Friday 1 March 2013

ஜோதிஜி (திருப்பூர்) எழுதிய “டாலர் நகரம்” – நூல் விமர்சனம்.



நான் வங்கி வேலைக்கு சேர்ந்த பிறகு திருப்பூரைப் பற்றி கேள்விப் பட்ட தகவல், திருப்பூரில் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளின் கிளைகளும் உள்ளன என்பதுதான். எனக்குத் தெரிந்த கிராமத்தைச் சேர்ந்த இருவர் திருப்பூருக்கு சென்றனர். ஒருவர் 15 நாளிலேயேஎன்னால் ஈரத்தில் ரொம்பநேரம் நிற்க முடியவில்லை என்று தாக்கு பிடிக்க முடியாமல் வந்து விட்டார். இன்னொருவரால் கடினமாக உழைக்க முடியவில்லை. அவரும் ஓடி வந்து விட்டார். ஆனாலும்  மற்றொருவர் (கடுமையான உழைப்பாளி) எங்கள் கிராமத்துக்காரரோடு திருப்பூருக்கு சென்றவர், இன்று நல்ல நிலைமையில் இருக்கிறார். தனது கடைசி தம்பிகள் இருவரையும் நன்கு படிக்க வைத்தார். கிராமத்தில் நிலங்களை  வாங்கி போட்டார் . எனவே எனக்கு திருப்பூரில் என்னதான் நடக்கிறது என்று தெரிந்து கொள்ள ரொம்ப நாளாக ஆவல். அந்த கேள்விக்கு விடை சொன்ன நூல்தான்  ஜோதிஜி (திருப்பூர்) எழுதியடாலர் நகரம் என்ற நூல் ..

ஆசிரியரும் திருப்பூரும்:

டாலர் நகரம்என்ற இந்நூலின் ஆசிரியர் சிறந்த வலைப்பதிவாளர். இவரைப் பற்றி வலைச்சரத்தில் நான் எழுதிய வரிகள் இவை.

பதிவின் பெயர்: //  தேவியர் இல்லம்  http://deviyar-illam.blogspot.in (ஜோதிஜி) இந்த பதிவின் ஆசிரியர் ஜோதிஜி. தொழில் நகரமான திருப்பூர் பற்றிய செய்திகளை இவரது பதிவுகளில் காணலாம். மற்றும் தமிழ், தமிழ் மக்கள், சமுதாயம் என்ற உணர்வுடன் எழுதி வருகிறார். அடிமைகள் சரித்திரம், காரைக்குடி உணவகம் போன்ற தொடர்கள் குறிப்பிடத் தக்கவை. இவர் எழுதிய டாலர் நகரம்  என்ற கட்டுரையின் துவக்கத்தில் சொல்லப்படும் http://www.4tamilmedia.com/cont/sani-peyarchi-palan/7492-1
//. திருப்பூரில் ஒரு சாதாரண தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கி, ஒரு தொழில் நிறுவனத்தின் நிர்வாகியாக உயர்ந்திருப்பவர் திருப்பூர் ஜோதிஜி. தான் சார்ந்த தொழில்துறையின் நுணுக்கங்கள் அனைத்தையும் அறிந்து வைத்திருப்பவர். எழுத்து, வாசிப்பு, என்பவற்றில் ஆர்வம் மிகுந்தவர். அதற்கும் மேலாக சமூகம் சார்ந்த அக்கறை மிக்கவர். இவையாவும் இணைந்ததில் பிறந்திருக்கிறது இந்த டாலர் நகரம். //  என்ற முன்னுரையே இவரது பெருமையைச் சொல்லும்.


கோவில் விசேடத்திற்கு ஊருக்கு வந்திருந்த செட்டியார் மூலம் இந்த முதல் வேலை வாய்ப்பு வந்தது. ஊரில் வாட்ச் கடை நாச்சியப்பனிடம், படித்த ஒரு பையன் தேவையென்று செட்டியார் சொல்லி வைத்திருக்க; கூட்டாளிகளுடன் சுற்றிக் கொண்டிருந்த என்னை வாட்ச் கடை நாச்சியப்பன் தான் திருப்பூருக்கு அனுப்பி வைத்தார். பள்ளித்தோழன் மாதவன் செலவுக்கு பணங்கொடுத்து வழியனுப்ப திருப்பூருக்கு வந்து சேர்ந்தேன். - என்று தொடங்கி தான் மஞ்சள் பையோடு திருப்பூரில் தொடங்கிய வாழ்க்கை அனுபவத்தினை விளக்குகிறார். -  (பக்கம்.27.)

திருப்பூரிலுள்ள எந்த நிறுவனங்களையையும் நம்ப முடியாது. உள்ளே பணிபுரிபவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் தங்களின் அடுத்த நாள் எப்படியிருக்கும்? என்பதே யூகிக்க முடியாது. இன்று நிறுவனத்திற்கு லாபமாக வந்த பத்து லட்சம், நாளை பத்து கோடி நட்டத்தில் சிக்க வைத்து விடும். ஏற்றுமதி நிறுவனங்கள் வளர உழைப்பு, தரம், நிர்வாகத்திறமை வேண்டும். ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலே அதிர்ஷடம்., நம்ப கடினமாக இருக்கும், ஆனால் இது தான் உண்மை. மாமனாரும் சகலையும் என்னைப் பார்த்து விட்டு சென்ற போது மற்றொரு நிறுவனத்தில் உள்ளே நுழைய முயற்சித்துக் கொண்டிருந்தேன்.” என்று தான் கூடு விட்டு கூடு பாய காரணம் என்ன என்பதனை விளக்குகிறார். - (பக்கம்.65)

ஒவ்வொரு நிறுவனத்திற்கும் மாறி மாறி உழைத்த அவர், 15 ஆண்டுகளாக போராடிக் கொண்டிருந்த சொந்த தொழில், சொந்த நிறுவனம் என்ற எண்ணம் இயல்பாக என்னைத் தேடி வந்த போது சரியாக பயன்படுத்திக் கொண்டேன். வாழ்வின் அடுத்த மறுமலர்ச்சி அத்தியாயங்கள் உருவாகத் தொடங்கியது “ என்று சொல்கிறார். -(பக்கம் 111) அப்போது தனக்கு தொழில் ரீதியாக ஏற்பட்ட அனுபவங்களை சுவைபட சொல்லிச் செல்கிறார். அவருடைய ஒவ்வொரு அனுபவமும் திருப்பூரில் வேலைதேடி செல்வோருக்கும் தொழில்முனைவோருக்கும், கலங்கரை விள்க்கங்களாக உள்ளன.

திருப்பூரில் ஆடை தயாரிப்பு:


திருப்பூரில் தயாரிக்கப்படும் ஆடைகள் எவ்விதம் உருவாகின்றன,  சாயப் பட்டறையில் ஏற்றப்படும் சாயங்கள் ,தயாரிக்கப் பயன்படுத்தும் எந்திரங்கள் பெயர் என்பது உட்பட அலுப்பு தட்டாத வகையில் எழுதுகிறார்.
 உருவாகும் ஒவ்வொரு ஆடைக்கும் ஒவ்வொரு சூத்திரம். அத்தனையும் பயன்படுத்தும் நூலில் தான் தொடக்கம் பெறுகிறது. நீங்கள் போடும் ஜட்டி, போர்வை போல கடினமாக இருந்தால் உங்கள் உறுப்புகளை உண்டு இல்லை என்று படுத்தி எடுத்தி விடாதா? குளிர் காலத்தில் போடக்கூடிய ஆடைகள் உள் உறுப்புகள் தெரியும் அளவிற்கு இருந்தால் எப்படியிருக்கும்? குளிர் நடுங்க வைத்து விடாதா? -  (பக்கம் 144)

நீங்கள் உடுத்தும் சில ஆடைகளில் ஜட்டியின் துணி ஒரு விதமாகவும் பனியனி துணி வேறுவிதமாகவும் இருப்பதை பார்த்திருப்பீர்கள் தானே? சில துணிகளில் உள்ளே கடினமாக சொர சொரப்பாக இருக்கும். அதே துணியின் வெளிப்புறம் முயலை தடவிப் பார்க்கும் சுகம் தெரியும். அத்தனையும் நிட்டிங் எந்திரத்தின் மூளைப் பகுதியில் செய்யப்படும் ஜாலவித்தையாகும்.” -   (பக்கம் 154)


திருப்பூர் சாய பட்டறைகள்:

திருப்பூர் என்றாலே சாயப் பட்டறைகள் நினைவுக்கு வராமல் போகாது. அந்த அளவுக்கு இப்போது செய்தித் தாள்களில் ஊடகங்களில் சாயப்பட்டறை பற்றிய தகவல்கள் வருகின்றன. சாயமே இது பொய்யடா (அத்தியாயம் 22), சாயப்பட்டறைகளை மூடு (அத்தியாயம் 24) என்ற தலைப்புகளில் இவைகளைக் காணலாம்.

