Wednesday 25 January 2017

திசைமாறிய போராட்டம்




ஜல்லிக்கட்டு பற்றிய எனது அபிப்பிராயம் எப்படி இருந்த போதிலும், சென்னை மெரினாவில் அமைதியாக நடந்த ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் நடத்திய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட போலீஸ் வன்முறையைக் கண்டு மனம் பதறாமல், கண்டிக்காமல் இருக்க முடியவில்லை. 

ஏதோ ஒரு ஆர்வத்தில் அல்லது ஆவேச உணர்வில், சமூக வலைத்தளம் வழியே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக விடுக்கப்பட்ட வேண்டுகோள் முதலில் நூறுக்கும் குறைவான இளைஞர்களையே மெரினாவில் கொண்டு வந்து சேர்த்தது. ஆனால் வலைப்பின்னல் (Net Work) தாக்கம், நேரம் ஆக ஆக,  நூறு, ஆயிரம், பத்தாயிரம் என்றும் அதற்கு மேலும் மக்கள் கூடி விட்டனர். (ஏனெனில் ஒவ்வொரு குழுவிலும் குறைந்த பட்சம் நூறு உறுப்பினர்கள் இருக்க வாய்ப்புகள் அதிகம்)
                                                                                                                                                                 

ஆனால் இவ்வாறு கூடியவர்களுக்கு என்று ஒரு பொதுவான தலைமை இல்லை. இன்னின்னார்தான் வரவேண்டும், போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை. எனவே உணர்வுபூர்வமான நிறையபேர் கலந்து கொண்டனர் என்பதே உண்மை. ஆரம்பத்தில் ஜல்லிக்கட்டுக்காக குரல் கொடுக்க என்று தொடங்கிய இந்த அமைதிப் போராட்டத்தில், பின்னர் தமிழக நலன்சார்ந்த மற்ற பிரச்சினைகளுக்கும் சேர்த்து குரல் கொடுக்கப் பட்டபோது அதில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும் குரல் ஓங்கி ஒலிக்கப்பட்டது. இதனை சிலர் ரசிக்கவில்லை. 

சாதாரணமாகவே நாலுபேர் கூடினாலே ரெண்டு தட்டு தட்டும் போலீசும் மேலிடத்து உத்தரவு காரணமாக, இதனைக் கண்டு கொள்ளவில்லை. காரணம் ஜெயலலிதா மரணத்திற்குப் பின். இப்போது நிலவும் அசாதரணமான அரசியல் சூழல்தான். எப்போதுமே சிவப்பு சிந்தனை கொண்ட சில இயக்கங்களைக் கண்டாலே போலீசுக்கு அலர்ஜிதான்.. முன்னாள் டிஜிபி வால்டேர் தேவாரம் தொடங்கி இன்றுவரை எல்லா போலீஸ் அதிகாரிகளும், தமிழ்நாட்டில் நக்சல்களை ஒழித்து விட்டோம் என்று சொன்னாலும், அவ்வப்போது இது மாதிரியான மக்கள் போராட்டங்களில், அவர்களைக் காரணம் காட்டி ‘சமூக விரோதிகள் உள்ளே நுழைந்து விட்டார்கள்’ என்று போராட்டத்தை ஒடுக்குவது எப்போதுமே நடக்கும் ஒன்றுதான். அந்த வகையில் இப்போது நடைபெற்ற ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தையும் திசை திருப்பி விட்டார்கள்.
                                                                                                                                                                   

மெரினாவில் அதிக அளவில் போலீஸ்படை குவிக்கப்பட்டவுடனேயே அல்லது மைக்கைப் பிடித்து, ”அவசரச் சட்டம் நிறைவேற்றப்படும்; உங்கள் கோரிக்கைக்கு வெற்றி; எல்லோரும் வெளியேறுங்கள்” என்று போலீஸ் சொன்னபோதே, இந்த போராட்டக்காரர்கள் சுதாரித்து வெளியேறி இருக்க வேண்டும். ஆனால் இவர்களோ கடந்த ஆறு நாட்களாக போலீஸ் கொடுத்த ஒத்துழைப்பை நினைத்து, ‘போலீஸ் உங்கள் நண்பன்’ என்றாலும் சற்று விலகியே இருக்க வேண்டும் என்ற கடந்தகால போராட்ட அடக்குமுறைகளைப் பாடமாகக் கொள்ளாமல் ஏமாந்து விட்டார்கள். ஏனெனில் கீழ் நிலையில் உள்ள போலீஸ்காரர்களுக்கு மேலிடத்திலிருந்து எந்த மாதிரியான உத்தரவு எப்போது வரும் என்று அவர்களுக்கே தெரியாது.


