Thursday, 2 March 2017

கவியரசு கண்ணதாசன் கதை – நூல் விமர்சனம்செட்டிநாட்டில் உள்ள சிறுகூடல் பட்டியில் பிறந்த முத்தையா எப்படி கவிஞர் கண்ணதாசன் ஆனார், திரையுலகில் மட்டுமல்லாது தமிழ் இலக்கிய உலகிலும் எவ்வாறு புகழ்பெற்றார் என்பதனைச் சொல்லும் வாழ்க்கை வரலாற்று நூல் இது. ‘கவியரசு கண்ணதாசன் கதை’ என்ற - இந்நூலை எழுதிய எழுத்தாளர் வணங்காமுடியின் இயற்பெயர் சு.ராமகிருஷ்ணன் என்பதாகும். இவரது சொந்த ஊர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த செட்டிகுளம் பண்ணையூர் ஆகும். ராணி வார இதழின் துணை ஆசிரியரான இவர் இந்தத் தொடரை அந்த பத்திரிகையில் 64 வாரங்கள் எழுதியுள்ளார்.
கவிஞர் கண்ணதாசன் மனவாசம், வனவாசம், அர்த்தமுள்ள இந்துமதம் என்று, தான் எழுதிய எல்லா நூல்களிலும், அவர் தனது வாழ்க்கைச் சம்பவங்களை ஆங்காங்கே சொல்லி இருக்கிறார். ஆனால் எழுத்தாளர் வணங்காமுடி அவர்கள் கவிஞரின் எல்லா அம்சங்களையும் உள்ளடக்கி, கவிஞரின் தோற்றம் முதல் மறைவு வரை ஒரு முழு நூலாக சுவைபடச் சொல்லி இருப்பதே இந்த நூலின் பெருமை ஆகும்.

கவிஞரும் மதுவும்:

கண்ணதாசனும் மதுவும் மங்கையும் என்று பெரிய கட்டுரையே எழுதலாம். அவற்றை பல்வேறு பக்கங்களில் ஆசிரியர் சொல்லிச் செல்கிறார்.

‘” உங்களைக் கவிஞராக்கிய நிகழ்ச்சி எது? “ என்று வாசகர் ஒருவர் கேட்டார்.  அதுக்கு கண்ணதாசன் சொன்ன பதில் “என் முதல் காதல் தோல்வி “ அப்போதெல்லாம் அவர் அடிக்கடி முணுத்த பாடல் இது (இந்நூல் பக்கம்.26)

என் அன்னை செய்தபாவம் நான் மண்ணில் வந்தது
என் அழகு செய்த பாவம் நீ என்னைக் கண்டது
நம் கண்கள் செய்த பாவம் நாம் காதல் கொண்டது

”ஒருபக்கம் மதுவையும்,, மறுபக்கம் மாதுவையும் வைத்தால் உங்கள் மனம் என்ன செய்யும்?” என்ற கேள்விக்கு, “எனக்கு இரண்டு கரங்கள் .ஒரே மனம். அவை, சம அளவில் பிரியும்” என்று பதிலளித்தார், கண்ணதாசன். (இந்நூல் பக்கம்.87)

வசமான பெண்மையும் வளமான கிண்ணமும்
வாழ்க்கையில் உள்ள மட்டும்
வாராது வஞ்சகம் வாராதிங்கு என்னிடம்
வாராது மரண பயமே!
…… ….. ….. ….. …..
தங்கமே கிண்ணமெங்கே?
சரிபாதி நீயுண்டு தருவாய் என்கையிலே
தழுவாது மரண பயமே!

என்பது கவிஞரின் ‘மதுக்கோப்பை’ என்ற கவிதை.(இந்நூல் பக்கம்.88)

கவிஞரின் பாட்டு பிறந்த கதை:

நூலின் பல இடங்களில், கவிஞரின் பாடல் வரிகளைக் காட்டும் நூலாசிரியர் வணங்காமுடி ‘பாட்டு பிறந்த கதை’ என்ற தலைப்பில், சில பாடல்கள் பிறந்த பின்னணியையும் சுவையாகச் சொல்லுகிறார்.