 இந்த சாயப்பட்டறை மற்றும் சலவைப் பட்டறைகளில் பணிபுரியும் 90 சதவிகித தொழிலாளிகள் தஞ்சாவூர், திருவண்ணாமலை, இராமநாதபுரம், மதுரை சிவகங்கை, கம்பம், தேனி, போடி, சுற்று வட்டார பகுதியில் இருந்த வந்த 16 முதல் 40 வயது வரைக்கும் உள்ள நல்ல உடல்வலிமை  வாய்ந்த  இளைஞர்கள்.. படிப்பை பாதியில் விட்டு ஓடி வந்தவர்கள் முதல்,  வாழ்க்கையை வாழ்ந்தாகி விட வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் வரையுள்ள அத்தனை பேரையும்  இந்தத்  தொழிலில் பார்க்கலாம். “ - (பக்கம் 199)

மேலும் இந்த சாயக்கழிவுநீரால் ஒரத்துப் பாளையம் அணை, விவசாயம், குடிநீர் ஆகியவற்றில் ஏற்பட்ட பாதிப்புகளையும் அதனை நீக்க எடுக்கப்பட்ட முயற்சிகளையும் அதில் நடக்கும் தில்லுமுல்லுகளைப் பற்றியும் சொல்கிறார்.

திருப்பூர் நிறுவனதாரர்கள்:

திருப்பூர் இந்த அளவுக்கு ஒரு தொழில் நகரமாக உருவாக அங்கு முதல் போட்ட நிறுவனதாரர்களின் பங்கு முக்கியமானது. இந்த நூலின் ஆசிரியர் ஜோதிஜி அவர்கள், இந்த தொழில் ஈடுபட்ட நிறுவனதாரர்கள் எனப்படும் முதலாளிகளைப் பற்றியும் அவர்கள் செய்த, ஏற்றுமதி இறக்குமதி தொழில் திருப்பூரில் பெற்ற வளர்ச்சியைப் பற்றியும் எடுத்துக் காட்டுகளோடு விளக்குகிறார். அதேசமயம் இறக்குமதியாளரிடம் தான் பேசியபடி போட்ட  ஒப்பந்தத்தை நிறைவேற்றாததால் கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஆர்டர்களை இழந்தவர்கள், காமத்தால் தொழிலை சொத்துக்களை அழித்தவர்கள்,  என்றும்  உதாரணம் காட்டுகிறார்.

 உலகமயமாக்கல் தத்துவத்தில் இறக்குமதியாளரின் சட்டங்கள் ஒவ்வொன்றாய் திருப்பூருக்கு உள்ளே வர, நிறுவன முதலாளிகள் தங்களின் வாலைச் சுருட்டிக் கொள்வதை தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை . நிறுவனங்களின் உள்ளே பணிபுரிபவர்களின் வயது கணக்கெடுக்கப்பட்டது. தொழிலாளிகளின் அடிப்படை வாழ்வாதார வசதிகள் சோதிக்கப்பட்டது. சோதித்த முடிவு சாதகம் என்றால் ஒப்பந்தம். இல்லையென்றால் நிறுவனங்களுக்குப் பாதகம்.. நிறுவனத்தின் கழிப்பறை சுத்தம் முதல் பணியாளர் வசதி வரை கண்கொத்திப் பாம்பாய் இறக்குமதியாளர்கள் கவனிக்கும் போது முதலாளிகளால் என்ன செய்து விட முடியும்? இன்றைய நவீன வசதியில் நேரடி ஒலி ஒளி காட்சியாய் ஏதோ ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு திருப்பூரில் உள்ள நிறுவனத்தின் மொத்த நிர்வாகத்தையும் தனக்குள் வைத்துக்கொள்ளும் இறக்குமதியாளர்களும் உண்டு. – (பக்கம் 91 – 92 )

