Saturday 23 January 2016

கொதிநீர் காயமும் தீ ரண சஞ்சீவியும்



நாம் என்னதான் கவனமாக இருந்தாலும், முன்னெச்செரிக்கை நடவடிக்கையோடு செயல்பட்டாலும், சில விஷயங்கள் நடந்து விடுகின்றன. இதைத்தான் நமது முன்னோர்கள் வருவது வந்தே தீரும்; நடப்பது நடந்தே தீரும் என்று சொன்னார்களோ என்னவோ. திருவள்ளுவரும் , ஒரு கட்டத்தில்,

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.  _ ( திருக்குறள் 380 )

என்று சொல்லி ஒதுங்கி விட்டார்.

கொதிநீர் காயம்:

எங்கள் பகுதியில் குடிநீர் சப்ளை சரியாக இல்லை. அப்படியே வந்தாலும் ஒரே கலங்கல். எனவே பலரும் குடிநீருக்காக மட்டும் ‘மினரல்’ தண்ணீருக்கு தாவி விட்டனர். நாங்களும் ஆரம்பத்தில் வாங்கிப் பார்த்தோம். காசு கொடுத்தும் பிரயோசனம் இல்லை. குடித்தால் தண்ணீர் தாகம் கட்டுவதில்லை; ஒரே கசப்பு உணர்வு. ஒரு தம்ளருக்கு மேல் குடிக்க முடிவதில்லை. எனவே கொஞ்சதூரம் (புதுக்கோட்டை சாலைக்கு அருகிலுள்ள) ஒரு ஏரியாவிற்கு போய்) 20 லிட்டர் ’வாட்டர் கேனில்’ அங்குள்ள குழாயில் காவிரி தண்ணீர் எடுத்து வருவது வழக்கம். இந்த குழாய் திருச்சி – சிவகங்கை – ராமநாதபுரம், ராமேஸ்வரம் செல்லும் குடிநீர்க்குழாயிலிருந்து இணைக்கப்பட்டது ஆகும்.

பொங்கலுக்கு முதல்நாள் இந்த பழைய ’வாட்டர் கேன்’ - எப்படியோ விரிசல் ஆகிவிட்டது. எனவே பொங்கலன்று புதிய கேன் ஒன்றை வாங்கி முதலில் கொதிநீர்விட்டு சுத்தம் செய்துவிடுவோம் என்று கேனில் கொதீர்நீிர் ஒரு செம்பு விட்டு , மூடிவிட்டு மாறிமாறி இரண்டு கைகளாலும் குலுக்க ஆரம்பித்தேன். அவசரத்தில் எப்போதும் கேனில் போடும் உள்மூடியை போடாமல் குலுக்கியதால், வெளிமூடி வழியே வழிந்த கொதிநீர் இரண்டு கைகளிலும் மேற்புறம், உள்புறம் பட்டு கொப்பளித்து விட்டன. உடனே குளிர்ந்த குழாய் நீரை விட அப்போதைக்கு எரிச்சல் அடங்கியது. 

ஸ்ரீரங்கம் கடைவீதி:

அடுத்த இரண்டு நாட்கள் ஒரே எரிச்சல். பொங்கலை முன்னிட்டு (மருந்துக்கும்) கடைகள் இல்லை. கை விரல்களைப் பார்த்து விட்டு, யாரும் நம்மை தப்பாக நினைத்து விடக் கூடாதே என்று வெளியில் அதிகம் செல்ல வில்லை. அப்போது ,இதே போன்ற கொதிநீர் அனுபவத்தை, நமது வலைப்பதிவர் சகோதரர் வெங்கட்நாகராஜ் அவர்களின் மனைவி சகோதரி ஆதி வெங்கட் அவர்கள் தனது வலைப்பதிவில் ஒரு மூலிகை எண்ணெயைப் பற்றி சொல்லி இருந்தது நினைவுக்கு வந்தது. அவரது தண்ணில கண்டம்!!!! http://kovai2delhi.blogspot.in/2015/03/blog-post.html என்ற வலைப்பதிவில் குறிப்பிட்ட மூலிகை எண்ணெய் ( ஸ்ரீரெங்கா தீ ரண சஞ்சீவி) பெயரைத் தெரிந்து கொண்டு, சென்ற ஞாயிறன்று, ஸ்ரீரங்கம் கடைவீதி சென்றேன். ஒவ்வொரு கடையாகக் கேட்டு ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே உள்ள ஒரு ஆங்கில மருந்துக் கடையில் வாங்கினேன். வீட்டிற்கு வந்து அந்த ’ ஸ்ரீரெங்கா தீ ரண சஞ்சீவி’யைத் தடவியதில் கைகளில் குணம் தெரிய ஆரம்பித்தது. இப்போது கைகள் நன்றாக இருக்கின்றன; பாதிக்கப்பட்ட இடத்தில் தோல் உரிந்து புதியதோல் வர ஆரம்பித்து விட்டது. தகவல் தந்த சகோதரிக்கு நன்றி!