இப்போது நீதிவிசாரணை தேவை என்று சொல்லுகிறார்கள். இதற்கு முன் நடந்த நீதிவிசாரணைக் கமிஷன்களின் தீர்ப்புகள் என்னவாயிற்று? என்ன செய்தார்கள்? என்று நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டியதுதான். எதிர்க் கட்சியாக இருக்கும்போது போலீஸ் நடவடிக்கைகளை எதிர்ப்பவர்கள், ஆளும் கட்சியாக வந்த பிறகு, அவர்களும் அதே தவறினைச் செய்கிறார்கள். போலீஸ்துறை சுதந்திரமாக இல்லாது ஆட்சியாளர்களின்  கைப்பாவையாய் இருக்கும்வரை, இந்தமாதிரியான நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கும்.
                                                                                                                                                                   

எது எப்படி இருந்த போதிலும், இந்த ஜல்லிக்கட்டை முன்னிட்டு, தமிழகத்தில் ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்லி ஜனாதிபதி ஆட்சி அல்லது நிறுத்தி வைக்கப்பட்ட அரசாங்கம் (freezed government) வரவும், ஆறுமாதம் சென்று பொதுத்தேர்தல் வரவுமே வாய்ப்புகள் அதிகம். யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது கேள்விக் குறிதான்?
           
                                 (ALL  PICTURES COURTESY: GOOGLE IMAGES)

32 comments:

  1. இந்திய மத்திய அரசம்
    தமிழ்நாடு் மாநில அரசும்
    தோல்வியை ஒப்புக்கொண்டதால்
    மாணவர் எழுச்சியை அடக்கினரோ!
    மாணவர் எழுச்சி மறுவடிவம் எடுத்தால்
    இந்திய மத்திய அரசம்
    தமிழ்நாடு் மாநில அரசும்
    என்ன தான் செய்ய முடியும்?

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் யாழ்பாவாணன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. இங்கு யாருக்கும் வெற்றியும் இல்லை தோல்வியும் இல்லை.

      Delete
  2. போலீஸ்ஸை குற்றம் சொல்லி பலன் இல்லை இது அவர்களாக செய்தது அல்ல அவர்களை இயக்கும் அதிகாரம் படைத்தவர்களைதான் குற்றம் சொல்லவேண்டும் அந்த அதிகாரம் படைத்தவர்களை மக்கள் சுயமாக அடையாளம் கண்டு வரும் தேர்தல்களில் வரகளை அப்படியே தூக்கி ஏறிய வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. நண்பர் மதுரைத் தமிழன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நானும் உங்கள் கருத்தோடு ஒத்து போகிறேன். போலீசைப் பொருத்தவரை அரசாங்க ‘உத்தரவுக்கு கீழ் படி" (Obey the order) என்பதுதான் அவர்களது அரசாங்க வேலை. மேலே கட்டுரையில் உள்ள கருத்தும், இணைப்புப் படங்களும் இதனை சொல்லும்.

      Delete
  3. //எது எப்படி இருந்த போதிலும், இந்த ஜல்லிக்கட்டை முன்னிட்டு, தமிழகத்தில் ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்லி ஜனாதிபதி ஆட்சி அல்லது நிறுத்தி வைக்கப்பட்ட அரசாங்கம் (freezed government) வரவும், ஆறுமாதம் சென்று பொதுத்தேர்தல் வரவுமே வாய்ப்புகள் அதிகம். யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது கேள்விக் குறிதான்?//

    நன்றாக முடிவுரை கூறியுள்ளீர்கள். இதை எதிர்பார்த்துத்தானே இந்தப் போராட்டத்தை நாங்கள் (அதாவது எதிர்க்கட்சிகள்) முன்னின்று வழி நடத்தினோம்!