இறக்குமதியாளர்களின் வெளிப்படையான ஒப்பந்தம் குறித்து.... ...
நான் இப்படித் தான். இது தான் எனக்கு வேண்டும். உனக்கு என்ன தேவை? அப்படியா? இது தான் என்னால் முடியும்? உனக்கு வாய்ப்பு இருக்கா இல்லையா? சரி இதை வைத்துக் கொள்? இதுதான் இதற்கான சட்டதிட்டம். மாறாதே........ நீ மாறினால் நானும் வேறு பக்கம் மாற்றிக் கொள்வேன். எளிமையான சட்டதிட்டம். அதற்கு நீங்கள் சுயநலம், பொதுநலம் போன்ற எத்தனை பெயர்களை வைத்துக்கொண்டாலும் அவர்கள் கவலைப்படுவது இல்லை. - (பக்கம் 162)”
மேலும் ஏற்றுமதி இறக்குமதியில் விளையாடும் அரசியல் பற்றியும் கோடிட்டு காட்டுகிறார்.

திருப்பூர் தொழிலாளர்கள்:

திருப்பூர் என்றாலே உழைப்பு என்று அழைப்பு தருகிறார்.


தூங்கா நகரம், கோவில் நகரம், ன்ற பெயர்கள் மதுரைக்கு இருப்பது போலவே திருப்பூரும் நிட் சிட்டி, டாலர் சிட்டி, பின்னாலாடை நகர், பனியன் நகரம் எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. ஆயத்த ஆடைகளின் (HOSIERY GARMENTS) உற்பத்தியை நம்பி மட்டுமே இந்த நகர் இயங்கிக் கொண்டிருக்கிறது. வெளிநாட்டுக்கு ஏற்றுமதி அல்லது உள்நாட்டுக்கு தேவைப்படும் ஆடைகள் என்று  இரண்டு விதங்களில் இங்குள்ளவர்கள் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.” –  (பக்கம் 112 )

.  ”. தினந்தோறும் எட்டு மணி நேரம் தான் என்னால் உழைக்க முடியும்? என்பவர்கள் இந்த ஊர்ப்பக்கம் எட்டிப்பார்க்காமல் இருப்பது நல்லது.  தினந்தோறும் 16 மணிநேர உழைப்பு என்பது இங்கு சர்வசாதாரணம். ( பக்கம் 113 )

புதுக்கோட்டை பக்கம் ஆலங்குடி அருகே உள்ள ஒரு கிராமம்தான் கருணாகரனுக்கு சொந்த ஊர். படிப்பு வரவில்லை என்று திருப்பூருக்கு வந்த அவன் ஆரம்பத்தில் செய்த வேலை தினக் கூலிக்கு காஜா பட்டன் அடிப்பது. அவன் தனது உழைப்பால் முன்னேறி பெரிய ஆளாகிய கதையை எடுத்துக் காட்டுகிறார்.


பணம் துரத்திப் பறவைகள் ( அத்தியாயம் – 20) என்ற தலைப்பில் திருப்பூர் தொழிலாளர்களது நிலையக் காட்டுகிறார். அதில் ஆண் தொழிலாளர்களை மட்டுமன்றி பெண் தொழிலாளர்களைப் பற்றிய விவரங்களையும் வெளிப்படையாகவே பேசுகிறார்.

பெண்களின் பணி நேரமென்பது, தினமும் காலை எட்டு மணிக்குள் நிறுவனத்திற்குள் இருக்க வேண்டும். காலை ஐந்து மணிக்குள் சமையல் செய்தாக வேண்டும். இதற்கிடையே பெண்களின் மற்றொரு வேலையில் கவனம் வைத்தாக வேண்டும். தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். அவசரமாய் டப்பாவில் காலைக்கும் மதியத்திற்கும் சேர்த்து உணவை அடைத்துக் கொண்டு எடுத்துச் செல்ல வேண்டும். இரவு ஒரு மணி வரைக்கும் வேலையென்றால் நிறுவனங்களுக்கருகே கிடைக்கும் இரண்டு புரோட்டாக்கள் தான் உணவாகயிருக்கும். ள்ளிரவு வேலை முடித்து வந்தாலும்,  மறுநாள் காலை , எப்போதும் போல , காலை ஐந்து மணிக்கு எழுந்து தங்கள் கடமைகளைச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் காலை எட்டு மணி வேலைக்கு செல்லமுடியாது. இரவு எத்தனை மணிக்கு வேலை முடிகின்றது ? என்பது முக்கியமல்ல. மறுநாள் காலை எட்டு மணிக்கு நுழைவது தான் முக்கியமாக இருக்கும். அரை மணி நேரம் தாமதம் என்றாலும் உள்ளே அனுமதிக்கமாட்டார்கள். “ (பக்கம் 183  184)

