Tuesday 29 March 2016

ஜீவியின் - ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா. வரை



நமது வலைப்பதிவர் வெங்கட் நாகராஜ் அவர்கள் சொல்வதைப் போன்று, எனக்கு வாசிப்பது என்பது சுவாசிப்பதைப் போன்று. எனவே புத்தகங்கள், அதுவும் தமிழ்ப் புத்தகங்கள் என்றால் (இன்ன தலைப்பு என்று இல்லை) கொள்ளைப் பிரியம். எனவே வீடு நிறைய புத்தகங்கள். அண்மையில் திருச்சியில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவிற்கு (மார்ச் 2016) செல்ல ஆயத்தமாக இருந்த போது, நமது மூத்த வலைப்பதிவர் திருச்சி V.G.K.அய்யாவிடமிருந்து ஒரு மின்னஞ்சல் செய்தி. அதில் அவர் குறிப்பிட்டபடி  87 ஆம் எண் ஸ்டாலில் (சந்தியா பதிப்பகம்). ஜீவி அவர்களது ‘ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா. வரை’ என்ற நூலை வாங்கினேன்.

ஜீவி அவர்கள்: 
                                                                                                                                                               
எனக்கு எழுத்தாளர் ஜீவி அவர்களைப் பற்றி’ அய்யா திருச்சி V.G.K. அவர்களது வலைத்தளம் மூலம்தான் தெரியும். அதிலும் 2014 ஆம் ஆண்டு முழுக்க V.G.K. தனது வலைத்தளத்தில் நடத்திய ’சிறுகதை விமர்சனப் போட்டி”க்கான நடுவரே ஜீவி என்று தெரிந்து கொண்டபோதுதான் (கடைசிவரை நடுவர் யார் என்பதில் சஸ்பென்ஸ்) இன்னும் அவரை அதிகமாகத் தெரிந்து கொண்டேன். அதிலும் அவர் ஒரு வலைப்பதிவர் (பூ வனம் http://jeeveesblog.blogspot.in) என்பதில் அதிக மகிழ்ச்சி.

இந்த நூலை வாங்கிய உடனேயே மேலோட்டமாகப் பார்த்ததில், இது ஒரு வித்தியாசமான நூல்; வாழ்க்கை குறிப்புகள் அடங்கிய ‘நோட்ஸ்’ கிடையாது; ஒரு எழுத்தாளர் தான் அனுபவித்துப் படித்த பிற எழுத்தாளர்களது எழுத்து ரசம் என்பதனைப் புரிந்து கொண்டேன் பி,ஏ, எம்.ஏ என்று நான் படித்தது எல்லாம் தமிழ் இலக்கியம்தான். பி.ஏ படித்தபோது எங்களுக்கு ‘தமிழ் இலக்கிய வரலாறு” என்று ஒரு பாடம். அப்போது ‘தமிழில் நாவல் சிறுகதைகள்’ என்ற தலைப்பில் பல தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. மேலும் அவர்களுள் பலர் எழுதிய நூல்களை நூலகங்களில் எடுத்து ரசித்துப் படிக்கும் வாய்ப்பும் அமைந்தது. எனவே அந்த வகையில் நான் படித்த பழைய எழுத்தாளர்களின் பெயர்கள் நமது ஜீவியின் பெயர் பட்டியலில் இருக்கக் கண்டு இன்னும் மகிழ்ச்சி அடைந்தேன்: ஜீவியின் இந்த நூலைக் கையிலெடுத்து படித்து முடிக்கும் வரை , அந்த எழுத்தாளர்களின் நினைப்பும், அவர்களது எழுத்து சுவாரஸ்யமும் கூடவே வந்தன.
             (படம் - மேலே: எழுத்தாளர் ஜீவி  ( படம் உதவி - நன்றி ;திரு V.G.K )

எழுத்தாளர்களின் பக்கம்:

’கங்கையை செம்புக்குள் அடக்க முடியாதுதான்’ என்று சொல்லும் ஜீவி அவர்கள், இந்தநூலில் தான் அறிந்த 37 எழுத்தாளர்களைப் பற்றியும் குறிப்பிடும்போதும், தான் அவர்களைப் பற்றி அறிந்த ஒரு எடையோடு அவர்கள் பெயர்களுக்கு முன்னால் ஒரு அடைமொழியோடு சொல்கிறார். உதாரணத்திற்கு,

இயற்கையை நேசித்த ந. பிச்சமூர்த்தி,
சிறுகதைச் சிற்பி கு.ப.ராஜகோபாலன்  
மணிக்கொடி பி.எஸ்.ராமையா  
புதுப்பாதை வகுத்த புதுமைப்பித்தன்  
மனித நேயர் தி. ஜானகிராமன்
சிறுகதைச் செம்மல் கு. அழகிரிசாமி  
தனியாகத் தெரியும் அசோகமித்திரன்  
புளியமரத்தின் கதை சொன்ன சுந்தர ராமசாமி  
தீபம்  நா. பார்த்தசாரதி     
ஒரு மனிதனின் கதை சிவசங்கரி  
நெஞ்சில் நிறைந்த பாலகுமாரன்  
எழுத்துப் பயணி  எஸ். ராமகிருஷ்ணன்

என்று தலைப்பைப் பார்த்தவுடனேயே அந்த எழுத்தாளர்கள் நமது மனக்கண் முன் வந்து போவார்கள். ( மற்றவர்களைப் பற்றி அறிய, இந் நூல் பக்கம் 9 – 10).

சுவையான செய்திகள்: 

ஒரு நூல் விமர்சனம் என்றால் அந்த நூலைப் படிக்காமல் எழுதுவது சிறப்பாக இருக்காது. அப்படி இருக்கும் போது எழுத்தாளர்களைப் பற்றிய விமர்சனம் என்றால்?

இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ள பல எழுத்தாளர்களின் வாழ்க்கைச் சூழலையும், வாழ்க்கை நிகழ்வுகள் சிலவற்றையும் சுவாரஸ்யமாக குறிப்பிட்டுச் செல்கிறார். உதாரணத்திற்கு எழுத்தாளர் லா.ச.ரா என்றால், எனக்கு அவருடைய அடர்த்தியான இரு புருவங்கள்தான் சட்டென நினைவுக்கு வரும். இந்த புருவத்தைப் பற்றி ஓரிடத்தில் ஜீவி அவர்கள் குறிப்பிடுகிறார்.  எனது கல்லூரிப் படிப்பின்போது அறியாத செய்திகள் இவை.
ந.பிச்சமூர்த்தியின் பக்கத்து வீட்டுக்காரர் கு.ப.ரா; பால்ய காலத்திலிருந்து நண்பர். 

// கு.ப.ரா.வின் இளைய சகோதரிதான் பிரபல எழுத்தாளர் கு.ப.சேது அம்மாள். ‘கலைமகள்’ பத்திரிகையில் நிறைய எழுதியவர் இவர். தமது இளம் வயதிலேயே கணவனைப் பறிகொடுத்த இவருக்கு மறுமணம் செய்து வைத்த புரட்சியாளர் கு.ப.ரா. கிட்டத்தட்ட எண்பது ஆண்டுகளுக்கு முன்னால் இதெல்லாம் நினைத்தே பார்க்க முடியாத விஷயங்கள். // ( இந்நூல் பக்கம் 24 )

தமிழ் இலக்கிய வரலாற்றில் ‘மணிக்கொடி காலம்’ என்று சிறப்பித்து பேசும் காலகட்டமும் உண்டு. வத்தலகுண்டு ( B stands for Batlagundu)  சுப்ரமணிய ராமையாதான் பி.எஸ்.ராமையா. மேலும் நின்று போய்விடும் நிலைமையில் இருந்த மணிக்கொடியை தூக்கிப் பிடித்து எவ்வாறு ’மணிக்கொடி பி.எஸ்.ராமையா’ என்று ஆனார் என்பதனை விவரித்து சொல்லி இருக்கிறார். புதுமைப்பித்தனைப் பற்றி பேசும்போது அவரது மனைவி கமலா விருத்தாசலமும் மணிக்கொடி எழுத்தாளர் என்பதனை மறவாமல் குறிப்பிடுகிறார்.

சி.சு.செல்லப்பா தேச விடுதலை போராட்டத்தில் சிறைக்கு சென்றதையும், அவர் அங்கு கொடுக்கப்பட்ட ‘கைதி எண்’ பித்தளைப் பட்டயத்தை, ரொம்பநாளாய் நினைவாக வைத்து இருந்ததையும் அறிந்து கொள்ள முடிகிறது. (பக்கம்.43) 

எம்ஜிஆர் – சிவாஜி இணைந்து நடித்த ’கூண்டுக்கிளி’ படத்திற்கு , திரைக்கதை வசனம் எழுதியவர் ‘பாலும் பாவையும்’ விந்தன். குலேபகாவலியில் வரும் ‘ மயக்கும் மாலை பொழுதே நீ போ “ என்ற பாடலை எழுதியதும் விந்தன்தான்.(அன்றைய இலங்கை வானொலி அடிக்கடி ஒலிபரப்பிய எம்ஜிஆர் பட பாடல்களில் இதுவும் ஒன்று)

// கதவைத் திற. காற்று வரட்டும்’ என்று பிற்காலத்து பிரபலமடைந்த வார்த்தைத் தொடர், சுந்தர ராமசாமியின் ஒரு கவிதையின் ஆரம்ப வரிதான் // (இந் நூல்.- பக்கம் 135)

எழுத்து வாசனை:

அதேபோல ஒவ்வொரு எழுத்தாளரது எழுத்துக்களையும் ஒரு சிறந்த வாசகனாய் நின்று படம் பிடித்து இருக்கிறார் நூலாசிரியர் ஜீவி அவர்கள்.