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அய்யா அவர்களது கருத்தினுக்கு நன்றி. இன்றைய தமிழக அரசியலில் யார் யாரை எதிர்க்கிறார்கள் என்றே தெரியவில்லை.பொதுத் தேர்தல் வந்தால்தான் தெரியும் போலிருக்கிறது.

      Delete
  4. சகோ நீங்கள் உங்கள் ஊரில் அதாவது திருச்சியில் போராட்டம் செய்தவர்களைத் திரும்பச் சொல்லி ஒரு போலீஸ் அதிகாரி பேசியதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். அதுதான் உண்மை. அவர் மிக அழகாகப் பேசியிருக்கிறார். பார்க்கப் போனால் இப்படியாகும் என்று நினைத்துத்தான் ஹிப் ஹாப் ஆதி, மற்றும் மெரினாவில் குழுமிய போராட்டக் காரர்களுக்குக் காரணமான திரைமறைவில் இருக்கும் முகமறியாக் குழுவினரும் முதல் நாளே விலகிக் கொண்டது. ஆனால் நீங்கள் சொல்லியிருப்பது போல் மாணவர்கள் ஏமாந்திருக்கிறார்கள் என்பதும் உண்மை. அதைத்தான் அந்தத் திருச்சி போலீஸ் அதிகாரியும் பேசியிருப்பது. அவர் அப்படியே முந்தைய அனுபவங்களைச் சொல்லி இந்த அறப்போராட்டம் வரலாற்றில் பதியப்பட வேண்டிய ஒன்று அதைக் களங்கமாக்கிவிடாமல் அமைதியாகக் கலைந்து செல்லுங்கள் என்று சொல்லியிருக்கிறார்...இங்கும் சென்னையிலும் கூட பேசியிருக்கிறார்கள். ஆனால் மாணவர்கள் சிறிது ஏமாந்துவிட்டார்கள் நீங்கள் சொல்லியிருப்பது போல்...அனுபவம் இல்லையே. வழிகாட்டல் இல்லையே...அதனால்தான். ஆனால் மக்களிடையேயும், இளைஞர்களிடையேயும் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. எனவே பல மாற்றங்கள் நிகழ வாய்ப்புண்டு. மக்களும், இளைஞர்களும் முழித்துக் கொண்டுவிட்டார்கள். இனி ஏமாற மாட்டார்கள் என்பது உறுதியாகத் தெரிகிறது. அரசியல்வாதிகளையோ, சினிமாக்காரர்களையோ நம்ப மாட்டார்கள் என்பதும் தெரிகிறது..அதற்கு இப்போது சமூகவலைத்தளங்களும் இருப்பதால் அவையும் உதவுகின்றன. எனவே மாற்றங்கள் வரும் என்று நினைக்கிறேன். உங்கள் முடிவும் அப்படியும் நடக்குமோ என்றும் தோன்றுகிறது...பார்ப்போம் நல்லது நடக்கும் என்று நம்புவோம்.

    அந்த முகமறியாக் குழுவைப் பற்றித்தான் எங்கள் தளத்திலும் எழுதியிருக்கிறோம். அவர்கள் நல்லது செய்ய நினைத்தாலும் நமது அரசியல் சூழலில் செய்வதற்கு பல விஷயங்களை, அறிவுபூர்வமாக அரசியல் நுணுக்கங்களைக் கற்க வேண்டும்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நேற்று இரவுதான் உங்கள் கட்டுரையைப் படித்தேன். இனிமேல்தான் எனது கருத்துரையை எழுத வேண்டும். இனியொரு போராட்டம்? நேரம் இருக்கும்போது நடிகர் சிவகுமார் நடித்த ‘இனியொரு சுதந்திரம்’ படத்தை பாருங்கள்.

      Delete
  5. நல்ல கட்டுரை.

    இந்தப் போராட்டத்தின் தொடக்கம் நன்றாக இருந்தாலும் மோசமான முடிவு.....

    ReplyDelete
    Replies
    1. நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு நன்றி.

      Delete
  6. காவலர்கள் செய்யும் காரியங்கள் எல்லாம் வீடியோ காட்சிகளாக உலகை வலம் வருகின்றன பாருங்கள் ஐயா
    வேதனை வேதனை

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நானும் பார்த்தேன். மனது கனத்தது அய்யா.