மேலும்  தொழிலாளர்களது குடியிருப்புகள், அங்கும் வேலை பார்க்கும் இடங்களிலும்  நடக்கும் பாலியல் குற்றங்கள், கட்டை பஞ்சாயத்துக்கள் குறித்தும் அத்தியாயம் 21 இல்” காமம் கடத்த ஆட்கள் தேவை” என்ற தலைப்பில் பேசுகிறார்.
.
திருப்பூர் இடைத் தரகர்கள்:

இப்போது  எல்லா மட்டத்திலுமே  இடைத் தரகர்கள் ஊடுருவி விட்டார்கள். மந்திரி பதவி வாங்கித்  தருவதற்கு  கூட ஆட்கள் இருக்கிறார்கள். திருப்பூர் மட்டும் இதற்கு விதிவிலக்கா? என்ன?
நிறுவனதாரர்களும் தொழிலாளிகளும் உழைத்து உருவாக்கும் திருப்பூரில் எல்லாவற்றிற்கும் இடைத் த்ரகர்களே முன் வந்து நிற்கிறார்கள். “ தரகர்கள் எனும் தரமற்ற கூட்டம் ( அத்தியாயம் 4.) “ என்ற தலைப்பில் இடைத் தரகர்களின் மோசடித்தனங்களை சொல்லுகிறார்.

திருப்பூரில் வேலை வாய்ப்பு, மார்க்கெட்டிங்:

திருப்பூர் செல்லும் அனைவருக்கும் வேலை கிடைத்து விடுமா? இந்த வேலை வாய்ப்பை வைத்து நடக்கும் மோசடிகள் குறித்தும் அலசுகிறார்.” வேலை காலி இருக்கு என்ற பக்கங்களைப் படியுங்கள். அத்தியாயம் – 18   இல் சந்தைக்கு போகலாம் வாரீங்களா ?என்று மார்க்கெட்டிங் முறைகளைப் பற்றி விவரிக்கிறார். மார்க்கெட்டிங் பற்றி ஆராயும் மாணவர்களுக்கு தேவையான குறிப்புகள்.


முடிவுரை:

ஆசிரியர் ஜோதிஜி (திருப்பூர்) அவர்கள் எழுதிய டாலர் நகரம்  என்ற நூல் அனைவருக்கும் பயன்படக் கூடியது.  எனவே இந்நூலை  ஆங்கிலம், ஹிந்தி போன்ற பிற மொழிகளிலும் மொழி பெயர்க்க வேண்டும். ஒரு ஆராய்ச்சி நூல் போல பல விவரங்கள் அடங்கிய இந்த நூலுக்காகவே ஆசிரியருக்குமுனைவர்பட்டம் தரலாம்.

நூல் வெளியீடு: 4தமிழ்மீடியா படைப்பாய்வகம்
நூலின் விலை ரூ 190/= பக்கம் 248  

11 comments:

  1. வணக்கம் ஐயா,

    ”டாலர் நகரம்” நூல் பற்றிய தங்களின் விமர்சனம் மிகவும் விரிவாகவும், அழகாகவும், தெளிவாகவும் உள்ளது, ஐயா.

    பகிர்வுக்கு மிக்க நன்றி. பாராட்டுக்கள், வாழ்த்துகள்..

    //ஆசிரியர் ஜோதிஜி (திருப்பூர்) அவர்கள் எழுதிய “டாலர் நகரம்” – என்ற நூல் அனைவருக்கும் பயன்படக் கூடியது. எனவே இந்நூலை ஆங்கிலம், ஹிந்தி போன்ற பிற மொழிகளிலும் மொழி பெயர்க்க வேண்டும். ஒரு ஆராய்ச்சி நூல் போல பல விவரங்கள் அடங்கிய இந்த நூலுக்காகவே ஆசிரியருக்கு “முனைவர்” பட்டம் தரலாம்.//

    முனைவர் பட்டம் கிடைக்க என் அன்பான வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    அன்புடன் VGK

    ReplyDelete
  2. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...