// தமிழின் முதல் நவீன கவிதை என்று வெகுவாக அறியப்பட்ட பெட்டிக்கடை நாரணன் கவிதையின் விசேசம் என்னவென்றால், அந்தக் கவிதை ரொம்பவும் எளிய மொழியில் பேசப்படுவது. … … … … இப்படித்தான் வெகுவாக எல்லோருக்கும் தெரிந்தவிதத்தில் பிச்சமூர்த்தி இந்த பெட்டிக்கடை நாரணனை படைத்து தமிழ்ப் புதுக்கவிதை உலகின் பிதாமராகிறார். //  ( இந்நூல் – பக்கம் 13 )

ஆண் – பெண் உறவுகளைப் பற்றிய கதைகளில் இப்போது நிறையபேர் வெளிப்படையாக எழுதுகிறார்கள். ஆனால் அன்றைய எழுத்தாளர்கள் இப்படி எல்லாம் எழுத முடியாது. பத்திரிகை ஆசிரியரின் கத்தரிக்கோலுக்கு அதிக வேலை வைத்து விடும்; அல்லது குப்பைக் கூடைக்கு சென்று விடும். எனவே நுட்பமாக எழுதி, வாசகனின் கற்பனைச் சுகத்திற்கு தள்ளி விடுவார்கள்.
                                                                                                                                                               
அந்த வகையில் சிறிது வெளிச்சம் (கு.ப.ரா), மோகமுள், அம்மா வந்தாள் (தி.ஜானகிராமன்) நாவல்களைச் சொல்லலாம். ஜீவியின் பார்வை இங்கே.
                                                                                                                                                               
// வாழ்க்கையின் போக்கில் ஆண் பெண் உறவுகளுக்கிடையேயான நுட்பமான மன உணர்வுகளையும் அதன் சிடுக்குகளையும் கு.ப.ரா. தனது கதைகளில் மையப்படுத்திக் காட்டும் பொழுது ஆச்சரியமாய் இருக்கிறது. அந்த காரியத்தைக் கூட வெளிச்சம் போடாமல், வெகு நேர்த்தியாய் லேசாகக் காட்டி விட்டு நகர்வதுதான் அவர் எழுத்தின் அழகு. இப்படிச் சொல்லாமல் சொல்வது கு.ப.ராவிற்கு கைவந்த கலை.// ( இந்நூல் – பக்கம் 18 )

// ஆஹா! ஜானகிராமனின் எழுத்து நம்மைக் கட்டிப் போடும் லாகவம்தான் என்னே1 மோகமுள்ளை படிக்கத் துவங்கி விட்டால்  போதும். இந்தண்டை அந்தண்டை  நம் கவனம் சிதறுவதற்கு வழியேற்பட்டு விடாமல் வளைத்துப் போட்டு அந்தக் கதையோடு ஒன்றச் செய்து விடுவார் மனிதர்! // ( இந்நூல் – பக்கம் 78)

எழுத்தாளர் அகிலன் பற்றி சொல்ல வேண்டியதில்லை. அவர் எழுதிய பாவை விளக்கு, சித்திரப்பாவை அந்நாட்களில் சிறப்பாகப் பேசப்பட்டவை. அவர் எழுதிய ஒரு நூல் பற்றி ஜீவி அவர்கள் சொல்லும் உணர்ச்சி மயமான கருத்து இது.

// அகிலனின் புதுவெள்ளம் படித்திருக்கிறீர்களோ? கல்கியில் தொடராக வந்தது. நிலக்கரிச் சுரங்கங்களில் பூமிக்கடியில் வியர்வை சிந்தும்  தொழிலாளர்களின் அவதிகள் பற்றி, சுரங்கங்களில் திடீர் திடீரென அவர்கள் சந்திக்கும் ஆபத்துக்கள் பற்றிப் படித்தால் நெஞ்சம் பதறும். கொள்கைகளில் மாறுபட்டிருந்தாலும், மனிதாபிமானம் என்று வந்து விட்டால், வேற்றுமைகள் எப்படித் தூள் தூளாகும் என்பதை நிலக்கரி சுரங்கத்தில் நடக்கும் ஒரு விபத்தின் ஊடே இருட்டின் இடையில் ஒளிர்ந்த வெளிச்சமாய் புலப்படுத்துவார் அகிலன். //  (இந்நூல் – பக்கம் 98)