‘கர்ணன்’ படத்தில் வரும் ’உள்ளத்தில் நல்ல உள்ளம் .உறங்காதென்பது, வல்லவன் வகுத்ததடா’ என்ற பாடல் பெருந்தலைவர் காமராஜரை நினைத்து எழுதியது. (இந்நூல் பக்கம்.106)

‘படிக்காத மேதை’ படத்தில் இடம் பெற்ற ‘ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா’ பாடலில் பாதி, பாங்குக்கு போகும் அவசரத்தில் எழுதியது. (இந்நூல் பக்கம்.107)

கவிஞர் கண்ணதாசனின் சொந்தப் படமான ’கறுப்புப் பணம்’ வெளியான போது கவிஞருக்கு கடன் அதிகம். கவிஞருக்கு அப்போது, தீபாவளிக்கு கையில் காலணா இல்லை. அப்போது பி.எஸ். வீரப்பா ‘ஆனந்த ஜோதி’ என்ற படத்திற்கு பாட்டெழுத அழைக்கிறார். அப்போது எழுதிய பல்லவி ‘காலமகள் கண் திறப்பாள் சின்னையா – நாம் கண்கலங்கி கவலைப்பட்டு என்னையா?” (இந்நூல் பக்கம்.112)

சம்பத்துக்காக தேர்தலில் கடுமையாக உழைத்தார் கவிஞர் கண்ணதாசன். இருந்தும் அவர் தோல்வி. அப்போது கவிஞர் எழுதிய ஒரு பாடல் ‘யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல’ (இந்நூல் பக்கம்.118)

ஒருமுறை அறிஞர் அண்ணா , தன்னைப் பார்க்க வந்த தி.மு.க தொண்டரிடம், ‘நீங்கள் எந்த ஊர்?” என்று கேட்க, அவர் “கருவூரிலிருந்து வருகிறேன்” என்று சொன்னார். உடனே அண்ணா “எல்லோரும் கருவூரிலிருந்து தான் வருகிறார்கள்’ என்று மென்சிரிப்பு செய்தார். இதை அருகிலிருந்து ரசித்த கவிஞர், அந்த சம்பவத்தை பின்னாளில் ‘எந்த ஊர் என்றவனே” என்று தொடங்கும் பாடலை எழுதினார் .(இந்நூல் பக்கம்.123)

இப்படி நிறைய குறிப்புகளைத் தந்து இருக்கிறார் நூலாசிரியர்.

அரசியலும் கவிஞரும்

தி.மு.கவில் இருந்தபோது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை ”வனவாசம்” என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். தி.மு.கவை விட்டு விலகியதும் (குறிப்பாக காங்கிரஸ் கட்சியில் இருந்த காலத்து) நடந்த சம்பவங்களை, “மனவாசம்” என்று எழுதினார். சிலர் வனவாசம் என்ற நூலை வைத்துக் கொண்டு கருணாநிதிக்கும் கவிஞருக்கும் இடையில் ஏதோ தீராப் பகைமை போல் பேசுவார்கள். ஆனால் நமது ஆசிரியர் வணங்காமுடி அவர்கள், தமது நூலில், இருவருக்கும் இடையில் எத்தகைய அன்பு இழையோடியது என்பதை, கருணாநிதி மீது காதல், காதல் அல்ல… கனிந்த அன்பு – என்ற தலைப்புகளில் சொல்லி இருக்கிறார். மேலும் இருவருக்கும் இடையில் எதனால் நிரந்தர இடைவெளி உண்டாகியது என்பதனையும் அடுத்து வரும் சில தலைப்புகளில் மிகைப்படுத்தாமல் சொல்லி இருக்கிறார். மேலும் கண்ணதாசனுக்கு கலைஞர் கருணாநிதி ‘கவிஞர் என்ற பட்டம் தந்ததும், கவிஞரை முதன்முதல் அரசியல் மேடையில் பேசச் சொன்னதும் பொள்ளாச்சியில்தான் என்று சுவைபடச் சொல்லி இருக்கிறார் ஆசிரியர் வணங்காமுடி. (இந்நூல் பக்கங்கள் 136 முதல் 139 முடிய)

மற்ற அரசியல் தலைவர்களுடனும் இவர் அவ்வப்போது இணக்கம் கொண்டு இருந்ததையும், சுணக்கம் கொண்டதையும் நூலின் பல பக்கங்களில் காணலாம். இங்கே கலைஞர் கருணாநிதியுடனான நட்பை மட்டும், நான் சொல்லக் காரணம், ஏதோ அவர்களுக்கிடையில் ஜென்மப்பகை போன்று தவறாக சொல்வதால்தான்.
 
