Sunday, 2 September 2018

செப்டம்பரே வா – COME SEPTEMBER


வலைப்பக்கம் பதிவுகள் எழுதி ரொம்ப நாளாயிற்று. இந்த பதிவை, நேற்றே (செப்டம்பர்.1, 2018) எழுதி வெளியிடுவதாக இருந்தது. ஆனால் எங்கள் பகுதியில் அன்று ஒருநாள் மாதாந்திர மின்சாரம் நிறுத்தம் என்பதால் எழுத இயலாமல் போயிற்று.

கிராமபோன் இசை

அப்போது நான், திருச்சி நேஷனல் உயர்நிலைப் பள்ளியில் ( 1965 – 1971)  படித்துக் கொண்டு இருந்தேன். அருகில் உள்ள செயிண்ட் ஜோசப் பள்ளி மற்றும் கல்லூரி ஆகியவற்றில், படிக்கா விட்டாலும், எனது கல்லூரிப் படிப்பு முடியும் வரை, விடுமுறை தினங்களில், அந்த கல்வி வளாகத்தில் இருந்த ஏதேனும் ஒரு மரத்தடியிலோ அல்லது ஸ்டேடியத்திலோ, நிழலில் அமர்ந்து புத்தகங்களைப் படிப்பது வழக்கம். அங்கு வேலை பார்த்தவர்களில் பெரும்பாலானவர்கள் நாங்கள் அப்போது வசித்த  பகுதிக்கு (சிந்தாமணி) அருகிலேயே இருந்ததாலும், அப்பாவுக்கு பழக்கமானவர்கள் என்பதாலும் என்னை ஒன்றும் சொல்வதில்லை. அந்த ஸ்டேடியம் அருகில் அந்த கல்லூரியின் நியூ ஹாஸ்டல். பெரும்பாலும் இந்த ஹாஸ்டலில் சாப்பாட்டு வேளையில் அல்லது சிறப்பு நாட்களில், ஏதேனும் ஒரு இசையை மெல்லிதாக ரசிக்கும்படி வைப்பார்கள். பெரும்பாலும் அங்கே அடிக்கடி ஒலிக்கும் இசை, ‘Come September’ என்ற ஆங்கிலப் படத்தில் வரும் மெல்லிசை ஆகும். ( MUSIC THEME FROM THE MOVIE COME SEPTEMBER )  அறுபதுகளில் இந்த படத்தின் இசையை அன்றைய பள்ளி ஆண்டு விழாக்களிலும் பொது நிகழ்ச்சிகளிலும் அடிக்கடி ஒலி பரப்புவார்கள். குறிப்பாக ‘Musical Chair’ போட்டிகளில் இந்த இசைதான் பிரதானம். அப்போதெல்லாம் இந்த செல்போன் ஆடியோ வீடியோ சமாச்சாரமெல்லாம் கிடையாது. கிராமபோன் இசைத்தட்டுதான். ஐம்பது வயதைக் கடந்த, திரையிசை ரசிகர்கர்கள்  பலருக்கும் இந்த பாடல், அவர்களது மலரும் நினைவுகளை மீட்டும். நான் கேட்டு ரசித்த அந்த பாடலைக் கேட்டு ரசிக்க கீழே உள்ள திரையை சொடுக்குங்கள். வீடியோ நன்றி  YOUTUBE


COME SEPTEMBER (1961)

