Sunday, 10 March 2013

கண் ஆபரேஷன் கட்டணம்.என்னவென்று தெரியவில்லை. கண்களில் ஒரே கூச்சம். கண்களிலிருந்து அடிக்கடி தண்ணீர் வந்தது.. அப்போதுதான் நேஷனல் கல்லூரியில் முதுகலைப் படிப்பில் சேர்ந்து இருந்தேன் பெரும்பாலும் கல்லூரி கட்டடங்களின் வெளிப்புறம் வெளிர் மஞ்சள் நிறம்தான். வகுப்பறையில் உட்கார்ந்து இருக்கும்போது ஜன்னல் வழியே பார்க்கும்போது, வெளியில் எதிர்ப்புறம் உள்ள கட்டடங்களில் வெயில் பட்டு கண்ணை கூசச் செய்யும். வழக்கம் போல கண்களிலிருந்து தண்ணீர். வேறு வழியில்லை. கண் மருத்துவமனை சென்று மருத்துவரைப் பார்த்தேன். அவர் கண்ணாடி போடச் சொன்னார். சில மருந்தும் எழுதிக் கொடுத்தார். கொஞசநாள்தான். கண்களில் தொந்தரவு இல்லை. அப்புறம் கண்ணாடி எதுவும் அணிவதில்லை.

வங்கி வேலையில் சேர்ந்து 25 ஆண்டுகள் வரையிலும் எனக்கு கண்ணாடி தேவைப் படவில்லை. அதன்பிறகு கண்களில் எல்லோருக்கும் ஏற்படும் குறைபாடு வந்தது. பொடி எழுத்துக்களை படிக்க இயலவில்லை. காரணம் வங்கிப் பணிகளில் கம்ப்யூட்டர் பணி. எப்போதும் பார்க்கும் கண் மருத்துவமனை சென்று பார்த்தேன். மருத்துவர் படிப்பதற்கென்று ஒரு கண்ணாடி போடச் சொன்னார். படிக்கும் சமயம் மற்றும் வங்கிப் பணி செய்யும்போது மட்டும் போட்டுக் கொண்டேன். அப்புறம் தொலைவில் இருக்கும் பொருட்களைப் பார்க்கவும் படிப்பதற்கும் இரண்டு லென்சுகள் உள்ள கண்ணாடி போட நேர்ந்தது. பெரும்பாலும் இரு சக்கர வண்டியில் செல்லும்போது, பகலில் மட்டும் அணிந்து கொண்டேன்.

