Tuesday 23 September 2014

திருச்சி - ” முட்டாள் முத்து “ எனப்படும் பரமசிவம்



ஏப்ரல் ஒன்று உலக முட்டாள்கள் தினம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். தனது சொந்த பெயரை “முட்டாள் முத்துஎன்று மாற்றிக் கொண்டு, வருடம் தோறும் ஏப்ரல் முதல் தேதியன்று மொட்டையடித்துக் கொண்டு 25 வருடங்களுக்கும் மேலாக, அந்த நாளைக் கொண்டாடி வருகிறார் ஒருவர். அவர் பெயர் பரமசிவம். திருச்சி K.K. நகரில் யூனியன் பாங்க் (பஸ் டெர்மினஸ்) அருகில் உயர்தர பஞ்சாப் சப்பாத்தி சென்டர்என்ற பெயரில் தனி ஆளாகக் கடை நடத்தி வருகிறார்.

சப்பாத்தி வாங்கச் சென்றேன்:

நாங்கள் இருப்பது புறநகர்ப்பகுதி. ஏதாவது வாங்க வேண்டும், என்றால் அருகிலுள்ள கருணாநிதி நகர் ( K.K. நகர்)  அல்லது சுந்தர்நகர் செல்ல வேண்டும். மனைவி சென்னைக்கு மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். எனவே எனக்கும் மகனுக்கும் வெளியே  கடையில்தான் சாப்பாடு. சென்றவாரம் ஒருநாள் இரவு மகன் சப்பாத்தி வாங்கலாம் என்று சொன்னார் நான் சப்பாத்தி சாப்பிடுவதில்லை. காரணம் நான் வயிறார சாப்பிடுபவன். சப்பாத்தியை சாப்பிட்டால் எனக்கு சாப்பிட்டது போலவே இருக்காது. இருந்தாலும் இரவு 8 மணிக்கு மேல் ஆகி விட்டதால் அருகிலுள்ள  K.K. நகரில் பரமசிவம் நடத்தி வந்த  சப்பாத்தி சென்டருக்கு சென்றேன். கடைக்காரர் பரமசிவத்தை எனக்குத் தெரியும் என்றாலும் கடையில் சப்பாத்தி வாங்கியதில்லை. நான் கடைக்குச் சென்றதும் நான்கு சப்பாத்தி பார்சல் என்று  ஆர்டர் செய்துவிட்டு, விலையைக் கேட்டேன்.

“ சப்பாத்தி என்ன விலை? “

“ ஒரு சப்பாத்தி பதினைந்து ரூபாய். நேற்று வராமல் போய் விட்டீர்களே. நேற்று ஒருநாள் மட்டும் சப்பாத்தி ஒன்று பத்து ரூபாய் என்று கொடுத்தேன்

“ அப்படியா? நேற்று மட்டும் அப்படி என்ன விசேஷம்என்று நான் விசாரித்தேன்.

“ நேற்று பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு சப்பாத்தி ஒன்று பத்து ரூபாய். நான் கடை வைத்து ஏழு ஆண்டுகள் ஆகின்றன. அன்றிலிருந்து வருடம் தோறும் பெரியார் பிறந்த நாள் அன்று மட்டும் சப்பாத்தியில் விலை குறைப்பு  என்றார்.

அவரைப் பற்றி அவரிடம் விசாரித்தேன். கடையில் அவர் ஒருவர் மட்டும்தான். அவரே சப்பாத்தியை சுட்டு விற்கிறார். எனவே அவர் என்னை நாற்காலியில் உட்கார வைத்து விட்டு தன்னைப் பற்றி தினமணி, விகடனில் வந்த செய்திக் குறிப்புகளைத் தந்தார். மேலும் தன்னைப் பற்றிய விவரங்களயும் சொன்னார்.