ஜீவியின் இந்த வரிகளைப் படித்தவுடன், சென்ற ஆண்டு (2015) பெரும் மழை வெள்ளத்தின் போது, செம்பரம்பாக்கம் ஏரி உடைப்பினால் பாதிக்கப்பட்ட சென்னை மக்கள் பட்ட கஷ்டங்களையும், எந்த வேறுபாடும் இன்றி, ஒருவருக்கொருவர் மனிதநேயத்துடன் உதவி செய்து கொண்டதையும் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

ஜெயகாந்தனைப் பற்றிய ஆசிரியரின் பார்வை இது.

// ‘உன்னைப்போல் ஒருவன்’, ‘யாருக்காக அழுதான்?’, ‘பிரளயம்’, ‘விழுதுகள்’ ‘கோகிலா என்ன செய்து விட்டாள்?”, ‘கருணையினால் அல்ல’ என்று நீளும் குறுநாவல்களுக்கிடையே, ஒன்று நன்றாகத் தெளிவாகத் தெரிகிறது. ஜெயகாந்தனுக்கு அவரது குறுநாவல்கள்தாம் ஒரு கதையை அவர் எடுத்தாளுகின்ற பாங்குக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது. //  (இந்நூல் – பக்கம் 150)

எழுத்தாளர் சுஜாதா பற்றிய இவரது கண்ணோட்டத்தையும் இங்கு குறிப்பிட்டு ஆக வேண்டும்.

// இவர் விகடனில் எழுதிய முதல்கதை ‘ஜன்னல் மலர்’. பின்னால் அதே விகடனில் ‘கரையெல்லாம் செண்பகப்பூ’ வருவற்குள் நன்றாகவே தமிழ் எழுத்துலகில் சுஜாதா தன் ஸ்தானத்தை நிலை நிறுத்திக் கொண்டு விட்டார். பூப்போன்ற அந்தக் கவிதைத் தலைப்பு, கதையின் இடையிட்ட நாடோடிப் பாடல்கள், கிராமம் கிராமம் சார்ந்தமக்கள், நாடோடிப் பாடல்கள் பற்றி ஆராயும் நோக்குடன்வந்திருக்கும், வாலிபன் கல்யாணராமன், சென்னை வாலிபி சிநேகலதா. ஜமீன், அமானுஷ்யம், மர்மம் என்று கலந்து கட்டி சுஜாதா விளையாடி இருந்தார். அந்த நாடோடிப் பாடல்கள் மிக்ஸிங் அவருக்கு ஒரு இலக்கிய மேதைமையை அளிக்க, ஜெயராஞ் ஓவியம், ஆனந்த விகடன் பிரசுரம் என்று, சுஜாதா வெகுஜன வாசகர்கள் கவனிக்கப்படும் எழுத்தாளரானார். // (இந் நூல் - பக்கம் 155 ) 

கரிச்சான் குஞ்சு எழுதிய ‘பசித்த மானிடம்’ என்ற நாவல் குறித்தான ஆசிரியர் ஜீவியின் பார்வையும் அனுபவமும், எனக்கும் அதே போன்றுதான் உள்ளது. இவர் சேலம் மாவட்ட மைய நூலகத்திலிருந்து இந்த நூலை எடுத்து படித்து இருக்கிறார். நான் திருச்சி மாவட்ட மைய நூலகத்திலிருந்து எடுத்து படித்தேன். ஆனாலும் ஜீவி சாருக்கு கரிச்சான் குஞ்சு மீது இருக்கும் நினைவலைகள் போன்றவை எனக்கில்லை.

// எப்போதாவது கும்பகோணம் செல்கையில், டபீர்தெரு நுழைய நேரிடுகையில், கரிச்சான் குஞ்சு சாரின் நினைவு மேலோங்கி நெஞ்சைக் கனக்கச் செய்யும் //   (இந்நூல் – பக்கம் 67)

நூலின் வெற்றி:

எழுத்தாளர் ஜீவி இந்த நூலில் சொன்ன அவர் லயித்த எழுத்தாளர்களின் எழுத்துக்களைப் பற்றி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.. படிக்கப் படிக்க எனக்கு, மீண்டும் , அந்த நாளில் எனது கல்லூரி படிப்பின் போது படித்த அந்த நூல்களை மறு வாசிப்பு செய்ய வேண்டும் போல் இருக்கிறது. இந்நூலினைப் படிக்கும் என்னைப் போன்ற மற்றவர்களுக்கும் , புதியவர்களுக்கும் அந்த எழுத்தாளர்களது படைப்புகளை படிக்க ஆர்வத்தை இந்த நூல் தூண்டும் என்பதே இந்நூலின் வெற்றி.