இதில் வேடிக்கை என்னவென்றால், அப்போது இந்த படம் பற்றிய விவரமெல்லாம் எனக்கு தெரியாது. ஏனெனில் படம் வெளி வந்த 1961 ஆம் ஆண்டு நான் முதலாம் வகுப்பு மாணவன். பின்னாளில் தான் விவரம் தெரியும்.  COME SEPTEMBER என்ற இந்த திரைப்படம் ஒரு நகைச்சுவை (Comedy) படமாகும். கதை என்னவென்றால், அமெரிக்க தொழிலதிபர் ராபர்ட் அவர்கள், வருடா வருடம் செப்டம்பர் மாதம், இத்தாலியில் உள்ள தனக்கு சொந்தமான சொகுசு மாளிகையில் பொழுது போக்குவது வழக்கம். இந்த பெரிய மாளிகையை  நிர்வகிக்க ஒரு மானேஜர்.  ஒருமுறை ராபர்ட் திடீரென்று, செப்டம்பருக்கு முன்னதாகவே முன்னறிவிப்பின்றி சென்று விடுகிறார். அப்போதுதான் அந்த மேனேஜர், தனது பண்ணை வீட்டை, தான் வராத காலத்தில் விடுதியாக மாற்றி வாடகைக்கு விடும் விஷயம் தெரிய வருகிறது. அப்போது நடக்கும் கூத்துகள்தான் இந்த படத்தின் கதை.

தமிழில் டப்பிங் 
 
ஆங்கிலத்தில் பிரபலமான இந்த படத்தின் திரைக்கதையை மட்டும் மையமாக வைத்து டைரக்டர் ஏ.சி.திருலோகசந்தர் இயக்க, ஏ.வி.எம் தயாரிப்பில் வந்த வண்ணத் திரைப்படம் ‘அன்பே வா’. கதாநாயகன் புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர் அவர்கள். ஜோடி சரோஜாதேவி. சிம்லாவில் உள்ள மலை பங்களாவின் மானேஜர் மற்றும் பட்லராக நடிகர் நாகேஷ். இவருக்கு ஜோடி மனோரமா. படம் வெளிவந்த ஆண்டு 1966. எம்..ஜி.ஆர் திரையுலகில் நடித்துக் கொண்டே தீவிர அரசியலில் இருந்த நேரம். படமும் வெற்றிப் படம்.

படம் மேலே - நன்றி Google

1961 இல் வெளிவந்த COME SEPTEMBER படத்தின் பாடலின் இசையை அப்படியே தழுவி வந்த திரைப்படப் பாடல் ‘ வந்தால் என்னோடு என்னோடு இங்கே வா தென்றலே’ – படம்: நான் (1967) – பாடல் காட்சியில் ஆடிப் பாடி நடித்து இருப்பவர் ஜெயலலிதா – பாடல் கவிஞர் கண்ணதாசன் – இசை T.K. ராமமூர்த்தி )


பாடலைக் கண்டு கேட்டு ரசித்திட கீழே உள்ள திரையை சொடுக்குங்கள். வீடியோ நன்றி  YOUTUBE


25 comments:

 1. இனிய நினைவுகளை இங்கே பகிர்ந்தது சிறப்பு.

  நீங்கள் சொன்ன இரண்டு படங்களும் பார்த்ததில்லை. பாடல்கள் மட்டும் கேட்டதுண்டு.

  சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் பதிவு - மகிழ்ச்சி. முடிந்த போது எழுதிக் கொண்டு இருங்கள். இதுவும் ஒரு நல்ல பொழுதுபோக்கு.

  ReplyDelete
  Replies
  1. நண்பரின் கருத்துரைக்கு நன்றி. இனிமேல் நேரம் கிடைக்கும் போது, ஓய்வில் பதிவுகளையும் மற்றவர்கள் பதிவுகளுக்கு கருத்துரைகளையும் எழுதலாம் என்று இருக்கிறேன்.

   Delete
 2. ஆங்கிலப்படத்தின் கதையை சொல்லி வரும்போதே அன்பே வா படம் எனக்கு நினைவு வந்தது.

  பிறகு அதையே நீங்களும் சொல்லி விட்டது மகிழ்ச்சியாக இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி.

   Delete
 3. சமீபத்தில்தான் எனக்கு வாட்ஸாப்பில் இந்த தகவல்கள் வந்தன.

  நலம்தானே? நீண்ட நாட்களாயிற்று.