தற்சமயம் திருச்சி K.K. நகரில் பஞ்சாப் சப்பாத்தி சென்டர் வைத்து இருக்கும் எஸ் பரமசிவம் அவர்கள் இதற்கு முன் யூகோ வங்கியில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்தவர். பின்னர் புதுக்கோட்டை மார்க்கெட்டில் வாடகைவேன் ஓட்டினார். இவரது சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில், பேரையூர் அருகில் உள்ள கோயில்பட்டி ஆகும்.

தினமணியில் வந்த பேட்டி:

“ எனது 13 ஆவது வயதில் பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டேன். மனிதாபிமானத்துடன் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வதை விட்டுவிட்டு கடவுளைக் காரணம் காட்டிச் சண்டையிடுதல் மற்றும் தீமிதித்தல், வேல் குத்துதல் போன்ற சடங்குகளை எல்லாம் கிராம மக்களிடம் விமர்சிக்கவே, அவர்கள் எல்லாரும் என்னை “முட்டாள்என்று திட்டினர்.

இவர்கள் என்ன என்னை முட்டாள் என்று கிண்டல் செய்வது, இந்தக் கிண்டலுக்கு நிரந்தரமாக முடிவு காண்பது என்ற எண்ணத்தில் எனக்கு நானே பரமசிவம் என்ற என்னுடைய பெயரை முட்டாள் முத்து என மாற்றிக் கொண்டு விட்டேன்.

எனக்கு வரும் அஞ்சல்களைப் பார்க்கும் போஸ்ட்மேன், கூரியர் சேவை நிறுவனத்தினர் முதலில் இந்தப் பெயரைக் கண்டு வியந்தனர். ஆனால் இப்போது எல்லாருக்கும் பழகிப் போய்விட்டது.

இந்தப் பெயருக்காக எனது மனைவியும் குழந்தைகளும் முதலில் சங்கடப்பட்டனர். நாள்களானதும் அவர்களும் முட்டாள் மனைவி, முட்டாள் பிள்ளைகள் எனப் பழகிப் போய் விட்டனர்.

பகுத்தறிவாளர் என்று கூறினாலும் மொட்டையடிப்பது ஏன்? எனக் கேட்டதற்கு, “ஆண்டுதோறும் ஏப்ரலில் தொடங்கி கோடைக்காலம்.  இதைச் சமாளிக்க மற்றவர்கள் கோயிலில் நேர்த்திக் கடனாக மொட்டை அடித்துக் கொள்கின்றனர்.

என் வழியில் கோடையைச் சமாளிக்க ஏப்ரல் முதல் தேதியில் மொட்டையடிப்பதும் பகுத்தறிவுதான், என்று தன் பெயரை முறைப்படி மாற்றி, அரசிதழில் அறிவித்துக் கொள்வதற்காகவும் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவித்தார் பரமசிவம் அல்ல முட்டாள் முத்து. (நன்றி தினமணி 02.04.2004 )

தினமணியில் பத்து வருடங்களுக்கு முன்னர் வந்த பேட்டி இது.

சப்பாத்திக் கடையில்:


முக்குலத்ோர் சமுதாயச் சேர்ந்த இவர்,  பெரியாரின் சீர்திருத்த  கொள்கைகளால் ஈர்க்கப் பெற்று  ஜாதி சமயங்களுக்கு எதிராக தன் வழியே பிரச்சாரம் செய்கிறார். மேலும் மனித உரிமை, ஆதார் அட்டை போன்ற பொதுமக்கள் சம்பந்தப்பட்ட விவரங்களையும் சொல்லுகிறார். மற்றபடி கட்சிக்காரர் இல்லை. இப்போது சப்பாத்திக் கடையில் அவரே ஒன் மேன் ஆர்மியாக இருந்து  எல்லா வேலைகளையும் பார்த்துக் கொண்டு வருகிறார். வந்து கேட்பவர்களுக்கு சுடச் சுட போட்டு தருகிறார். சப்பாத்தியும் குருமாவும் நல்ல சுவை.  இவருக்கென்று இருக்கும் வாடிக்கையாளர்கள் செல்போனில் முன்கூட்டியே ஆர்டர் தந்து விடுகிறார்கள். சிலர் இவரை “முட்டாள் முத்துஎன்று அழைப்பதற்கு சங்கடப்பட்டுக் கொண்டு “எம் எம் (M.M) என்று அழைக்கின்றனர். வாழ்க பரமசிவம்! இல்லையில்லை முட்டாள் முத்து!