      Delete
  7. உண்மை யார் ஆட்சிக்கு வந்தாலும் போலீஸ் ஆளுங்கட்சியின் வேலையாள்தான்

    ReplyDelete
    Replies
    1. அப்படி இருப்பதுதானே முறை. போலீஸ் தன்னிச்சையாக செயல்பட ஆரம்பித்தால் என்ன ஆகும் என்று சிந்தித்துப் பாருங்கள்.

      Delete
    2. நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. உங்களுக்கு மறுமொழி சொன்ன முனைவர் அவர்களின் கருத்தினையே நானும் வழி மொழிகின்றேன்.

      Delete
  8. ஏமாந்து விட்டார்கள் என்பதை விட ஏமாற்றப்பட்டு விட்டார்கள்... இனி வரும் போராட்டங்களில் "தெளிவாக" இருப்பார்கள்...

    ReplyDelete
    Replies
    1. நண்பரே இனி ஒரு போராட்டமா? இனி இணையத்தில் மட்டுமே இருக்கும்.

      Delete
    2. "இதை தான் நான் அப்பவே சொன்னேன்" - இது மறந்த திரைப்பட நடிகர் "V.K. ராமசாமி" அநேக படங்களில் சொல்வதுண்டு... அதையே உங்கள் பதிவில் சொல்லாமல் சொல்லி உள்ளீர்கள்... அவ்வளவே...! உங்கள் சிந்தனை வளர்க... நன்றி...

      அனைவருக்கும் இணையம் என்பது எவ்வளவு சதவீதம் என்பது தெரியுமா ஐயா...? தேடுதலில் விடை கிடைக்கும்...

      எனது பல பதிவிற்கு உங்கள் கருத்துரை இல்லாவிட்டாலும், கீழ் உள்ள அன்பரின் பதிவிற்கு உங்களின் கருத்துரை சொல்லுங்கள் ஐயா... நன்றி...

      http://thanjavur14.blogspot.in/2017/01/blog-post87-Jallikkattu-.html

      Delete
    3. அன்புள்ள நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு,

      // எனது பல பதிவிற்கு உங்கள் கருத்துரை இல்லாவிட்டாலும், கீழ் உள்ள அன்பரின் பதிவிற்கு உங்களின் கருத்துரை சொல்லுங்கள் ஐயா... நன்றி... //

      என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள். அப்படி எல்லாம் யாருக்கும் கருத்துரை எதுவும் சொல்லக்கூடாது என்ற மனோபாவத்தில் நான் இல்லை. எனது பதிவிற்கான மறுமொழிகளையே சிலசமயம் இரவு 11 மணிக்கு மேல்தான் எழுத முடிகிறது. காரணம் இப்போதைய எனது குடும்ப சூழ்நிலையில் நண்பர்களின் பதிவுகளை படிக்க மட்டுமே நேரம் இருக்கிறது. அய்யா வை.கோபாலகிருஷ்ணன் அவர்களிடமும் இதுபற்றி சொல்லி இருக்கிறேன். வேறு ஒன்றும் இல்லை.

      Delete
  9. தங்களின் தனிப்பாணியில் அனைத்தையும் அலசி ஆராய்ந்து எழுதி, மிக நன்றாகவே ஓர் முடிவுரையும் கொடுத்துள்ளீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள V.G.K அவர்களுக்கு நன்றி.

      Delete
    2. முந்தைய உங்களது பதிவில் இருவர் என்று சொல்லி இருந்தேன்... மன்னிக்கவும்... மூவர்...

      நன்றி ஐயா...

      Delete
  10. இது போலீசே தூண்டிவிட்ட வன்முறை ,வீடியோக்களே சாட்சி !இனியொரு போராட்டம் இது போல் நடக்கக் கூடாது என்பதற்கு அரசியல் வியாதிகள் தரும் எச்சரிக்கை போலிருக்கிறது :)

    ReplyDelete
    Replies
    1. தோழரே குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். பார்ப்போம்.