சில சுவையான தகவல்கள்

கண்ணதாசனுக்கு மதுப்பழக்கம் ஏற்பட காரணமாக இருந்த நண்பர்கள் இருந்த ஊர் புதுக்கோட்டை இராயவரம். எனவே கவிஞர் புதுக்கோட்டையை மதுக்கோட்டை என்றே செல்லமாக அழைப்பார் .(இந்நூல் பக்கம்.90)

ஒருமுறை கவிஞர் கண்ணதாசன், நண்பர்களுடன் காரில் செல்லும்போது, வேலூர் நகர எல்லையில் வடை டீ சாப்பிட காரை நிறுத்துகிறார். அப்போது அங்கு வந்த பள்ளி மாணவர்களில் ஒருவன்  அவரைப் பார்த்தவுடன் ‘நீங்கள் பாடல் கண்ணதாசன்தானே?” என்று கேட்கிறான். அவனிடம் அவர் “பாடல் கண்ணதாசன் என்று எதில் படித்தாய் தம்பி?” என்று சிரித்தபடியே கேட்க, அவன் “ரேடியோவில் சார்” என்று பதிலளித்தான். .(இந்நூல் பக்கம்.183 – அப்போதெல்லாம் வானொலியில் பாடலாசிரியர் பெயரைச் சொல்லும் போது, கவிஞரை பாடல் கண்ணதாசன் என்று சொல்லுவார்கள்)

1977 ஆம் ஆண்டு வாக்கில், கவிஞர் கண்ணதாசன் அவர்கள், அப்பாஸ் இப்ராகிம் என்ற நண்பர் நடத்திய பத்திரிகையில், அவரது வேண்டுகோளுக்கு இணங்க திருக்குரானுக்கு விளக்கவுரை எழுதத் தொடங்கினார். சில நண்பர்கள் அதை விரும்பவில்லை; கண்டனம் தெரிவித்தார்கள். கண்ணதாசனும் ஒரு அறிக்கை வெளியிட்டு விட்டு மேற்கொண்டு எழுதுவதை நிறுத்தி விட்டார். (இந்நூல் பக்கம் – 377)

’இன்றைய இளைஞனுக்கு என்னுடைய வாழ்க்கை ஓர் எச்சரிக்கை. புகை,மது போன்ற கொடிய பழக்கங்களைப் பழகிக் கொள்ளக் கூடாது, எப்படி வாழ வேண்டும் என்பதற்கல்ல … எப்படி வாழக்கூடாது என்பதற்கு நான் ஒரு எடுத்துக் காட்டு’. – கவிஞர் கண்ணதாசன்

தனது வாழ்க்கை பற்றி கவிஞர் சொன்ன வார்த்தைகள் இவை. (இந்நூல் பக்கம் – 100)

இன்னும் நிறையவே இந்நூலில் தகவல்கள் உண்டு. கவிஞர் கண்ணதாசன் பற்றி கட்டுரைகள் எழுத விரும்புவோருக்கும், மேடையில் பேச விரும்புபவர்களுக்கும், மற்றும் கவிஞர் மீது ஆர்வமும் பற்றும் கொண்டவர்களுக்கும் பயனுள்ள நூல்.

நூலின் பெயர்: கவியரசு கண்ணதாசன் கதை
ஆசிரியர்: வணங்காமுடி
நூலின் பக்கங்கள்: 424 விலை:  ரூ 80/=  நான்காம் பதிப்பு டிசம்பர், 2008
நூல் வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாச்ன் சாலை, தியாகராய நகர், சென்னை – 600017 தொலைபேசி 0431 24332682

(இப்போது இந்நூலின் விலை ரூ 130/= என்று தெரிய வருகிறது)

தொடர்புடைய எனது பிற பதிவுகள்

கவிஞர் கண்ணதாசனும் விமர்சனங்களும் http://tthamizhelango.blogspot.com/2014/05/blog-post.html
கவிஞர் கண்ணதாசன் பாடலும் நெடுநல்வாடையும் http://tthamizhelango.blogspot.com/2013/07/blog-post_938.html
எங்கள் கல்லூரி விழாவில் கண்ணதாசன் http://tthamizhelango.blogspot.com/2013/06/blog-post_24.html   

31 comments:

 1. நல்லதொரு அறிமுகம்.

  கண்ணதாசன் - வியக்க வைத்த மனிதர்.

  பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நண்பரின் கருத்துரைக்கு நன்றி

   Delete
 2. ஒவ்வொரு பாடலுக்கும் பின் எத்தனை நிகழ்வுகள்....! ஆவலைத் தூண்டும் விமர்சனம்...