ஐந்து வருடங்களுக்கு முன்னர் மாலை நேரங்களில் யாரையும் எதனையும் தெளிவாகக் காணமுடியவில்லை. எனவே எப்போதும் பார்க்கும் கண் மருத்துவ மனைக்கு சென்றேன். கண்ணில் புரை இருப்பதாகவும், ஆபரேஷன் செய்தால் சரியாகிவிடும் என்றார்கள். முதலில் ஒரு கண். சிலநாள் சென்றதும் இன்னொரு கண் ஆபரேசன் செய்யலாம் என்று முடிவு செய்தேன்.அப்போது பணியில் இருந்தேன். எனது நேரம் அப்போது பெரம்பலூர் மாவட்டத்தில் இலவச கண் பரிசோதனை முகாமில், அறுவை சிகிச்சை செய்தவர்கள் பலருக்கு கண் பார்வை போனதாக செய்தி வந்தது.. எனவே பயந்து போய் நான் கண் ஆபரேஷன் யாரிடமும் செய்யாமல் தவிர்த்தேன். கொஞ்சநாள் கழித்து வேறு ஒரு கண் மருத்துவமனை சென்று பரிசோதனை செய்தேன். அவர்கள் ஆபரேஷன் மற்றும் லென்ஸ் எல்லாவற்றிற்கும் சேர்த்து ஒரு கண்ணிற்கு ரூ 28000 ஆகும் என்றார்கள். ஆக இரண்டு கண்ணிற்கும் ரூ 56000 ஆகும். இதற்கிடையில் எனது உறவினர் ஒருவர் பத்தாயிரம் மட்டுமே செலவானதாகச் சொன்னார். எனது பெரியம்மா மகன் ஒருவர் (வேறு மாவட்டத்துக்காரர்) தனக்கும் உறவினர்களுக்கும் அரசு கண் மருத்துவ மனையிலேயே செலவில்லாமல் ஆபரேஷன் செய்து கொண்டதாகவும் இப்போது எல்லோருக்கும் பார்வை நன்றாக இருப்பதாகவும் சொன்னார். மேலும் எந்த மருத்துவ மனையானாலும் கண்ணிற்கு அவர்கள் பொருத்துவது இந்தியன் லென்ஸ் (ரூ500) அல்லது அமெரிக்கன் லென்ஸ் ( ரூ1000) என்றும் ஒவ்வொரு மருத்துவமனையிலும் கண் ஆபரேஷனுக்கு என்று அவர்கள் வாங்கும் (நிர்வாகச் செலவுகள்) தொகைதான் அதிகம். என்றும் சொன்னார். (இது அப்போதைய கணக்கு) எனக்குத் தெரிந்த ஆப்டிகல்ஸ் (OPTICALS) கடைக்காரரும் பல்வேறு யோசனைகளுக்குப் பிறகு ஆம் என்று தயக்கத்துடன் இந்த உண்மையை ஒத்துக் கொண்டார்.

எதற்கும் எனது கண்களை இன்னொரு டாக்டரிடம் காட்டினால் ந்ல்லது என்று எனக்கு தோன்றியது. எனவே நான் என் பெரியம்மா மகன்  சொன்ன மருத்துவரிடம் (தனியார், பக்கத்து மாவட்டம்) சென்று கண்களைப் பரிசோதனை செய்து கொண்டேன். அவர் எனது கண்களில் ஆபரேஷன் செய்யும் அளவுக்கு கண்களில் கோளாறு இல்லையென்றும் எப்போதும் போல இப்போது அணியும் கண்ணாடியையே போட்டுக் கொண்டால் போதும் என்றும் சொல்லி விட்டார். அன்றிலிருந்து இன்றுவரை பகல் இரவு எதுவானாலும் தேவைப்படும் சமயங்களில் மட்டும் கண்ணாடி அணிந்து கொள்கிறேன். கடந்த ஐந்து வருடமாக ஆபரேஷன் எதுவும் இல்லை. இருந்தாலும் மறுபடியும் தொந்தரவு. இப்போது ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்யப் போகிறேன். வங்கிப் பணியிலிருந்து விருப்ப ஓய்வில் வந்ததால் எங்கள் வங்கியில் CLAIM  எதுவும் செய்ய முடியாது.  கண்ணில் ஆபரேஷன் தேவைதான் என்றால் செய்து கொள்ள வேண்டியதுதான்.


( PICTURES :  THANKS TO  “ GOOGLE ” )  31 comments:

 1. நீங்கள் பணி புரிந்த வங்கியில் ( அது தேசீய வங்கியாக இருக்கும் பட்சத்தில்)
  உங்களுக்கு குழு மருத்துவ காப்பு திட்டம் ஓய்வு பெற்றவர்களுக்கானது கண்டிப்பாக இருக்கும்.
  உங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும் பட்சத்தில், அதிலிருந்து இந்த திட்டத்திற்காக ஒரு பிரிமியம்
  செலுத்துகிறீர்களா ?
  மருத்துவ காப்பு திட்டத்தின் கீழ் கண் அறுவை சிகிச்சை, லேசர் சிகிச்சை, காடராக்ட் சிகிச்சை
  எல்லாவற்றிற்குமே இழப்பு ஈடு அதாவது ரீஇம்பர்ஸ்மென்டு உண்டு.

  உங்கள் அலுவலகத்தில் விசாரிக்கவும். அல்லது உங்கள் வங்கியின் விவரங்களைத் தந்தால் நான் விசாரித்துச்
  சொல்கிறேன். மற்றும் ஒன்று. விருப்ப ஓய்வு பெற்ற வர்களுக்கும் இயல்பாக ஒய்வு பெற்றவர்களுக்கும் இந்த காப்பு திட்டத்தின் கீழ்
  வித்தியாசம் ஒன்றும் இல்லை.

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
 2. விருப்ப ஓய்வு(நம்மைப்போல்) என்றால்,மற்ற ஓய்வு பெற்றவர் களுக்குக் கிடைக்கும் தொகை(3000) கூட இல்லை..புரை அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது அவசியம் என்றால் செய்து கொண்டு விடுங்கள்.இப்போதெல்லாம் கட்டணம் கொஞ்சம் அதிகம்தான்!
  அனைத்தும் நன்மையாய் முடியப் பிரார்த்திக்கிறேன்,ஓம் நமச்சிவாய!

  ReplyDelete
 3. பணத்தை விடுங்க... கண்கள் நல்லபடியாக இருக்க வேண்டுகிறேன்...

  ReplyDelete
 4. வங்கிப் பணியிலிருந்து விருப்ப ஓய்வில் வந்ததால் எங்கள் வங்கியில் CLAIM எதுவும் செய்ய முடியாது.// ஏன் முடியாதுங்க சார்,பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு உள்ளதே

  ReplyDelete
 5. பணம் கொடுத்தாலும் நல்ல சிகிச்கை கிடைப்பது அறிதாகிப் போனது இக்காலத்தில் நலமுடன் சிகிச்சை பெற்று வாருங்கள்.

  ReplyDelete
 6. மறுமொழி > sury Siva said...

  இந்த பதிவின் நோக்கம் உண்மையில் மருத்துவ மனைகளில் ஒரே சிகிச்சைக்கு அங்கு இருக்கும் கட்டண வேறுபாட்டினைக் காட்டுவது மட்டும்தான். அதே சமயம் விருப்ப ஓய்வில் செல்பவர்களுக்கு, சில பொதுத்துறை நிறுவனங்களில் சில சலுகைகள் இல்லை என்பதனை சுட்டிக் காட்டவும்தான்.

  சுப்பு தாத்தா அவர்கள் என் மீது கொணட அன்பிற்கு நன்றி!
  நான் Group Insurance எதிலும் சேரவில்லை. பணிக்காலத்திலும் ஆண்டவன் அருளால் அடிக்கடி CLAIM செய்ய வேண்டியநிலையும் ஏற்பட்டதில்லை.


  ReplyDelete
 7. மறுமொழி > சென்னை பித்தன் said...

  // .புரை அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது அவசியம் என்றால் செய்து கொண்டு விடுங்கள்.இப்போதெல்லாம் கட்டணம் கொஞ்சம் அதிகம்தான்! //

  எனது பதிவின் மையக் கருத்தை தெளிவாகச் சொன்ன சென்னை பித்தன் அவர்களுக்கு நன்றி. இனிமேல்தான் மருத்துவமனை செல்ல வேண்டும். பிரச்சினை ஏதும் இல்லை.

  // அனைத்தும் நன்மையாய் முடியப் பிரார்த்திக்கிறேன்,ஓம் நமச்சிவாய! //

  தங்கள் அன்பிற்கு நன்றி! அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

  ReplyDelete
 8. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...

  // பணத்தை விடுங்க... கண்கள் நல்லபடியாக இருக்க வேண்டுகிறேன்... //

  சுப்பு தாத்தா அவர்களுக்கு சொன்ன பதிலையே இங்கும் தருகிறேன்.