பொதுவாக நூல் விமர்சனம் என்றால், அந்த நூலிலிருந்து சிலவற்றை மேற்கோள்களாக காட்டுவது வழக்கம். இது பழைய நடைமுறையே என்றாலும் அந்த எழுத்தாளரை கௌரவிப்பதாக இருப்பதால், நானும் இங்கு எழுத்தாளர் ஜீவியின் நூலிலிருந்து சில மேற்கோள்களை பார்வைக்கு எடுத்து வைத்துள்ளேன். ஆசிரியர் ஜீவி அவர்களுக்கு நன்றி.

சந்தியா பதிப்பகம் குறிப்புரை:

நூலின் பெயர்: ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா வரை
நூலாசிரியர்: ஜீவி
பக்கங்கள்: 264 விலை; ரூ 225/=
நூல் வெளியீடு: சந்தியா பதிப்பகம், புதிய எண்.77, 53 ஆவது தெரு, 9 ஆவது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600 08 தொலைபேசி 044 24896979

// ஜீவி தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். இதுவரை நான்கு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. இணையத்திலும் எழுதி வருகிறார். தமிழில் வெளிவரும்  உயரிய படைப்புகளை கடந்த 50 ஆண்டுகளாகத் தொடர்ந்து வாசித்து வருகிறார் ஜீவி என்கிற ஜீ. வெங்கட்ராமன். சென்னையில் வசித்து வரும் இவருக்கு வயது 73.தனது வாசிப்பனுபவம் மூலமாக கண்டடைந்த 37 தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் அவருக்கு ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவே இந்த நூல்.உன்னதமான தனது உணர்வெழுச்சிகளையும் விமர்சனங்களையும் எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி ஒரு எளிய நடையில் தன் சக வாசகர்களுடன் ஜீவி பகிர்ந்து கொள்கிறார் //                             (நன்றி: http://sandhyapublications.com/index.php?route=product/product&product_id=369

தொடர்புடைய பிற பதிவுகள்:

கரிச்சான் குஞ்சு - ”பசித்த மானிடம்http://tthamizhelango.blogspot.com/2012/03/blog-post_08.html
மறக்கமுடியாத தமிழ் எழுத்துலகம் http://jeeveesblog.blogspot.in/2016/02/blog-post_49.html
.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா வரைநூல் அறிமுகம் http://unjal.blogspot.com/2016/03/blog-post.html
ஜீவி - புதிய நூல் - அறிமுகம் - பகுதி 1 http://gopu1949.blogspot.in/2016/03/1.html

                                                           

36 comments:

  1. தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர் - திரு.ஜீவி ஐயா
    - என இனிய அறிமுகத்துடன் நிறைய தகவல்கள்...

    என்றும் நினைவிலிருக்கும் இனிய பதிவு..

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜு அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  2. தங்கள் பாணியில் இந்த நூல் பற்றிய அறிமுகம் மிகச்சிறப்பாகவும், மிக விரிவாகவும், மிக அழகாகவும் எழுதப்பட்டுள்ளது. பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள், சார்.

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள V.G.K. அவர்களுக்கு வணக்கம். எழுத்தாளர் ஜீவி அவர்களின் ஒரு நல்ல விமர்சன நூலை எனக்கு அறிமுகம் செய்து வைத்த உங்களுக்கு மீண்டும் நன்றி. அவருடைய மற்றைய நூல்களையும் வாங்கி படிக்க வேண்டும்.

      Delete
  3. மிக அருமையான் விமர்சனம்.வாசிப்பனுபவம் அடிக்கடி ஜீவிசார் சொல்லும் வார்த்தை. உங்களுக்கு வாசிப்பனுபவம் இருக்கிறபடியால் வாசித்து அழகாய் பகிர்ந்து இருக்கிறீர்கள்.நன்றி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. வாசிப்பு பழக்கம் இருப்பதால் பல விஷயங்களையும் தெரிந்து கொள்ள முடிகிறது. வயதாக ஆக ஞாபகமறதி வரும்; இந்த குறைபாடை நீக்க தினமும் கொஞ்சநேரமாவது எதையாவது படிக்கச் சொல்கிறார்கள் நரம்பியல் மருத்துவர்கள்.

      Delete
  4. தங்களது இணையதளம் குறித்த தகவலும், ஆலோசனையும் தந்த தமிழ் BM நிர்வாகத்தினருக்கு நன்றி. நண்பர்களுடன் கலந்து ஆலோசிக்க வேண்டிய விஷயம் இது. பார்ப்போம்.