  எல் ஆர் ஈஸ்வரி பாடிய தமிழ்ப்பாடலை இணைத்திருக்கிறீர்கள். மாதுரி தீக்ஷித் நடித்த ஹிந்தித் திரைப்படம் ஒன்றில் இணைப்பாடலாகவும் இதே டியூன் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. நதீம் ஷ்ரவன் இசையில் அழகா யாக்னிக், உதித் நாராயண் பாடி இருப்பார்கள்.

  https://www.youtube.com/watch?v=Q-0NNaJ4SCc​

  ReplyDelete
  Replies
  1. நண்பர் எங்கள் ப்ளாக் ஶ்ரீராம் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நலன் விசாரிப்பினுக்கும் நன்றி. நலமே. நீங்கள் கொடுத்த இணைப்பில் இந்தி படப் பாடலை கேட்டு ரசித்தேன். இந்த பாடலில், நான் தமிழ் பட பாடலில் ஒலித்தது பொன்ற மெல்லிசை இல்லை.

   Delete
 4. ஆங்கிலப் படங்களைப் பார்த்து எடுப்பது, ஆரம்பம் முதலே நடந்திருக்கிறது.
  நலம்தானே ஐயா
  தங்களை வலையில் கண்டதில் மிகுந்த மகிழ்ச்சி

  ReplyDelete
  Replies
  1. கரந்தை ஆசிரியரின் கருத்துரைக்கும் நலன் விசாரிப்பினுக்கும் நன்றி.

   Delete
 5. இசையோடு வந்துள்ளீர்கள்... தொடருங்கள் ஐயா...

  ReplyDelete
 6. COME SEPTEMBER எனக்கு பிடித்த இசை.
  எங்கள் வீட்டில் இசைதட்டாக இருந்தது.
  பள்ளியில் இரண்டு முறை விழாவில் இந்த பாட்டுக்கு ஆடி இருக்கிறோம். கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கொண்டு .
  இசைதட்டை வீட்டிலிருந்து எடுத்து வருவதாய் சொல்லிவிட்டேன்.
  அண்ணனும் கவரில் போட்டு கொடுத்த இசைதட்டை எடுத்துக் கொண்டு மிக பெருமையாக ஆசிரியிடம் கொடுத்தேன். ஆசிரியர் கிராமபோனில் பொருத்தி ஓடவிட்டபோதுதான் அது வேறு இசைதட்டு என்று தெரிந்தது, ஆசிரியர் என்ன கோமதி வேறு எடுத்து வந்து விட்டாயா ? என்று கேட்ட போது அசடு வழிந்த நிகழ்ச்சி மனதைவிட்டு மறையாது.
  வீட்டுக்கு போய் அண்ணனிடம் சண்டையிட்டது எல்லாம் நினைவுக்கு வருது.
  அப்புறம் மறுநாள் எடுத்து போனேன்.

  மீண்டும் கேட்டு மகிழ்ந்தேன்.

  தொடர்ந்து எழுதுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. மேடம் அவர்களின் கருத்துரைக்கும், தங்களின் பள்ளி ஆண்டுவிழா அனுபவ பகிர்வுக்கும் நன்றி.

   Delete
 7. ரொம்ப நாள் கழித்து பதிவு போட்டிருக்கீங்க தமிழ் இளங்கோ சார். பதிவு எழுதும்போது பொழுது போவது மட்டுமல்ல, நண்பர்களுடன் தொடர்ந்த தொடர்பும் இருக்கும், மனதுக்கு ஆறுதலாக இருக்கும்.

  நீங்கள் எழுதிய ஆங்கிலப் படத்தின் கதையைப் படிக்கும்போதே எனக்கு அன்பே வா படம் நினைவுக்கு வந்துவிட்டது. எல்லாம் தழுவி எடுக்கும் படம்தான் போல. இருந்தாலும் அன்பேவா அலுக்காத படம்.

  பதிவைப் படிக்கும்போது என் ஹாஸ்டல் வாழ்க்கையையும் நினைக்கவைத்துவிட்டீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. நண்பரின் கருத்துரைக்கு நன்றி. நீங்கள் சொல்வது போல எம்ஜிஆர் நடித்த, அன்பே வா அலுக்காத படம்தான்.

