Sunday, 31 January 2016

பெரம்பலூர் – புத்தகத் திருவிழா 2016 சென்றேன்சில மாதங்களாக, வீட்டை விட்டு வெளியில் எங்கும் செல்ல முடியாமல் இருந்த இறுக்கமான சூழ்நிலை சற்று விலகியதால், இப்போது அடிக்கடி வெளியூர் பயணம். சென்றமுறை புதுக்கோட்டை. இந்த தடவை பெரம்பலூர்

முதல்நாள்:

ஏற்கனவே பத்திரிகைகளில் பெரம்பலூரில் நடக்கவிருக்கும் புத்தகத் திருவிழா பற்றிய செய்திகள் வெளியாகி இருந்ததால் அங்கு போக வேண்டும் முடிவு செய்து இருந்தேன். நேற்று (30.01.16 சனிக் கிழமை) மாலை சென்றேன். பஸ் பயணம். புத்தகக் கண்காட்சி தொடங்கிய இரண்டாம் நாள் என்பதால் மக்கள் வருகை குறைவு. ஆனாலும் மாணவர்கள் அதிகம் தென்பட்டனர். BAPASI ஆதரவுடன் பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றம், பெரம்பலூர் மக்கள் சிந்தனைப் பேரவை இணைந்து நடத்திய புத்தகத் திருவிழா இது.

(படம் மேலே) நுழைவு வாயில்
(படம் மேலே)  கலந்து கொண்ட 120 பதிப்பகங்கள்
(படங்கள் மேலே)  வாசலில் இருந்த ப்ளக்ஸ் பேனர்கள்.

வாங்கிய நூல்கள்:

பெரம்பலூர் போவதற்கு முன்னர் இண்டர்நெட்டில் ‘நூலுலகம்’ சென்று, வாங்க வேண்டிய இரண்டு நூல்களைத் தெரிவு செய்து கொண்டேன். ஒன்று தஞ்சை ராமையாதாஸ் பாடல்கள்; இன்னொன்று முகில் எழுதிய ஹிட்லர் –ஏனெனில் இப்போதெல்லாம் புத்தகங்கள் அதிகம் வாங்குவதில்லை; வாங்கியவரை போதும் என்ற எண்ணம்தான். அப்படியும் கூடுதலாகவே சில புத்தகங்கள் (பழக்க தோஷம்) வாங்கும்படி ஆகி விட்டது. இரத்தின நாயகர் & சன்ஸ் ஸ்டாலில் சில பழைய கதை நூல்கள் வாங்கினேன் ; முன்புபோல் அவர்கள் வெளியிட்ட பெரிய எழுத்து நூல்கள் இல்லை. அப்புறம் பிரேமா பிரசுரம் வெளியிட்ட  பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதைகள். (ஏற்கனவே வாங்கி இருந்த இந்த கதைநூல், பலரிடம் படிக்க கொடுத்ததில் சிதைந்து விட்டது.

(படங்கள் மேலே)  அரங்கத்தின் உள்ளே 

(படங்கள் மேலே)  கவிஞர் வைகறை (புதுக்கோட்டை) அடிக்கடி ”வரலாறு முக்கியம் நண்பரே” என்று நம்மையும் நிகழ்ச்சிகளில் போட்டோ எடுத்துக் கொள்ளச் சொல்லுவார். அதற்காக வேண்டி, நான் இருக்கும் படங்கள்.

எனக்கு சமூக வரலாறு, மக்கள் பண்பாடு நூல்களைப் படிப்பதில் அதிக ஆர்வம். மேலே வாங்கியவற்றுள், த.தனஞ்செயன் எழுதிய ‘தமிழகத்தில் புரத வண்ணார்கள்’ என்ற நூலினைப் பற்றி தி இந்து (தமிழ்) நல்ல விமர்சனம் வந்து இருந்தது. எனவே அந்த நூல். எனக்கு பழக்கமான, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் புத்தக நிறுவனத்தினரும் வழக்கம்போல் ஸ்டால் போட்டு இருந்தனர். அங்கு இருந்த தெரிந்த தோழரிடம் பெரம்பலூர் ஆசிரியர் இரா.எட்வின் வந்தாரா என்று விசாரித்தேன். எட்வின் எனக்கு அறிமுகம் கிடையாது. (இவரும் ஒரு சிறந்த வலைப்பதிவர் மற்றும் ஆசிரியர் என்ற முறையில் சந்திக்க விருப்பம்); அவர் காலையிலேயே வந்து விட்டு சென்றதாகச் சொன்னார்.

