Wednesday 15 July 2015

தெரு நாய்களும் நானும்



சின்ன வயதில் நாய்கள் என்றால் எனக்கு ஒரே பயம். அப்புறம் பெரியவன் ஆனதும்தான் பயம் தெளிந்தது. எனது அம்மாச்சியின் (அம்மாவின் அம்மா) வீட்டில் ஒரு நாட்டு நாய் இருந்தது. பெயர் மணி. அதோடு பழகிய பின்னர் நாய்கள் மீது எனக்கு அன்பும் மரியாதையும் (உண்டு. இருந்தாலும் நாய் என்றால் கொஞ்சம் தள்ளியே இருப்பது வழக்கம். இந்த நிலையில் ஒரு அழகான நாட்டு நாய் ஒன்றை   எனது மகன் (பள்ளி  மாணவனாக இருந்தபோது, (இன்றைக்கு 12 வருடங்களுக்கு முன் ) தூக்கி வந்தான். ’ஜாக்கிஎன்று பெயரிட்டு வளர்த்தோம்.

(படம் – மேலே) இறந்து போன எங்கள் வீட்டு ஜாக்கி

ஜாக்கியோடு:

சொந்த வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் இந்த வீடு, வாசல் எல்லாம் நம்முடையது என்று நினைத்துக் கொண்டு இருப்போம். ஆனால் நாம் வளர்க்கும்  செல்ல நாயானதுஇந்த வீடு, வாசல் எல்லாம் நம்முடையதுஎன்று நினைப்பில், ஒரு குருவி, காக்கையைக் கூட உள்ளே விடாது அவ்வளவு கண்டிப்பு.

ஜாக்கி சிறு வயது குட்டியாக இருக்கையில், காம்பவுண்டிற்குள் சுற்றி சுற்றி விளையாடும். அப்போது எங்கள் தெருவுக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு மைதானத்தில் இருந்து இரண்டு குட்டி நாய்கள் எங்கள் வீட்டு வாசலில் வந்து ஏதாவது கிடைக்காதா என்று நிற்க ஆரம்பித்தன.  ஜாக்கிக்கு உணவு கொடுக்கும் போது இவைகளுக்கும் கொடுத்தோம். அன்றிலிருந்து இந்த இரண்டு நாய்களும் எதிரில் உள்ள இரண்டு காலிமனைகளில் வாசம். அவற்றில் ஒன்று குட்டையாக இருந்ததால் குட்டையர் என்றும், இன்னொன்றிற்கு நெற்றியில் கோடு இருந்த படியினால் நாமம் என்றும் சொல்லிக் கொண்டோம். நான் எங்கள் ஜாக்கியை ’வாக்கிங்’ இற்காக வெளியே அழைத்துச் செல்லும் போதெல்லாம் இவை இரண்டும் கூடவே வருவார்கள். இதில் நாமம், அடுத்த ஏரியாவில் இருந்த என் அம்மாவின் வீட்டிற்கு சென்றபோது, என் கூடவே வந்து அங்கேயே தங்கி விட்டது. 


                                            (படம் – மேலே): குட்டையர், நாமம் என்ற இரண்டு நாய்கள்


INTERNATIONAL ANIMAL RESCUE
  
திருச்சியில் எங்கள் ஏரியாவிற்கு அருகில் ஓலையூர் என்ற கிராமத்திற்கு அருகில் INTERNATIONAL ANIMAL RESCUE  என்ற உலகளாவிய அமைப்பின் சார்பாக  வளர்ப்பு பிராணிகளுக்கான பெட் கிளினிக் ( PET CLINIC  ) ஒன்று இருந்தது. இந்த மருத்துவ மனையில் ஜெர்மனியிலிருந்து வந்த, இளம் பெண் டாக்டர் ஒருவர் சேவை மனப்பான்மையோடு பணிபுரிந்து வந்தார். அரசு அனுமதியோடு இந்த பகுதியில் உள்ள தெரு நாய்களைப் பிடித்துக் கொண்டு போவார்கள்; அந்த நாய்களுக்கு உடம்புக்கு ஏதேனும் இருந்தால் சிகிச்சை அளிப்பதோடு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும் செய்து விட்டு மீண்டும் கொண்டு போய் ஏதேனும் ஒரு மைதானத்தில் விட்டு விடுவார்கள்.  நாய்களைக் கொல்ல மாட்டார்கள். அப்படி வந்தவைதாம் மேலே சொன்ன குட்டி நாய்கள். இந்த மருத்துவ மனையில் எங்கள் ஜாக்கியையும் காண்பித்து இருக்கிறோம். அந்த ஜெர்மன் டாக்டர் இருந்தவரை இந்த மருத்துவமனை நன்றாக நடந்தது. அவர் மீண்டும் ஜெர்மனிக்கு திரும்பியவுடன் இங்குள்ளவர்களால் சரிவர நடத்த முடியவில்லை; மூடி விட்டார்கள்.