விளம்பரம் அல்ல:

இந்த பிரச்சினையால், முன்புபோல் உடனுக்குடன் அதிகம் கருத்துரைகள், பதிவுகள் எழுதல்லை. அப்படியும் முடிந்தவரை பார்ப்போம் என்று, கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்தால் வீட்டில் எல்லோரும் திட்டுகிறார்கள். எப்படியோ அடுத்த (இந்த) கட்டுரையை வெளியிட்டு விட்டேன்.

இந்தக் கட்டுரையை எழுதியதில் எனக்கு  எந்தவிதமான விளம்பர எண்ணமும் கிடையாது, இந்த மூலிகை எண்ணெய் ஸ்ரீரங்கத்தில் மட்டுமே கிடைக்கும் என்று எண்ணினேன். ஆனால் பல ஊர்களிலும், ஆங்கில மற்றும் தமிழ் மருந்து கடைகளில் கிடைப்பதாகத் தெரிகிறது. கைகளில் கொதிநீர் பட்டவுடன் ஆளாளுக்கு ஒரு ஆலோசனை சொன்னார்கள். எங்களது பெரியம்மா பையன் (அண்ணன் – வயதில் மூத்தவர்) ஒரு ஹோமியோபதி கிரீமை சொன்னார். நான் எப்போதுமே ஆங்கில வைத்தியம்தான் பார்ப்பேன். சுளுக்கு, கைகால் மூட்டு வலி போன்றவைகளுக்கு பாரம்பரிய வைத்தியமுறையை நாடுவதுண்டு. காயம் பெரிதாக இல்லாததால், இந்த மூலிகை எண்ணெயைப் பயன்படுத்தினேன்.

22 comments:

  1. அடடா, நிகழ்ந்ததைக் கேட்கவே மிகவும் வருத்தமாக உள்ளது சார். எதிலும் படபடப்பு இல்லாமல் கொஞ்சம் பொறுமையாக இருங்கோ, சார்.

    >>>>>

    ReplyDelete
  2. //நமது வலைப்பதிவர் சகோதரர் வெங்கட்நாகராஜ் அவர்களின் மனைவி சகோதரி ஆதி வெங்கட் அவர்கள் தனது வலைப்பதிவில் ஒரு மூலிகை எண்ணெயைப் பற்றி சொல்லி இருந்தது நினைவுக்கு வந்தது. அவரது தண்ணில கண்டம்!!!! http://kovai2delhi.blogspot.in/2015/03/blog-post.html என்ற வலைப்பதிவில் குறிப்பிட்ட மூலிகை எண்ணெய் ( ஸ்ரீரெங்கா தீ ரண சஞ்சீவி) பெயரைத் தெரிந்து கொண்டு, சென்ற ஞாயிறன்று, ஸ்ரீரங்கம் கடைவீதி சென்றேன். //

    நானும் அந்தப் பயனுள்ள பதிவினைப் படித்துள்ளேன். இங்கு என் உறவினர் ஒருவருக்குக்கூட அதனை பரிந்துரை செய்தேன்.