 
உலகில் இப்படியும சில கொள்கைகளோடு சிலபேர் இருக்கத்தான் செய்கின்றனர். காலம் ஓடிக் கொண்டு இருக்கிறது.

   ( பல பதிவர்கள் A to Z பல தலைப்புகளில் பலரைப் பற்றியும் எழுதுகிறார்கள். நாம் நமக்குத் தெரிந்த ஒரு வித்தியாசமான மனிதரைப் பற்றி எழுதுவோம் என்று எழுதினேன்)  

  

40 comments:

  1. பேருக்கும் புகழுக்கும் ஏங்கித் தவிக்கும் உலகில் இப்படியும் ஒரு நல்லவர்.
    மனமார்ந்த பாராட்டுகள்.. வாழ்க வளமுடன்!..

    ReplyDelete
  2. வித்தியாசமான குணச்சித்திரம்..!

    ReplyDelete
  3. திருமதி இராரா சொல்வதே எனக்கும் தோன்றுகிறது,பிரபலமாக இப்படியும் ஒரு வழி.?

    ReplyDelete
  4. வாழ்க பரமசிவம்! இல்லை!இல்லை! முட்டாள் முத்து!

    ReplyDelete
  5. ஒரு நல்ல மனிதனைப்பற்றிய நல்ல தகவல்களை பதிவிட்டதற்க்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  6. அபூர்வமானதோர் மனிதரைப்பற்றி அருமையான பதிவு. அவரது தொழிலுக்கும் இது ஓர் நல்ல விளம்பரமாக அமைந்துள்ளது.

    நானும் தங்களைப்போலவே ..... சப்பாத்தி என்றால் வேண்டவே வேண்டாம் என பெரும்பாலும் தவிர்த்து விடுவேன். தின்னுதான் ஆகவேண்டும் என்ற நிர்பந்தமானால் தொட்டுக்கொள்ள காரசாரமான புதிய நார்த்தங்காய் அல்லது கடாரங்காய் ஊறுகாய் கேட்பேன். குருமாவெல்லாம் பார்த்தாலே எனக்கு குமட்டிக்கொண்டு வரும்.

    ReplyDelete
  7. வித்தியாசமான ஒருவரைப் பற்றிய அறிமுகத்திற்கு நன்றி சார், உண்மையிலேயே இவர் போன்றவர்கள் தான் பெரியாரின் கொள்கைகள் வெற்றி பெற்றதற்கான சான்றுகளாக திகழ்கின்றனர் சார், முட்டாள் முத்துவை விட சூப்பர்..

    ReplyDelete
  8. வித்தியாசமானவர்கள் எப்போதும் வியக்கவே வைப்பார்கள்....அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

    ReplyDelete
  9. தன்னம்பிக்கையுடன் உழைப்போம், உயர்வோம் என்ற தாரக மந்திரம் வைத்து இருப்பவர்
    நிச்சயம் உயர்வார்.
    வாழ்த்துக்கள் பரமசிவம் அவர்களுக்கு.
    நல்ல மனிதரை அறிமுக படுத்தியமைக்கு நன்றி.

    ReplyDelete
  10. மிகவும் வித்தியாசமான மனிதராய் இருக்கிறாரே!

    ReplyDelete
  11. வித்தியாசமான கடை, வித்தியாசமான மனிதர் என்று அறிமுகம் அமர்க்களம். சப்பாத்தி நன்றாக இருந்த‌தா என்று சொல்லவேயில்லையே?