  இந்த பதிவின் நோக்கம் உண்மையில் மருத்துவ மனைகளில் ஒரே சிகிச்சைக்கு அங்கு இருக்கும் கட்டண வேறுபாட்டினைக் காட்டுவது மட்டும்தான். அதே சமயம் விருப்ப ஓய்வில் செல்பவர்களுக்கு, சில பொதுத்துறை நிறுவனங்களில் சில சலுகைகள் இல்லை என்பதனை சுட்டிக் காட்டவும்தான்.

  ReplyDelete
 9. மறுமொழி > கவியாழி கண்ணதாசன் said...

  // வங்கிப் பணியிலிருந்து விருப்ப ஓய்வில் வந்ததால் எங்கள் வங்கியில் CLAIM எதுவும் செய்ய முடியாது.// ஏன் முடியாதுங்க சார்,பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு உள்ளதே //

  விருப்ப ஓய்வில் செல்பவர்களுக்கு, சில பொதுத்துறை நிறுவனங்களில் சில சலுகைகள் இல்லை. சகோதரரின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 10. மறுமொழி > Sasi Kala said...

  // பணம் கொடுத்தாலும் நல்ல சிகிச்கை கிடைப்பது அரிதாகிப் போனது இக்காலத்தில். நலமுடன் சிகிச்சை பெற்று வாருங்கள். //

  சகோதரி சொல்வதுபோல தரமான சிகிச்சைதான் முக்கியம். கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 11. சிகிச்சை தேவையெனில் விரைவில் செய்து கொள்ளுங்கள்.

  ReplyDelete
 12. ஐயா, வணக்கம். ஐயா.

  திருச்சியில் தென்னூர் + தில்லைநகர் கூடுமிடத்தில் மஹாத்மா காந்தி கண் மருத்துவ மனை என்று உள்ளது ஐயா. அங்கு ஸ்ரீராம் என்று ஓர் இளம் மருத்துவர் உள்ளார் ஐயா. அவர் மிகச்சிறந்த நிபுணர் ஐயா. அங்கேயே டாக்டர் ரமேஷ் + டாக்டர் மீனா குமாரி என்ற கண்வர் + மனைவியும் உள்ளார்கள் ஐயா.

  இவர்கள் மூவரில் யாரையாவது ஒருவரை ஒரு முறை பார்த்து விட்டு வாருங்கள் ஐயா.

  அதுபோல திருச்சி ஜோஸப் மருத்துவ மனை என்று ஒன்றும் உள்ளதய்யா. மிகச்சிறப்பான டாக்டர்கள் உள்ளனர். அதில் டாக்டர் ராஜ் மோஹன் என்று ஒருவர் உள்ளார் ஐயா.

  சத்யா ஆல்ப்ர்ட் என்றும் ஒரு மிகச்சிறந்த கண் மருத்துவர் திருச்சியில் உள்ளார் ஐயா.

  கண் விஷயமாக இருப்பதால், இவர்களில் சிலரை அல்லது அனைவரையும் Opinion கேட்டு விட்டு, பிறகு தேவைப்பட்டால் ஆபரேஷன் செய்து கொள்ளுங்கள், ஐயா.

  தங்களுக்கு நல்லபடியாக கண்பார்வை திரும்பிட பிரார்த்திக்கிறேன், ஐயா.

  அன்புடன் vgk

  ReplyDelete
 13. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...

  // சிகிச்சை தேவையெனில் விரைவில் செய்து கொள்ளுங்கள். //

  இனிமேல்தான் கண் பரிசோதனை செய்ய, மருத்துவமனைக்கு செல்ல வெண்டும். தங்கள் அன்பிற்கு நன்றி!

  ReplyDelete
 14. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...

  அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்!

  // கண் விஷயமாக இருப்பதால், இவர்களில் சிலரை அல்லது அனைவரையும் Opinion கேட்டு விட்டு, பிறகு தேவைப்பட்டால் ஆபரேஷன் செய்து கொள்ளுங்கள், ஐயா.//

  பேரக் குழந்தையை பார்த்துக் கொள்ள சென்னை சென்ற என் மனைவி வந்ததும், அடுத்த வாரம் கண் பரிசோதனை செய்ய, மருத்துவமனை செல்வேன்.