    // ”டாலர் நகரம்” நூல் பற்றிய தங்களின் விமர்சனம் மிகவும் விரிவாகவும், அழகாகவும், தெளிவாகவும் உள்ளது, ஐயா. //

    அன்புள்ள VGK அவர்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி!

    // முனைவர் பட்டம் கிடைக்க என் அன்பான வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். //

    தங்கள் ஆசீர்வாதம் பலிக்கட்டும்.

    ReplyDelete
  3. திருப்பூரில் மூன்று ஆண்டுகள் கிளை மேலாளராக பணியாற்றிய போது நான் தெரிந்து கொள்ளாத பல செய்திகளை நூல் மூலம் அறிய வைத்தீர்கள்.சிறப்பான பார்வை

    ReplyDelete
  4. மறுமொழி > சென்னை பித்தன் said...

    // திருப்பூரில் மூன்று ஆண்டுகள் கிளை மேலாளராக பணியாற்றிய போது நான் தெரிந்து கொள்ளாத பல செய்திகளை நூல் மூலம் அறிய வைத்தீர்கள்.சிறப்பான பார்வை //

    மூத்த வலைப்பதிவர் அய்யா சென்னை பித்தன் அவர்களது கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  5. சாயப்பட்டறைகள், இடைத்தரகர்கள் போன்ற அதிகம் தெரியாத‌ தகவல்களை விரிவாக அலசி, சுவாரஸ்யமாகவும் தந்திருக்கிறீர்கள்! இனிய பாராட்டுக்கள்!

    ReplyDelete
  6. மறுமொழி > மனோ சாமிநாதன் said...

    // சாயப்பட்டறைகள், இடைத்தரகர்கள் போன்ற அதிகம் தெரியாத‌ தகவல்களை விரிவாக அலசி, சுவாரஸ்யமாகவும் தந்திருக்கிறீர்கள்! இனிய பாராட்டுக்கள்! //

    நீங்கள் தந்த பாராட்டுக்கள் யாவும் நூலாசிரியர் ஜோதிஜி அவர்களுக்கே சேரும். தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்
    நன்றி!


    ReplyDelete
  7. தி.தமிழிளங்கோ சார்,

    ஜோதிஜியின் டாலர் நகரம் குறித்த ஒரு நல்ல நேர்மறையான விமர்சனம் (ஹி..ஹி நானா இருந்தா புடிச்சு கொதறி இருப்பேன்,இன்னும் புத்தகம் கிடைக்கலை, படிச்சிட்டு ஜோதிஜிக்கிட்டே ஒரு வம்ப வளர்க்கணும்) அத்தியாயங்களையும் குறிப்பிட்டு விமர்சனம் செய்திருப்பது தனித்து காட்டுகிறது.

    ReplyDelete
  8. மறுமொழி > வவ்வால் said...

    // ஜோதிஜியின் டாலர் நகரம் குறித்த ஒரு நல்ல நேர்மறையான விமர்சனம் (ஹி..ஹி நானா இருந்தா புடிச்சு கொதறி இருப்பேன்,இன்னும் புத்தகம் கிடைக்கலை, படிச்சிட்டு ஜோதிஜிக்கிட்டே ஒரு வம்ப வளர்க்கணும்) அத்தியாயங்களையும் குறிப்பிட்டு விமர்சனம் செய்திருப்பது தனித்து காட்டுகிறது. //

    வவ்வாலின் பார்வைக்கு நன்றி! புத்தகத்தினைப் பெறுவதற்கு கீழே சொன்ன பதிவினைப் பார்க்கவும்.

    டாலர் நகரம் புத்தகம் வாங்க
    http://deviyar-illam.blogspot.in/2013/02/blog-post_7.html



    ReplyDelete
  9. விமர்சனம் மிகவும் விரிவாகவும், அழகாகவும், தெளிவாகவும் உள்ளது,
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  10. மறுமொழி >kovaikkavi said...
    சகோதரியின் அன்பான விமர்சனத்திற்கு நன்றி!



    ReplyDelete
  11. புத்தகம் எங்கு கிடைக்கும்

    ReplyDelete