  ReplyDelete
 3. நானும் வேலூர் காரனே! என நாணத்துடன்
  நவில்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நண்பரே இதில் நாணப்படுவதற்கு என்ன இருக்கிறது.

   Delete
  2. நண்பரே இதில் நாணப்படுவதற்கு என்ன இருக்கிறது.

   Delete
 4. மரித்தாலும்
  மறையாத எளிய
  மணிதரை
  மதிக்க
  மறந்த
  மன்னிப்பே இல்லை.

  ReplyDelete
  Replies
  1. மறந்த (மாந்தர்க்கு) என சேர்த்து படிக்கவும்.

   Delete
  2. நண்பரின் கருத்துரைக்கு நன்றி.

   Delete
 5. இந்த நூலின் முதல் பதிப்பிலேயே படித்துவிட்டேன். தொடராகவும் படித்திருக்கிறேன். பொதுவாக, ஒரு எழுத்தாளனின் சரித்திரம் என்பது மக்களால் அதிக அளவில் ஆதரிக்கப்படுவதில்லை. ஆனால் கண்ணதாசனின் நிலைமை வேறு. இன்று சுமார் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் எல்லாம் கண்ணதாசனை ஒரு கவிஞனாக, நடிகராக, திரைப்பட தயாரிப்பாளராக, பத்திரிகையாளனாக, காமராஜரின் அரசியல் தொண்டனாக, கடைசியில் மிகச்சிறந்த தத்துவ எழுத்தாளராக - என்று பல்வேறு வடிவங்களில் அன்றாடம் சந்தித்தவர்கள்.எனவே கண்ணதாசனின் வரலாற்றைப் படிக்கிறபோது நம் வீட்டு உறவினரின் கதைபோலவே நமது நெஞ்சை நெருக்கிக்கொண்டு உள்ளே நுழைந்துவிடுகிறது. 51 வயதில் அவரை அழைத்து கொண்ட ஆண்டவன் உண்மையிலேயே அரக்கமனம் படைத்தவனே.

  - இராய செல்லப்பா நியூஜெர்சி

  ReplyDelete
  Replies
  1. அய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி. கவிஞர் இறந்தபோது அவருக்கு வயது 54. எனவே இந்தியர்களின் சராசரி வயதைக் கணக்கிட்டால், நீங்கள் சொல்வதைப் போல ஆண்டவனுக்கு இரக்கம் இல்லை.

   Delete
 6. நூல் அறிமுகம் வழக்கம்போல தங்கள் பாணியில் மிகவும் அருமை. பல்வேறு செய்திகளை மிகவும் அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  //அப்போது அங்கு வந்த பள்ளி மாணவர்களில் ஒருவன் அவரைப் பார்த்தவுடன் ‘நீங்கள் பாடல் கண்ணதாசன்தானே?” என்று கேட்கிறான். அவனிடம் அவர் “பாடல் கண்ணதாசன் என்று எதில் படித்தாய் தம்பி?” என்று சிரித்தபடியே கேட்க, அவன் “ரேடியோவில் சார்” என்று பதிலளித்தான்.//

  இதனை மிகவும் ரஸித்து மகிழ்ந்தேன்.

  ReplyDelete
  Replies
  1. மரியாதைக்குரிய மூத்த வலைப்பதிவர் V.G.K அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.

   Delete
 7. ரேடியோவில் அந்த காலத்தில் பாடியவர்கள் பேர், பாடல் எழுதியவர், படத்தின் பேர் எல்லாம் சொல்வார்கள். அந்த பையன் அவரை பத்திரிக்கைகளிலும் பார்த்து இருப்பான், அதுதான் எதில் படித்தாய் என்று கேட்டு இருக்கிறார். பத்திரிக்கை, வானொலி கேட்பது தான் அப்போது உள்ள பொழுது போக்கு.

  நூல் விமர்சனம் அருமை.

  ReplyDelete
  Replies
  1. மேடம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

   Delete
 8. ஆவலைத் தூண்டுகின்ற நல் விமரசனம் ஐயா
  என்னிடம்இருக்கின்ற நூல்தான்
  ஆயினும் தங்களின் பதிவினைப் படித்தபின் மீண்டும் ஒரு முறை
  படிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுகிறது
  நன்றி ஐயா

  ReplyDelete
  Replies
  1. ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

   Delete
 9. நானும் புத்தகமாக வாங்கி வைத்துப் படித்து ரசித்திருக்கிறேன். கண்ணதாசன் திரைப் பாடல்கள் தொகுப்பும் வைத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நண்பர் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி.

