Saturday, 14 July 2012

என்றுமே எனக்கு குருவாய்!


                                   ( PHOTO  THANKS TO  “ GOOGLE ” )

எத்தனை முறை தப்பாய் எழுதினாலும்
தாயனைய தவறினைத் திருத்தி
ஆனா ஆவன்னா சொல்லித் தந்த
முகம் மட்டும் நினைவில் நிற்கும்
அந்த முதல் வகுப்பு ஆசிரியை
எனது முதல் குருவாய்!

காணாத ஊரினில் ஒருவரைக்
காணச் சென்ற போது!
ஒற்றைப் பனை அருகே
இரண்டு ஒற்றையடிப் பாதைகள்
எந்த ஊருக்கு எந்தப் பாதை
என்று தெரியாதே நான் விழித்தபோது
வழிகாட்டிச் சென்றான்
மாடோட்டும் சிறுவன் ஒருவன்!
அவனே அங்கே குருவாய்!

புதிதாய் வேலைக்குச் சேர்ந்த போது
வங்கிப் பணி, பண சமாச்சாரம் என்றே
நமக்கென்ன என்று எல்லோரும்
ஒதுங்கி ஒதுங்கிச் சென்றனர்!
ஒருவர் மட்டும் புன்னகையோடு
கேட்கும் போதெல்லாம் ஐயம் தீர்த்து
சொல்லிக் கொடுத்தார் வேலைகளை
அவரே அங்கே குருவாய்!

அலைவீசும் பிரச்சினைகள்
எழுந்த போதெல்லாம் எனக்கு
ஆறுதல் சொல்லி என்றும்
நல்வழி காட்டி யோசனைகள்
சொன்ன நண்பர் ஒருவர்
வாழ்வியலில் எனக்கு குருவாய்!

திசைகெட்டு திசைமாறிப்
போய்விடாமல் என்னைத் தடுத்து
ஆட்கொள்ளும் இறைவன்
பல்வேறு நிலைகளில்
பல்வேறு வடிவில்
என்றுமே எனக்கு குருவாய்!

                             




11 comments:

  1. குரு தரிசன்ம் அருமை.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. திசைகெட்டு திசைமாறிப்
    போய்விடாமல் என்னைத் தடுத்து
    ஆட்கொள்ளும் இறைவன்
    பல்வேறு நிலைகளில்
    பல்வேறு வடிவில்
    என்றுமே எனக்கு குருவாய்!//

    அருமை அருமை
    நல்ல எழுத்து கூட எனக்கு பலசமயங்களில்
    நல்ல வழிகாட்டியாய், குருவாய் இருந்துள்ளது
    மனம் கவர்ந்த அருமையான படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. //திசைகெட்டு திசைமாறிப்
    போய்விடாமல் என்னைத் தடுத்து
    ஆட்கொள்ளும் இறைவன்
    பல்வேறு நிலைகளில்
    பல்வேறு வடிவில்
    என்றுமே எனக்கு குருவாய்//

    உண்மைதான் இளங்கோ! என்றும் குருவாய்,
    உருவாய் உள்ளவன் இறைவன் மட்டுமே! அதில்
    ஐயமில்லை! நல்ல சிந்தனை!அருமை வாழ்த்து!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  4. REPLY TO….//. இராஜராஜேஸ்வரி said...//
    உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி !

    ReplyDelete
  5. REPLY TO ….. // Ramani said... //

    //… நல்ல எழுத்து கூட எனக்கு பலசமயங்களில்
    நல்ல வழிகாட்டியாய், குருவாய் இருந்துள்ளது… //

    ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வடிவில் இயற்கை வடிவில் இறைவன் குருவாக இருந்து வழிகாட்டியாய் இருக்கின்றான். நமக்கு தெரிவதில்லை. கவிஞரின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  6. REPLY TO ... // புலவர் சா இராமாநுசம் said....//
    புலவர் அய்யாவின் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    ReplyDelete
  7. நல்ல கருத்து பொருந்திய வரிகள் அருமை . எனக்கும் முதல் வகுப்பு ஆசிரியர் என்றால்
    எத்தனை முறை தப்பாய் எழுதினாலும்
    தாயனைய தவறினைத் திருத்தி
    ஆனா ஆவன்னா சொல்லித் தந்த
    முகம் மட்டும் நினைவில் நிற்கும்
    அந்த முதல் வகுப்பு ஆசிரியை
    எனது முதல் குருவாய்!
    இந்த வரிகளைப் போன்று உயர்நத எண்ணங்கள் நினைவுக்கு வரும்.

    ReplyDelete
  8. REPLY TO …… // Sasi Kala said... //

    எல்லோருக்கும் முதல் வகுப்பு ஆசிரியை முதல் குருதான். சகோதரியின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  9. நமக்கு பலநிலைகளில் பலரும் குருவாய் அமைந்து விடுவதை நன்றாக நயமாகச் சொல்லியுள்ளீர்கள், ஐயா.

    பாராட்டுக்கள். vgk

    ReplyDelete
  10. REPLY TO >>>> // வை.கோபாலகிருஷ்ணன் said... //
    VGK அவர்களுக்கு வணக்கம்! தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete