Sunday, 14 October 2012

“எம்.ஆர்.ராதாவின் சிறைச்சாலை சிந்தனைகள்.”



1971 - இல் தினமணி கதிரில் எம்.ஆர்.ராதாவின் பேட்டியாக வந்தது இந்த நூல். ”சிறையில் இருந்தபோது பெரியார் மனம் வைத்தால் சீக்கிரமாக விடுதலையாகி விடலாம் என்று நீங்கள் நினைத்ததுண்டா” என்ற விந்தனின் கேள்வியுடன் பேட்டி தொடங்குகிறது. சென்னையிலிருந்து மதுரைக்கு ஓடிப் போன நாள்முதல். நாடக நடிகனாக இருந்து பின்னர் திரைப்பட நடிகராக இருந்த காலம் வரை எல்லாவற்றைப் பற்றியும் பேட்டியாக தந்துள்ளார். புத்தகத்தின் தொடக்கம் முதல் முடிவு வரை எம்.ஆர்.ராதாவின் கரகரப்பான குரலும் நம்மை தொடர்ந்து வருகிறது.அவருடைய அபிமானிகளுக்கும் அவருடைய மலேசிய பேச்சைக் கேட்டவர்களுக்கும்  இந்த புத்தகத்தை படிக்கும்போது இந்த அனுபவம்தான் உண்டாகும்.
  
அண்மையில் திருச்சியில் நடைபெற்ற புத்தக கண்காட்சிக்கு சென்றபோது வழக்கம் போல வாசிப்பு ஆர்வம் காரணமாக சில புதிய நூல்களை வாங்கினேன். “எம்.ஆர்.ராதாவின் சிறைச்சாலை சிந்தனைகள். என்ற மேலே சொன்ன நூலும் அவற்றுள் ஒன்று. எம்.ஆர். ராதாவை பேட்டி கண்டு எழுதியவர் ஆசிரியர் மறைந்த எழுத்தாளர் விந்தன். எம்.ஆர். ராதா என்றாலே அவர் முரடர் என்று பிம்பம் உண்டு. ஆனாலும் பயப்படாமல் நூலில் பல இடங்களில் எழுத்தாளர் விந்தன் அவரிடம் கேள்விகள் கேட்டுள்ளார்.

 
பாத காணிக்கை“ என்று ஒரு படம். அந்த படத்தில் ராதா பட்டாளத்து பரம்பரை சுட்டுடுவேன்என்று துப்பாக்கியை தூக்கியபடி அடிக்கடி இந்த வசனத்தைச் சொல்லுவார். நிஜ வாழ்க்கையிலும் அப்படித்தான் இருந்திருக்கிறார். நாடகக் கம்பெனியில் தன்னோடு மல்லுகட்டி நின்ற போடிநாயக்கனூரான் என்ற ஸ்டண்ட் நடிகரை மேடையிலேயே நிஜமாகவே சுட்டு இருக்கிறார். திருப்பதியில் வெடிகுண்டு தயாரித்து இருக்கிறார். என்.எஸ்.கே மீது இவருக்கு ஏனோ கோபம். அவரைச் சுடுவதற்கு ஒரு துப்பாக்கியை உளுந்தூர்பேட்டை ஆசாமி ஒருவரிடம் வாங்கியிருக்கிறார். இதனைக் கேள்விப்பட்ட என்.எஸ்.கே நேரிலேயே வந்து இவரிடம் சுடச் சொல்ல இருவருமே கட்டி பிடித்தபடி நண்பர்கள் ஆனார்கள். பார்ப்பதற்கு ஆள் முரடனாக தோன்றினாலும் மற்ற சினிமாக் கலைஞர்களைப் போலவே இவரும் ஒரு காதற் பறவைதான். ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை செய்து இருக்கிறார். . எம்.ஆர்.ராதா அவர்கள் எல்லாவற்றையும் வெளிப்படையாகவும் சுவையாகவும் சொல்லுகிறார். பெரியார், அறிஞர் அண்ணா, கருணாநிதி, ஜி.டி.நாயுடு, டி.வி.எஸ் அய்யங்கார், என்.எஸ்.கே, தோழர் ஜீவா - என்று தான் தொடர்பும் பழக்கமும் வைத்திருந்த அனைவரைப் பற்றியும் பேசுகிறார்.