    ReplyDelete
  12. முற்றிலும் வித்தியாசமான ஒரு மனிதர் !பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா .

    ReplyDelete
  13. வித்தியாசமான மனிதர்தான்
    பாராட்டிற்கு உரியவர்

    ReplyDelete

  14. வித்தியாசமான மனிதரை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி! ‘இப்படியும் சிலர்’ என்ற தலைப்பில் இதுபோன்ற வித்தியாசமான மனிதர்களைப் பற்றி எழுதுங்களேன்.

    ReplyDelete
  15. இந்த மாதிரி அமைதியாக புரட்சி செய்பவரை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி... அவரின் கொள்கைக்கு எதிராக அவரின் சாதியைக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்க வேண்டாமே இந்தப் பதிவில்....

    ReplyDelete
  16. மறுமொழி > துரை செல்வராஜூ said...

    சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  17. மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...

    // வித்தியாசமான குணச்சித்திரம்..! //

    இந்த கட்டுரையை எழுதும்போது ஒரு சொல்லை பயன்படுத்த எண்ணினேன். எத்தனையோ முறை யோசித்தும் அது நினைவுக்கு வரவில்லை. உங்கள் பின்னூட்டத்தில் அந்த “குணச்சித்திரம்” என்ற சொல்லைப் பார்த்ததும் மட்டற்ற மகிழ்ச்சி. சகோதரிக்கு நன்றி!

    ReplyDelete
  18. மறுமொழி > G.M Balasubramaniam said...

    // திருமதி இராரா சொல்வதே எனக்கும் தோன்றுகிறது,பிரபலமாக இப்படியும் ஒரு வழி.? //

    அய்யா G.M.B அவர்களின் கருத்துரைக்கு நன்றி! அவர் விளம்பரத்தை தேடி இவ்வாறு செய்யவில்லை என்பது துணிபு.

    ReplyDelete
  19. மறுமொழி > புலவர் இராமாநுசம் said...

    // வாழ்க பரமசிவம்! இல்லை!இல்லை! முட்டாள் முத்து! //

    அவர் வாழ்க! வாழ்க! புலவர் அய்யாவின் வாழ்த்துரைக்கு நன்றி!



    ReplyDelete
  20. மறுமொழி > KILLERGEE Devakottai said...

    தேவகோட்டை கில்லர்ஜியின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  21. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...

    // அபூர்வமானதோர் மனிதரைப்பற்றி அருமையான பதிவு. அவரது தொழிலுக்கும் இது ஓர் நல்ல விளம்பரமாக அமைந்துள்ளது. //

    திரு V.G.K அவர்களின் கருத்துரைக்கு நன்றி. விளம்பரமாக எழுதவில்லை. வித்தியாசமான மனிதர் என்ற முறையில் எழுதினேன். நான் சந்தித்த மற்ற மனிதர்களைப் பற்றியும் எழுதலாமா என்று யோசிக்கிறேன்.

    // நானும் தங்களைப்போலவே ..... சப்பாத்தி என்றால் வேண்டவே வேண்டாம் என பெரும்பாலும் தவிர்த்து விடுவேன். தின்னுதான் ஆகவேண்டும் என்ற நிர்பந்தமானால் தொட்டுக்கொள்ள காரசாரமான புதிய நார்த்தங்காய் அல்லது கடாரங்காய் ஊறுகாய் கேட்பேன். குருமாவெல்லாம் பார்த்தாலே எனக்கு குமட்டிக் கொண்டு வரும். //

    வீட்டில் சப்பாத்தி செய்தாலும் எனக்கு சாப்பிட்டது போலவே இருக்காது. எனக்கு குருமாவுடன் பெரிய வெங்காயம் போட்ட தயிர்ப் பச்சடி சேர்த்துக் கொள்வது பிடிக்கும்.

    ReplyDelete
  22. மறுமொழி > J.Jeyaseelan said...

    சகோதரர் ஜே ஜெயசீலன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  23. மறுமொழி > R.Umayal Gayathri said...

    சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  24. மறுமொழி > கோமதி அரசு said...

    சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    // தன்னம்பிக்கையுடன் உழைப்போம், உயர்வோம் என்ற தாரக மந்திரம் வைத்து இருப்பவர் நிச்சயம் உயர்வார். வாழ்த்துக்கள் பரமசிவம் அவர்களுக்கு. நல்ல மனிதரைஅறிமுகபடுத்தியமைக்கு நன்றி. //

    ஆமாம் சகோதரி அவர் தன்னம்பிக்கை மிகுந்தவர்தான். ஒரு கூடுதல் செய்தி! சில வருடங்களுக்கு முன்பு இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும் போது ஏற்பட்ட ஒரு விபத்தினில் வலது கால் ஊனமானவர் “முட்டாள் முத்து” அவர்கள். இருந்தும் தனது கொள்கையில் வழுவாமல்தான் இருக்கிறார்.

    ReplyDelete
  25. மறுமொழி > rajalakshmi paramasivam said...

    டீச்சர் சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  26. மறுமொழி > மனோ சாமிநாதன் said...

    சகோதரி தஞ்சை மனோ சாமிநாதன் அவர்களுக்கு நன்றி!

    // வித்தியாசமான கடை, வித்தியாசமான மனிதர் என்று அறிமுகம் அமர்க்களம். சப்பாத்தி நன்றாக இருந்த‌தா என்று சொல்லவேயில்லையே? //

    ஆம் வித்தியாசமான மனிதர்தான்! பதிவினில் “ சப்பாத்தியும் குருமாவும் நல்ல சுவை.” என்று குறிப்பிட்டு இருக்கிறேன்!

    ReplyDelete
  27. மறுமொழி > அம்பாளடியாள் வலைத்தளம் said...

    சகோதரி அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  28. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said... ( 1, 2 )

    சகோதரர், கரந்தை ஆசிரியருக்கு நன்றி!

    ReplyDelete
  29. மறுமொழி > வே.நடனசபாபதி said...

    அய்யா அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி!

    // வித்தியாசமான மனிதரை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி! ‘இப்படியும் சிலர்’ என்ற தலைப்பில் இதுபோன்ற வித்தியாசமான மனிதர்களைப் பற்றி எழுதுங்களேன். //

    ஆமாம் அய்யா! திரு V.G.K அவர்களின் கருத்துரையில் நான் சொன்னது போல , வித்தியாசமான மனிதர் என்ற முறையில் நான் சந்தித்த மற்ற மனிதர்களைப் பற்றியும் எழுதலாமா என்று யோசிக்கிறேன்.

    ReplyDelete
  30. மறுமொழி > ezhil said...

    சகோதரி எழில் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    // இந்த மாதிரி அமைதியாக புரட்சி செய்பவரை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி... அவரின் கொள்கைக்கு எதிராக அவரின் சாதியைக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்க வேண்டாமே இந்தப் பதிவில்.... //

    நீங்கள் சொல்வது சரிதான். மேலும் நீங்கள்: பெரியார் சீர்திருத்தக் கொள்கைகளில் ஈடுபாடு உள்ளவர்.