    ReplyDelete
  5. அரிய தகவல்கள் நிறைய அறிந்தேன் நன்றி நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. கோடை வருகிறது. மறுபடியும் உங்கள் வருகையின்போது பதிவர்கள் சந்திப்பு உண்டா?

      Delete
  6. அற்புதமான அருமையான நூல் விமர்சனம்
    ஜீ.வி அவர்களின் நூல் குறித்தும்
    முதுபெரும் எழுத்தாளர்கள் குறித்தும்
    இரட்டைக் குதிரைச் சவாரி போல்
    சொல்லிப் போனவிதம் மிக மிக அருமை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் எஸ்.ரமணி அவர்களின் பாராட்டிற்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி. நீங்கள் அன்று கொடுத்த உற்சாகம்தான் இன்றும் என்னால் வலைப்பதிவின் பக்கம் வந்து போக முடிகிறது.

      Delete

  7. திரு வை.கோ அவர்கள் திரு ஜீ.வி அவர்களின் ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா வரை நூல் என்ற பற்றிய தனது திறனாய்வை தொடராகத் தந்துகொண்டு இருக்கும்போது தாங்கள் அதை ஒரே பதிவில் சுருக்கமாக தந்துவிட்டீர்கள். பாராட்டுக்கள்! திரு வைகோ அவர்களின் பதிவும் தங்களின் பதிவும் ஒரே செயலைச் செய்ய தூண்டுகின்றன. அது உடனே இந்த நூலை வாங்கி படிக்க வேண்டும் என்பதுதான்.

    ReplyDelete
    Replies
    1. அய்யா V.N.S. அவர்களின் கருத்துரைக்கும், பாராட்டிற்கும் நன்றி. திரு V.G.K. அவர்கள் சிறந்த எழுத்தாளர் மற்றும் மூத்த வலைப்பதிவர் மட்டுமல்லாது அவருக்கு இருக்கும் வாசகர் வட்டமும் பெரிது. எனவே அவரால் தொடர்ந்து எழுத முடியும். அருமையான நூல் படித்துப் பாருங்கள்.

      Delete
  8. நூலைப் பற்றிய தங்களின் மதிப்புரை நூலை வாங்கிப்படிக்கவேண்டும் என்ற ஆவலைத் தூண்டிவிட்டது. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. நீங்கள் அவசியம் வாங்கிப் படிக்க வேண்டிய நூல். ஏனெனில் தஞ்சை மண்வாசனை உள்ள எழுத்தாளர்கள் (குறிப்பாக கும்பகோணம்)எழுத்தாளர்கள் பற்றிய ஜீவியின் பார்வையை நீங்கள் நிச்சயம் ரசிப்பீர்கள்.

      Delete
  9. இந்த நூலைப்பற்றி நமது பதிவர்கள் எழுதியிருக்கும் விமர்சனங்களைப் பார்க்கும்போது எழுத்தாளர்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம் என தோன்றுகிறது. அய்யா வைகோ அவர்களின் பதிவிலும் இந்நூலைப் பற்றி அறிந்துவருகிறேன். விரைவில் வாங்குவேன்.
    பகிர்வுக்கு நன்றி!
    த ம 6

    ReplyDelete
    Replies
    1. பத்திரிக்கைத்துறையைச் சார்ந்த நண்பரே! உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. மணிக்கொடி கால எழுத்தாளர்களைப் பற்றி அறிந்து கொள்ள இந்த நூலை நீங்கள் அவசியம் வாங்கிப் படிக்க வேண்டும்.

      Delete
  10. சென்னை செல்லும்போது ஜீவியைச் சந்திக்க வேண்டும் அவரது ஆழ்ந்த வாசிப்பை உணர்ந்தவன் நான் என் சிறுகதை ஒன்றை வாசித்துக் கருத்துக் கூறக் கேட்டிருந்தேன் அவரும் எழுதி இருந்தார்

    ReplyDelete
    Replies
    1. அய்யா G.M.B அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

      Delete
  11. நூலை நன்கு அனுபவித்து வாசித்துள்ளீர்கள் என்பது உங்கள் இந்த விமர்சனத்தைப் படிக்கும் போது தெரிகிறது. நீங்கள் தமிழிலக்கியம் படித்துள்ளதால் இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் எழுத்தாளர்களின் படைப்புகளைப் படித்திருப்பீர்கள். அருமையான விமர்சனத்துடன், நான் எழுதிய பதிவின் இணைப்பையும் இங்குக் கொடுத்தமைக்கு மிகவும் நன்றி சார்!