பெரியாரின் அன்புத் தொண்டராக இருந்த போதும் தனது கண்கண்ட தெய்வமாக அந்நாளில் செஷன்ஸ் கோர்ட் ஜட்ஜாக இருந்த பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த கணேச அய்யரைக் குறிப்பிடுகிறார். அவர் தனக்கு  செய்த உதவிகளையும் மறக்காமல் சொல்லியுள்ளார். “விமலா அல்லது விதவையின் கண்ணீர்” என்ற நாடகத்தை எம்.ஆர்.ராதா நடத்தியபோது பழமைவாதிகள் கோர்ட்டில் தடை கோரி வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதியான கணேச அய்யர் நாடகத்தைப் பார்த்து விட்டு எம்.ஆர்.ராதாவை பாராட்டியதோடு இந்தியா முழுக்க இந்த நாடகம் நடத்தப்பட வேண்டும் என்றார். அதன் பிறகும் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஜட்ஜ் கணேச அய்யர் எம்.ஆர்.ராதாவிற்கு இக்கட்டான பல சந்தர்ப்பங்களில் உதவி செய்துள்ளார்.


தனக்கும் எம்ஜிஆருக்கும் எதனால் தகராறு ஏற்பட்டது என்பதனையும் ஓரிடத்தில் வெளிப்படையாகவே சொல்லுகிறார். எம்ஜிஆரால் தான் பாதிக்கப்பட்டது போலவே திரைப்பட உலகத்தினரில் சிலர்  பாதிக்கப்பட்டது குறித்தும் சொல்கிறார். “அந்த சமயத்திலே ராமச்சந்திரனாலே பாதிக்கப்பட்ட சில நடிகர்களும் நடிகைகளும் என்கிட்டே வந்து, அவர் எங்க பொழப்பை அப்படிக் கெடுத்துட்டார். அவர் செய்யற தான தர்ம சாகசத்தாலே இதெல்லாம் வெளியே தெரியமாட்டேங்குதுன்னு புகார் சொல்ல ஆரம்பிச்சாங்க அதேபோல தனக்கும் எம்ஜிஆருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டை பற்றியும் சில கருத்துக்களை புத்தகத்தின் கடைசி அத்தியாயத்தில் சொல்லுகிறார்.

அதுக்கு மேலே என்ன நடந்தது, நான் ஏன் ஜெயிலுக்குப் போனேங்கிறதெல்லாம் உங்களுக்கும் தெரியும். இந்த உலகத்துக்கும் தெரியும். அதைத் திரும்பத் திரும்பச் சொல்லி மேலே மேலே கசப்பை வளர்த்துக்கிட்டிருக்க நான் விரும்பல்லே. அப்படிச் சொல்லச் சொல்லி என்னை வற்புறுத்தறவங்களுக்கெல்லாம் நான் சொல்ற பதில் இதுதான். தயவு செஞ்சி என் வழக்கு சம்பந்தப்பட்ட விவரங்களைக் கொஞ்சம் விரிவா வெளியிட்டிருக்கிற பேப்பருங்களை எடுத்து வைச்சுக்கிட்டு இன்னொரு தடவை ஊன்றிப் படியுங்க என்கிறதே அது. அதுங்களிலே இருக்கிற என் வக்கீல்களின் வாதங்கள் உங்களுக்கு உண்மையை ஓரளவாவது எடுத்துக் காட்டும்


புத்தகத்தின் தலைப்பில் சிறைச்சாலை அனுபவங்கள் என்று சொல்லப்பட்டாலும் சிறையில் தான் பட்ட அனுபவங்களையோ அல்லது அதனால் ஏற்பட்ட சிந்தனைகளைப் பற்றியோ இங்கு எம்.ஆர்.ராதா சொல்லவில்லை. முழுக்க முழுக்க அவருடைய வாழ்க்கைக் குறிப்புகளே.புத்தகத்தில் ஆங்காங்கே இருக்கும் அவரது கருத்துக்கள் சில: 

"எனக்குத் தெரிஞ்ச வரையிலே ரோசமுள்ளவனும் மானமுள்ளவனும் ஜெயில்லே இருக்கான்! அங்கே வேலை கெடைக்குது. கூலி கெடைக்குது"

"தமிழனைப் பொறுத்தவரையிலே எந்த வீரமும் சோறில்லாமல் போனாத்தான் வரும்”

"படிக்காதவனுக்குச் சட்டம் தெரியறதில்லே; படிச்சவனுக்குச் சட்டம் தெரியுது. அதனாலே படிக்காதவன் எந்தத் தப்பைச் சேஞ்சாலும் சட்டத்துக்கு விரோதமா சேஞ்சிட்டு மாட்டிக்கிறான். படிச்சவன், செய்ய வேண்டிய அயோக்கியத் தனங்களை யெல்லாம் சட்டப்படிடே சேஞ்சிட்டு என்னிக்கும் பெரிய மனுஷனா பெயர் எடுத்துக்கிட்டிருக்கான்."