ஜாக்கிக்குப் பிறகு:

இவை வந்த பிறகு காலிமனைகளில் இருந்த பாம்புகள் இந்த பக்கம் வரமுடியாது. இரண்டும் சேர்ந்து விரட்டி விடும். இப்படியாக வாழ்க்கை ஓடிக் கொண்டு இருக்க, எங்கள் ஜாக்கி நோய்வாய்ப்பட்டு இறந்து போனது. எங்கள் வீட்டில் சோகம் என்றால் சோகம். அவ்வளவு சோகம் இது பற்றியும் ஒரு பதிவு எழுதி இருக்கிறேன். (“ஜென்மம் நிறைந்தது - சென்றதுஜாக்கி - http://tthamizhelango.blogspot.com/2013/09/blog-post_30.html

எங்கள் ஜாக்கி இறந்த பிறகு, அதன் நினைவாக தினமும் வாசலில், இந்த நாய்களுக்கு தீனி வைத்தோம். இதனைப் பார்த்த அடுத்ததெரு நாய்களும் சிலருடைய வளர்ப்பு நாய்களும் தினமும் காலையிலும் மாலையிலும் வந்து நிற்க ஆரம்பித்து விட்டன. இதனால் தெருவாசிகளிடமிருந்து கண்டனக் குரல்; சிலர் முனிசிபல் கார்ப்பரேசனில் புகார் தரப் போவதாகவும் சொல்லி விட்டார்கள். என்னவோ செய்து கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டேன்.

(படம் மேலே) கட்டையாக இருப்பதால் கட்டையர் என்று பெயர். எங்கள் வீட்டிற்கு அடுத்து இருக்கும் ஆங்கிலோ – இந்தியன் வீட்டிற்கு அடைக்கலமாக வந்தது. இப்போது எங்களோடும் பழக்கம்.


(படம் மேலே) வெள்ளை சடைநாய்: அடுத்த ஏரியாவிலிருந்து வழிதவறி  வந்து பழக்கமான ஒற்றைக்கண் நாய். அடிக்கடி வரும். அப்புறம் வரவே இல்லை. என்னவென்று விசாரித்ததில் ஒரு கண்ணில் ஏற்பட்ட உட்காயம் புரையோடி இறந்து விட்டதாகச் சொன்னார்கள்.   

(படம் மேலே) ரோஜர்: இது நாங்கள் இருக்கும் வீதிக்கு அடுத்த வீதியில் இருந்த எங்கள் ஏரியாக்காரர் வளர்த்த நாய். வாலில் ஏதோ தொற்று நோய் பிரச்சினை. அதனால் மருத்துவமனையில் ஆபரேஷன் செய்து வாலை எடுத்து விட்டார்கள். எங்கள் வீட்டுப் பக்கம் வராமல் இருக்காது. சில மாதங்களுக்கு  முன்னர் இறந்து போனது. இறக்கும் போது எங்கள் வீட்டு சுற்று சுவர் அருகே வந்து கிடந்தது.


(படம் மேலே) ரோசி: இதுவும் நாங்கள் இருக்கும் ஏரியாவில், அடுத்த தெருக்காரர் வளர்க்கும் நாய். நல்ல உயரம்; நீளமானதும் கூட. சின்ன குட்டியாக இருக்கும்போது ஆசையாக கொஞ்சி வளர்த்தவர்கள், பெரிய நாயாக வளர்ந்தவுடன் தெருவுக்கு விரட்டி விட்டார்கள். தெரு நாயாகிப் போன அது பசிக்கும் போதெல்லாம் எங்கள் வீட்டுப் பக்கம் வந்து போகும். 


(படம் மேலே) மெர்சி: சென்ற ஆண்டு மழைக்காலம். சின்ன குட்டியாக  அருகிலிருந்த மைதானத்திலிருந்து அடைக்கலம் தேடி வந்து எங்கள் வீட்டு காம்பவுண்டுக்குள்ளேயே வளர்த்து பெரியதானவுடன் வெளியில் விட்டுவிட்டோம். பூனைகளிடம் நட்புடன் வளர்ந்த நாய் இது. இப்போது எங்கள் வீட்டு எதிரில் உள்ள காலி மனையில் இருக்கிறது. இந்த மெர்சியைப் பற்றி தனியே ஒரு பதிவு கூட எழுதி இருக்கிறேன். (மியாவ் மியாவும் நாய்க் குட்டியும்  http://tthamizhelango.blogspot.com/2014/12/blog-post_17.html )


(படம் மேலே) கிரேஸி: இது மேலே சொன்ன மெர்சிக்கு தங்கை. தனது தாயுடன் தனது அக்கா மெர்சியைத் தேடி வந்தது. எதிரே காலி மனையில் தனது அக்காவைக் கண்டவுடன் இங்கேயே அம்மாவுடன் தங்கி விட்டது. இது நோஞ்சானாக இருந்த படியினால் எங்கள் வீட்டு காம்பவுண்டுக்குள்ளேயே இரண்டுமாதம் வளர்த்து வெளியே விட்டோம். எதிர்பாராத விதமாக இரண்டு வாரங்களுக்கு முன்னர், எங்கள் வீதிப்பக்கம் வந்த ஒரு காரில் அடிபட்டு இறந்து போய்விட்டது. இது சோகமான விஷயம்தான்


(படம் மேலே) முன்பு குறிப்பிட்ட மெர்சி, கிரேஸி இரண்டு நாய்களின் தாய் இது. இப்போது மறுபடியும் புதிதாய் இரண்டு குட்டிகளுடன். (ஆறு குட்டிகள் போட்டதில் இப்போது எஞ்சி இருப்பவை இவை)

 


(படம் மேலே) அருகிலுள்ள ஒரு தோட்டத்திலிருந்து வந்த நாய்.  அதுவும் அதன் குட்டியும் அங்கிருந்து இங்கே வந்து சாப்பிட்டு விட்டு மீண்டும் சென்று விடுவார்கள். எதிர்பாராத விதமாக இந்த குட்டி, மைதானத்தில் இருந்த ஒரு குப்பைத் தொட்டியில் கிடந்த காலவாதியான மருந்து பாட்டிலில் இருந்ததை தின்று தோட்டத்திலேயே இறந்துவிட்டதாக சொன்னார்கள்.


(படம் மேலே) இறந்து போன தோட்டத்து குட்டிநாய்  

தினமும் இந்த நாய்களுக்காகவும் மற்றும் பூனைகளுக்காகவும் நூறு ரூபாய்க்கு குறையாமல் செலவாகிறது. இவைகளுக்கு செய்யும் செலவைப் பற்றி நான் கணக்கு பார்ப்பது கிடையாது. இவைகள் எவற்றையும் நான் தொடுவது கிடையாது. ஆனாலும் அடிக்கடி கையில் திரவ சோப்பை (Liquid Soap ) போட்டு கழுவிக் கொள்ள வேண்டி உள்ளது. மனிதனை விட பாசமானவை இந்த நாய்கள். சிலசமயம் எனது வண்டியின் பின்னாலேயே எங்கள் ஏரியா பஸ் ஸ்டாண்டு வரை தொடர்ந்து வருபவைகளும் உண்டு. இறந்து போன எங்கள் ஜாக்கியின் நினைவாக, இந்த நாய்களுக்கு சாதம், பிஸ்கெட், ரொட்டி கொடுப்பதில் எனக்கு ஒரு ஆத்ம திருப்தி. மற்றபடி வேறு ஏதும் (மூட நம்பிக்கை) ஒன்றும் இல்லை.


                 வாலைக் குழைத்து வரும் நாய்தான் - அது
                                       மனிதர்க்குத் தோழனடி பாப்பா 
                                                                     - (மகாகவி சுப்ரமண்ய பாரதியார்)


              
 

36 comments:

  1. தெருவில் சுற்றும் நாய்களிடம் கூட
    கருணை காட்டும் தங்களின்
    மனதை என்னென்று சொல்வது
    போற்றப் பட வேண்டிய பொன்னான மனது தங்களுடையது
    நன்றிஐயா
    தம +1

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. தெரு நாய்கள் என்று சொல்கின்றோம். அவைகளிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன.