    >>>>>

    ReplyDelete
  3. //இந்த பிரச்சினையால், முன்புபோல் உடனுக்குடன் அதிகம் கருத்துரைகள், பதிவுகள் எழுதல்லை.//

    அதனால் பரவாயில்லை சார். உடல்நலத்தை நன்றாக கவனித்துக்கொள்ளுங்கள். வலையுலகில் வலம் வர ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். நாம் இல்லாதுபோனால் ஒன்றும் குடிமுழுகிப்போய்விடாது.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. //நாம் இல்லாதுபோனால் ஒன்றும் குடிமுழுகிப்போய்விடாது//

      அப்படியா? நான் பதிவு எழுதாவிட்டால் உலகமே அஸ்தமித்துப் போய்விடும் என்றல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

      Delete
    2. பழனி. கந்தசாமி Saturday, January 23, 2016 6:19:00 pm

      **நாம் இல்லாதுபோனால் ஒன்றும் குடிமுழுகிப்போய்விடாது**

      //அப்படியா? நான் பதிவு எழுதாவிட்டால் உலகமே அஸ்தமித்துப் போய்விடும் என்றல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறேன்.//

      தங்களுக்கு இன்னும் ஆசை குறையவில்லை. வயசாக வயசாக நாளுக்கு நாள் பேரெழுச்சியுடன் செயல்படுகிறீர்கள் ..... அதாவது பதிவுகள் வெளியிடுவதில் மட்டும். :) ..... அதனால் உங்கள் நினைப்பு சரியே !

      என் விஷயம் அப்படி அல்ல. கடந்த 22 நாட்களாக என் வலைத்தளத்தினில் நான் ஏதும் புதிய பதிவுகள் தரவே இல்லை. குடிமுழுகிப்போனதாகவோ, உலகமே அஸ்தமித்துப் போனதாகவோ என்னால் உணர முடியவில்லை. :)

      Delete
  4. // அப்படியும் முடிந்தவரை பார்ப்போம் என்று, கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்தால் வீட்டில் எல்லோரும் திட்டுகிறார்கள்.//

    வீட்டுக்கு வீடு வாசல்படியாகத்தான் உள்ளது. :)

    திட்டத்திட்ட திண்டுக்கல், வெய்ய வெய்ய வைரக்கல் என எடுத்துக்கொள்ளுங்கோ.:)

    //எப்படியோ அடுத்த (இந்த) கட்டுரையை வெளியிட்டு விட்டேன்.//

    மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. தீப்புண்ணால் பாதிப்போருக்கு இது மிகவும் பயனுள்ள பகிர்வாக அமையக்கூடும்.

    ReplyDelete
  5. கவனமாக இருக்க வேண்டும் ஐயா... இந்த ஸ்ரீரெங்கா தீ ரண சஞ்சீவி பலருக்கும் உதவும்... நன்றி... முழுவதும் குணமான பின் வலையை தொடருங்கள் ஐயா...

    ReplyDelete
  6. கவனமாக இருங்கள். படித்தவுடனேயே கஷ்டமாகி விட்டது. சில சமயங்களில் இப்படித்தான் நடந்து விடுகிறது.

    தீ ரண சஞ்சீவி நல்ல குணம் தரும்.... விரைவில் நலம் பெற எனது பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  7. அன்புள்ள அய்யா,

    கொதிநீர் தங்கள் கையைச் சுட்டது அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். அந்நிலையில்கூடத் தாங்கள் பதிவிட்டது கண்டு வியந்தேன். எதிலும் அவசரப் படாமல்... பதட்டமில்லாமல் அமைதியாக இருங்கள். உடல்நலத்தைப் பார்த்துக்கொள்ளவும். விரைவில் முழு நலம் அடைய வேண்டுகிறேன்.

    நன்றி.

    த.ம.3

    ReplyDelete
  8. படித்ததும் சற்றே அதிர்ச்சி. தங்களது உடல்நலனை கவனித்துக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  9. சீக்கிரம் குணமாவீர்கள்.

    ReplyDelete
  10. கவனம் தேவை ஐயா
    உடல் நலனைக் கவனித்துக்கொள்ளுங்கள்

    ReplyDelete
  11. வணக்கம்
    ஐயா

    படித்த போது அதிர்ச்சியடைந்தேன். கவனம் தேவை ஐயா. த.ம 5

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  12. தங்களின் கைகளில் ஏற்பட்ட காயங்கள் விரைவில் ஆறுவதற்கு வேண்டுகின்றேன். சில மாதங்களுக்கு முன்னால் காலில் ஏற்பட்ட வேதனையைக் கூறியிருந்தீர்கள்..