"என்ன பிரயோசனம்? ஊர்ப் பெரிய மனுஷங்க ரவுடிசமெல்லாம் அந்தந்த ஊரிலேதானே செல்லும்? மற்ற ஊர்களிலே செல்லாதே" 




நூல் வெளியீடு: பாரதி புத்தகாலயம், சென்னை. நூலின் விலை ரூ 70 பக்கங்கள்: 144






17 comments:

  1. //படிச்சவன், செய்ய வேண்டிய அயோக்கியத் தனங்களை யெல்லாம் சட்டப்படியே செஞ்சிட்டு என்னிக்கும் பெரிய மனுஷனா பெயர் எடுத்துக்கிட்டிருக்கான்."//

    நல்ல பதிவு ஐயா. எம்.ஆர். ராதா பற்றி ஓரளவு தெரிந்துகொள்ள முடிகிறது. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  2. திரையிலும் நிசத்திலும் ஒரே மாதிரியாக இருந்தாரோ?

    ReplyDelete
  3. REPLY TO … வை.கோபாலகிருஷ்ணன் said...
    திரு VGK அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  4. REPLY TO … T.N.MURALIDHARAN said...

    // திரையிலும் நிசத்திலும் ஒரே மாதிரியாக இருந்தாரோ? //

    சிறு வயதிலிருந்தே நான் எம்ஜிஆர் ரசிகன். விவரம் தெரிய ஆரம்பித்ததும்தான் மற்ற நடிகர்களின் படங்களையும் பார்க்க ஆரம்பித்தேன். எம்.ஆர்.ராதா பற்றி பத்திரிக்கைகளில், புத்தகங்களில் படித்ததோடு சரி.


    ReplyDelete

  5. இராதா பற்றிய சில செய்திகள் அறிய முடிந்தது! நன்றி!

    ReplyDelete
  6. REPLY TO … புலவர் சா இராமாநுசம் said...
    புலவர் அய்யாவின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  7. நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் தகவலுக்கு நன்றி... ஒரு பாடல் விரைவில் என் பதிவில் வரும்...

    ReplyDelete
  8. REPLY TO … திண்டுக்கல் தனபாலன் said...
    வருகைக்கு நன்றி! உங்கள் பதிவில் பாடலை எதிர் பார்க்கிறேன்!

    ReplyDelete
  9. நிச்சயம் படிக்கவேண்டிய நூலாக
    இருக்கும் போல இருக்கே
    படித்து விடுகிறேன்
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  10. REPLY TO ….Ramani said... // நிச்சயம் படிக்கவேண்டிய நூலாக இருக்கும் போல இருக்கே படித்து விடுகிறேன் //

    வாசிப்பு பழக்கமும் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் கொண்ட தாங்கள் படிக்க வேண்டிய நூல்தான்.

    ReplyDelete
  11. ஒவ்வொருவரும் தன் தலைமுறைக்கு என சிலவிசயங்களைக் (சொத்து, பணம் தவிர்த்து) கொடுத்து விட்டுச் செல்வார்கள். ஆனால் இவர் வாரிசுகள் இவரிடம் இருந்து எதையுமே கற்றுக் கொள்ளவில்லை என்ற வருத்தம் எப்போதும் எனக்குள் உண்டு. இப்போது நடிகை ராதிகா மட்டும் சிறந்த நிர்வாகியாக வளர்ந்துள்ளார்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் ஜோதிஜியின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      Delete
  12. நடிகர்களின் தொழில், வருமானம் பற்றியும், வருமானவரியை நடிகர்கள் ஏமாற்றுவது பற்றியும் இன்னும் சில துணிச்சலான கருத்துகளுக்கும் எம் ஆர் ராதா பெயர் பெற்றவர்! நல்ல பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் ஸ்ரீராம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete