.blogspot.in

  ReplyDelete
 13. மனதிற்கு பிடித்ததை செய்கிறோம். இதை எதற்காகவும் யாருக்காகவும் மாற்றிக்கொள்ளக்கூடாது.

  G.M Balasubramaniam ஐயாவின் கருத்தை நானும் ஏற்கிறேன். நல்ல பகிர்வுங்க.

  ReplyDelete
 14. தங்கள் வாசல் தோற்றம் வெகுவாக கவர்ந்தது. அப்படியே இருக்கட்டுமே.

  ReplyDelete
 15. என் வீட்டில் உள்ளே தலைவாசலுக்கு மேல் இந்த கீதோபதேசப் படம் மாட்டி வைத்திருக்கிறேன். கீதையில் கண்ணன் சொல்ற பிரகாரம் வாழவேண்டுமாம் ஆனால் அந்தப் படம் கூடாதாம். என்ன மடத்தனம் இது?

  ReplyDelete
 16. REPLY TO > வே.நடனசபாபதி said...

  // நம்பிக்கை வேண்டும் தான் ஆனால் மூட நம்பிக்கை கூடாது. அதை சரியாக சொல்லியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்! //

  உங்கள் வருகைக்கும் ஒரு நல்ல கருத்துரைக்கும் நன்றி! இனிமேல்தான் படிக்காமல் விட்டுப்போன உங்களது சில பதிவுகளைப் (வாடிக்கையாளர்களும் நானும்) படிக்க வேண்டும்.

  ReplyDelete
 17. REPLY TO > sury Siva (சுப்பு தாத்தா) .said...

  // இதெல்லாமே ஒரு பப்ளிக் பர்ஸெப்ஷன் தான் //

  நீங்கள் சொல்வதுபோல PUBLIC PERCEPTION என்பதும் ஒரு காரணம்.

  // ஆனா, எனக்கு இதுலே நம்பிக்கை இல்லை அதுலே நம்பிக்கை இல்ல என்று சொல்றவர்களுக்கு வேறு சில நம்பிக்கைகள்
  இருக்கும். அந்த பர்டிகுலர் நம்பிக்கை அது இல்லாதவர்களுக்கு ஸ்ட்ரேஞ்சா தோன்றும்.

  அதனாலே, ஒரு பர்டிகுலர் நம்பிக்கை இருப்பதனாலோ அல்லது இல்லாமல் இருப்பதனாலோ ஒரு தனித்துவம் தனக்கு வந்துவிட்டது எனக் கருதுவது கூடாது என்பது எனது நம்பிக்கை. //

  நம்பிக்கைகள் குறித்து ஒரு நீண்ட விமர்சனம் செய்த சுப்பு தாத்தாவுக்கு நன்றி! நல்லவேளை எனக்கு மண்டை கர்வம் ஏதும் வந்துவிடவில்லை.

  // ஸோ வாட் ? ப்ளே ஸேஃப். //

  இந்த வரிகள்! அருமை! அருமை!

  ReplyDelete
 18. REPLY TO > Sasi Kala said... (1, 2 )

  சகோதரி கவிஞர் தென்றலின் கருத்துரைகளுக்கு நன்றி!

  ReplyDelete
 19. REPLY TO > பழனி. கந்தசாமி said...

  // என் வீட்டில் உள்ளே தலைவாசலுக்கு மேல் இந்த கீதோபதேசப் படம் மாட்டி வைத்திருக்கிறேன். கீதையில் கண்ணன் சொல்ற பிரகாரம் வாழவேண்டுமாம் ஆனால் அந்தப் படம் கூடாதாம். என்ன மடத்தனம் இது? //
  நல்லதோர் விமர்சனம் தந்த அய்யாவுக்கு நன்றி!  ReplyDelete
 20. ஐயா நலமுடன் திரும்பி வந்தது குறித்து மகிழ்ச்சி மேலும் அறுவை சிகிச்சை இல்லாமல் குணமாக வாழ்த்துக்கிறேன் .
  அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு எனபது சரியே .
  என் வீட்டின் முதல் மாடி வேலை நடந்த போது வீட்டு வேலை செய்த பொறியாளர் என் மனைவியிடம் (நான் சவுதியில் இருப்பதால்) நல்ல நாள் பார்த்து சொல்ல சொன்னார் கட்டிட பனி தொடங்குவதற்கு , அதற்கு என் மனைவி சொன்னார் , எங்களுக்கு தொழுகாத நாளே கெட்ட நாள் பாக்கி எல்லா நாளும் நல்ல நாளே என்றார் .
  எல்லாம் வல்ல இறைவனால் வீடு வேலை முடிந்து மேலே குடி வந்து விட்டோம் .

  ReplyDelete
 21. உங்களின் விருப்பம்.ஆனாலும் தச்சுப் பணி சிறப்பாக உள்ளது

  ReplyDelete
 22. வணக்கம் இளங்கோ அவர்களுக்கு.
  நலமா?

  நிறைய மூட நம்பிக்கைகள் இதைப் போல இருக்கின்றன. உங்கள் மனதிற்கு சரி என்று பட்டதை நீங்கள் செய்யலாம்.

  ReplyDelete
 23. REPLY TO > அஜீமும்அற்புதவிளக்கும் said...

  எனது நலனில் அக்கறையோடு அடிக்கடி விசாரிக்கும் உங்கள் அன்பிற்கு நன்றி! அண்மையில், தஞ்சையில் உள்ள ஒரு நம்பிக்கையான கண் டாக்டரைக் கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டேன். அவர் கண் ஆபரேஷன் தேவையில்லை, கண்ணாடியை (லென்ஸ்) மட்டும் மாற்றினால் போதும் என்று சொல்லி கண் சொட்டுமருந்தும் எழுதிக் கொடுத்துள்ளார். இறைவன் அருளால் இன்னும் கொஞ்சநாளில் எல்லாம் சரியாகிவிடும்.

  // எங்களுக்கு தொழுகாத நாளே கெட்ட நாள் பாக்கி எல்லா நாளும் நல்ல நாளே //

  எனவே உங்கள் குடும்பத்தில் எல்லா நாளும் நல்ல நாளே! வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! வாழ்த்துக்கள்!
  ReplyDelete
 24. REPLY TO > கவியாழி கண்ணதாசன் said...

  கவிஞரின் கருத்துரைக்கு நன்றி! எனது பதிவில் CARVING என்பற்கு சரியான தமிழ் பெயர் உடனே தோன்றாததால் அப்படியே கார்விங் என்று எழுதியுள்ளேன். தங்கள் கருத்துரையில் உள்ள தச்சுப் பணி ஒரு நல்ல தமிழ் பெயராக உள்ளது.

  ReplyDelete
 25. REPLY TO > Ranjani Narayanan said...

  // நிறைய மூட நம்பிக்கைகள் இதைப் போல இருக்கின்றன. உங்கள் மனதிற்கு சரி என்று பட்டதை நீங்கள் செய்யலாம். //

  ஒவ்வொரு நம்பிக்கைக்கும் பின்னால் ஒரு கதையோ அல்லது வரலாறோ இருக்கும். நீங்கள் சொல்வதைப் போல நமது மனதிற்கு சரி என்று பட்டதை எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். சகோதரியின் அன்பான நலன் விசாரிப்பிற்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 26. உருவங்களில் என்ன இருக்கிறது....எல்லாமே நம் எண்ணங்களில்தான் இருக்கிறது...

  ReplyDelete
 27. REPLY TO > ezhil said...

  // உருவங்களில் என்ன இருக்கிறது....எல்லாமே நம் எண்ணங்களில்தான் இருக்கிறது...//

  ஆம்! சகோதரி சொல்வது போல நம் எண்ணங்களே காரணம். சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 28. ஆம் அய்யா, தாங்கள் சொல்வதுதான் சரி. எல்லாமே அவரவர் மனதில் தான் உள்ளது. தெய்வ வழிபாடு என்பதே நம்மைக் பக்குவப்படுத்தவும், நல்வழிப் படுத்தவும்தான், அதில் போய் இந்த தெய்வம் நல்லதல்ல, இந்த படம் இருப்பது நல்லதல்ல என்பதே ஒரு தவறான கருத்து, தவறான நம்பிக்கை. என்னைப் பொறுத்தவரை வீடு என்பது அதில் வாழும் நமது வசதிக்காக மட்டுமே .நன்றி அய்யா

  ReplyDelete
 29. உங்கள் பின்னூட்டம் கண்டேன்.
  இதோ !! எனது அடுத்த பதிவு.
  நேரம் கிடைக்கும்பொழுது
  நோக்கவும்.

  சுப்பு தாத்தா.
  www.vazhvuneri.blospot.in

  ReplyDelete
 30. அந்தக் காட்சியே அற்புதக் காட்சியாக இருக்கிறது.
  நல்ல விளக்கம் ஐயா!

  ReplyDelete
 31. REPLY TO > கரந்தை ஜெயக்குமார் said...

  // எல்லாமே அவரவர் மனதில் தான் உள்ளது. தெய்வ வழிபாடு என்பதே நம்மைக் பக்குவப்படுத்தவும், நல்வழிப் படுத்தவும்தான், அதில் போய் இந்த தெய்வம் நல்லதல்ல, இந்த படம் இருப்பது நல்லதல்ல என்பதே ஒரு தவறான கருத்து, தவறான நம்பிக்கை //
  ஆசிரியர் கரந்தை ஜெயகுமாரின் தத்துவார்த்தமான கருத்துரைக்கு நன்றி!

  தெய்வம் என்றால் அது தெய்வம் - வெறும்
  சிலையென்றால் அது சிலைதான்
  உண்டென்றால் அது உண்டு
  இல்லையென்றால் அது இல்லை
  - பாடல்: : கண்ணதாசன் (படம்: பார்த்தால் பசி தீரும்)

  ReplyDelete
 32. REPLY TO > sury Siva said...

  // எனது அடுத்த பதிவு. நேரம் கிடைக்கும்பொழுது
  நோக்கவும். //

  வலைத்தளத்தின் முகப்பு பலகையில் ( DASH BOARD) உங்கள் பதிவைப் பார்த்தவுடனேயே ஒரு முறை படித்து விட்டேன். மறுபடியும் ஆழ்ந்து படிக்க வேண்டும். தகவலுக்கு நன்றி!

  ReplyDelete
 33. REPLY TO > T.N.MURALIDHARAN said...

  மூங்கிற்காற்று முரளிதரன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete