Monday, 2 November 2015

ஆற்றங்கரை மரம்எம்.ஆர்.ராதா நடித்த ‘ரத்தக்கண்ணீர்’ படம் பார்த்து இருக்கிறீர்களா? மோகன் என்ற பணக்கார வாலிபன் கதை. படத்தின் முற்பகுதியில் நம்ப ராதா அவர்கள் போடும் பணக்கார டாம்பீக ஆட்டம் அவ்வளவு இவ்வளவு இல்லை. மேனாட்டு நாகரிகத்தோடு, மேனாட்டிலிருந்து திரும்பியவுடன் தொழிலாளர்கள் மத்தியில் உரை ஆற்றுவார். “லேடீஸ் அண்ட் ஜென்டில்மென்” என்று தொடங்கி அடிக்கும் லூட்டியை இன்று நினைத்தாலும் வயிறு வலிக்கும். பேசத் தொடங்கிய சற்று நேரத்தில், சூடான காபி சாப்பிடுவார். டப்பாவுக்குள் இருக்கும் மேனாட்டு சிகரெட் வேறு. அப்புறம் வீட்டில் அடிக்கும் கூத்தும், கல்யாணம் ஆனதும், அப்படியே. தனது மாமனாரை ’என்னா மேன்’ என்று விரட்டு விரட்டு என்று விரட்டுவார். பெயருக்கு ஒரு கல்யாணம்; காலம் கழிப்பது காந்தா என்ற நாட்டியப் பெண்ணோடு. அப்புறம் வாழ்க்கைச் சக்கரம் தலைகீழாக மாறுகிறது. இடைவேளைக்கு அப்புறம், மோகன் என்ற அந்த மனிதன் சீரழிந்த கதை ‘குற்றம் புரிந்தவன் வாழக்கையில் நிம்மதி இல்லை” என்ற தத்துவத்தோடு படம் முடிவு.

இதுதான் உலகம்:

சினிமாவில் மட்டுமல்ல. நடைமுறை வாழ்க்கையிலும், அதிகாரம் அல்லது பணம் கையில் இருக்கிறது என்பதற்காக, ஆடாத ஆட்டமெல்லாம் ஆடியவர்கள், அதிகாரத்தை வைத்துக் கொண்டு மிரட்டியவர்களெல்லாம் கடைசியில் ஒரு கட்டத்தில் உடம்பில் தெம்பு இல்லாத போது அல்லது அதிகாரம் போன நிலையில் ஒடுங்கியே போகிறார்கள். முன்பு அவர்களுக்கு பயந்து கிடந்தவர்கள் எல்லாம், இப்போது அவரை அலட்சியப் படுத்தி நடக்கிறார்கள். நான், நான் என்று அதிகார மிடுக்கோடு அலைந்தபோது அவருக்காக உருட்டுக் கட்டைகளையும், அரிவாள்களையும் தூக்கியவர்கள் யாரும் இப்போது அருகில் இல்லை. கைத்தாங்கலாக அழைத்துச் செல்லக் கூப்பிட்டால் கூட ஓடி ஒளிந்து கொள்கிறார்கள். இவர் சொத்தையெல்லாம், தங்கள் பெயரில் வைத்து இருக்கும் பினாமிகள் எல்லாம், ஆசாமி எப்போது சாவான், எப்படி அமுக்கலாம் என்று கண்ணில் படுவதே இல்லை. இதுதான் அதிகாரம். இதுதான் வாழ்க்கை; இதுதான் உலகம்.

இவர்களுக்காகவே பட்டினத்தார் ஒரு பாடலை எழுதி வைத்துள்ளார். அதாவது இவர்கள் நம்ம தொந்தி என்று ,வயிறு புடைக்க தின்று வளர்ப்பார்கள்; ஆனால் , (ஆள் இறந்து போனால்) நாயும், நரியும், பேய்க் கழுகுகளும் தம்மதென்று அந்த தொந்தியை நினைத்துக் கொண்டு இருக்குமாம். இதோ அந்த பாடல்.

இருப்பதுபொய் போவதுமெய் என்றெண்ணி நெஞ்சே
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே; பருத்த தொந்தி
நம்மதென்று நாமிருக்க, நாய்நரிகள் பேய்கழுகு
தம்மதென்று தாமிருக்கும் தாம்
                                                                                - பட்டினத்தார்

ஔவையர் பாடியது:

இப்படி வாழ்பவர்களை ஔவையார் ஆற்றங்கரை மரம் என்கிறார். ஆற்றங்கரையில் வளரும் மரங்களைப் பார்த்தால் தெரியும். ஆற்றங்கரை மரம் நன்றாக வளரும். யாரும் தண்ணீர் ஊற்ற வேண்டியதில்லை. ஆற்றுத் தண்ணீரே கிடைக்கிறது. இலைகளும், கிளைகளும் அபரிதமான வளர்ச்சி. இருந்தும் என்ன பயன்? ஒருநாள் ஆற்றில் பெரும் வெள்ளம் வருகிறது. ஆற்றங்கரை மரம் நன்கு பலமாக இருந்தாலும், வேர்ப் பிடிப்புகளில் சரியான பிடிமானம் இல்லை. ஆற்று நீரால், மரத்தின் அடிமண் பகுதி ஊறிப் போய் பொத பொதவென்று இருக்கிறது. மரத்தால் தாக்கு பிடிக்க இயலவில்லை. அதுவரை கம்பீரமாக இருந்த அந்த ஆற்றங்கரை மரம், ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப் பட்டது. இது போலத்தான் அரசன் அறியப் பெருமையாக வாழ்ந்த வாழ்க்கையும் என்கிறார் ஔவையார்.  பாடல் இதுதான்,

ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு 
                                      - ஔவையார் ( நல்வழி.12 )

( பொழிப்புரை ) ஆற்றங்கரையில் உள்ள மரமும், அரசன் அறியப் பெருமையாக வாழ்ந்த வாழ்க்கையும், ஒருநாள் அழிந்து விடும். எனவே உழுது பயிர்செய்து உண்டு வாழ்வதே உயர்வாகும்; அதற்கு நிகரான வாழ்க்கை வேறில்லை; வேறு வகையான தொழில்கள் எல்லாம் நிரந்தரம் இல்லை (என்றுணர்க)

இந்த பாடலில் கடைசி இரண்டு வரிகளில், அரச வாழ்க்கையை விட உழவுத் தொழில் மேம்பட்டது என்கிறார்  நாம் இந்த கட்டுரைக்கு, ஔவை சொன்ன முதல் இரண்டு அடிகளை மட்டும் எடுத்துக் கொள்வோம்.


38 comments:

 1. நல்லதொரு விளக்கம்..
  ஔவையாரின் பாடலின் கடைசி இரண்டு வரிகளுமே - அற்புதம்..

  ReplyDelete
  Replies
  1. தஞ்சையம்பதி துரை.செல்வராஜூ அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.

   Delete
 2. வணக்கம்
  ஐயா
  சொல்லிய விளக்கமும் பாடலும் மிகச் சிறப்பு ஐயா. உழவுத் தொழில் சிறந்தது... பகிர்வுக்கு நன்றி த.ம 1

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. கவிஞர் ரூபன் அவர்களுக்கு நன்றி!

   Delete
 3. அன்புள்ள அய்யா,

  ‘ரத்தக்கண்ணீர்’ இது ஓர் அற்புதமான படம். இப்படி ஒரு விழிப்புணர்வு படத்தில் எம்.ஆர்.ராதாவின் நடிப்பிற்கு ஈடு இணை இல்லை. தாங்கள் சொன்ன காட்சிகள் அனைத்தும் அருமை. நடிப்பின் உச்சத்தைத் தொட்டபடம் என்றால் மிகையில்லை.

  நிலையாமை குறித்து மனிதனின் வாழ்க்கை பற்றி உண்மையைச் சொல்லும் பாடல்கள்.

  த.ம.3

  ReplyDelete
  Replies
  1. ஆசிரியர் மணவை ஜேம்ஸ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. தாங்கள் ஒரு தமிழாசிரியர். நீங்களும் இலக்கியக் கட்டுரைகள் பல படைக்க வேண்டும் என்பது எனது ஆசை.

   Delete
 4. பட்டினத்தாரையும்
  ஔவையாரையும் அழைத்து வந்து
  அருமையான நீதியை உரைத்துள்ளீர்கள் ஐயா
  நன்றி
  தம+1

  ReplyDelete
  Replies
  1. ஆசிரியர் கரந்தையாருக்கு நன்றி.

   Delete
 5. பட்டினத்தார் பாடல் அடிகளைப் படிக்கும்போது நமக்கு வாழ்வு மற்றும் இருப்பின் முக்கியத்துவத்தையும் அதே சமயத்தில் நிலையாமையையும் முற்றிலும் உணரமுடியும். நாம் எதைப் படித்தாலும் படிக்காவிட்டாலும் பட்டினத்தார் பாடல்களை ஒரு முறையாவது படித்துவிடவேண்டும். கண்ணதாசன் பாடல்கள் பலவற்றில் பட்டினத்தாரின் பாடல் அடிகளும், பொருளும் காணப்படுவதை நாம் பார்த்திருக்கிறோம் அல்லவா?

  ReplyDelete
  Replies
  1. முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நீங்கள் குறிப்பிடுவது போல, தமிழர்கள் அனைவரும் தமது வாழ்வில் ஒருமுறையாவது பட்டினத்தார் பாடல்களைப் படிக்க வேண்டும். கண்ணதாசன் தனது ” அர்த்தமுள்ள இந்துமதம்” என்ற நூலில் பல இடங்களில் பட்டினத்தார் பாடல்களின் கருத்தினை எதிரொலிக்கிறார்.

   Delete
 6. நல்லதொரு பதிவு. பட்டினத்தாரும் ஔவையாரும் நிறையவே சொல்லிச் சென்றுள்ளார்கள். ஆனால் மனிதர் நம்மில் இப்போதும் அதிகாரம், ஆணவம் என்று ஆட்டம் போட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள்...

  ReplyDelete
  Replies
  1. ஆசிரியர் தில்லைக்கது V. துளசிதரன் அவர்களது கருத்துரைக்கு நன்றி.

   Delete
 7. ஐயா,காலத்துக்கு ஏற்ற பதிவு....

  ReplyDelete
  Replies
  1. சகோதரர் அவர்களது கருத்துரைக்கு நன்றி. உங்கள் வலைத்தளத்தில், Posted by என்ற இடத்தில் உங்கள் பெயர் வருமாறு, layout ஐ மாற்றம் செய்யவும்.

   Delete
 8. அருமையான ஒரு பதிவு. ஔவையாரின் இந்தப் பாடல் நான் அறியாதது.( நான் அறியாதது நிறைய உண்டு . அதில் இதுவும் ஒன்று. ) அறிய வைத்தமைக்கு நன்றி தமிழ் சார்.

  ReplyDelete
  Replies
  1. சகோதரி அவர்களுக்கு நன்றி.

   Delete
 9. இயலாமை நிலையாமை என்று வருவதை எண்ணிக் கொண்டு இருப்பதைக் கோட்டை விடக்கூடாதுஇந்த நிலையாமைத் தத்துவங்கள் ஒரு கடிவாளம் போல் இருப்பதே சிறந்தது குதிரை ஓடத்தான் வேண்டும் ஆனால் கடிவாளம் என்னும் கட்டுக்குள் இருத்தலே நல்லது

  ReplyDelete
  Replies
  1. அய்யா ஜீ.எம்.பி. அவர்களுக்கு வணக்கம். நில்லாமை, நிலையாமை என்று தத்துவம் பேசிக் கொண்டு வாழ்க்கையை கோட்டை விட்டுவிடக் கூடாது என்ற, உங்களது அறிவுரை என்ற அறவுரையை மறவேன்.

   Delete
 10. அருமையான உதாரணத்துடன் கூடிய பதிவு.

  ReplyDelete
  Replies
  1. சகோதரர் வேலூர் கவிப்ரியன் அவர்களுக்கு நன்றி.

   Delete
 11. சிறப்பான விளக்கம்! அருமையான பகிர்வு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. சகோதரர் தளிர் சுரேஷ் அவர்களுக்கு நன்றி.

   Delete
 12. அருமையான படல்களுக்குச் சிறப்பான விளக்கம்,எடுத்துக்காட்டுடன்.

  ReplyDelete
  Replies
  1. மூத்த வலைப்பதிவர் சென்னை பித்தன் அவர்களுக்கு நன்றி.

   Delete
 13. பட்டிணத்தார் பாடலையும், ஔவையார் பாடலையும் நிகழ்கால வாழ்க்கையோடு ஒப்பிட்டது அருமை நண்பரே...
  தமிழ் மணம் 6

  ReplyDelete
  Replies
  1. நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி.

   Delete
 14. ஆற்றங்கரை மரம்.... சிறப்பான இரண்டு பாடல்களைச் சொல்லி விளக்கும் சொன்னது நன்று.

  பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  ReplyDelete
 15. கருத்தும் விளக்கமும் இன்றைய நாட்டு நடப்புக்கு மிகவும் தேவை!

  ReplyDelete
  Replies
  1. புலவர் அய்யாவுக்கு நன்றி!

   Delete
 16. திரையோடு இலக்கியத்தை ரசிக்கத் தந்தமை மிக நன்று. நன்றி ஐயா.

  ReplyDelete
  Replies
  1. சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

   Delete
 17. இதை இப்போது சொல்ல வேண்டிய அவசியமென்ன என்று தெரிந்து கொள்ளலாமா :)

  ReplyDelete
  Replies

  1. சகோதரர் பகவான்ஜீ அவர்களின் கருத்துரைக்கு நன்றி. இந்த கட்டுரைக்கு உள்நோக்கம் எதுவும் இல்லை. நாட்டு நடப்பை எண்ணி முன்பே எழுதி வைக்கப்பட்டது. சீவகசிந்தாமணியில் உள்ள ஒரு பாட்டையும் இதில் சேர்த்து வெளியிட எண்ணினேன். பாட்டு நினைவுக்கு வரவில்லை. எனவே தாமதமாயிற்று.

   Delete
 18. ‘குடைநிழ லிருந்து குஞ்சரம் ஊர்ந்தோர் நடைமெலிந் தோரூர் நண்ணினும் நண்ணுவர்.’ என்ற வெற்றிவேற்கையின் பாடலையும் நினைவு கொள்ளலாம். நல்ல பதிவு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. மேற்கோளுடன் (வெற்றிவேற்கை) கூடிய, V.N.S அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

   Delete
 19. எம்.ஆர்.ராதா நிகழவு, ஆற்றங்கரை மரம், பட்டினத்தார் பாடல் பதிவு போன்ற உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது நண்பரே! தொடரட்டும் உங்கள் தமிழ்ப்பணி.- குமரி ஆதவன் (எழுத்தாளர்)

  ReplyDelete
  Replies
  1. ஆசிரியர் குமரி ஆதவன் அவர்களின் அன்பான பாராட்டுரைக்கு நன்றி.

   Delete