    கவனமாக இருக்கவும். ஆனால் - ஊழிற் பெருவலி யாவுள .. எனும் போது என்னதான் செய்வது?..

    ReplyDelete
  13. அச்சோ :( கவனம் அண்ணா ...கொதிநீர் பட்ட உடனே அந்த இடத்தில சுத்தமான தேன் தடவினா சீக்கிரம் ஆறிடும் .இது நான் செய்து பார்த்தது ..கொதிக்க கொதிக்க டீயோ காபியோ குடிச்சாலும் இதே ட்ரீட்மென்ட் தான் .டேக் கேர் அண்ணா

    ReplyDelete
    Replies
    1. தேனும் நல்ல மருந்து தான்! கொப்புளங்கள் உண்டாகவில்லை எனில்தேன் தடவினால் சரியாகி விடும்.

      Delete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. 1977 ல் நாகையில் ஒரு பெரும் புயலில் நாங்கள் தவித்து ஒரு 30 நாட்களுக்கு குடி நீர் இல்லாமல் தவித்த நாட்கள் நினைவுக்கு வந்தன.

    எனது மனைவி ஒரு பெரிய அண்டாவில் நீரைக் கொதிக்க வைத்து அதை அடுப்பில் இருந்து இறக்கும்போது கை தவறி அப்படியே உடலில் கொட்டிக்கொண்டதும் வயிற்றில் பெரிய தீக்காயங்கள் ஏற்பட்டு, ஓரிரு தினங்களில் பெரிய பெரிய கொப்புளங்கள் ஆனதும் எங்களுக்கு நினைவு இருக்கிறது.

    ஒரு ஐந்து வருடங்களுக்கு முன்பு எனது பேரன் ஒரு வயதே நிரம்பிய நிலையில், ஒரு நாள், பொடியன் மின்சார வாடர் கெட்டில் வயரை இழுத்து கொதிக்கும் நீரை உடலில் கொட்டிக்கொண்டு, அவனுடன் நாங்களும் அடுத்த இரண்டு மாதங்கள் அவதிப்பட்டதும் நினைவு வருகிறது.
    கொதி நீர் காயங்கள் கொப்புளங்கள் அனால்,
    உடன் மருத்துவர் உதவி கோருதல் தேவை.
    20 பர சென்ட் க்கு மேல் காயங்கள் இருப்பின்,
    செப்டிக் ஆகாமல் இருக்க ஆண்டி பயாடிக் மாத்திரைகள் தரவேண்டும்.
    சில்வர் நைட்ரேட் ஆயிண்ட்மெண்ட் உடனடியாக ஒரு 100 ட்யூப் வாங்கி ஒரு நாளைக்கு 5 வேளை போடவேண்டும்.
    டயாபெடிக் ஆக இருக்கும் பட்ச்சத்தில் இன்னமும் கவனம் தேவை.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com

    ReplyDelete
  16. தமிழ் இளங்கோ!
    Wish you speedy recovery.
    Please also see a burns specialist or a surgeon.

    ReplyDelete
  17. இப்போது நலம தானே ஐயா

    ReplyDelete
  18. என்மீதுள்ள அன்பினால், எனது நலன் விசாரித்த அன்பர்கள் அனைவருக்கும் நன்றி! மேலே ஒவ்வொருவருக்கும் தனித்தனியே நன்றி தெரிவிக்க முடியவில்லை. மன்னிக்கவும்.

    ReplyDelete
  19. தாங்கள் தற்போது பூரண குணம் பெற்று இருப்பது குறித்து மகிழ்ச்சி ஐயா. அந்த மருந்து பற்றி சகோதரியின் தளத்தில் வாசித்திருக்கின்றோம். குறித்தும்வைத்துள்ளோம்.

    இந்தப் பதிவும் விடுபட்டுவிட்டது. ப்ளாகர் டேஷ் போர்டு செல்லாமல் மின் அஞ்சல் வழி வருவதையும், எங்கள் தளத்தில் அப்டேட் ஆனாலும் நாங்கள் கழிந்த சில வாரங்களாகப் பல வேலைப்பளுவில் தளம் வரும் போது அப்டேட் ஆன பதிவுகள் கீழே சென்று விட்டால் சில சமயங்களில் விடுபட்டு விடுகின்றன. அதனால்தான்..

    ReplyDelete