    இந்த பதிவினை எழுதும்போது நானும் முட்டாள் முத்து அவர்களின் ஜாதியைக் குறிப்பிட்டுச் சொல்ல யோசனை செய்தேன். இன்று ஊடகங்கள் பல (குறிப்பாக திரைப் படங்கள்) முக்குலத்தோர் இன்னும் ஜாதிப் பெருமை பேசிக் கொண்டு , அரிவாளை எடுத்துக் கொண்டு ஜாதியை அவர்கள் மட்டுமே கட்டிக் காத்துக் கொண்டு இருப்பது போன்ற பிம்பத்தை உண்டு பண்ணியுள்ளன. உண்மையில் அந்த சமூகத்தினுள்ளும் ஜாதியை ஒழிக்க பாடுபட்டவர்கள், பெரியாரின் சீர்திருத்தக் கொள்கைகளில் ஈடுபட்டு திராவிடர் கழகத்தில் இணைந்திருந்தவர்கள் உண்டு. கலப்புமணம் செய்தவர்களும் உண்டு. குறிப்பாக திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் நிறையபேர் இருந்தார்கள். இப்போதும் இருக்கிறார்கள். ஜாதிப் பெருமை பேசும் சமூகத்திலிருந்து ஜாதி ஒழிய வேண்டும் என்று ஒருவர் (முட்டாள் முத்து போன்றவர்கள்) வருவது பெரிய விஷயம் என்பதாலும், இந்த தலைமுறை மக்களுக்கும் அது தெரிய வேண்டும் என்பதாலும் அவரது ஜாதிப் பெயரைக் குறிப்பிட்டேன். மற்றபடி ஒன்றும் இல்லை.

    ஜாதி ஒழிய வேண்டும் என்று ஒரு தாழ்த்தப்பட்டவர் சொல்வதற்கும், முட்டாள் முத்து போன்ற மற்ற சாதிக்காரர்கள் சொல்வதற்கும் முயற்சி செய்வதற்கும் நிறைய (அழுத்தம்) வேறுபாடுகள் உண்டு.

    ReplyDelete
  31. முட்டாள்கள் உலகில் பகுத்தறிவாளன் முட்டாள் அல்லாமல் வேறு என்ன?

    ஒரு நல்ல மனிதரை அறிமுகம் செய்திருகிறீர் ...

    அடுத்தமுறை இவர்கடையில் சப்பாத்தியை சுவைத்துவிட்டு என் பதிவில் பகிர்கிறேன்...

    எங்க ஊர்க்காரர் வேற ...

    பொன்னமராவதி பகுதி நகரத்தார்களால் நிரம்பிய பகுதி என்பதால் சுவைபட சமைப்பவர்கள் நிரம்பிய பகுதி.. .

    தமிழகதில் எந்த ஊரில் நீங்கள் ரசித்து ருசித்து சாப்பிட்டாலும் அந்த உணவகத்தில் ஒரு பொன்னமராவதி சமையலர் இருப்பார் ... !!!

    ReplyDelete
  32. வித்தியாசமான மனிதரை அறிமுகம் செய்தமைக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  33. நேர்மை, நியாயம் போன்றவற்றை தங்கள் வாழ்வில் கடைபிடிப்பவர்கள், மற்றவர்களுக்கு உதவி என்ற நிலையில் வாழ் வேண்டும் என்று நினைப்பவர்களின் மனம் சார்ந்த விசயங்களை ஒரு தொழிற்சாலையின் குறிப்புகளில் வரப்போகின்ற பத்தாவது அத்தியாயத்தில் எழுத வேண்டும் என்று இந்தப் பதிவு மூலம் சில வற்றை யோசிக்க முடிந்தது. மிக்க நன்றி.

    ReplyDelete
  34. மறுமொழி > Mathu S said...

    // முட்டாள்கள் உலகில் பகுத்தறிவாளன் முட்டாள் அல்லாமல் வேறு என்ன? ஒரு நல்ல மனிதரை அறிமுகம் செய்திருகிறீர் ...
    அடுத்தமுறை இவர்கடையில் சப்பாத்தியை சுவைத்துவிட்டு என் பதிவில் பகிர்கிறேன்... எங்க ஊர்க்காரர் வேற ... //

    ஆசிரியர் மது அவர்களுக்கு நன்றி! முடிந்தால் மேலே உள்ள அவருடைய செல் போனில் தொடர்பு கொண்டு பேசுங்கள். அவர் பதிவினில் தனது செல் எண்ணை எழுதச் சொன்னதே யாரேனும் தொடர்பு கொள்வார்கள் என்பதற்காகத்தான்.