(படம் மேலே) நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்று

ஹிட்லர் கொடுத்த அலைச்சல்:

வீடு திரும்பியதும், நேற்று வாங்கிய நூல்களை எனது மனைவியும் . மகனும் வாங்கி பார்த்தனர். எனது மகன் ( எம்.ஏ..,ஆங்கில இலக்கியம், இரண்டாம் ஆண்டு மாணவர்) முகில் எழுதிய ஹிட்லர் என்ற நூலை மேலெழுந்த வாரியாக படித்தவர், “ அப்பா, அப்பா இந்த புத்தகத்தில் 20 பக்கங்கள் இல்லை; ஹிட்லர் வாழ்க்கையில் நடந்த அந்த முக்கியமான நாட்களைப் பார்ப்பதற்காக புரட்டியதில் இவை இல்லை” என்று சொன்னார்.  ’மர்மயோகி’ சினிமாவில் வரும் “பீம்சிங் இதென்ன புதுக் குழப்பம்” வசனத்தை நினைத்துக் கொண்டு அந்த நூலை வாங்கிப் பார்த்தேன். அதில் 336 ஆம் பக்கத்திற்குப் பிறகு 357 ஆம் பக்கம் தொடங்கியது – 20 பக்கங்கள் அதில் இல்லை. புத்தகம் விற்பனை செய்த ’விழிகள் பதிப்பகம், சென்னை’ கொடுத்த ரசீது புத்தகதின் உள்ளேயே இருந்தது.

இரண்டாம் நாள்:

(படம் மேலே ) இரண்டு நாட்களுக்கும் வழங்கப்பட்ட இரண்டு இலவச அனுமதிச் சீட்டுகள்.

எனவே, இன்று காலை (31.01.16 ஞாயிறு) மீண்டும் பெரம்பலூர் புத்தகக் கண்காட்சி செல்ல வேண்டியதாயிற்று. முதல் வேலையாக, அரங்கத்தினுள் நேரே ’விழிகள் பதிப்பகம்’ ஸ்டாலுக்கு சென்று, விவரத்தைச் சொல்லி புத்தகத்தை மாற்றிக் கொண்டேன். இன்று நேற்றைய தினத்தை விட கல்லூரி மாணவ மாணவியர் கூட்டம் அதிகம். ஒரு சில பள்ளிகளிலிருந்து ஆசிரியர்களே மாணவர்களை அழைத்து வந்திருந்தனர்.
புத்தகக் கண்காட்சி ஸ்டால்களுக்கு வெளியே, கலைஅரங்கம், மற்றும் சிறிய ஸ்நாக்ஸ்’ கடைகளோடு ’உலகத் தமிழர்கள் அரங்கம்’ என்று ஒரு சிறிய காட்சிக் கூடத்தையும் வைத்து இருந்தனர். அங்கே எடுத்த படங்கள் இவை (கீழே)

                                                                                                                                        
வாங்கிய நூல்கள் விவரம்:
                                                                                                                                                                      நேற்றும் இன்றுமாக இரண்டு நாட்களில் நான் வாங்கிய நூல்கள் இவை.

பவளக் கொடி மாலை – B.இரத்தின நாயக்கர் & சன்ஸ்
சித்திராபுத்திர நாயனார் கதை – B.இரத்தின நாயக்கர் & சன்ஸ்
மாடுபிடி சண்டை –  B.இரத்தின நாயக்கர் & சன்ஸ்
தஞ்சை ராமையாதாஸ் திரை இசைப் பாடல்கள் தொகுதி.1
தஞ்சை ராமையாதாஸ் திரை இசைப் பாடல்கள் தொகுதி.2
இலக்கண வினா-விடை (சாரதா பதிப்பகம்)
தமிழகத்தில் புரத வண்ணார்கள் – த.தனஞ்செயன் எழுதியது
விக்கிரமாதித்தன் கதைகள் – பிரேமா பிரசுரம்
THE COUNT OF MONTE CRISTO (Abridged Classics)  
ஹிட்லர் – முகில் எழுதியது
எப்போதுமிருக்கும் கதை – எஸ்.ராமகிருஷ்ணன் நேர்காணல்கள்
எம்.ஆர்.ராதா கலகக்காரனின் கதை – முகில் எழுதியது
சாண்டோ சின்னப்பா தேவர் – பா.தீனதயாளன் எழுதியது
  

37 comments:

 1. ஆஹா, இந்தத்தங்களின் பதிவு பெரம்பலூர் – புத்தகத் திருவிழா 2016க்கு நேற்றும் இன்றும் தங்களுடன் நானும் கூடவே வந்தது போன்ற உணர்வினைத் தந்தது.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. அன்புள்ள V.G.K. அவர்களுக்கு வணக்கம்! தங்கள் முதல் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி!

   Delete
 2. தாங்கள் காட்டியுள்ள படங்கள் அத்தனையும் அருமையாகவும், தெளிவாகவும், பளிச்சென்றும் உள்ளன.

  >>>>>

  ReplyDelete
 3. புத்தகத் திருவிழா போய் புத்தகங்கள் வாங்க வேண்டியே ஊர் விட்டு ஊர் (மாவட்டம் தாண்டி மாவட்டம்) சென்றுள்ள தங்களை நினைக்க மிகவும் வியப்பாகவும் பெருமையாகவும் உள்ளது.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. நன்றி! பொதுவாக வெளியூர்ப் பயணம் எனக்கு பிடித்தமான ஒன்றுதான்.இப்போது தொலைதூர பயணங்கள் இல்லை. அருகில் (காலையில் போய் மாலைக்குள் திரும்பும்படியான) ஊர்கள் மட்டுமே செல்கிறேன். தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

   Delete
 4. கட்டம் போட்ட சட்டையில் தங்கள் படம் இரண்டும் கலக்கலாக உள்ளன :)

  >>>>>

  ReplyDelete
 5. மேலிருந்து கீழே 11வது படத்தினில் புத்தகங்களை அவர்கள் மிக அழகாக விசிறி போல அடுக்கிக் காட்டியுள்ளதைப் பார்த்து அசந்து போனேன். :)

  அவை நல்ல கலையுணர்வுடன் அழகோ அழகாக அடுக்கப்பட்டுள்ளன.!

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. அவர் அந்தக் கடையில் பொறுமையாக அந்த வரிசையை அடுக்கிக் கொண்டு இருந்தார்.

   Delete
 6. புத்தகங்களை சுருள் சுருளாக முறுக்குக்கம்பி போல கட்டடம் கட்டுவது போல அடுக்க, அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள்? இருப்பினும் பார்க்க அது ஒரு SPECIAL ATTRACTION ஆகத்தான் உள்ளது. பார்வையாளர்களை இது நிச்சயமாக கவர்ந்து இழுக்கும் என்பதில் ஐயமில்லை.

  >>>>>

  >>>>>

  ReplyDelete
 7. ஹிட்லர் கொடுத்த அலைச்சல்:

  மனதுக்குக் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. எப்படியோ இன்று இரண்டாம் முறையாகப் போய் புத்தகத்தை மாற்றி வந்ததில் மகிழ்ச்சியே.

  மொத்தமாக 13 புத்தகங்கள் வாங்கிக் குவித்துள்ளீர்கள். வீட்டில் மிகப்பெரிய LIBRARY வைத்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

  பகிர்வுக்குப் பாராட்டுகள். வாழ்த்துகள். மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

  அன்புடன் VGK

  ReplyDelete
  Replies
  1. V.G.K. அவர்களுக்கு மீண்டும் நன்றி! இந்த அனுபவத்தால், இனிமேல் வெளியூரில் புத்தகங்கள் வாங்குவதை பற்றி யோசிக்க வேண்டும்.