   Delete
 10. கவியரசர் கண்ணதாசன் பற்றி நாம் அறிந்திருந்தாலும், தாங்கள் திறனாய்வு செய்துள்ள ‘கவியரசு கண்ணதாசன் கதை’ நமக்குத் தெரியாத பல புதிய தகவல்களைத் தருகிறது என்பதை தங்களின் ‘நூல் விமர்சனம்’ மூலம் அறிந்துகொண்டேன். அருமையான திறனாய்வுக்கு பாராட்டுகள்!
  கலைஞர் கருணாநிதிக்கும் கவியரசர் கண்ணதாசனுக்கும் இடையில் எத்தகைய அன்பு இழையோடியது கீழே தந்துள்ள பாடல்களே விளக்கும்
  உண்மையில் அவர்களுக்குள் நடந்தது போலிச் சண்டை என்பார் விவரம் அறிந்தோர். கலைஞர் கருணாநிதியை புகழ்ந்து கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடலை கீழே தந்துள்ளேன்
  நிதான புத்தி நேரிய பார்வை
  நின்று கண்டறிந்து நெடுவழி செல்லல்
  சதாவ தானத் தனிப்பெருந் திறமை
  தன்னை யறிந்து பிறர்உளம் நோக்கல்
  நதியென ஓடி நாளெலாம் உழைத்தல்
  நாடும் மக்களும் நலம்பெற நினைத்தல்
  அதிசயச் சொற்றிறன் ஆய்வுறு கூர்மதி
  அன்பர் நலத்திலும் அக்கறை செலுத்துதல்
  மதியுறு மாண்தகை மந்திரிக் கிவையே
  இலக்கண மென்றால் இலக்கியம் அவரே!
  கருணா நிதியின் தனித்தமிழ் அரசு
  பலநாள் நிலைக்கப் பக்குவம் பெற்றது
  வாழிய நண்பர்! வாழிய அமைச்சர்!
  வாழிய கலைஞர்! வாழிய தமிழர்!
  - கவிஞர் கண்ணதாசன்

  கவியரசர் கண்ணதாசன் 1981 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் நாள் மறைந்தபோது கலைஞர் கருணாநிதி எழுதிய இரங்கற்பா. கீழே.

  என் இனிய நண்பா
  இளவேனிற் கவிதைகளால்
  இதயசுகம் தந்தவனே! உன்
  இதயத்துடிப்பை ஏன் நிறுத்திக் கொண்டாய்!

  தென்றலாக வீசியவன் நீ - என்நெஞ்சில்
  தீயாகச் சுட்டவனும் நீ! அப்போதும்
  அன்றிலாக நம் நட்பு நிகழ்ந்ததேயன்றி
  அணைந்த தீபமாக ஆனதே இல்லை; நண்பா!

  கண்ணதாசா! என்
  எண்ணமெல்லாம் இனிக்கும் நேசா!
  கவிதை மலர்த் தோட்டம் நீ - உன்னைக்
  காலமெனும் பூகம்பம் தகர்த்துத்
  தரைமட்டம் ஆக்கிவிட்டதே!

  கைநீட்டிக் கொஞ்சுவோர் பக்கமெல்லாம்
  கரம் நீட்டித் தாவுகின்ற குழந்தை நீ!
  கல்லறைப் பெண்ணின் மடியிலும்
  அப்படித்தான் தாவி விட்டாயோ
  அமைதிப்பால் அருந்தித் தூங்கி விட!


  இயக்க இசைபாடிக்களித்த குயில் உன்னை
  மயக்க மருந்திட்டுப் பிரித்தார் முன்னை
  தாக்குதல் கணை எத்தனைதான் நீ
  தொடுத்தாலும்
  தாங்கிக் கொண்ட என்நெஞ்சே உன் அன்னை!
  திட்டுவதும் தமிழில் நீ திட்டியதால் –
  சுவைப்பிட்டு என ஏற்றுக் கொண்ட என்னை;

  தித்திக்கும் கவித்தமிழா! பிரிவின்
  மத்தியிலே ஏன் விட்டுச் சென்றாய் ?
  அடடா! இந்த இளமைக் கழனியில்
  அன்பெனும் நாற்று நட்டோம்!