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நீங்கள் நினைத்தது சரிதான். ஆரம்பத்தில் இந்த பதிவை எழுதத் தொடங்கிய போது எங்கிருந்து எப்படி தொடங்குவது என்று யோசனையாகவே இருந்தது. கல்லூரியில் தமிழ் இலக்கியம் படித்தபோது படித்த நாவல்கள். சிறுகதைகள் வாசிப்பு அனுபவம் இந்த நூல் விமர்சனம் எழுத உதவிற்று.

      Delete
  12. எழுத்தாளர்களைப் பற்றி இன்னொரு எழுத்தாளர் எழுத ,அதைப் பற்றி நீங்கள் எழுத ,இதுவும் சுவாரசியமா இருக்கே :)

    ReplyDelete
    Replies
    1. பகவான்ஜீ அவர்களின் வித்தியாசமான பார்வைக்கு நன்றி.

      Delete
  13. பெயரிலிலேயே தமிழைக் கொண்டிருப்பவர் நம் தமிழ் இளங்கோ அவர்கள்.

    தமிழை மேற்படிப்புக்கு படித்தவரின் பார்வை என்பது இந்தப் புத்தகத்திற்கு கிடைத்த கூடுதல் சிறப்பு. கல்லூரி காலத்தில் தமிழ் இங்க்கோ அவர்கள் வாசித்த எழுத்தாளர்களின் படைப்புகளைப் பற்றிய அவர் நினைவைத் தூண்டும் விதத்தில் கிரியாவூக்கியாக இந்த நூல் அமைந்தது என்பது என் பாக்கியம்.

    இந்த நூலை கையிலெடுத்து படித்து முடிக்கும் வரை அந்த எழுத்தாளர்களது நினைப்பும் அவர்களின் எழுத்து சுவாரஸ்யமும் கூடவே வந்தன என்று தமிழ் இளங்கோ அவர்கள் குறிப்பிட்டிருப்பது தமிழ் எழுத்துலகின் மறக்கமுடியாத நம் முன்னோடிகளுக்கான பெருமை.

    தனித்தனி தலைப்புகள் கொடுத்து ஆய்வுக் கட்டுரைகள் பாணியில் ஒரு குட்டியூண்டு காப்ஸ்யூல் ரூபத்தில் கொடுத்திருப்பது தனித்தன்மை கொண்டு சிறக்கிறது. இந்தப் புத்தகம் கிடைக்குமிடம், அதை வாங்குவது எப்படி என்று விவரங்களைத் தெரிவிக்கும் யோசனையாய் சந்தியா பதிப்பகத்தின் சுட்டியையும் இந்த விமரிசன இணைப்பில் சேர்த்திருப்பது கூடுதல் தகவலாய் இந்த கட்டுரையை முழுமைபடுத்துகிறது.

    'கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்' என்றார் பாவேந்தர் பாரதிதாசனார்.

    'இணையத்தில் உலா வரும் நம் பதிவர் திருக்கூட்டம் இனைத்து செயல்பட்டால் எந்த அரிய செயலையும் எய்திக்காட்டுதல் நம்மவர்க்கு எளிதேயாம்' என்று வாழ்த்திசைக்கத் தோன்றுகிறது.

    தன்னை அழுத்தும் பல வேலைச் சுமைகளுக்கிடையே நம் பதிவர் ஒருவரின் நூல் என்றதும் அதை வாங்கி, படித்து பரவசமுற்று அழகான விமரிசனமும் அளித்த அன்பர் தமிழ் இளங்கோ அவர்களுக்கு என் மனம் கனிந்த நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள எழுத்தாளர் திரு. ஜீவி அவர்களின் வருகைக்கும் , நீண்ட அன்பான கருத்துரைக்கும் நன்றி.

      நான் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பட்டப் படிப்புகள் படித்த போது வெறும் மார்க்குகளுக்காக மட்டுமல்லது, உணர்வு பூர்வமாகவே தமிழ் இலக்கிய ரசனையோடு படித்தேன். அந்த வகையில் உங்கள் பட்டியலில் உள்ள ந. பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன், கரிச்சான் குஞ்சு, புதுமைப்பித்தன், சி.சு.செல்லப்பா, விந்தன், தி. ஜானகிராமன், கு. அழகிரிசாமி, ஜெகசிற்பியன், அசோகமித்திரன், நா. பார்த்தசாரதி, ஜெயகாந்தன், சுஜாதா எழுத்துக்களில் ஒரு ஆர்வம். படிப்புக்கு பிற்பாடுதான் பாலகுமாரன், எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோர். எனவே உங்கள் நூலைப் படிக்கும்போது அந்நாளைய கதை மாந்தர்கள் மலரும் நினைவுகளாக வந்தனர். மகிழ்ச்சியாகவும் இருந்தது.

      இன்னும் ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி அய்யங்கார் பற்றியும் எழுதி இருக்கலாம். நீங்கள் ஒரு கணக்காக ’கங்கையை செம்புக்குள் அடக்க முடியாதுதான்’ என்று உங்களது பதிலை முத்தாய்ப்பாக முன்னதாகவே உங்களது நூலில் சொல்லி விட்டீர்கள்.

      உங்களது இந்த நூலைப் படித்தவுடன், ஏற்கனவே நான் படித்த தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’, ’’செம்பருத்தி’ ஆகிய பெரிய நாவல்களை மீண்டும் படிக்க வேண்டும் போலிருக்கிறது. ஆசைதான். ஆனால் பழைய சூழலும் நேரமும் இப்போது இல்லை.

      ஒருவேளை இந்நூலின் தொடர்ச்சியை எழுதுவதாக இருந்தால் மேலே சொன்ன ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி அய்யங்கார் ஆகியோரோடு தேவன், கல்கி, சாண்டில்யன் பற்றிய உங்களது இலக்கிய அனுபவத்தையும் வாசகர்கள் நுகரலாம். நன்றி.

      Delete
    2. //ஒருவேளை இந்நூலின் தொடர்ச்சியை எழுதுவதாக இருந்தால் மேலே சொன்ன ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி அய்யங்கார் ஆகியோரோடு //

      நீங்கள் என் வலைத்தளத்தில் 'அழகிய தமிழ் மொழி இது' தொடர் பார்க்கவில்லையா?.. ஐந்து பகுதிகள் வந்த் விட்டனவே?.. வாருங்கள், உங்கள் தமிழ் ஆர்வத்திற்கு நிறைய அங்கே காத்திருக்கின்றன. ஆரணியார் அதில் இருக்கிறார். தமிழ் நாவல் உலகமும் ஓர் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறது..அங்கு வாருங்கள், தொடர்ந்து பேசலாம்.

      அன்புடன்,
      ஜீவி

      Delete
    3. மரியாதைக்குரிய ஜீவி அவர்களுக்கு வணக்கம். இன்று மாலைதான்
      (மேலே உள்ள எனது மறுமொழிக்குப் பின்னர்) உங்களது வலைத்தளத்தினை ஒரு பார்வை பார்த்தேன். அப்போதே நினைத்தேன். நீங்கள் இதுபோல் சொல்வீர்கள், என்று. இனி நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்களுடைய பழைய பதிவுகளைப் படித்து விடலாம் என்று இருக்கிறேன். நன்றி.

      Delete
  14. அவசியம் வாங்கிப் படிக்க வேண்டிய நூல் என்பதை உணர்ந்து கொண்டேன் ஐயா
    அவசியம் வாங்குவேன்
    நன்றி ஐயா
    தம’1

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் ஒரு ஆசிரியர். மேலும் புத்தகப் பிரியர். நல்ல எழுத்தாளர். அவசியம் இந்த நூலை வாங்கிப் படிக்கவும்.

      Delete
  15. ஜி வி அவர்களின் புத்த விமர்சனம் உங்கள் நடையில் அருமை ஐயா. வைகோ அவர்களும் எழுதிவருகிறார்... சிறப்பான அறிமுகம் மிக்க நன்றி பகிர்விற்கு.

    ReplyDelete
    Replies
    1. சகோதரரின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. மூத்த வலைப்பதிவர் திரு வை.கோபாலகிருஷ்ணன் எழுத்துநடை என்பது சுவாரஸ்யமான தனி பாணி.

      Delete
  16. படித்ததை அழகாகப் பகிர்ந்துள்ளீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. எங்கள் blog ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி.

      Delete
  17. படித்ததை அழகாகப் பகிர்ந்துள்ளீர்கள்.

    ReplyDelete
  18. இந்த நூலைப் பற்றி நீங்கள் எழுதியிருப்பதைப் படித்தபின் நிச்சயம் வாங்கிவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். நானும் உங்கள் மூலம் திரு ஜீவி அவர்களின் வலைத்தளத்தைப் பற்றி அறிந்தேன். இனி தினமும் சென்று படிக்கிறேன்.
    இரண்டிற்கும் உங்களுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. மேடம் அவர்களுக்கு நன்றி. நானும் எழுத்தாளர் ஜீவி அவர்களின் வலைத்தளத்தில் உள்ள கட்டுரைகளை இப்போதுதான் படிக்கத் தொடங்கி இருக்கிறேன்.

      Delete