      Delete
  2. நன்றியுள்ள பதிவு. நாய்களிடம் இருக்கும் அக்குணம் மனிதர்களிடம் இருக்கிறதா என்பது ஐயத்திற்குரியதே.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அய்யா! எனது நன்றியைக் காட்டும் பதிவுதான். முனைவர் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      Delete
  3. இதோ இத்தனை ஜாக்கிகள் என்று நினைக்கும் உங்கள் மனதிற்கு பாராட்டுகள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. எத்தனை ஜாக்கிகள் வந்தாலுமே! அத்தனையும் அந்த ஜாக்கியாகுமா? சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  4. நாய்கள் மீது எனக்கும் பற்று உண்டு ஆனால் இந்த அளவுக்கு அல்ல . பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களே! நாங்கள் இருப்பது புறநகர் ; நிறைய காலிமனைகளும், புல் புதர்களும் அதிகம். அங்கே இருக்கும் தெருநாய்களில் ஒன்றிரண்டு பசியினால், வீடு தேடி வருகின்றன. மற்றபடி தொந்தரவு ஏதும் இல்லை. இவைகள் இருப்பதால் பாம்புகள், திருடர்கள் பயம் இல்லை. சகோதரி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      Delete
  5. வணக்கம் அய்யா,
    எல்லோரும் இப்படி இருந்தால்,
    நல்லவை அன்றி அல்லவை இல்லை,
    சின்ன குட்டியில் கொஞ்சி
    பெரிதானதும் வெளியில் விரட்டிய
    உயிர்க்கும் உணவு கொடுத்த உள்ளம்
    போற்றப்படவேண்டியது,
    பதிவு அருமை,
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. நாய்களிடம் அன்பு காட்டினாலே போதும்; அவை நம்மை ஒன்றும் செய்யாது.

      Delete
  6. வாயற்ற(பேச) சீவன் என்றாலும் நன்றியுள்ளது நாயாகும் அவற்றின் பால் தாங்கள் காட்டும் அன்பு போற்றத் தக்கது!

    ReplyDelete
    Replies
    1. புலவர் அய்யாவின் கருத்துரைக்கு நன்றி!

      Delete
  7. பூனை வீட்டையும், நாய் மனிதனையும் நம்பி வாழும் என்பார்கள். நல்ல அன்பு காட்டினால் மிருகம் கூட நண்பர்களே ! உங்கள் செயல் பாராட்டபட வேண்டிய விஷயம்.வாபில்லா ஜீவன்களுக்கு உணவு கொடுப்பது சிறந்த செயல்.

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  8. Replies
    1. நண்பர் தேவகோட்டை கில்லர்ஜிக்கு நன்றி!

      Delete

  9. ‘நன்றி உள்ள உயிர்களெல்லாம் பிள்ளை தானடா
    தம்பி நன்றி கேட்ட மகனைவிட நாய்கள் மேலடா’
    என்ற கவிஞரின் வரிகள் தங்களின் பதிவைப் படித்ததும் நினைவுக்கு வருகின்றன. வாயில்லாப் பிராணிகளிடம் நீங்கள் காட்டும் பரிவும் பாசமும் போற்றுதற்குரியது. பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி உள்ள உயிர்கள் எல்லாம் பிள்ளைகள்தான் அய்யா. அந்த கண்ணதாசன் என்ற கவிஞனின் வரிக்கு மறுப்பேது? மரியாதைக்குரிய V.N.S அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  10. அற்புதமான பதிவு
    ஒவ்வொன்றின் பெயரோடு படத்தோடு
    சொல்லிப்போனவிதம் மனம் கவர்ந்தது
    உங்கள் உள்ளமும் புரிந்தது
    பழகும் விதத்தில் பழகிப் பார்த்தால்
    மிருகம் கூட நண்பனே....

    பகிர்வுக்கும் தொடரவும்
    நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மூத்த வலைப்பதிவர் கவிஞர் அய்யா எஸ்.ரமணி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  11. இத்தனை பிராணிகளை அழகாக படம் எடுத்து அதன் பின்னனி தகவல்களையும் சுவாரஸ்யத்துடன் சொன்னது அருமை! தினமும் நூறு ரூபாய் இவற்றுக்காக செலவிடுவது பெரிய விஷயம்தான். எங்கள் வீட்டில் வளர்ந்த மூன்று நாய்கள் ஒரே மாதத்தில் அதுவும் ஒரே நாளில் இரண்டு இறந்துபோனது பெரிய சோகம்!

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் தளிர் – சுரேஷ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. உங்கள் வீட்டில் ஒரே நேரத்தில் நீங்கள் வளர்த்த மூன்று நாய்களும் இறந்து விட்டன என்பது மறக்க முடியாத பெரிய சோகம்தான்.

      Delete
  12. அருமை அண்ணா ! வாயில்லா ஜீவன்களிடம் நீங்க காட்டும் பரிவு

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  13. எனக்கு எப்போதும் நாய் பிடிப்பதில்லை... அதற்கு பல காரணங்கள்.ஆனால் ஒரு விசயத்தில் மட்டும் நாய்மேல் பரிதாபம் உண்டு. இணையோடு சேர்ந்து அவதிப்படும்போது

    ReplyDelete
    Replies
    1. தோழரே நாய்கள் மீதான உங்கள் பரிதாபம் வித்தியாசமானது தான். தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      Delete
  14. சத்யராஜ் மகன் நாயைப் பத்தி சமீபத்தில் எடுத்த சினிமாவை விட இந்த கதை பெரிசா இருக்கும் போலிருக்கே!!

    ReplyDelete
    Replies
    1. சகோதரரே. நகைச்சுவையான உங்கள் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  15. உங்கள் சேவைக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அய்யாவுக்கு நன்றி!

      Delete
  16. பதிவுலகத்தின் அடிப்படி விதிகளில் ஒன்று உங்கள் செல்லப் பிராணி பற்றி எழுதாதீர்கள் என்பது.
    விதிகள் உடைப்பதற்கே எழுதப் படுகின்றன..
    அருமையான நெகிழ்வான பதிவு வாழ்த்துக்கள்
    தம +

    ReplyDelete
    Replies
    1. கருத்தோடு கருத்துரை தந்த ஆசிரியர் எஸ்.மது அவர்களுக்கு நன்றி. செல்லப் பிராணி பற்றி எழுதக்கூடாது என்ற விதி பற்றியோ மற்ற விதிகள் பற்றியோ எனக்கு தெரியாது. எல்லோரும் எழுதுவது போல் சாதாரணமாகத்தான் எழுதி வருகிறேன். பதிவு எழுதுவதற்கென்று ஏதேனும் விதிமுறைகள் இருப்பின், அதைப்பற்றி தனியே ஒரு பதிவு எழுதும்படி உங்களை கேட்டுக் கொள்கிறேன்.

      Delete
  17. தங்களின் தகவலுக்கு எனது மனம் கனிந்த நன்றிகள். அன்புடன் பத்மாசூரி



    திரு.வி.ஜி.கெ.(V.G.K.) அவர்களின் சிறப்பான பின்னூட்டங்களினால் தான் என்னால் 100 பதிவுகளுக்கு மேல் பதிவிட முடிந்தது.புதிய பதிவாளர்களை அவர் ஊக்குவிக்கும் முறையே தனித்துவம் வாய்ந்தது.

    ReplyDelete
  18. நேற்றே இந்தப் பதிவைப் படித்து மகிழ்ந்தேன்.. ஆயினும் சற்றே அசதியால் உடன் பதிலளிக்க இயலவில்லை..

    என் தந்தையும் நாய்களிடம் பிரியம் உள்ளவர்.. எங்கள் வீட்டில் - கறவை மாடுகள் வளர்த்ததால் - காவலுக்கு மணி வகையறாக்கள் தான்!..

    ஆனால் தனித்தனியாக பெயர்கள் எல்லாம் இல்லை.. மணி அல்லது ஜிம்மி!..

    கருப்பன் என்று ஒருவன் (..!).. இரவு எந்த நேரத்தில் விழித்தாலும் அவனும் எழுந்து கொள்வான்..

    சமயத்தில் .. டேய்.. போய் பார்த்துட்டு வா!.. என்றால் போதும்..

    விறுவிறு என்று தொழுவத்திற்குள் போய் இரண்டு சுற்று சுற்றி விட்டு வருவான்..

    துள்ளியோடும் கன்றுகளின் கயிற்றைப் பற்றி இழுப்பான்..

    அவன் கதை தான் சோகமாக முடிந்து போனது..

    அதெல்லாம் திரும்பக் கிடைக்காத வசந்த காலங்கள்!..

    பழைய நினைவுகளில் திளைக்கவைத்தது - தங்கள் பதிவு!..

    ReplyDelete
  19. அன்புடையீர்..

    எனது தளத்தில் பெருந்தலைவர் பற்றிய பதிவுக்கு அழகாகக் கருத்துரை வழங்கியிருந்தீர்கள்..

    பதிலளிக்கும் போது கணிணியில் நிகழ்ந்த தடுமாற்றத்தால் - தங்களின் கருத்துரை அழிந்து போயிற்று..

    தாங்கள் மீள்பார்வையாக பதிவுக்கு வருகை தந்தால் - கருத்துரை இல்லாததைக் கண்டு
    ஏதும் பிழையாகக் கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றேன்..

    தங்களின் கருத்துரைக்கு மகிழ்ச்சியும் நன்றியும் என்றும் உரியன..

    தங்களின் அன்பினை என்றும் நாடும்
    துரை செல்வராஜூ..

    ReplyDelete