   Delete
 8. நல்ல பதிவு. செப்டேம்பரை வரவேற்போம். இன்னும் நான்கு மாதங்கள் மட்டுமே இந்த வருடம் முடிவதற்கு. நாட்கள் எவ்வளவு வேகமாக நகர்கிறது பார்த்தீர்களா? உங்கள் பதிவு எங்கள் தளத்தில்....
  எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL | செப்டம்பரே வா – COME SEPTEMBER : சிகரம்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கருத்துரைக்கு நன்றி.

   Delete
 9. செப்டம்பருக்கு நல்ல வரவேற்பு. அன்பே வா பற்றிய தகவல்கள் அருமை.

  ReplyDelete
 10. என்னுடைய நினைவுகளையும் தூண்டி விட்டது. நான் படித்த பள்ளிப்பருவத்தில் (1960-1964) இந்த tune மிக பிரபலம். கடலூரில் நான் வசித்த வீட்டின் அருகில் இருந்த நியூ சினிமா தியேட்டரில் படம் துடங்கும் முன் திரை உயர்த்தும் போது இடுவார்கள். இதே போன்று Hatari என்ற திரைப்படத்தின் tune ஒன்றும் பிரபலம்.  www.youtube.com/watch?v=SdIw-IK3my4

  Jayakumar​​

  ReplyDelete
 11. அக்காலத் திரைப்படங்களின் பின்புலத்தை உங்கள் பாணியில் கூறிய விதம் அருமை.

  ReplyDelete
 12. ’அன்பே வா’ படம் ஒரிரு முறை பார்த்துள்ளேன். நல்லா இருக்கும்.

  -=-=-=-

  ‘நான்’ படம் நம் ராக்ஸி தியேட்டரில் மட்டுமே நான் சுமார் பத்து முறை பார்த்துள்ளேன். எனக்கு மிகவும் பிடித்தமான நகைச்சுவை + த்ரில்லிங் நிறைந்த ஜோரான திரைப்படம் அது.

  பாடல்கள் அனைத்துமே சூப்பரோ சூப்பராக இருக்கும். இந்த திரைப்படம் வெளியான ஆண்டு: 1967 (எனக்கு அப்போது 17 வயது)

  உதாரணமான சில பாடல்கள்:

  ‘ராஜா கண்ணு போகாதடி .... நீ போனால் நெஞ்சுக்கு ஆகாதடி ..... லேஸா சொக்கா போடாதடி ....’

  ‘போதுமோ இந்த இடம் .... கூடுமோ அந்த சுகம் .... எண்ணிப்பார்த்தால் சின்ன இடம் .... இருவர் கூடும் நல்ல இடம் ....’ (ஒயிட் கலர் ஃபீயட் காரில், கொட்டும் மழையில் .... ஓர் காட்டுப்பாதையில் .... ரவிச்சந்திரன் + ஜெயலலிதா தனிமையில் பாடும் காதல் பாடல் காட்சி)

  ’அம்மனோ சாமியோ .... அத்தையோ மாமியோ .... கம்பனூர் நீதியோ .... கல்யாண சேதியோ’

  -=-=-=-

  நீண்ட நாட்களுக்குப் பின் தாங்கள் ஓர் பதிவு வெளியிட்டுள்ளது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பாராட்டுகள். வாழ்த்துகள்.

  ReplyDelete
 13. இந்த செப்டம்பர் மாதத்தில் ...........

  இளம் வயது பெண்கள் (குறிப்பாக கல்யாணம் ஆனவர்கள் மட்டும்) தங்கள் உடம்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

  வேகமாக நடப்பதோ, ஓடுவதோ கூடாது.

  டூ வீலர் போன்ற வாகனங்களிலோ, பஸ்ஸிலோ, இரயிலிலோ, கும்பலில் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

  வெயிட் தூக்கி சிரமப்படக்கூடாது.

  அடிக்கடி மருத்துவரிடம் சென்று பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும்.