  // தங்களுக்கு நல்லபடியாக கண்பார்வை திரும்பிட பிரார்த்திக்கிறேன், ஐயா.//

  பயப்படும்படியான சூழ்நிலை எதுவும் இல்லை. VGK அவர்களின் அன்புக்கு நன்றி!


  ReplyDelete
 15. வை கோ ஐயா சொன்னது போல சத்யா ஆல்பர்ட் நல்ல டாக்டர் , என் அம்மாவுக்கு அங்கேதான் ஆபரேஷன் செய்தேன். இப்போது நலமாக உள்ளார் , ஆனால் சத்யா ஆல்பர்டிடம் முதலிலேயே பதிவு செய்ய வேண்டும் , தங்களுக்கு தேவையென்றால் மருத்துவமனையின் தொலைபேசி எண்ணை வாங்கி தருகிறேன் .

  ReplyDelete
 16. நான்கு வருடங்களுக்கு முன் நான் செய்துகொண்ட போது ஒரு லென்ஸ் ரூ 22,000/- ஆயிற்று. இரண்டு கண்களுக்கும் அடுத்தடுத்து செய்துகொண்டுவிட்டேன். கூடவே progressive கண்ணாடி அணியத் தொடங்கினேன். இதில் என்ன சௌகரியம் என்றால் bi-focal (கண்ணாடியை பாதியாக செய்து கீழிருக்கும் பாதி படிப்பதற்கும், மேலிருக்கும் பகுதி பார்வைக்கும்) கிடையாது.
  bi-focal கண்ணாடிகளில் யாரையாவது பார்க்க வேண்டுமென்றால் கண்ணாடியை கீழே தள்ளி மூக்கின் மேல் வைத்துக் கொண்டு பார்க்க வேண்டும்.
  progressive கண்ணாடிகளில் இந்தத் தொல்லை கிடையாது.

  கண்ணைப் பார்த்துக் கொள்ளவும்.
  எல்லாம் நல்லபடியாக நடந்தேற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
 17. எல்வோரும் சந்திக்க வேண்டிய பிரச்சனையே தான்.
  சுகமாக எல்லாம் முடியுங்கள் இறையருள் நிறையட்டும்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 18. கண் மிகவும் முக்கியம் அய்யா. நான் மதுரை அரவிந்த் மருத்துவமனைக்குச் சென்று, எனது வலது கண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்து, லென்ஸ் பொருத்தியுள்ளேன் அய்யா. நன்றாக இருக்கின்றது. கட்டணமும் குறைவு நிறைவான சேவை செய்கின்றார்கள் அய்யா, முயற்சித்துப் பாருங்கள்.தாங்கள் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகின்றேன்.

  ReplyDelete
 19. மறுமொழி > அஜீம்பாஷா said...
  சகோதரரின் அன்பான ஆலோசனைக்கு நன்றி!

  ReplyDelete
 20. மறுமொழி > Ranjani Narayanan said...
  சகோதரியின் நலம் பயக்கும் ஆலோசனைகளுக்கும், அன்பான பிரார்த்தனைக்கும் நன்றி!

  ReplyDelete
 21. மறுமொழி > kovaikkavi said...

  // எல்லோரும் சந்திக்க வேண்டிய பிரச்சனையே தான். //

  இதுவும் கடந்து போகும் (THIS TOO SHALL PASS ) சகோதரியின் அன்பான பிரார்த்தனைக்கு நன்றி!

  ReplyDelete
 22. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...

  சகோதரரின் நலம் பயக்கும் ஆலோசனைக்கும், அன்பான பிரார்த்தனைக்கும் நன்றி!

  ReplyDelete
 23. ஒவ்வொரு இடத்திலும் வேறுபாடு கண்டிப்பாக இருக்கிறது... நன்கு கலந்தாலோசித்து முடிவு செய்யுங்கள்.