  ஆயிரங்காலத்துப் பயிர் நம் தோழமையென
  ஆயிரங்கோடி கனவு கண்டோம்!
  அறுவடைக்கு யாரோ வந்தார்!
  உன்னை மட்டும் அறுத்துச் சென்றார்

  நிலையில்லா மனம் உனக்கு! ஆனால்
  நிலைபெற்ற புகழ் உனக்கு!

  இந்த அதிசயத்தை விளைவிக்க உன்பால்
  இனியதமிழ் அன்னை துணை நின்றாள்!

  என் நண்பா!

  இனிய தோழா!

  எத்தனையோ தாலாட்டுப்பாடிய உன்னை
  இயற்கைத் தாய் தாலாட்டித் தூங்க வைத்தாள்!
  எத்தனையோ பாராட்டுப் பெற்ற உனக்கு
  இயற்கைத்தாயின் சீராட்டுத்தான் இனிக்கிறதா?

  எனை மறந்தாய்! எமை மறந்தாய்! உனை
  மறக்க முடியாமல் உள்ளமெல்லாம் நிறைந்தாய்!
  கலைஞர் மு.கருணாநிதி


  இருவரும் கொள்கை ரீதியாக மாறுபட்டபோதிலும் தனிப்பட்ட முறையில் நண்பர்களாகவே இருந்திருக்கிறார்கள். இவர்கள் போட்டுக் கொண்ட ‘சண்டை’ யால் நமக்கு நல்ல பாடல்கள் கிடைத்தன என்பதுதான் உண்மை.

  ReplyDelete
  Replies
  1. அய்யா V.N.S அவர்களின் கருத்தினுக்கும், கலைஞர் கருணாநிதி அவர்கள் கவிஞர் இறந்தபோது எழுதிய இரங்கற்பாவை மீண்டும் படிக்க வாய்ப்பளித்தமைக்கும் நன்றி. (கவிஞர் கண்ணதாசன் கலைஞரைவிட எம்ஜிஆரைத்தான் அதிகம் விமர்சனம் செய்ததாக நினைவு. இந்த விஷயத்தில் இவரோடு கூட்டு சேர்ந்து கொண்டவர் எழுத்தாளர் ஜெயகாந்தன்.)

   Delete
 11. படைப்பதனால் என் பேர் இறைவன் என்று கர்வத்துடன் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு மகா கவிஞன் அல்லவா :)

  ReplyDelete
  Replies
  1. நண்பர் பகவான்ஜீ அவர்களுக்கு நன்றி.

   Delete
 12. காங்கிரசில் சேரவோ இல்லை காமராஜரிடம் வேண்டியோ எழுதிய பாடல் இது என்றும் சொல்வார்கள் “அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி”கண்ணதாசன் பற்றி நிறையக் குறிப்புகள் படித்திருந்தாலும் தெரியாத செய்திகளையும் சொல்லிச் செல்லும் நூல் போல் இருக்கிறது பகிர்வுக்கு வாழ்த்துகள்/ பாராட்டுகள்

  ReplyDelete
  Replies
  1. அய்யா ஜீஎம்பி அவர்கள் சொல்வது சரிதான். அந்த சிவகாமி மகனுக்காக அவர் எழுதிய பாடல் என்றுதான் நானும் படித்து இருக்கிறேன்.

   Delete
 13. ஒரு அருமையான நூலை மிக
  அருமையாகப் பதிவு செய்தமைக்கு
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
  வனவாசம் மற்றும் மனவாசம்
  கைவசம் உள்ளது
  இந்த நூலையும் அவசியம் வாங்கிவிடுவேன்
  பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. கவிஞர் அய்யா அவர்களுக்கு நன்றி.

   Delete
 14. கண்ணதாசனைப் போன்ற பாவரசரை
  இனிக் காணவே கிடைக்காது
  அந்தப் பாவரசரை - என்றும்
  எந்த வாசகரும் நினைவூட்டுவரே!

  ReplyDelete
  Replies
  1. கவிஞர் அவர்களுக்கு நன்றி.

   Delete
 15. கவிஞரைப் பற்றி அவரது அனுபவங்களைச் சுவைபட இங்குப் பகிர்ந்தமைக்கு நன்றி. பல நிகழ்வுகள் வார மாத இதழ்களில் அவ்வப்போது வாசித்திருந்தாலும், இங்கு பல அறியாதவற்றையும் அறிந்தோம். மிக்க நன்றி. நண்பரே/சகோ

  இணையப் பிரச்சனையினால் வர இயலாது போனது.

  ReplyDelete