      Delete
  11. எப்படியும் அவசர சட்டம் 23ம் தேதி நிறைவேறும் காவல் துறை இன்னும் ஒருநாள் பொறுத்திருந்து போராட்டக்காரர்களை விலகச் சொல்லி இருக்கலாம் என்னவோ நடக்குது ஒன்னுமே புரியலே

    ReplyDelete
    Replies
    1. மூத்த வலைப்பதிவர் ஜீஎம்பி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. அய்யா நீங்கள் சொல்வதுபோல “காவல் துறை இன்னும் ஒருநாள் பொறுத்திருந்து போராட்டக்காரர்களை விலகச் சொல்லி இருக்கலாம்” என்பது சரியான கருத்துதான். ஆனால் நடந்து முடிந்த கூத்துகளைப் பார்க்கும்போது, அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ‘அசைன்மெண்ட்’ வேறு மாதிரி அல்லவா தெரிகிறது.

      Delete
  12. நல்லா எழுதியிருக்கீங்க. இனி போராட்டம் ஏதாவது நடந்தால், முதல் ரெண்டு நாளிலேயே அட்டென்டென்ஸ் போட்டுட்டு போயிடணும். கடைசிவரை இருக்கணும்னு நினைச்சா அப்புறம் கஷ்டம்தான் போல.

    இதுக்குப் பின்னால் ஏதேனும் உள்குத்து இருக்குமா? தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் நெல்லைத்தமிழன் அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. இனி ஒரு போராட்டம் இதுபோல் இருக்க வாய்ப்பில்லை.

      Delete
  13. திரு G.M.B ஐயா சொல்லியுள்ளதுபோல் 23 ஆம் தேதி அந்த அவசர சட்டம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டவுடன் அதை போராட்டக்காரர்களுக்கு எடுத்து சொல்லி அவர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி கலைந்து செல்ல அனுமதித்திருக்கலாம் அல்லது திருச்சியில் காவல்துறை உதவி ஆணையர் பேசியதுபோல் பேசி அவர்களை அப்புறபப்டுத்தியிருக்கலாம். ஆனால் யாரையோ திருப்திப்படுத்த இந்த ‘நிகழ்வை’ அரங்கேற்றியிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் ‘செயல்’களை பல்லாயிர கைப்பேசிகளின் ‘கண்கள்’ கவனித்து கொண்டு இருப்பதை மறந்துவிட்டார்கள். தப்பு செய்தவர்கள் யாராயினும் தண்டிக்கப்படுவார்கள் என நம்புவோம்.

    ReplyDelete
    Replies
    1. அய்யா V.N.S அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.

      Delete
  14. ம்ம்ம்ம் மத்திய அரசோ, மாநில அரசோ தோல்வியும் காணவில்லை. இந்தப் போராட்டத்தினால் அரசு கலையவும் வாய்ப்பில்லை! அப்படி எதிர்பார்த்தவர்கள் ஏமாறலாம். :)))) மற்றபடி போலீஸ் சொல்லியும் கூட்டம் கலைய மறுத்தது என்கிறார்கள். அதோடு போலீஸ் தானாக இதை எல்லாம் செய்யமுடியாது. கீழ்மட்டக் காவல்துறைஊழியர்கள் மேலதிகாரிகளின் உத்தரவைக் கேட்பது போல் மேலதிகாரிகளும் அவர்களுக்கு மேலுள்ளவர்களின் உத்தரவுக்கு அடிபணிய நேரிட்டிருக்கலாம். மொத்தத்தில் இது ஓர் திருஷ்டிப்பரிகாரமாக ஆகி விட்டது!:(

    ReplyDelete
    Replies
    1. கருத்துரை தந்த மேடத்தினுக்கு நன்றி. நீங்கள் சொல்லுவது போல ஒவ்வொருவரும் அவரவர் மேலிடத்தை நோக்கி கைகாட்டிக் கொண்டு செல்வர். கடைசியில் எல்லா மேலிடமும், ‘எல்லாம் அவன் செயல்’ என்றுதான் முடியும் . எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு; சட்டத்தின் முன் தப்பினாலும், கடவுளின் நியாயத் தீர்ப்பு என்று ஒன்று இருக்கிறது. அரசன் அன்று கொல்லுவான்; தெய்வம் நின்று கொல்லும்

      Delete