  அதிகமாக கண் விழித்து தொலைகாட்சி நிகழ்ச்சிகள் பார்க்காமல், சீக்கரமாக படுத்து ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும்.

  மல்லாக்காகப் படுப்பதோ, குப்புற அடித்துப் படுப்பதோ கூடவே கூடாது.

  ஒருக்களித்துக்கொண்டு படுத்துப் பழக வேண்டும்.

  வாய்க்குப் பிடித்ததையெல்லாம் கேட்டு வாங்கி, வயிற்றுக்கு வஞ்சகம் செய்யாமல் நன்கு, மூக்குப்பிடிக்க சாப்பிட வேண்டும்.

  கோபமோ, துக்கமோ படாமல், அழாமல், பயப்படாமல், எப்போதும் சிரித்த முகத்துடனும், நல்ல சிந்தனைகளுடனும் இருக்க வேண்டும்.

  ஏனென்றால் இது அவர்களுக்கு ‘ஒன்பதாம் மாதம்’ ஆகும். :))) ))) )))

  அன்புடன் VGK

  ReplyDelete
  Replies
  1. கோபு சார்... பெரும்பாலான ஆண்களுக்கு இது ஆண்டு முழுவதும் பொருந்தும். ஏனென்றால் அவங்க எப்போதுமே ஒன்பதாம் மாதம் மாதிரிதான் இருப்பாங்க. காரணம் எல்லாரும் ஆபீஸ், சீட்ல உட்கார்ந்து உட்கார்ந்து வேலை பார்த்து, சாப்பிடுவது எல்லாமே வயிற்றில் சேர்ந்திருக்கும். ஹாஹாஹா. இதைக் குறைக்கத்தான் நான் இப்போ யோகா என்று ஆரம்பித்திருக்கிறேன்.

   Delete
 14. எங்கள் பள்ளியிலும் இந்தப் பாடல் பிரபலம்.
  என் உயர்னிலைப் பள்ளிப் படிப்பும் 60.......64 தான். \
  இந்த ஊருக்கு வந்த பிறகு Come September படம் பார்த்தோம்.
  எங்க வீட்டுக்காரர் திருமணத்துக்கு முன்பே பார்த்து விட்டார். புதுக்கோட்டையில் அன்பே வா வும் பார்த்தோம்.

  நான் படம் சுவாரஸ்யமான படம். 1968 என்று நினைக்கிறேன்.
  அம்மனோ சாமியோ பாட்டும் நடனமும் பிரமாதமாக இருக்கும்
  ராஜா கண்ணு போகாதடி பாட்டைப் பாடிக்கொண்டே எங்கள் தூக்கத்தைக் கெடுத்தார் ஒரு சைக்கிள்
  தொடர் ஓட்டப் பயிற்சியாளர்.
  முன்பெல்லாம் ஒரு க்ரௌண்டில் சைக்கிளிலேயே குளித்து,சாப்பிட்டு எல்லாம் செய்வார்களே
  அந்த நாட்களில். ஒலிபெருக்கி அலறிக்கொண்டே இருக்கும்.
  அடப் பாதங்களே என்று சத்தம் கேட்டதும், அப்போதுதான் பிறந்திருந்த எங்கள் மகள் விழித்து அழ ஆரம்பித்து விடுவாள். இப்பொழுது நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது.
  நல்ல நினைவுகளை மீட்டுக் கொடுத்த உங்களுக்கும், கோபு சாருக்கும், ஜெகே சாருக்கும்
  மிக மிக நன்றி.

  ReplyDelete
 15. Mgர் இன் வெகு சில படங்களே என்னை கவர்ந்தவை .அவற்றுள் அன்பே வாவும் ஒன்று. Come septembeர் இன்￰ தழுவலே என்ற தகவலுக்கு நன்றி ஐய்யா

  ReplyDelete
 16. ஆங்கிலப் படங்களைப் பார்த்து எடுப்பது, அந்த காலம் முதலே நடந்திருக்கிறது அது இப்போதும் தொடர்கிறது

  ReplyDelete