  கவனித்து கொள்ளுங்கள் சார்.

  ReplyDelete
 24. மறுமொழி > கோவை2தில்லி said...
  // ஒவ்வொரு இடத்திலும் வேறுபாடு கண்டிப்பாக இருக்கிறது... நன்கு கலந்தாலோசித்து முடிவு செய்யுங்கள். //

  ஆம்! இதுதான் உண்மை! தரமான சிகிச்சையே தேவை. தங்கள் கருத்துரைக்கு நன்றி!


  ReplyDelete
 25. தங்களின் அனுபவ பதிவு மிகவும் அருமை. என் வலை பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றிகள் அய்யா

  ReplyDelete
 26. எந்த மருத்துவ மனையானாலும் கண்ணிற்கு அவர்கள் பொருத்துவது இந்தியன் லென்ஸ் (ரூ500) அல்லது அமெரிக்கன் லென்ஸ் ( ரூ1000) என்றும் ஒவ்வொரு மருத்துவமனையிலும் கண் ஆபரேஷனுக்கு என்று அவர்கள் வாங்கும் (நிர்வாகச் செலவுகள்) தொகைதான் அதிகம்.”

  ஒரு மிகபெரிய கண் மருத்துவமனையில் கண்டாக்டர் நோயாளியிடம் கவனம் செலுத்தியதைவிட மருத்துவமனையில் ஒவ்வொரு பகுதியிலும் பொருத்தியிருந்த வீடியோ காமிராவில் தன் பணியாளர்கள் ,இளம் டாக்டர்கள் ஆகியோரை கண்காணித்ததே அதிகம் ...

  ReplyDelete
 27. மறுமொழி > thamilselvi said...
  சகோதரியின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 28. மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...

  // ஒரு மிகபெரிய கண் மருத்துவமனையில் கண் டாக்டர் நோயாளியிடம் கவனம் செலுத்தியதைவிட , மருத்துவமனையில் ஒவ்வொரு பகுதியிலும் பொருத்தியிருந்த வீடியோ காமிராவில் தன் பணியாளர்கள் ,இளம் டாக்டர்கள் ஆகியோரை கண்காணித்ததே அதிகம் ... //

  சகோதரியின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!


  ReplyDelete

 29. கண் ஆப்பரேஷன் முதலில் தேவையா என்று முதலில் உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். நாமாகக் கேட்காதவரை டாக்டர்கள் நம்மிடம் பல விஷயங்களை தெரிவிப்பதில்லை. மருத்துவக் கட்டணம் இடத்துக்கு இடம் மாறுபடுகிறது.எனக்கு ஒரு கண்ணுக்கு ரூ.18500-/ செலவாயிற்று. எனக்கு பொருத்திய லென்ஸ் ரூ. 6500-/ விலை யென்றார்கள். என் மனைவியின் தமக்கை ஒரு கண் ஆப்பரேஷன் செய்ய ரூ 46000-/ செலவு செய்தார். சிறந்த மருத்துவரிடம் காட்டுவதே நல்லது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 30. மறுமொழி > G.M Balasubramaniam said...

  // கண் ஆப்பரேஷன் முதலில் தேவையா என்று முதலில் உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். நாமாகக் கேட்காதவரை டாக்டர்கள் நம்மிடம் பல விஷயங்களை தெரிவிப்பதில்லை. //

  // சிறந்த மருத்துவரிடம் காட்டுவதே நல்லது. வாழ்த்துக்கள். //

  GMB அவர்களின் வருகைக்கும் அன்பான ஆலோசனைக்கும் நன்றி!

  ReplyDelete
 31. வணக்கம் ஐயா , தாங்கள் நலமா கண் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததா. பதிவுலகத்திற்கு விரைவில் திரும்பி வந்ததற்கு சந்தோசம் .

  ReplyDelete