   Delete
 8. நேற்று விழுப்புரம் சென்று திரும்பும் போது பெரம்பலூர் புத்தகக் கண்காட்சி பற்றிய விளம்பரப் பதாகைகள் பார்த்தேன். நேரம் ஆகிவிட்டபடியால் செல்ல முடியவில்லை. உங்கள் பதிவு மூலம் நானும் அங்கே சென்று வந்த உணர்வு.

  படங்கள் அருமை. பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் பாராட்டிற்கு நன்றி.

   Delete
 9. சில ஆண்டுகளுகு முன் தஞ்சை புத்தகத் திருவிழாவிற்குச் சென்றது.. அதன்பின் வாய்ப்பு கிடைக்கவில்லை.. அடிக்கடி வீடு மாறும் சூழ்நிலை எங்களுடையது.. அந்த வகையில் நிறைய புத்தகங்கள் சேகரிப்புகள் தொலைந்து விட்டன..

  தங்களின் பதிவு முழுக் கண்காட்சியையும் சுற்றி வந்தாற்போன்றதொரு உணர்வினை நல்கியது..

  மனமகிழ்ச்சியை வழங்கியது - இன்றைய பதிவு.. வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. கருத்துரை தந்த சகோதரர் தஞ்சையம்பதி துரை.செல்வராஜூ அவர்களுக்கு நன்றி. நாங்களும் அடிக்கடி வீடு மாறும் துன்பங்களை அனுபவித்து இருக்கிறோம். இப்போது சொந்த வீடு வந்த பிறகுதான் அந்த தொல்லைகள் இல்லை.

   Delete
 10. உங்கள் பதிவு என்றாலே படங்களும் இருக்கும் பெரும் பாலும்!நேரில் கண்டது போல் உள்ளன! நன்றி இளங்கோ!

  ReplyDelete
  Replies
  1. புலவர் அய்யாவின் கருத்துரைக்கு நன்றி!

   Delete
 11. அடேங்கப்பா எவ்வளவு புத்தகங்கள் விசிறி போன்ற வடிவில் வைத்தது அருமை அடுத்து தொடர்ந்து நூல் வுிமர்சனம் வரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது நண்பரே
  தமிழ் மணம் 5

  ReplyDelete
  Replies
  1. நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி.

   Delete
 12. தெளிவான துல்லியமான படங்களால் எங்களையும்
  பெரம்பலூருக்கே அழைத்துச் சென்றுவிட்டீர்கள் ஐயா
  இரண்டு நாள் சென்றிருக்கிறீர்கள்
  மனம்மகிழ்கிறது ஐயா
  நன்றி
  தம+1

  ReplyDelete
  Replies
  1. ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் பாராட்டினுக்கு நன்றி!

   Delete
 13. அன்புள்ள அய்யா,

  தங்களின் புத்தகக் காதல் புரிகிறது. இரண்டாவது முறை தாங்கள் செல்ல வேண்டும் என்பதற்காகவே பக்கம் விடுபட்டு இருக்குமோ...? படங்கள் அனைத்தும் அருமை.

  நன்றி.

  த.ம.8

  ReplyDelete
  Replies
  1. ஆசிரியர் மணவை ஜேம்ஸ் அவர்களின் செறிவான கருத்துரைக்கு நன்றி. உங்களின் கருத்துரையைப் படித்தவுடன் “ அதற்கும் ஒரு காரணம் உளது என்று நம்பலே யூகம் “ என்ற மனோன்மணிய நாடகத்தின் வசனம் நினைவில் வந்தது.

   Delete
 14. படிப்பார்வமும் எழுத்தார்வமும் நம்மை நல்ல நிலைக்கு இட்டுச்செல்லும் என்பது உண்மை. தங்களின் புத்தக ஆர்வம் எங்களையும் கண்காட்சிக்கு அழைத்துச்சென்றதை அறிந்து மகிழ்கின்றோம். ஒவ்வொரு முறையும் செல்ல நினைப்பதுண்டு. வாய்ப்பு அமைவதில்லை. தங்களின் பதிவு அக்குறையை நிறை செய்தது.

  ReplyDelete
  Replies
  1. முனைவர் அவர்களது வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

   Delete
 15. புத்தக கண்காட்சிக்கு வந்த உணர்வை தங்கள் புகைப்படங்கள் தருகின்றன. ஹிட்லர் பற்றி இப்போது வந்த புத்தகமா...? அனைத்து புத்தகத்தின் விமர்சனத்தையும் காண ஆவல்

  தம 9

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சகோதரி! நான் குறிப்பிட்டுள்ள ‘ஹிட்லர்’ புதிதாக வந்ததுதான். ஆசிரியர் முகில். இவர் எழுதிய ‘வெளிச்சத்தின் நிறம் கருப்பு’ என்ற நூல் கிடைத்தால் வாங்கி படியுங்கள். சகோதரியின் கருத்துரைக்கு நன்றி

   Delete
 16. நாங்களும் வந்தது போன்ற உணர்வு,,,

  வரலாறு முக்கியம் நண்பரே,,, சிரித்துவிட்டேன் ஐயா,

  இன்றும் நூல் வாங்கி சேகரிக்கும் தங்கள் உணர்வு,,, இப்போதெல்லாம் வாசிப்போர்,,,,

  நன்றி ஐயா

  ReplyDelete
  Replies
  1. சகோதரி அவர்களின் கருத்து ரைக்கு நன்றி.


   Delete
 17. பெரம்பலூர் புத்தகக் கண்காட்சியின் உள் தோற்றம் சென்னை புத்தகக் கண்காட்சியில் உள்ளது போலவே இருக்கிறது. படங்கள் யாவையும் நேர்த்தியாக உள்ளன. முதலில் இரண்டு புத்தகங்கள் வாங்க முடிவு செய்து கடைசியில் 13 புத்தகங்கள் வாங்கிவிட்டீர்கள் போல. விரைவில் தங்களிடமிருந்து சில நூல் திறனாய்வுகளை எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. அய்யா V.N.S.அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

   Delete
 18. இனி(யும்) புத்தகங்கள் வாங்க வேண்டாம் என்றுதான் நானும் முடிவு செய்துள்ளேன். படங்கள் அழகு. ஹிட்லர் புத்தகம் இழுக்கிறது. இது போலவே முன்பு சில வருடங்களுக்கு முன்னால் உயிர்மை பதிப்பகத்தில் வாங்கிய புத்தகமொன்றின் பக்கங்கள் இல்லாதிருந்ததை நாட்கள் சென்று கவனித்து, மாற்ற முடியாமலேயே போனது!

  ReplyDelete
  Replies
  1. வீட்டில் நிறைய புத்தகங்கள். அதனால்தான் இந்த முடிவு.இப்போதும் உயிர்மை பதிப்பகத்தாருக்கு நீங்களே தெரியப் படுத்தினால் அவர்கள் நீங்கள் வாங்கிய, பக்கம் குறைவான புத்தகத்தை மாற்றிக் கொடுப்பார்கள் என்று நினைக்கிறேன்.

   முன்பு ஒருமுறை ஆங்கில அகராதி வாங்கியபோதும் இதே அனுபவம். 20 பக்கங்கள் (ஒரு பாரம்என்று நினைக்கிறேன்) இல்லை. அகராதி என்பதால் உடனே தெரியவில்லை.ஒரு வருடம் கழித்து அதே பதிப்பகம் திருச்சிக்கு வந்தவுடன், வாங்கிய ரசீதைக் காட்டி மாற்றிக் கொண்டேன்.

   சகோதரர் ஸ்ரீராம் அவர்களின் அன்பான வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

   Delete
 19. புத்தகக் கண்காட்சிக்கு நானும் வந்தது போன்ற உணர்வு . நேரில் நடக்காதது உங்கள் பதிவின் மூலம் நடக்கிறதே , மகிழ்ச்சியுடன் நன்றி ஐயா

  ReplyDelete
  Replies
  1. சகோதரி தேன்மதுரத்தமிழ் அவர்களின் பாராட்டிற்கு நன்றி. தாமதமான மறுமொழிக்கு மன்னிக்கவும்.

   Delete