    // பொன்னமராவதி பகுதி நகரத்தார்களால் நிரம்பிய பகுதி என்பதால் சுவைபட சமைப்பவர்கள் நிரம்பிய பகுதி.. . தமிழகதில் எந்த ஊரில் நீங்கள் ரசித்து ருசித்து சாப்பிட்டாலும் அந்த உணவகத்தில் ஒரு பொன்னமராவதி சமையலர் இருப்பார் ... !!! //

    ஆமாம் அய்யா! இங்கு திருச்சியில் மெஸ் நடத்தும் பலரது ஊரைக் கேட்டால் பொன்னமராவதி பக்கம் என்றுதான் சொல்லுவார்கள். மெஸ்சில் பணிபுரிபவர்களும் அவ்வாறே சொல்வார்கள். பொன்னமவராதிக்கு நண்பர்கள் இல்ல நிகழ்ச்சிகளை முன்னிட்டு ஐந்து முறை பொன்னமராவதிக்கு சென்று இருக்கிறேன். அமைதியான ஊர்.


    ReplyDelete
  35. மறுமொழி > ‘தளிர்’ சுரேஷ் said...

    சகோதரருக்கு நன்றி!

    ReplyDelete
  36. மறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said...

    சகோதரர் ஜோதிஜி திருப்பூர் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    // நேர்மை, நியாயம் போன்றவற்றை தங்கள் வாழ்வில் கடைபிடிப்பவர்கள், மற்றவர்களுக்கு உதவி என்ற நிலையில் வாழ் வேண்டும் என்று நினைப்பவர்களின் மனம் சார்ந்த விசயங்களை ஒரு தொழிற்சாலையின் குறிப்புகளில் வரப்போகின்ற பத்தாவது அத்தியாயத்தில் எழுத வேண்டும் என்று இந்தப் பதிவு மூலம் சில வற்றை யோசிக்க முடிந்தது. மிக்க நன்றி. //

    மிக்க நன்றி அய்யா! உங்கள் சிந்தனைக் குளத்தில் விட்டெறிந்த ஒரு சிறிய கூழாங்கல் எனது பதிவு.

    ( உங்களுடைய “தொழிற்சாலைக் குறிப்புகள்” தொடரை மூன்றாம் அத்தியாயம் வரைதான் படித்து முடித்துள்ளேன். கருத்துரை சொல்ல இயலாவிடினும், விட்டுப் போன பதிவுகளையும் நேரம் கிடைக்கும் போது படித்துவிட வேண்டும் என்று இருக்கிறேன் )



    ReplyDelete
  37. அந்த சப்பாத்தி,குருமாவை போல சுவையா இருக்கு அண்ணா உங்க பதிவும்:))

    ReplyDelete
  38. மறுமொழி > Mythily kasthuri rengan said...

    சகோதரியின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  39. வித்தியாசமான மனிதர்.....

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    உங்களுக்குச் சப்பாத்தி பிடிக்காதா! :) இங்கே காலை மதியம் என இரண்டு வேளையும் சப்பாத்தி தான்! குளிர் காலம் வந்து விட்டால், மூன்று வேளையும் சப்பாத்தி சாப்பிடுவது உண்டு!

    ReplyDelete
  40. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...

    // வித்தியாசமான மனிதர்.....பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. //

    சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு நன்றி!

    // உங்களுக்குச் சப்பாத்தி பிடிக்காதா! :) இங்கே காலை மதியம் என இரண்டு வேளையும் சப்பாத்தி தான்! குளிர் காலம் வந்து விட்டால், மூன்று வேளையும் சப்பாத்தி சாப்பிடுவது உண்டு! //

    சப்பாத்தி பிடிக்காது என்பது இல்லை. எப்போதாவது எடுத்துக் கொள்வதுதான். நான், திருச்சி ஆண்டார் வீதி “மதுரா லாட்ஜ்” சாப்பாடு போன்று வயிறு நிரம்ப ருசித்து சாப்பிடுபவன்.

    ReplyDelete